Dec 31, 2012

ஐயரைக் காணவில்லை


உறவுக்காரர் வீடு கட்டியிருக்கிறார். ஏற்கனவே கட்டியிருந்த வீடுதான். இப்பொழுது வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கிறார். வெறும் எக்ஸ்டென்சன் என்பதால் புதுமனை புகுவிழாவெல்லாம் தேவையில்லை என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதற்கு பதிலாக கணபதி ஹோமம் நடத்தினால் போதும் என்ற ட்ரெண்ட்தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கணபதி ஹோமம் நடத்துவதற்கு ஐயர் வேண்டுமில்லையா? நாமம் போட்ட ஐயர் ஆகாது என்று சொல்லிவிட்டார்கள். பட்டை போட்ட ஐயர் ஒருவரை பார்த்து பேசியாகிவிட்டது. ஐயர் பெயர் சுவாமிநாதன். 

டீலிங்கை சில நாட்களுக்கு முன்பாக முடிந்திருந்தோம். ஐயரைப் பார்க்க திட்டமலை போயிருந்த போது அவருடைய அப்பாதான் கோயிலில் இருந்தார். ஐயரின் அப்பா ஒரு பூங்கிழடு. பூங்கிழடு என்றால் தெரியும்தானே? பூ மாதிரி ஆகிவிட்ட முதியவர். தொட்டால் உதிர்ந்துவிடக் கூடும். விஷயத்தைச் சொன்னவுடன் தன் மகன் சுவாமிநாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கணபதி ஹோமம் செய்வதற்கு அவர் வருவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் சொன்னார். தற்பொழுது வீட்டில்தான் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

எதற்கும் சுவாமிநாதன் ஐயரை ஒரு முறை பார்த்துவிடலாம் வீட்டிற்குச் சென்றிருந்தோம். ஐயருக்கு சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் உண்டு. சமஸ்கிருதம் படித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். பிறகு ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பூஜை புனஸ்காரங்களை சுவாமிநாதன் அளவுக்கு இந்த ஏரியாவில் யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்று அக்கம்பக்கத்தினர் சொல்லியிருந்தார்கள். அதனால் அவர்தான் ஹோமத்தை செய்ய வேண்டும் என உறவினரின் வீட்டில் விரும்பினார்கள். அவரை எப்படியாவது ‘புக்’ செய்துவிட வேண்டும் என கோயிலிலிருந்து வீட்டிற்கு போன போது பட்டையும் கொட்டையுமாக கணபதி ஐயர் கன கம்பீரமாக அமர்ந்திருந்தார். நாங்கள் சொன்ன தேதியைக் குறித்து வைத்துக் கொண்டார். தான் வந்துவிடுவதாக அவர் உறுதியளித்த போது எங்களுக்கு பரம திருப்தி. ஹோமத்திற்கு தான் வரும் போது வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருட்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார். நெய், பட்டுத்துணி, பசு மாட்டுக் கோமியம் என்ற அந்தப் பட்டியலின் பொருட்கள் நீண்டிருந்தது. முந்தின நாள் இரவு பத்து மணிக்கு தான் வந்துவிடுவதாகவும் சில பொருட்களை தானே வாங்கி வந்துவிடுவதாகவும் சொல்லியிருந்தார். 

கணபதி ஹோமத்திற்கு முந்தின நாள் மாலையிலேயே உறவினர்கள் கூடத் துவங்கினார்கள். இரவு உணவை முடித்துவிட்டு ஊர்க்கதைகளை மிகுந்த உற்சாகமாக ஆளாளுக்கு பரிமாறத் துவங்கினார்கள். கொலை, கொள்ளை, கள்ள உறவு என சகலமும் ஓடிக் கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் அந்த கதையாடலில் ஐக்கியமாகியிருந்தோம். உற்சாகமான அந்த முன்னிரவில் சுவாமிநாதன் ஐயர் அழைத்திருந்தார். தான் பேருந்தில் ஏறிவிட்டதாகவும் பேருந்து நிறுத்தத்தில் தன்னை ‘பிக்-அப்’ செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்பதால் எந்த சலனமும் இல்லாமல் கதைகளைத் தொடர்ந்தோம். 

அடுத்த சில மணி நேரங்களில் உறவினர்களில் கொஞ்சம் பேர் தூங்கியிருந்தார்கள். ஆனால் விழித்திருந்தவர்களில் யாருக்கும் உற்சாகம் குறைந்திருக்கவில்லை. மொட்டை மாடியில் நிலா காய்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் இருக்கும் வாழைத் தோட்டத்தின் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. மணி பதினொன்றைத் தொட்டது. ஐயர் வந்து சேரவில்லை. ஐயரை அவரது செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை. நான்கைந்து முறை அழைத்தும் பதில் இல்லை என்பதால் உறவுக்காரர் சற்று பதட்டமடைந்தார். நாளை காலை ஐயர் வந்து சேரவில்லையென்றால் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது அவரது கவலை. 

ஆளாளுக்கு அட்வைஸ் செய்யத் துவங்கினார்கள். நாமாகவே சில பூசைகளைச் செய்துவிட முடியும் என்று ஒருவர் சொன்னார். ஐயர்களை அழைப்பது என்பது சமீபத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் என்றும் நம் சாதி நிகழ்வுகளுக்கு ஐயர் அவசியமே இல்லை என்றும் இன்னொருவர் தனது பங்குக்கு வாதாடினார். உறவுக்காரர் திருப்தி அடைவதாக இல்லை. நானும், உறவுக்காரரும் ஐயரின் வீட்டுக்கு கிளம்புவதாக முடிவு செய்தோம். 

கிளம்புவதற்கு முன்பாக ஐயரின் வீட்டை தொலைபேசிக்கு அழைத்த போது ஐயரின் அப்பாதான் எடுத்தார். உறங்கிக் கொண்டிருந்திருப்பார் போலிருந்தது. விவரத்தைச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார். தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதன் அர்த்தம் ‘மனநிலை சரியில்லை’ என்பதாம். சமீபகாலமாக அவரது மனநிலை மிகுந்த பாதிப்படைந்திருப்பதாகவும், ஓரிரு முறை காணாமல் போய்விட்டதாகவும் அவர் பேசத் துவங்கியபோது அழத் துவங்கினார். அந்த முதியவரின் மனநிலை மனதுக்குள் ஒரு கணம் வந்து போனது. வயதான ஒருவர் அழுவதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. திரும்பவும் அழைப்பதாகச் சொல்லிவிட்டு உறவினரிடம் தகவலைத் தெரிவித்த போது அவர் ஐயரின் அப்பாவை விடவும் அதிகமாக அதிர்ச்சியடைந்தார்.

அந்த நேரத்தில் தனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் ஐயரைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். ஐயருக்கு மூன்று பெண்கள். அதில் ஒரு பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். மற்ற ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார். இந்தச் சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விபத்து ஒன்றில் தண்டுவடம் பாதித்ததில் ஐயரின் மனைவி படுத்த படுக்கையாகிவிட்டார். தனது மனைவியின் நிலைமை, இன்னமும் திருமணமாகாத இளைய பெண், வயதான பெற்றோர் என சகல குடும்பச் சிக்கல்களாலும் சுவாமிநாதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். 

உறவினருக்கு இந்த இரவுக்குள் இன்னொரு ஐயரை பிடித்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் எனக்கு ஐயரின் அப்பாதான் மனதுக்குள் வந்து போனார். இன்னொரு முறை அவரை அழைத்து பேசிவிடலாம்  என்று அழைத்தேன். இப்பொழுது அதிகமாக கதறத் துவங்கினார். தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆளான தன் மகன் இல்லையென்றால் இந்தப் பெண்களை வைத்துக் கொண்டு இந்த கிராமத்தில் என்ன செய்வதென்றே தெரியாது என்று அழுது கொண்டிருந்தார். அருகில் “என்னாச்சு? என்னாச்சு” என்று கேட்ட சில பதட்டமான குரல்களையும் தாண்டி அவர் அழுது கொண்டிருந்தார். நள்ளிரவைத் தாண்டிய இந்த நேரத்தில் அந்தப் பெண்களுக்கு இது பேரதிர்ச்சியான செய்தியாக இருக்கும். அந்தப் பெண்களை சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு முதியவரின் தலையில் இறங்கியிருக்கிறது. தனது சுமைகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் அந்தப் பெரியவர். “இப்போ என்ன செய்யலாம்?” என்றார் என்னிடம்.  என்னால் அவரது சுமைகளை இறக்கி வைக்க முடியும் என்று தோன்றவில்லை. அவருக்கு என்ன என்ன பதிலைச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பது என யோசிக்கத் துவங்கியிருந்தேன்.

Dec 29, 2012

விலையில்லா லேப்டாப் சல்லிசான விலையில்


அலுவலகத்தில் புது லேப்டாப் கொடுத்தார்கள். எதுவுமே புதியதாகக் கிடைக்கும் போது- அது புது மனைவியோ அல்லது புது லேப்டாப்போ- உற்சாகம் தொற்றிக் கொள்வதுதானே வாடிக்கை. அப்படித்தான்  தொற்றிக் கொண்டது. இந்த மடிக்கணினியில் வெப் கேமராவெல்லாம் இருக்கிறது. காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி அவசர அவசரமாக தேவையான மென்பொருட்களை நிறுவிக் கொண்டிருந்தேன். 

சித்தப்பா பையன் போனில் அழைத்தான். சொல்லி வைத்தாற் போல அவனும் லேப்டாப்பை பற்றியே பேசினான்.

“அண்ணா, ஒரு லேப்டாப் வந்திருக்கு. என்ன ரேட்ன்னா வாங்கலாம்?”

“புதுசா, பழசா?” என்றேன்.

“புத்தம் புதுசு. இன்னும் கவரே பிரிக்காம இருக்குது”

“குத்துமதிப்பா கேட்டா எப்படிச் சொல்லுறது? மெமரி, ப்ராண்ட்ன்னு நிறைய பார்த்துத்தான் சொல்ல முடியும்”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.ஸ்டார்ட்டிங் விலை என்ன இருக்கும்?” என்றான்

“இருபதாயிரத்திலிருந்து இருக்கும்டா” 

“ம்க்கும்” என்றான். அந்த ‘ம்க்கும்’மில் லிட்டர் கணக்கில் நக்கலைச் சேர்த்திருந்தான். 

“ஏண்டா?”

“அவனே மூவாயிரத்தி ஐந்நூறுதான் சொல்லுறான். நீங்க ஒரு ஆளுன்னு உங்களை கேட்டேன் பாருங்க”

அவமானமாகப் போய்விட்டது. மூன்றாயிரத்து ஐநூறுக்கெல்லாம் லேப்டாப் கிடைக்குமளவுக்கு தமிழ்நாடு முன்னேறிவிட்டதாகத் தெரியவில்லை. யோசிக்கத் துவங்குகையில் அவனேதான் சொன்னான்.

“இலவச லேப்டாப்ண்ணா. கவர்ண்மெண்ட்ல கொடுக்கிறது. ஒரு பையன் வேண்டாம்ன்னு விக்குறான்”

இதற்கு அப்புறம் என்ன பேசுவது?  

பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் தொழில் மீதான ஈடுபாட்டை இழந்துவிட்ட தமிழகத்தில்தான் இலவச லேப்டாப்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த மாணவரையும் திட்டுவதற்கு உரிமையில்லாத ஆசிரியர்கள் இருக்கும் இந்த மாநிலத்தில்தான் மடிக்கணினிகள் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு Resale ஆகிக் கொண்டிருக்கின்றன. பாடத்திட்டம், தேர்வுமுறை என சகலத்திலும் இருக்கும் பெரிய ஓட்டைகளை அடைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லேப்டாப்களை விலையில்லாமல் கொடுத்தால் நிலைமை இன்னமும் பாழாய்த்தான் போகும்.

அடுத்த பிரதமரைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம் இதை கண்டிப்பாக கவனிக்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கத்தை சந்தோஷப்படுத்தும் ஒரு செய்தியை என்னால் தர முடியும். 

சென்ற மாதத்தில் ஒரு நாள் வாய்க்கால் பக்கமாக வேலுச்சாமி வாத்தியார் வாக்கிங் சென்றிருக்கிறார். எங்கள் அப்பாவின் நண்பர்தான். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கைந்து பேர் அந்தப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ‘நமக்கெதுக்கு பொல்லாப்பு’ என்று கண்டும் காணாமல் நகர்ந்த வேலுச்சாமி வாத்தியாரை கைதட்டி அழைத்திருக்கிறார்கள். இனியும் கவனிக்காதது போல நடந்தால் பயந்து ஓடுவது போலாகிவிடும் என்று திரும்பிப்பார்த்திருக்கிறார். அந்த மாணவர்கள் வணக்கம் வைத்தார்களாம். அது ஒரு ‘மார்க்கமான’ வணக்கம். இவரும் பதில் வணக்கம் வைத்துவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார். ஆனால் அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை. 

நெருங்கி வந்து நெடியுடன் “சரக்கு சாப்பிடலாம்ன்னு வந்தோம் சார்” என்றிருக்கிறார்கள். 

பரிதாபமாக அவர்களைப்பார்த்த வாத்தியார் “மவராசனா சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு நகரத்துவங்கியபோது “ஒரு கை குறையுது வர்றீங்களா” என்று கேட்டிருக்கிறார்கள். காது கேட்காதது போல வேகமெடுத்திருக்கிறார். அது கிட்டத்தட்ட ஓட்டம். 

மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு லேப்டாப்பை விற்றுவிடுகிறார்கள் என்று அரசு கவலைப்பட வேண்டியதில்லை. எப்படியும் அரசாங்கத்திடமேதான் அந்தப்பணம் போய்ச் சேருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு பார்களைத் திறந்தால் நாடு நலம் பெறும். நல்லாட்சி மலர்ந்திடும்.

Dec 28, 2012

டாப் 10 டார்ச்சர்கள்

வருடக்கடைசி வந்தாலும் வந்தது ஆளாளுக்கு டாப் 10 லிஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாவில் ஆரம்பித்து டிவி, சமையல்,  இலக்கியம் வரைக்கும் அல்லோலப்படுகிறது. நம்மைச் சுற்றிய உலகம் சர்வரோக நிவாரண நிபுணர்களால் நிரம்பியிருக்கிறது என இந்த லிஸ்ட்களைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த கில்மா பட நாயகி, சிறந்த நாட்டுவைத்திய சூரணம், சிறந்த கவிதைத் தொகுப்பு என அனைத்தையும் ஒரே லிஸ்ட்டில் போட்டு கலங்கடிக்கிறார்கள். 

ஆயா கடை புட்டு இருக்கும் அதே லிஸ்ட்டில்தான் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்நாக்ஸூம் இருக்கிறது. இந்த லிஸ்ட்டுக்காரர்களால் எப்படி சகலத்திலும் கபடியாட முடிகிறது என பார்ப்பவர்கள் மூக்கின் மீது கால் வைக்க வேண்டும். இப்படி ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. அதைவிடுத்து இந்த டாப் டென், பாட்டம் ட்வெண்டி போன்றவற்றால் ஏதேனும் பயன் இருக்கிறதா என்று யாராவது கேட்டால் பொடணி அடியாக அடித்து அவன் சோலியை முடிக்க வேண்டியதுதான். 

லிஸ்ட்டை பார்க்கிற சுப்பனுக்கும் குப்பனுக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ, லிஸ்ட் போட்டவனுக்கு பயன் இருக்கிறது. லிஸ்ட் போடுகிறவனை ‘பெரிய ஆள்’ என்று சொல்ல யாருமே தயங்குவதில்லை என்பதால் முதல் வேலை எளிதாக முடிந்துவிடுகிறது. அப்புறம் நாம் சொறிந்து விட வேண்டியவர்கள் அல்லது நம்மை சொறிந்து விடுபவர்களை லிஸ்ட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் இன்னொரு வேலையும் எளிதாக முடிந்துவிடுகிறது. 

இப்படி எல்லாவற்றையும் எளிதாக முடிக்க எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை. எளிய மனிதர்கள் தங்களைச் சுற்றி உருவாக்கிக் கொள்ளும் சிக்கல்களை நேரில் பார்த்துவிட்டால் அவற்றை நம்மால் எளிதில் தாண்டி வர முடிவதில்லை.

நேற்று காலை வீட்டிலிருந்து நேரத்திலேயே அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டேன். இந்திராநகரிலிருந்து சி.வி.ராமன் நகருக்கு பிரியும் சாலையில் ஒரு காலி இடத்தின் முன்பாக கூட்டமாக நின்றிருந்தார்கள். எந்த இடத்தில் கூட்டமாக இருந்தாலும் மூக்கு வியர்த்து வண்டிக்கு சைடு ஸ்டாண்ட் போட்டுவிடுவேன். நேற்றும் அப்படித்தான். அது வெறும் காலி இடம் மட்டும் இல்லை. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்ட காலி இடத்தின் மூலையில் ஆஸ்பெஸ்டாஸ் ஸீட் வேய்ந்த ஒற்றை அறை. அந்த அறைக்கு முன்பாக நான்கைந்து போலீஸ்காரர்களும் சில ஆண்களும் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். வேறு ஒன்றுமில்லை- அதிகாலையில் தூக்கில் தொங்கியவனை கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த அறைக்கு வெளியில் அவனது மனைவியும் இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். மிக எளிய மனிதர்கள். குழந்தைகளில் பெரியவனுக்கு நான்கு வயது இருக்கலாம். 

இறந்து போனவன் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டானாம். நேற்று விடிந்தவுடனேயே கணவன் மனைவிக்கு இடையில் தகராறு வந்திருக்கிறது. தகராறு நடந்து கொண்டிருக்கும் போதே தான் வீட்டு வேலை செய்து வரும் இடத்திற்கு மனைவி சென்றுவிட்டாள். வேலையெல்லாம் முடித்துவிட்டு திரும்ப வந்த போதுதான் தன் கணவன் இறந்து கிடப்பதைப் பார்த்து கதறியிருக்கிறாள். அவளது புடைவையை விட்டத்தில் சொருகி தொங்கியிருக்கிறான். அருகாமையில் இருக்கும் மிகக் கொஞ்சம் பேர் அவளுக்கு உதவ வந்திருக்கிறார்கள். மிச்ச மீதியெல்லாம் தங்களது மொட்டை மாடியில் செளகரியமான இடம் பிடித்துக் கொண்டார்கள். இறந்து போனவனின் உடலை அறையை விட்டு வெளியே தூக்கி வரும் போது தெளிவாக பார்க்க வேண்டுமாம். 

இந்த மரணமும், அதை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிகளில் இடம் பிடித்த கூட்டமும் நேற்றைய தினத்தை முழுமையாக தின்றுவிட்டது. மரணம் தன் பிரச்சினைகளை எளிமையானதாக்கிவிடும் என தப்புக் கணக்கு போட்டிருக்கிறான் போலிருக்கிறது. அவனது நீல நிற கால்சட்டையும், வலிமையான கைகளும் கண்களைவிட்டு அகலுவதாக இல்லை. மாலை வரை மனம் நிலையாக இல்லை.

மாலையில் வீடு திரும்பும் போது அவன் மறையத் துவங்கியிருந்தான். அலுவலகத்தில் பைக் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் போது கறுப்பு நிற சாண்ட்ரோ கார் படு வேகமாக முந்தியது. உள்ளே ஒரு பெண் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள். பெண் சிகரெட் பிடிக்கிறாள் என்பதை அழுத்தமாகச் சொன்னால் அது ‘செக்ஸிஸ்ட்’ கமெண்ட் ஆகிவிடுமாம். நமக்கெதுக்கு வம்பு? சோடியம் விளக்குகளால் ஜொலிக்கும் நகரத்தின் சாலைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கியதில் அவளை விடவும் அழகான ப்ளக்ஸ் பேனர் நாயகிகள் என் மாலை நேரத்தை ஆக்கிரமிக்கத் துவங்கினார்கள். மடிவாலாவில் பெங்களூர் ட்ராபிக் போலீஸார் ஒரு பேனர் வைத்திருக்கிறார்கள். குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் மரணம் நிச்சயம் என்ற வாசகம் இருக்கிறது. அருகிலேயே ‘மிஸ் யூ டாட்’ என்று பெரிதாக எழுதி வைத்திருந்தார்கள். அதாவது ஆண்கள் மட்டும்தான் குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். It is not a sexist comment என்று நம்ப வேண்டுமாம்.

Dec 26, 2012

நிர்வாணமாக்குதல் என்னும் தண்டனை


இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சித்ரா என்ற டீச்சர்தான் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவரது முகம் முழுமையாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவரது குதிரைவால் கூந்தல் நினைவில் இருக்கிறது. அவரிடம் சிக்கி ஆறு மாதங்களுக்கு சின்னாபின்னமானதால் அடுத்த பல வருடங்களுக்கு சித்ரா என்ற பெயரைக் கேட்டாலே அலறியதும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஆரம்பத்தில் கோபியில் இருந்த ஒரு பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் அம்மா அரசுப்பணியில் சேர்ந்தார்.  அவருக்கு செண்பகப்புதூர் என்ற கிராமத்தில்தான் முதல் வேலை. எனவே அருகாமையில் இருந்த டவுனான சத்தியமங்கலத்தில் இருந்த சாரு மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்பொழுதுதான் நேரடியாக ஏழரைக்கு ப்ரோமோஷன் கொடுத்தார்கள். சனிபகவான் சித்ரா டீச்சர் ரூபத்தில் பிரசன்னமாகியிருந்தார். 

அந்த சித்ரா டீச்சருக்கு என்னை மட்டுமில்லை எங்கள் பென்ச்சில் அமர்ந்திருக்கும் எந்த மாணவனையும் பிடிக்காது. அவ்வப்போது சுளுக்கெடுப்பார். வகுப்பிற்கு வந்தவுடன் ஏதாவது ஒரு பாடத்தில் கேள்வி கேட்பார். அனேகமாக நானோ அல்லது சரவணனோதான் முதல் போனியாக இருக்கும். சத்தியமாக பதில் தெரியாது. கொட்டு வைத்து வகுப்பறைக்கு முன்னால் போகச் சொல்வார். கொட்டு ‘நங்ங்ங்’ என்று இறங்கும். தலையைத் தேய்த்துக் கொண்டே வகுப்பின் முன்னால் நின்று கொள்வோம். வரிசையாக ஒவ்வொரு மாணவனாக கேட்டுக் கொண்டே வருவார். கடைசியாக கிட்டத்தட்ட அத்தனை பையன்களும் தலையைத் தேய்த்துக் கொண்டிருப்போம். பையன்கள் லிஸ்ட் தீர்ந்த பிறகு அடுத்தது கிருத்திகாவையோ, லீலாவதியையோ கேள்வி கேட்பார் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால் கேட்க மாட்டார். அவருடைய டார்கெட் ‘பையன்’கள் மட்டும்தான் என்று சோகமாகிவிடுவோம்.

வகுப்பிற்கு முன்பாக வந்து நிற்கும் வந்த அத்தனை ‘மடையர்களையும்’ நாற்காலியில் அமருவது போன்ற பாவனையில் அமரச் சொல்லிவிட்டு அவர் பாடத்தைத் துவங்குவார். அந்த இடத்தில் நாற்காலி எதுவும் இருக்காது. ஆனால் அங்கு நாற்காலி இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு முட்டியை மடக்கி நிற்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் கணுக்காலில் ஆரம்பித்து கெண்டைக்கால் வரைக்கும் வலி இழுக்கத் துவங்கும். இந்த வலியை சமாளிப்பதா அல்லது பாடத்தை கவனிப்பதா என்ற குழம்பி பிறகு வலியை சமாளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்தை ‘டீலில்’ விட்டுவிடுவோம். 

அடுத்த நாள் வந்து முந்தைய நாள் ‘டீலில்’விட்ட பாடத்திலிருந்து கேள்வி கேட்பார். இப்படியே எங்கள் சோகக் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத மாணவர்களை டீச்சர் கொட்டுவதற்கு பதிலாக அருகில் இருக்கும் மாணவனையே கொட்டு வைக்கச் சொல்வார். எனக்கு சரவணன் கொட்டு வைப்பான், அவனுக்கு நான் கொட்டு வைக்க வேண்டும் என்பதால் ‘மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ தடவிக் கொடுத்துக் கொள்வோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் “கொட்டு வைக்கும் சப்தம் எனக்கு கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் வந்து கொட்டுவேன்” என்று டார்ச்சர் கொடுக்கத் துவங்கினார். அப்படியும் நாங்கள் வழிக்கு வராததால் வேறொரு உபாயத்தைக் கண்டுபிடித்தார். பென்ச்சில் ஒரு பையன் அமர வேண்டும் அவனை அடுத்து ஒரு பெண் அமர வேண்டும் அவளை அடுத்து மீண்டும் ஒரு பையன் என்று அமர வைத்தார்.

கல்லூரிப்பருவமாக இருந்திருந்தால் அது நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அது  இரண்டாம் வகுப்பு. அக்கா தங்கைகளுடன் பிறக்காத எனக்கு ஒரு பெண்ணின் அருகில் அமர வேண்டும் என்பது உவப்பானதாக இல்லை. வெட்கம் பிடுங்கும். கால்களை குறுக்கி அருகில் அமர்ந்திருக்கும் பெண் மீது உரசாமல் அமர்ந்து கொள்வேன். அப்பொழுது சரவணனின் இடத்தில் பானு வந்திருந்தாள். அவள்தான் இனிமேல் என்னைக் கொட்ட வேண்டும். இது ஒரு பக்க அட்டாக். அவள் மட்டுமே என்னைக் கொட்டுவாள். நான் அவளை திருப்பிக் கொட்டக் கூடாது என்ற தைரியத்தில் என் மண்டையில் சடுகுடு ஆடுவாள். அதோடு என் தொடையை கிள்ளி வைக்கவும் அவளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தினமும் வீங்கிய தலையுடனும், சிவந்த தொடையுடனும் வீட்டுக்கு போவது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருந்தது.

எத்தனை தண்டனைகளாலும் திருப்தியடையாத சித்ரா டீச்சர் ஒரு நாள் எங்களின் துகிலுரிய முடிவு செய்துவிட்டார். வகுப்பில் நிர்வாணமாக்கப்பட்டு விளையாட்டு மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் வகுப்புக்கு வர வேண்டும் என்பது டீச்சரின் ஆணை. என் துகிலை உரிவதற்கு பானு பணியமர்த்தப்பட்டாள்.

சட்டையைக் கழற்றுவதற்கு அவள் பெரும் சிரமப்படவில்லை. ஆனால் அதையும் என்னால் முடிந்த அளவு தடுக்க முயன்றேன். சட்டை கழற்றப்பட்டு அரை நிர்வாணம் ஆன பிறகு எங்களது ட்ரவுசர்கள் கழற்ற உத்தரவிடப்பட்டது. நாங்கள் கதறத்துவங்கினோம். எந்த மாணவனும் அந்த மாணவிகளிடம் தோற்கவில்லை. டீச்சர் களமிறங்கினார். கொட்டி வைப்பேன், மர ஸ்கேலால் அடிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். எங்களுக்கு வலியை விடவும் மானம் பெரிதாக இருந்தது. எங்கள் போராட்டத்தை எளிதில் தோற்கடிக்க முடியவில்லை. 

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப்பள்ளியில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகள் மறந்து போனது. அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி பெரும் பாதிப்பை உருவாக்கியது.  என் பள்ளிப்பருவத்தில் மறக்க விரும்பும் தினங்களாக என்      இரண்டாம் வகுப்பு அமைந்தது. அப்பொழுது அந்த டீச்சர் எங்களை தண்டிப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அது வெறும் தண்டித்தலாக மட்டும் இருக்க முடியாது என்று பிறகு தோன்றியது. அந்த டீச்சர் எதனால் அத்தனை குரூரமானவராகவும், ராட்சசியாகவும் நடந்து கொண்டார் என்று யோசித்திருக்கிறேன். இந்த யோசனைக்கு ஆயிரம் பதில்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் உண்மையான பதிலை சித்ரா டீச்சரால் மட்டுமே சொல்ல முடியும்.

டெல்லி பாலியல் சூறையும் பறிக்கப்பட்ட உயிரும்


டெல்லி பெண்னை வன்புணர்வு செய்தவர்களை தண்டிக்கக் கோரி போராளிகள் களம் இறங்கியதில் அடிபட்ட போலீஸ்காரர் சுபாஷ் சந்த் தாமர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளை உடைய தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டும் ஒரே நபராக சுபாஷ் இருந்திருக்கிறார். இப்பொழுது சுபாஷ் குடும்பத்தின் ஜீவாதாரத்தை வெற்றிகரமாக சாய்த்திருக்கிறார்கள் களப்போராளிகளும், டெல்லி அதிகார வர்க்கமும்.

இந்த மரணத்திற்கு இரண்டு தரப்புமே பொறுப்பேற்க வேண்டும். யாராவது ‘பெரிய தலை’யைச் சந்திக்க வேண்டும் என  போராட்டக்காரர்கள்  கோரியிருக்கிறார்கள். முதல்வர் ஷீலா தீட்சித் அல்லது டெல்லி கவர்னர் என யாரும் இவர்களை சந்திக்க வரவில்லை என்பதால் போராட்டக்காரர்கள் ஆட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேகம்தான் சுபாஷை சாய்த்திருக்கிறது. டெல்லி கவர்னரிலிருந்து, ஷீலா தீட்சித், உள்துறை அமைச்சர் ஷிண்டே வரைக்கும் யாரை நோக்கி வேண்டுமானாலும் சுட்டு விரலை நீட்ட முடியும். அதே சமயம் போராட்டக்காரர்களை நோக்கியும் விரலை நீட்டலாம்.

போராட்டம் நடத்துபவர்கள் இரண்டு கோரிக்கைகளை முக்கியமானதாக முன்வைக்கிறார்கள். 

“குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளி” 
“இனி வன்புணர்ச்சி நடக்காமல் தடு”

முதல் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்து மரண தண்டனை கொடுத்துவிடுவார்கள் அல்லது குற்றவாளிகள் கிடைக்காதபட்சத்தில் சாலையில் போகும் யாராவது சிலரை என்கவுண்ட்டரில் பொசுக்கிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை சுட்டுவிட்டோம் என்று வழக்கை முடித்துவிடுவார்கள். ஆனால் இரண்டாவது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியும் என்று தோன்றவில்லை. இது காலப்போக்கில் சமூகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம். சமூகத்தை மனரீதியாக திருத்த வேண்டிய செயலை நீண்டகாலத் திட்டமாக அரசுகள் செயல்படுத்தத் துவங்கினால் மட்டுமே சாத்தியம்.

உண்மையில் இந்த சமூகம் புழுத்துக் கிடக்கிறது. காமத்திற்கும் வக்கிரத்திற்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்களால் நிரம்பிக் கிடக்கிறது. பெண்களை கண்களால் வன்புணர்வு செய்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் போது உடல் ரீதியாக கற்பழிக்கிறார்கள்*. இறுதியில் அவளது ஆடை அலங்காரம் ஆண்களை தூண்டி விடுகிறது என்று அந்தப் பெண்ணின் மீதாகவே எந்த வெட்கமும் இல்லாமல் குற்றத்தை சுமத்திவிடுகிறோம்.

இந்த லட்சணத்தில்தான் கலாச்சாரம், கட்டுப்பாடு என சகலத்திலும் அரசாங்கங்களும், கலாச்சாரக் காவலர்களும் மூக்கை நுழைக்கிறார்கள். திரைப்படம், விளம்பரங்கள் என சகலத்திலும் மேற்கத்திய கலாச்சாரத்தை உள்ளே புக அனுமதித்துவிட்டு “கலாச்சார ரீதியாக நீ இப்படித்தான் இருக்க வேண்டும்” என மக்களை கட்டுப்படுத்துவது முரட்டு நாயை கட்டி வைத்துவிட்டு ஒரு கறித்துண்டை அதன் கண்களில் படும்படியாக வைத்துவிடுவது போலத்தான். சந்தர்ப்பம் வாய்க்குமானால் சங்கிலியை அறுத்துக் கொள்ள நாய்கள் யோசிப்பதில்லை.

சமூக ரீதியிலான மாற்றங்களைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்கு முன்பாக மடக்கிய முஷ்டியை கொஞ்ச நேரம் தளரவிடுவோம். தங்களை இந்திய ராணுவம் கற்பழித்துவிட்டதாக பல ஆண்டுகளாக போராடி வரும் வட கிழக்கு இந்தியப் பெண்களை நாம் ஏன் கண்டு கொள்ளவே இல்லை? ஜம்மு காஷ்மீரில் தங்கள் மீதான பாலியல் பலாத்காரங்களை முன்வைத்து பெண்கள் போராடிய போதெல்லாம் நாம் ஏன் கண்களை மூடிக் கொண்டோம்? தமிழக கிராமங்களில் போலீஸார் நடத்திய காமக் களியாட்டங்களைக் கேட்டபோதெல்லாம் நம் காதுகளை மூடிக் கொண்டது ஞாபகத்திற்கு வருகிறதா? 

இதை எழுதுவது பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு எதிரானதை பேச வேண்டும் என்ற ‘கவன ஈர்ப்பு’ Strategy இல்லை. உண்மையிலேயே நாம் பெரும்பான்மையான மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் மீடியா முன்னிலைப்படுத்தும் செய்திகளுக்காக மட்டுமே கவலைப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இப்பொழுது டெல்லியில் ஒரு பெண் இறந்ததற்கு பதிலாக ஒரு போலீஸ்காரருக்கு முடிவு எழுதிவிட்டோம். ஆனால் இதோடு நாம் ஓயப்போவதில்லை என்று தெரியும். அந்த காமுகர்கள் ஆறு பேரையும் கழுவிலேற்றியே தீருவோம். அவர்களைக் கொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதே சமயம் கோவில்பட்டியிலும், பாகல்கோட்டிலும் மற்றும் இந்த தேசத்தின் பிறபகுதிகளிலும் பாலியல் சித்ரவைதைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்களுக்காகவும் என்ன செய்யப்போகிறோம்?


* கற்பழிப்பு என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனது உடலை யாருடன் பகிர வேண்டும் என ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் விருப்பத்தை கற்பு என எடுத்துக் கொள்ளலாம். அந்த விருப்பத்தையும் உரிமையும் வலுக்கட்டாயமாக சூறையாடும் செயலை கற்பழிப்பு என்றும் கற்பைச் சூறையாடுதல் என்றும் விளிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை

Dec 25, 2012

இது வேறொரு பெரிய யானையை குறித்து..


சென்ற வாரத்தில் ஒரு நாள் மகனுக்கு கதை சொல்ல ஆரம்பித்திருந்தேன். அவனுக்கு கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஏற்கனவே அறிமுகமான கதைகளைச் சொல்வதில்லை. அந்தச் சமயத்தில் கற்பனையில் என்ன தோன்றுகிறதோ அதை கதையாக்கிவிடுவதுதான் வழக்கம். மான்-புலி, மயில்-பாம்பு, இந்தியா-சீனா, ஏகே 47, பிரமோஸ் ஏவுகணை என எதுவாக இருந்தாலும் கதையில் ஒன்றிவிடுவான் - அது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும்.

“ஒரு ஊர்ல ஒரு மான் இருந்துச்சாமா...” என்று கதையை ஆரம்பித்தேன். 

“ம்ம்ம்” கொட்ட ஆரம்பித்தான். 

“அந்த மான் புல் மேஞ்சிட்டிருந்துச்சு” மான் புல் மேய்வதைப் போல குனிந்து பாவனை செய்கிறேன்.

அவனும் என்னைப் போலவே செய்து காட்டுகிறான்.

“அந்த மானை ஒரு புலி பார்த்துடுச்சு தங்கம்” என்று சொல்லிவிட்டு பதுங்கி காட்டுகிறேன்.

“ம்ம்ம்ம்” என்கிறான்.

“இப்போ புலி மெதுவா வருது...திரும்பி அந்தப்பக்கம் பார்க்குது...இந்தப்பக்கம் பார்க்குது”- தலையை இடவலமாக அசைக்கிறேன்.

சில வினாடிகள் அமைதி. அறைக்குள் நிசப்தம் பரவுகிறது.

திடீரென்று குரலை உயர்த்தி உச்சஸ்தாயியில் “புலி Sudden ஆ எடுத்துச்சு பாரு ஓட்டம்” என்ற போது ஒரு கணம் பயந்துவிட்டான்.

கதையை நிறுத்திவிட்டு “பயந்துட்டியா தங்கம்?” என்றவுடன் சுதாரித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். 

“புலி Sudden ஆ எடுத்துச்சு பாரு ஓட்டம்” என்ற வரி அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. திரும்பத் திரும்ப அதே வரியை உச்சரித்துக் கொண்டிருந்தான். அதற்கு பிறகாக கதை என்ன ஆனது என்பது பற்றி அவன் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வரியை மட்டுமே அடுத்த சில நாட்களுக்கு கொண்டாடிக் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வரி கொடுத்த Jerk என நம்புகிறேன். 

குழந்தைகளுக்கு பாதிப்பில்லாத அதிர்வுகள் மிகப் பிடிக்கும். அந்த அதிர்வு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை அவர்கள் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் மிகுந்த உற்சாகமாகிவிடுவார்கள். Jerk குழந்தைகளுக்கு மட்டுமில்லை, பெரியவர்களுக்கும் கூட விருப்பமானதுதான். ட்விஸ்ட் இல்லாத சமாச்சாரங்களை நாம் அதிகம் விரும்புவதில்லை. சினிமாவாகட்டும், கதையாகட்டும் எல்லாவற்றிலும் அதிர்வையும் சலனத்தையும் நம் மனம் எதிர்பார்க்கிறது. 

இதே மனநிலையில் கவிதையிலும் அதிர்வு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாசகனை அதிர்வடையச் செய்ய வேண்டும் என்ற எத்தனிப்பு இல்லாத அதிர்வுதான் நமக்கு பிடித்தமானதாக இருக்கும். கவிதையோடு ஒன்றிய, இயல்பான அதிர்வாக இருக்க வேண்டும். கதிர்பாரதியின் “யானையோடு நேசம் கொள்ளும் முறை” என்ற கவிதையில் அப்படியான ஒரு Jerk இருக்கிறது. கவிதை நேரடியானது. எளிமையான கவிதையும் கூட. 

கவிதை இதுதான்-

யானையோடு நேசம்கொள்ள எண்ணி இருக்கும் நாம்
முதலில் தந்தத்தை நீவிவிட்டு நேசத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
துதிக்கைக்கு முத்தங்கள் ஈந்தாலும் தப்பில்லை
அதுவும் நேசத்தின் கணக்கில் சேரும்.
தேக்குமரத் தூணையொத்த கால்களைப் பிணித்திருக்கும்
இரும்பு சங்கிலியை அகற்றுவதும் நல்லதுதான்.
மத்தகத்தைப் பாதிக்கும் அங்குசத்தை தூரதூரத்துக்கு
எறிந்துவிட்டால் போதும்
யானை நம்மை ஒரு குழந்தைப் போல தூக்கிக்கொண்டு
ஓடிக் களிக்க ஆரம்பிக்கும்.
இப்போது அதன் துதிக்கையில் ஒட்டியிருக்கும்
சப்பாத்திக் கள்ளி முள்ளை எடுத்துவிட்டு
ஏற்பட்டிருக்கும் சிறுகாயத்தின் மீது
நம் கவலையைப் பூசிவிடுகையில் உணர்ந்துவிடும்
நேசத்தின் ஆழத்தை. பிறகு,
அதன் பிரமாண்ட கனவுக்குள் எப்போதும் நமது ஆதிக்கம்தான்.
கவனம் நண்பர்களே...
ஆசீர்வாதம் வாங்குவது இப்போது யானைக்குப் பிடித்திருக்கிறது.

(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பிலிருந்து)

யானையை எப்படி பழக்குவது, அதனோடு எப்படி நேசம் கொள்வது என்று சர்வசாதாரணமாக நகர்கிறது கவிதை. தந்தத்தை நீவி விடுங்கள், இரும்புச் சங்கிலியை அகற்றிவிடுங்கள், அங்குசத்தை தூரமாக வீசிவிடுங்கள் என்றெல்லாம் வாசிப்பிற்கான சுவாரசியத்தைக் கூட்டிக் கொண்டே நகரும் கவிதையின் கடைசி வரியை கவனியுங்கள்.

வனத்தில் கம்பீரமாக அலைந்து திரியும் அந்தப் பெரிய ஜீவனோடு நேசம் கொள்வது என்பது அதனை பிச்சையெடுக்க வைக்கத்தான் என்று முடிகிறது.  யானையை வைத்து பிச்சை எடுப்பதை மறைமுகமாகவும் அதே சமயத்தில் வாசிப்பவனுக்கு சலனமுண்டாக்கும் படியாகவும் இருக்கும் இந்த வரியை Jerk/ட்விஸ்ட்/சலனம்/அதிர்வு என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். 

இந்த அதிர்வு எனக்கு மிகப்பிடித்தமான கவிதையியல் அதிர்வு. யானையைப் பார்க்கும் போதெல்லாம் அல்லது யானையை நினைக்கும் போதெல்லாம் இந்தக் கவிதை உங்களுக்கு ஞாபகத்தில் வருமானால் இந்த அதிர்வு உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

Dec 24, 2012

குட்டியானையாக ஒரு சாஃப்ட்வேர் தலையன்


பெரும்பாலும் ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் பயணிப்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். கொஞ்சம் சிரமம் இருக்கும்தான். ஆனால் அற்புதமான அனுபவங்கள் சாதாரண பேருந்துகளில்தான் கிடைக்கும். ரிசர்வ் செய்த பேருந்துகளுக்குள் நுழையும் போது நிலவும் மயான அமைதி எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். அதைக் கூட தொலையட்டும் என்று விட்டுவிடலாம். நம் ஸீட்டை கண்டுபிடித்து அமரப் போகும் போது பக்கத்து சீட்டுக்காரன் முகத்தை தெரியாத்தனமாகக் கூட பார்த்துவிடக் கூடாது. மீறி பார்த்துவிட்டால் ஏதோ கடன்காரனைப் பார்ப்பதை போல முகத்தை திருப்புவார்கள் பாருங்கள்- முகத்திலேயே ஒரு குத்துவிட வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் ஏறும் போதே ‘ஜாலி’ ஆகிவிடலாம். அப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை செல்வதற்காக டிக்கெட் எதுவும் எடுத்திருக்கவில்லை. பாண்டிச்சேரி வண்டியில் ஏறிவிட்டேன். ஓசூரில் இறங்கி அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பேருந்தை பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். 

ஏறியவுடன் கண்டக்டர் “எங்கே போகணும்” என்றார்.  “ஓசூர்” என்றவுடன் கடுப்பாகிவிட்டார்.  

“ஏம்ப்பா இதென்ன டவுன்பஸ்ஸா?” என்று மீண்டும் எகிறினார். 

“அய்யய்யோ ஓசூரில் பஸ் நிக்காதா சார்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். ஓசூரில் நிற்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரியும். நான் நக்கலடிப்பதாகத் தெரிந்து கொண்டு அவரும் சிரித்து வைத்தார். அவ்வளவுதான். ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவர் ஸீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டும் ஓசூர் வரைக்கும் சொந்தக் கதை சோகக் கதை பேசிக் கொண்டு வந்தோம். அவர் பெண் +2 படிப்பதிலிருந்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது வரைக்கும் பேசிவிட்டு இறங்கினால் ஓசூரில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். இந்தத் தலைகளை வென்றுதான் சென்னை பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு தலையும் அமெரிக்கக்காரனுக்கும், ஐரோப்பாக்காரனுக்கும் உழைத்து ஓடாய்த் தேயும் சாஃப்ட்வேர் தலைகள். சாஃப்ட்வேரில் இருக்கிறார்கள் என்பதால் டீசண்டாக நடந்து கொள்வார்கள் என்றோ, எகிறாமல் பேசுவார்கள் என்றோ நினைத்தால் அதைவிட வேறு முட்டாள்த்தனம் இருக்க முடியாது. தனது மேனேஜர்கள் மீது இருக்கும் கோபத்தையெல்லாம் பக்கத்து ஸீட்டுக்காரன் மீதுதான் காட்டுவார்கள். அப்படி ஒரு தலை என்னிடம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்துவிட்டது. அதுவும் யானைத் தலை. 

ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்கான பேருந்தில் கடைசி வரிசையில் ஒரு இடம் இருந்தது. ஏறி அமர்ந்தால் பக்கத்தில் இந்தக் குட்டியானை. அவன் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்தான். எனக்காக ஆறு இஞ்ச் இடத்தை விட்டு வைத்திருந்தான். கிட்டத்தட்ட டபுள் ஸீட் வாங்க வேண்டிய உருவம் அது. என் கெட்ட நேரம், ஜன்னல் ஓரமாக என்னைத் தள்ளிவிட்டு நசுக்க ஆரம்பித்துவிட்டது. அதைக் கூட பொறுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் “சார், தள்ளி உக்காருங்க” என்றார்.  

“நான் வேணும்ன்னா சக்கரத்தில் உக்காந்துட்டு வந்துடுறேன்” என்றேன். 

அவ்வளவுதான். சட்னி ஆக்க கங்கணம் கட்டிக் கொண்டான் போலிருந்தது. என்னைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தூங்கத் துவங்கினான். பேருந்து கிளம்பியது. தூங்கித் தூங்கி விழுந்தான். கிருஷ்ணகிரி, ஆம்பூர் என ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏதாவது ஸீட் காலியாகுமா என்று பார்த்து கொண்டே வந்தேன். இடம் மாறி அமர்ந்தால் இந்த கிரகத்திடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. ம்ஹூம். யாருமே இறங்குவதாகத் தெரியவில்லை. தோள்பட்டை வலிக்கத்துவங்கியது. இந்த இடத்தில் ‘தூக்கமே வரவில்லை’ என்று எழுதினால் சரியாக வராது.  ‘தூங்கவே விடவில்லை என்பதுதான் சரியாக இருக்கும்.

அவனோடு தோள் உரசிக் கொண்டே வந்த போது மணி மூன்று ஆகியிருந்தது. எப்படியும் இனி நான் தூங்கப்போவதில்லை என்பதால் அவனையும் சேர்த்து தூங்கவிடாமல் செய்யலாம் என்று அவன் என் மீது சாயும் போதெல்லாம் அவனது தலையை ‘விசுக்’ என்று தள்ளிவிடத் துவங்கினேன். அவன் விழித்துப்பார்த்தால் நான் தூங்கிக் கொண்டிருப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடுவேன். நான்காவது முறை தள்ளிவிட்ட போது நன்றாகவே விழித்துக் கொண்டான். எனக்கு உள்ளூர பயங்கர சந்தோஷம். யானையை வென்றுவிட்ட கஜவென்றான் என சுய புளாங்கிதம் அடைந்திருந்தேன். ஆனால் சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வேலூர் பேருந்து நிலையம் வந்தது. யாராவது இறங்குகிறார்களா என்று பார்த்தேன். யாரும் இறங்கவில்லை. ஆனால் அவசரவசரமாக பைகளைத் தூக்கிக் கொண்டு குட்டியானை இறங்கிப் போனது. செம டென்ஷனாகிவிட்டேன். எழுப்பாமல் விட்டிருந்தால் அவன் அடுத்த பேருந்து நிலையம் வரைக்கும் வந்திருப்பான். தண்டனை கொடுத்த சந்தோஷமாவது கிடைத்திருக்கும். அவசரப்பட்டு அவனை எழுப்பி விட்டுவிட்டேனே என புலம்ப ஆரம்பித்தேன். அதன்பிறகு வேலூரிலிருந்து சென்னை வரைக்கும் ஸீட் ஃப்ரீயாகத்தான் இருந்தது. ஆனால் தூக்கம்தான் வரவில்லை.

விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான்


நம்பிக்கை 1: “சக்கிலி நாய், பீ தின்னி நாய், கூட்டிக் கொடுத்த நாய்” - தேவர், கவுண்டர், நாய்க்கர் போன்ற ஆதிக்க சாதியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களை இப்படியெல்லாம் விளிப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆதிக்க சாதியினர் மட்டுமில்லை ஜார்ஜ் வொயிட் என்ற வெள்ளைக்காரனும் இப்படித்தான் விளித்திருக்கிறான்.

நம்பிக்கை 2: சென்ற வாரத்தில் யாரோ ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வெள்ளைக்காரனை சிலாகித்தார். அவர்கள் ஆண்டதால்தான் இந்த தேசத்தில் ரயில் வண்டியிலிருந்து சகல வசதிகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு ஆட்சியைத் தொடர்ந்திருந்தால் இந்த தேசம் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் வந்திருக்கும் என்று அந்த நண்பர் சொல்லிக் கொண்டிருந்த போது பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நம்பிக்கை 3: சனிக்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக காத்திருந்த போது வேறொரு நண்பரை யதேச்சையாக பார்க்க முடிந்தது. அவர் சந்தைப் பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளர். அவர் நிறைய பேசினார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். “பண்ணை முறையை ஒழித்திருக்கக் கூடாது என்றும் ஒருவர் ஐந்நூறு அறுநூறு ஏக்கர் நிலங்களை மொத்தமாக வைத்திருப்பது பல நல்ல பலன்களைத் தந்திருக்கும்” என்றும் பேசிக் கொண்டிருந்தார். 

                                                                                    ***

நாம் நம்பிக் கொண்டிருக்கும் எதுவுமே முழுமையான உண்மையில்லை என்பதை ஒரு நாவலினால் நிரூபித்துவிட முடிகிறது. மேலே மூன்று பத்திகளில் இருக்கும் நம்பிக்கைகளை ஒரு நாவல் தகர்த்து எறிந்தது. நாவலின் பெயர் “எரியும் பனிக்காடு”.


தென்னிந்திய டீ எஸ்டேட்களில் நிகழ்ந்த கொடூரங்களை 1969 ஆம் ஆண்டு Red Tea என்ற பெயரில் பி.எச். டேனியல் நாவலாக்கியிருக்கிறார். என் யூகம் சரியாக இருக்குமாயின் நாவலின் இறுதிப்பகுதியில் எஸ்டேட்டுக்கு மருத்துவராக வரும் ஆபிரஹாம்தான் டேனியல். டேனியல், தென்னிந்திய எஸ்டேட்களில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த அனுபவம் உடையவர். அற்புதமான இந்தப் புதினம் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரா.முருகவேளால் ‘எரியும் பனிக்காடா’க மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. (விடியல் பதிப்பகம்)

நாவல் 1925 ஆண்டு தொடங்குகிறது. திருநெல்வேலி ஜில்லா மயிலோடை என்ற கிராமத்தில் வசிக்கும் கருப்பனுக்கு அவனது அக்காவின் மகள் வள்ளியையே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இவர்களோடு கருப்பனின் அம்மாவும் தங்கியிருக்கிறாள். கருப்பனின் அம்மா மூட்டுவலி நோயாளி. ஊர்ப்பக்கம் மழையில்லாத காரணத்தினால் கருப்பனுக்கு வேலை கிடைப்பதில் கடும் சிரமம் உண்டாகிறது. மூன்று வேளை உணவு இரண்டு வேளை கஞ்சியாக மாறுகிறது. நாட்கள் கடக்கையில் ஒருவேளை கஞ்சிக்கும் கூட மூவரும் சிரமப்பட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் கயத்தாறில் சங்கர பாண்டியன் என்ற மேஸ்திரியை கருப்பன் சந்திக்கிறான். அவன் ஆனைமலை டீ எஸ்டேட்டில் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் கங்காணி. ஆனைமலைக்கு வந்தால் ஒரே வருடத்தில் கை நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து ஊரில் நிலபுலன், ஆடுமாடுகளோடு செட்டில் ஆகிவிடலாம் என்கிறான். கருப்பனுக்கு ஆர்வம் மேலிடுகிறது. வள்ளிக்கும் அவனது அம்மாவும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். கருப்பனின் மாமனாரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். இறுதியில் ஆனைமலை செல்வது என்று முடிவெடுக்கிறார்கள். கருப்பனின் அம்மா தனது மகளின் வீட்டில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

கருப்பனுக்கும் அவனது மனைவிக்கும் சேர்த்து நாற்பது ரூபாயை ‘அட்வான்ஸாக’ கங்காணி கொடுத்துவிடுகிறான். அவர்களை ஆனைமலைக்கு அழைத்துச் செல்லும் செலவான இருபத்தைந்து ரூபாயையும் சேர்த்து மொத்தமாக அறுபத்தைந்து ரூபாய் கருப்பன் வள்ளியின் கணக்கில் கடன் வந்துவிடுகிறது. அதை அவர்களது சம்பளப்பணத்தில் கழித்துக் கொள்வார்கள்.

கனவுகளுடன் வள்ளியும், கருப்பனும் அவர்களோடு இன்னும் பலரும் எஸ்டேட்டிற்குள் நுழைகிறார்கள். எஸ்டேட்டிற்குள் நுழைந்தவுடன் கங்காணி சங்கரபாண்டியனின் முகம் மாறுகிறது. ஐந்துக்கு நாலடி உள்ள அறையில் மூன்று குடும்பங்கள் தங்க வைக்கப்படுகின்றன. கருப்பன் தனக்கு வசதியான இடம் வேண்டும் என்று கேட்கும் போது அவனுக்கு அடி விழுகிறது. அவர்களோடு அதே அறையை பகிர்ந்திருக்கும் முத்தையா குடும்பத்தினர் எஸ்டேட்டில் மூன்று ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள்தான் கருப்பனுக்கு, வள்ளிக்கும் ஆறுதலாக இருக்கிறார்கள். எப்படியும் பொறுத்துக் கொண்டாக வேண்டும் என்று சமாதானப்படுத்துகிறார்கள். அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் அடித்துக் கொன்றுவிட முடியும் என்று கருப்பனை அமைதிப்படுத்துகிறார்கள். ஒரு அடிமைப்பட்டிக்குள் தாங்கள் சிக்கிக் கொண்டதை கருப்பனும் வள்ளியும் முழுமையாக உணர்கிறார்கள். அடுத்த நாள் எஸ்டேட் ரெஜிஸ்டரில் பெயர் பதிவை ஆரம்பிக்கும் போதிலிருந்து வள்ளியின் மீதான பாலியல் தாக்குதல்களை தொடங்குகிறார்கள் எஸ்டேட் அதிகாரிகள். 

இந்தச் சிரமங்களுக்கிடையே மலேரியா, கடும் குளிர், பெருமழை, அட்டைப் பூச்சிகள், நிமோனியா ஆகியன வாட்டி வதைக்கின்றன. மலேரியாவில் கொத்து கொத்தாக தொழிலாளிகள் இறக்கிறார்கள். எஸ்டேட்டுக்குள் எந்த மருத்துவவசதியும் கிடையாது. மருத்துவனாக இருக்கும் மலையாளியான குரூப் என்பவன் கம்பெளண்டர் கூட கிடையாது. கைவசம் இருக்கும் மருந்தை நோயாளிக்கு கொடுப்பான். குரூப்பை தவிர்த்து நாட்டு வைத்தியன் ஒருவனும் எஸ்டேட்டில் இருக்கிறான். அவனுக்கு தாயத்து கொடுப்பதுதான் தெரிந்த வைத்தியம். ஒரு நாளைக்கு நாலணா கூலி வாங்கும் தொழிலாளிகளிடம் ‘தாயத்து மந்திரித்து தருகிறேன்’ என்று ஏழு ரூபாய் பறிப்பதுதான் அவனது வேலை. தொழிலாளிகளின் இறப்பை இவர்களால் எந்த விதத்திலும் தடுக்க முடிவதில்லை.

இத்தனை சிரமப்பட்டாலும் ஆண்டு இறுதியில் கணக்கு பார்க்கும் போது கருப்பனுக்கும் வள்ளிக்கும் எந்தப் பணமும் மிச்சமாவதில்லை. தங்களின் கடனை அடைப்பதற்காக அடுத்த ஆண்டும் அவர்கள் அதே எஸ்டேட்டில் தங்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடர்கிறது.

இதனிடையே ஊருக்கும், இவர்களுக்கும் எந்த தகவல் தொடர்பும் இருப்பதில்லை. தபால்கள் யாவும் மேஸ்திரிகளால் தணிக்கை செய்யப்படுகிறது. எஸ்டேட்களில் இருந்து யாராலும் தப்பித்து போக முடிவதில்லை. மலைப் பாதைகளில் எஸ்டேட்காரர்கள் காவலுக்கு இருப்பார்கள். பிடித்துக் கொண்டுவருவதோடு நில்லாமல் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும் என்பதற்காக அவர்களின் முன்னால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்.

மூன்றாவது ஆண்டு இறுதியில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் பணம் மிச்சமாகும் போலிருக்கிறது. ஆனால் கருப்பன்- வள்ளியின் வாழ்வில் விதி விளையாடுகிறது. வள்ளி மலேரியாவினால் கடுமையாக பாதிக்கப்படுகிறாள். அவளது வயிறு வீங்கிவிடுகிறது. புதிதாக வந்திருக்கும் மருத்துவரான ஆபிரஹாம் தன்னால் முயன்ற அளவிற்கு வள்ளிக்கு சிகிச்சையளிக்கிறார். பிறகு வள்ளியும் கருப்பனும் இந்த நரகத்திலிருந்து தப்பிக்க முடிகிறதா என்பதுதான் நாவலின் முடிவு.

இந்த புதினத்தில் தத்துவ விசாரணைகள், விவரணைகள் போன்றவையெல்லாம் இல்லை. நேரடியான மொழியும் படு வேகமான கதை சொல்லும் முறையும் நாவலுடன் வாசகனை ஒன்றச் செய்துவிடுகிறது. அந்தக்காலத்தில் எஸ்டேட்களில் நிகழ்ந்த கொடூரங்களும், எஸ்டேட் அதிகாரிகளும் மற்றும் வெள்ளைத் துரைகளும் நிகழ்த்திய காமக் களியாட்டங்களும், தலித்கள் மீது அவர்கள் செலுத்திய அதிகாரங்களும் புதினத்தின் வழியாக காட்சியாக விரிகின்றன. எஸ்டேட் அடிமைகளின் வரலாறு, இந்திய பொருளாதாரத்தின் மீதான ஆங்கிலேயர்களின் சுரண்டல்கள், இந்தியர்கள் மீது ஆங்கிலேயருக்கு இருந்த வெறுப்பு ஆகியன நாவலில் மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றியது.

                                                                            ***

சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சனிக்கிழமையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது அடுத்த நாள் பேருந்தில் வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன். நண்பர் சாத்தப்பன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டே இந்த நாவலை சுட்டிக் காட்டினார். கோயம்பேட்டில் பெங்களூருக்குச் செல்லும் பேருந்தில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை வெளியில் எடுக்கும் போது அவ்வளவு ஆர்வமாக இல்லை. ஆனால் நாவலின் மொழியும் அது கையாண்டிருக்கும் இருண்ட பக்கங்களும், எஸ்டேட் கூலிகள் அனுபவித்த கொடுமையும் உருவாக்கிய மனச்சித்திரங்கள் வேறு எதைப்பற்றிய சிந்தனையும் வராமல் பார்த்துக் கொண்டன. எந்த ஒரு நாவலையும் ஒரே Sitting இல் நான் வாசித்ததில்லை. ஆனால் எரியும் பனிக்காடு நாவலை முடிக்க முடிந்தது. கோயம்பேட்டில் ஆரம்பித்து ஓசூரை அடைவதற்கு முன்பாக நாவலை முடித்திருந்தேன்.

பொதுவாக புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும் முன் முன்னுரை, ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, பின்னட்டை வாசகம் என எதையும் வாசிப்பதில்லை. அவை அந்தப்புத்தகம் குறித்தான முன்முடிவுகளை உருவாக்கிவிடும் என்று தயக்கமாக இருக்கும். புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு இவற்றை வாசிப்பது வழக்கம். இந்த நாவலையும் வாசித்து முடித்த பிறகுதான் பி.எச்.டேனியலின் முன்னுரையை வாசித்தேன். பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேனீரை உறிஞ்சும் போது அதற்காக, அந்த ஆண்டுகளில் உங்களுடையவற்றைவிட எளிய ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன, அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவு கூறுங்கள்”.

இந்த வரிகள் உருவாக்கிய குற்றவுணர்ச்சியுடன் புத்தகத்தை மூடி வைத்தேன். நேற்றிரவு உறக்கம் தொலைந்திருந்தது. 

Dec 22, 2012

டெல்லி வன்புணர்வு மட்டும்தான் நம் பிரச்சினையா?ஓடும் பேருந்தில் பெண்ணொருத்தியை கற்பழித்துவிட்டு நாப்கினைப் போல எறிந்துவிட்டு போகிறார்கள்.கொடூரமாகத்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவனை திகார் சிறையில் அடைத்த போது அங்கிருந்த கைதிகள் அவனை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து மனித மலத்தை தின்ன வைத்திருக்கிறார்கள். “சாவடிக்கட்டும்” என்ற மனநிலையில் இருக்கிறோம்.

உண்மையில் இந்த மனநிலை ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடநாட்டு ஊடகங்களால். இந்த ஊடகங்கள் தங்களின் சேனலுக்கான ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி’யை தயாரிக்கும் போதே அந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பார்வையாளர்கள் எத்தகைய மனநிலையை அடைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்கின்றன. அது கோபம், அறச்சீற்றம், பீதி என சீஸனுக்குத் தகுந்த மனநிலையாக இருக்கும். டெல்லி விவகாரத்தில் நமது மனநிலை மாற்றம் குறித்து ஒரு Graph வரைந்தால் அது அந்த பெண்ணின் மீதான பரிதாபத்தில் ஆரம்பித்து காமுகர்களின் மீதான கோபத்தை நோக்கி நகரும்.

கவனித்துப்பார்த்தால் இத்தகைய ஊடகங்களின் டார்கெட் ‘மிடில் கிளாஸ்’. இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள் பொங்கி வரும் தங்களின் உணர்ச்சியை சமூக ஊடகங்களில் கொட்டிவிட்டு சைலண்ட் ஆகிவிடும் போராளிகள். அதிகபட்சமாக வார இறுதி நாட்களில் ஏதேனும் ஒரு பொது இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடிவிட்டு கே.எஃப்.சியில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் போலியான போராளிகளை இந்த ஊடகங்கள் வெற்றிகரமாக உருவாக்கி வருகின்றன.  இந்த நவீன போராளிகளிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஊடகங்களில் எந்தச் செய்தி‘ஹைலைட்’ செய்யப்படுகிறதோ அதைப்பற்றி மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதற்கு முந்தைய பிரச்சினையை மறந்திருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக ‘ஊழலை ஒழிப்போம்’ என்று அன்னா ஹசாரேவை ஊடகங்கள் தூக்கிப்பிடித்தன. ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அன்னாவின் கொடி பறந்தது. பிறகு அவர் ஒரு ‘டம்மி பீஸ்’ என்றான பிறகு எந்த உயரத்தில் பிடித்திருந்தார்களோ அங்கிருந்து கீழே விட்டார்கள். அதுவரை ஊழலை ஒழிப்போம் என்று நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்த போராளிகளை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் இப்பொழுது கண்டுபிடிக்க முடியாது. அதே போராளிகள்தான் இப்பொழுது வன்புணர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைகள் பற்றியும், இனி எப்படி இந்தப்பிரச்சினைகளை கையாள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிரச்சினை ‘ஹைலைட்’ ஆகும் போது இதை விட்டுவிட்டு அதைத் தூக்கிக் கொள்வார்கள். 

ஒன்றுமேயில்லாத சப்பை மேட்டரான பறவைக்காய்ச்சலுக்கு வடக்கத்திய ஊடகங்கள் கொடுத்த பில்ட்-அப் ஞாபகமிருக்கிறதா? அது மக்களின் மத்தியில் அந்தச் சமயத்தில் ஒருவித பீதியை கிளப்பிவிட்டிருந்தது. மிச்சம் மீதியாகிப்போன  பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி ஸ்டாக்கை காலி செய்வதற்கு மருத்துவக் கம்பெனிகள் விரித்த சதிக்கு நமது ஊடகங்களும் உடந்தையாக இருந்தன. மக்கள் பதறியடித்துக் கொண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார்கள். மருத்துவக் கம்பெனிகளின் ஸ்டாக் தீர்ந்த பிறகு பறவைக்காய்ச்சலை ஊடகங்கள் மறந்துவிட்டன.

டெல்லி பெண்ணுக்கு நடந்த கொடுமை யாராலும் ஜீரணிக்க முடியாததுதான். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் மற்ற முக்கியமான பிரச்சினைகளை ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை?

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போது இதே அளவு முக்கியத்துவத்தை இந்த ஊடகங்கள் ஏன் அளிப்பதில்லை என்று புரிவதேயில்லை. மிகச் சமீபத்தில் வினோதினி என்ற பெண்ணின் மீது ஆசிட் ஊற்றப்பட்டு அவள் தனது பார்வையை முழுமையாக தொலைத்துவிட்டாள். எத்தனை சேனல்கள் இது பற்றிய கவனத்தை உருவாக்கின? 

2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் 94 குழந்தைகள் எரிந்த தீ விபத்து தேசிய அளவில் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் நொய்டாவில் 2008 ஆம் கொல்லப்பட்ட ஒன்பது வகுப்பு மாணவியான ஆருஷி வழக்கு பற்றிய விவாதங்களை இன்னமும் ஆங்கிலச் சேனல்களில் கவனிக்க முடியும். 1999 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மாடல் அழகியான ஜெஸிக்காவை இன்னமும் நாம் மறக்காமல் இருக்கக் காரணம் ஊடகங்கள்தான். ஆருஷி, ஜெஸிக்காவை விடக் கொடுமையான நரபலிகள் இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஊடகங்கள்தான் தலைநகரை விட்டு வெளியில் வருவதில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த வன்புணர்வு சம்பவம் கோயமுத்தூரிலோ அல்லது எர்ணாகுளத்திலோ நடந்திருந்தால் இத்தகைய சலனத்தை உருவாக்கியிருக்குமா என்ற கேள்வி முக்கியமானது? பதில் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

வடநாட்டு பிரச்சினைகளை மட்டுமே தேசியப் பிரச்சினையாக காட்டிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் எந்தக் காலத்திலும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. அது வன்புணர்ச்சியாக இருந்தாலும் சரி, கொலையாக இருந்தாலும் சரி டெல்லியில் நடந்தால்தான் சலனமுண்டாக்கும் செய்தியாக மாறும் போலிருக்கிறது. 

எனக்கு சமூகப்போராட்டம் நடத்த செய்தி கிடைத்தால் சரி அந்த பிரச்சினை எங்கு நடந்தால் எனக்கு என்ன?

“கற்பழித்தவனை தூக்கில் போடு” 

“போராடுவோம்! போராடுவோம்!! அடுத்த நியூஸ் வரும் வரைக்கும் போராடுவோம்”

Dec 21, 2012

சென்னை ஒரு மாயக்காந்தம்


வாழ்க்கை குறித்த தேடலுடன் தனது எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கும் மனிதனை சென்னை அளவுக்கு வேறு ஊரால் அலைகழிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் Survive ஆகிக் கொள்பவனை சென்னை அளவுக்கு அரவணைத்துக் கொள்ளும் வேறு ஊர் ஒன்று இருக்கிறதா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. 

சென்னையில் மொத்தமாக ஒரு வருடம் மட்டுமே இருந்திருக்கிறேன். அதன் பிறகு பயணித்த எந்த ஊரும் சென்னை அளவுக்கு ஈர்த்ததில்லை. க்ளைமேட் சரியில்லை, வெப்பம் அதிகம், சூழல் மாசடைந்து கிடக்கிறது என்று எந்தக் காரணத்தைச் சொன்னாலும் என்னளவில் சென்னை is the best. 

சென்னையை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் தன்னைப் பற்றிய கனவுகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. சென்னைக்கு செல்ல வேண்டும் என்ற காரணம் ஏதாவது கிடைக்கும் போது மிகுந்த உற்சாகமடைந்துவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்ற மனச்சித்திரத்துடன் சென்னையை அடையும் போதும் தன்னை உருமாற்றி வைத்திருக்கும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்னையின் முகம் மாறிக்கொண்டேயிருப்பதாகத் தோன்றும். ஆனால் ஒவ்வொரு முகமும் எந்த விதத்திலும் ஈர்ப்பு குறைந்ததாக மாறியிருக்கவில்லை.

சென்னையில் இருப்பவர்களால் இந்த மனநிலையை புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு வெளியேறி பிறகு வேறு ஊர்களின் இரும்புப்பிடிக்குள் சிக்கிக் கொண்டவர்களாக இருந்தால் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு இரவு சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்னும் மனநிலை மிகுந்த உற்சாகமானதாக இருக்கிறது. இந்த முறை கவிஞர்கள் நிலாரசிகன், கதிர்பாரதியின் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பயணம். நிகழ்ச்சி  சனிக்கிழமை மாலை (22.12.2012) கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. கதிரும் சரி, நிலாவும் சரி நவீன கவிதை மொழியின் இறுக்கங்களையும், வழமைகளை தங்களது புது மொழியால் நெகிழச் செய்கிறார்கள் என்று அடிக்கடி தோன்றும். அவர்கள் இருவரின் தொகுப்பும் ஒரே பதிப்பகத்தில், ஒரே நேரத்தில் வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


கதிர்பாரதி தனது கவிதைத்தொகுப்பின் முதல் பிரதியை நான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னபோது தயக்கமாக இருந்தது. தனது கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியை வெளியிடுபவர் யார், பெற்றுக் கொள்பவர் யார் போன்றவை குறித்து கவிஞனுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கக் கூடும். எந்த அடிப்படையில் கதிர்பாரதி என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. நெகிழ்ச்சியாக இருந்தாலும், உண்மையைச் சொன்னால் ஒரு தொகுப்பின் முதல் பிரதியை பெற்றுக் கொள்ளும் தகுதி எனக்கு இருப்பதாக இன்னமும் நம்பவில்லை. 

நானே நம்பாத போது வீட்டில் நம்புவார்களா? எள்ளி நகைக்கிறார்கள். “சென்ட்ரல் மினிஸ்டராலேயே முடியலையாமாஆஆஆஆ...” என இழுக்கிறாள் மனைவி. “போன் வயர் அறுந்து நாலு நாள் ஆச்சு” என்கிறான் தம்பி. ஆனாலும் தளர்வடையாமல் இருக்கிறேன்.

 பிரிண்ட் அடித்த அழைப்பிதழ் இருந்தால் மறக்காமல் வாங்கி பைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கொண்டு வந்து காண்பித்தால் கொஞ்சமாகவேனும் நம்புவார்கள். வெளியில் இருப்பவர்களை நம்ப வைப்பதைவிடவும் வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கத்தான் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!


“நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்” - அடுத்தவர்களை நக்கலடிப்பதற்கு மட்டுமே இந்த வரியைப் பயன்படுத்துவதால் உண்மையான வில்லேஜ் விஞ்ஞானியை பாராட்டும் போது எப்படி பாராட்டுவது என்று குழப்பம் வந்துவிடுகிறது. 

பாலாஜி அப்படியான ஒரு வில்லேஜ் விஞ்ஞானி. இருபத்தி மூன்று வயதுதான் ஆகிறது. கல்லூரியில் எம்.டெக் படித்துக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது கொடுத்திருந்தேன். ஒரு மாலை நேரத்தில் “சார், விழுப்புரம் மாவட்டம் கண்டராச்சிபுரத்திலிருந்து பேசுகிறேன்” என்று அவர் அலைபேசியில் சொன்னபோது அசால்ட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன். 

“நிறைய ரோபோ செஞ்சிருக்கேன் சார்” என்று ஆரம்பித்தவர் குட்டி குட்டி ரோபோவில் தொடங்கி ஆளுயர ரோபோ வரைக்கும் தான் விதவிதமாக வடிவமைத்தது குறித்து கில்லி விளையாடினார். அத்தனையும் Made by பாலாஜி. ரோபோ ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை. நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு டீமாக வேலை செய்தாலும் கூட மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியே சிரமப்பட்டாலும் கூட செய்து முடிக்கும் ரோபோ வெற்றியடையும் என்று சொல்ல முடியாது. 

ஆனால் பாலாஜி ரோபோடிக்ஸில் தனி ஆவர்த்தனம் நடத்துகிறார். அதுவுமில்லாமல் இந்த ரோபோக்கள் வெற்றிகரமானவை என்பதுதான் முக்கியமான விஷயம். கேட்பதற்கு பிரமிப்பாக இருந்தது. பேசி முடித்த பிறகு பாலாஜியை ஆரம்பத்தில் அத்தனை அசால்ட்டாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. 

படத்தில் இருக்கும் ரோபோ பறந்து செல்கிறது. ஆளில்லாத விமானம் போல. காகிதத்தில் ராக்கெட் செய்து பறக்கவிடுவதே எத்தனை சிரமம் என்று செய்து பார்த்தவர்களுக்குத் தெரியும். ஆனால் ஏரோ டயனமிக்ஸை சர்வசாதரணமாக வடிவமைத்திருக்கிறார்.


பாலாஜி தனது பள்ளிப்பருவத்திலேயே ரோபோக்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அறிவியல் கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் என்று என்னதான் கலக்கினாலும் மேலே படிக்க குடும்பச் சூழல் ஒத்து வரவேண்டுமல்லவா? +2 முடித்த பிறகு பிறகு ஒரு ப்ரேக். தச்சுத்தொழிலாளியான அப்பாவால் பாலாஜியை அவ்வளவு எளிதாக கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. அடுத்த வருடம் பணம் சேர்த்து இஞ்சினியரிங் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படிக் கிடைத்த ஒரு வருட இடைவெளியிலும் சில ரோபோக்களை செய்து கொண்டிருந்த பாலாஜி அடுத்த வருடத்தில் மயிலம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.

கல்லூரிக் காலம் பாலாஜிக்கு இரண்டு சிறகுகளை கூடுதலாக செருகிவிட்டிருக்கிறது. உளவு பார்த்து வரும் ஸ்பை ரோபோ, மினியேச்சர் ஜே.சி.பி என கலர்கலராக படம் காட்டிக் கொண்டிருந்தவரின் படத்தை உள்ளூர் பத்திரிக்கைகள் வெளியிடத் துவங்கின. உற்சாகம் பிளிறிட இன்னமும் ஏகப்பட்ட ரோபோக்களை செய்திருக்கிறார்.


கல்லூரியை முடித்துவிட்டு வேறொரு கல்லூரியில் ஆராய்ச்சியாளராக வேலை செய்து கொண்டிருந்தபோது நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி நிர்வாகத்தினர் பாலாஜியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.டெக் ரோபோடிக்ஸ் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். 

கல்கி வார இதழில் ரோபோடிக்ஸ் குறித்தான தொடரை எழுதிக் கொண்டிருந்தபோது இந்தியாவில் ரோபோடிக் துறையில் முக்கியமான ஆட்களை பற்றிய செய்திகளை இணையத்தில் தேடிப்பார்த்திருக்கிறேன். ஆனால் பாலாஜியின் ஊக்கத்துடன் செயல்படும் ரோபோடிக் ஆர்வலர்களை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ், ஜெனிடிக் அல்காரிதம் போன்ற ரோபோடிக்ஸின் தற்கால நுட்பங்கள் தெரியாமலேயே கலக்கிக் கொண்டிருக்கிறார் பாலாஜி.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து சொந்தமாக கையை ஊன்றி கர்ணம் அடித்து ரோபோடிக்ஸில் வெற்றிக் கொடிகட்டும் பாலாஜி  நவீன நுட்பங்களைக் கற்றுக் கொள்வதோடு அவருக்கு வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் மிக முக்கியமான விஞ்ஞானியாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. 

“எம்.டெக் முடிச்சுட்டு வேலை தேடப் போறீங்களா?” என்றேன்

“வேலை கிடக்கட்டும் சார். அது அவசியமில்லை. நான் சயிண்டிஸ்டாக போறேன். அதுவும் சக்ஸஸ்ஃபுல்லான சயிண்டிஸ்ட்” என்றார். அதை அதீத நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது. அவரிடம் திறமையிருக்கிறது. அந்த திறமை மீது அவருக்கு நம்பிக்கையும் இருக்கிறது. 

இத்தகைய இளம் வயது சாதனையாளருக்கு வசதிகள், வாய்ப்புகள் என எதுவுமே இல்லையென்றாலும் கூட ஊக்கம் அத்தனையையும் சாத்தியப்படுத்திவிடும். யாரேனும் ஊடகவியலாளர்கள் இந்தக் குறிப்பை கவனிக்க நேர்ந்தால் கொஞ்சம் பாலாஜியை கவனியுங்கள். பாலாஜியை 8056834037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  ஒரு அலைபேசி அழைப்பு அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் அவருக்கான ஊக்கத்தை தரும் என நம்புகிறேன். 

Dec 19, 2012

அதிகாரவர்க்கத்திற்கு உயிர் என்பது மயிருக்குச் சமானம்

நம் ஊர்ப்பக்கம் அதிகாரவர்க்கம் யாரையாவது கொல்ல விரும்பினால் அவ்வளவு சீக்கிரமாக வீதியிலேயே வைத்து  சுட்டுத்தள்ள மாட்டார்கள். பிடித்துக் கொண்டு போய் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து என்கவுண்ட்டரில் போட்டால்தான் உண்டு.  அந்த அளவில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான். ஆனால் மணிப்பூர், காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலைமை அப்படியில்லையாம். ஆயுதப்படையினர் தங்களுக்கு தூக்கம் வராமல் இருக்க யாரையாவது சுட்டுத் தள்ளினால் கூட “சும்மா விளையாட்டுக்கு” என்று அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அந்தளவிற்கு அங்கிருக்கும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினருக்கு வரைமுறையற்ற சுதந்திரத்தை அரசுகள் வழங்கியிருக்கின்றன.

ஆயுதப்படையினரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற Armed Forces Special Power Act (AFSPA) என்ற பிரிவை வைத்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ‘எந்த’ காரியத்திலும் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்த சிறப்புப் பிரிவு வழங்குகிறது. எந் இப்படித்தான் 2000 ஆம் ஆண்டில் மணிப்பூரில் மாலோம் என்ற இடத்தில் பேருந்துக்கு நின்றிருந்த பத்து பேரை ஆயுதப்படையினர் பொசுக்கித் தள்ளினார்கள். அந்தப் பத்து பேரும்தான் இம்பாலில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று கேஸை மூடிவிட்டார்கள். எவனாவது வாயைத் திறந்தால் அவனையும் லிஸ்டில் சேர்க்கும் முடிவில்தான் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அடுத்த இரண்டாவது நாளில் 27 வயதான இளம்பெண் உண்ணாவிரதத்தை துவக்கினாள். அவள் முன் வைத்த கோரிக்கை மிக எளிமையானது. AFSPA வை மணிப்பூரில் இருந்து நீக்க வேண்டும். அவ்வளவுதான்.

அரசுகளாவது செவிமடுப்பதாவது? நாட்கள் மாதங்களாகி வருடங்களும் ஓடிவிட்டன. அந்தப் பெண்மணி உண்ணாவிரதத்தைத் துவங்கி இப்பொழுது பன்னிரெண்டு ஆண்டுகள் முடிந்தாயிற்று. அரசும் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை, அந்தப் பெண்ணும் ஓய்ந்து போனதாகத் தெரியவில்லை. அத்தனை ஜால்ரா மீடியாக்களும் செய்தி கசிந்துவிடாமல் மறைத்தாலும் அவள் பிரபலமாகிக் கொண்டிருந்தாள். அவளைத்தான் மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு ‘ஐகானாக’ மாறிவிட்ட அந்த இரும்புப் பெண்மணியின் பெயர் இரோம் ஷர்மிலா.


கொஞ்ச நாட்களுக்கு ஷர்மிலாவை வெளியில் விட்டு வைத்த அரசாங்கம் இவள் தலைவலியாக மாறிவிடக் கூடும் என நினைத்து செக்‌ஷன் 309 ல் உள்ளே தள்ளிவிட்டார்கள். பிரிவு 309 என்பது தற்கொலை முயற்சி செய்பவர்களை தண்டிப்பதற்கான சட்டப்பிரிவு. அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே சிறையில் வைத்திருக்கலாம். ஷர்மிலாவை ஒரு வருடம் கஸ்டடியில் வைத்திருப்பார்கள். பிறகு பெயரளவில் ‘ரிலீஸ்’ செய்துவிட்டு மீண்டும் கைது செய்துவிடுவார்கள். 

கைது செய்தாலும் ஷர்மிலா தனது உண்ணாவிரதத்தை தொடர்வதால் மூக்கு வழியாக ஒரு குழாயைச் செருகி வலுக்கட்டாயமாக எதையாவது ஊற்றி ஷர்மிலாவை உயிரோடு வைத்திருக்கிறார்கள். 

பன்னிரெண்டு வருடங்களாக மூக்கு வழியாகச் செலுத்தப்படும் உணவை உண்டு, ஆறேழு ஆண்டுகளாக பல் கூட துலக்காமல், தனது அபிலாஷைகள், உணர்வுகள் என அத்தனையும் மழுங்கடித்து மனித உரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஷர்மிலாவின் அத்தனை போராட்டமும் மூன்றாவது மனிதனுக்கானது. தனது அத்தனை கஷ்டங்களையும் வேறு யாருக்காகவோ அனுபவிக்கிறாள். தனக்காவோ, தனது குடும்பத்திற்காகவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னை சிறுகச் சிறுக அழித்துக் கொள்ளும் அந்தப் பெண்மணி உண்மையிலேயே ‘சல்யூட்’டுக்குரியவள்.

ஷர்மிலாவுக்கு போராளி என்பதைத் தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. அது கவிதை முகம். தனது கவிதைகளை ‘மைதைலான்’ என்ற மணிப்பூரின் மொழியில் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதைகள் தமிழிலிலும் கிடைக்கின்றன. மொழியாக்கம் செய்திருப்பவர் அம்பை. ஷர்மிலாவின் பன்னிரெண்டு கவிதைகள் அடங்கிய “அமைதியின் நறுமணம்” என்ற தொகுப்பை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கவிதைகள் என்ற அளவில் வாசித்தால் சாதாரணமானவையாக தெரிவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கவிதையின் வழியாக இரோம் ஷர்மிலாவை காண முடிந்தால் அது மிக முக்கியமான அனுபவமாக இருக்கும்.

இந்தத் தொகுப்பின் இரண்டு பத்திகள் வாசித்ததிலிருந்து மிகவும் அலைகழிக்கின்றன. 

“என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்கு 
கூண்டுப் பறவையான என்னை
இந்தச் சிறு அறையில் பிணைத்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து

இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை”

இந்தக் கவிதையில் ஷர்மிலாவின் குரலைக் கேட்க முடிந்த ஒவ்வொருவரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகக் கூடும். தன்னை விடுவிக்கக் கோரும், சிறையின் வேதனையை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பெண்மணி உழலும் அதே தேசத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவளுக்காக எந்தத் துரும்பையும் எடுத்துப் போடாத, ஒற்றைச் சொல்லைக் கூட உதிர்க்காத நம்மை நாமே வெட்கித்துக் கொள்ளச் செய்யும் எழுத்துக்கள் இந்தப் பத்தியிலிருக்கின்றன.

‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஆவணம் என்ற வகையிலும், குரல் நசுக்கப்படும் ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்ணின் வாக்கு மூலம் என்ற அடிப்படையிலும் மிக முக்கியமான புத்தகம். 

புத்தகத்தை வாசித்துவிட்டு தூக்கம் வராமல் ஷர்மிலா பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.  நீண்ட பட்டினியால் அவரது உடலின் பல பாகங்கள் சிதைந்து கொண்டிருப்பதாக ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அரசுக்கும், பெரும்பான்மை ஊடகங்களுக்கும் இது பற்றிய கவலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இலட்சக்கணக்கான உயிர்களைக் கூட கொல்வதற்கு தயாராக இருக்கும் இந்த பயங்கரவாத அதிகார வர்க்கத்திற்கு சிதைந்து கொண்டிருக்கும் ஒற்றை உயிர் என்பது உதிர்ந்து கொண்டிருக்கும் ஒற்றை மயிருக்குச் சமானம்.

Dec 18, 2012

ஐ.டிகாரனுக்கு அரை லட்சம் சம்பளம்நாராயணன்  ஒரு பெங்களூர்வாசி. வேலை எதுவும் இல்லை. நான்கைந்து வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டிவிட்டு வெட்டியாகச் சுற்றுகிறார். அவரது மனைவி ஐ.டி துறையில் பெரிய பதவியில் இருக்கிறார். நிறைய சம்பளம் வாங்குவார் போலிருக்கிறது. நாராயணனுடன்  எப்பவோ பேசிக் கொண்டிருக்கும் போது “ஐ.டியில் வேலைக்கு இருந்தால் மாசம் ஒரு லட்சம் வராது?” என்றார். போட்டு வாங்குகிறாரா அல்லது உண்மையாகவே கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் பதில் ஒன்றுதான் “வராது சார்” என்றேன்.

நாராயணனைப் போலத்தான்  நிறையப் பேர் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள்- ஐடிக்காரர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். டிப்டாப்பாக துணிமணி உடுத்திக் கொள்வார்கள் .நினைத்த நேரம் வேலைக்கு போகலாம். எக்ஸெட்ரா..எக்ஸெட்ரா..

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மைதான் பல்லிளிப்பதாக இருக்கிறது.

எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் பெண்ணுக்கு ஐ.டியில் பணிபுரியும் பையன் ஒருவனை நிச்சயம் செய்திருந்தார்கள். அவருக்கு தனது வருங்கால மருமகன் டெபிட் கார்ட் நிறைய சம்பளம் வாங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. விசாரிக்கவும் சொல்லியிருந்தார். விசாரித்ததில் பெரிய நிறுவனம்தான். ஆனால் பதினேழாயிரம்தான் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்.

கணவன், மனைவி இரண்டு பேருக்கு பதினேழாயிரம் போதாதா என்று கேள்வி கேட்கலாம். போதும்தான்- இதுவே வேறு ஊராக இருந்தால். பெங்களூரில் இரண்டு பெட்ரூம்கள் இருக்கும் ப்ளாட்டுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வாடகை தர வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெரியாத்தனமாக குழந்தை பிறந்துவிட்டால் கதை கந்தல்தான். மருத்துவருக்கு குறைந்தபட்சம் முந்நூறு ரூபாய். பள்ளிகளுக்கான ஃபீஸ் பற்றியெல்லாம் கேட்கவே தேவையில்லை. வருடம் ஒரு லட்சத்திற்கும் குறைவில்லாமல் கறந்துவிடுவார்கள்.

எட்டாயிரத்திற்கும் குறைவான ஊதியத்தில் ஐடி நிறுவனங்களில் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் பாடுபடும் ஜீவன்கள் இருக்கிறார்கள். மடிவாலா போன்ற பகுதிகளில் ‘பேயிங் கெஸ்டாக’வோ அல்லது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காலம் தள்ளும் அவர்களின் ஒரே நம்பிக்கை “அடுத்த வேலை நல்லதாகக் கிடைக்கும்”.

வேலை மார்கெட் ஒன்றும் அவ்வளவு எளிமையாக இல்லை. மீன் மார்க்கெட்டை விட மோசம். அதுவும் இந்திய நிறுவனங்களின் Human Resource ஆட்கள் இருக்கிறார்களே. வாழ்கையின் நுனி வரைக்கும் தள்ளிவிடுவார்கள். வருடத்திற்கு இரண்டு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவனை வேலைக்கு வா என்று அழைப்பார்கள். ஆனால் அதிகபட்சம் இரண்டேகால் லட்சம்தான் தர முடியும் என்பார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்குவார்கள்.

“மார்கெட் சரியில்லை” (அப்படியானால் என்ன Dash க்கு வேலைக்கு எடுக்கிறீர்கள் என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்)

“இந்த டெக்னாலஜியில் ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள்” என்று ஏகப்பட்ட நொட்டை நொள்ளை சொல்லிக் கொண்டே போவார்கள். கிடைத்தவரைக்கும் இலாபம் என்று ஏற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம்.

அதற்காக ஐ.டியில் இருக்கும் அத்தனை பேரும் சிரமப்படுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரு லட்சம் சம்பளம் வாங்கக் கூடிய ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.டியில் சேர்ந்து நன்கு ‘செட்டில்’ ஆனவர்களைவிட சிரமப்படுபவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஆட்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. எங்கள் பக்கத்துவீட்டுக்காரர் பெயர் ரமேஷ் ராவ். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மாதச்சம்பளம். அவரது மகன் எட்டாவது படித்துக் கொண்டிருக்கிறான். பெரிய பள்ளி, நிறைய ஃபீஸ். கார், ஃப்ளாட்டுக்கான மாதாந்திர கடன் என்று வேறு ஒரு வாழ்க்கை முறை வாழ்ந்து வந்தார். சென்றவாரம் வியாழக்கிழமை அலுவலகம் சென்றவரின் தலையில் இடியை இறக்கி விட்டார்கள். ஃபயரிங். 

துக்கம் விசாரிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தோம். வாங்கிய கடன்களுக்கான வட்டியும், மாதாந்திர தவணையும் மட்டுமே ஒரு லட்சத்தை தொடுகிறதாம். மனிதர் இடிந்து போய் கிடக்கிறார். தனது அம்மா அப்பா கூலி வேலைக்காரர்கள் என்பதில் தொடங்கி தான் எப்படி படிப்படியாக மேலே வந்தேன் என்பது வரைக்கும் இரண்டு மணி நேரம் பேசினார். இடையிடையே தேம்பி அழுது தன்னைத்தானே தேற்றிக் கொண்டார். 

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஃபயரிங் பற்றி பேசி மூட்-அவுட் ஆக வேண்டியதில்லை- இன்னொரு நாள் பேசலாம்.

Dec 17, 2012

நித்யானந்தா என்னும் க்ளோஸ்-அப் விளம்பரக்காரன்


நேற்று பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கண்காட்சியில் நுழைந்தவுடன் முதல் வரிசையிலேயே நித்யானந்தா ஆசிரமத்துக்காரர்கள் கடை விரித்திருந்தார்கள். கடையில் பார்வையாளர்கள் யாரையும் காணவில்லை. எனக்கென்னமோ நித்யானந்தாவின் படத்தை பார்த்தவுடன் தெறித்து ஓடுகிறார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் ஆசிரமத்துக்காரர்கள் நிறைய இருந்தார்கள். அழகான பெண்களும் உண்டு.

காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு என்று சுற்றிவிட்டு கடைசியாக நித்தியிடம் வந்தேன். கடை ஜொலித்தது. சீரியல் செட் கட்டி, பெரிய புகைப்படங்களில் க்ளோஸ் அப் விளம்பரக்காரனைப் போல சிரித்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். எனக்கு நித்தியைப் பார்க்கும் போதெல்லாம் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரொம்பப நல்லவன்ன்ன்ன்” என்ற டயலாக் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. நித்தியின் கதையை தமிழில் படமாக எடுத்தால் அதில் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டும். அந்த பாடி லேங்குவேஜ்ஜில் வடிவேலு மட்டுமே பட்டையைக் கிளப்புவார்.

கடைக்கு அருகில் சென்றதும் அழகான பெண் தான் அருகில் வந்தாள்.

“கன்னடமா” என்றாள். ஆமாம் என்று சொல்லியிருந்தால் அவளே என்னிடம் பேசியிருக்கக் கூடும்.

“இல்லை, தமிழ்” என்று சொல்லிவிட்டேன். வேறு ஒரு பெண்ணைக் கோர்த்துவிட்டாள். கோர்த்துவிடப்பட்டவள் சேலத்துப் பெண். சேலம் வைசியா கல்லூரியில் படித்தாளாம்.

“நீங்க என்னவா இருக்கீங்க” என்றேன்.  

“சந்நியாசி ஆகிவிட்டேன். எம்.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி முடிச்சிருக்கேன்” என்றாள். அவள் படிப்பைப் பற்றி நான் கேட்கவில்லை. அவளாகவே சொன்னவிதத்தில் கர்வம் இருந்தது. சந்நியாசிகளுக்கு கர்வம் இருக்கக் கூடாது என்று சாமியார் சொல்லித்தரவில்லை போலிருக்கிறது.

‘ஜீவன்முக்தி’ என்ற ஒரு புத்தகத்தை கொடுத்து “சாமிகள் சொன்னது, சொல்லிக் கொண்டிருப்பது, சொல்லவிரும்புவது என சகலமும் இருக்கிறது” என்றாள். ரஞ்சிதா என்ற பெயர் என் தொண்டைக்குள் முட்டிக் கொண்டிருந்தது. அடக்கி வைத்திருந்தேன்.

“முந்நூறு ரூபாய்தான். வாங்கிப்படியுங்கள்” என்றாள். 

பெங்களூரில் ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறதாம். சுவாமிகளே நடத்துகிறார் என்றாள். என்ன வகுப்பு என்று கேட்கவில்லை. பயிற்சிக்கட்டணம், தங்கும் வசதி பற்றிய தகவல்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அசுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சுவாமிகளின் சத்சங் கேட்டிருக்கீங்களா?” என்றாள்

“ம்ம்” என்றேன்

“யூடியூப்பில் சுவாமியை பார்த்திருக்கீங்களா?” இந்த கேள்வியை எதிர்பார்த்து கிடந்தவன் போல அவள் கேட்டவுடன் மிகுந்த உற்சாகமாகிவிட்டேன்.  

“ஊரே பார்த்துச்சே” என்றுதான் சொல்ல விரும்பினேன். ஆனால் “ம்ம்ம்..பார்த்திருக்கேன்” என்றேன்.

“என்ன லேங்குவேஜ்ல பார்த்தீங்க” 

இவள் வேண்டுமென்றே கேட்கிறாள் போலிருக்கிறது. இனியும் இதை கட் செய்யாவிட்டால் என்னை பைத்தியகாரனாக்கிவிடுவாள்.

சில கேரக்டர்கள் நாம் கலாய்ப்பதற்கென்றே பிறப்பெடுத்து வந்திருக்கின்றன. நித்யானந்தா  அப்படியான ஒரு கேரக்டர். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டிவிட வேண்டும்.

“சின்னவீடு” படத்தில் வரும்  ‘நாகிரதனா...மியூஸிக்தான் பேக்ரவுண்டல் ஓடுச்சு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். அவளுக்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இணையத்தில் ‘நக்கீரன்’ பதிவேற்றிய க்ளிப்பிங்ஸை பார்த்த அத்தனை பேருக்கும் புரியக்கூடும்.


Dec 16, 2012

துப்பாக்கி

துப்பாக்கி- அவ்வப்போது இது அலற வைத்துவிடுகிறது. சில சமயங்களில் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது.

அமெரிக்காவில் கனெக்டிக்கெட் என்ற இடத்தில் 27 குழந்தைகளை சுட்டுக் கொன்ற நிகழ்வு பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ கனவு முழுவதும் துப்பாக்கிச் சூடாகவே இருந்தது.  

ஆதம் லான்ஸா என்ற நபர்தான் சுட்டுக் கொன்றிருக்கிறார். ஆனால் ஏகப்பட்ட செய்திகளில் ரியான் லான்ஸா என்பவரின் படத்தைப் போட்டு ‘இவர்தான் குற்றவாளி’ என்று செய்தி போட்டுவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் ரியான் லான்ஸாவை மக்கள் கதறடித்துவிட்டார்கள். செய்யாத குற்றத்திற்காக லட்சக்கணக்கானவர்களின் வசவுகளையும் சாபங்களையும் தாண்டுவது எத்தனை சங்கடமாக இருக்கும் என்பதை நினைத்தாலே அலறுகிறது. இப்பொழுது தனது முகநூல் அக்கவுண்டையே அழித்துவிட்டார் போலிருக்கிறது.


இந்த நிகழ்விற்கு பிறகு அமெரிக்காவில் துப்பாக்கி புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதத்தை தொடங்க வேண்டும் என ஒபாமா பேசியிருக்கிறார். அமெரிக்காவில் துப்பாக்கியை கட்டுப்படுத்துவது பற்றி அவர்கள் முடிவெடுக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான  ‘வஸ்து’ ஒன்றின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் கடமை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது - அது டாஸ்மாக். 

பதினான்கு வயது சிறுவன் கூட சர்வசாதாரணமாக சரக்கு அடிக்கிறான். இப்பொழுது வியாபாரத்திற்காக டாஸ்மாக்கை ஊக்குவிக்கும் தமிழகமும் அதன் அரசும் இதற்கான பெரும் விலையை அடுத்த தலைமுறையில் கொடுக்க வேண்டியிருக்கும். தமிழக அரசு தூங்குகிறதா அல்லது தூங்குவது போல நடிக்கிறதா என்று தெரியவில்லை. 
                                   
                                                                ***

கனவுகளில் வந்த அமெரிக்கக் குழந்தைகளின் முகம் இந்த நாள் முழுவதற்குமான சோகத்தை கவ்விவிடச் செய்யும் பலம் வாய்ந்தவை. ஒரு நாளை சோகமாக முடித்துக் கொள்ள விருப்பமில்லை. வெளியே சென்றுவர விரும்புகிறேன். புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.
    
பெங்களூரில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 14 இல் ஆரம்பித்து 23 வரைக்குமான பத்து நாள் கண்காட்சி. கிட்டத்தட்ட 200 கடைகள் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனவாம். தமிழில் இருந்து எந்தப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன என்று தெரியவில்லை. உயிர்மை, கிழக்கு கலந்து கொள்வதாக Facebook-ல் யாரோ எழுதியிருந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூர் கே.ஆர் புரத்தில் தங்கியிருந்த போது - என்னிடம் பைக் இல்லாத காலம் அது- பேருந்து பிடித்து கண்காட்சியை பார்க்கச் சென்றிருந்தேன். புத்தகக் கண்காட்சி என்றாலே சென்னைப் புத்தகக் கண்காட்சிதான் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்தத் திருவிழாக் கூட்டமும், ஆரவாரமும், கொண்டாட்ட மனநிலையும் பெங்களூரிலும் இருக்கும் என நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் உள்ளே நுழைந்ததும் உண்மை பல்லிளித்தது. வாழும் கலை, நித்யானந்தா ஆஸ்ரமம் என ஆளாளுக்கு இடம் பிடித்திருந்தார்கள். ஓரிரண்டு தமிழ் புத்தகக் கடைகள் பாவமாக முழித்துக் கொண்டிருந்தன. கன்னடப் புத்தகங்களுக்கும் இதே கதிதான். மொத்தக் கண்காட்சியும் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. ஆனால் வாசகனுக்கு அந்த சோம்பல் தன்மை ஒருவிதத்தில் நல்லது. அவசியமும் கூட. 

இருக்கும் மிகக் குறைவான கடைகளில் தேவையான புத்தகங்களை அலசி வாங்க முடிகிறது. நாசியில் புழுதி நெடி ஏறுவதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் நமது பின்னால் வந்து உரசிக் கொண்டிருக்க மாட்டார். பில் போடும் இடத்தில் “என்கிட்ட முதலில் வாங்கிக் கொண்டு என்னை அனுப்பி விடுங்க” என்று கடைக்காரரை நச்சரித்து நம்மை சங்கடப்படுத்த மாட்டார்கள். பசி வந்து கேண்டீனை நோக்கி மனம் ஓடுவதில்லை.

என்னதான் இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் குழந்தையை சலூனுக்கு கூட்டிபோவது, மீன் வாங்கித்தருவது, மார்கெட்டில் காய்கறிகளை வாங்கிவருவது என்று செம பிஸியாகி விடுவது வழக்கமாகியிருக்கிறது. அத்தனையும் முடித்துவிட்டு மதியம் சாப்பிடும் போது மணி இரண்டாகியிருக்கும். கொஞ்சம் நேரம் கண்ணயர்ந்தால் தேவலாம் போலிருக்கிறது என்று கால் நீட்டினால் மாலை ஆகிவிடும். அதன் பிறகு ஒரு வாக், கொஞ்ச நேரம் டிவி என்று முடித்துவிட்டு தூங்கி எழுந்தால் திங்கட்கிழமை தனது அகோர பசிக்கு நம்மை இரையாக்கிக் கொள்கிறது. இதற்கு நம் அகராதியில் ‘Rest’ அல்லது ‘Relaxation' என்று பெயர். ஆனால் மதியம் தூங்காதவர்கள் இப்படியானவர்களை சோம்பேறிகள் என்பார்கள். 

பெங்களூரில் இருப்பவர்களிடம் இந்த சோம்பேறித்தனம் இருக்கும். அதுவும் மார்கழியின் குளிர்ந்த காற்று மயக்கி படுக்கையில் தள்ளிவிடும். விதிவிலக்காக, இன்றைய சுறுசுறுப்பாக இருந்தாலோ அல்லது சோம்பேறித்தனத்தை இந்த வாரம் ‘கேன்சல்’ செய்வதாகவோ இருந்தால் பேலஸ் கிரவுண்ட்ஸ் வரைக்கும் ஒரு நடை போய் வரலாம்.  

Dec 15, 2012

விளையாட்டு விளையாட்டா இருக்கணும்


டென்னிஸ் சுவாரசியங்கள் கலக்கலானவை. கிசுகிசுவில் ஆரம்பித்து ஆட்டக்காரர்களின் ஆடைகளுக்குள் கேமரா லென்ஸை நுழைப்பது வரை அடித்து தூள் கிளப்புகிறார்கள். 

லேட்டஸ்டாக செரீனா-வாஸ்நியாக்கி விவகாரம். ஆஜானு பாகுவான செரீனா வில்லியம்ஸைத் தெரியும். கரோலின் வாஸ்நியாக்கி? இதுவரைக்கும் தெரியாது. இப்பொழுது தெரிந்து கொண்டேன். வாஸ்நியாக்கியும் டென்னிஸ் வீராங்கனைதான். டென்மார்க்கைச் சார்ந்தவர். உலகின் அழகான டென்னிஸ் வீராங்கனைகள் பத்து பேரில் வாஸ்நியாக்கிக்கும் இடம் உண்டு. டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்தோமா, விளையாடினோமா என்று மட்டும் இருந்தால் என்ன ‘த்ரில்’ இருக்கிறது என்று நினைத்திருப்பார் போல ஒரு சேட்டையைச் செய்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக நடந்த ஒரு டென்னிஸ் போட்டியில் தனது ஆடைகளுக்குள் துணியை திணித்து வைத்துக் காமெடி செய்திருக்கிறார். ஆரம்பத்தில் அது காமெடியாக தெரிந்தாலும் செரீனா வில்லியம்ஸின் “பெரிய” உடம்பைத்தான் நக்கலடிக்கிறார் என்றும், இது அப்பட்டமான இனவெறி என்றும் பற்ற வைத்திருக்கிறார்கள். செரீனாவுக்கு எதிர்கோஷ்டியினர் சும்மா இருப்பார்களா? செரினா ஒன்றும் யோக்கியம் இல்லை “பிரேசில்காரர்களால் என் சைஸூக்கு பிகினி உடையைத் தயாரிக்க முடியுமா” என்று கேட்டு சூடு கிளப்பியவர்தானே என்று கிளம்பியிருக்கிறார்கள். 


இதற்க்கெல்லாம் பொங்கி நம் எனர்ஜியை வீணாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. ஃபோட்டோவை பார்த்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும். டைம்பாஸ்தான். கொஞ்ச நாட்களுக்கு கூகிளில் அதிகம் தேடப்படும் பெயர்களாக செரீனாவும், வாஸ்நியாக்கியும் மாறிவிடும். அப்புறம் மறந்து போவார்கள். 

                                                                                   ****
டென்னிஸ் என்றதும் ஸ்டெபி கிராஃப்தான் நினைவுக்கு வருகிறார். டென்னிஸ் விளையாட்டை விடவும் எனக்கு ஸ்டெபி கிராஃப்தான் பிடிக்கும். அவருக்குப் பிறகு அன்னா கோர்னிகோவா, மரியா ஷரபோவா என்று யாராவது ஒரு அழகான வீராங்கனை டென்னிஸ் பக்கமாக என்னை இழுத்து பிடித்துக் கொள்வார்கள். பட்டியலில் பெண்களாகவே வைத்திருந்தால் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதால் ஒரு ஆணுக்கும் இடம் கொடுத்து வைத்திருந்தேன். அது ஆண்ட்ரே அகாஸிக்கு. ஸ்டைல் மன்னன். ஆரம்பத்தில் ஏகப்பட்ட முடி பிறகு மொட்டை என க்ளாஸிக் கெட்-அப்புகளுடன் வலம் வந்தவர். ஸ்டெபியை திருமணம் செய்து கொள்கிறார் என்று பொறாமையாக இருந்தது. பிறகு  ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வழிவிட்டுவிட்டேன். அப்புறம் டென்னிஸூம் பார்ப்பதில்லை. நமக்குத்தான் கிரிக்கெட் இருக்கிறதே.

                                                                               ****
சானியா மிர்ஸா மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப ‘இடை’யில் எதை எதையோ செய்து பார்த்தார். எதை எதையோ மட்டும் செய்தால் எப்படி செய்திகளில் இடம் தருவார்கள்? கொஞ்சமாவது ஜெயிக்க வேண்டுமில்லையா? அம்மிணிக்கு ஆட்டம் அவ்வளவாக வரவில்லை. பெட்டியைத் தூக்கிக் கொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார். 

சானியா போனால் சாய்னா. ஆனால் நமக்கு கிரிகெட்தான் ‘எவர் க்ரீன்’. விளையாட்டு கிசு கிசு கூட “மங்களகரமான ராய் நடிகையை தனது பைக்கில் வைத்து ஓட்டினாராம் கேப்டன் வீரர்” என்று கிரிக்கெட் பற்றி மட்டும் எழுதி சாவடிக்கிறார்கள். பைக்கில் மட்டும்தான் வைத்து ஓட்டினாரா என்று கேட்க வேண்டும் போலிருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

                                                                             ****
மற்ற விளையாட்டுகளை பிரபலப்படுத்தத்தான் இந்தியன் ஒலிம்பிக் அசோஷியன் என்று ஒரு சங்கம் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வருத்தபடாத வாலிபர் சங்கம். சுரேஷ் கல்மாடி என்ற யோக்கியசிகாமணி இத்தனை நாட்களாக சங்கத்து தலைவராக ஆட்டையை போட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை பகைத்துக் கொண்டு எதையோ செய்ய இந்தியன் ஒலிம்பிக் அசோஷியனை ‘சஸ்பெண்ட்’ செய்துவிட்டார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு தடை விதிக்கவும் கூட வாய்ப்பிருக்கிறது என்று ஒரு செய்தியை வாசித்தேன். விடுங்கள். போனால் மட்டும் பதக்கங்களை லாரியிலா அள்ளி வரப்போகிறார்கள்? 

Dec 14, 2012

டேய் வாத்தி


வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணங்களை லிஸ்ட் எடுத்தால் அவற்றில் பல பள்ளிகளில் நடந்ததாகத்தான் இருக்கும். இந்த வாத்தியார்கள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களை ஞாபகப்படுத்தி எழுதினால் குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு புத்தகம் எழுதிவிடலாம். 

பத்தாவது படிக்கும் போது பாண்டு என்று ஒரு வாத்தியார் வந்தார். அவரது உண்மையான பெயர் பாண்டு இல்லை. வேறு ஒரு பெயர். பள்ளி மாணவர்கள்தான் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் என்று பட்டப்பெயர் வைத்து பிறகு அதைச் சுருக்கி பாண்டு என்றாக்கிவிட்டார்கள். அந்தப்பெயர்தான் அவருக்கு காலம் காலமாக இருந்து வந்தது. பாண்டு வாத்தியார் கிட்டத்தட்ட ரோபோ மாதிரி நடப்பார் என்பதால் அவருக்கு அப்படி பெயர் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட். ஆனால் அவரைப்பார்த்தால் அப்படித் தெரியாது. விளக்குமாறுக் குச்சிக்கு கை,கால் செட்டப் செய்து அதற்கு ஒரு பேண்ட் சர்ட்டை போட்டுவிட்டால் போதும்-அப்படித்தான் பாண்டு இருப்பார். கையில் ஒரு பிரம்பை எடுத்து வருவார். ஒரு நாள் கூட யாரையும் அடித்ததில்லை. ‘அடித்துவிடுவேன்’ என்று அவர் சொல்லும் போதெல்லாம் எங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும். 

பாண்டு சார் வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுப்பது இன்னொரு காமெடி. ரோல் நெம்பர் படிதான் அட்டெண்டன்ஸ் எடுக்கப்படும். லீடர்தான் நெம்பரை சத்தமாக அழைக்க வேண்டும். நெம்பருக்குரியவன் “உள்ளேன் ஐயா” என்று சொல்வார்கள். பன்னிரெண்டு வந்தால்  ‘பன்னெண்டு’ என்று சொல்லாமல் ‘பாண்டு’ ‘பாண்டு’ என்பேன். பன்னிரெண்டாம் நெம்பருக்குரிய குமார் வேண்டுமென்றே பதில் சொல்லமாட்டான். நானும் சளைக்காமல்  “டேய் பாண்டு” என்று கத்துவேன் அல்லது “சார், இந்த பாண்டு அட்டெண்டன்ஸ் சொல்லுறதே இல்லை” என்பேன். எல்லாவற்றிற்கும் ஒரு புன்முறுவல் பூப்பார். அவ்வளவுதான்.

ஒரு நாள் வகுப்பறைக்கு வந்தவர் தனது நாற்காலியில் அமரவும் இல்லாமல் நகரவும் இல்லாமல் டேபிளையே பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக அப்படியே நிற்கிறார் என்று புரியாமல் எங்களுக்கு குழப்பம். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ‘லீடர்’ என்றார். பத்தாம் வகுப்பில் கேடி ரங்காவாக வலம் வந்த என்னைத்தான் லீடராக போட்டிருந்தார்கள். எங்கள் பள்ளியில் எந்தப் பையன் அதிகம் குறும்பு செய்கிறானோ அவனை லீடர் ஆக்கிவிடுவார்கள். ரெளடியை அழைத்து  ‘நீ போலீஸாக இருந்து இந்த ஊரைக் காப்பாத்து’ என்று சொல்வது போல. நான் வகுப்பை அடித்து உலையில் போட்டதுதான் நடந்தது. அந்தக் கதையை இன்னொரு முறை சொல்கிறேன்.

அவர் அழைத்தவுடன் பவ்யமாகச் சென்று பார்த்தால் டேபிள் மீது ஒரு எட்டுக்கால் பூச்சி ஊறியது. அது இறங்கும் வரைக்கும் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறார். எங்களுக்கு அந்த பத்து நிமிடமும் மெளனப்படம் பார்ப்பது போன்று நல்ல டைம்பாஸ். அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளைக்கும் ஒருவித பூச்சியை பிடித்துவந்து டேபிள் மீது விட்டுவிடுவது வழக்கமாகிப் போனது. அதற்கென்றே வகுப்பில் ஒரு டீம் ஃபார்ம் செய்துவிட்டார்கள். பத்து நிமிடங்களாவது படம் பார்ப்போம். அந்த மனுஷன் ஒரு முறை கூட எங்களை சந்தேகப்படவில்லை. 

இப்ராகிம் என்று ஒரு மாணவன் இருந்தான். ஃபயர் டான்ஸ் ஆடுவான். பாம்பை வைத்தும் நடனமாடுவான். பூச்சியை பிடித்து டேபிள் மேலாக விடுவதற்கு பதிலாக கிறுக்குத்தனமாக பாம்பை பிடித்துவந்து விட்டுவிட்டான். அது ஒரு குட்டிப்பாம்பு. அவன் கொண்டு வந்து டேபிள் மேல் விடுவதை நாங்கள் யாருமே கவனிக்கவில்லை. அசால்டாக அமர்ந்திருந்தோம். பாண்டு அந்தச்சமயத்தில் வகுப்புக்கு வந்திருக்கவில்லை. அது சுறுசுறுப்பான பாம்பு போலிருக்கிறது. டேபிளிலிருந்து மடமடவேன இறங்கி வந்து கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. ஒட்டுமொத்த வகுப்பும் சிதறி ஓடியபோது கண்ணன் வகுப்பறைச் சுவரிலிருந்து எட்டிக்குதித்து கையை முறித்துக் கொண்டதுதான் மிச்சம். அதன் பிறகு பூச்சி மேட்டரை கைவிட்டுவிட்டோம்.

பாண்டு சார் பாட நோட் திருத்துவதும் காமெடிதான். பாடத்தை எழுதிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு பக்கமாக ‘டிக்’ மார்க் அடிக்க மாட்டார். கடைசி பக்கத்தை லீடர் திறந்து காட்ட வேண்டும். கடைசிப்பக்கத்தில் மட்டும் ‘டிக்’அடித்து கையெழுத்து போடுவார். எனக்குத் தெரிந்து ஒருவன் கூட ஒழுக்கமாக பாடம் எழுதியதில்லை. கடைசிப்பக்கத்தில் மட்டும் ஒருபக்கம் அல்லது அரைப்பக்கம் எழுதி வந்து என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நான் கையெழுத்து வாங்கித்தருவேன். முந்தைய பக்கங்கள் எல்லாம் வெற்றுத்தாள்களாக மட்டுமே இருக்கும்.

இத்தனை சேட்டைகளைச் செய்தாலும் அந்தவருடம் எங்கள் வகுப்பு நூறு சதவீத தேர்ச்சி. சர்டிஃபிகேட் வாங்கும் போது அவரிடம் சென்று “சார் நான் சமூகவியலில் 97 மார்க்” என்றேன். “மார்க் யார் வேணும்னாலும் வாங்கிக்கலாம் மணி. வாத்தியாரை ‘டேய் பாண்டு’ன்னு கூப்பிடற தைரியம் ரொம்ப முக்கியம். அந்த தைரியத்தை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்து” என்றார். தூக்கிவாரி போட்டது. எனது அத்தனை லொள்ளையும் தெரிந்து வைத்துக்கொண்டும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் தண்டித்திருக்கலாம். ஆனால் எதுவுமே சொன்னதில்லை. அந்தக் கணத்தில் அவர் கடவுளாக தெரிந்தார். 

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். அதே மாதிரிதான் இருந்தார். நான் தான் மாறியிருந்தேன். அவருக்கு அடையாளம் தெரியவில்லை. சடாரென காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு அறிமுகப்படுத்திக் கொண்டேன். “இப்படி மாறிட்டியா” என்றார். “இல்ல சார், நடிச்சேன்” என்றேன். ஆனால் அதைச் சொல்லும் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியிருந்தன.