Nov 9, 2012

ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் என்னும் வக்கிராயுதம்ஜெயமோகன் தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் மூலம் தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டார் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. அந்த நோட்டீஸை படிக்கும்வரை அது மற்றுமொரு சட்ட ஆவணம் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு முறை வாசித்தபோதுதான் அதன் உச்சபட்ச வக்கிரமும், தனிமனித தாக்குதலும் அது வெறும் சட்ட ஆவணம் மட்டுமில்லை- ஒரு வதையுண்டாக்கும் ஆயுதம் எனப் புரிகிறது.

தான் அந்நிய நிதியைப் பெற்றுக் கொண்டு இந்தியப் பண்பாடு, இந்திய தேசியம் போன்றவற்றை விமர்சித்து வருவதாக ஜெயமோகன்  தொடர்ந்து  எழுதிவருவதன் மூலம் தன்னை அவமதித்துவிட்டதாகவும், இதன் காரணமாக தனக்கு உருவாக்கிய மானநட்டம், மன உளைச்சலுக்காக ஜெயமோகன் ராஜதுரையிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி, இருபது லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை வக்கீல் நோட்டீஸின் மையமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த வக்கீல் நோட்டீஸை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு சுய பச்சாதாபம் தேடிக் கொள்வதோடு தனது குற்றச்சாட்டுக்கள் பற்றிய எதிர்வினைகளுக்கு பதில்சொல்லாமல் திசை மாற்றும் அரசியலைச் செய்கிறார் ஜெயமோகன் என்பது ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம். இது வெறும் வக்கீல் நோட்டீஸாக மட்டுமிருந்தால் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆதாரமில்லாமல் ஜெயமோகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்வதிலும் சிரமமில்லை.

ஆனால் வரிக்கு வரி ஒரு மனிதனைக் கேவலப்படுத்தும் இத்தகைய நீண்ட ஆவணத்தை தயாரித்து அதை வக்கீல் நோட்டீஸ் என்ற பெயரில் அனுப்பி வைத்திருக்கும் வழக்குரைஞரை பிரமிப்பாக பார்க்கத் தோன்றுகிறது. "பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு சொந்தக்காரர்” என்பது போன்ற ஸ்டேட்மெண்ட்களை அள்ளித் தெளித்திருக்கும் வழக்குரைஞர் விஜயன் இப்படி கவிதாசரணில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லி சிற்றிதழ் வாசிப்பிலான தனது ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

'வின்னர் வடிவேல்’, 'லார்ட் லபக்’, ‘ஜேம்ஸ்பாண்ட்’ போன்ற பதங்களைப் பயன்படுத்தி திரைத்துறையிலும் தான் கரை கண்ட வழக்குரைஞர் என ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார் வழக்குரைஞர்.
"ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ் ஜெயமோகனை வாதைக்குள்ளாக்குகிறது என்னும் நீங்கள் இதே ஜெயமோகன் ராஜதுரையைக் கேவலப்படுத்திய போது எங்கே போயிருந்தீர்கள்" என்பது எஸ்.வி.ஆரின் ஆதரவாளர்கள் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கலாம்.

ராஜதுரையை எந்த இடத்திலும் கேனயன் என்றோ, ஈனச்செயலாளர் என்றோ, ஜந்து என்றோ அல்லது அவரது குடும்பம் பற்றியோ ஜெயமோகன் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் வக்கீல் நோட்டீஸின் பல இடங்களில் ஜெயமோகன் மீது இத்தகைய வசவுகளை வீசியிருக்கிறார்கள் எஸ்.வி.ஆரும், அவரது வழக்குரைஞரும். ஜெயமோகன் குடிக்காத இலக்கியவாதி என பலருக்கும் தெரியும் என்றாலும் இந்த நோட்டீஸில் குடிகாரன் என்கிறார்கள். சொரணை கெட்ட ஜந்து, மலம் மொய்த்த ஈ என சகட்டுமேனிக்கு வாரியிருக்கிறார்கள். 

வக்கீல் நோட்டீஸின் பெறுநர் முகவரியிலேயே 'ஜெயமோகன் (தந்தையார் பெயர் தெரியவில்லை)' என ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வரியிலிருந்து ஆரம்பிக்கிறது குடும்பம் பற்றிய வசைகள். 'உமது தோன்றலின் பிறழ்வு' என்று இன்னுமொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தில் இருந்து ராஜதுரை பற்றிய ஜெ.மோவின் குறிப்புகளைத் தேடி எடுத்தவர்கள் அவரது தளத்திலிருக்கும் ’அறிமுகம்’என்ற பகுதியின் முதல் வரியே 'தந்தை பெயர் பாகுலேயன் பிள்ளை' என்றுதான் தொடங்குகிறது என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது துரதிர்ஷ்டம்தான்.

ஒருவனை உளவியல் ரீதியாக சித்ரவதைக்குள்ளாக்க மிக எளிதான காரியம் அவனது குடும்பத்தையும், பெற்றோரையும் கேவலப்படுத்துவது; அவர்கள் மீதான வசைகளைப் பொழிவது. அதனால்தான் கெட்டவார்த்தைகளில் ‘ரத்த உறவுகளை’ அர்ச்சிக்கும் சொற்கள் அதிகமாக புழங்குகின்றன. தெருச்சண்டையில் ஆரம்பித்து போலீஸ் விசாரணை வரைக்கும் இந்த வழிமுறையை பின்பற்றுகிறார்கள். அதே வழிமுறையைத்தான் ராஜதுரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கொடுமை.

பல ஆண்டுகளாக எழுதிவரும் சிந்தனையாளராக அறியப்பட்ட, சுதீர் செந்தில் போன்றவர்கள் ‘ஆசான்’ என ஏற்றுக் கொள்ளும் எஸ்.வி.ராஜதுரை இந்த வக்கீல் நோட்டீஸின் மூலமாகத் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டிருப்பார் என நம்பலாம். இது ஜெ.மோ ராஜதுரையை இழிவுபடுத்தியதாகச் சொல்லப்படுவதை விடவும் பன்மடங்கு அதிகம். Self Character Assassination.

இந்தப்பிரச்சினைகள் குறித்து ஆதவன் தீட்சண்யாவின் தளத்தில் வெளிவந்திருக்கும் எஸ்.வி.ஆரின் விளக்கக் கடிதம் மிகத் தெளிவாக இருக்கிறது. வக்கீல் நோட்டீஸில் மட்டும் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் அள்ளி வீச வேண்டியதன் காரணம் புரியவில்லை.

இந்த வக்கீல் நோட்டீஸ் ‘இலக்கியம்’ படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் வெகுஜனத்தளத்தில் இன்னுமொரு சிறந்த விசிட்டிங் கார்ட். ஜெயமோகன் மீது ஒரு ‘குத்து’விட ஒரு வாய்ப்புக் கிடைக்கும் எனக் காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு படைப்பாளி மீது வக்கீல் நோட்டீஸ் என்ற பெயரில் உளவியல் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த வன்முறைக்கு ஜெயமோகனின் வசவு மட்டுமே காரணமாக இருக்கும் என்று நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. ட்விட்டரில் தன்னிடம் ஆபாசமாக வாதிட்டார்கள் என்பதற்காக சட்டத்தை நாடிய பிரபலம் என்ற செய்திக்கும், தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று தனிமனித தாக்குதலுடன் கூடிய இந்த வக்கிரமான வக்கீல் நோட்டீஸ் பற்றிய செய்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தொடர்புடைய சுட்டிகள்: