Nov 7, 2012

கடலுக்குள் சீட்டியடிக்கும் மீன்குஞ்சுகள்



எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் போது ஒரு ப்ராஜக்ட் செய்ய வேண்டியிருந்தது. கடலுக்கடியில் அனுப்பப்படும் இயந்திரங்களுடனான தகவல் தொடர்பை நிலத்தில் இருந்து ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் கொடுக்கப்பட்டிருந்த வேலை. 

கடலுக்கடியில் இயந்திரங்களா? அதுவே வியப்பானதாகத்தான் இருந்தது. மீன்வளத்தை ஆராய்வது, கடலுக்குள் புதைந்து போன தொல்பொருட்களை கண்டறிவது, அந்நிய சக்திகளின் கடல் வழி ஊடுருவலை கண்காணிப்பது என சகட்டு மேனிக்கு கடல்  இயந்திரங்கள் உதவுகின்றன.

மனிதர்களை வைத்தும் கடலாராய்ச்சி செய்யலாம்தான். ஆனால் மனிதனை ஆழ்கடலுக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. கடலுக்குள் முப்பதைந்தாயிரம் அடிகள் வரைக்கும் ஆழமான இடங்கள் உண்டு. (உலகிலேயே ஆழமான மரியானா ட்ரென்ச் கிட்டத்தட்ட 36000 அடிகள்). இவ்வளவு ஆழமான இடத்திற்கு மனிதன் போவது லேசுப்பட்ட காரியமில்லை. கடல்வாழ் உயிரினங்களின் தாக்குதல்களில் தொடங்கி தாறுமாறான 'ப்ரஷர்' வேறுபாடு வரைக்கும் அத்தனையையும் சமாளிக்க வேண்டியிருக்கும். நாட்கணக்கில் கடலுக்குள் இருப்பதும் மனிதனுக்கு சாத்தியமில்லை. அதற்குத்தான் இயந்திரங்கள். இயந்திரங்கள் என்றால் நம் கதாநாயகன் ரோபோவும் உள்ளடக்கம். கடலுக்குள் அனுப்பி வைக்கப்படும் இந்த ரோபோக்களுடனான தகவல் தொடர்புதான் ப்ராஜக்ட். எங்களுக்கு டபுள் சந்தோஷம்.

முதலில் கடலுக்குள் பயணிக்கக் கூடிய ஒரு குட்டி ரோபோ செய்ய வேண்டும். பேட்டரி,வயரிங், மைக்ரோ ப்ராசஸர் என்பவை எல்லாம் வழக்கமான ரோபோக்களுக்குரியவைதான். சென்சாரில் தான் கொஞ்சம் குழப்படிகள். ரோபோவைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்தாக வேண்டும் கடலுக்குள் எந்த இடத்தில் ரோபோ இருக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும். பல விவாதங்களுக்குப் பிறகு இரண்டு நீர் புகா குட்டி வீடியோ கேமராக்களும், இன்னொரு சென்சாரும் எங்களின் வேலையை எளிதாக்கின.  இந்த ஒட்டுமொத்த அமைப்பும் கடல் நீருக்குள் தாக்கு பிடிக்கக் கூடியதாக இருக்கும்படி ரப்பரால் மூடி அதன் மீது 'இபாக்ஸி' திரவத்தை பூசிவிட்டோம். 

இத்தனையைச் செய்தும் நீந்துவதற்கான அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை. கடினமாக முயன்றும் துல்லியமான நீச்சல் சாத்தியமாகவில்லை. எங்களால்தான் முடியவில்லையே தவிர மீனைப் போல நீந்தக் கூடிய ரோபோக்களை வெளிநாடுகளில் வெற்றிகரமாக வடிவமைத்திருக்கிறார்கள். துடுப்புகளை சரியாக வடிவமைப்பதன் மூலம் இதைச் செய்துவிட முடியும். துடுப்புகளை சிறு மோட்டார்களுடன் பொருத்திவிடுவார்கள். மோட்டார்களின் இயக்கம் ப்ராசஸர்களால் கட்டுப்படுத்தப்படும். 

எங்களின் ரோபோவால் நீந்த முடியாததால் நீளமான கயிற்றில் கட்டி நீருக்குள் அனுப்புவது என முடிவு செய்தோம். ரோபோவுடனான தகவல் தொடர்பும் நாங்கள் நினைத்த அளவிற்கு எளிமையானதாக இல்லை. கடலுக்குள் இருக்கும் இரைச்சல்கள் தகவல் தொடர்பிற்கு பெரும் இடைஞ்சலாக இருந்தன. அனுப்பும் சிக்னல் ரோபோவை அடைவதற்குள் வலிமை குறைந்ததாக மாறி எங்களை பாடாய்ப் படுத்தியது. இத்தகைய கசமுசாக்களினால் நாங்கள் தயாரித்த ரோபோவால் அதிகபட்சம் ஐம்பது மீட்டர்களுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் தகவல் தொடர்பிற்காக நாங்கள் பயன்படுத்தியிருந்த 'பீஸோ எலெக்ட்ரிக்' கான்செப்ட்தான் ஹைலைட்.

அழுத்தம் கொடுத்தால் அதற்குரிய அளவுக்கு மின்னதிர்வையும் மாறாக மின்னதிர்வைக் கொடுத்தால் அதற்குரிய அளவிற்கு அழுத்தத்தையும் உருவாக்குவதுதான் பீஸோ எலெக்ட்ரிக் முறை. ரோபோவிற்கு அனுப்பப்பட வேண்டிய தகவல் 'ஒலி' அலைகளாக மாற்றப்பட்டு கடலுக்குள் அனுப்பப்படும். இந்த ஒலி அலைகள் ரோபோவில் இருக்கும் 'பீஸோ எலெக்ட்ரிக்' சென்சார்களால் கண்டறியப்பட்டு மின்னதிர்வாக மாற்றப்படும். இந்த மின்னதிர்வை ரோபோ தகவலாக மாற்றி புரிந்து கொள்ளும். எங்கள் ப்ராஜக்டில் பாதிக்கடலை மட்டுமே தாண்டியிருந்தோம். என்றாலும் 'பீஸோ எலெக்ட்ரிக்' கான்செப்டை கடல் வளத்தை ஆராயும் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து பெற்றுக் கொண்டது. சந்தோஷமாக விற்றுவிட்டு தேர்வுகளுக்கு தயாரானோம். 

ப்ராஜக்ட் முடிந்தாலும் கூட கடல் ரோபோக்கள் தங்களுக்குள் ஆயிரக்கணக்கான புதிர்களை ஒளித்து வைத்திருப்பதாகவே தோன்றும். அவை குறித்தான நிறைய தகவல்களை தேடிப் படிக்க ஆரம்பித்தோம். நிலப்பரப்பை கண்காணிக்க செயற்கை கோள்களை பயன்படுத்துவது போல நீருக்குள் ரோபோவை பயன்படுத்துகிறார்கள். மீன்குஞ்சுகளை நீருக்குள் விடுவது போல இந்த ரோபோக்களை சுற்ற விட்டுவிடுவார்கள். கடலின் தூய்மையை கண்காணிப்பது, கடல்வாழ் உயிரினங்களை கணக்கெடுப்பது, கடலுக்குள் இருக்கும் எரிமலைகளை ஆராய்வது என ரவுண்ட் கட்டி அடிக்கும் இந்த ரோபோக்களுக்குத் தேவையான ஆற்றல் அவ்வப்போது பிரச்சினையாக தலையெடுப்பது உண்டு. ஆற்றல் தீர்ந்து போனால் அப்படியே செயலிழந்து கடலுக்குள்ளேயே ஜலசமாதி ஆகிவிடும். இப்பொழுது அதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ரோபோக்கள் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் வேதியியல் வினைபுரியச் செய்கின்றன. இந்த வேதியியல் வினையிலிருந்து தமக்கு தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கின்றன. நீருக்குள் எப்படி ஆக்ஸிஜன் கிடைக்கும் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் சேர்ந்ததுதானே நீர் (H20).

அமெரிக்காவில் கடலுக்குள் வேவு பார்க்க குட்டி ரோபோவை தயாரித்திருக்கிறார்கள். மீனைப் போலவே சிறியதாக இருக்கின்றன இவை. காலநேரம் பார்க்காமல் நீந்திக் கொண்டிருக்கும் இந்த ரோபோக்கள் கடலில் வரும் கப்பல்களின் அடிப்பக்கத்தில் ஒட்டிக் கொள்ளும். இந்தக் கப்பல்களின் அசைவுகள் குறித்த தகவல்களை கடலுக்கு மேலே அமர்ந்திருக்கும் தனது இராணுவ எஜமானர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு அந்த கப்பல் மீது சந்தேகம் இல்லையெனில் "அதை விட்டுவிடு...நம்ம கப்பல்தான்" என்று ரோபோவிற்கு தகவலை அனுப்புவார்கள்.  அந்தக் கப்பலை விட்டுவிட்டு வேறு கப்பலை நோக்கி ரோபோ நகரும்.  சந்தேமான கப்பல் என்றால் கிளம்பி வந்து கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுகிறார்கள் கடற்படையினர். இப்பொழுது அமெரிக்கக் கடலுக்குள் ஆயிரக்கணக்கான "மீன் குஞ்சுகள்" நீந்துகின்றன.

[கல்கி வார இதழில் எழுதிய ரோபோஜாலம் தொடரின் ஒரு அத்தியாயம். பதினைந்து வாரத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடைந்தது]

2 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

இந்த கட்டுரையை கல்கி இதழிலேயே வாசித்திருக்கிறேன். நல்ல தொடர். பகிர்ந்தமைக்கு நன்றி.

Uma said...

மீன் குஞ்சுகள் பகிர்வு அருமை ..நன்றி!