பெங்களூரில் நாங்கள் குடியிருக்கும் லே-அவுட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கட்டிட வேலைதான். இந்த லே-அவுட் நீண்ட நாட்களாக சட்டப்பிரச்சினைகளில் சிக்கியிருந்ததால் வீடுகள் எதுவுமில்லாத பொட்டல்காடாக கிடந்தது. இப்பொழுது சட்டச்சிக்கல்கள் 'க்ளியர்' ஆகிவிட்டதால் வளைத்து வளைத்து கட்டுகிறார்கள்.
கட்டட வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுக்காரர்கள்தான். திருவண்ணாமலை, செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் குடும்பங்களாக தங்கியிருக்கிறார்கள். ஹாலோ ப்ளாக் கற்களில் நான்கு சுவர்களைக் கட்டி அதன் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டு அதில் குடியிருக்கிறார்கள். அவர்கள் வேலை செய்யும் வீடுகளுக்கு அவர்கள்தான் வாட்ச்மேனும். மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை அந்த வீட்டில் இருந்து எடுத்துக் கொள்வார்கள்.
இத்தகைய ஒரு குடிசை வீட்டில் பசுபதி என்ற குட்டிப்பையனும் உண்டு. ஆறு வயது இருக்கும். என்னைப்பார்த்தால் சிரிப்பான். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக மைனா குஞ்சு ஒன்றை கையில் வைத்திருந்தான். இது அவனுக்கு வாடிக்கைதான். அடுத்த சில நாட்களில் மைனாவுக்கு பதிலாக வேறொரு குஞ்சோ அல்லது குட்டியோ வைத்திருப்பான். எங்கிருந்து பிடித்துவருவான், திரும்ப விட்டுவிடுவானா அல்லது கொன்றுவிடுவானா என்று எதுவும் தெரியாது. அவனது அம்மாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்வான். அந்தப் பெண்மணிக்கு எப்படி அடிப்பது என்ற வரைமுறையெல்லாம் எதுவும் இல்லை. கையில் கிடைத்ததில் சாத்திவிட்டு வாயில் வந்த வார்த்தைகளை விடும்.
பசுபதிக்கான 'செட்' என்று நான்கு பேர் உண்டு. எப்பொழுதும் மணல் மீது விளையாடிக் கொண்டிருப்பார்கள் அரிதாக டயர் வண்டி ஓட்டுவார்கள். அவ்வப்பொழுது தாறுமாறாக சண்டைப்போட்டுக் கொள்வார்கள். அவர்களாகவே அழுது அவர்களாகவே சமாதானம் ஆகிக்கொள்வார்கள்.
எங்கள் வீதியில் ஒரு மஹாராஷ்டிராக்காரர் வீடு வாங்கியிருக்கிறார். போன வாரத்தில் ஒரு நாள் குடிவந்தார்கள். அவர்களிடம் ஒரு ஸ்கார்ப்பியோ காரும் உண்டு. வீட்டிற்கு வெளியில்தான் நிறுத்தி வைத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக வீதியில் நின்ற காரில் பசுபதியும் அவனது சகாக்களும் கற்களை வைத்து படம் வரைந்து பாகம் குறித்துவிட்டார்கள். அந்த மராத்திவாலாவுக்கு தலைகால் புரியவில்லை. கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். போலீஸ் கம்ப்ளெய்ண்ட் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். பசுபதியின் அப்பா என்ன கெஞ்சியும் அவர் சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை. அவர்களின் ஓனரிடம் புகார்ப்பட்டியல் வாசித்திருக்கிறார் மராத்திவாலா. ஓனர் ‘நீங்கள் என்ன சொன்னாலும் சரி, நான் கட்டுப்படுகிறேன்’ என்று சொல்லிவிட்டாராம்.
ஒன்று பசுபதி குடும்பம் லே-அவுட்டைவிட்டு காலி செய்ய வேண்டும் அல்லது அவர் அளிக்கவிருக்கும் போலீஸ் புகாரை சமாளித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மராத்தியின் இறுதி முடிவு. பசுபதியின் அப்பா குடிசையைக் காலி செய்ய ஒத்துக் கொண்டார். தனது சகாக்களை விட்டு பிரிய முடியாது என்று கதறிய பசுபதி அவனது அம்மாவிடம் நான்கு மொத்து வாங்கியதுதான் மிச்சம். இதெல்லாம் ஓரிரு நாட்களில் முடிந்துவிட்டது.
நேற்றிரவு குடிசையைக் காலி செய்துவிட்டார்கள். காலி செய்வது ஒன்று அவர்களுக்கு பெரிய சிரமமில்லை. மீறிப்போனால் ஆளுக்கு ஒரு சுமை இருக்கும். அவ்வளவுதான் அவர்களது சாமானம். தலையில் தூக்கியே வீடு மாற்றிக் கொள்ளும் நாடோடி வாழ்க்கை. இன்று காலையில் குடிசை காலியாக இருந்தது. பசுபதி பாலூற்றிய பூனைக்குட்டி மட்டும் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தப் பூனைக்குட்டியை பார்க்க முடிந்தது.
அதைவிட முக்கியமாக மராத்திவாலாவின் இன்றைய கதறலையும் பார்க்க முடிந்தது. ஸ்கார்ப்பியோவின் ஹெட்லைட்டும் உடைந்துவிட்டதாம். பசுபதி குடும்பம் எங்கே போயிருப்பார்கள் என்றார். இதுதான் அவர் என்னிடம் முதன்முதலாக பேசியது. 'உங்களுக்குத்தான் சார் ஒரே ஒரு ஸ்கார்ப்பியோ அவர்களுக்கு ஆயிரம் வீடு' என்றேன். எதற்கு அப்படி முறைத்தார் என்று தெரியவில்லை. அநேகமாக இதுதான் என்னுடனான அவரது கடைசிப் பேச்சாகவும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டேன்.
4 எதிர் சப்தங்கள்:
பெங்களூரில் இந்த கட்டிட வேலை, கூட்டுதல், பெருக்குதல் , வீட்டு வேலை செய்வதெல்லாம் தமிழர்கள்தான்.en neighbour என்னிடம் அவ்வளவு நக்கல் செய்வார். எரிச்சலாக இருக்கும்..
// பசுபதியும் அவனது சகாக்களும் கற்களை வைத்து படம் வரைந்து பாகம் குறித்துவிட்டார்கள்// lol... :)
சொன்னது ஒரு பக்கம்தான்... சொல்லாமல் திறந்து விட்ட திசைகளின் ஆழம் அதிகம்...
அவர்ரவர்களுக்கு அவரவர்களின் வலி..
Post a Comment