Nov 23, 2012

சாரு நிவேதிதா ஒழித்த கோகோ கோலா

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சாரு நிவேதிதா கோகோ-கோலா நிறுவனத்திற்கு எதிராக நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளையும், அப்போதைய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு எழுதிய உணர்ச்சிமிக்க கடிதத்தையும் வாசித்து இரண்டு மூன்று நாட்களுக்கு புல்லரிப்போடு திரிந்திருக்கிறேன். வாழ்நாளில் கோலா குடிக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்த காலகட்டம் அது. இதற்கு மேலும்  அந்தக் கடிதத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக நீங்களும் ஒருமுறை வாசித்துவிடுங்கள். 

                                                  ***********

செங்கராவிலிருந்து கிளம்பி பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே பார்த்தால் கொக்கோ கோலா கம்பெனி. கோலா தயாரிப்பதற்காக அந்தக் கம்பெனி அங்கேயுள்ள நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சியெடுத்துவிட்டதால் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், கோலா தயாரிப்பினால் வெளியேறும் ரசாயனக் கழிவினால் (sludge) அந்தப் பகுதி நிலமே விஷமாகிறது. ஏனென்றால், கோலா தயாரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவில் காட்மியம் (Cadmium), க்ரோமியம், பாஸ்பரஸ், ஸிங்க், அலுமினியம் என்ற ரசாயனக் கலவைகள் உள்ளன என்று Greenpeace நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது. இது பற்றி பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களிலும் செய்தி வந்து கேரளத்தின் 'புகழ்' பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ரசாயனக் கலவை நிலத்துக்கு உரம் என்று பொய் கூறித் திரிகிறது கொக்கோ கோலா நிறுவனம். நீங்களோ எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோலாவை எதிர்க்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் கோலாவை ஆதரிக்கிறீர்கள். இதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன என்று மக்களிடம் கொஞ்சம் விளக்குவீர்களா?

கடந்த ஆறு ஆண்டுகளாக பிளாச்சிமடை மக்கள் கொக்கோ கோலா நிறுவனத்தின் எதிரே பந்தல் போட்டு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தமிழர்கள்.அவர்களிடம் உங்கள் முதலமைச்சர் யார் என்று கேட்டேன். தெரியவில்லை.அவ்வளவு அப்பாவி மக்கள். கூலித் தொழிலாளிகள். மிக வறிய நிலையில் வாழ்பவர்கள். ஆனால் கோலாவினால் தங்கள் நிலம் விஷமாகிவிட்டது என்பதையும், கோலாவினால் தங்களுக்குக் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். யாரும் போய் அவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. கோலா கம்பெனியால் அவர்களின் நிலம் விஷமானதையும், குடிநீர் பறி போனதையும் யாரும் போய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: "பல மாதங்களாக, பல ஆண்டுகளாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்;நகரங்களிலிருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்குப் புடவையும் ஜாக்கெட்டும் கொண்டுவந்து கொடுங்கள்; சுனாமி வந்தபோது அப்படிக் கொடுத்தீர்களாமே? அது போல . . ." புரிகிறதா முதலமைச்சர் அவர்களே; இந்த மக்கள் எவ்வளவு கொடுமையான நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று?

மேதா பட்கர் வந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது தமிழ் நாட்டிலிருந்து நான். கேரள எழுத்தாளர்கள் அரசாங்க விருது வாங்குவது எப்படி என்பதை யோசிப்பதிலும்,தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதிலும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களை விட்டுவிடுவோம் . . .

முழுமையான கடிதத்தை உயிரோசையில் வாசிக்கலாம்.

                                                                    *******
கடிதத்தை வாசித்துவிட்டீர்களா? இனி கோலாவே குடிக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்திருப்பீர்கள் அல்லவா? இதே மனநிலையில் இருந்த எனக்கு நேற்று இந்த நிழற்படம் கண்ணில் பட்டுவிட்டது.


ஒரு நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அந்த நிறுவனத்தின் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பதை சாருவை போலவே நாமும் நம்ப வேண்டும் என்பதால் இந்த நிழற்படத்தை அனுப்பியவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன்.

அமெரிக்க நிறுவனத்தை ஒழிக்க முற்படும் ஒரு புரட்சியாளர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக உளவுத்துறையான சி.ஐ.ஏவின் சித்துவேலை இதன் பிண்ணனியில் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. புகைப்படத்தை எடுத்தவரோ எதிரில் பேசிக்கொண்டிருக்கும் நவீனோ கூட பன்னாட்டு நிறுவனத்தின் இந்த சதிவேலைக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும்  இது மலேசியாவில் தயாரிக்கப்பட்ட கோலா என்பதனால் இந்தியாவிற்கோ அல்லது கேரளாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். இந்த சதிகளின் Background ஐ பற்றி தெரிந்த பிறகும் கோகோ கோலாவுடன் சாரு இருக்கும் ஒரு படம் கிடைத்துவிட்டது என்பதற்காக எதிரிகள் அவரை விமர்சிப்பது வெட்கக்கேடானது. 

கோலாவுக்கு எதிரான சாருவின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது-
  • கேரள எழுத்தாளர்கள் செய்யாத போராட்டத்தை சாரு செய்திருக்கிறார்.
  • போராடும் மக்களுடன் கை கோர்க்க முதலைமைச்சர் முற்படாததால் சாரு தனது எழுத்து பட்டறையை விட்டு வெளியேறினார். (ஒரு எழுத்தாளன் களத்தில் இறங்கிப் போராடினால் நஷ்டம் வாசகர்களுக்குத்தான் என்பதை இந்த ஆட்சியாளர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை)
  • அர்னால்ட் செய்யும் சாகசங்களை எல்லாம் செய்து செத்துக் கொண்டிருக்கும் நதியைப் பார்த்து தனது கண்ணீரை அந்த நதிக்கு காணிக்கையாக்கியிருக்கிறார் சாரு.
  • மேதா பட்கருக்கு பிறகாக கோகோ கோலாவை எதிர்த்து போராட்டம் நடத்திய ஒரே அறிவுஜீவி சாரு என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 
எத்தனை பல்டியடித்தாலும் சாருவை போல சுவாரசியமாக எழுதக் கூடிய திறன் தமிழில் வேறு எந்த எழுத்தாளனுக்கும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு நாம் அவரைக் கொண்டாட வேண்டும். அவரது எழுத்தின் சுவாரசியத்தன்மைக்கும், Readability க்கும் நான் அடிமை என்பதாலேயே இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். 

கேரளாவிலிருந்து கோகோ கோலா நிறுவனம் தலை தெறிக்க ஓடிவிட்டதாகத் தெரிகிறது. இனி இந்தியாவிற்குள் ஒரு பாட்டில் கூட விற்க முடியாத நிலைமையை ஏற்படுத்திய புரட்சியாளரை நக்கலடிக்க எந்த நாய்க்கும் தகுதியில்லை. அந்த வெற்றியைக் கொண்டாட கோலாவைத் தவிர வேறு எந்த பானமும் பொருத்தமானது இல்லை.

புர்ச்ச்ச்சி ஓங்குக! கோகோ கோலா ஒழிக!!