Nov 30, 2012

பைக்கிலிருந்து கீழே விழுபவனின் குறிப்புகள்


பெங்களூரில் சங்கம் ஹவுஸ் என்ற இடம் இருக்கிறது.  எழுத்தாளர்களுக்கு  தேவையான தங்கும் இடம், உணவு என வசதிகளைச் செய்து கொடுத்துவிடுகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் வந்து ஓரிரு வாரங்களுக்குத் தங்கி படைப்பாக்கங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழில் இருந்து சா.கந்தசாமி, சுகுமாரன், பெருமாள் முருகன் என பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த வாரம் ஜே.பி.சாணக்யா வருகிறார். பெங்களூர் கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து அவரை அழைத்துக் கொண்டு சங்கம் ஹவுஸ் செல்ல வேண்டும். என்னிடம் பைக்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது கிலோ மீட்டர் தூரம். சாணக்யாவிடம் போனில் பேசினேன். பைக்கிலேயே செல்வது கூட எனக்கு பிரச்சினையில்லை என்றார். ஒரு எழுத்தாளனை இப்படி சித்ரவதைக்குள்ளாக்க வேண்டுமா என எனக்குத்தான் சங்கடமாக இருக்கிறது. 

தனியாக பைக் ஓட்டினாலே மாதம் மும்முறை விழுந்து எழுவேன். இதில் டபுள்ஸ் வேறு.  பெரும்பாலும் கீழே விழும் நாட்களில் எல்லாம் உள்மனம் உறுத்தும். லாரிச்சக்கரத்திற்குள்ளோ அல்லது பஸ் சக்கரத்திற்குள்ளோ தள்ளிவிடாமல் பாதுகாப்பான இடத்தில் தள்ளிவிடச் சொல்லி பைக்கிடம் கெஞ்சிக் கொள்வேன். அதுவும் தோதான இடம் பார்த்து தள்ளிவிடும். பைக்குக்கும் எனக்கும் இடையே ஒரு மெளனமான ஒப்பந்தத்தின் நீட்சிதான் இந்தச் செயல். வலது கை முட்டியின் பின்புறம், வலது காலின் மேற்பாதம் என புண்களுக்கு என இடங்களை ரிசர்வ் செய்து வைத்திருக்கிறேன். அந்த இடங்களில் மட்டுமே புண் ஆகிறது.

இதில் ஒரு செளகரியம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் யாராலும் புதுப்புண்ணா பழைய புண்ணா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. எப்பவாவது கேட்டால் “அது அன்னைக்கு விழுந்தது” என்று ஒரே டயலாக்கைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். புண் வலியைக் கூட தாங்கிக் கொள்ளலாம். அட்வைஸ் வலிதான் கர்ண கொடூரமாக இருக்கும். நான் விழுந்து விழுந்து எழுவதால் எப்படி முறியாமல் தற்காத்துக் கொள்வதென எலும்புகள் பழகிக்கொண்டன போலிருக்கிறது. Survival of the fittest.

இன்று ரயில் ஏறுவதற்கு முன்பாக சாணக்யா இந்தக் குறிப்பை படிக்க மாட்டார் என நம்புகிறேன். அப்படி படித்துவிட்டால் பைக்கில் ஏறும் கணத்தில் அவரது மனநிலையை நினைத்துப் பார்க்கிறேன். Space shuttle இல் முதன் முறையாக ஏறும் போது கிடைக்கும் திகிலை அவர் பெறக்கூடும். அவரை விட்டுவிட்டு திரும்ப வரும் போது பழ.அதியமான் என்னோடு வருவார் என நினைக்கிறேன். 

சாணக்யாவாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கக் கூடும். நான் Fresh ஆக இருக்கும் போது பைக்கில் ஏறுவார். அவரை நாற்பது கிலோமீட்டர் விட்டுவிட்டு களைத்துப் போய் நான் திரும்ப வரும் போது ஏறிக்கொள்ளும் அதியமானின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அனேகமாக “நான் டாக்ஸி பிடித்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிடுவார் என நம்புகிறேன். 

பாலாவைப் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். சதுக்கம் என்ற வலைப்பூவை வைத்திருக்கிறார். எப்பொழுது பேசினாலும் பூதாகரமாக எதையாவது படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார். சிலர் பூக்கோ படித்துக் கொண்டிருக்கிறேன் என்று அடித்துவிடுவார்கள். அதோடு நாமும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பூக்கோவில்  “என்ன படிக்கிறீங்க?” என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது. ஆனால் பாலா அப்படியில்லை. நிஜமாகவே வாசிக்கக் கூடிய ஆள். புத்தகங்களின் பக்கக் கணக்கிலிருந்து பத்திவரைக்கும் சொல்வார். அந்த அளவுக்கு ஆழமாக படிக்கக் கூடிய மகராசன். பெங்களூரில் இருக்கும் போது “ஆரங்கள்” என்ற அமைப்பை தீவிரமாக ஒழுங்கு செய்தார். குரூப்பாக அமர்ந்து குறுந்தொகை, புறநானூறு என்று வாசிப்பார்கள். நானும் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டேடேடேடேடேடேடேடே இருந்தேன். போகவே இல்லை. அதற்குள் சென்னைக்கு இடம்மாறுதலில் சென்றுவிட்டார். இப்பொழுது ஆரங்கள் பரணில் கிடக்கின்றன என்று கடந்த முறை பார்த்தபோது புலம்பினார்.

அதியமான், சாணக்யா பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது பாலா எதற்கு குறுக்கே வந்தார்? ஆங்! பாலா நடத்திய கூட்டங்களுக்கு நான் போகாமல் இருக்க குடும்பஸ்தன் ஆகிவிட்டதுதான் முக்கியக் காரணம். சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவோ மனைவி, குழந்தையை விட்டுவிட்டு குறுந்தொகை படிக்கப் போகிறேன் என்று சொல்ல ஒரு ‘தில்’ வேண்டுமில்லையா. டிசம்பர் வந்தால் திருமணம் முடிந்து  நான்கு வருடம் முடிகிறது. ஆனால் அந்த எழவெடுத்த தில்தான் இன்னும் வரவில்லை. நாளைக்கு ஜெர்மனி போய்விட்டு மனைவி திரும்ப வருகிறார். அவரை விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வர வேண்டிய நேரத்தில்தான் சாணக்யாவை அழைத்துக் கொண்டு சங்கம் ஹவுஸ் செல்ல வேண்டும்.

உண்மையைச் சொல்லத்தான் தில் இல்லையே தவிர பொய் சொல்லும் திறமை இருக்கிறது. அலுவலகத்தில் வேலை இருக்கிறது என சொல்லிவிடலாம். சாணக்யா,அதியமான் போன்ற படைப்பாளுமைகளுடன் நெருங்கிப் பேசுவதற்கு அதிசயமாகக் கிடைக்கும் வாய்ப்பை இழந்துவிட மனமில்லை. எப்பொழுதுமே எழுத்தாளர்களுடன் பேசிவிட்டு வரும் போது அடுத்த சில நாட்களுக்கு ‘எனர்ஜெடிக்’ ஆகிவிடுவதாக உணர்ந்திருக்கிறேன் அல்லது அப்படி நம்புகிறேன்.

சும்மா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு நிசப்தத்தில் விலாவரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் கொஞ்ச நாட்களாக மாமனார் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் நிசப்தம் படித்துவிடுகிறாராம். இப்படி ரகசியங்களை எழுதினால் அவரை மட்டும் தனியாக கவனிக்க வேண்டும். 

                                                                   ***

ஆன்லைனில் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகளைத் தேடியபோது இந்த இணைப்பு கிடைத்தது. 

பழ.அதியமானின் கட்டுரைகள் இணையத்தில் நிறையக் கிடைக்கின்றன. கூகிள் செய்தால் போதும்.

Nov 29, 2012

என்னோடு சேர்த்து நான்கு டெரரிஸ்ட்ஸ்
ஒரு வட்ட மேஜை மாநாடு. வட்ட மேஜை என்ன வட்டமேஜை? வெட்டி மேஜை மாநாடு அது. ஆளாளுக்கு தனது வீர பிரதாபங்களை அடுக்கிக் கொண்டிருந்தோம். 

கெளதம்தான் ஆரம்பித்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ரேங்க் ஷீட்டில் அப்பாவின் கையெழுத்தை அவனே போட்டுவிட்டானாம். வாத்தியார் கண்டுபிடித்துவிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நொக்கியும் எடுத்துவிட்டார். நண்பர்கள் குழாமோடு சேர்ந்து திட்டம் தீட்டியவன் அந்த வாத்தியாரை பழி வாங்குவதாக முடிவு செய்துவிட்டான். ஆனால் உடனடியாக திட்டத்தை அமல்படுத்தினால் அந்த கிரிமினல் வாத்தியார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு தனது முடிவை தள்ளி வைத்துவிட்டான்.

அதற்கான காலம் மூன்று மாதங்களுக்கு பிறகு கனிந்தது. ஒருநாளும் இல்லாத திருநாளாக அந்த வாத்தி தனது புதிய வெள்ளை நிற மாருதி 800 இல் பள்ளிக்கு வந்துவிட்டார். இப்பொழுது நண்பர்கள் யாரையும் கூட சேர்த்துக் கொள்ளவில்லை. ஒன் மேன் ஆர்மியாக செயல்படுவது என்ற தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக காம்பஸை எடுத்து யாரும் பார்க்காத நேரத்தில் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு நீங்களும் நானும் எதிர்பார்த்ததுதான். அவரது காரில் ஒரு புதுக்கவிதை எழுதி வைத்துவிட்டான். 

“என்ன எழுதின?” என்றேன்.

“மாம்ஸ், உன் பொண்ணு சூப்பர் பிகர்” என்று எழுதினானாம். இப்பொழுது அந்த மாம்ஸ்தான் ரியல் மாமனார். ஆனால் மாமனாருக்கு இந்த மேட்டர் தெரியாது.

அடுத்தது சுஜய். பெங்காலி. கொஞ்சம் ஹை-ஃபை டைப். அதனால் அவன் பென்ஸ் காரில் ஆரம்பித்தான். தனது அபார்ட்மெண்டில் பென்ஸ் வைத்திருக்கும் கிழவனார் ஒருத்தர் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து“இங்கு விளையாடினால் எப்படி நடப்பது” என்று கேட்டிருக்கிறார். “பென்ஸ் வைத்துக் கொண்டு எதற்கு நடந்து போகிறீர்கள்?” என்று சுஜய் பதில்கேள்வியைக் கேட்டிருக்கிறான். இதைக் கேட்டபோது சுஜய்யின் வயது பதினேழு. ப்ளஸ் டூ படித்த பருவம். இவனது கேள்வியில் கடுப்பான கிழவர் ஆங்கிலத்தில் சில கெட்டவார்த்தைகளைச் சொல்லி திட்டி பிறகு செக்யூரிட்டியை அழைத்து இந்த காக்கைகள் கூட்டத்தை துரத்திவிட்டுவிட்டார். 

அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் தனது அபார்ட்மெண்டிலேயே இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வந்த போது நடுவயது ஆண்ட்டியைப் போல நின்று கொண்டிருக்கிறது பென்ஸ். அந்தக் காலத்து பென்ஸில் அதன் லோகோ முன்புற டிக்கியில் நட்டுக் கொண்டு நிற்கும். அதுதான் சுஜய்யின் கண்களை உறுத்தியிருக்கிறது. அந்த லோகோ மீது ஈர ஜட்டியோடு ஏறி அமர்ந்திருக்கிறான்.  

“அப்போ என்ன ஆச்சு தெரியுமா?” என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினான்.  

“ஜட்டியைக் கிழித்ததுமில்லாமல் உன்னையும் பஞ்சராக்கிவிட்டதா?” என்று கெளதம் நக்கலடித்தான்.

“நோ நோ” என்றவன் தனது பர்ஸின் ஒரு அறையை பிரித்துக்காட்டினான். இன்னமும் அந்த லோகோ அந்த பர்ஸுக்குள்தான் இருக்கிறது. தனது வீரவிளையாட்டில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது என்றான். இப்பொழுது கிழவனின் முகமும், கொண்டை அறுபட்ட பென்ஸ் ஆண்ட்டியும் பாவமாக மனதுக்குள் நிழலாடினார்கள்.

அடுத்து அருள். அக்மார்க் தமிழன். பாக்யராஜைவிடவும் தேர்ந்த திரைக்கதைக்காரன். அவனும் ஒரு காரை வைத்துதான் கதையைத் தொடங்கினான். ஒரு கார்க்காரன் வெளியே எட்டி உமிழ்ந்தபோது பக்கத்தில் பைக்கில் ஓட்டி வந்த இவன் முகத்தில் தெறித்துவிட்டது. அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தவன் அந்தக் காரை துரத்துகிறான். அந்தக் கார் மிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியோ அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கிறது. தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்துக் கொண்டே கார் ஜன்னல் கண்ணாடியைத் தட்டியிருக்கிறான். அவன் சைகை காட்டிய போது இவனும் கண்ணாடியை கீழே இறக்கு என சைகை காட்டியதால் அவன் எதார்த்தமாக திறந்துவிட்டான். 

“ப்ப்ப்ப்ப்புளிளிளிச்ச்ச்ச்ச்ச்”- அவ்வளவுதான். அவன் சுதாரிப்பதற்குள் இவன் சிக்னலைத் தாண்டிவிட்டான்.

இவர்கள் மூன்று பேர்களுக்கும் அடுத்து நான் எனது வீரக்கதையை சொல்ல வேண்டும்.தயாரேனேன். ஆனால் அதற்குள் மீட்டிங்குக்கு நேரமாகிவிட்டது என்று கிளம்பிவிட்டோம். மீட்டிங்கின் போது இந்த சம்வங்கள்தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரவரளவில் தான் செய்த காரியத்தை விளையாட்டு என்றோ அல்லது செய்தது சரியென்றோ Justify செய்துவிட முடியும். ஆனால் யோசித்துப்பார்த்தால் வன்மத்தை புதரைப்போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புதருக்குள்ளிலிருந்துதான் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் கொடூரமான காட்டுவிலங்கொன்று அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது. அதை மறைக்கத்தான் பேண்ட்,சர்ட்,கூலிங்கிளாஸ், இரண்டு மூன்று மொழி புலமையெல்லாம் தேவைப்படுகிறது போலிருக்கிறது. 

Nov 28, 2012

சீமான் - சிதைந்த நம்பிக்கைகள்தமிழகத்தையும் ஈழத்தையும் உய்விக்க வந்தவர் என்று ஒரு காலத்தில் சீமானை நம்பியிருந்தேன். அரசியல் புரிந்த மேதையாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்திருந்தால் ‘இவரும் இன்னொரு அரசியல்வாதி’ என்று தொடக்கத்திலேயே முடிவு செய்திருக்கலாம். தந்தி பேப்பரை அக்குளில் இடுக்கிக் கொண்டு சலூனிலும் டீக்கடையிலும் அரசியல் பேசும் என்னால் அப்படியெல்லாம் நிராகரிக்க முடிவதில்லை. அதிமுக,  திமுக தவிர்த்து யார் வந்தாலும் நல்லவர் என்று நம்பிக் கொள்கிறேன். விஜயகாந்த்தைக் கூட அப்படி நம்பியவனால் சீமானை எப்படி ஒதுக்க முடியும்? நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாக்கரிசி பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கிடையே அல்லாடும் தமிழர்களுக்கு கிடைத்த போராளியாகத்தான் சீமான் தெரிந்தார்.

ஈழப்போராட்டமும் அதன் வழியாக  தமிழ் சாம்ராஜ்யமும் சரிந்து கொண்டிருந்த சமயத்தில் கிழிந்து தொங்கிய தமிழக அரசியல்வாதிகளின் முகமூடிகளைத் தாண்டி தான் மட்டுமே விடிவெள்ளியென்ற பிம்பத்தை சீமானால் மிகச் சுலபமாக உருவாக்க முடிந்தது. அவரது கூட்டங்களில் தெறித்த தீக்கங்குகளையும், வெறித்தனமாக அவர் பின்னால் சுற்றிய தம்பிமார்களையும் பார்க்கும் போது நரம்புகளை உருவியெறிந்துவிட்டு TMT முறுக்குக் கம்பிகளை செருகிக் கொண்டு சுற்றுகிறார்களோ என்று நினைத்ததில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது.

ஈழத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கைகள் நெஞ்சுக்குள் தீ மூட்டின. இந்த பேச்சுக்களை கேட்டுவிட்டு இந்த நொடியில் நெஞ்சு வெடித்துச் செத்தாலும் சம்மதமே என்று சமாதானம் ஆகிக் கொள்வேன். காங்கிரஸை கறுவறுப்பேன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் கர்ஜித்த போதும் கேட்ட விசில் சப்தங்கள் இன்னமும் காதுக்குள் ஒலிக்கிறது. அரசியலில் கொடி கட்டப்போகும் சீமான் அதே சமயத்தில் தமிழுணர்வை பழுக்கக் காய்ச்சி நம் ஆங்கில மோகத்தின் புட்டத்தில் சூடு போடப் போகிறார் என்றுதான் அசிரீரி ஒலித்தது. ப்ளாஸ்டிக் என்ற சொல்லுக்கு பதிலாக ‘நெகிழி’ என்போம் என்றெல்லாம் தமிழுணர்வு விதைகளை விதைத்த போது இனி தமிழனின் வாழ்வில் எல்லாம் சுகமே என்றுதான் நம்பினேன்.

தேர்தல் வரைக்கும் சுற்றிச் சுற்றி வந்தவரை கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகவே காண முடியவில்லை.நமது நம்பிக்கைக்குரியவர்கள் எதைச் செய்தாலும் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம் இல்லையா? அப்படித்தான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். தமிழர்களுக்காக தனது தொழிலான சினிமாவை விட்டுவிட்டு சில வருடங்களாக போராடியதால் வருமானமில்லாமல் சாப்பாட்டுக்கும் கூட கஷ்டபட்டிருப்பார் எனவும் மீண்டும் சில படங்களை இயக்கியோ அல்லது நடித்தோ நல்ல உணவு உண்டுவிட்டு மீண்டும் மைக் பிடிப்பார் என ஆறுதல் படுத்திக் கொண்டேன். 

தென் மாவட்டங்களில் இரத்த ஆறு ஓடிய போது உண்ட களைப்பில் தூங்கியிருக்கக் கூடும் என நம்பியது அதே ஆறுதலின் நீட்சிதான். தமிழகத்தின் பிரச்சினைகள் என வந்த போதெல்லாம் அவரை எதிர்பார்ப்பதும் அவர் வராமல் இருப்பதும் வழக்கமாகிப்போனது. அப்பொழுதெல்லாம் சினிமா ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருப்பார் என ஏற்றுக் கொண்டதும் அதே நம்பிக்கையில்தான். 

தர்மபுரியில் அரிவாளும் நெருப்பும் நடனம் புரிந்த போதும் ஒரு ‘வழவழா’ அறிக்கையோடு அமைதியாகியிருக்கிறார். இப்பொழுதும் கூட அவர்தான் விடிவெள்ளி என நம்புவதில் எனக்கு ஒரு பைசா இழப்பு கூட இல்லை. ஆனால் சில கேள்விகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அவை சிதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் காரணமாக எழும் கேள்விகள்.

‘நம்பிக்கைகளை சிதைப்பதைவிட நம் மீது நிகழ்த்தப்படும் ஆகப்பெரிய வன்முறை என்று வேறு எதுவும் இல்லை’ என்று கவிஞர் கோசின்ரா சொன்னபோது சீமானின் முகம்தான் வந்து வந்து போனது. இலட்சக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கைகளை சிதைத்திருக்கிறார் சீமான். அவரைப் பின் தொடர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறார்.என்னைப் போன்ற மிடில்க்ளாஸ் மாதவன்களின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்.

மிளகாய் அரைப்பது என்பது பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டார் என்பதோ அல்லது சொத்தை பறித்துக் கொண்டார் என்பதோ இல்லை. அவர் உருவாக்கியா அல்லது அவரது பேச்சினால் நாமாக உருவாக்கிக் கொண்ட பிம்பத்தை சிதைப்பதும் கூட மிளகாய் அரைப்பதுதான். 

சீமான் ஒருபோதும் தமிழர்களின் தலைவனாக மாறப்போவதில்லை. அப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தால் அதைவிட காமெடி வேறு ஒன்றும் இருக்க முடியாது. மூன்று வருடங்களில் சில நூறு கூட்டங்களில் கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டால் தலைவன் ஆகிவிட முடியும் என்றால் நாஞ்சில் சம்பத்தோ அல்லது தீப்பொறி ஆறுமுகமோ எப்பொழுதோ தலைவர்கள் ஆகியிருப்பார்கள். 

சீமானோ அல்லது இன்னமும் அவரை  நம்பும் தம்பிகளோ என்ன விளக்கம் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் குறைந்தபட்சம் என்னளவில் சீமானின் பிம்பத்தைச் சிதைத்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை. இதில் சீமானின் குற்றம் என்று எதுவும் இல்லை. இந்த அதிநவீன வாழ்க்கைச் சூழலிலும் ஒரு மனிதன் மீது நம்பிக்கை வைப்பது என்பது எவ்வளவு பெரிய அபத்தம். நம்பிக்கை என்பதன் அர்த்தமே மாறிப் போயிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அந்த அபத்தைத்தான் பெரும்பாலானவர்கள் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறோம். இப்பொழுதும்.

Nov 27, 2012

அப்பா...உங்க கால் மேலேயே ஒண்ணுக்கு அடிச்சுட்டேன்
காலையில் நான்கு மணிக்கு தூக்கத்திலிருக்கும் அப்பாவை எழுப்பும் சிறுவன் “அப்பா ஒண்ணுக்கு” என்று அந்த தினத்தை துவங்கி வைக்கிறான். இப்படித்தான் அட்டகாசமாகத் துவங்குகிறது அந்த நாவல். அப்பாதான் தூக்கக் கலக்கத்தில் இருப்பார். ஆனால் சிறுவன் அப்பொழுதே படு சுறுசுறுப்பாகியிருப்பான். பாத்ரூமில் அவனை விட்டுவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் போது அவரது கால் மீது அடித்துவிட்டு “அப்பா உங்க கால் மேலேயே ஒண்ணுக்கு அடிச்சுட்டேன்” என்று ஆரம்பிப்பான் அன்றைய தினத்துக்கான அவனது லூட்டியை.

இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. ஏழாயிரம் பக்கங்களுக்கு. இவ்வளவு பெரிய நாவலை படித்துவிட முடியும் என்று நினைத்துப்பார்த்தது கூட இல்லை. அதுவும் பதினைந்து நாட்களில். அதைவிடவும் அப்படியொரு நாவல் இருப்பதே எனக்குத் தெரியாது. மார்ஷெல் ப்ரஸ்ட் எழுதிய In search of lost time தான் இதுவரை எழுதப்பட்ட நாவல்களிலேயே மிக நீளமானது என விக்கிபீடியா சொன்னதை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அதைவிடவும் நீளமான ஒரு நாவலை பார்த்தாகிவிட்டது.

அல்பேனிய நகரான Fierதான் இந்த ஏழாயிரம் பக்க நாவலின் களம்.  கணவனையும் மூன்று வயதுக் குழந்தையையும் விட்டுவிட்டு அலுவலக பயணமாக பதினான்கு நாட்களுக்கு மனைவி ஜெர்மனி போய்விடுகிறாள். அவள் போனபிறகுதான் நாவல் தொடங்குகிறது. நாவல் தொடங்குகிறது என்பதைவிடவும் சிறுவனின் அழிச்சாட்டியம் தொடங்குகிறது என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அடுத்த பதினான்கு நாட்களுக்கும் அந்தச் சிறுவன் அடிக்கும் லூட்டிகளும் அவனது முப்பது வயது அப்பாவின் கண்ணாமுழி திருகலுமாக படு ஆர்ப்பாட்டமான நடையில் நாவல் நகர்கிறது. 

விடிந்தும் விடியாமலும் தன் கால் மீது சிறுநீர் கழித்துவிட்டதை சிறுவன் பெருமையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கழுவி துடைத்து பாத்ரூமை விட்டு வெளியே வருவார். இன்னும் இருளாக இருப்பதாகவும் திருடன் வருவான், பூனை வரும் என்றெல்லாம் சொல்லி சிறுவனை அழைத்துவந்து மீண்டும் படுக்கையில் அமுக்குவார். ஐந்து நிமிடங்களில் “அப்பா ஆய் வருது” என்பான். இன்றைய தனது தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்து அவன் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் போதே பல் துலக்கி முகம் கழுவி முடித்துவிடுவார். அவனுக்கும் கழுவிவிட்டு வெளியே வரும் போது “அப்பா நான் தூங்கப்போறேன்” என்று படுக்கையில் படுத்து அவரைக் கடுப்பேற்றுவான். முகம் கழுவியிருந்தாலும் பரவாயில்லை தூங்கிவிடலாம் என்று போர்வைக்குள் புகுந்து தூங்க முயற்சிக்கும் போது “அப்பா பசிக்குது. பால் வேணும்” என டபாய்ப்பான்.

இரவிலேயே இத்தனை அட்டகாசங்கள் என்றால் பகலில் என்ன செய்வான் என்பதை தனியாகச் சொல்ல வேண்டுமா? அதகளம்தான். கீழ்தளத்தில் வீட்டு ஓனர் பகல் தூக்கம் போடும் அறையை எப்படிக் கண்டுபிடிப்பானோ தெரியாது நேராக அதே இடத்தில் ஒரு பாத்திரத்தை ‘டமார்’ என்று நொறுக்குவான். அவர் அடித்துபிடித்து மேலே வந்து எச்சரித்து விட்டு கீழே போவதற்குள் இன்னொரு டமார். அவருக்கு பதில் சொல்லி அப்பாதான் டயர்டாகிக் கொண்டிருப்பார். சிறுவனும் சரி, அந்த வீட்டு ஓனரும் சரி டயர்டாகாமல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

சில சமயங்களில் கோபம் உச்சந்தலையில் நட்டுக் கொள்ளும் போது சிறுவனை மிரட்டலாம் என எத்தனிப்பார். “அம்மா வேணும்” என அழ ஆரம்பித்துவிடுவான். கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு  “நாளைக்கு ப்ளைட் ஏறிப்போலாமா?” என்று அவனை திசைமாற்றினால் பத்து நிமிடம் அமைதியாக இருப்பான். பிறகு அதே சரணம், பல்லவி, அனுபல்லவி எல்லாம் தொடரும் “அம்மா வேணும்”. ஒரு கட்டத்தில் இனி வாழ்நாளில் கோபமே படக்கூடாது என அப்பா முடிவு செய்வார்.

பகலெல்லாம் அவனோடு ஆடி முடித்து இரவில் தொண்டைத்தண்ணீர் வற்ற கதைகளைச் சொல்லி தட்டிக் கொடுப்பார். ஓரு மணி நேரத்திற்கும் மேலாக கதையைச் சொல்லி முடித்து சிறுவன் தூங்கிவிட்டதாக கண்ணை மூடுவார். ஆனால் சிறுவன் தூங்கியிருக்க மாட்டான். “அப்பா..அப்புறம்?” என்பான் சிறுவன். மீண்டும் அனர்த்த ஆரம்பித்தால் பன்னிரெண்டு மணி வரைக்கும் “ம்ம்ம்” கொட்டிக் கொண்டேயிருப்பான். பன்னிரெண்டு மணிக்குத்தான் இரண்டு பேரும் தூங்கியிருப்பார்கள். ஆனால் மீண்டும் ஒன்றரை மணிக்கு எழ வேண்டியிருக்கும். அதற்கும் காரணமிருக்கிறது. இருவரின் ஆடைகளையும் வெதுவெதுப்பான சிறுநீரில் நனைத்திருப்பான். மாற்றிவிட்டு தூங்கினால் மீண்டும் வழக்கம் போல நான்கு மணிக்கு எழுந்துவிடுவான். பிறகு புதுப்புது சாகசங்களைச் செய்வான்.

இப்படியான இரவு லூட்டிகளும், பகலில் குளிக்க வைப்பதிலிருந்து சாப்பாடு ஊட்டுவது வரைக்குமான அத்தனை அட்டகாசங்களும் இம்மிபிசகாமல் நாவலாகியிருக்கிறது. குழந்தைகளின் உலகத்தை இவ்வளவு துல்லியமாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். நம் எல்லோருக்குமே குழந்தைகளோடு அனுபவம் இருக்கிறது. அதுவும் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவில் ஒரு நட்பு சார்ந்த ரிலேஷன்ஷிப் இருக்கும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்பா மகன் உறவை இத்தனை துல்லியமாக ஒரு நாவலில் சொல்ல முடிகிறது என்பதை ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டே தூங்கியிருந்தேன்.

விடிந்தும் விடியாமலும் “அப்பா ஒண்ணுக்கு” என்று மகி எழுப்பினான். எழுந்து பார்த்தால் நான் எந்த நாவலையும் வாசித்திருக்கவில்லை. என் மனைவி ஜெர்மனி போனதற்கு பிறகு மகனுடன் நான் நடத்தும் பதினான்கு நாள் பாசப்போராட்டமும் ஒரு நாவல் படிப்பது போன்ற கனவாக வந்திருக்கிறது. அதுவும் ஏழாயிரம் பக்கங்களுடைய நாவலைப் படிப்பதாக.

இதோ இன்றைக்கும் அதே கால்கள் நனைப்பு, ஆய், பசி என அத்தனையும் வழமை மாறாமல் செய்துவிட்டு இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் கிடைத்த இடைவெளியில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Nov 26, 2012

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க
வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.

நியாமத் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். வயதானவர். ஜிப்பா, முஸ்லீம் குல்லா, இசுலாமியர்களின் ட்ரேட் மார்க் தாடி என்றிருந்தார். இந்தக் கற்களைப் பற்றி கொஞ்சம் விவரித்தார். சாதரஹள்ளி அல்லது சிரா என்ற வகைக் கற்களைத்தான் பெரும்பாலும் ஒட்டுவார்களாம். சிரா கொஞ்சம் ரேட் அதிகம்.  கல்லின் விலை மட்டும் சதுர அடிக்கு எழுபத்தைந்து ரூபாய். ஒட்டும் கூலி சதுர அடிக்கு நூற்றியிருப்பத்தைந்து ரூபாய் என்றார். நூறு ரூபாய் என்றால் ஒட்டுங்கள் இல்லையென்றால் வேறொருவருக்கு வேலையைக் கொடுத்துவிடுகிறேன் என்ற போது பரிதாபமாகப் பார்த்தார். ஆனால் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்.

“அட்வான்ஸ் வேண்டும்” என்றார்.

“எவ்வளவு தரணும்?”

“பத்தாயிரம் குடுங்கோ சார்” என்றவுடன் ஆர்கிடெக்ட்டுக்கு போன் செய்தேன். மறுபடியும் அதே டயலாக்கை இம்மிபிசகாமல் சொன்னார் “முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”

“இப்போ காசு இல்லைங்க பாய். வேலையை ஆரம்பிங்க வாங்கிக்கலாம்” யோசித்தவர் அதற்கும் சரியென்று சொன்னார்.

“எப்போ வேலை ஆரம்பிப்பீங்க?”

“நாளைக்கே ஆரம்பிச்சுடுறோம். ஆனால் நாளைக்கு சாயந்திரம் காசு வேணும் சார்”

“என்னங்க காசு காசுங்குறீங்க. வேலையைச் செய்யுங்க. காசு வரும்”

எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் வேலையைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஜூனியர்களோடு வந்திருந்தார். எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாம். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை படு வேகமாக நடந்தது. அவர்கள் எத்தனை வேகமாக வேலையைச் செய்தாலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் கொடுத்துவிட வேண்டாம் என்று ஆர்கிடெக்ட் எச்சரித்தார்.

அன்று மாலை ஐந்தாயிரம் கொடுத்தேன். அப்பொழுதும் நியாமத் அதட்டாமல் கேட்டார்.

“ப்ளீஸ் சார், பத்தாயிரம் வேணும்”

“பணம் இல்லைங்க. நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றேன் .

அவருடன் வந்தவர் என்னிடம் கொஞ்சம் அதட்டலாக பேசினார். அப்பொழுது நியாமத் அவரை சமாதானப்படுத்திவிட்டு என்னிடம் “நாளைக்கு கொடுத்துடுங்க சார்” என்ற போது அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

சங்கடமாகிவிட்டது.  “ஏ.டி.எம் வர்றீங்களா? எடுத்து தந்துடுறேன்” என்றபோது தலையாட்டினார். இன்னொரு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு ஆர்கிடெக்டிற்கு போன் செய்தேன்.

“ஏன் சார் பத்தாயிரம் கொடுத்தீங்க? நாளைக்கு வர மாட்டாங்க பாருங்க” என்றார். அதோடு நிறுத்தாமல் “எத்தனை கட்டடம் நாங்க கட்டறோம்? எங்களுக்கு தெரியாதா சார்?” என்றார்.

நியாமத் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து கொண்டே தூங்கினேன். ஆனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அன்றும் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதே வேகம். மதிய உணவு கூட இல்லாமல் எதற்காக இத்தனை வேகமாகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கும் தினமும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்கள். நான் ஆர்கிடெக்டிடம் பணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதைக் குறைத்திருந்தேன். பத்து நாட்களில் முடிப்பதாகச் சொன்ன வேலையை ஐந்து நாட்களில் முடித்துவிட்டார்கள்.

கடைசி தினத்தில் இன்னொரு பத்தாயிரம் கொடுத்த போது கணக்கு முடிந்திருந்தது. நியாமத் நன்றி சொன்னார். பிறகு முகம், கை கால்களைக் கழுவினார்.  அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக கை கால் கழுவினார்கள். கிளம்புவதற்கு தயாரான போது கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் வேலை செய்யறீங்க?” என்றபோது அவரது ஜூனியர்கள் தங்களுக்குள் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.

நியாமத்தான் சொன்னார். அவரது ஜூனியர்கள் ஒவ்வொருவரும் அவரது தம்பிகள். இந்தக் கல் ஒட்டுவதுதான் குடும்பத்திற்கான ஒரே வருமானம். தம்பிகள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. நியாமத்துக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். கடைசியாக பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது. அவரது மனைவிக்கு கிட்னி ஃபெயிலியராம். ரொம்ப நாட்களாக டயாலிசிஸ் கிட்டத்தட்ட வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டாராம்.

“டயாலிசிஸ், ஆஸ்பத்திரி செலவுன்னு பணம் கரையுது சார். எப்படியும் போயிடுவான்னு தெரியுது. ஆனா விட மனசு வரலை. அவளோட நிலைமை, குழந்தைக, பணத்துக்கான தேவையெல்லாம் எங்களை பேச விடறதில்லே சார். அதான் உங்ககிட்ட  கூட பணம் வேணும்ன்னு திரும்பத் திரும்ப கேட்டேன்” என்ற போது தனது ஜிப்பா நுனியால் கண்களை துடைத்துக் கொண்டார்.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றேன்.

“இல்ல சார். எங்களை யாரும் இங்கே நம்பறதில்ல. என்ன சொன்னாலும் பொய் சொல்லுறதாத்தான் சொல்லுவாங்க” என்றார். என்னிடம் ஒரு பத்தாயிரம் அதிகமாக இருந்தது. “முடிந்த போது கொடுங்க” என்று கொடுத்தேன். “ரொம்ப நன்றி சார். தேவைப்படும் போது வாங்கிக்கிறேன். இப்போ வேண்டாம்” என்று கிளம்பினார். அந்த நடையில் நேர்மையிருந்தது.  அவர் நகர்ந்த பிறகு மனம் பாரமாகியிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் செல்லாமல் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆர்கிடெக்ட் போன் செய்தார்.  “வேலை முடிஞ்சுடுச்சு சார். மொத்தமா ஐம்பதாயிரம் கொடுத்துட்டேன்” என்றேன்.

“ஐயாயிரம் புடிச்சுட்டு கொடுத்திருக்கலாம்ல சார்” என்று துவங்கினார். கட் செய்துவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். கார்த்திகைக் குளிர் சில்லிடத் துவங்கியிருந்தது.

Nov 24, 2012

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி2007 ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ணாடியில் நகரும் வெயில்” என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பிற்கு பிறகான கவிதைகள் தொகுக்கப்பட்டு “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” என்ற பெயரில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு (ஜனவரி, 2013) வெளிவருகிறது.

தமிழின் மிக முக்கியமான பதிப்பகமான காலச்சுவடின் மூலம் தொகுப்பு வருவது என்னை மகிழ்ச்சிக்குரியவனாக்கியிருக்கிறது.

அட்டைக்கான ஓவியத்தை வரைந்தவர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. மொத்த கவிதைகளையும் அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். பத்து நாட்களுக்குப் பிறகாக ஓவியத்தை அனுப்பி வைத்திருந்தார். மிக அற்புதமான ஓவியம் அது. மொத்தக் கவிதைகளையும் அது பிரதிநித்துவப்படுத்துவதாகத் தோன்றியது. ஞானப்பிரகாசத்திற்கு எனது அன்பு.

அட்டை வடிவமைப்பை கீழ்வேளூர்.பா.ராமநாதன் எனக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

கவிதைகளைக் தேர்ந்தெடுத்ததிலிருந்து, கவிதைத் தொகுப்பிற்கான பெயரை முடிவு செய்தது வரை நண்பர்கள் பலரும் உதவியிருக்கிறார்கள். அதைப்பற்றி விரிவாக பிறகு எழுத வேண்டும். 

இப்போதைக்கு அட்டையைப் பார்த்த சந்தோஷம் எனக்கு. புதிதாக மலர்ந்த மலர் ஒன்றை பார்த்ததற்கு இணையான சந்தோஷம் அது. முதல் மழைத்துளி முகத்தை நனைத்த இதம் என்றும் சொல்லலாம். அதே சந்தோஷத்தை ‘நிசப்தம்’ தளத்தை வாசிக்கும் அன்பிற்குரிய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதைச் செய்திருக்கிறேன் இப்பொழுது.

உங்களின் வாழ்த்துக்கள் எனக்கான உற்சாகம்.

நன்றி.

ஐயோ போலீஸ், ப்ளீஸ் விட்டுடுங்க!


சென்ற மாதம் அலுவலகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஆளாளுக்கு எதையாவது சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஒரு பெண்மணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு நடந்தே போவது தனது hobby என்றார். கடந்த நான்கு வாரங்களாக இதைச் செய்து கொண்டிருக்கிறாராம். மொத்தமாக வெறும் நான்கு முறை மட்டுமே நடந்து போயிருக்கிறார். அது எப்படி ஹாபியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அவர் ஸீன் போடுவதற்காக சொல்லியிருந்திருக்கக் கூடும். இருந்தாலும் எல்லோரும் அவருக்காக கரவொலி எழுப்பினார்கள். எதற்கு பொல்லாப்பு என்று நானும் கைத்தட்டி வைத்தேன். 

சேலத்தில் அதிகமாக நடந்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சனிக்கிழமை இரவுகளில் பழைய பஸ் நிலையம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சோனா கல்லூரி வரைக்கும் நடந்தே வருவேன். தனியாக நடந்துவருவது அப்பொழுது விருப்பமான செயலாக இருந்தது. விருப்பத்தை தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது. நான் கஞ்சூஸாக இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் பேருந்தில் பயணித்தால் டபுள் டிக்கெட் வாங்க வேண்டும். அதனால் நடந்து போவது ஒரு சிக்கன நடவடிக்கையாக இருந்தது.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீரபாண்டியார் அமைச்சர் ஆகியிருந்தார். மேயர் சூடாமணியும் திமுகக்காரர்தான். வீரபாண்டியாரின் மூத்தமகன் நெடுஞ்செழியன் சேலம் திமுகவில் முக்கியமான சக்தியாக இருந்தார். மொத்த சேலமும் திமுகவின் கோட்டையாக இருந்தது. சனிக்கிழமைகளின் நள்ளிரவில் பெரும்பாலும் திமுக கொடி கட்டுபவர்கள் மற்றும் பேனர் கட்டுபவர்களின் நடமாட்டம் இருக்கும். அதனால் தனியாக நடக்க பயம் எதுவும் இருக்காது. சில சமயங்களில் போலீஸ்காரர்கள் விசாரிப்பார்கள். கல்லூரி அடையாள அட்டையிருந்தால் அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் தனியாக நடக்க வேண்டாம் என அறிவுரை செய்வார்கள். ‘சரிங்க சார்’ என்று பவ்யம் காட்டிவிட்டு நகர்ந்துவிடுவேன். 

ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருப்பதில்லை அல்லவா? ஒரு தீபாவளி சமயத்தில் விடுதி காலியாகியிருந்தது. எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள். சில சென்னை நண்பர்களும் நானும் மட்டும் விடுதியில் இருந்தோம். வழக்கம் போல நான் படத்துக்கு போய்விட்டு தனியாக வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்தவர்கள் என்னோடு சேர்ந்து நடக்கத் துவங்கினார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள். கால் போதை, அரைப்போதை என்ற நிலையில் யாருமே இல்லை. எல்லோருமே முழுப்போதைதான். சாலை நெடுக கூத்து கும்மாளம் என அதிரச் செய்தார்கள். 

அவர்களின் கூச்சல் போதையில்லாமல் இருந்த எனக்கு பயமூட்டிக் கொண்டிருந்தது. போதை ஏறியவர்களோடு போதையில்லாதவன் உடன் இருப்பது கொடுமையான நிகழ்வு. அவர்களின் அத்தனை அழிச்சாட்டியத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அது கூட பிர்ச்சினையில்லை. இந்நேரத்தில் யாராவது ரெளடிகள் வந்தால் எனக்கும் சேர்ந்து அடி விழும் என நடுங்கிக் கொண்டிருந்தேன். போதையில் இருப்பவர்கள் ஓரிரண்டு அடிகளில் விழுந்துவிடுவார்கள் என்பதால் ‘ஸ்டெடியாக’ நிற்கும் என்னை மொக்கிவிடுவார்கள் என பயந்தேன். யார் அடிக்க வந்தாலும் முதல் அடியில் கீழே சுருண்டு விழுந்துவிட வேண்டும் என உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல ரெளடிகள் யாரும் வரவில்லை. எதிர்பாராத போலீஸ் ஜீப் எங்கள் முன்னால் வந்து நின்றது. 

அவர்கள் எங்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கக் கூடும். அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது எங்களில் இருந்த ஒரு பன்னாடை. “வணக்கம் மாம்ஸ்! என்ன இந்நேரத்துல? போய் தூங்குங்க” என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிவிட்டான். ரெளடிகள் என்றால் கூட அடியோடு போயிற்று இனி கோர்ட் கேஸ் என சிக்கிக் கொண்டோமே என அழத்துவங்கினேன். மொத்தமாக அள்ளியெடுத்துக் கொண்டு போய் சூரமங்கலம் ஸ்டேஷனில் அமர வைத்துவிட்டார்கள். 

மாம்ஸ் என்று அழைத்தவனுக்கு மட்டும் ஓரிரண்டு கும்மாங்குத்து எஸ்.ஐ.யிடம் விழுந்தது. அவனுக்கு மட்டும் தான் அடி. எங்களை அடிக்கவில்லை. நாளைக்கு பிரின்ஸிபால் வந்தால்தான் ஆச்சு என்று சொல்லிவிட்டார். பிரின்சிபால் வரும்போதே ஒவ்வொருவருக்கும் சஸ்பெண்ட் லெட்டரோ அல்லது டிஸ்மிஸ் லெட்டரோ தயார் செய்துவிட்டுதான் வருவார் என்று தெரியும்.

கொஞ்ச நேரம் அமர்ந்திருந்த எங்கள் ஆட்கள் ஒவ்வொருவருவராக மட்டையாகிவிட்டார்கள். ஒரு ஏட்டய்யாவிடம் போய் கதையைச் சொல்லி புலம்பினேன். நான் குடிக்காத யோக்கியன் என்று அழுதேன். “எதுவாக இருந்தாலும் எஸ்.ஐயிடம் பேசு” என்று சொல்லிவிட்டார். எஸ்.ஐ எங்களையெல்லாம் ஸ்டேஷனில் போட்டுவிட்டு மீண்டும் ரவுண்ட்ஸ் போயிருந்தார். எப்பொழுது வருவார் என்று கேட்டால் பதிலில்லை. விடியும் போது எல்லோருக்கும் ‘மப்பு’ தெளிந்துவிடும் என்பதால் நான் குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க வழியே இருக்காது என நினைத்த போது துக்கம் தொண்டையை அடைத்தது. இப்பொழுது ஊரில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவுக்கு நாளை பெரிய இடியுடன் விடியப்போகிறது என பதறினேன். போலீஸ் ஸ்டேஷன் ஒரு பெரிய அரக்கர் மாளிகையாகத் தெரிந்தது.

அதிகாலை மூன்று மணிக்கு எஸ்.ஐ வந்தார். நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கண்கள் வீங்கியிருந்தன. கதையை மீண்டும் விவரிக்க ஆரம்பித்தேன்.  “ஊது” என்றார். ஊதினேன். அவருக்கு நம்பிக்கை வந்தது. இருந்தாலும் பிரின்ஸிபாலிடம் பேசிவிட்டு அனுப்புகிறேன் என்றார். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார்கள் என்று சொன்னேன். அவர் என்னை விட்டுவிட முடிவு செய்தார். “சரி இந்த நேரத்தில் போக வேண்டாம் விடிந்தால் விட்டுவிடுகிறேன்” என்றார். நான் விடுவதாக இல்லை மீண்டும் கெஞ்சினேன்.  “என்னால் இங்கே இருக்க முடியாது” என அழுதேன்.சிரித்துக் கொண்டே “இவனுகளோட சேராதே” என்றார்.  “சரிங்கய்யா” என்றேன்.  அவர் “போ” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாக ஸ்டேஷனை விட்டு வெளியேறியிருந்தேன்.

இரவின் அந்த நேரம் கொஞ்சம் ஆசுவாசமானதாக இருந்தது. வேகமாக நடந்தேன். அது கிட்டத்தட்ட ஓட்டம்தான். காலில் பிசுபிசுவென என்னவோ ஒட்டியது. இரத்தம். செருப்பில்லாத காலை கற்கள் கிழித்திருந்தன். செருப்பை ஸ்டேஷனிலேயே மறந்து விட்டிருந்தேன். அது முக்கியமில்லை என்று தோன்றியது. ஸ்டேஷன் இருக்கும் ஏரியாவைத் தாண்டிவிட வேண்டும் என மீண்டும் வேகம் எடுத்தேன். விடுதியை அடைந்து அறையைத் திறந்த போதுதான் கால் வலிக்கத் துவங்கியிருந்தது. அது நிம்மதியான வலியாகத் தெரிந்தது.

Nov 23, 2012

சாரு நிவேதிதா ஒழித்த கோகோ கோலா

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சாரு நிவேதிதா கோகோ-கோலா நிறுவனத்திற்கு எதிராக நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளையும், அப்போதைய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு எழுதிய உணர்ச்சிமிக்க கடிதத்தையும் வாசித்து இரண்டு மூன்று நாட்களுக்கு புல்லரிப்போடு திரிந்திருக்கிறேன். வாழ்நாளில் கோலா குடிக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்த காலகட்டம் அது. இதற்கு மேலும்  அந்தக் கடிதத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக நீங்களும் ஒருமுறை வாசித்துவிடுங்கள். 

                                                  ***********

செங்கராவிலிருந்து கிளம்பி பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே பார்த்தால் கொக்கோ கோலா கம்பெனி. கோலா தயாரிப்பதற்காக அந்தக் கம்பெனி அங்கேயுள்ள நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சியெடுத்துவிட்டதால் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், கோலா தயாரிப்பினால் வெளியேறும் ரசாயனக் கழிவினால் (sludge) அந்தப் பகுதி நிலமே விஷமாகிறது. ஏனென்றால், கோலா தயாரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவில் காட்மியம் (Cadmium), க்ரோமியம், பாஸ்பரஸ், ஸிங்க், அலுமினியம் என்ற ரசாயனக் கலவைகள் உள்ளன என்று Greenpeace நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது. இது பற்றி பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களிலும் செய்தி வந்து கேரளத்தின் 'புகழ்' பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ரசாயனக் கலவை நிலத்துக்கு உரம் என்று பொய் கூறித் திரிகிறது கொக்கோ கோலா நிறுவனம். நீங்களோ எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோலாவை எதிர்க்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் கோலாவை ஆதரிக்கிறீர்கள். இதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன என்று மக்களிடம் கொஞ்சம் விளக்குவீர்களா?

கடந்த ஆறு ஆண்டுகளாக பிளாச்சிமடை மக்கள் கொக்கோ கோலா நிறுவனத்தின் எதிரே பந்தல் போட்டு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தமிழர்கள்.அவர்களிடம் உங்கள் முதலமைச்சர் யார் என்று கேட்டேன். தெரியவில்லை.அவ்வளவு அப்பாவி மக்கள். கூலித் தொழிலாளிகள். மிக வறிய நிலையில் வாழ்பவர்கள். ஆனால் கோலாவினால் தங்கள் நிலம் விஷமாகிவிட்டது என்பதையும், கோலாவினால் தங்களுக்குக் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். யாரும் போய் அவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. கோலா கம்பெனியால் அவர்களின் நிலம் விஷமானதையும், குடிநீர் பறி போனதையும் யாரும் போய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: "பல மாதங்களாக, பல ஆண்டுகளாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்;நகரங்களிலிருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்குப் புடவையும் ஜாக்கெட்டும் கொண்டுவந்து கொடுங்கள்; சுனாமி வந்தபோது அப்படிக் கொடுத்தீர்களாமே? அது போல . . ." புரிகிறதா முதலமைச்சர் அவர்களே; இந்த மக்கள் எவ்வளவு கொடுமையான நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று?

மேதா பட்கர் வந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது தமிழ் நாட்டிலிருந்து நான். கேரள எழுத்தாளர்கள் அரசாங்க விருது வாங்குவது எப்படி என்பதை யோசிப்பதிலும்,தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதிலும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களை விட்டுவிடுவோம் . . .

முழுமையான கடிதத்தை உயிரோசையில் வாசிக்கலாம்.

                                                                    *******
கடிதத்தை வாசித்துவிட்டீர்களா? இனி கோலாவே குடிக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்திருப்பீர்கள் அல்லவா? இதே மனநிலையில் இருந்த எனக்கு நேற்று இந்த நிழற்படம் கண்ணில் பட்டுவிட்டது.


ஒரு நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அந்த நிறுவனத்தின் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பதை சாருவை போலவே நாமும் நம்ப வேண்டும் என்பதால் இந்த நிழற்படத்தை அனுப்பியவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன்.

அமெரிக்க நிறுவனத்தை ஒழிக்க முற்படும் ஒரு புரட்சியாளர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக உளவுத்துறையான சி.ஐ.ஏவின் சித்துவேலை இதன் பிண்ணனியில் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. புகைப்படத்தை எடுத்தவரோ எதிரில் பேசிக்கொண்டிருக்கும் நவீனோ கூட பன்னாட்டு நிறுவனத்தின் இந்த சதிவேலைக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும்  இது மலேசியாவில் தயாரிக்கப்பட்ட கோலா என்பதனால் இந்தியாவிற்கோ அல்லது கேரளாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். இந்த சதிகளின் Background ஐ பற்றி தெரிந்த பிறகும் கோகோ கோலாவுடன் சாரு இருக்கும் ஒரு படம் கிடைத்துவிட்டது என்பதற்காக எதிரிகள் அவரை விமர்சிப்பது வெட்கக்கேடானது. 

கோலாவுக்கு எதிரான சாருவின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது-
  • கேரள எழுத்தாளர்கள் செய்யாத போராட்டத்தை சாரு செய்திருக்கிறார்.
  • போராடும் மக்களுடன் கை கோர்க்க முதலைமைச்சர் முற்படாததால் சாரு தனது எழுத்து பட்டறையை விட்டு வெளியேறினார். (ஒரு எழுத்தாளன் களத்தில் இறங்கிப் போராடினால் நஷ்டம் வாசகர்களுக்குத்தான் என்பதை இந்த ஆட்சியாளர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை)
  • அர்னால்ட் செய்யும் சாகசங்களை எல்லாம் செய்து செத்துக் கொண்டிருக்கும் நதியைப் பார்த்து தனது கண்ணீரை அந்த நதிக்கு காணிக்கையாக்கியிருக்கிறார் சாரு.
  • மேதா பட்கருக்கு பிறகாக கோகோ கோலாவை எதிர்த்து போராட்டம் நடத்திய ஒரே அறிவுஜீவி சாரு என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 
எத்தனை பல்டியடித்தாலும் சாருவை போல சுவாரசியமாக எழுதக் கூடிய திறன் தமிழில் வேறு எந்த எழுத்தாளனுக்கும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு நாம் அவரைக் கொண்டாட வேண்டும். அவரது எழுத்தின் சுவாரசியத்தன்மைக்கும், Readability க்கும் நான் அடிமை என்பதாலேயே இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். 

கேரளாவிலிருந்து கோகோ கோலா நிறுவனம் தலை தெறிக்க ஓடிவிட்டதாகத் தெரிகிறது. இனி இந்தியாவிற்குள் ஒரு பாட்டில் கூட விற்க முடியாத நிலைமையை ஏற்படுத்திய புரட்சியாளரை நக்கலடிக்க எந்த நாய்க்கும் தகுதியில்லை. அந்த வெற்றியைக் கொண்டாட கோலாவைத் தவிர வேறு எந்த பானமும் பொருத்தமானது இல்லை.

புர்ச்ச்ச்சி ஓங்குக! கோகோ கோலா ஒழிக!!

Nov 22, 2012

செத்தாண்டா கசாப்


ஒரு மனிதனை தூக்கிலிட்டு கொன்றிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் குதூகலிக்கச் செய்திருக்கிறது. பட்டாசுகளும் கொண்டாட்டங்களும் டிவிக்களிலும், செய்தித்தாள்களிலும் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டன. பெருநகரங்களின் வீதிகளில் இனிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். ஒரு அசுரன் அழிக்கப்பட்டதாக மக்கள் கொண்டாடி களைத்திருக்கிறார்கள்.

இன்றைய இந்தியாவின் குல்லா போட்ட குட்டி காந்தியார் அண்ணா ஹசாரே அவர்கள் கசாப்பை பொது இடத்தில் தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். குட்டி காந்தியாக உலவினாலும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், இரத்தத்துக்கு ரத்தம் என்பதில் உறுதியாக இருக்கிறார். நல்லவேளையாக அரசே கசாப்பை தூக்கில் போட்டுவிட்டது. இவரிடம் கொடுத்திருந்தால் தனது பற்களால் அவனது நெஞ்சைப் பிளந்திருப்பார் போலிருக்கிறது. இத்தகைய ஆவேசத்தினாலும் தேசப்பற்றினாலும்தான் இந்தியாவிலிருந்து ஊழலை முற்றுமாக ஒழித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் தேசப்பற்றை அணைந்துவிடாமல் காக்கும் அரசுதான் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம். ஆனால் நமது ஆட்சியாளர்கள் ஒரு படி மேலே போய் அணைந்து கொண்டிருந்த தேசப்பற்றை ஊதிவிட்டிருக்கிறார்கள். இப்பொழுது அது கொழுந்துவிட்டு எரிகிறது. மக்களுக்கு கிளம்பியிருக்கும் வெறியைப் பார்த்தால் ஆளுக்கு ஒரு கருங்கல்லை தூக்கிக் கொண்டு பாகிஸ்தான் மீது போருக்குச் செல்லத் தயாராக இருப்பார்கள் போலிருக்கிறது. நேற்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் மூவர்ணத்தில் புகை வந்து கொண்டிருந்தது. இவ்வளவு உணர்ச்சிகரமான தேசப்பற்று எப்பொழுதாவதுதான் வெளியில் தெரிகிறது. குறிப்பாகச் சொன்னால் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுகிறது அல்லது  பாகிஸ்தான் தீவிரவாதியை தூக்கில் போடும் போது வீதியில் பெருக்கெடுக்கிறது.

பெரும்பாலான அல்லது கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றன. இந்த வரவேற்பில் வாக்கு வங்கி அரசியல் பிரதான இடம் பிடித்திருக்கிறது என்று யாராவது சொன்னால் அவரை அழைத்து வாருங்கள். அவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட வேண்டும். இந்தத் தண்டனையை எதிர்த்து பேசும் கயவாளிகள், கருங்காலிகளையெல்லாம் வரிசையாக நிறுத்தி வைத்துச் சுட்டுவிடலாம்.  ஒரு தேசத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதைவிடவும் ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது? அதைத்தான் இப்பொழுது செய்திருக்கிறார்கள். Sweet surprise.

பால்தாக்கரே மரணம், அதற்கான பந்த், பெருகும் வேலையில்லாத்திண்டாட்டம், சரியும் பொருளாதாரம் என இந்த தேசமே சோகங்களிலும் சிக்கல்களிலும் தத்தளித்து கொண்டிருக்க, குஜராத் தேர்தல் வேறு கழுத்தை நெரிக்கத் துவங்கியிருக்கிறது. இது அத்தனையிலிருந்தும் மக்களுக்கு சரியான நேரத்தில் Relaxation கொடுத்திருக்கும் அரசுக்கான முழு ஆதரவாளனாக மாறிவிட விரும்புகிறேன்.

கசாப்பை ஏவிவிட்டவர்கள் இந்த தூக்குதண்டனையின் காரணமாக பயத்தில் காலோடு சிறுநீர் கழித்திருப்பார்கள் என நம்பலாம். இனிமேல் அடங்கி ஒடுங்கிக் கிடப்பார்கள். நம்மால் கசாப் அநியாயமாக செத்துவிட்டானே என மனசாட்சி உறுத்த சயனைடு குப்பியைக் கடித்தோ அல்லது தூக்கு மாட்டிக் கொண்டோ அவர்கள் செத்துப்போனால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளும், இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் தூக்கி வீசிவிட்டு பெட்டிக்கடை வைப்பதற்கும்,  புரோட்டா மாவு பிசையும் வேலைக்கும் போய்விடுவார்கள். இனி எந்த ஒரு தீவிரவாதியையும் யாராலும் மூளைச்சலவை செய்துவிட முடியாது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இடம்பெற்றுவிட்ட இந்த தண்டனை ஒவ்வொரு தீவிரவாதிக்கும் ஒரு பாடமாக இருக்கும். ஏ.கே 47 இல்லை சாதாரண தண்ணீர் துப்பாக்கியைக் கூட இனி தொட மாட்டார்கள். இனி குண்டு வெடிப்பில்லாத, தீவிரவாதிகள் இல்லாத, சாந்தி நிலவும் ஒரு நாட்டில் வாழப்போகிறேன் என்பதை நினைத்து ஆனந்தக் கூத்தாடுகிறேன்.

கசாப்பால் சுடப்பட்ட மனிதர்களின் குடும்பத்தாருக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது என ஒபாமாவின் வார்த்தைகளை ப.சிதம்பரம் ரிபீட் அடித்திருக்கிறார். இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவரான ப.சி சொல்வதற்கு எதிர்பேச்சு பேசும் அருகதை யாருக்கும் இல்லை என நம்புகிறேன். இனி அந்தக் குடும்பங்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். அவர்களின் பொருளாதாரப்பிரச்சினைகள், அன்பிற்குரியவனை இழந்ததற்கான பதிலீடு என அத்தனைக்கும் இந்த ஒரு மரண தண்டனை பதிலளித்திருக்கிறது.

இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான எந்தக்கருத்தையும் நான் முன் வைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலானாவர்களின் விருப்பம் என்னவோ அதுவேதான் என் விருப்பமும். இந்த தேசமக்கள் எதற்காக குரல் கொடுக்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்கிறேன். தேசத் துரோகியாகவோ அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரானவனாகவோ ஒரு போதும் இருக்கவிரும்பவில்லை.

ஜெய்ஹிந்த்!

Nov 21, 2012

காலச்சுவடு- அதிகார மையம்


எதுவரை இணைய இதழில் காலச்சுவடு கண்ணனின் நேர்காணல் வெளிவருகிறது. அதில் நான் கேட்ட வினாவும் அவரது பதிலும்.

                                                                      ***

இலக்கியச் சூழலில் அதிகார மையம் வலிந்து உருவாக்கப்படுகிறது என்பதான குற்றச்சாட்டுகளில் காலச்சுவடின் பெயர் இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?

இந்தக் கேள்வி எனக்குச் சரிவரப் புரியவில்லை. ‘காலச்சுவடு அதிகாரத்தை வலிந்து உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டாகப் புரிந்துகொண்டு எழுதுகிறேன்.

அதிகாரம் இல்லாமல் எந்தச் செயல்பாடும் சாத்தியமில்லை. அதிகாரம் என்பது மொக்கையாகப் பேசப்பட வேண்டிய விஷயமும் அல்ல. அதிகாரத்தின் தன்மை, அது பெறப்பட்ட விதம், அதன் பண்புகள் என்று பேசுவதே பொருள் உடையது. கூடங்குளம் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவுக்கும் அதிகாரம் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கும் அதிகாரம் இருக்கிறது. இந்திய ராணுவத்திடமும் அதிகாரம் இருக்கிறது. நரேந்திர மோடியிடம் அவர் பதவிக்கு மீறிய அதிகாரம் இருக்கிறது. ‘அதிகார எதிர்ப்பு’ என்ற போர்வையில் இவை எல்லாவற்றையும் மறுக்க வேண்டுமா? அல்லது அவற்றின் பண்புகளை உணர்ந்து எதிர்வினையாற்ற வேண்டுமா?

காலச்சுவடின் அதிகாரம் அதன் செயல்பாடுகளில் இருந்து உருவாகி மேலும் செயல்பட வழிசெய்யும் அதிகாரம். காலச்சுவடில் பங்களிப்பவர்கள் தங்களை முன்லைப்படுத்திக்கொள்வது இல்லை. எல்லாக் காலங்களிலும் எழுத்தாளர்களை, நூல்களை, விவாதங்களை முன்னிறுத்தியே செயல்பட்டு வருகிறோம். ஒரு பதிப்பகத்தின் அடித்தளம் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் எனப் பற்பல அணிகளால் கட்டமைக்கப்படுகிறது. இதைப் பொறுப்பிலிருப்பவர்கள் அதிகார நட்சத்திரங்களுடன் குலாவ, திரைப்படத் துறையில் நுழைய, ஊடகங்களில் முகங்காட்ட சுரண்டுவது தரக்குறைவான செயல்பாடு என்பதே எங்கள் மதிப்பீடு. ஒரு பதிப்பகம் எழுத்தாளர்களையே முன்னிலைப்படுத்த வேண்டும்.

காலச்சுவடின் மீது அதன் பங்களிப்பிற்கும் தகுதிக்கும் மீறிய அதிகாரத்தை திணித்து வருபவர்கள் அதன் எதிர்ப்பாளர்கள்தான். நாட்டு நடப்பைத் திசைதிருப்பிவிடுவோம், சமூகத்தையே பாழ்படுத்திவிடுவோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, எதிர்மறையாக, எங்கள் அதிகாரத்தை ஊதிப் பெருக்குகிறார்கள். இது ஏற்படுத்தும் மாயையில் சிக்காமல் சமநிலையுடன் செயல்படுவது சவாலாகவே இருக்கிறது. தமிழ்ப் பெருங்குடியின் ஒரு சதவீதத்தைக்கூட நாங்கள் இன்னும் சென்றடையவில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.


தொடர்புடைய சுட்டிகள்:

1) “காலச்சுவடு” எல்லாக் காலங்களிலும் பலரின் பங்களிப்பை உள்ளடக்கிய ஒரு கூட்டு இயக்கம்- எதுவரை இணைய இதழ்

2) காலச்சுவடு-நிதி ஆதாரம்- நிசப்தம்

Nov 20, 2012

பறையன், பறையனா இருந்தா கொளுத்துவானுங்க


தர்மபுரி சாதிக்கலவரங்கள் குறித்து ஆளாளுக்கு முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் கிராமத்தை மேல்சாதியினர் எரித்தது சரியானதுதான் என்று நிரூபிக்க குட்டிக்கரணம் அடிக்கிறார்கள் மேல்சாதிப்பிரதிநிதிகள். ராமதாஸ் முதற்கொண்டு கொங்குவேளாளர் பேரவை மணிகண்டன் வரை ஏகப்பட்டவர்கள் காமெடி ப்ரோகிராம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் இப்பொழுது கடைசியாக பழமலய்.

பழமலய் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு குட்டி அறிமுகம். மண் மணம் தெறிக்க தனது சமூகக் கவிதைகளால் அழுத்தமான இடம் பதித்தவர் என்று நவீன இலக்கியவாதிகள் கொண்டாடினார்கள். தலித் ஆதரவாளர்கள் போற்றினார்கள். 

பேராசிரியர், தலித் வாழ்வியலை எழுத்தாக்கியவர் என ஏகப்பட்ட பில்ட் அப்களுடனான பிம்பத்தைக் கொண்டிருக்கும் பழமலய்யின் மொக்கைத்தனமான கமெண்ட்டை இன்று வாசிக்க நேர்ந்தது. பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று ராமதாஸ் சொல்லி வாய்மூடிய ஓரிரு நாட்களுக்குள் பிபிசி தமிழ் தளத்தில் பழமலய் சொல்லியிருப்பது இதுதான் -

காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது .

ஒரு பிரச்சினையின் மையத்தை கண்டுபிடித்திருக்கிறார் என்பதை பாராட்டி இவருக்கு அடுத்த வருடம் ஏதாவது ஒரு பரிசு கொடுத்தால் தேவையில்லை போலிருக்கிறது. அது நோபல் பரிசாக இருந்தால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். 

நுணுக்கமாக கவனித்தால் பழமலய்யின் கமெண்ட் பிரச்சினையின் வேரைக் கண்டுபிடிப்பதில்லை. ‘மேல்சாதி’க்காரர்கள் செய்தது தவறில்லை என்பதற்கான Justification. 'நீ மேல்சாதிப்பெண்ணை கைபிடித்தால் இப்படித்தான் எரிப்பார்கள்’ என்பதான Warning என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஆண் எந்தச் சாதியை பெண்டாண்டாலும் துடிக்காத மீசை பெண் வேறு சாதிக்கு வாழ்க்கைப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? பழமலய்க்குள் புரையோடிக் கிடக்கும் ஆணிய மனநிலைதான் துருத்திக் கொண்டிருக்கிறது.

ராமதாஸூம், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டனும் என்ன உளறினாலும் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஓட்டு பொறுக்கி அரசியல் நடத்துபவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும் என விட்டுவிடலாம். ஆனால் அறிவு சார்ந்த தளத்தில் தன்னை பேராசிரியர்,கவிஞர், தலித் போராளி என்றெல்லாம் பிரகடனப்படுத்திவிட்டு தனக்குள் ஒளிந்திருக்கும் பூனைக்குட்டியை வெளியிடும் ஒருவரைப் பார்த்தால் எரிச்சல்தான் மிஞ்சுகிறது. எழுதுவதற்கும் வாழ்வதற்கும் சம்பந்தமே தேவையில்லை என்பதற்கு இன்னொரு சாட்சியமாக தன்னை மாற்றிக் கொண்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

எனது பேட்டி முழுமையானது இல்லை என்றோ திரிக்கப்பட்டிருக்கிறதோ என்றோ சொல்வார் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

முன்பு பழமலய் எழுதி நான் கொண்டாடிய கவிதை ஒன்று இப்பொழுது ஏனோ ரொம்பவும் இம்சிக்கிறது.

கண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.
'மணக்கொல்லைக்கு' அழைத்திருந்தார்.

ஒரு முற்பகலில்
ஊரைச் சுற்றிக் காட்டினார்.

ரெட்டியார் கிராமம்.
பத்து பன்னிரெண்டு போலத்
தோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.
இடையிடையே சில இடிந்து கிடந்தன.
எருக்கு முளைத்திருந்தது.

"சாபம் அய்யா-
கழுத விழுந்து பொரளணும்!
குடியத்துப் போவணும்!"

இதான் பறவீரன் கோயில்.
அது பறவீரன் குளம்.
அந்த வீடு இந்த வீடு இன்னு
சில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.
இங்க நின்ன ஒரு அழிஞ்சி மரத்துலதான்
தல கீழா தொங்கவுட்டு
வைக்கோலப் போட்டு கொளுத்துனாங்களாம்

இதான் அந்த நெலம்
அந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில
அப்புடி கம்பு வெளஞ்சிருந்துதாம்.
தோ, புலியூரு
அந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்
ஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்

கேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி
நெறமாத கர்ப்பிணி-
'பசிக்குத் திருட வந்தவன,இப்புடி
பண்ணிப்புட்டீங்களேடா பாவிவோளா'ன்னு
மண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.

அப்ப,
அப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க
இப்ப வித்து மாறிகிட்டிருக்குது
கொளுத்னவனுவோ வீடுங்க
எருக்கு மொளச்சி கெடக்குது"

நின்று நினைத்தேன்:
கோயில், அடையாளம் என்று நின்ற வேல்,
நாவாக அசைந்து சொன்னது.
'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும் 
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.

Nov 19, 2012

அவ்வ்வ்வ்வ்


ஒரு லோக்கல் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. வழக்கம் போல ஏதாவது ஒரு விளம்பர அழைப்பாக இருக்கும் என நினைத்து எடுத்தால் எதிர்முனையில் கட்டையான பெண்குரல். விளம்பர அழைப்பாக இருந்தால் இளம்பெண்கள்தான் பேசுவார்கள். இது கட்டைக் குரல் என்பதால் அவசர அவசரமாக வேறு எதையோ மூளை யோசிக்க ஆரம்பிப்பதற்குள் அந்தப் பெண் ஆரம்பித்துவிட்டார்.

“சார் உங்க பில் ஆயிரத்தி ஐந்நூறு பாக்கி இருக்கு”

ஒருவனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டுமானால் பேச்சை ஆரம்பித்த உடனே “பணம் கொடு” என்று ஆரம்பிக்கலாம். அந்தப் பெண் அதைத் தெளிவாகச் செய்தார்.

“நீங்க யாருங்க மேடம்” - இது நான்.

“பி.எஸ்.என்.எல்லிருந்து பேசறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு நெம்பரைச் சொன்னார். அவரே கேள்வியும் கேட்டார்.

“இது உங்க நெம்பர்தானே சார்?”

“மேடம் நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி BSNL லேண்ட் லைன் வெச்சிருந்தேன். அந்த நெம்பர் ஞாபகத்தில் இல்லை”

“அப்போ இதான் உங்க நெம்பர்” 

“அப்படியா?”

“ஆமாங்க சார். பில் கட்டிடுங்க”

கோபத்தில் கத்தினேன். “ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பில் கட்டச் சொன்னால் என்னங்க அர்த்தம்?”

எவ்வளவு கோபமான கேள்விக்கும் ஒரு மொன்னையான பதில் மூலம் எதிராளியின் வாயை அடைத்துவிட முடியும். அந்தப் பெண்மணியும் அதே உபாயத்தைத்தான் கையில் எடுத்தார்.

பதில் இதுதான் - “ஸாரி சார்! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”

ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்கள் பில் கட்ட ஒரு நாள் தாமதம் என்றாலும் கூட கொத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். BSNL காரர்களுக்கு இரண்டு வருடம் என்பது ‘கொஞ்சம்’ லேட். இந்த பதிலுக்கு அப்புறம் என்ன கேள்வி கேட்க முடியும்.

“நான் அட்ரஸ் மாத்தி வந்துட்டேன் மேம்”என்றேன்.

“பரவால்ல சார், இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்” என்றார். விடமாட்டார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு  “அனுப்புங்க” என்றேன்.

“உங்க மெயில் ஐடி சொல்லுங்க சார்” என்றார். தப்பிப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்துவிட்டது.

“vamanikandan@gmail.com" 

தப்பியோடிய திருடனை பிடித்துவிட்ட சந்தோஷத்தில் “தேங்க்யூ” என்றார்.

நான் கொடுத்திருந்த மின்னஞ்சலில் ஒரு A வை முழுங்கியிருந்தது தெரியாமல் இத்தனை சந்தோஷப்பட்டிருக்கத் தேவையில்லை. எனது மொபைலில் அட்டெண்ட் செய்யக் கூடாத லிஸ்ட்டில் அந்த எண்ணைச் சேர்த்து வைத்தேன்.

சிறிது நேரத்தில் வேறொரு மொபைல் நெம்பரில் இருந்து அழைத்தார். வேறு எண் என நினைத்து அட்டெண்ட் செய்து மாட்டிக் கொண்டேன்.

“சார் நீங்க கொடுத்த மெயில் ஐ.டி தப்பு போல இருக்கு. எங்க டேட்டாபேஸில் சரியான மெயில் ஐடி இருந்துச்சு. பில் அனுப்பியிருக்கேன் பார்த்துட்டு பணத்தைக் கட்டிடுங்க”

இதற்கு என்ன பதில் சொல்வது? வடிவேலு ஸ்டைல்தான்....“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

குடிசையில் வாழும் திருடர்கள்
வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசைப் பகுதி இருக்கிறது. அங்கு பெரும்பாலும் தமிழர்கள்தான். இரண்டு மூன்று தலைமுறையாக பெங்களூரில் செட்டிலானவர்கள். இழுத்து என்பதை இஸ்து என்பார்கள். அப்படியா என்று கேட்பதற்கு பதில் ஆமாவா என்பார்கள். சில வார்த்தைகளை சிரமப்பட்டு புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். மற்றபடி தமிழர்கள்தான். 

மொத்த குடிசைப்பகுதியும் ஒரு லோக்கல் தாதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தாதா ஏதாவது அரசியல் மீட்டிங்க்கு போனால் அவரது பெயர் பொறித்த பேனரைத் தூக்கிக் கொண்டு அவரது ‘வெயிட்டை’ இவர்கள் காண்பிப்பார்கள். தாதாவோடு ஒத்துப்போகவில்லை என்றால் குடிசைக்கு வரும் கரண்ட்டை கட் செய்துவிட்டு போய்விடுவார். சில சமயம் நான்கு பேரைக் கூட்டிவந்து மொத்திவிட்டும் போவார். தாதாவுக்கு இவர்கள் அவ்வப்போது ‘மால்’ வெட்டுவதும் உண்டு.

குடிசையை ஒட்டியிருக்கும் எங்கள் லே-அவுட்டில் குடியிருப்பவர்கள் மிடில்-க்ளாஸ் மாதவன்களும் மாதவிகளும். அநேகமாக ஐ.டியில் வேலை செய்கிறார்கள். குடிசைப்பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத சோம்பேறிகள் என்ற இமேஜை இவர்கள் பில்ட் அப் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த குடிசைவாசிகள்தான் அவ்வப்போது லே-அவுட் வீடுகளில் திருடுகிறார்கள் என்று பேசிக் கொள்வதுண்டு.

ஒரு மாதுஸ் என்னிடம் சில நாட்களுக்கு முன்னால் போனில் பயங்கர ரகசியம் ஒன்றைச் சொன்னார். இதை கவனிக்க வேண்டும்- எங்கள் வீடுகள் இருப்பது ஒரே லே-அவுட்டில்தான். நான்கு வீடு தள்ளி அவரது வீடு. ஜன்னலைத் திறந்து வைத்து சத்தமாக பேசிக் கொண்டால் கூட காது கேட்கும். ஆனால் சம்பாஷணைகள் அனைத்தும் போனில்தான். அவர் சொன்ன ரகசியம் இதுதான் - அவரது வீட்டில் ஒரு ஜோடி செருப்பு காணாமல் போய்விட்டதாம். அதை குடிசைவாசிகள்தான் திருடிவிட்டார்கள் என்றார். அவர் சொன்ன தொனி இருக்கிறதே அதுதான் முக்கியம் “அமெரிக்க சி.ஐ.ஏ என் வீட்டில் ஒரு ஜோடி செருப்பை திருடிவிட்டது” என்ற ரேஞ்சில் இருந்தது. “அப்படியா சார், நாங்களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறோம். முதல் வேலையாக செருப்புக் கூட்டுக்கு ஒரு பூட்டு வாங்குகிறேன்” என்று நான் சொன்னது அவரை திருப்திபடுத்திவிட்டது. ஒரு மிகப்பெரிய திருட்டில் இருந்து என்னைக் காப்பாற்றிவிட்ட திருப்தி அது. இதே விவகாரத்தை அவர் காலனிவாசிகளுக்குள் நடக்கும் மாதாந்திர கூட்டத்திலும் அழுத்தம் திருத்தமாக சொன்னதாக கேள்விப்பட்டேன்.

குடிசைவாசிகள் உண்மையிலேயே விளிம்பு நிலை மனிதர்கள். அவர்களின் வாழ்க்கை முறையை மிக நெருக்கமாக பார்க்கிறேன். அடுத்தவன் மீதான தேவையில்லாத பயத்தோடு பொதுக்குழாயில் தண்ணீர் எடுப்பதற்கான சண்டைகளில் ஆரம்பித்து அடுத்த குடிசையின் கழிவு நீர் தனது குடிசைக்கு முன்னால் வருகிறது என்ற வசவுகள் வரை வெளிப்படையான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள். ஊசியில் விஷம் தடவி அதை நாசூக்காக வாழைப்பழத்தில் செருகிக் கொடுக்கும் ‘நவ நாகரீக’ வாழ்முறைக்கு அது முற்றிலும் வேறானது. பிரச்சினைகளையும் வன்மத்தையும் மனதிற்குள் பூட்டி வைக்கத் தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் இவர்கள். கோபம் வந்தால் அடித்துக் கொள்வதும் அடுத்த ஓரிரு நாட்களில் பேசிக் கொள்வதுமான இயற்கையான சமூக வாழ்க்கை அவர்களுடையது.  இவர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள், தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறார்கள், குப்பை பொறுக்குகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்தக் குழந்தைகள் குழந்தைமையை அனுபவிக்கிறார்கள். மண்களில் விளையாடுவதும், தண்ணீரில் நனைவதும் அவர்களின் உரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. மாலை வேளையை விளையாடிக் கழிப்பது அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. சாக்கடை மீதான பயத்தை, கொசுக்கடியை என சகலத்தையும் உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனால் மாதவன்களின் பிள்ளைகள் சோடாப்புட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு புத்தகமூட்டையோடு காலை ஏழு மணிக்கு சாலைகளில் நிற்கிறார்கள். பள்ளி வேன்கள் அவர்களை மூட்டைகளோடு மூட்டைகளாக தூக்கிச் சென்று மாலையில் மீண்டும் அதே சாலையில் துப்புகின்றன. பிறகு ட்யூசன், டான்ஸ் க்ளாஸ், சூப்பர் சிங்கர் கனவுகள், வீடியோ கேம், கிருமிகள், அழுக்கு பயம் என சூரியனைப் பார்க்காத சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் சிறகுகளை மொத்தமாக கத்தரித்துவிட்ட இந்த மாதவன்களுக்குதான் குடிசைவாசிகள் வேப்பங்காய்.

நேற்று நான்கு குடிசைவாசிகள் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையின் இரண்டு புறமும் மண்ணைக் கொட்டியிருந்தார்கள். நடுவில் தண்ணீர் குளம் போலத் தேங்கியிருந்தது. நான்கு பேரும் சேர்ந்து சாக்கடைத் தண்ணீரை வாளிகளில் மொண்டு வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள். நாற்றம் குமட்டிக் கொண்டிருந்தது. எதையோ தேடுகிறார்கள் என்று தெரிந்தது. அநேகமாக தங்க ஆபரணமாகவோ அல்லது சாவியாகவோ இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு சாக்கடைத் தண்ணீருக்குள் புழங்குவது பெரிய சிரமமாகத் தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் தீர்வதாகத் தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகாக தண்ணீர் தீர்ந்திருந்தது. துழாவ ஆரம்பித்தார்கள். 

நான்கைந்து மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அந்தச் சாக்கடைத் தண்ணீருக்குள் மீன்கள் இருக்கும் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த மீன்களைப் பிடித்து பக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்கள். சாக்கடையின் இருபுறமும் கொட்டியிருந்த மண் மேட்டைத் சமன் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். அப்பொழுதான் அவர்கள் தேடியது வெறும் மீன்களை மட்டும்தான் என்று புரிந்து கொண்டேன். மொத்தமாக கிடைத்த ஐந்து மீன்களும் இரண்டு அல்லது மூன்று கிலோ தேறும். இந்த மூன்று கிலோ மீனுக்காக நான்கு ஆடவர்கள் சாக்கடைத் தண்ணீருடன் இரண்டு மணி நேரமாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இத்தனை நாற்றத்தையும் மீறி, நோய்களைப் பற்றிய பயம் எதுவும் இல்லாமல், இடுப்பு நோக நீரைக் காலி செய்து வெறும் மூன்று கிலோ மீன்களுடன் திருப்திபட்டுக் கொள்ளும் இவர்களைத்தான் உழைக்காதவர்கள் என்கிறார்கள். இவர்களைத்தான் சோம்பேறிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களைத்தான் வெறுத்து ஒதுக்கிறார்கள் லே-அவுட் வாசிகள். 

நேற்று மாலை நேரத்தில் அதே சி.ஐ.ஏ ஏஜெண்ட் அழைத்தார். “வீட்டில் தண்ணீர் வரவில்லை. இரண்டு குடம் தண்ணீரை சுமப்பதற்குள் இடுப்பு முறிந்துவிட்டது” என்று பேச்சுவாக்கில் சொன்னார். அதோடு நிறுத்தியிருக்கலாம் “செருப்பு கூட்டுக்கு பூட்டு வாங்கிட்டீங்களா?” என்றார். “வாங்கவில்லை என்றால் நீங்கள் காவலுக்கு வருகிறீர்களா?” என்று நாக்கு வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. அவரது நல்ல நேரம் போலிருக்கிறது. என் நாக்கில் டெண்ட் அடித்திருக்கும் சனி டீ குடிக்க போய்விட்டார். கேட்காமல் நிறுத்திக் கொண்டேன்.

Nov 16, 2012

ஒரு கலக்கலான இண்டர்வியூபடித்து முடித்த பிறகு ஏழெட்டு வருடங்களாக வேலையில் இருக்கிறேன். கூடப் படித்தவர்களில் நிறையப் பேர் வெவ்வேறு நிறுவனங்களில் மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் எனக்கு இதுவரைக்கும் ஒரு ஜூனியர் கூட வாய்த்ததில்லை. கொஞ்சம் வருத்தம்தான். இப்பொழுதுதான் வாய்க்கும் போலிருக்கிறது. 

புதிதாக கல்லூரி முடித்த இரண்டு மூன்று பேர்களுக்கு நேர்காணல் நடத்தி அதில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு மேனேஜர் சொல்லியிருந்தார். நேற்றுதான் நேர்காணல்.மூன்று பேர்கள் வந்திருந்தார்கள். மூன்று பேருமே எம்.பி.ஏ முடித்தவர்கள். முதல் இரண்டு பேரை அவ்வளவாக பிடிக்கவில்லை. மூன்றாவதாக வந்தவர் தமிழ்நாட்டுக்காரர். சிவகாசி பக்கத்திலிருந்து வந்திருந்தார். பொடிப்பையன். நாற்பது கிலோ கூட இருக்கமாட்டான் போலிருந்தது.

"உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றேன்.

“அம்மாவும் இல்லாத அப்பாவும் இல்லாத சுயமாக படித்து முடித்த திறமைசாலி நான்” என்றான். முதல் வரியிலேயே ஆளை அடித்துவிட்டான். அதன் பிறகு டெக்னிக்கலாக கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை. அவனது சொந்தக் கதையை பேசத் துவங்கினோம். இருபது நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா கேன்சரில் இறந்து போனாராம். தந்தை விபத்தில் இறந்துவிட்டார். தனது எட்டு வயதிற்குள் இரண்டு பேரையும் இழந்துவிட்ட அவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் படிக்க வைத்திருக்கிறார்.

பி.ஈ படிப்பதற்கு உள்ளூர் அறக்கட்டளை ஒன்று உதவி செய்ய, எம்.பி.ஏவை வங்கிக் கடனில் முடித்திருக்கிறான். இரண்டிலுமே கலக்கலான பர்செண்டேஜ் வைத்திருக்கிறான். படிப்பு தவிர என்ன பிடிக்கும் என்ற அடுத்த கேள்விக்கு சைக்காலஜி, இலக்கியம் எனக் கலந்து கட்டி அடித்த அவனைப் பிடித்து போய்விட்டது. 

கொஞ்சமாவது டெக்னிக்கலாக கேட்க வேண்டுமே என்பதற்காக எங்கள் நிறுவனத்தில் செய்யும் வேலையைப் பற்றி விவரித்துவிட்டு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்றேன். "சுத்தமாகத் தெரியாது" என்றான். நேர்காணலுக்கு வந்திருந்த மற்ற இரண்டு பேரும் இந்த வேலைக்குத் தேவையான அடிப்படையைத் தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு சொல்லித்தருவது எளிதாக இருக்கும். இவனுக்கு எதுவுமே தெரியவில்லை என்று குழப்பமானேன். 

“கத்துக்கலாம் சார்!” என்றான். 

“அது கஷ்டம்” என்றேன்

“இங்க யாருக்குமே எதுவுமே தெரியாது சார். எல்லாமே கத்துக்கிறதுதான்” என்றான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே மிஷெல் பூக்கோவின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் வசனங்களை மனப்பாடமாகச் சொல்ல முடியும்” என்று அடுக்கிக் கொண்டிருந்தான். 

“அதெல்லாம் கம்யூட்டருக்கு பிரையோஜனப்படாதே” என்றேன்.

“பிரையோஜனப்படாதுதான். ஆனால் அதைவிடவும் கஷ்டமான புத்தகங்களையா கொடுத்து படிக்கச் சொல்லப் போகீறீர்கள்” என்றான். பவுன்சர் போட்டால் கூட சிக்ஸர் அடிக்கும் இவனிடம் அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு மேனேஜரிடம் சென்றேன். 

“பையன் இம்ரெஸ் செய்கிறான் ஆனால் வேலை சம்பந்தமாக எதுவும் தெரியவில்லை” என்றேன். 

“நானும் வருகிறேன்” என்று வந்தார்.

அவரை கேள்வி கேட்கச் சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கேள்விகளுக்கு அவன் அளித்த பதில்களுக்கு மேனேஜர் பயங்கரமாக சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் அவனைப் பிடித்துப் போய்விட்டது என்று அவரது முகத்திலேயே தெரிந்தது.

கடைசியாக “உன்னை ஏன் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைச் சொல்” என்றார்.

“என்னை ஏன் வேலைக்கு எடுக்கக் கூடாது என்பதற்கு உங்களிடம் ஒரு காரணம் கூட இருக்காது” என்றான். இதற்கும் மேனேஜர் சிரித்தார். எழுந்து நின்று கை குலுக்கினார். 

“உனக்கு இந்த நிறுவனத்தில் வேலை உண்டு. ஆனால் வேறொரு டீமில்” என்று சொல்லிவிட்டு அவனை வெளியே காத்திருக்கச் சொன்னார். அவனைப் பிடித்திருந்தால் அவரது டீமிலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே எதற்காக வேறொரு டீமுக்கு அனுப்புகிறார் என்று எனக்கு புரியவில்லை. அவரது முகத்தை பார்த்தேன். 

அவரேதான் சொன்னார். “இவ்வளவு திறமையான பையனை இந்த நிறுவனத்தை விட்டு அனுப்ப மனம் வரவில்லை. ஆனால் நம் டீமுக்கு இவ்வளவு திறமையானவன் தேவையில்லை. அது உனக்கும் ஆபத்து எனக்கும் ஆபத்து” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். 

மேனேஜர்கள் இப்படியெல்லாம் யோசிப்பார்களா என்று முழித்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரியான கார்பேரேட் டெக்னிக்ஸ் தெரியாததாலேயே எனக்கு இன்னும் ஒரு ஜூனியர் கூட இல்லை என்று நினைத்துக் கொண்டேன். அது என்னை நானே தேற்றிக் கொள்ள உதவும் ஒரு நினைப்பு- அவ்வளவுதான்.

Nov 15, 2012

குழந்தைகளின் பாலியல்கே டி.வியில் ‘பம்பாய்’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படம் வெளியான போது ‘குச்சி குச்சி ராக்கம்மா’ போன்ற காமம் சார்ந்த பாடலில் குழந்தைகளை மணிரத்னம் பயன்படுத்தியிருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது. அவரின் அஞ்சலி படமும் இதே விதமான சர்ச்சையில் இடம் பெற்றது ஞாபத்திற்கு வருகிறது. உண்மையில் குழந்தைகள் காமம் அற்றவர்களா? காமம் இல்லாதவர்கள்தான் ஆனால் பாலியல் இச்சைகள் உடையவர்கள்.

மூன்று வயது மகன் தூங்கும் போது போர்த்திவிட்டால் விலக்கிவிடுகிறான். நண்பர்கள் சிலரிடம் பேசியபோது அவர்களது குழந்தைகளும் அப்படித்தான் என்றார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு போர்த்திக் கொண்டு தூங்குவது பிடிப்பதில்லை போலிருக்கிறது. எத்தனை குளிராக இருந்தாலும் அவர்கள் போர்த்திக் கொள்ளாமல் தூங்கவே விரும்புகிறார்கள். அதே போலத்தான் உடை அணிந்து கொள்வதும். குழந்தைகள் நிர்வாணமாக இருப்பதையே விரும்புகிறார்கள். 

நுணுக்கமாக கவனித்தால் பெரியவர்களின் பழக்கவழக்கத்திற்கு முற்றிலும் நேர்மாறான செயல்களைத்தான் குழந்தைகள் விரும்புகிறார்கள் அல்லது செய்கிறார்கள். மேம்போக்காகப் பேசினால் ‘குழந்தைகள் அப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிடலாம்.  ஆனால் நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல இவை “குழந்தைப்பருவம் சார்ந்த விருப்பம்” மட்டுமே இல்லை.  குழந்தைகளின் பெரும்பாலான செய்கைகள் மரபுவழியாக(Heridity) பின் தொடர்பவை. இவை ஜீன்களில் பதியப்பட்ட செய்திகள்.

குகைகளில் வாழ்ந்த மனிதன் போர்த்திக் கொண்டு தூங்கியதில்லை. அதே போல அதற்கு முந்தைய தலைமுறை மனிதன் ஆடை அணிந்து கொண்டிருக்கவில்லை. இவை ஜீன்களில் பதிந்தவை. குழந்தைகள் தங்களது மூதாதையர்களைப் போலவே இருக்க விரும்புகிறார்கள். ஆனால் போர்த்தாமல் தூங்கும் குழந்தைகளிடம் “போர்த்திக் கொண்டால் குளிராது” என்று போர்த்திவிட்டு சுகத்தை பழக்கிவிடுகிறோம். துணியில்லாமல் இருப்பது அசிங்கம் என்றும் "அடுத்தவர்கள் உன்னைப்பார்த்து சிரிப்பார்கள்” என்று சொல்லி துணியை அணிவித்துவிடுகிறோம். இடையில் நாம் பழக்கப்படுத்தாமல் இருந்தால் குழந்தைகள் ஜெனிட்டிக்கலாக வருவதையே முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகளின் பெரும்பாலான செயல்களை பாலியல் சார்ந்தவைகளாக பிரித்துவிடுகிறார் உளவியலாளர் சிக்மண்ட் ப்ராய்ட். விரல் சூப்புவதை Pleasure sucking என்கிறார். சில குழந்தைகள் தனது காது மடல்களை பிடித்துக் கொள்வதையும், அடுத்தவர்களின் காது மடல்களை அல்லது முடியை எட்டிப்பிடிப்பதும் பாலியல் சார்ந்த நடவடிக்கைகள் என்பது ப்ராய்டின் வாதம். இதை வலுக்கட்டாயமாக தடுக்கும் போதுதான் உணவு உண்ண மறுப்பது போன்ற முரண்டு பிடிக்கும் செயலை குழந்தைகள் செய்கின்றன.

குழந்தை தன்னிடம் பால் குடிக்கும் போது அம்மா அவளையும் அறியாமல் பாலியல் கிளர்ச்சி அடைகிறாள் என்கிறார் ப்ராய்ட். அம்மாவின் கிளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக குழந்தையும் கிளர்ச்சியடைவதாக ப்ராய்ட் குறிப்பிடுகிறார். நமது பண்பாட்டில் அம்மாவை புனிதப்படுத்தி வைத்திருக்கிறோம்- Amma Centric. "உன் அப்பாவுக்கு வேறு பெண்களோடு தொடர்பிருந்தது" என்ற செய்திக்கு அதிர்ச்சியாவதைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி "உன் அம்மாவுக்கு வேறு ஆண்களோடு தொடர்பிருந்தது" என்பது. இப்படி புனிதப்படுத்தப்பட்ட அம்மாவோடுதான் குழந்தை முதன்முதலாக பாலியல் கிளர்ச்சியடைகிறது என்பது நம்மால் ஜீரணிக்க முடியாததாக இருக்கக் கூடும்.

இரண்டு அல்லது மூன்று வயதில் தங்களது பாலியல் உறுப்புகளை குழந்தைகள் தொட்டுப்பார்ப்பதை பெரியவர்கள் தடுத்துவிடுகிறார்கள். பிறகு பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதுவரைக்கும் அது பற்றிய அதிகக் கவனம் இல்லாமல் குழந்தைகள் வளர்கிறார்கள் அப்படியே கவனம் இருந்தாலும் பெரியவர்கள் ‘திட்டுவார்கள்’ என அடக்கிக் கொள்கிறார்கள். பதின்ம வயதை அடையும் போது உறங்கிக் கொண்டிருந்த பூதம் மீண்டும் விழித்துக் கொள்கிறது. இந்த வயதிலிருந்து Adolescent சிக்கல்கள் எனப்படும் பதின்ம வயதுச் சிக்கல்கள் தொடங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மரபுவழி பழக்கவழக்கத்திலிருந்து குழந்தைகளை வெளியேற்றி பண்பாடு என்ற பெயரில் இந்தச் சமூகம் என உருவாக்கி வைத்திருக்கும் பழக்க வழக்கங்களுக்குள் திணிப்பதன் விளைவாக உருவாகக் கூடிய சிக்கல்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளின் பாலியல் சார்ந்த நடவடிக்கைகளை நாம் 'ஒழுக்க'த்தோடு இணைத்துப்பார்த்து குழப்பிக் கொள்கிறோம். காமம் சார்ந்த செயல்கள் ஒழுக்கக் கேடானவை என நம்புகிறோம். ‘இந்த வயதிலேயேவா?’ என்று அதிர்ச்சியடைகிறோம். 

உண்மையில் குழந்தைகளின் செய்கைகள் யாவையுமே இயற்கையானவை என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. புதிதாகக் கிடைக்கும் பொருட்களை ஆராய்வது போலவே தங்களின் உறுப்புகளை ஆராய்கிறார்கள், அதன் மூலம் கிடைக்கும் இனம்புரியாத கிளர்ச்சியை விரும்புகிறார்கள். மனோவியல் நிபுணர்கள் குழந்தைகளின் இச்செயல்களைத் தடுப்பதைவிடவும் “மற்றவர்கள் முன்னால் தொடக்கூடாது” என்பதைத்தான் பழக்க வேண்டும் என்கிறார்கள். 

எப்பொழுதுமே இயற்கையான பழக்கவழக்கங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தைகள் இயற்கையானவர்கள். பெரியவர்களான நாம்தான் போலிகள். பண்பாடு, ஒழுக்கம் என ஆயிரத்தெட்டு பெயர்களைச் சூட்டி செயற்கையாக வாழ பழகிக் கொண்டோம். குழந்தைகளையும் செயற்கைக்கு பழக்குகிறோம். அவர்களையும் போலிகளாக்குவதில் வெற்றிபெற்றுவிடுகிறோம்.

(தொடர்ந்து பேசலாம்)

Nov 14, 2012

நாசமாகப் போகட்டும் தீபாவளி


இந்த வருடம் பட்டாசு வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தபோது நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வழக்கத்திற்கு மாறான கூட்டம். வரிசையில் நின்ற பெரும்பாலானோர் "இந்த வருஷம் விலை ரொம்ப அதிகம்" என்றார்கள். அதற்காக யாரும் பட்டாசு வாங்காமல் திரும்பிப் போகவில்லை. ஹோட்டலில் அளவு சாப்பாடு கட்டித்தரும்  ஒரு பாலித்தீன் Carry Bag அளவிற்கு நானும் இந்த வருடம் பட்டாசுகள் வாங்கினேன். ஆயிரத்தி இருநூறு ரூபாய் பில் போட்டிருந்தார்கள். 

"நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ வெறும் அஞ்சு ரூவாய்க்கு எங்கப்பன் பட்டாசு வாங்கி தந்துச்சு" என ஒரு ஆத்தா அளந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன். 

ஊருக்குள்ளும் பட்டாசுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. உள்ளூர் மிராஸ்தார் ஒருத்தர் போகிற வருகிறவர்களையெல்லாம் நிறுத்தி தான் ‘பட்டாசு வாங்கிய புராணத்தை’ அவிழ்த்துவிட்டார். தனது நண்பர்கள் நான்கைந்து பேர் சிவகாசியிலிருந்து மொத்தமாக அள்ளி வந்ததாகவும் அறுபத்தைந்தாயிரம் ரூபாய் பட்டாசுகளிலிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு தான் எடுத்துக் கொண்டதாக அடுக்கிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொருவருக்கும் மூச்சுத்திணறி மயக்கம் வராத குறைதான்.

கெடுபிடிகள் என்ற பெயரில் விதிக்கப்படும் அரசின் அத்தனை கட்டுப்பாடுகளும் அதிகார வர்க்கத்திற்கு காசு கொழிக்கச் செய்யும் காரியம் போலிருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகள் அரசின் உயர்மட்டத்தை பணத்தால் கவனித்துக் கொள்கிறார்கள். பட்டாசுகளை விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் விதிமுறை மீறல்தான். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு லம்ப்பான தொகையைக் கொடுக்கிறார்கள். ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் பண்டல் பண்டலாக பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிகாரிகளின் வாய்கள் பணத்தால் அடைக்கப்படுகின்றன. இப்படி பட்டாசுக்காக செலவு செய்யப்படும் ‘எக்ஸ்ட்ரா’ தொகை அத்தனையும் வாடிக்கையாளரின் தலையில் கட்டப்படுகிறது. நாமும் ‘இந்த வருஷம் விலை அதிகம்’ எனச் சொல்லிவிட்டு வாங்கிவருகிறோம்.

எண்ணெய்க் குளியல், புதுத்துணி, ஸ்வீட் என எல்லாவற்றையும் பட்டாசு புறந்தள்ளிவிட்டு 'ஸ்டேட்டஸ் ஐகான்' ஆகியிருக்கிறது. ஊரிலிருந்து பெங்களூர் திரும்பி வரும் இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்திற்கும் வான வேடிக்கைதான். வழக்கமாக சூளகிரியைத் தாண்டும் போது மூக்கைத் துளைக்கும் புதினா வாசமும், ஈரோட்டின் மஞ்சள் வாசமும் பூனையைப் போல பதுங்கிவிட்டன. எல்லா ஊர்களும் பட்டாசு வாசத்தில் திணறிக் கொண்டிருந்தன. பெரும் வெடிகள் காதுகளுக்குள்ளேயே வெடித்தன. நாய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு பயத்தில் ஓடிக் கொண்டிருந்தன. காகங்களையோ, கழுகுகளையோ பார்க்க முடியவில்லை.

அம்மாப்பேட்டை அருகே ஒரு தொழிற்சாலையின் மூலையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. ‘ராக்கெட் விஞ்ஞானி’யின் செயலாக இருக்கும் என பேசிக் கொண்டு கடந்த போது தீயணைப்பு வண்டி எங்களைத் தாண்டிச் சென்றது. கிருஷ்ணகிரி தாண்டிய சாலையில் பட்டாசினால் கவனம் சிதறிய ஒரு பைக்காரரை அடித்துவிட்டு போயிருந்தான் அடையாளம் தெரியாத லாரிக்காரன். அவரை ஓரமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் இறந்திருக்கக் கூடும். அவரது குடும்பத்தாருக்கு ‘கறுப்பு தீபாவளி’ ஒன்றை பரிசளித்துப் போயிருக்கிறது அந்தப் பட்டாசு.

முதியவர்கள், மருத்துவமனைகள், இதய நோயாளிகள் என சகலரும் 'இன்று ஒரு நாள்தானே' என பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் இறுக்க அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் விழி பிதுங்கியிருக்க வேண்டும்.

வெடிச்சத்தமும், கூசும் வெளிச்சமும், புகை நெடியும், அடுத்த நாளைய கண் எரிச்சலையும் தாண்டி இந்த பட்டாசுகளாலான தீபாவளி நமக்கு அளிக்கு சந்தோஷம் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. குழந்தைகளுக்கு ஆழ்மனதில் வன்முறையூட்டும் செயல்தான் பட்டாசு மீதான ஆர்வம் என்று தோன்றுகிறது. ஆனால் அதை உற்சாகமாக செய்து கொண்டிருக்கிறோம். கொண்டாட்டம் என்பதற்கான வரையறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம். டாஸ்மாக் கொண்டாட்டமும், சோம்பேறித்தனமும் கலாச்சாரமாக இடம்பெற்றுவரும் ஒரு மாநிலத்திலிருந்து எதைப் புலம்புவதும் அர்த்தமற்றது. நாம் வாழும் காலம் இருண்ட காலம். யாரையும் யாராலும் மாற்றிவிட முடியாத சூழல் இது. எதையும் புலம்ப வேண்டியதில்லை. 

‘பட்டாசு இல்லாத தீபாவளி’ என்ற சூழலியல் சார்ந்த பிரச்சாரம், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தைகளுக்காக 'பட்டாசுகளை நிராகரிப்போம்' என்ற பரப்புரைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  

ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன் என்பதை முதல் பத்தியில் சொல்லிவிட்டு முடிக்கும் போது “நாசமாக போகட்டும் தீபாவளி” என்று முடிப்பது சரியில்லைதான் என்றாலும் அப்படியே முடிக்கிறேன். 

நாசமாகப் போகட்டும் தீபாவளி. 

Nov 13, 2012

துப்பாக்கி - முதல் ஷோமுதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது நீண்டகாலத் திட்டம். சினிமா வெறியனாக நான் இருப்பதை அப்பாவால்  ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் பள்ளிக் காலத்தில் என் திட்டம் நிறைவேறியதில்லை. இப்பொழுது துப்பாக்கி படத்தின் முதல் ஷோவிற்கு ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்திருக்கிறது. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் விஜய்யின் படங்கள் நல்ல எண்டர்டெயினராக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு- இது விஜய் பற்றிய விமர்சனங்களிலிருந்து நானாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கைதான் என்பதையும் சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் நான் விஜய்யின் சமீபத்திய படங்கள் எதையுமே பார்த்ததில்லை. 2007 இல் பார்த்த போக்கிரிதான் கடைசிப்படம்.

முதல் ஷோ பார்ப்பதற்கான வாய்ப்பு பள்ளியில்தான் கிடைக்கவில்லையே தவிர கல்லூரி படிக்கும் போது நானாக ஏற்படுத்திக் கொண்டேன். பாபா படத்தை அப்படி பார்த்திருக்கிறேன். அது ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருந்த பருவம். அடுத்த நாள் லேப் எக்ஸாம் என்பதால் யாரும் கம்பெனி தரவில்லை. தனியாகத்தான் போயிருந்தேன். முதல் ஷோவிற்கு ரசிகர் மன்றங்களுக்கு கொடுத்த டிக்கெட்கள் போக நூறு டிக்கெட்களை பொதுமக்களுக்கு விற்றார்கள். பொதுமக்களுக்கு என்றாலும் ரசிகர்கள்தான் வாங்கினார்கள். நூறு டிக்கெட்களை வாங்க ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்றார்கள். 

ப்ளேக்கில் விற்பதை வாங்குமளவிற்கு எனது பொருளாதாரம் இடம் கொடுக்காது. என்பதால் முந்தின நாள் இரவே க்யூவில் இடம் பிடித்திருந்தேன். அதிகாலை நெருங்கியபோது சில முரட்டு ரசிகர்கள் க்யூவில் நின்றவர்களின் தோள் மீது ஏறி கவுண்ட்டரை நெருங்கினார்கள். பேசாமல் நின்று கொண்டால் அவர்களை சுமக்கும் வலியோடு தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவர்களின் அடியையும் வாங்கவேண்டும். ரஜினி என்ற மூன்றெழுத்து இந்த வலிகளைத் தாங்குவதற்கான வலிமையை கொடுத்திருக்கிறது என நம்பிக் கொண்டு அவர்களுக்கு தோள் கொடுத்தேன். இது நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன.

இப்பொழுது துப்பாக்கி படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு இந்தச் சிரமமெல்லாம் இல்லை. நண்பனிடம் முதலே சொல்லி வைத்திருந்தேன். அவன் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருக்கிறான். ஐநூறு ரூபாய் ஆகும் என்று சொல்லியிருந்தான். அப்பா எதுவும் சொல்லவில்லை. மனைவியும் சரியென்று சொல்லியிருந்தாள். தீபாவளியன்று படத்திற்கு போக வேண்டுமா என அம்மாதான் சலித்துக் கொண்டார். நான் பொருட்படுத்தவில்லை. அதிகாலை மூன்றரை மணிக்கு தியேட்டருக்கு வந்துவிடும்படி நண்பன் கட்டளையிட்டிருந்தான். சற்று உற்சாகமாகத் தூங்கப் போயிருந்தேன். பாபா பட நினைவுகள் மனசுக்குள் கொசுவர்த்தியைச் சுழற்றி ப்ளாஷ்பேக்கை ஓட்டியது.

பாபா படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற க்யூவை சரிபடுத்துவதற்காக இரண்டு  போலீஸ்காரர்கள் பெரிய தடியை வீசிக் கொண்டேயிருந்தனர். அவர்களிடம் அடி வாங்காமல் டிக்கெட் வாங்கி, கூட்டத்தில் நசுங்கி இடத்தைக் கண்டுபிடித்து அமரும்போதுதான் தெரிந்தது பர்ஸை கோட்டைவிட்டிருப்பது. அந்தக் காலத்தில் என் பர்ஸில் பணம் அதிகம் இருக்காது. யாராவது திருடினார்களா அல்லது கீழே விழுந்துவிட்டதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அதைத் திறந்து பார்ப்பவர்களுக்கு பத்து ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. டிக்கெட் வாங்குவதற்காக இரவு முழுவதும் தூக்கம் கெட்டிருந்ததால் கண்கள் சுழன்றன. ரஜினியை ஸ்கிரீனில் பார்க்கும் வரை பொறுத்துக் கொண்டால் பிறகு என்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் வேலையை அவர் எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் உடலில் சதைப்பிடிப்பான பகுதிகளை ‘நறுக்’ என கிள்ளிவிட்டுக் கொண்டேன். வலியின் காரணமாக தூக்கம் தள்ளிப்போனது.

திரை விலகியது. விசில் சப்தத்தில் தியேட்டரின் கூரை விழுந்துவிடக் கூடும் என நினைத்தேன். தீப்பொறி பறக்க ரஜினி வரும் வரை இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் துவங்கியது. ரஜினியும், சுரேஷ் கிருஷ்ணாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் கூட்டு சேர்ந்து சாகடித்திருந்தார்கள். இடைவேளைக்குப் பிறகு அமர முடியாமல் வெளியேறினேன். வெளியே வந்த போதுதான் அடுத்த நாளையை லேப் எக்ஸாம் பூதாகரமாகத் தோன்றியது. அந்த நொடிவரை தேர்வுக்காக எந்தத் தயாரிப்பும் இல்லாமல் இருந்தேன். சோறில்லாமல் கிடந்ததாலும் கூட்டத்தின் காரணமாகவும் களைத்திருந்தேன். டீ குடிக்கக் கூட காசில்லை. விடுதிக்கும் நடந்துதான் போக வேண்டும். இத்தனை கஷ்டத்தையும் ஒரு மட்டமான படத்திற்காக அனுபவிக்கிறேன் என்ற போது வருத்தம் அதிகமாகியிருந்தது. எனக்குள் இருந்த தலைவர் ரஜினி வெறும் நடிகர் ரஜினியாக மாறியிருந்தார். இனிமேல் எந்தக் காரணத்திற்காகவும் முதல் ஷோ பார்க்கக் கூடாது என முடிவு செய்திருந்தேன்.

இப்பொழுது என் முடிவை தகர்க்கவிருக்கிறேன் என்றாலும் சந்தோஷமாக இருந்தது. ‘சாட்டிங்’கில் வந்த நண்பர்களிடம் துப்பாக்கி படம் பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். மூன்று மணிக்கு அலாரம் வைத்திருந்த மொபைலை தலையணைக்குக் கீழாக வைத்து விட்டு பன்னிரெண்டு மணியைத் தாண்டிய போது தூங்கப் போனேன். கனவில் ரஜினியும், விஜய்யும் ஒரே குதிரையில் வந்தார்கள். பஸ்ஸில் மோதவிருந்த குழந்தையை காப்பாற்றினார்கள். விரலை மடித்து நாக்கின் கீழாக வைத்து விசிலடித்துக் கொண்டிருந்தேன். யாரோ தியேட்டரின் கதவை ஓங்கித் தட்டினார்கள். தூக்கம் கலைந்தது. தட்டப்பட்டது என் அறைக் கதவு. எழுந்து திறந்த போது வெளிச்சம் கண்களைக் கூசியது. "எல்லோரும் குளிச்சாச்சு, எந்திரிச்சு குளிங்க" என்றார் மனைவி. ஓடி வந்து மொபலைப் பார்த்தேன். அதுவும் பேட்டரியில்லாமல் தூங்கியிருந்தது. "மணி என்ன?" என்றதற்கு "ஏழு" என்றார். அவசரவசரமாக மொபலை சார்ஜரில் போட்டு நண்பனுக்கு டயல் செய்தேன். ரிங் ஆகிக் கொண்டிருந்தது. அவன் எடுப்பதாக இல்லை. அவன் விஜய்க்காக வெறித்தனமாக விசிலடித்துக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்த போது “மூன்று மணிக்கு படத்துக்கு போற ஆளைப்பாரு” என்று அம்மா கிண்டலடிக்கத் துவங்கியிருந்தார். நான் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனன். இன்றைய தீபாவளி அத்தனை உற்சாகமானதாக தெரியவில்லை.

தீபாவளி வாழ்த்துக்கள்!

Nov 12, 2012

சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப் போல வருமா

வெகு நாட்களுக்கு பிறகாக ஊருக்கு வந்திருக்கிறேன். வெகு நாட்கள் என்பது இரு மாதத்திற்கு மேற்பட்ட காலம். அதுவே பெரிய இடைவெளிதான். பதினேழு வயதில் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியேறினேன். கல்லூரி, வேலை என்று அடுத்ததடுத்து வாழும் ஊர்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஊருமே பிறந்த ஊருடன் எனக்கு உருவாகி இருக்கும் பந்தத்தை மிஞ்ச முடிந்ததில்லை.

வெளியூர்களிலிருந்து வரும்போது பெரும்பாலும் நள்ளிரவில் அல்லது அதிகாலையில் ஊரை அடைவேன். ஒவ்வொரு முறையும் இந்த ஊரின் காற்றுக்கு இருக்கும் பிரத்யேக வாசனையை உணர்கிறேன். ஒரு பருவத்தில் நெல்வயலின் இளஞ்சூட்டு வாசனை, இன்னொரு பருவத்தில் நீர் பாய்ந்த களிமண், மற்றுமொரு பருவத்தில் வெடித்துப்பிளந்த வயல்வெளிகளின் வறண்ட மணம்- பருவத்திற்கேற்றபடி வாசனையை வைத்திருக்கிறது இந்த ஊரும் மண்ணும். நினைவு தெரிந்தபிறகு அம்மாவை பிரிந்திருந்த சில நாட்களுக்குப் பிறகாக சந்தித்த போது ஓடிச்சென்று அணைக்கையில் உணர்ந்த வாசனை இன்னமும் நாசியில் ஒட்டியிருக்கிறது. அந்த அம்மாவின் வாசனை தந்த சுகத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத சுகத்தை ஊர் வாசனை தருகிறது. 

பால்யத்தில் விளையாடிய தெருக்களும், சிட்டுக்குருவிகளைத் தேடி அலைந்த தெருக்கிணறுகளும், ஓணானை அடித்த புதர்களும் இப்பொழுது உருமாறியிருக்கின்றன. ஆனாலும் அவை அவற்றிற்குரிய அத்தனை சுவாரசியங்களையும் இன்னமும் சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். முதன்முறையாக வாய்க்காலுக்குள் மூச்சுத்திணறிய இடமும், மைனாக்குஞ்சொன்றை தேடியெடுத்த மரமும், வளர்த்த கிளியொன்றை தின்ற பூனை வாழ்ந்த வீடும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. 

மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது போதையில் மிரட்டிய மோகன் மாமா இப்பொழுது குடித்துவிட்டு பத்து ரூபாய் பணம் கேட்கிறார். பத்து வயதாக இருந்த போது டம்ளரில் மல்லிகைப்பூவை எடுத்து வந்து விற்கும் ரங்கமாய்யா இன்னமும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறார். எங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஸ்டெம்பாக நின்ற பயன்படாத பைப் அங்கேயதான் இருக்கிறது. நரிக்குறவர்களுடன் சேர்ந்து கொக்கு தேடியலைந்த வேப்பமரங்கள் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன.

ஊர் அப்படியேதான் இருக்கிறது. நான் தான் மாறியிருக்கிறேன். கொங்குத்தமிழ் நாக்கை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது. ஊர்நடப்பு பேசும் மனிதர்களின் உறவை இழந்திருக்கிறேன். போடா வாடா என்றழைத்த நண்பர்கள் வெவ்வேறு திசைகளில் பறந்துவிட்டார்கள். ஊருக்குள் பெரும்பாலான முகங்கள் புதிதாக இருக்கின்றன. பத்தில் ஒரு முகம் கூட தெரிந்த முகமாக இல்லை. எதிர்படும் எந்த முகமும் புன்னகைப்பதில்லை.  இந்த ஊருக்கு நான் அந்நியமாகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் ஊர் எனக்கு அந்நியமாகப் போவதில்லை.

இந்த ஊர்தான் என் பிஞ்சுப்பாதங்களை ஏந்தியிருக்கிறது. முட்களும் கற்களும் கிழித்த போது இளைப்பாறியது இந்த மரங்களின் அடியில்தான். ரஜினி படம் பார்க்க வேண்டும் என புரண்டது இந்த மண்ணில்தான். என் முதுகை பதம் பார்க்க அப்பாவின் கைகளுக்கு முறுக்கேறிய குச்சியைக் கொடுத்தது இந்தச் செடிகள்தான். சைக்கிள் ஓட்டி விழுந்ததும், காதலிக்கத் துவங்கியதும் இந்த ஊரில்தான். கபடி விளையாடியதும், காலாற நடந்ததும் இங்குதான்.

இந்த ஊரைவிட்டு வெளியேறியபோது என்னிலிருந்து களங்கமின்மை வெளியேறியிருந்தது. இந்த ஊர் கற்றுக் கொடுத்திருந்த பால்யத்தின் வெகுளித்தன்மையை வாழ்க்கை என்ற பெயரில் மற்ற ஊர்கள் பிடுங்கிக் கொண்டன. இப்பொழுது எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் என்னால் பொய்களைச் சொல்ல முடியும். அடுத்தவனை ஏய்க்க முடியும். கடுங்கோபத்தில் ஒருவனை முகங்சுருங்கச் செய்ய முடியும். இதில் எதையுமே என் முதல் பதினேழு வருடங்களைக் கழித்த இந்த ஊரில் செய்ததாக ஞாபகமில்லை. அத்தகைய ஒரு ‘என்னை’த்தான் இந்த ஊருக்கு வரும் ஒவ்வொரு பயணத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேன். அவனைக் காணவில்லை.  அவன் இறந்திருக்கக் கூடும். ஆனால் ஏதாவது ஒரு மரத்திற்கடியிலோ வயல்வெளியிலோ அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என நம்பித் தேடுகிறேன்.

குழந்தைமையையும், பால்யத்தையும் நான்குசுவருக்குள் கழித்த ஒரு மனிதனுக்கு ஊர் என்பதில் எந்த  ஆச்சரியமும் இல்லை. அத்தகையதொரு மனிதனுக்கு மாநகரத்தின் நெரிசலும், அது உருவாக்கும் திகிலுமே பெரிய திருப்தியைத் தந்துவிடக் கூடும். ஆனால் இளம்பிராயத்தை மண்ணில் கொண்டாடியவனுக்கும், எதிர்படும் பால்யத்தின் ஒவ்வொரு அடையாளத்திலும் சில வினாடிகள் குழந்தைமைக்கு திரும்புவனுக்கும் எப்பொழுதும் சொந்த ஊர் என்பது திரும்பவிரும்பும் கனவாகவே இருக்கும். எனக்கு என் ஊர் என்பது கனவு. தனது பிடிகளுக்குள் என்னை ஏந்திக் கொள்வதற்காக கைகளை ஏந்திக் காத்திருக்கும் கனவு. பணமும் வாழ்க்கையின் தேவைகளும் இந்த கனவுக்குள் ஒருபோதும் நிரந்தரமாக என்னை அனுமதிக்கப்போவதில்லை.

[குறிப்பு: நிழற்படம் கரட்டடிபாளையம். கோபிச்செட்டிபாளையம் இணைய குழுமத்தில் இருந்து எடுக்கப்பட்டது]