Oct 9, 2012

இஞ்ஜினியரிங் முடித்த கோமாளிகள்வேமாண்டம்பாளையமாக இருந்தாலும் சரி மேலப்பட்டியாக இருந்தாலும் சரி நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவனை பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி "நீ இன்னும் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகலையா?". 

ஏதாவது ஒரு நிறுவனத்தில் அந்த மாணவன் வேலை வாங்கியிருந்தால் தப்பித்தான். இல்லையென்றால் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கேட்டே அவனை சாகடித்துவிடுவார்கள். கேள்வியில் இருக்கும் தொனிதான் மிகக் கொடூரமானது. ஏற்கனவே வேலை வாங்கிய யாராவது ஒரு மாணவனை சுட்டிக் காட்டுவார்கள். வேலை வாங்கிய அவன் அறிவாளி அல்லது படிப்பாளி என்றும் "நீ ஏன் இன்னும் இப்படியே இருக்கிறாய்" என்ற அர்த்தத்தை கொண்டுவந்துவிடுவார்கள்.

கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு பெறவில்லை என்பது மாணவர்களின் குறை மட்டும் இல்லை. விருப்பமே இல்லாதவன் என்றாலும் அவன் பொறியியல் கல்விதான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் பெற்றோரில் ஆரம்பித்து, கணக்குவழக்கில்லாமல் கல்லூரிகளைத் துவக்க அனுமதியளித்த அரசுகள், தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், தரமே இல்லாத கல்லூரிகள், தகுதியே இல்லாத ஆசிரியர்கள் என சகலரும் அடக்கம்.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பாக பி.ஈ படிப்பது பெருங்கனவாக இருந்த காலம். நல்ல மதிப்பெண், நுழைவுத்தேர்வு என்று அத்தனை தடைகளையும் தாண்டிச்செல்பவன் அந்தக் கனவை அடைய முடிந்தது. பிறகு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூறாகி, இருநூறாகி, முந்நூறையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள் எல்லாம் 'ஸீட்' வாங்கிவிட முடியும் என்ற ஒரு காலம் உருவானது. அப்படியிருந்தும் ஏகப்பட்ட கல்லூரிகள் காற்று வாங்கிக் கொண்டும் ஈயை ஓட்டிக்கொண்டும் இருந்ததால் ப்ளஸ் டூ முடித்தாலே வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கத் துவங்கின கல்லூரிகள்.

இலட்சக்கணக்கில் 'இஞ்சினியர்' டிகிரி வாங்கியவர்கள் உருவாகத் துவங்கினார்கள். மின்சாரம் என்பதை வரையறுக்கத் தெரியாத எலெக்டிரிக்கல் விஞ்ஞானிகளும், செயற்கைக்கோள் என்ன செய்யும் என்பதைத் சொல்ல முடியாத கம்யூனிகேஷன் அறிவாளிகளும் பெருகினார்கள். அப்படியிருந்தும் பணப்பசி தீராத பொறியியல் கல்லூரிகள் எம்.ஈ ஸீட்களை உருவாக்கின.  தங்களைப்பார்த்து கேள்வி கேட்கும் கொசுக்களிடமிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். "ஹையர் ஸ்டடீஸ் செய்யப்போறேன்" என்று சொல்லிவிடுகிறார்கள். 

பி.ஈ முடித்துவிட்டு வேலைகிடைக்காதவர்கள் அல்லது வேலை வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக எம்.ஈ க்கள் அமைந்தன. எம்.ஈ முடித்த பெரும்பாலானோர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆனார்கள்.  

இத்தகைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி, ப்ளஸ்-டூவில் 'ஜஸ்ட் பாஸ்' ஆனவர்கள் பாடம் படித்து தமிழக பொறியியல் கல்வியின் தரத்தை கொடி ஏற்றினார்கள். கல்லூரிகளில் ஆய்வகங்கள் இல்லை, நூலகம் இல்லை என்பதெல்லாம் பழைய குற்றச்சாட்டுக்கள். இப்பொழுதெல்லாம் பல கல்லூரிகளில் கட்டடங்களே இல்லை என்பதுதான் நிதர்சனம். 

இத்தகைய தரத்தை உணர்ந்து கொண்ட நிறுவனங்கள் தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகள் என்றாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடத்துவங்கின. தேர்ந்தெடுத்த சில கல்லூரிகளில் மட்டும் 'கேம்பஸ் இண்டர்வியூ'க்களை நடத்துகின்றன. பொறியியல் படிப்பை முடிப்பவர்களில் சில சதவீதத்தினரே நல்ல வேலையை வாங்குகிறார்கள். வேலை கிடைக்காத பொறியாளர்கள் சான்றிதழ்களை தூக்கிக் கொண்டு பெங்களூர் சாலைகளிலும், சென்னை சாலைகளிலும் அலையத் துவங்குகிறார்கள்.

மூன்றாம்தர நிறுவனங்கள் வேலை கிடைக்காத பாவப்பட்ட பொறியாளர்களை பகடை காய்களாக்கத் துவங்கின. ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக கூட சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு எங்கள் நிறுவனத்தில் கட்டாயம் பணி புரிய வேண்டும் என்ற பிணைப்பத்திரங்களில் கையெழுத்து வாங்குகிறார்கள். பொறியியல் கல்வி முடித்தால் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற மாணவனின் கனவில் மண்ணை அள்ளிக் கொட்டிய இந்தச் சமூகம் அவன் மீது மிக அதிகமான அழுத்தத்தையும் கொடுக்கிறது. அவனோடு படித்தவன் பல ஆயிரங்களில் சம்பளம் பெறுவதாகவும் இவன் ஐந்தாயிரம் சம்பளத்தில் நகரங்களில் கஷ்டப்படுவதாகவும் ஒரு  பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இவர்களை இஞ்ஜினியரிங் முடித்த கோமாளிகளாக சித்தரிக்கிறார்கள்.

இளம் வயதில் உருவாக்கப்படும் இத்தகைய மன அழுத்தம் "பணமே பிரதானம்" என்ற எண்ணத்தை பெரும்பாலானோர்களின் மனதில் விதைக்கிறது. நல்ல சம்பளம், ப்ராண்ட் வேல்யூ உள்ள நிறுவனம், வெளிநாட்டுப்பயணம் என்பன குறிக்கோள்கள் என்ற நிலையிலிருந்து அவை பித்து நிலையாக உருமாறுகின்றன. சில வருடங்கள் இவை உருவாக்கும் மன உளைச்சல் ஒருவனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான மனச்சிதைவை உருவாக்குவதற்கான அடிப்படையாகின்றன. இந்த இடத்தில் தொடங்குகிறது அவனுக்கும் சமூகத்திற்குமான சிக்கல்கள்.

(பேசுவோம்)