Oct 5, 2012

ஜாக்கிகள் பலவிதம்

சுபீருக்கு துபாயில் வேலை காத்திருக்கிறது. ஷேக் ஒருவரின் ஒட்டகப் பண்ணையில்தான் வேலை. தங்குமிடம் தந்து, மூன்றுவேளை உணவும்  கொடுத்துவிடுவார்கள் என்று உள்ளூர் புரோக்கர் சுபீரின் அம்மாவிடம் பேசினார். அப்பொழுது சுபீருக்கு மூன்று வயது. ஒரு வேளை சோற்றுக்கு கூட சிரமப்படும்  தனது குடும்பத்துக்காக கடவுள் கண் திறந்துவிட்டார் என்று அவனது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டது. பெற்ற கடனுக்காக சுபீரின் தாயாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. சுபீர் தன்னைப்போன்ற ஏராளமான சிறுவர்களுடன் மிரட்சியுடனும் சோற்றுக்கான கனவுகளுடனும் இந்த தேசத்தை கடக்கிறான்.

சில மாதங்களுக்கு பிறகு...பெட்ரோல் வாசம் வீசும் அரபு தேசத்தின் பாலைவனம். வெயிலில் தகிக்கிறது மணல். ஷேக்குகளின் பாரம்பரியமான விளையாட்டு போட்டியான ஒட்டகப் பந்தயத்தைய காண அரங்கம் தயாராகிறது. திரை உயர்கிறது. ஒட்டகங்கள் ஓடத் துவங்குகின்றன. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஒட்டகங்கள் லயம் மாறாமல் ஒரே மாதிரியாக கால்களை எடுத்து வைக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டகங்களால் ஓட முடியும். கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் வரைக்கும் பந்தயத் தூரம் இருக்கும். ஒட்டகத்தின் ஜாக்கிகள் ஒரு குச்சியை வைத்து ஒட்டகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் யாரும் ஜாக்கிகளை கவனிப்பதில்லை. அந்த ஜாக்கிகளில் ஒருவனாகத்தான் சுபீர் இருக்கிறான். ஜாக்கிகளாக இருப்பவர்களில் நான்கு வயது கூட பூர்த்தியாகாத சிறுவர்கள்தான் அதிகம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள் அல்லது சொற்ப பணத்திற்காக அரபியர்களிடம் விற்கப்பட்டவர்கள். பிறகு இவர்கள் ஒட்டகம் ஓட்டுவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒட்டகத்தின் மீது அமர்ந்து இருப்பவர்கள் முடிந்த வரையிலும் எடை குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கு ஒட்டக உரிமையாளர்கள் ஒருவேளை உணவை மட்டும் அளிக்கிறார்கள்.

ஒட்டகம் ஓடத் துவங்கும் போது ஜாக்கிகளின் கவனம் ஒட்டகத்தை செலுத்தச் செய்வதிலேயே இருக்க வேண்டும் என்பது உத்தரவாகவே கடைபிடிக்கப்படும். பந்தயத்தில் தோற்கும் ஒட்டகங்களின் ஜாக்கிகளுக்கு தண்டனை மிகக் கொடூரமாக இருக்கும். நான்கு வயது பிள்ளைகளால் ஒட்டகத்தையும் விரட்டி, அதே சமயம்  கெட்டியாகவும் பிடித்துக்கொள்ளவும் முடியாது என்பதால் ஒட்டகங்களில் இருந்து கீழே விழுவதும், எலும்புகள் முறிவதும், உயிரிழப்பதும்  சாதாரணமான நிகழ்ச்சி. அதிகபட்சமாக ஒரு ‘உச்’ சப்தம் எழும்பும். அவ்வளவுதான். 

குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் சர்வதேச அமைப்புகள் சிறார்களை ஜாக்கிககளாக பயன்படுத்துவதை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பின.சர்வதேச  ஊடகங்களில் இந்தக் கொடுமை விவரிக்கப்பட்டது. பல நாடுகளின் எதிர்ப்புக்கு பிறகு பத்தாண்டுகளுக்கு முன்னதாக துபாய், கத்தார் போன்ற நாடுகளில் சிறுவர்களை பயன்படுத்தும் ஒட்டகப்பந்தயங்கள் தடை செய்யப்பட்டன. ஒட்டக உரிமையாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கணிசமான சிறுவர்கள் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பட்டார்கள். சுபீர் அதிர்ஷ்டவசமாக தன் தாயை தேடியடையும் போது அவளால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருமாறியிருந்தான். ஒட்டக ஜாக்கிகள் வெளியேறிய பிறகு தங்களது பந்தயங்களை ரட்சிக்க யாராவது வரமாட்டார்களா என்று பினாத்திக் கொண்டிருந்த ஷேக்குகளின் கைகள் உதறல் எடுக்கத் துவங்கின.


ஹீரோவின் இலாவகத்தோடு ரோபோக்கள் களமிறங்கின. இந்த ஹீரோவின் பெயர் ரோபோ ஜாக்கி. சிறுவர்கள் செய்த அத்தனை வேலையையும் ரோபோக்கள் செய்யப்போகின்றன. ரோபோ ஜாக்கியை கத்தார் அறிவியல் கழகம் முதலில் வடிவமைத்தது ஆனால் வடிவமைப்பில் ஏகப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டார்கள். செய்தவரைக்கும் போதும் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கே-டீம் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கும் கண்ணாமுழி திருகியது. ரோபோவை உங்களின் மீது வைக்கப் போகிறோம் என்று தூக்கிச் சென்றால் ஒட்டகங்கள் பயத்தில் அலறியடித்து ஓடத் துவங்கின. இறந்த பசுமாட்டின் வயிற்றுக்குள் வைக்கோலை வைத்து கன்றுகுட்டிகளை ஏமாற்றுவதைப் போல இந்த ரோபோக்களுக்கு முகக் கண்ணாடிகள், கலர்கலரான துபாய் சட்டை, நாசியை துளைக்கும் துபாய் செண்ட் என்று மேக்கப் வைபவம் நிகழ்ந்தது. ரோபோக்களை கிட்டத்தட்ட சிறார்களாக மாற்றிவிட்டார்கள். ஒட்டகங்கள் ஒருவாறாக ஏமாந்தன. 

ரோபோக்களை ஷேக்குகள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தங்களின் சுட்டித்தனத்தால் ஷேக்குகளை ரோபோக்கள் அலேக்காக  மயக்கிவிட்டன. இந்த ரோபோக்களில் ஜி.பி.எஸ் எனப்படும் புவிநிலைகாட்டி (Global Positioning System) பொருத்தப்பட்டிருக்கும். இவை செயற்கை  கோளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் என்பதால் ஒட்டகம் இருக்கும் இடத்தை எஜமானருக்கு தெரிவித்துவிடும். ஒட்டகத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம்  கூட்ட வேண்டும் என அவர் நினைத்தால் தன் கையில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ரோபோவிற்கு உத்தரவிடுவார். அவர் அழுத்தும் பட்டன்களை  பொறுத்து உத்தரவு ‘சிக்னலாக’ மாற்றப்பட்டு ரோபோவிற்கு அனுப்பி வைக்கப்படும். பெறப்படும் சிக்னலைப் பொறுத்து ஒட்டகத்திற்கு எத்தனை அடி கொடுக்க  வேண்டும்  என்றும் மெதுவாக அடிக்க வேண்டுமா அல்லது பின்னியெடுக்க வேண்டுமா என்பதையெல்லாம் ரோபோவின் ப்ராசஸர் முடிவு செய்யும். இந்த முடிவின் அடிப்படையில் ரோபோவின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை சுழற்றட்டப்படும். ஒட்டகம் வேகமெடுக்கும்.

தூரத்தில் அமர்ந்திருக்கும் எஜமானருக்கு வெற்றி என்பதே குறியாக இருக்கும். கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகத்தை அடிக்கச் கொடுக்கச் சொல்லி அவர் ரோபோவுக்கு உத்தரவிட்டால் ரோபோவும் கருமமே கண்ணாக அடி நொறுக்கிவிடும். அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டகம் ஓட முடியாமல் ஓடி இரத்தக் குழாய்கள் வெடித்து மண்டையை போட்டுவிடும் என்பதால் அதற்கும் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தார்கள். ஒட்டகத்தின் இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் வசதியை ரோபோவில் செய்தார்கள் உண்டு. இந்தக் அளவீட்டை எஜமானருக்கு ரோபோ அனுப்பி வைக்கும். எஜமானரின் கம்ப்யூட்டர் எத்தனை இதயத்துடிப்புக்கு என்ன வேகத்தில் ஓடலாம் என்றும், இப்பொழுது ஓடும் வேகத்தை குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட முடியுமா என்று கணக்கிட்டுவிடும். இதன்படி ரோபோவின் சாட்டை சுழற்றலை  ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தலாம். 

என்னதான் அறிவியல் வாய்ப்பளித்தாலும் மனிதனின் புத்தி, குறுக்கு புத்திதானே. அடி கொடுப்பதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவு கட்டிய ஷேக்குகள்  ரோபோவின் மூலமாக ஒட்டகங்களுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் உத்தியை கண்டுபிடித்திருக்கிறார்கள். ரிமோட்டை அழுத்தும் போதெல்லாம் ஒட்டகத்திற்கு ரோபோ  ஷாக் கொடுக்கும். ஒட்டகம் பதறியடித்து ஓடத் துவங்கும். இது மிகக் கொடூரமான சித்ரவதை என்று மிருகவதை எதிர்ப்பாளர்கள் குறித்து குரல் எழுப்பத் துவங்கியிருக்கிறார்கள்.

[கல்கி வார இதழில் வெளியாகும் "ரோபோஜாலம்" தொடரின் ஒரு அத்தியாயம்]