Oct 30, 2012

விஜயகாந்த்- நாயகனா?காமெடியனா?



ஏழாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் இந்தியா பலகட்சி ஆட்சிமுறையுடைய நாடு என்று குறிப்பு வரும். அதைத் தொடர்ந்து பல கட்சி X இரு கட்சி ஆட்சிமுறைகளுக்கு இடையிலான நிறை குறைகளை பற்றிய குறிப்புகள். மனப்பாடம் செய்து தேர்வு எழுத வேண்டும். பல கட்சி ஆட்சிமுறையில் இரண்டு கட்சிகளையும் பிடிக்கவில்லையென்றால் தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பளிக்கமுடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதி வைத்திருந்தார்.  

அந்தக்காலத்திலிருந்து தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஆட்சியைப் பிடித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தகுதியிருக்கிறதோ இல்லையோ கருணாநிதி,ஜெ. தவிர இன்னொரு முதலமைச்சர் வர வேண்டும் என்று விரும்பியதுண்டு. அயோக்கியகனாக இருந்தாலும் கூட பரவாயில்லை- இவர்கள் இருவரையும் தவிர்த்த முகம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வை.கோபால்சாமி முதல்வராகிவிடுவார் என நம்பினேன். கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்ற திமுகவின் பில்லர்களோடு வெளியேறிய வைகோ மதிமுக வைத் தொடங்கியபோதும், வீரபாண்டி ஆறுமுகம் கூட அவரோடு போகப்போகிறார் என்ற செய்திகள் பரவியபோதும் கலைஞரே கூட அப்படித்தான் நம்பியிருப்பார். ஆனால் கலைஞரின் பகடையாட்டத்தில் வைகோவின் தளபதிகள் வெட்டி சாய்க்கப்பட்டபோதும் அவர்களின் சாயங்கள் மாற்றப்பட்டபோதும், வைகோவின் தவறான அரசியல் முடிவுகளாலும் நம்பிக்கைகள் தளர்ந்து போனது. 

இடையிடையே மூப்பனார், ப.சிதம்பரம், ரஜினிகாந்த் என்ற டெம்பரரி கனவுக்கண்ணன்கள் ’மூன்றாவது முகம்’ ஆசையின் திரியை அரை இன்ச்சுக்கோ அல்லது ஐந்தரை இன்ச்சுக்கோ அவரவர் தகுதிக்கு ஏற்ப தூண்டிவிட்டார்கள். இரு துருவங்களைத் தாண்டி தமிழக அரசியலில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது தூண்டிவிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் போல. தங்களின் விரலை கமுக்கமாக உள்ளே இழுத்துக்கொண்டார்கள்.

இரண்டாயிரத்தைந்தில் விஜயகாந்த் என்ற கருப்புக்காந்தம் தமிழகத்தின் மூன்றாவது இயக்கத்திற்கான வெற்றிடத்தை நிரப்பிவிடும் என்று விகடன் போன்ற ஜாம்பவான்களின் தூபத்தில் சொக்கிப்போயிருந்தது உண்மைதான். விஜயகாந்த் என்ற பலூன் ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. அவரும் பெரியாரிசத்தில் ஆரம்பித்து அம்பேத்கரிசம் ராஜாஜியிசம் அண்ணாயிசம் என கலந்து அடித்து ரசம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது ‘தான்’ என்ற ஈகோ ஊதப்பட்ட பலூனுக்கு ஏற்ற ஊசியாக மாறிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்காமல் விட்டிருப்பது அவருக்கு கெட்டநேரம் தமிழகத்திற்கு நல்லநேரம். 

ஜெயலலிதா ஊடகவியலாளர்களை சந்திப்பதேயில்லை என்பதால் பகையாளிகளை 'நேரடியாக’ சம்பாதித்துக் கொண்டதில்லை. கலைஞரை எத்தனை டென்ஷனாக்கினாலும் சமாளித்துவிடுவார் என்று கேள்விப்பட்டதுண்டு. விஜயகாந்த் பாய்ந்து விழுந்திருக்கிறார். விஜயகாந்தின் கோட்டைக்கனவுகளின் செங்கற்களான எம்.எல்.ஏக்களை ஒவ்வொன்றாக ஜெயலலிதா உருவிக் கொண்டிருந்த சமயத்தில் அவரது ஜெயா டிவியின் நிருபர் விஜயகாந்த்தின் முன்பாக மைக்கை நீட்டியிருக்கிறார். 

இழவு விழுந்துகொண்டிருக்கும் வீட்டில் பேட்டி வேண்டும் என்று மைக்கை நீட்டினால் கோபம் வரும்தான். ஆனால் கேள்விகேட்பவர் யார் என்று பார்த்திருக்க வேண்டாமா? அவர் மைக்கை நீட்டுவதில் இருக்கும் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ’நாய்’ என்று விஜயகாந்த் திட்டியதை படம்பிடித்து 24x7 இல் வீட்டு வரவேற்பறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். 

குடிகாரன், வேட்பாளரை அடிக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை மீறி அவரை எதிர்கட்சித்தலைவராக்கியதற்கு விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம் என்று நம்பினால் அதைப்போன்ற முட்டாள்த்தனம் வேறு இருக்க முடியாது. ஆனால் மக்கள் கொடுத்த வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டாரா என்பதும் அவரை இயங்கவிடாமல் ஆளுங்கட்சி ஆடும் சூதாட்டத்தில்  வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் தோல்வியை தவிர்க்கவாவது முயல்கிறாரா என்பதும் முக்கியமான கேள்விகள். 

ஜெ. ஆரம்பித்திருக்கும் நாடகத்தை தான் முடிக்கப்போவதாக சொல்லிக் கொண்டு முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். தமிழகத்தின் கடந்த கால்நூற்றாண்டு வரலாற்றில் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் சீரியஸாக நாடகம் நடத்தியிருக்கிறார்கள். மற்றவர்களின் சீரியஸ் நாடகங்களை காமெடி நாடகங்களாக மாற்றிவிடுவதில் அவர்கள் இரண்டு பேரும் வித்தகர்கள். விஜயகாந்த் இன்னமும் தன்னை ஹீரோவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். காமெடியனாக மாறிவிடாமல் இருக்க வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் முடியும். முடிந்தால் ‘மூன்றாவது முக’த்திற்கான நம்பிக்கையை அணைந்துவிடாமல் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளலாம்.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Good one! Pic kalakkal ;)