Oct 27, 2012

சின்மயி செய்தது மட்டும் சரியா?


சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜன் குறித்தான செய்திகள் இதுவரை வெளிவரவில்லை. விசாரணை என்ற பெயரில் அவரை துன்புறுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். ஆனால் இது வெறுமனே நம்பிக்கையாக மட்டுமே இருக்கக் கூடும் என்று தெரியும். ஊடகச் சுதந்திரம் என்பதெல்லாம் நம் காலத்தில் வெறும் பம்மாத்து. சாமனியனின் குரல்வளையின் மீது அதிகாரத்தின் ஆணவக் கரங்கள்  இன்னும் ஒருமுறை அழுத்தம் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.

மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் சின்மயியின் so called அபிப்பிராயங்கள் அவருக்கான கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களின் வாதங்களை ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம் அவரது கருத்துக்கள் ஒரு சாமானியனின் உணர்வுகளை சீண்டக் கூடிய தன்மயைக் கொண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனவர் பிரச்சினையிலும், இட ஒதுக்கீட்டுப்பிரச்சினையிலும் போகிற போக்கில் தத்துவ முத்துக்களை உதிர்த்து போகும் சின்மயி அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள கொள்ள முடியாமல் காவல்துறையினரை அணுகுவது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? 

ஐம்பது பைசா பெட்ரோல் உயர்வுக்கு வசைமாரி பொழியும் சமூகத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? காலங்காலமாக நசுக்கப்பட்டு வந்த இனத்தின் பிரச்சினைகளைப் பற்றி எந்தப் புரிதலுமில்லாமல் கருத்துக்களைச் சொல்லும் போது வரக்கூடிய விமர்சனங்கள் நிச்சயம் கடுமையானதாகத்தானே இருக்கும்? சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கானோர் பின்தொடரும் சின்மயி போன்ற பிரபலங்கள் எதையாவது உளறிக் கொட்டினால் எல்லோரும் அமைதியாக பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று சின்மயி நம்புவது எவ்வளவு அபத்தம்? தன் பொறுப்பற்ற தன்மை பற்றிய எந்த வருத்தமும் அல்லது குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அடுத்தவர்களைக் கை காட்டியிருக்கிறார் சின்மயி.

ராஜன் தன்னை எந்த இடத்திலும் அறிவுஜீவியாகவோ அல்லது மெத்தப் படித்த மேதாவியாகவோ  நினைத்து பேசியதாக ஞாபகமில்லை. டீக்கடையில் பேப்பர் செய்திக்கு கருத்துச் சொல்பவர் அல்லது சலூனில் கிடைக்கும் நேரத்தில் நிகழ்கால நிகழ்வுகளை விமர்சிக்கும் சாமானிய மக்களின் பிரதிநிதியாகவே தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர். அரசியல், சமூகப்பிரச்சினைகளில் நேரடியாக சலனமுறும் சாமானிய மனிதனின் கருத்துக்கள் எப்படியிருக்குமோ அதே மாதிரியானவை என்ற கோணத்தில் ராஜனின் எதிர்வினைகளை புரிந்துகொள்கிறேன்.

ராஜனின் கருத்துக்கள் பாலியல் ரீதியான வன்முறை அல்லது செக்ஸிஸ்ட்டின் தாக்குதல் என்றும் அவரை தண்டிக்க வேண்டும் என வாதிடும் சின்மயியின் ஆதரவாளர்கள் சின்மயி நிகழ்த்திய சமூகத்தின் மீதான தாக்குதலைப் பற்றி வாய் திறப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. 

சின்மயியின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஆபாச கருத்துக்களை வெளியிட்டவனை தண்டிக்கவே கூடாதா என்ற கேள்வி வரலாம். தண்டிக்கலாம். ஆனால் குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்படட்டும். விசாரணைக்கு இருதரப்பினரும் உட்படுத்தப்பட வேண்டும். குற்றம் செய்தவன் எதற்காக குற்றம் செய்தான் என்று ஆராயட்டும். குற்றவாளியைவிடவும் அவனைத் தூண்டியவனுக்கான தண்டனைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று பேசும் நாம் அதை இந்த வழக்கில் எதிர்பார்ப்போம்.

இணையதளங்களில் நிகழ்த்தப்படும் பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் தனது விவகாரத்தின் மூலமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று ஒரு பண்பலை நிகழ்ச்சியில் சின்மயி பேசினாராம்.எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதிகாரமட்டத்தின் தொடர்புகளும், சமூக அந்தஸ்தும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கம்பிக்கு பின்னால் தள்ளலாம் என்பது மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஒருவன் பாலியல் ரீதியான தாக்குதலை நிகழ்த்திவிட்டான் என்று சில ஸ்கீரின் ஷாட்களை வைத்துக் கொண்டு பிரபலமான சின்மயி புகார் அளித்திருப்பதாலேயே ஒருவனைக் குற்றவாளி என்று முடிவு செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடைத்து வைத்திருப்பது டூ மச். ப்ளீஸ் அவரை வெளியே விடுங்கள்.