Oct 26, 2012

உங்களுக்கு காகிதக் கப்பல் செய்யத் தெரியுமா?சிறுவயதில் கப்பல் செய்திருக்கிறீர்களா? கத்திக் கப்பல் செய்வீர்களா? பறக்கும் கப்பலா? ஒரு காகிதத்தை மடக்கி இப்பொழுதும் உங்களால் விதவிதமான கப்பல்களை செய்ய முடியுமா? ஞாபகம் இருக்கிறதா?

எனக்கு அத்தனையும் மறந்துவிட்டது.  மறந்து போய்விட்டது என்பது நேற்றிரவுதான் தெரியும். அதுவும் ஒரு கவிதையை வாசித்தபிறகு. 

குழந்தைகளின் உலகத்தை பற்றி எழுதப்படும் கவிதைகள் ஈர்ப்பு மிகுந்தவை. நமது குழந்தைப்பருவத்திற்கு நினைவுகளைக் கூட்டிச் செல்லும் சாத்தியங்கள் இத்தகைய கவிதைகளுக்கு உண்டு. 'சிலேட்' சிற்றிதழில் இடம் பெற்றிருக்கும் பத்மபாரதியின் கவிதையை நேற்று வாசித்தபோது அப்படித்தான் தோன்றியது.

'பறக்கும் கப்பல்' என்ற இந்தக் கவிதையை முதலில் வாசித்துவிடுங்கள். பிறகு கவிதை பற்றி கொஞ்சம் பேசலாம்.

தனது விளையாட்டு தீர்ந்துபோன
அந்தச் சிறுமிக்கு
கைகளில் வந்துசேர்ந்த
துண்டறிக்கையிலிருந்து
தட்டுத்தடுமாறிய நினைவின் வெளிச்சத்தால்
பேரழகின் பறக்கும் கப்பலைப்
பரிசளித்தான்
அவளோ
பிஞ்சுக் கரங்களில் அதை நழுவவிட்டு
அம்மாவின் தலைவருடலில்
சொக்கி உறங்கினாள்
தண்ணீரற்றுத் தத்தளித்த கப்பல்
அவள் வாயோரம் துளிர்த்த
கனவுகளின் சுவையூற்றை
துடைத்தெறிந்த கசங்கிய காகிதமானது
மறதியிலிருந்து மீண்டெழுந்த
கைலாவகம் அவனை வருத்தியிருக்கக் கூடும்
அப்போதுதான்
அவளது உறக்கத்தில் பூக்கும்
துளிர் நகையின் மின்னலென
மஞ்சாற்பட்டாம்பூச்சியது
விரைந்துகொண்டிருந்த
ரயில் ஜன்னலிலிருந்து
மிதந்து வந்து
அவள் தோளில் அமர்ந்தது.

கவிதையை பின்வருமாறு பிரித்துவிடலாம்-

1) சிறுமிக்கு விளையாட்டுகள் அத்தனையும் தீர்ந்து விட்டது. 

2) அந்தச் சிறுமிக்காக தனக்கு கிடைத்த துண்டறிக்கை காகிதத்தின் மூலமாக    கப்பலை செய்ய முயற்சிக்கிறான் ஒருவன்.

3) காகிதக் கப்பல் செய்வது அவனுக்கு மறந்து போய்விட்டது. பழைய  ஞாபகங்களிலிருந்து தட்டுதடுமாறி ஒரு கப்பலை செய்துவிட்டான்

4) அது பறக்கும் கப்பல்- பேரழகு நிறைந்தது

5) அந்தச் சிறுமியை அது அவ்வளவாக ஈர்க்கவில்லை போலிருக்கிறது. அவளது அம்மா தலை வருடுகிறாள். சிறுமி தூங்கிப்போகிறாள்

6) கப்பல் தண்ணீரற்றுத் தத்தளிக்கிறது

7) தூங்கிக் கொண்டிருக்கும் சிறுமியின் வாயில் சுரக்கும் எச்சிலை துடைத்து கப்பல் கசங்கிய காகிதமாகிவிடுகிறது

8) அந்தச் சமயத்தில் தான் கப்பல் செய்வதை மறந்து போனது குறித்தும்,  ஞாபகம் மீண்டது குறித்தும் அவன் வருந்துகிறான்

9) ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது

10) அப்பொழுது மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சி அவளது தோளின் மீது அமர்கிறது


காகிதக் கப்பல் செய்த பால்ய பருவத்தையும், இளம்பிராய ரயில் பயண நினைவுகளையும் இந்தக் கவிதை எளிதில் மீட்டுவிடுகிறது.

சிறுமிக்கும் அவனுக்குமான உறவு கவிதையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கிடையேயான உறவை ஒரு ரயில் ஸ்நேகமாக புரிந்து கொள்கிறேன். ரயிலில் பார்க்கும் ஒரு சிறுமிக்காக கப்பலை செய்து கொடுக்கிறான்- அந்த நிகழ்வைச் சுற்றிய சில காட்சிகள் கவிதையாக்கபட்டிருக்கிறது. இது நேரடியான -கதைத்தன்மையுடன் முடியும் கவிதை. இதிலிருந்து வாசகனுக்கான திறப்புகளை உருவாக்குகிறது. 

கவிதையில் இடம்பெறும் அந்தப்பட்டாம்பூச்சி எதைக் குறிப்பிடுகிறது? அது ஏன் அவளது தோளில் ஒட்டுகிறது? 

ஒரு இலை விழுவதைக் கூட இயற்கையின் ஆசிர்வாதம் என்று எடுத்துக்  கொள்ளும் எனக்கு ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்கிறது என்னும் காட்சி ஆன்மிக மனநிலையை உருவாக்குகிறது. இயற்கை தனது பேரன்பினால் அந்தச் சிறுமியை ஆசிர்வதிக்கிறது அல்லது வெகுளித்தன்மை மிகுந்த அந்த தேவதையிடம்  பட்டாம்பூச்சியை அனுப்பி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கிறது.

அவன் செய்து கொடுத்தது பறக்கும் கப்பல்? அது ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும்? பறந்துவிடலாமே. அந்தக் கப்பல் ஏன் எச்சிலில் நனைந்து கசங்கிக் போகிறது? உண்மையிலேயே கவிதையில் இடம் பெறும் கப்பல் கப்பலைத்தான் குறிப்பிடுகிறதா அல்லது வேறு ஏதேனும் ஒன்றுடன் பொருத்தி வாசிக்க முடியுமா? இந்த அத்தனை கேள்விகளுக்கும் வாசகன் தனது அனுபவத்திலிருந்து பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ரசனையின் அடிப்படையில் அணுகினால் எப்படியும் பதிலைப் பெற்றுவிடலாம்.

சொற்பிழை, பொருட்பிழை கண்டுபிடிக்க வேண்டும் அணுகினால் பறக்கும் கப்பல் ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும் - இது அபத்தம் என்று குற்றஞ்சாட்டலாம். நான் பெரும்பாலும் கவிதையை ரசனையின் அடிப்படையிலேயே அணுகுகிறேன். எனவே இதற்கு என்னிலிருந்தே விடை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.

வெறும் ரயில் ஸ்நேகம் என்பதோடு நில்லாமல் உறவுகள் பற்றிய சிந்தனையையும் கூட இந்தக் கவிதையால் கிளற முடியும். பெரும்பாலான உறவுகள் ‘ஷார்ட்டேர்ம்’ ஆனவை.  உறவுகள் எப்பொழுதும் மேகங்களைப்போல கடந்து கொண்டேயிருக்கின்றன. சில மேகங்கள் ஸ்நேகத்துடன் உரசுகின்றன. சில மேகங்கள் தூரத்தில் புன்னகைத்து விலகுகின்றன. சில மேகங்கள் இடியென மோதுகின்றன. இந்தக் கவிதையில் இடம் பெறும் ஸ்நேகமும் ஒரு மேகமென உரசிப்போகிறது. சிறுமி விழிக்கும் போது அவன் இறங்கி போயிருக்கக் கூடும். இழந்துவிட்ட நட்புகளையும், உறவுகளையும் பற்றி சில கணங்கள் வருந்திவிட்டு அடுத்த வேலையை நாம் பார்ப்பது போலவே அவளும் ஒரு வினாடி யோசித்துவிட்டு அடுத்த வேடிக்கையைத் தொடர்வாள்.

(புரிவோம்)