விடுமுறைகளை உருப்படியாக பயன்படுத்துவதில்லை என்ற ஃபீலிங்க்ஸ் விடுமுறைக்கு அடுத்த நாள் காலையில் பற்பசை பிதுக்குவதில் ஆரம்பித்து அலுவலகம் கிளம்புவதற்கு பைக்கை உதைக்கும் வரை அரித்துக் கொண்டிருக்கும். அடுத்த விடுமுறை வரட்டும் உருப்படியாக்கிக் கொள்ளலாம் என்று ஆறுதல்படுத்திக் கொள்வதுண்டு. அடுத்த விடுமுறையும் கசகசத்துத்தான் போகும். ஃபீலிங்க்ஸ் வருவதும் ஃபீனிக்ஸாக மீள்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இன்று ஆயுத பூஜை விடுமுறை. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என போன வாரமே கங்கணம் கட்டியிருந்ததால் மகனை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் மியூஸியத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தேன். அவனுக்கு மூன்று வயது ஆகிறது. அவனுக்கு ராணுவம் பற்றிய சில அடிப்படைகளைச் சொல்லிவைத்திருக்கிறேன். ஆர்மிக்காரங்க துப்பாக்கி வைத்து சண்டையிடுவார்கள், ஏர்ஃபோர்ஸ்க்காரங்க விமானத்தில் பறந்து குண்டு போடுவார்கள், நேவிக்காரங்க கப்பலில் சென்று சண்டை நடத்துவார்கள் என்று திருப்பிச் சொல்வான்.
நேற்றிரவிலிருந்தே "உனக்கு மியூஸியத்தில் ஹெலிக்காப்டர், ஏரோப்ளேனையெல்லாம் காட்டப்போகிறேன்" என உசுப்பேற்றிவிட்டிருந்தேன். மிகுந்த உற்சாகமாகியிருந்தான். எப்பொழுதும் தொட்டிலில் படுத்துதான் உறங்குவான். "நீ பெரியவன் என்று நிரூபித்தால்தான் நாளைக்கு ஏரோப்ளேனுக்குள் ஏறிப்பார்க்க அனுமதிப்பார்கள். அதற்கு நீ கட்டிலில்தான் தூங்க வேண்டும்" என்று சொல்லியிருந்தேன். எந்தவித மறுப்புமில்லாமல் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
இன்று காலை நான்கு மணிக்கு எழுந்து மூக்குக்குள் விரலை விட்டான். என்னமோ ஏதோ என்று பதறியடித்து எழுந்தேன். “அப்பா மியூஸியத்திற்கு போலாம்” என்றான். ஜன்னல் திரையை விலக்கிக் காட்டி இன்னும் விடியவில்லை என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ஒன்பது மணி வரைக்கும் அதிகபட்சம் சமாளிக்க முடிந்தது. அதற்கு மேல் ஹை டெசிபிலில் நச்சரித்தான்.
ஒரு பையில் பிஸ்கட், தண்ணீர் பாட்டில், அவனுக்கு ரெயின் கோட் என அத்தனையும் தூக்கிக் கொண்டு நானும் அவனும் மட்டும் கிளம்பினோம்.
மியூஸியம் வரத்தூர் சாலையில் இருக்கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கு விமானவியலை புரிந்துகொள்ள இது ஒரு முக்கியமான மியூஸியம். 1940களில் HAL நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரைக்குமான பல நிழற்படங்களையும், சில விமான மாடல்கள், விமானத்தின் இயந்திரங்கள், ரேடார் போன்றவை காட்சிப்பொருளாக்கப்பட்டிருக்கின்றன.
"இந்த ஏரோப்ளேன் எல்லாம் வெச்சுத்தான் ஏர்போர்ஸ்காரங்க சண்டை போடுவாங்களா?" என்றான். "ஆமாம்" என்றேன்.
மகி மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தான். பிஸ்கெட், தண்ணீர்ப்பாட்டில்கள் அவனுக்குத் தேவைப்படவில்லை. சிறிய விமானத்தின் சக்கரங்களை சுற்றிக் கொண்டிருந்தவனிடம் ஒரு குளத்தில் மீன் இருக்கிறது என்றேன். அதே வளாகத்தில் இருக்கும் சிறு குளத்தில் மீன்களை வளர்க்கிறார்கள். மீன்களை நோக்கி ஓடி வந்துவிட்டான். அத்தனை பெரிய உருவமுடைய வண்ண மீன்களை இப்பொழுதுதான் பார்க்கிறேன். விமானங்கள், ராக்கெட்கள் எல்லாம் மீன்களிடம் தோற்றுக் கொண்டிருந்தன.
"இந்த மீன்களை சாப்பிடலாமா அப்பா" என்றான். சம்பந்தமேயில்லாமல் சின்மயி விவகாரம் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. அந்த மியூஸியத்தை விட்டு மகியை கிளப்புவது பெரிய சிரமமாகிவிட்டது. எதையோ சொல்லி அழைத்து வந்து பைக்கில் ஏற்றினேன்.
"அப்பா எனக்கு துப்பாக்கி வாங்கித் தாங்க" என்றான். "எதுக்குடா தங்கம் " என்றதற்கு "எனிமிஸ் எல்லாம் சுடப்போறேன்" என்றான்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் குறளை ஆத்தா சொல்லித்தந்திருக்காங்க இல்ல? யாரையும் சுடக்கூடாது" என்றேன்.
ஒரு செகண்ட் கூட யோசிக்காமல் "ஆத்தா ஏன் இன்னா செய்தாரை குறளை இந்த ஆர்மிக்காரங்ககிட்ட சொல்லித்தரலை?" என்றான்.
என்னிடம் பதில் இல்லை. "பசிக்குதாடா" என்று பேச்சை மாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
5 எதிர் சப்தங்கள்:
:)
கலக்கல் :))
கதையின் முடிவை எட்டுவதில் சிறு குழப்பம்.... இருவரில் யார், யாருக்கு பாடம் புகட்டினீர்கள் !
Good, Now the days kids are very smart than us. So we should be very careful with them ;-)
Ka c sivkkumar
Unga munnodi sir
Avrin
Athimangalathu viseasangal padithu paarungasir...
Post a Comment