Oct 22, 2012

நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்ஒரு பொதி நெல் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்ற காலம் அது. அப்பொழுது ஒரு பவுன் தங்கம் கூட எண்பத்தைந்து ரூபாய்தான். அந்தக்காலத்தில் நடுப்பாளையம் ஜமீன் என்றால் சுற்று வட்டாரப்பகுதிகளில் பயங்கர மரியாதை. ’பயங்கர’ என்பதை பயம் கலந்து என்றும் வாசிக்கலாம். நடுப்பாளையத்திற்கு அப்படியொரு பெயர் எதனால் வந்தது என்று தெரியவில்லை. முன்பு ஏதாவது இரண்டு முக்கியமான ஊர்களுக்கு நடுவில் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது வரிசையாக ஊர்களும், ரியல் எஸ்டேட் நகர்களும் உருவாகிவிட்டதால் தொடக்கம், நடு, முடிவு எதுவுமில்லாத நம்பியூர்- கோபி சாலையில் அதுவும் ஒரு ஊர் அவ்வளவுதான். 

ஏகப்பட்ட வயல்களை தன் பெயரில் வைத்திருந்த ஜமீனின் களத்தில் எப்பொழுதுமே சில நூறு பொதி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பசி என்று யார் வந்து கேட்டாலும் அள்ளிக் கொடுத்துவிடும் ஜமீன் கடன் என்று யாராவது கேட்டால் மட்டும் அவர்களின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வதுண்டு. இருநூறு ரூபாய்க்கு கூட முப்பது ஏக்கர் வயலை ஜமீன் பெயருக்கு தாரை வார்த்தவர்கள் இருக்கிறார்கள். பெயர் மாற்றம் மட்டும்தான் நடந்திருக்கும் மற்றபடி விற்றவரே சாகும் வரைக்கும் சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம். அடுத்தவருக்கு விற்கவோ அல்லது வாரிசுகளுக்கு பங்கு பிரித்தோ தர முடியாது.

அளுக்குளி, குருமந்தூர்,கரட்டுப்பாளையம் என சுற்றுவட்டார ஊர்களுக்கும் ஜமீன் தான் நாட்டாமை. இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வெற்றிலை பாக்கு கொட்டித்தரும் தம்பி பண்டாரத்தை பின்னால் ஏற்றிக் கொண்டு ராஜ கம்பீரத்துடன் போகும் ஜமீன் ஒரு பிரிட்டிஷ்காரன் கொடுத்துச் சென்ற துப்பாக்கியை வண்டியில் வைத்திருப்பார். அது சுடுமா என்பது பற்றி யாரும் யோசித்தது இல்லை. ஆனால் ஊரார்கள் அதற்கு பயந்தார்கள். பஞ்சாயத்தில் ஒத்துவராத யாரையும் ஜமீன் அவராக கொன்றதில்லை. ‘அவராக’ என்பதை அழுத்தம் கொடுத்து வாசியுங்கள். கூட்டத்தில் நிற்பவர்களிடம் கண்ணசைவைக் காட்டிவிட்டு சாரட் ஏறிவிடுவார். அப்புறம் ஒத்துவராதவரைக் காணவில்லை என்று கிசுகிசுத்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

பெரும்பாலான ஜமீன்களைப் போலவே நடுப்பாளையம் ஜமீனும் பெண்கள் விஷயத்தில் வீக் தான். ஊருக்குள் நிறைய தொடுப்புகள் உண்டு. கவுண்டர், நாயக்கர், சக்கிலியர் என்று பெண்களில் சாதிப்பாகுபாடுகள் பார்ப்பதில்லை. மிரட்ட வேண்டிய பெண்களை மிரட்டியும், பணத்தை காட்ட வேண்டிய பெண்களுக்கு பணத்தை காட்டியும், இன்னும் சிலரைக் கொஞ்சியும் என ஏதாவது ஒரு வகையில் வழிக்கு கொண்டு வந்துவிடுவார். ஊருக்குள் இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் இவரது வீக்னெஸ் தெரியும் என்றாலும் ஒவ்வொரு அப்பனும் தன் மகள் ஜமீனின் வாசம்படாதவள் என்று நினைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு கணவனும் தன் மனைவி தனக்கு மட்டுமே என்று நம்பினார்கள்.

ஜமீனுக்கு கல்யாணமும் இல்லை வாரிசும் இல்லை. பொழுது சாய்ந்துவிட்டால் அவரது தொட்டிக்கட்டு வீடு ஜொலிக்க ஆரம்பித்துவிடும். வெளியூர் ஆட்டக்காரிகளை ரசிப்பதற்கு ஆண்கள் கூடிவிடுவார்கள். ரங்கா வளையன் காய்ச்சிய சாராயத்தின் நெடியும், ராசு நாயக்கனின் கறிக்குழம்பும் மூக்கைத் துளைக்கும். ஆட்டம்பாட்டம் தூள் கிளப்பும். சில மணி நேரத்திற்கு பிறகு மற்ற ஆண்களை வெளியே அனுப்பிவிட்டு கதவைப்பூட்டிவிடுவார்கள். ஜமீனோடு இருப்பதற்கு தம்பிப்பண்டாரத்திற்கு மட்டும் அனுமதியுண்டு. அடுத்த சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து ஆட்டச்சத்தம் கேட்கும். இப்பொழுது ஆட்டக்காரிகள் நிர்வாணமாக ஆடிக் கொண்டிருப்பார்கள் என்று வெளியே பேசிக் கொள்வார்கள்.

ஜமீனுக்கு வேட்டுவக்கவுண்ட பெண்களோடு மட்டும் தொடர்பு இல்லை என்று பேச்சு உண்டு. வெள்ளாளக்கவுண்டனுக்கும் வேட்டுவக்கவுண்டனுக்கும் காலங்காலமாக ஆகாது என்பது ஒரு புறம் இருந்தாலும் ஜமீனுக்கு வேட்டுவர்கள் மீது தொடக்கத்தில் இருந்தே வெறுப்புதான். இதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதில்லை. வேட்டுவர்களும் தங்கள் சாதியினருக்குள் நடக்கும் பிரச்சினைகளின் பஞ்சாயத்துக்கு ஜமீனிடம் வருவதில்லை. வேட்டுவர்களுக்கும் பிறசாதியினருக்கும் வந்த ஒரு சில பஞ்சாயத்துகளில் ஜமீன் எப்பொழுதுமே வேட்டுவர்களுக்கு எதிரான தீர்ப்புகளைத்தான் சொல்லியிருக்கிறார். தீர்ப்பை எதிர்த்து பேசிய வேட்டுவர்களுக்கு அதே ‘கண்ணசைவு’தான். அப்புறம் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த நடுப்பாளையத்திற்குத்தான் பஞ்சம் பிழைப்பதற்காக ஆயிபாளையத்திலிருந்து ராமாயியும் அவளது அப்பன் ராம வேட்டுவனும் வந்தார்கள். ராமாயி அழகு தேவதை. அவள் ஊருக்கு வந்தவுடன் இளவட்டங்கள் உற்சாகமானார்கள். ஊருக்குள் ஒவ்வொரு ஆணும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளை பார்த்துவிட விரும்பினார்கள்.வறுமை அவளது உடைகளில் மட்டும்தான் தாண்டவமாடியது. அந்தத் தாண்டவமும் விடலைகளுக்கு விருந்து படைத்தது. கிணற்று மேட்டில் அவள் குளிக்கும் போது ஈர உடையோடு கால்களை பின்னிக் கொண்டு அவள் நடந்துவரும் போது பெண்கள் மிக அவசரமாக தங்களது கணவன்மார்களின் கவனத்தை திசைதிருப்ப போராடினார்கள். ஆண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். 

நடுப்பாளையத்தைச் சேர்ந்த பெரிய வேட்டுவன் தன் மகனுக்கு ராமாயியை கட்டி வைத்துவிட விரும்பினார். ராம வேட்டுவனிடம் அவளது மகளைக் கேட்டபோது அவர் மறுப்பெதுவும் சொல்லவில்லை. ராமாயியும் திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட்டாள். பெரிய வேட்டுவனின் மகன் தலைகால் புரியாமல் குதித்தான். உலகமே அவனது காலுக்குக் கீழாக உருளுவதாகத் திரிந்தான். வைகாசியில் திருமணத்திற்கு நாள் குறித்து ஊராரை அழைக்கத் துவங்கிவிட்டார்கள். குமரா நாசுவன்தான் வெளியூர்களுக்கு அழைப்பு சொல்லச் சென்றான். பெரிய வேட்டுவனின் வீடு களைகட்டியது.

ஒவ்வொரு வருடமும் சித்திரை பெளர்ணமிக்கு ஊரே நடுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் கூடுவார்கள். திருவிழாவெல்லாம் இல்லை. விடியும் வரைக்கும் கூத்தும் ஆட்டமுமாக கொண்டாடுவார்கள். இந்த வருட கொண்டாட்டத்திற்கு ஜமீன் கோயிலுக்கு வரவில்லை. யாரும் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்த குமரா நாசுவன் கோயில் திண்ணையில் அமர்ந்திருந்த பெரிய வேட்டுவனின் காதுக்குள் கிசுகிசுத்தான். பெரிய வேட்டுவனிம் முகம் மாறியது. அவன் மட்டும் வேகமாக கிளம்பினான். 

நேராக ஜமீன் வீட்டுக்குச் சென்ற வேட்டுவன் கதவைத்தட்டினான். தம்பிப்பண்டாரம்தான் கதவைத் திறந்தான். பெரிய வேட்டுவன் வீட்டிற்குள் நுழையவும் ராமாயி புடைவையைச் சுருட்டிக் கொண்டு வெளியே ஓடவும் சரியாக இருந்தது. வேட்டுவனுக்கு கோபம் உச்சிக்கேறியது. ஜமீன் வேட்டியை சரி செய்து கொண்டே பல்லிளித்தான். பெரிய வேட்டுவன் ஏதோ கேள்வி கேட்க முயல ஜமீன் அவனது கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான். தம்பிப்பண்டாரம் கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டான். 

அடுத்த நாள் காலையில் ராமாயியின் தலை ஊர்ப் பஞ்சாயத்து நடக்கும் ஆலமரத்தின் கீழே தனியாகக் கிடந்தது. உடல் பற்றிய துப்பு எதுவும் இல்லை. ஊராருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. குமரா நாசுவன் மட்டும் யூகித்துக் கொண்டான். ராமாயி கொல்லப்பட்ட தகவலைக் கேள்விப்பட்ட ஜமீன் மிகுந்த கோபமடைந்திருந்தான். பெரிய வேட்டுவனைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அன்றைய தினம் ஜமீனின் வீட்டில் சாராய நெடி மட்டும் வீசியது வெளியூர் ஆட்டக்காரிகளின் ஆட்டம் எதுவும் நடக்கவில்லை. நேரத்திலேயே விளைக்கை அணைத்துவிட்டார்கள். 

இரண்டாம் ஜாமம் தாண்டியிருக்கும். ஜமீன் மிகுந்த போதையில் கிடந்தான். தம்பிப்பண்டாரமும் சுயநினைவு இல்லாமல் கிடந்தான். ஜமீன் வீட்டின் மீது ஏறிய பெரிய வேட்டுவன் வில்லை ஓடுகளை பிரிக்கத்துவங்கினான். ஓட்டுத்தூசிகள் ஜமீனின் முகத்தில் விழுந்தது. ஜமீன் அசைவதாகத் தெரியவில்லை. ஓடுகளை பிரித்து மூங்கில்களை அசைத்த போது நிலா வெளிச்சத்தில் ஜமீனின் முகம் தெளிவாகத் தெரிந்தது. ஜமீன் கொஞ்சம் கண்களை நெரித்தான். கொண்டு வந்திருந்த குத்தீட்டியை ஜமீனின் கழுத்துக்கு நேராக பெரிய வேட்டுவன் குறி வைத்தான். தம்பிப்பண்டாரத்திற்கு ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக கனவு வர அவசரமாக எழுந்தான். ஜமீனின் அறைக்கு அருகே வந்தான். கதவைத் தட்டுவதற்கு எத்தனித்தான். பெரிய வேட்டுவன் அதிகம் சிரமப்படவில்லை. குத்தீட்டி ஜமீனின் குரல்வளையை துளைத்திருந்தது. பண்டாரம் கதவைத் தட்டத்துவங்கினான். வேட்டுவன் கீழே இறங்கினான். நாய் குரைத்துக் கொண்டிருந்தது. நிலா வெளிச்சத்தில் வீதிகள் பிரகாசமாக தெரிந்தன.

9 எதிர் சப்தங்கள்:

Uma said...

இது கதையா,, இல்லை நிஜமா.. அப்படி ஒரு தோற்றத்தை கொண்டு வந்துவிட்டீர்கள்!

வா மணிகண்டன் said...

நன்றி உமா.

எங்கள் ஊர்ப்பக்கம் வீட்டின் வில்லை ஒட்டுகளை பிரித்து ஒருவரை குத்தீட்டியால் கொன்றார்கள் என்பது மட்டும் உண்மை. கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவரது சாதி, அவர் ஜமீன் என்பது, அவரது கேரக்டர், கொலைக்கான காரணம் என அனைத்தும் புனைவு.

திண்டுக்கல் தனபாலன் said...

காட்சிகள் கண் முன் தெரிந்து பயமுறுத்தின...

நம்பியூர் என்றவுடன் அங்கு நான்கு வருடம் இருந்த ஞாபகம் வந்தது... (மில்லில்)

நன்றி...

அகல்விளக்கு said...

அற்புதம் தலைவா...

மிகச்சாதாரணமாக உள்ளிழுத்துக்கொண்டது உங்கள் எழுத்துநடை...

Anonymous said...

யப்பா...இன்னா எழுத்துபா...தூள்!

Anonymous said...

How many kilos is ஒரு பொதி நெல்?

Maha said...

கிணற்று மேட்டில் அவள் குளிக்கும் போது ஈர உடையோடு கால்களை பின்னிக் கொண்டு அவள் நடந்துவரும் போது பெண்கள் மிக அவசரமாக தங்களது கணவன்மார்களின் கவனத்தை திசைதிருப்ப போராடினார்கள். ஆண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்....................................................... அழகான சொல்லாடல். இயல்பான வரிகள், திரையில் ஒரு நிமிடம் ஜமீன் வந்து சென்றார். தொடருங்கள் இது போன்ற கிராமத்து கதைகளை. நன்றி.

Tamil Advertisements said...

மிகவும் அழகான ஒரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி.

வா மணிகண்டன் said...

4 படி=1 வல்லம், 24 வல்லம்= 1மூட்டை, 4 மூட்டை= 1 பொதி.

(இப்பொழுது நான்கு 65 கிலோ மூட்டைகள் ஒரு பொதி)