Oct 15, 2012

சுத்தி...சுத்தி...வேட்டைநாய்கள்
நேற்று மழை. பேய்மழை. சேலத்தில் இருந்து பெங்களூரை அடையும் போது பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியிருக்கும்.  நடப்பது பிரச்சினையில்லை. ஆனால் பயமூட்டக் கூடிய விஷயம்- இந்தப் பாதையில் வீடுகள் அதிகம் இல்லை. திருடர்களின் மீதான பயம் ஓரத்தில் இருந்தாலும் நாய்களின் மீதான பயம்தான் என்னை முழுவதுமாக கவ்வியிருந்தது. அந்த ஏரியாவை தங்களைவிட்டால் காவல் காக்க ஆளில்லை என்பது போல தெருநாய்கள் செய்யும் அழிச்சாட்டியம் டூ மச்.

தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க சில உபாயங்களை கண்டறிந்து வைத்திருக்கிறேன். முடிந்தவரை செருப்பு நிலத்தில் உரசும் சத்தம் கேட்காமல் நடப்பது, நடக்கும் போது கைகளை கட்டிக் கொள்ளாமல் அல்லது பாக்கெட்களில் நுழைத்துக் கொள்ளாமல் இருப்பது, வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடக்கக் கூடாது. மித வேகத்தில் நடக்க வேண்டும் அதே சமயம் நாய்கள் இருப்பது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இல்லை என்ற பாவனையில் நடிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாதபட்சத்தில் குனிந்து கல்லை எடுப்பது போல ‘ஆக்‌ஷன்’ செய்ய வேண்டும்.  பெரும்பாலான தெருநாய்கள் தாங்கள் குட்டியாக இருந்த
காலத்தில் இருந்தே கல்லடி வாங்கி வளர்ந்தவை என்பதால் கல்லுக்கு பயப்படாத தெருநாய்கள் மிக அரிது. இத்தனையும் மீறி குரைத்துக்கொண்டு வந்தால் எனக்கு வழி தெரியாது. பாடிகாட் முனீஸ்வரன் காப்பாற்றுவார் என நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்று பஸ்ஸை விட்டு இறங்கியதுமே சில கற்களை பொறுக்கி கைகளில் வைத்துக் கொண்டேன். கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். பின்னால் நான்கு இளைஞர்கள் நடந்துவந்தார்கள். நான்கு பேருக்கும் இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். சினிமா பார்த்துவிட்டோ அல்லது வேறு எங்கிருந்தோ வருகிறார்கள். அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.  இவர்கள் இருப்பதால் நாய்களிடம் இருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என்பதால் கற்களை கீழே போட்டுவிட்டேன். அவர்களுக்கும் எனக்கும் தூரம் ஒரே அளவில் இருக்கும் படியாக வேகத்தை குறைத்தும் அதிகரித்தும் நடந்தேன்.

பாதி தூரம் நடந்த பிறகு ஒருவன் எனக்கு முன்பாக வந்து “அண்ணய்யா” என்றான். அவனை பார்த்தேன். கன்னடத்தில் ஏதோ கேட்டான். வழி கேட்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. “கொத்தில்லா” என்றபடியே மெலிதாக சிரித்துவிட்டு நகர்ந்தேன். இப்பொழுது நான்கு பேரும் அருகில் வந்திருந்தார்கள்.

ஒருவன் பணம் வேண்டும் என்றான். ஏன்? எதற்கு? என்று கேட்பதில் அர்த்தமில்லை என்று தெரியும். “பணம் இல்லை” என்றேன். பர்ஸைக் கொடு என்றான். அவன் கேட்டதில் எனக்கு கடன்காரன் கடனாளியிடம் கேட்பது போன்ற தொனி இருந்தது. பர்ஸ் இல்லை என்றேன். சட்டைப் பாக்கெட்டில் எழுபது ரூபாய், பேண்ல் பாக்கெட்ட்டில் இருநூற்றுச் சொச்சம் இருந்தது. பஸ்ஸில் வரும்போது தூங்குவதற்கு வசதியாக பையில்  மறைவாக இருக்கும் ‘ஜிப்’புக்குள் பர்ஸை வைத்திருந்தேன்.

எனது பையை காட்டச் சொன்னான். ஜூனியர்விகடன், டைம்பாஸ், கல்கி தவிர எதுவுமில்லாத பை அது. பையிலிருந்த இன்னொரு ‘ஜிப்’பை திறந்து காட்டச் சொன்னான். அதில் மொபைல் சார்ஜர் மட்டும் இருந்தது. அதையும் வாங்கிக் கொண்டான். மறைவாக இருந்த ஜிப் அவன் கண்ணுக்கு படவில்லை. பாக்கெட்களில் இருந்த பணத்தை எடுத்துக் காட்டினேன். கையில் இருந்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டார்கள். கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி அடிக்கப்பட்ட கொள்ளை அது.

நான் போகிறேன் என்றேன். கையை ஓங்கிக் கொண்டு வந்தான் இன்னொருவன். அறைந்துவிடுவான் என்று நினைத்தேன். அடிக்கவில்லை. போய்விடு என்றான். எதுவும் காட்டிக் கொள்ளாமல் நகர்வதைத் தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

என் மீதான வன்முறைக்கு எந்த பதிலடியும் தரவியலாத கையலாகாததனம் வேதனைக்குள்ளாக்கியது. வேட்டையாடபட்ட மனநிலையில் இருந்தேன். நூறு ரூபாய்க்கு ஒரு பொம்மை கேட்டான் என்பதற்காக மகனை கடிந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்து எனது வேதனையில் பெட்ரோலை ஊற்றியது.

வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு திருப்பத்தில் நாய்கள் குரைத்துக் கொண்டு வந்தன. மனித நாய்களுக்கு இவை பரவாயில்லை என்று தோன்றியது. அவை பரிதாபகரமானவையாகத் தோன்றின. இப்பொழுது அந்த நாய்களை அடிப்பதற்காக குனிந்து கல்லை எடுக்கவில்லை.