Oct 31, 2012

Site for Sale @ செவ்வாய்நிலவில் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று தெரியும். இரண்டாவதாக வைத்தவர்? ஆல்ட்ரின். இவர்களோடு இன்னொருவரும் சென்றிருந்தார். அவர் மைக்கேல் காலின்ஸ். மற்ற இருவரும்தான் நிலவில் கால் பதித்தார்கள். காலின்ஸ் விண்கலத்தைவிட்டு இறங்கவே இல்லை. அவர் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்கக் கூடும். ஆக்ரா போய்விட்டு தாஜ்மஹாலுக்கு போகாதது மாதிரி.

அப்பல்லோ-11 விண்கலத்திற்குள் மூன்று வீரர்களும் தயாரான பிறகு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்து ராக்கெட் பறந்தது. அது 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள். நான்கு நாட்கள் பயணித்த பிறகு நிலவை நெருங்கும் நேரத்தில் அந்த இடம் அபாயகரமானது என்பதை மூவரும் உணர்ந்தார்கள். விண்கலம் வெடித்து சிதறிவிடவும் வாய்ப்பிருந்தது. அதுவரை ஆட்டோமேட்டிக்காக இயங்கிய விண்கலத்தின் கட்டுப்பாட்டை உடனடியாக ஆம்ஸ்ட்ராங் எடுத்துக் கொண்டார். நிலவை அடைவதற்காக குறிக்கப்பட்டிருந்த நேரத்தை விடவும் இழுத்துக் கொண்டிருந்தது. பூமியில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் பதறத்துவங்கினார்கள். "30 வினாடிகள்" என்று அறிவித்தார்கள். இறங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் இன்னும் முப்பது வினாடிகளில் தீர்ந்துவிடும் என்பது அதன் அர்த்தம். விரல்களை கொறித்துக் கொண்டிருந்தார்கள். ஆம்ஸ்ட்ராங் திறமைசாலி. வெற்றிகரமாக விண்கலத்தை நிலவில் இறக்கினார். ஆறு மணி நேரத்திற்கு பிறகு ஆம்ஸ்ட்ராங் தனது பாதங்களை நிலவில் பதித்தார். அமெரிக்க கொடியையும் பறக்கவிட்டார்.

தெரியாத ஊருக்கு போனாலே திகில் கிளம்புகிறது. இதுவரை யாருமே போகாத ஊருக்கு, அதுவும் பூமியைத் தாண்டி அந்நிய கிரகத்திற்கு ஒரு மனிதனை அனுப்பி வைத்தால் அவருக்கு அடிவயிறு கலங்கித்தானே போகும். கிளம்பும்போது ஆம்ஸ்ட்ராங்கின் இதயத்துடிப்பு 110 என்று தாறுமாறாக எகிறியது. நிலா எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்ததால் ஏதோ பக்கத்து ஊருக்கு போய்வருவது போல கொடியை நட்டிவிட்டு வந்துவிட்டார்கள். கொடி நட்ட விரும்பும் ஒவ்வொரு கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்புவது என்பது சாத்தியம் இல்லை. மனிதனை வேற்றுகிரகங்களுக்கு அனுப்புவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 

பூமிக்கு பக்கத்தில் இருக்கும் கோள் செவ்வாய். இங்கிருந்து வெறும் கண்ணால் பார்த்துவிடும் தூரம்தான். ஜஸ்ட் ஐம்பத்தாறு கோடி கிலோமீட்டர்கள். பக்கத்தில்தான் என்றாலும் செவ்வாய் கிரகத்துக்கு போய்ச்சேர எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் பிடிக்கும். அங்கு கொஞ்சம் நாட்கள் தங்கி ஆராய்ச்சியெல்லாம் செய்துவிட்டு திரும்பவும் பயணிக்க வேண்டும். மொத்தமாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும். கூட அத்தனை நாட்களுக்கு மனிதர்களை அனுப்பிவைத்தால் குறைந்த புவியீர்ப்புவிசை, காஸ்மிக் கதிர்களின் தாக்கம், மனரீதியிலான சிக்கல்கள் என்று ஒரு வழியாக்கிவிடும்.

பல வருடங்களாகவே செவ்வாய் பற்றிய பல கதைகளும் கற்பனைகளும் றெக்கை கட்டி பறக்கின்றன. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறது, ஆக்ஸிஜன் இருக்கிறது, உயிரினங்கள் வாழ்கின்றன, நாமும் 'ப்ளாட்' போட்டு விற்றுவிடலாம் என்று ஆளுக்கு தகுந்த மாதிரி ஒரு கதை சொல்லி வந்தார்கள். சாதாரண ஆட்களே கதை சொல்லும் போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'க்காரன் சும்மா இருப்பானா? செவ்வாயை ரவுண்டு கட்டி ஆராய்கிறான். ரோபோக்களை அனுப்பி.

ஆமாம். விண்வெளி மற்றும் பிற கோள்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஸ்பேஸ் ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். விண்வெளி ஆய்வு வீரர்களை 'ஆஸ்ட்ரோனாட்' என்று அழைப்பதால் இந்த ரோபோக்களுக்கு 'ரோபோனாட்' என்றுபெயர். செவ்வாய் கிரகத்தை இந்த ரோபோக்கள்தான் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. மற்ற எந்த ரோபோக்களையும் விட விண்வெளி ரோபோ வடிவமைப்பும் சவால்கள் நிறைந்தது. 

விண்வெளியில் வெப்பநிலை தாறுமாறாக ஏறி இறங்கும் என்பதால் அதற்கேற்ற உலோகத்தில் ரோபோனாட் வடிவமைக்கப்படுகிறது. ரோபோவின் உடல் அலுமினியத்தாலும் கைகள் இரும்பினாலும் செய்யப்படுகிறது. வேற்றுகிரகங்களில் புழுதிப்புயலுக்கு வாய்ப்பு அதிகம். அந்தச் சமயங்களில் மண்ணோ கல்லோ ரோபோவின் உடலுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதும் அவசியம் எனவே உலோக உடலமைப்பின் மீது கதிரியக்கதை தாங்கும் படியும், நெருப்பு பற்ற முடியாத, அந்நியத் துகள்களை அனுமதிக்காதவாறு துணி (Fabric)சுற்றப்பட்டுவிடும். இது ரோபோனாட்டுக்கு விண்வெளி வீரரைப் போன்ற ஒரு 'லுக்' கொடுத்துவிடுகிறது. 

செவ்வாய் கிரகத்துக்கு ரோபோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவை மனித வடிவில் இல்லை. இந்த தரையுலவி(Rover)கள் 'பாடி'கட்டாத லாரியைப் போலத்தான் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்திலோ அல்லது நிலவிலோ நில அமைப்பு குண்டு குழியுமாக இருக்கும். எனவே ரோபோ நகரும் போது குட்டிக்கரணம் அடித்துவிடாதபடிக்கு வடிவமைப்பதும் மிக முக்கியம். காற்றின் வேகத்தை அறிவதிலிருந்து, வெப்பநிலை, நில அமைப்பு என பலவற்றையும் உணர்ந்துகொள்ளும் படி நூற்றுக்கும் மேற்பட்ட சென்சார்கள் ரோபோவின் உடல் முழுவதும் தேவைப்படும்.  மின்சாரம் வேண்டுமே? புளூடோனியம்-238 போன்ற கதிரியக்கப் பொருளை ரோபோவில் வைத்துவிடுவார்கள். இந்த கதிரியக்கத்தின் மூலம் உருவாகும் வெப்பம்தான் ரோபோவுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு குட்டி அணு உலை. இவ்வாறு சென்சார்கள், குட்டிக் கம்ப்யூட்டர், கதிரியக்கத்தை ஆற்றலாக மாற்றும் ஜெனரேட்டர் என சகலத்தையும் இந்த ரோபோ சுமந்து செல்லும். 

மேற்சொன்னவையெல்லாம் ரோபோ இயங்குவதற்கான அமைப்புகள். போன இடத்தில் கொடுத்த வேலையைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக காமிராக்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் என இன்னும் சில பல ஐட்டங்களும் ரோபோவுக்குள் அடக்கம். முட்டுச்சந்தில் நின்றால் கூட மொபைல் போனில் சிக்னல் இல்லை என கதற வேண்டியிருக்கிறது. பலகோடி மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ள எத்தனை சக்திவாய்ந்த கம்யூனிகேசன் சிஸ்டம் தேவைப்படும் என்பதை ஒரு வினாடி யோசித்துப்பாருங்கள். 

சமீபகாலமாக க்யூரியாசிட்டி என்ற தரையுலவிதான் செவ்வாய் கிரகத்தில் அதகளம் செய்துகொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் காலநிலை, நில அமைப்பு, நீர் இருக்கிறதா எதிர்காலத்தில் மனிதன் போய் வர என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் போன்றவைகளை ஆராய்வதுதான் இதன் குறிக்கோள்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஏகப்பட்ட தகவல்களையும் போட்டோக்களையும் அள்ளி வீசி ஆராய்ச்சியாளர்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது. மனித உலகம் ஆச்சரியப்படும்படியான தகவல்களை க்யூரியாசிட்டி அளிக்கவிருக்கிறது என நாசா அறிவித்திருக்கிறது. காத்திருப்போம். 

[கல்கி வார இதழில் வெளியாகும் ‘ரோபோஜாலம்’  என்ற ரோபோடிக்ஸ் பற்றிய தொடரின் ஒரு அத்தியாயம்]

Oct 30, 2012

விஜயகாந்த்- நாயகனா?காமெடியனா?ஏழாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் இந்தியா பலகட்சி ஆட்சிமுறையுடைய நாடு என்று குறிப்பு வரும். அதைத் தொடர்ந்து பல கட்சி X இரு கட்சி ஆட்சிமுறைகளுக்கு இடையிலான நிறை குறைகளை பற்றிய குறிப்புகள். மனப்பாடம் செய்து தேர்வு எழுத வேண்டும். பல கட்சி ஆட்சிமுறையில் இரண்டு கட்சிகளையும் பிடிக்கவில்லையென்றால் தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பளிக்கமுடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதி வைத்திருந்தார்.  

அந்தக்காலத்திலிருந்து தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஆட்சியைப் பிடித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தகுதியிருக்கிறதோ இல்லையோ கருணாநிதி,ஜெ. தவிர இன்னொரு முதலமைச்சர் வர வேண்டும் என்று விரும்பியதுண்டு. அயோக்கியகனாக இருந்தாலும் கூட பரவாயில்லை- இவர்கள் இருவரையும் தவிர்த்த முகம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வை.கோபால்சாமி முதல்வராகிவிடுவார் என நம்பினேன். கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்ற திமுகவின் பில்லர்களோடு வெளியேறிய வைகோ மதிமுக வைத் தொடங்கியபோதும், வீரபாண்டி ஆறுமுகம் கூட அவரோடு போகப்போகிறார் என்ற செய்திகள் பரவியபோதும் கலைஞரே கூட அப்படித்தான் நம்பியிருப்பார். ஆனால் கலைஞரின் பகடையாட்டத்தில் வைகோவின் தளபதிகள் வெட்டி சாய்க்கப்பட்டபோதும் அவர்களின் சாயங்கள் மாற்றப்பட்டபோதும், வைகோவின் தவறான அரசியல் முடிவுகளாலும் நம்பிக்கைகள் தளர்ந்து போனது. 

இடையிடையே மூப்பனார், ப.சிதம்பரம், ரஜினிகாந்த் என்ற டெம்பரரி கனவுக்கண்ணன்கள் ’மூன்றாவது முகம்’ ஆசையின் திரியை அரை இன்ச்சுக்கோ அல்லது ஐந்தரை இன்ச்சுக்கோ அவரவர் தகுதிக்கு ஏற்ப தூண்டிவிட்டார்கள். இரு துருவங்களைத் தாண்டி தமிழக அரசியலில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது தூண்டிவிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் போல. தங்களின் விரலை கமுக்கமாக உள்ளே இழுத்துக்கொண்டார்கள்.

இரண்டாயிரத்தைந்தில் விஜயகாந்த் என்ற கருப்புக்காந்தம் தமிழகத்தின் மூன்றாவது இயக்கத்திற்கான வெற்றிடத்தை நிரப்பிவிடும் என்று விகடன் போன்ற ஜாம்பவான்களின் தூபத்தில் சொக்கிப்போயிருந்தது உண்மைதான். விஜயகாந்த் என்ற பலூன் ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. அவரும் பெரியாரிசத்தில் ஆரம்பித்து அம்பேத்கரிசம் ராஜாஜியிசம் அண்ணாயிசம் என கலந்து அடித்து ரசம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது ‘தான்’ என்ற ஈகோ ஊதப்பட்ட பலூனுக்கு ஏற்ற ஊசியாக மாறிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்காமல் விட்டிருப்பது அவருக்கு கெட்டநேரம் தமிழகத்திற்கு நல்லநேரம். 

ஜெயலலிதா ஊடகவியலாளர்களை சந்திப்பதேயில்லை என்பதால் பகையாளிகளை 'நேரடியாக’ சம்பாதித்துக் கொண்டதில்லை. கலைஞரை எத்தனை டென்ஷனாக்கினாலும் சமாளித்துவிடுவார் என்று கேள்விப்பட்டதுண்டு. விஜயகாந்த் பாய்ந்து விழுந்திருக்கிறார். விஜயகாந்தின் கோட்டைக்கனவுகளின் செங்கற்களான எம்.எல்.ஏக்களை ஒவ்வொன்றாக ஜெயலலிதா உருவிக் கொண்டிருந்த சமயத்தில் அவரது ஜெயா டிவியின் நிருபர் விஜயகாந்த்தின் முன்பாக மைக்கை நீட்டியிருக்கிறார். 

இழவு விழுந்துகொண்டிருக்கும் வீட்டில் பேட்டி வேண்டும் என்று மைக்கை நீட்டினால் கோபம் வரும்தான். ஆனால் கேள்விகேட்பவர் யார் என்று பார்த்திருக்க வேண்டாமா? அவர் மைக்கை நீட்டுவதில் இருக்கும் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ’நாய்’ என்று விஜயகாந்த் திட்டியதை படம்பிடித்து 24x7 இல் வீட்டு வரவேற்பறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். 

குடிகாரன், வேட்பாளரை அடிக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை மீறி அவரை எதிர்கட்சித்தலைவராக்கியதற்கு விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம் என்று நம்பினால் அதைப்போன்ற முட்டாள்த்தனம் வேறு இருக்க முடியாது. ஆனால் மக்கள் கொடுத்த வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டாரா என்பதும் அவரை இயங்கவிடாமல் ஆளுங்கட்சி ஆடும் சூதாட்டத்தில்  வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் தோல்வியை தவிர்க்கவாவது முயல்கிறாரா என்பதும் முக்கியமான கேள்விகள். 

ஜெ. ஆரம்பித்திருக்கும் நாடகத்தை தான் முடிக்கப்போவதாக சொல்லிக் கொண்டு முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். தமிழகத்தின் கடந்த கால்நூற்றாண்டு வரலாற்றில் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் சீரியஸாக நாடகம் நடத்தியிருக்கிறார்கள். மற்றவர்களின் சீரியஸ் நாடகங்களை காமெடி நாடகங்களாக மாற்றிவிடுவதில் அவர்கள் இரண்டு பேரும் வித்தகர்கள். விஜயகாந்த் இன்னமும் தன்னை ஹீரோவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். காமெடியனாக மாறிவிடாமல் இருக்க வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் முடியும். முடிந்தால் ‘மூன்றாவது முக’த்திற்கான நம்பிக்கையை அணைந்துவிடாமல் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளலாம்.

Oct 29, 2012

மொட்டைசைபரின் முதலிரவுகரட்டுப்பாளையத்துச் சுந்தரனுக்கு இந்த ஐப்பசியோடு முப்பத்தியேழு வயது முடிகிறது. மூன்றாம் வகுப்பில் குட்டிக்கரணம் அடித்த பிறகு மாடு மேய்க்கப் போட்டுவிட்டார்கள். குட்டிக்கரணம் அடித்ததற்கும் காரணம் இருக்கிறது. ஒரு முறை கணக்கு வாத்தியார் ராமசாமி "நாலும் மூணும் எவ்வளவுடா" என்று கடைசி வரிசையில் இருந்த சுந்தரனைக் கேட்டபோது விரல்விட்டு எண்ணியும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வாத்தி சும்மா இருந்திருக்கலாம். “நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்” என்றுதான் இனி சுந்தரனைக் கூப்பிட வேண்டும் என்று மற்ற பசங்களை உசுப்பேத்திவிட்டுவிட்டார். முதலில் வகுப்பில் இருந்தவர்கள், பிறகு பள்ளியின் மற்ற மாணவர்கள் என்று பரவிய இந்த ‘மொட்டை சைபர்’ விவகாரம் கரட்டுப்பாளையத்திற்குள்ளும் கசிந்துவிட்டது. ஊர்க்காரப்பசங்களும் சுந்தரனைப் பார்க்கும் போதெல்லாம் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இது சுந்தரனுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. வாத்தியாரின் மண்டையைப் பிளந்துவிட வேண்டும் என்று வாய்க்கால் மேட்டில் அமர்ந்து கொண்டான். ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியை சைக்கிளின் கேரியரில் வைத்துக் அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு வந்தார் ராமசாமி வாத்தியார். வேப்பமரத்தின் பின்புறமாக நின்றிருந்த சுந்தரன் கல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்து வீசினான். பாய்ந்த ஏவுகணை வாத்தியாரை விட்டுவிட்டு அவரது மனைவியின் மண்டையை பதம்பார்த்துவிட்டது. வாத்தியார் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு சுந்தரனைப்பிடிக்க பாய்ந்தார். நான்கைந்து அடிதான் வைத்திருப்பார். செருப்பையும் மீறி அவரது காலில் இரண்டு மூன்று கருவேலம் முட்கள் தைத்தன. “வக்காரோளி இனிமே மூஞ்சிலேயே முழிக்காத” என்று கத்திக் கொண்டே நின்றுவிட்டார்.

நஞ்சப்ப கவுண்டருக்கு தன் மகனுக்கு படிப்பு வரவில்லை என்ற கவலையெல்லாம் இல்லை. கணக்குக்கூடத் தெரியவில்லை என்றுதான் அவ்வப்போது புலம்புவார். சுந்தரனின் அம்மா ராமக்காதான் அவரை சமாதானப்படுத்துவாள். “கணக்குத் தெரிஞ்சு கல்லேக்கட்டரா ஆவப்போறான்? வுடுங்க” என்று சொல்லிவிட்டு சமையலைறைக்கு போய்விடுவாள். சமையலறைக்குள் என்னதான் இருக்கிறதோ? கோழி கூப்பிடுவதற்கு முன்பாகவே சமையலறைக்குள் போய்விடுவாள். படுக்கைக்கு வர நள்ளிரவு ஆகும். 

நஞ்சப்ப கவுண்டர் கோபத்தில் இருக்கும் போதெல்லாம் “கலத முண்ட அதுக்குள்ள என்னதான் நொட்டுவாளோ, வெளிய வந்தா ஆவாதா?” என்று கத்துவார். அப்பொழுது மட்டும் கொஞ்ச நேரம் திண்ணையில் இருக்கும் பந்தல்காலில் சாய்ந்து அமர்ந்து கொள்வாள். 

அடுத்த முப்பது வருடங்களுக்கும் ராமக்கா சமையலறையிலேயேதான் இருந்தாள். நஞ்சப்ப கவுண்டர்தான் இருபது வருடங்களுக்கு முன்னால் போய்ச்சேர்ந்துவிட்டார். மேட்டாங்காட்டில் மாடுபிடித்துக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்து நெஞ்சு வலிக்கிறது என்று கட்டிலில் அமர்ந்தவர்தான். ராமக்கா மோர் கொண்டு வந்து தருவதற்குள் பேச்சு மூச்சு இல்லை. 

அப்பொழுது சுந்தரனுக்கு ட்ரவுசரிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த வயசு. அவனது மூக்குக்கு கீழாக பொன்னிற ரோமங்கள் முளைத்திருந்தன. அந்த செம்பட்டை முடிகளை சிரைத்துவிட்டால்தான் மீசை அடர்த்தியாக வரும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். அவனாகவே பிளேடு வாங்கி வந்து மழித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அதற்குள் நஞ்சப்ப கவுண்டர் போய்ச்சேர்ந்துவிட்டார். அவருக்கு காரியம் செய்த போது சுந்தரனுக்கு மொட்டையடித்து மீசையை மழித்துவிட்டார்கள்.

இப்பொழுது சுந்தரனுக்கு முப்பத்தியேழு வயது ஆகியிருந்தாலும் “மொட்டை சைபர்” பட்டம் மட்டும் ஊருக்குள் மாறியிருக்கவில்லை. அதைவிட முக்கியம் திருமணம் ஆகியிருக்கவில்லை. புரோக்கர்கள், சொந்தக்காரர்கள் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சுந்தரனின் ஜாதகத்தை ராமக்கா கொடுத்து வைத்திருந்தாள். பெரும்பாலான ஜாதகங்கள் பொருத்தமில்லை என்று திரும்பி வந்துவிட்டன. ஒன்றிரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தால் ஏதாவது குற்றங்குறை சொல்லி ராமக்கா தட்டிக் கழித்துவிட்டாள். அதையும் மீறி வந்த ஒரு பெண் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். மூன்றாம் வகுப்பு படித்தவன் தனக்கு ஒத்துவர மாட்டான் என்று சொல்லிவிட்டாள். இதெல்லாம் சுந்தரனுக்கு முப்பத்தியிரண்டு வயதுக்குள் நிகழ்ந்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. இனி திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையை சுந்தரனும், ராமக்காவும் இழந்திருந்தார்கள். சுந்தரனின் தலை முழுச் சொட்டையாகியிருந்தது.

இந்த வருட மாரியாத்தா நோம்பிக்கு வந்திருந்த பாலப்பாளையத்துச் சுப்பிரமணியன் ராமக்காவிடம் பேச்சுக் கொடுத்தார். "இப்பல்லாம் படிச்ச பசங்களுக்குக் கூட பொண்ணு கிடைக்க மாட்டேங்குது அம்மிணி” என்றபோது ராமக்கா பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள். தனது மூட்டுக்களில் கடும் வலி இருப்பதாகவும், வேலைகளைச் செய்யவே முடிவதில்லை என்றும் அழுதாள். 

"எத்தன நாளைக்குத்தான் இப்படியே இருக்கிறது? நம்ம பக்கத்துலேயே வேற சாதிப்புள்ளைகளை பாக்கலாமா?” என்றார். சுந்தரனுக்கு சரியென்றுபட்டது. வீட்டிற்குள் அனுமதிக்கும் நாசுவன், பண்டாரம், வண்ணார் போன்ற சாதிகளில் பெண் இருந்தால் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அந்தப் பெண்கள் தன்னை கட்டிக்கொள்வார்களா என்று யோசிக்கவில்லை. இந்த திட்டம் ராமக்காவுக்கு அத்தனை உவப்புடையதாக இல்லை. வேற சாதிக்காரியிடம் தன்னால் கடைசி காலத்தில் கஞ்சி குடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். சுப்பிரமணியன் ஒரு தில்லாலங்கடி. அவரது எத்தனை திட்டங்களை நிராகரித்தாலும் புதிதாக இன்னொரு திட்டத்தைச் சொல்வார். இப்பொழுதும் அப்படித்தான். பாலப்பாளையத்தில் சிலர் கேரளா சென்று திருமணம் செய்து வந்திருப்பதாகச் சொன்னார்.

“புள்ளைக செவச்செவன்னு இருக்குதுக. சுண்டுனா ரத்தம் தெறிக்கும். என்ன எழவு? பேச்சுவார்த்தைதான் புரியறதில்லை”என்றார். இப்பொழுதும் சுந்தரனுக்கு சந்தோஷமாக இருந்தது. செவச்செவன்னு ஒருத்தியைக் கட்டிக் கொண்டு வருவது அவனுடைய இருபத்தைந்து வருடக் கனவு. இந்தத் திட்டத்தையும் ராமக்கா நிராகரித்துவிடுவாளோ என்று பயந்து அவளது முகத்தைப்பார்த்தான். அவள் இரண்டு நாள் யோசிக்க வேண்டும் என்றாள். துண்டை உதறிக்கொண்டு சுந்தரன் வெளியே போய்விட்டான்.

சுப்பிரமணி எப்படியோ பேசி ராமக்காவை சரி செய்துவிட்டார். அடுத்தவாரம் கேரளா போவது என்று முடிவு செய்துவிட்டார்கள். பாலப்பாளையத்திலேயே ஒரு புரோக்கர் இருக்கிறார். பெண்பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் என்ற எந்தச் சடங்குகளும் இல்லை. புரோக்கரைக் கூட்டிக் கொண்டு கேரளா போக வேண்டியது அவர் சில பெண்களைக் காட்டுவார். பிடித்த பெண் வீட்டாருக்கு ஐந்தாயிரமோ அல்லது பத்தாயிரமோ கொடுத்துவிட்டு ஏதாவதொரு கோயிலில் நிறுத்தி தாலியைக் கட்டினால் வேலை முடிந்தது.

மேலே சொன்னதெல்லாம் இம்மி பிசகாமல் சுந்தரன் திருமணத்திலும் நடந்தது. திருமணம் முடிந்தபிறகு தனக்கு வேலை இருப்பதாக புரோக்கர் அங்கேயே தங்கிக் கொண்டார். ராமக்கா, சுப்பிரமணி, சுந்தரன் மட்டும் செக்கச் செவேல் கேரளாப்பெண்ணோடு வாடகைக்காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவளோடு யாருமே பேசவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் அவளுக்கு புரியவில்லை. அவள் என்ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ள ராமக்கா கடும் பிரயத்தனம் செய்தாள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இன்று தனக்கு முதலிரவு என்பதை நினைத்த சுந்தரன் படு உற்சாகமாகிவிட்டான். மனசுக்குள் சில இளையராஜாவின் பாடல்களை பாடிக் கொண்டே வந்தான். அவ்வப்போது கண்ணாடியில் தலைமுடியை சரி செய்து கொண்டு புதுமனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் வெட்கப்பட்டாள்.

ஊருக்கு வந்து சேர்ந்தபோது மாலை ஆறு மணியாகியிருந்தது. பக்கத்துத் தோட்டத்து பெண்கள் ராமக்காவின் மருமகளை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அவளது நிறத்தையே ஒவ்வொருவரும் புகழ்ந்து பேசினார்கள். சுந்தரன் படுக்கையை தயார் செய்தான். படுக்கை என்றாள் நிலத்தை கூட்டிப்பெருக்கி ஒரு பாயை விரித்தான். அவ்வளவுதான். ராமக்கா சமையலை முடித்துவிட்டு சுந்தரனை சாப்பிட அழைத்தாள். புதுப்பெண்ணின் சத்தத்தையே காணோம்.  

“அவ எங்க?” என்றான் சுந்தரன். 

"பத்து நாளத்து அழுக்குத்துணி கெடந்துச்சு. தொவைச்சுட்டு வான்னு சொன்னேன். வாய்க்கா மேட்டுக்கு போயிருக்கா” என்றாள். சுந்தரன் பஞ்சராகிப்போனான். 

“இருட்டுல அவளை எதுக்கு தனியா அனுப்புன?” என்று சத்தம் போட்டுவிட்டு அவளைத் தேடிப்போனான். 

ஒரே நாளில் பையன் மாறிவிட்டானே என்று ராமக்கா பொசுங்கத் துவங்கியிருந்தாள். வாய்க்கால் மேட்டில் தோதான இடங்களைப்பற்றி நினைத்துக் கொண்டே சுந்தரன் வேக வேகமாக நடந்தான். கீழே விரிப்பதற்கு அழுக்கு வேட்டி போதும் என்று நினைத்தபோது அவனது வேகம் அதிகரித்தது. அது படு ஆர்வமான வேகம்.

Oct 27, 2012

சின்மயி செய்தது மட்டும் சரியா?


சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜன் குறித்தான செய்திகள் இதுவரை வெளிவரவில்லை. விசாரணை என்ற பெயரில் அவரை துன்புறுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். ஆனால் இது வெறுமனே நம்பிக்கையாக மட்டுமே இருக்கக் கூடும் என்று தெரியும். ஊடகச் சுதந்திரம் என்பதெல்லாம் நம் காலத்தில் வெறும் பம்மாத்து. சாமனியனின் குரல்வளையின் மீது அதிகாரத்தின் ஆணவக் கரங்கள்  இன்னும் ஒருமுறை அழுத்தம் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.

மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் சின்மயியின் so called அபிப்பிராயங்கள் அவருக்கான கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களின் வாதங்களை ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம் அவரது கருத்துக்கள் ஒரு சாமானியனின் உணர்வுகளை சீண்டக் கூடிய தன்மயைக் கொண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனவர் பிரச்சினையிலும், இட ஒதுக்கீட்டுப்பிரச்சினையிலும் போகிற போக்கில் தத்துவ முத்துக்களை உதிர்த்து போகும் சின்மயி அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள கொள்ள முடியாமல் காவல்துறையினரை அணுகுவது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? 

ஐம்பது பைசா பெட்ரோல் உயர்வுக்கு வசைமாரி பொழியும் சமூகத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? காலங்காலமாக நசுக்கப்பட்டு வந்த இனத்தின் பிரச்சினைகளைப் பற்றி எந்தப் புரிதலுமில்லாமல் கருத்துக்களைச் சொல்லும் போது வரக்கூடிய விமர்சனங்கள் நிச்சயம் கடுமையானதாகத்தானே இருக்கும்? சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கானோர் பின்தொடரும் சின்மயி போன்ற பிரபலங்கள் எதையாவது உளறிக் கொட்டினால் எல்லோரும் அமைதியாக பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று சின்மயி நம்புவது எவ்வளவு அபத்தம்? தன் பொறுப்பற்ற தன்மை பற்றிய எந்த வருத்தமும் அல்லது குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அடுத்தவர்களைக் கை காட்டியிருக்கிறார் சின்மயி.

ராஜன் தன்னை எந்த இடத்திலும் அறிவுஜீவியாகவோ அல்லது மெத்தப் படித்த மேதாவியாகவோ  நினைத்து பேசியதாக ஞாபகமில்லை. டீக்கடையில் பேப்பர் செய்திக்கு கருத்துச் சொல்பவர் அல்லது சலூனில் கிடைக்கும் நேரத்தில் நிகழ்கால நிகழ்வுகளை விமர்சிக்கும் சாமானிய மக்களின் பிரதிநிதியாகவே தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர். அரசியல், சமூகப்பிரச்சினைகளில் நேரடியாக சலனமுறும் சாமானிய மனிதனின் கருத்துக்கள் எப்படியிருக்குமோ அதே மாதிரியானவை என்ற கோணத்தில் ராஜனின் எதிர்வினைகளை புரிந்துகொள்கிறேன்.

ராஜனின் கருத்துக்கள் பாலியல் ரீதியான வன்முறை அல்லது செக்ஸிஸ்ட்டின் தாக்குதல் என்றும் அவரை தண்டிக்க வேண்டும் என வாதிடும் சின்மயியின் ஆதரவாளர்கள் சின்மயி நிகழ்த்திய சமூகத்தின் மீதான தாக்குதலைப் பற்றி வாய் திறப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. 

சின்மயியின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஆபாச கருத்துக்களை வெளியிட்டவனை தண்டிக்கவே கூடாதா என்ற கேள்வி வரலாம். தண்டிக்கலாம். ஆனால் குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்படட்டும். விசாரணைக்கு இருதரப்பினரும் உட்படுத்தப்பட வேண்டும். குற்றம் செய்தவன் எதற்காக குற்றம் செய்தான் என்று ஆராயட்டும். குற்றவாளியைவிடவும் அவனைத் தூண்டியவனுக்கான தண்டனைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று பேசும் நாம் அதை இந்த வழக்கில் எதிர்பார்ப்போம்.

இணையதளங்களில் நிகழ்த்தப்படும் பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் தனது விவகாரத்தின் மூலமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று ஒரு பண்பலை நிகழ்ச்சியில் சின்மயி பேசினாராம்.எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதிகாரமட்டத்தின் தொடர்புகளும், சமூக அந்தஸ்தும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கம்பிக்கு பின்னால் தள்ளலாம் என்பது மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஒருவன் பாலியல் ரீதியான தாக்குதலை நிகழ்த்திவிட்டான் என்று சில ஸ்கீரின் ஷாட்களை வைத்துக் கொண்டு பிரபலமான சின்மயி புகார் அளித்திருப்பதாலேயே ஒருவனைக் குற்றவாளி என்று முடிவு செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடைத்து வைத்திருப்பது டூ மச். ப்ளீஸ் அவரை வெளியே விடுங்கள்.

Oct 26, 2012

உங்களுக்கு காகிதக் கப்பல் செய்யத் தெரியுமா?சிறுவயதில் கப்பல் செய்திருக்கிறீர்களா? கத்திக் கப்பல் செய்வீர்களா? பறக்கும் கப்பலா? ஒரு காகிதத்தை மடக்கி இப்பொழுதும் உங்களால் விதவிதமான கப்பல்களை செய்ய முடியுமா? ஞாபகம் இருக்கிறதா?

எனக்கு அத்தனையும் மறந்துவிட்டது.  மறந்து போய்விட்டது என்பது நேற்றிரவுதான் தெரியும். அதுவும் ஒரு கவிதையை வாசித்தபிறகு. 

குழந்தைகளின் உலகத்தை பற்றி எழுதப்படும் கவிதைகள் ஈர்ப்பு மிகுந்தவை. நமது குழந்தைப்பருவத்திற்கு நினைவுகளைக் கூட்டிச் செல்லும் சாத்தியங்கள் இத்தகைய கவிதைகளுக்கு உண்டு. 'சிலேட்' சிற்றிதழில் இடம் பெற்றிருக்கும் பத்மபாரதியின் கவிதையை நேற்று வாசித்தபோது அப்படித்தான் தோன்றியது.

'பறக்கும் கப்பல்' என்ற இந்தக் கவிதையை முதலில் வாசித்துவிடுங்கள். பிறகு கவிதை பற்றி கொஞ்சம் பேசலாம்.

தனது விளையாட்டு தீர்ந்துபோன
அந்தச் சிறுமிக்கு
கைகளில் வந்துசேர்ந்த
துண்டறிக்கையிலிருந்து
தட்டுத்தடுமாறிய நினைவின் வெளிச்சத்தால்
பேரழகின் பறக்கும் கப்பலைப்
பரிசளித்தான்
அவளோ
பிஞ்சுக் கரங்களில் அதை நழுவவிட்டு
அம்மாவின் தலைவருடலில்
சொக்கி உறங்கினாள்
தண்ணீரற்றுத் தத்தளித்த கப்பல்
அவள் வாயோரம் துளிர்த்த
கனவுகளின் சுவையூற்றை
துடைத்தெறிந்த கசங்கிய காகிதமானது
மறதியிலிருந்து மீண்டெழுந்த
கைலாவகம் அவனை வருத்தியிருக்கக் கூடும்
அப்போதுதான்
அவளது உறக்கத்தில் பூக்கும்
துளிர் நகையின் மின்னலென
மஞ்சாற்பட்டாம்பூச்சியது
விரைந்துகொண்டிருந்த
ரயில் ஜன்னலிலிருந்து
மிதந்து வந்து
அவள் தோளில் அமர்ந்தது.

கவிதையை பின்வருமாறு பிரித்துவிடலாம்-

1) சிறுமிக்கு விளையாட்டுகள் அத்தனையும் தீர்ந்து விட்டது. 

2) அந்தச் சிறுமிக்காக தனக்கு கிடைத்த துண்டறிக்கை காகிதத்தின் மூலமாக    கப்பலை செய்ய முயற்சிக்கிறான் ஒருவன்.

3) காகிதக் கப்பல் செய்வது அவனுக்கு மறந்து போய்விட்டது. பழைய  ஞாபகங்களிலிருந்து தட்டுதடுமாறி ஒரு கப்பலை செய்துவிட்டான்

4) அது பறக்கும் கப்பல்- பேரழகு நிறைந்தது

5) அந்தச் சிறுமியை அது அவ்வளவாக ஈர்க்கவில்லை போலிருக்கிறது. அவளது அம்மா தலை வருடுகிறாள். சிறுமி தூங்கிப்போகிறாள்

6) கப்பல் தண்ணீரற்றுத் தத்தளிக்கிறது

7) தூங்கிக் கொண்டிருக்கும் சிறுமியின் வாயில் சுரக்கும் எச்சிலை துடைத்து கப்பல் கசங்கிய காகிதமாகிவிடுகிறது

8) அந்தச் சமயத்தில் தான் கப்பல் செய்வதை மறந்து போனது குறித்தும்,  ஞாபகம் மீண்டது குறித்தும் அவன் வருந்துகிறான்

9) ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது

10) அப்பொழுது மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சி அவளது தோளின் மீது அமர்கிறது


காகிதக் கப்பல் செய்த பால்ய பருவத்தையும், இளம்பிராய ரயில் பயண நினைவுகளையும் இந்தக் கவிதை எளிதில் மீட்டுவிடுகிறது.

சிறுமிக்கும் அவனுக்குமான உறவு கவிதையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கிடையேயான உறவை ஒரு ரயில் ஸ்நேகமாக புரிந்து கொள்கிறேன். ரயிலில் பார்க்கும் ஒரு சிறுமிக்காக கப்பலை செய்து கொடுக்கிறான்- அந்த நிகழ்வைச் சுற்றிய சில காட்சிகள் கவிதையாக்கபட்டிருக்கிறது. இது நேரடியான -கதைத்தன்மையுடன் முடியும் கவிதை. இதிலிருந்து வாசகனுக்கான திறப்புகளை உருவாக்குகிறது. 

கவிதையில் இடம்பெறும் அந்தப்பட்டாம்பூச்சி எதைக் குறிப்பிடுகிறது? அது ஏன் அவளது தோளில் ஒட்டுகிறது? 

ஒரு இலை விழுவதைக் கூட இயற்கையின் ஆசிர்வாதம் என்று எடுத்துக்  கொள்ளும் எனக்கு ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்கிறது என்னும் காட்சி ஆன்மிக மனநிலையை உருவாக்குகிறது. இயற்கை தனது பேரன்பினால் அந்தச் சிறுமியை ஆசிர்வதிக்கிறது அல்லது வெகுளித்தன்மை மிகுந்த அந்த தேவதையிடம்  பட்டாம்பூச்சியை அனுப்பி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கிறது.

அவன் செய்து கொடுத்தது பறக்கும் கப்பல்? அது ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும்? பறந்துவிடலாமே. அந்தக் கப்பல் ஏன் எச்சிலில் நனைந்து கசங்கிக் போகிறது? உண்மையிலேயே கவிதையில் இடம் பெறும் கப்பல் கப்பலைத்தான் குறிப்பிடுகிறதா அல்லது வேறு ஏதேனும் ஒன்றுடன் பொருத்தி வாசிக்க முடியுமா? இந்த அத்தனை கேள்விகளுக்கும் வாசகன் தனது அனுபவத்திலிருந்து பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ரசனையின் அடிப்படையில் அணுகினால் எப்படியும் பதிலைப் பெற்றுவிடலாம்.

சொற்பிழை, பொருட்பிழை கண்டுபிடிக்க வேண்டும் அணுகினால் பறக்கும் கப்பல் ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும் - இது அபத்தம் என்று குற்றஞ்சாட்டலாம். நான் பெரும்பாலும் கவிதையை ரசனையின் அடிப்படையிலேயே அணுகுகிறேன். எனவே இதற்கு என்னிலிருந்தே விடை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.

வெறும் ரயில் ஸ்நேகம் என்பதோடு நில்லாமல் உறவுகள் பற்றிய சிந்தனையையும் கூட இந்தக் கவிதையால் கிளற முடியும். பெரும்பாலான உறவுகள் ‘ஷார்ட்டேர்ம்’ ஆனவை.  உறவுகள் எப்பொழுதும் மேகங்களைப்போல கடந்து கொண்டேயிருக்கின்றன. சில மேகங்கள் ஸ்நேகத்துடன் உரசுகின்றன. சில மேகங்கள் தூரத்தில் புன்னகைத்து விலகுகின்றன. சில மேகங்கள் இடியென மோதுகின்றன. இந்தக் கவிதையில் இடம் பெறும் ஸ்நேகமும் ஒரு மேகமென உரசிப்போகிறது. சிறுமி விழிக்கும் போது அவன் இறங்கி போயிருக்கக் கூடும். இழந்துவிட்ட நட்புகளையும், உறவுகளையும் பற்றி சில கணங்கள் வருந்திவிட்டு அடுத்த வேலையை நாம் பார்ப்பது போலவே அவளும் ஒரு வினாடி யோசித்துவிட்டு அடுத்த வேடிக்கையைத் தொடர்வாள்.

(புரிவோம்)

Oct 25, 2012

காந்தியடிகள், சரோஜாதேவி புத்தகங்கள், Chaos Theoryஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து பெங்களூர் வரும் போது நள்ளிரவு தாண்டிய நேரத்தில் பஸ் மோட்டலில் நிற்கும். நல்ல தூக்கத்தில் இருக்கும் அந்த நேரத்தில் மோட்டல் வாட்ச்மேன் ஒரு குண்டாந்தடியால் பஸ் டயர்களைத் தட்டுவார். “அஞ்சு நிமிஷம் பஸ் நிக்கும். டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கலாம்” என்ற அவரது அலப்பறையில் கும்பகர்ணன் கூட ஒரு தடவை கண்ணை விழித்துத்தான் தீர வேண்டும். அப்படி விழித்த ஒரு நாளில் அங்கு இருந்த பழைய புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பெரும்பாலும் கவர்ச்சிகரமான நடிகைகளின் படங்களுடைய புத்தகங்கள்தான் இருக்கும். தூக்கத்தை போக்கிக் கொள்வதற்கு டீ குடிப்பதைவிடவும் சிறந்த உபாயம் அந்தப்புத்தகங்களின் அட்டைகளை வேடிக்கை பார்ப்பது என்பது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. தசாவதாரம் கமலின் அட்டைப்படம் போட்டிருந்த ஒரு பழைய வார இதழை கையில் எடுத்துக் கொண்டேன். ஐந்து ரூபாய் விலை சொன்னான்.

தசாவதாரம் படத்தில்தானே பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு சுனாமியை உருவாக்கக் கூடும் என்று காட்டியிருப்பார்கள்? Chaos Theory. காதில் பூ சுற்றுகிறார்களோ என்றுதான் தோன்றும். ஆனால் இந்த விதியை கமலஹாசனோ சுஜாதாவோ உருவாக்கவில்லை என்பதால் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

ஏதாவதொரு செயலின் காரணமாகத்தான் இன்னொரு விளைவு (Cause and effect) உருவாகிறது என்று காலங்காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். செயலுக்கும்Xவிளைவுக்குமான நேர்கோட்டு (Linear) தொடர்பு குறித்தான நம்பிக்கைகள் இவை. 

உதாரணமாக கிள்ளி வைத்ததால்தான் குழந்தை அழுகிறது; ஒருவனுக்கு தண்டனை அளித்தால் சமூகத்தில் குற்றச் செயல்கள் குறைந்துவிடும்- இப்படியான மூட நம்பிக்கைகள்.  இவற்றை மூட நம்பிக்கைகள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. உண்மையில் குழந்தை அழுவதற்கு கிள்ளி வைத்த வலியைத்தாண்டி பசி, கிள்ளி வைத்தவரின் மீதான வெறுப்பு, இயலாமை என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும். அதேபோல எத்தனை மரண தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றச்செயல்கள் என சமூகம் வரையறுத்து வைத்திருப்பவை குறையப்போவதில்லை- கொலை செய்பவனுக்கும், கொள்ளையடிப்பவனுக்கும் தாம் சிக்கிக் கொண்டால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் குற்றத்தைச் செய்கிறார்கள். அரசுகளும், அமைப்புகளும் நேர்கோட்டு விதிகளை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான தியரிகளும், முடிவுகளும் கூட இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இருந்தன.

ஆனானப்பட்ட சிக்மண்ட் ப்ராய்டின் உளவியல் விதிகளும் கூட நேர்கோட்டிலானவை (Linear)தான். 'முந்தைய பேரதிர்ச்சிகளும்/துன்பநிகழ்வுகளுமே மனித மூளையின் தவறான செயல்பாட்டுக்கு அடிப்படை’ என்று பழைய அதிர்ச்சிகளுக்கும், இன்றைய விளைவுகளுக்குமான நேர்கோட்டுத் தொடர்பைத்தான் அறிவித்திருந்தார். 

இந்த நேர்கோட்டு விதிகளுக்கு சங்கு ஊதுவதற்கான முதல் முயற்சியைச் செய்தவர் எட்வர்ட் லாரண்ட்ஸ். இவர்தான் ‘வண்ணத்துப்பூச்சி விளைவை’ அறிவித்தார். வெறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு புயலையோ அல்லது சுனாமியையோ உருவாக்கிவிடுவதில்லை ஆனால் குட்டிக் குட்டி செயல்கள் சேர்ந்து ஒரு பெரிய விளைவை உருவாக்குகின்றன என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. இந்தக் குட்டி குட்டி விளைவுகள் நேர்பாங்கற்ற (non-linear) தொடர்புடையவை.

இயற்கையை பற்றி நம்மால் எதையுமே ஏன் சரியாக கணிக்க முடிவதில்லை என்பதை Chaos Theory விளக்கியது. மழை வருமா என்பதை கணிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கம்ப்யூட்டரில் துல்லியமான உள்ளீடுகளைக்(Inputs)கொடுப்பார்கள். உதாரணமாக தற்போதைய காற்றின் வேகம் 35.003421 கிமீ/மணி என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து உள்ளீடாகக் கொடுக்கும் சமயத்தில் காற்றின் வேகம் சற்று மாறியிருக்கக் கூடும். இவர்களின் கணக்குப்படி 'இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’. ஆனால் மாறிய காற்றின் வேகத்தால் மழை போக்கு காட்டியிருக்கும். 

எனவே இயற்கையின் கணிக்க முடியாத தன்மையைக் கொஞ்சமாவது வெற்றி கொள்ள வேண்டுமானால் கொடுக்கப்படும் உள்ளீடுகள் துல்லியத்தன்மையற்றதாக(Approximations) இருக்க வேண்டும் என்பதை இந்த விதி அறிவித்தது. ஆனாலும் இன்னமும் நம் ரமணன் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை.

மோட்டலில் இருந்த பழைய புத்தகக் கடையில் நிரம்பிக்கிடந்த மும்தாஜ், சல்லாபம், கும்தலக்கா என்ற புத்தகங்களுக்களுக்கிடையில் பழங்காலத்து புத்தகம் ஒன்று என்னைப்போலவே தூங்கி வழிந்தது. எடுத்துப்பார்த்தால் 1944 ஆம் வருடத்தில் மயிலாப்பூர் கலைமகள் காரியாலையம் வெளியிட்டிருந்த “தமிழ்நாட்டில் காந்தி” என்ற புத்தகம். எழுதியவர் தி.சே.செள.ராஜன். கடைக்காரர்  இருபது ரூபாய் விலை சொன்னார். ஐம்பது ரூபாயாகக் கொடுத்தேன்.

டாக்டர். ராஜன் ஒரு காங்கிரஸ்காரர். காந்தி காலத்துக் காங்கிரஸ்காரர். 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று டாக்டர் பட்டம் வாங்கி வந்தவர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் அமைச்சரவாகவும் இருந்திருக்கிறார். இவரைப் பற்றியக் குறிப்புகள் இணையத்தில் கொஞ்சம் கிடைக்கின்றன. இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று குறிப்புகள் சொல்லுகின்றன. வ.வே.சு.ஐயர் பற்றிய ஒரு புத்தகம், நினைவு அலைகள் என்று இன்னொரு புத்தகம்.

நான் வாங்கிய புத்தகம் யாருக்குமே தெரியாத அவரது மூன்றாவது புத்தகம். 1934 ஆம் ஆண்டு காந்தி தமிழ்நாட்டில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடைய அனைத்து பயண ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்ட ராஜன் அவர்கள் எழுதிய நூல் இது. காந்தீய சிந்தனையாளர்களுக்கு காந்தியின் இன்னுமொரு பரிமாணத்தை அறிந்து கொள்ளவும், மற்றவர்களுக்கு அந்தக் காலத்திய தமிழகத்தின் ஊர்களைப் பற்றி புரிந்துகொள்ளவும் உதவக்கூடும்.

நேற்று புத்தகத்தை வாசித்த முடித்தேன். ஊரிலிருந்து திரும்பும்போது அரசு பஸ்ஸில் ஏறியதிலிருந்து, தூக்கக் கலக்கத்தில் புத்தகக் கடைக்குள் நுழைந்தது வரைக்கும் ஒவ்வொன்றையும் Chaos Theory யுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சற்று சம்பந்தமேயில்லாத மாதிரிதான் தெரிகிறது. ஆனால் இந்தக் கட்டுரையை முடிக்க வேண்டுமல்லவா?

Oct 24, 2012

எனக்கு துப்பாக்கி வாங்கித் தாங்கவிடுமுறைகளை உருப்படியாக பயன்படுத்துவதில்லை என்ற ஃபீலிங்க்ஸ் விடுமுறைக்கு அடுத்த நாள்  காலையில் பற்பசை பிதுக்குவதில் ஆரம்பித்து அலுவலகம் கிளம்புவதற்கு பைக்கை உதைக்கும் வரை அரித்துக் கொண்டிருக்கும். அடுத்த விடுமுறை வரட்டும் உருப்படியாக்கிக் கொள்ளலாம்  என்று ஆறுதல்படுத்திக் கொள்வதுண்டு. அடுத்த விடுமுறையும் கசகசத்துத்தான் போகும். ஃபீலிங்க்ஸ் வருவதும் ஃபீனிக்ஸாக மீள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இன்று ஆயுத பூஜை விடுமுறை. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என போன வாரமே கங்கணம் கட்டியிருந்ததால் மகனை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் மியூஸியத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தேன். அவனுக்கு மூன்று வயது ஆகிறது. அவனுக்கு ராணுவம் பற்றிய சில அடிப்படைகளைச் சொல்லிவைத்திருக்கிறேன். ஆர்மிக்காரங்க துப்பாக்கி வைத்து சண்டையிடுவார்கள், ஏர்ஃபோர்ஸ்க்காரங்க விமானத்தில் பறந்து குண்டு போடுவார்கள், நேவிக்காரங்க கப்பலில் சென்று சண்டை நடத்துவார்கள் என்று திருப்பிச் சொல்வான்.

நேற்றிரவிலிருந்தே "உனக்கு மியூஸியத்தில் ஹெலிக்காப்டர், ஏரோப்ளேனையெல்லாம் காட்டப்போகிறேன்" என உசுப்பேற்றிவிட்டிருந்தேன். மிகுந்த உற்சாகமாகியிருந்தான். எப்பொழுதும் தொட்டிலில் படுத்துதான் உறங்குவான். "நீ பெரியவன் என்று நிரூபித்தால்தான் நாளைக்கு ஏரோப்ளேனுக்குள் ஏறிப்பார்க்க அனுமதிப்பார்கள். அதற்கு நீ கட்டிலில்தான் தூங்க வேண்டும்"   என்று சொல்லியிருந்தேன். எந்தவித மறுப்புமில்லாமல் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

இன்று காலை நான்கு மணிக்கு எழுந்து மூக்குக்குள் விரலை விட்டான். என்னமோ ஏதோ என்று பதறியடித்து எழுந்தேன். “அப்பா மியூஸியத்திற்கு போலாம்” என்றான். ஜன்னல் திரையை விலக்கிக் காட்டி இன்னும் விடியவில்லை என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ஒன்பது மணி வரைக்கும் அதிகபட்சம் சமாளிக்க முடிந்தது. அதற்கு மேல் ஹை டெசிபிலில் நச்சரித்தான்.

ஒரு பையில் பிஸ்கட், தண்ணீர் பாட்டில், அவனுக்கு ரெயின் கோட் என அத்தனையும் தூக்கிக் கொண்டு நானும் அவனும் மட்டும் கிளம்பினோம்.

மியூஸியம் வரத்தூர் சாலையில் இருக்கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கு விமானவியலை புரிந்துகொள்ள இது ஒரு முக்கியமான மியூஸியம். 1940களில் HAL நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரைக்குமான பல நிழற்படங்களையும், சில விமான மாடல்கள், விமானத்தின் இயந்திரங்கள், ரேடார் போன்றவை காட்சிப்பொருளாக்கப்பட்டிருக்கின்றன. 

"இந்த ஏரோப்ளேன் எல்லாம் வெச்சுத்தான் ஏர்போர்ஸ்காரங்க சண்டை போடுவாங்களா?" என்றான். "ஆமாம்" என்றேன்.

மகி மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தான். பிஸ்கெட், தண்ணீர்ப்பாட்டில்கள் அவனுக்குத் தேவைப்படவில்லை. சிறிய விமானத்தின் சக்கரங்களை சுற்றிக் கொண்டிருந்தவனிடம் ஒரு குளத்தில் மீன் இருக்கிறது என்றேன். அதே வளாகத்தில் இருக்கும் சிறு குளத்தில் மீன்களை வளர்க்கிறார்கள். மீன்களை நோக்கி ஓடி வந்துவிட்டான். அத்தனை பெரிய உருவமுடைய வண்ண மீன்களை இப்பொழுதுதான் பார்க்கிறேன். விமானங்கள், ராக்கெட்கள் எல்லாம் மீன்களிடம் தோற்றுக் கொண்டிருந்தன. 

"இந்த மீன்களை சாப்பிடலாமா அப்பா" என்றான். சம்பந்தமேயில்லாமல் சின்மயி விவகாரம் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. அந்த மியூஸியத்தை விட்டு மகியை கிளப்புவது பெரிய சிரமமாகிவிட்டது. எதையோ சொல்லி அழைத்து வந்து பைக்கில் ஏற்றினேன்.

"அப்பா எனக்கு துப்பாக்கி வாங்கித் தாங்க" என்றான். "எதுக்குடா தங்கம் " என்றதற்கு  "எனிமிஸ் எல்லாம் சுடப்போறேன்" என்றான். 

“இன்னா செய்தாரை ஒறுத்தல் குறளை ஆத்தா சொல்லித்தந்திருக்காங்க இல்ல? யாரையும் சுடக்கூடாது" என்றேன். 

ஒரு செகண்ட் கூட யோசிக்காமல் "ஆத்தா ஏன் இன்னா செய்தாரை குறளை இந்த ஆர்மிக்காரங்ககிட்ட சொல்லித்தரலை?" என்றான். 

என்னிடம் பதில் இல்லை. "பசிக்குதாடா" என்று பேச்சை மாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

Oct 23, 2012

அய்யோ விரலு போயிந்திஹைதராபாத்தில் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம். எங்களை வேலைக்குச் சேர்க்கும் போதே முடிந்தவரைக்கும் நிறுவனத்தை 'ஆட்டோமேஷன்' செய்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதாவது தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பதுதான் நோக்கம். அந்த நிறுவனத்தில் ஆயிரத்து ஐநூறு தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள். மனிதர்களை குறைக்க வேண்டுமானால் நிறுவனத்திற்குள் ரோபோக்களை பணிக்கு அமர்த்த வேண்டும். 

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் முழுமையான ஆட்டோமேஷன் செய்வதற்கு முனைவதில்லை. அதற்கு அடிப்படையான காரணம் இந்தியாவில் குறைந்த ஊதியத்திற்கு நிறைய ஆட்கள் கிடைக்கிறார்கள். இவர்களை வைத்தே வேலையை செய்துவிட முடியும். ரோபோக்களை விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ரோபோக்களில் முதலீடு செய்வதைவிடவும் வேறு வகைகளில் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தவே நிறுவனங்கள் விரும்புகின்றன. 

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ரோபோக்களை தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது சாதாரணம். ரோபோக்களை பயன்படுத்துவதில் நிறைய பலன்கள் இருக்கின்றன. ரோபோக்கள் டீ குடிக்க 'ப்ரேக்' எடுத்துக் கொள்வதில்லை, உண்ட களைப்பு என 'ரெஸ்ட்' எடுப்பதில்லை, வெட்டி அரட்டை, வீண் கிசு கிசு என மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. இவற்றையெல்லாம் விட முக்கியமான அம்சம் இந்த ரோபோக்களின் துல்லியத்தன்மை. உதாரணமாக 1 மி.மீட்டர் அளவில் ஒரு துளையிட வேண்டும் அதுவும் ஆயிரக்கணக்கான துளைகளை இட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். மனிதர்களிடம் இதைச் செய்யச் சொன்னால் ஆயிரம் துளைகள் ஐந்நூறு வகைகளில் இருக்கக் கூடும். ஆனால் ரோபோக்கள் அப்படியில்லை. ஒன்று கூட மிஸ் ஆகாத நெத்தியடிதான்.

எங்கள் நிறுவனத்தின் முதலாளி சரியான கஞ்சூஸ். ஒவ்வொரு வாரமும் எங்களை அழைத்து புதிய ரோபோக்களை வடிவமைப்பது குறித்து பேசுவார். ஆனால் குறைந்த செலவுதான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார். ரோபோ வடிவமைப்பிற்குத் தேவையான சர்வோ மோட்டரை வாங்குவதற்குக் கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இந்தநிலையில் 'சீப் ரோபோக்களை' எப்படி செய்வது என்று நூடுல்ஸாகிக் கொண்டிருந்தோம்.

முதலாளியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் 'இண்டஸ்ட்ரியல் ரோபோவை' வடிவமைப்பது குறித்து தகவல்களைச் சேகரிக்கத் துவங்கினோம். மற்றவகை ரோபோக்களைவிடவும் இண்டஸ்ட்ரியல் ரோபோவின் வடிவமைப்பு எளிது. தகரத்தை வெட்டுவதையோ, வெல்டிங் செய்வதையோ அல்லது பொருளை இடம் மாற்றுவதையோ திரும்பத் திரும்பச் செய்வதுதான் பெரும்பான்மையான இண்டஸ்ட்ரியல் ரோபோக்களின் வேலை. இதைச் செய்யக் கூடிய ரோபோவை வடிவமைத்தால் போதும். அதற்கு பிறகு ரோபோவிற்கு மேக்கப் போட வேண்டியதுதான் பாக்கி. மேக்கப் என்பது அந்த ரோபோ மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான வசதிகளைச் செய்தல், அதன் தகவல் தொடர்பு முறைகள் இன்னபிற இன்னபிற.

இண்டஸ்ட்ரியல் ரோபோக்களை நிறைய ரோபோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் இந்த கம்பெனிகள் தங்களின் தயாரிப்புகள் பற்றி 'மூச்சு'விடுவதில்லை.  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ரோபோவை இயக்குவதற்கான மென்பொருளை வேறு எந்த நிறுவனத்தின் ரோபோவிலும் பயன்படுத்த முடியாது. அப்படி 'என்கோடிங்' செய்து வைத்திருப்பார்கள்.  ரோபோவில் சிறு பிரச்சினை என்றாலும் கூட சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட்களைத்தான் கூப்பிட வேண்டும். நாமாக சரி செய்துவிட முடியாது. இத்தகைய சீக்ரெட் சிக்கல்களால் ரோபோக்களை இந்தக் கம்பெனிகளிடம் வாங்கி பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் 'செளகரிய'த்திற்கு ஏற்ப நிறைய மாறுதல்களைச் செய்ய முடிவதில்லை என புலம்புகின்றன.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு ரோபோவை செய்வதற்கான திட்ட வரையறைகளுடன் முதலாளியை சந்திக்கச் சென்றோம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரோலை கொடுத்துவிடுவார்கள். அதை நாங்கள் தயாரிக்கவிருக்கும் ரோபோ துண்டுகளாக வெட்ட வேண்டும். முதல் வெட்டு 20 செ.மீ நீளத்தில் அடுத்த ஒவ்வொரு வெட்டிற்கும் 2 செ.மீ நீளம் குறைய வேண்டும். 4 செ.மீ நீளத்தில் துண்டை வெட்டி முடித்த பிறகு அடுத்த துண்டு மீண்டும் 20 செ.மீ நீளத்தில் தொடங்க  வேண்டும். எங்கள் விளக்கத்தில் இம்ப்ரெஸ் ஆன முதலாளி அனுமதி அளித்ததோடு ஐந்து இலட்சம் பணத்தையும் கொடுத்தார். இரண்டு மாதங்களில் ரோபோவை தயாரித்துவிட்டோம்.

நீளத்தை அளப்பதற்கு ஒரு சென்சார், வெட்டக் கூடிய பிளேடை இயக்கும் ஒரு ஹைட்ராலிக் சிலிண்டர், இந்த ஒட்டுமொத்த ரோபோவை கட்டுப்படுத்தும் ப்ராசஸர். இவ்வளவுதான் அடிப்படை. ப்ராசஸிரில் எழுதிய ப்ரோகிராம் மட்டும் கொஞ்சம் நாள் பிடித்தது என்றாலும் ரோபோவை சிம்பிளாக தயாரித்துவிட்டோம்.

ட்ரையல் ரன் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த நாள் முதலாளிக்கு விளக்கிவிட்டு தொழிற்சாலையில் நிறுவ வேண்டியதுதான் பாக்கி. முந்தின நாள் இரவில் இன்னொரு முறை சோதனை செய்துவிடலாம் என்று ரோபோவை ஓட விட்டோம். முதல் இருபது நிமிடங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதன் பிறகு திடீரென ரோபோவுக்குள் ரோல் சிக்கிக் கொண்டது. எங்களோடு பணி புரிந்த நண்பர் சிக்கிக் கொண்ட ரோலை நீக்க முயற்சித்தார். ஒரு நிமிடம்தான் இருக்கும். அவரது விரலும் சேர்ந்து ரோபோவுக்குள் சிக்கிக் கொண்டது. என்ன செய்வது என்று நாங்கள் சுதாரிப்பதற்குள் ரோபோ வெட்டத் துவங்கிவிட்டது. அவரது சுண்டுவிரல் எங்கள் கண் முன்னாலேயே துண்டிக்கப்பட்டது. "அய்யோ போயிந்தி அய்யோ போயிந்தி” என்று கதறதினார்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ரோபோக்களை தயாரிக்கும் போது சில பாதுகாப்பு அம்சங்களையும் கவனம் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் நிலவும் வெப்பநிலை, அழுத்தம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக ரோபோக்கள் இருக்க வேண்டும் அதே சமயம் அருகில் பணி புரியும் மனிதர்களுக்கு தீங்குவிளைவித்து விடாமலும் இருக்க வேண்டும். இந்த அம்சத்தில்தான் நாங்கள் கோட்டைவிட்டிருந்தோம். ஒரு 'எமெர்ஜென்சி ஸ்டாப்' இல்லாத ரோபோவாக எங்கள் ரோபோ பல்லிளித்தது.

இது நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ரோபோ முயற்சியை கைவிட்டு நாங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டோம். தனது சுண்டுவிரலை இழந்த நண்பர் மட்டும் அங்கேயே பணிபுரிகிறார். சில ரோபோக்களை வெற்றிகரமாக தயாரித்தும் விட்டார். இப்பொழுது அந்த நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் துறைக்கும் அவர்தான் தலைவர்.

[கல்கி வார இதழில் வெளியாகும் 'ரோபோஜாலம்' தொடரின் ஒரு அத்தியாயம்]

Oct 19, 2012

தங்கள் உடலைக் காட்ட வேண்டும் என பெண்களுக்கு ஏன் தோன்றுகிறது?"தங்கள் உடம்பைக் காண்பிக்க வேண்டும் என்று ஏன் பெண்களுக்கு மட்டும் தோன்றுகிறது?” இப்படி ஒரு கேள்வியை என்விகடன் கட்டுரையில் சாருநிவேதிதா கேட்டிருக்கிறார். சாருவுக்கு மட்டும் இப்படியான ‘இண்டரஸ்டிங்’ கேள்விகள் அவ்வப்பொழுது உதித்துவிடுகிறது. 

அவர் கேள்வி சரியானதாகப்படுகிறது. அழகு சார்ந்த விஷயங்களில் ஆண்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. பெண்குழந்தைகள் நேர்மாறு. ஆறு வயதிலிருந்தே அவர்களுக்கு தங்களின் அழகு மீது அதீத ஆர்வம் வந்துவிடுகிறது. நல்ல துணியை தேர்ந்தெடுப்பதிலிருந்து நகப்பூச்சு வரைக்கும் ஏகப்பட்ட நகாசு வேலைகளை ஆரம்பித்துவிடுகிறார்கள். பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் கையுறை போடாமல் தலையையும் முகத்தையும் எக்ஸ்ட்ரா துணி கொண்டு மூடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்தால் ஜென்மசாபல்யம் அடைந்துவிடலாம். கேட்டால் Health Conscious என்பார்கள். ஆனால் அடிப்படையான காரணம் Beauty conscious.

தங்களை கவர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என பெண்களை எது தூண்டுகிறது என்பதைத் தேடிப்போனால் பெண்களின் உடல் அமைப்பு ஏன் சதைத் திரட்டுடன் இருக்கிறது என்று முதல் கேள்வி எழலாம். அந்தத் சதைத் திரட்டுகளின் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் வருகிறது என்ற அடுத்த கேள்வியும் எழலாம். இப்படியே கேட்டுக் கொண்டு போனால் ஏதாவதொரு Feminist அடிக்கக் கூட வரலாம். 

மனிதன் காலங்காலமாக எதையெல்லாம் பயன்படுத்துகிறானோ அந்தத் திறமை அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக அறிவைச் சொல்லலாம். போன தலைமுறைக் குழந்தைகளை விடவும் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் அறிவாளிகள். இவர்களை விடவும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் அறிவாளிகளாக இருப்பார்கள்.

அதேபோல மனிதன் எதையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டானோ அது அவனைவிட்டு விலகிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுக்கு மோப்ப சக்தி எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. தனது மோப்ப சக்தியை பயன்படுத்துவதை மனிதன் குறைத்துக் கொண்டே வர அதுவும் அவனைவிட்டு விலகிவிட்டது. இப்பொழுது வாசம் பிடிக்க வேண்டுமானால் சட்டிக்குள் மூக்கைவிட்டு தாறுமாறாக உறிஞ்ச வேண்டியிருக்கிறது. வாலும் கூட அப்படி பயன்படுத்தாமல் விட்டதால் காணாமல் போன உறுப்பு என்கிறார்கள்.

சரி சாருவின் கேள்விக்கு என்ன பதில்? ஒரு காலத்தில் ஆண்கள் வேட்டைக்கு போவது, உணவு சேகரிப்பது என்று இருக்க பெண்களுக்கு இனப்பெருக்கம் என்ற டிபார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேட்டை, அலைச்சல் என்றிருந்தனால் ஆண்களுக்கு உடல் வலிமை என்பது இயல்பாகவே இருக்கிறது. பெண்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்களை ஈர்க்க வேண்டியிருந்ததால் கவர்ச்சியின் மீது கவனம் செலுத்தினார்கள். அதற்காக தங்கள் உடலின் சிறப்பு வாய்ந்த சதைப்பிடிப்பான பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதைப் பார்த்து ஜொள்ளுவிட்ட ஆண்கள் அதையேதான் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற  Behaviorகள் ஜீன்களில் பதிந்துவிடுகிறது. ஜீன்களில் பதிந்தது ஒருபக்கம் என்றால் அமத்தா, அம்மா என தலைமுறைதாண்டி குழந்தைகள் கற்றுக் கொள்வது இன்னொரு காரணம். தனது அம்மா தலை வாரி, பூச்சூடி, பொட்டு வைத்துக் கொள்வதை பார்க்கும் பெண் குழந்தை தானும் அதைச் செய்ய விரும்புகிறது. தனது தாத்தா, தந்தை தன் வீட்டுப் பெண்களை அடக்கி ஒடுக்குவதை பார்க்கும் ஆண் குழந்தை தானும் அதையே செய்ய விரும்புகிறது. 

இத்தகைய ’வீக்னெஸ்’ஸை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வணிக நிறுவனங்கள் முகப்பூச்சு க்ரீம்மில் ஆரம்பித்து, ஷாம்பூ, பவுடர் என சகல விளம்பரங்களிலும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும், சிவப்பாக இருக்க வேண்டும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள். சினிமாக்காரர்களாகட்டும், வணிக இதழ்களாகட்டும் அச்சுபிசகாமல் பெண்களை கவர்ச்சி பொம்மைகளாக நிறுவுவதில் குறியாக இருக்கின்றனர். இந்தக் கவர்ச்சி பொம்மைகளை பணம் காய்ச்சி மரங்களாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலான பெண்களுக்கு இது அவர்களையும் அறியாமல் மனதில் பதிந்துவிடுகிறது. 

என்னதான் இருந்தாலும் பெண்கள் கவர்ச்சி காட்டுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். கவர்ச்சி என்றால் உடலை காட்டுவது மட்டுமேயில்லை-அது ஒரு பகுதி அவ்வளவுதான். பிக்கப் செய்ய வேண்டியது ஆண்களின் வேலைதான். காலங்காலமாக இதுதான் தொடர்ந்து இப்பொழுது சாரு நிவேதிதாவின் கேள்வியில் வந்து நின்றிருக்கிறது.

Oct 18, 2012

ப்ராய்டின் பாலியல்சனிக்கிழமை இரவு. சாலைகளில் மழை நசநசத்துக் கொண்டிருக்கிறது. நனைந்து கொண்டே வேகமாக நடக்கிறேன். சாலையின் மறுமுனையிலிருந்து பாம்பு ஒன்று என்னை நோக்கி வேகமாக வருகிறது. திரும்பி ஓட எத்தனிக்கும் போது காலில் ஒரு போடு போட்டுவிடுகிறது. முடிந்தேன் என நினைத்து  கதறிக் கொண்டு விழித்துப்பார்த்தால் அத்தனையும் கனவு. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு பயம் முழுவதுமாக நீங்காமலேயே டிவியை பார்க்கத்துவங்கினேன். பல்லி விழுந்த பலனைத் தெரிந்துகொள்வதற்காக பஞ்சாங்கம் பார்ப்பதைவிடவும் கனவுகளின் பலன்களை தெரிந்துகொள்ள சிக்மண்ட் ப்ராய்டின்(Sigmund Freud) புத்தகத்தை புரட்டுவது சுவாரசியமானது.

மனுஷன் எதை எடுத்தாலும் செக்ஸில் கொண்டு போய்த்தான் நிறுத்துவார். கனவில் நீங்கள் கீழே விழுந்தாலும் பாலியல்தான் அல்லது உங்கள் பல் உடைந்து விழுந்தாலும் பாலியல்தான். அவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாலும் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வின் அத்தனை சிந்தனைகளும் பாலியலோடு தொடர்புடையவைதான் என்பதை ப்ராய்ட் நம்புகிறார்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது சற்று போர்வை நழுவினால் நிர்வாணமாக நடப்பது போல கனவு வருமாம். முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

ப்ராய்டின் பெரும்பாலான முடிவுகளும் Sexuality இல் முடிகின்றன என்பதுதான் அவரது ஆய்வு முடிவுகளை விமர்சிப்பவர்கள் முன் வைக்கும் எதிர்மறையான விமர்சனம். விமர்சனங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் ப்ராய்டை நம்புகிறேன். ஏன் நம்புகிறேன் என்பது அப்புறம். அதற்கு முன்பாக-


Oppan Gagnam Style பாடலை ஒரு முறை கேட்டுவிட்டேன். பிரம்மஹத்தி தோஷம் போல பிடித்துக் கொண்டது. அதையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.

பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தின் குடும்ப விழாவில்தான் முதன் முறையாக  கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. விழாவுக்காக கிட்டத்தட்ட இருபது இலட்சம் ரூபாயை அந்த ஒரு மாலைப்பொழுதில் செலவு செய்திருந்தார்கள். சாலை முழுவதும் பிரகாசித்த லைட்களும், பஃபே உணவும், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுமாக தூள் கிளப்பியது. அதே ஐடி நிறுவனத்து பைங்கிளிகள்தான் இந்தப்பாடலுக்கு நடனமாடினார்கள். கூடவே சில ஆண்களும் ஆடினார்கள். ஆனால் நான் ஆண்களை கவனிக்கவில்லை. ஏதோ ஹிந்திப்பாடல் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன்.

வீட்டிற்கு திரும்பிய பிறகு யூடியூப்பில் தேடிய போதுதான் கொரியப்பாடல் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு கோடிமுறை பார்த்திருக்கிறார்கள். அதில் நானும் சில நூறு முறை பார்த்துவிட்டேன். இந்த வீடியோவில் பாடகர் சையை விடவும், அவரோடு ஆடும் பெண்ணை விடவும், பாடலின் தொடக்கத்தில் ஆடும் குட்டிப்பையன் கண்ணிற்குள்ளேயே நிற்கிறான். வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு தூங்கிப்போன இரவில்தான் பாம்பு கொத்திய கனவு வந்தது. ஏன் பாம்பு கொத்திய கனவு வந்தது என்பதை கண்டுபிடிக்கத்தான் ப்ராய்ட் உதவிக் கொண்டிருக்கிறார்.

விலங்குகளின் வழியாக மனிதனை புரிந்து கொள்ள முயன்றால் ப்ராய்டை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடும். விலங்குகளுக்கு உணவு, இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் தவிர வேறு ஏதேனும் தேவைகள் இருக்கின்றனவா?  இந்த கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில். அவை மட்டும்தான் விலங்குகளுக்கு அடிப்படையான தேவைகள் என்பதால்  உணவுக்கான தேவையும், இனப்பெருக்கமும் விலங்குகளின் Conscious Mind இல் இருக்கின்றன.  Conscious Mind இல் இருப்பவை பற்றிய சிந்தனைதான் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும். அடுத்ததாக எதைத் தின்னலாம்? எங்கு தேடலாம்? எந்த ‘பார்ட்னரை’ பிக்கப் செய்யலாம்  என்று அவை யோசித்துக் கொண்டிருக்கும்.  conscious mind தான் நமது தினசரி நடவடிக்கைள் அடுத்து செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை முடிவு செய்கிறது.

மனிதர்களுக்கும் முன்பொரு காலத்தில் உணவும், இனப்பெருக்கமுதான் அடிப்படையாக இருந்தது. முன்பொரு காலம் என்பது ஆடையில்லாமல் குகைகளில் வாழ்ந்த காலம். வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கியவுடன், நாகரீகத்தின் பெயரால் உணவும், இனப்பெருக்கமும் Conscious Mind லிருந்து unconscious mind க்கு நகரத்துவங்கின. conscious mind இல் அழகாக இருக்க வேண்டும், அடுத்தவருடன் சரியாக பேச வேண்டும், ஸ்டைலாக நடக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் இடம்பிடித்துக் கொண்டன. 

மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் unconscious mind தான் ஒட்டுமொத்த ‘கேரக்டர்’ செயல்பாட்டுக்கும் அடிப்படை. இந்த நனவிலி அறிவுதான் மனிதனை வழிநடத்துகிறது. அவனின் குணத்தை நிர்ணயம் செய்கிறது. மனிதனின் நனவிலி அறிவில் பசியும் காமமும்தானே இருக்கின்றன. அப்படியானால் அவைதானே மனிதனை வழிநடத்துகின்றன? அதைத்தான் சிக்மண்ட் ப்ராய்டும் சொல்கிறார்.  

Oct 16, 2012

வெர்ச்சுவல் காமம்எங்கள் டீமில் பணிபுரியும் பெண் நேற்று ட்ரீட் கொடுத்தாள். சிக்கன் பீஸ்களை தட்டத்தில் அடுக்கி கொண்டிருந்த போது அருகில் வந்தாள். ’எதற்காக ட்ரீட்’ என்றேன். ஏற்கனவே காரணம் தெரியும் என்றாலும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. சென்ற வாரத்தில் அவளுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இனி தான் சுதந்திரமாவள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் சிக்கனுடனான எனது உரையாடலை ஆரம்பித்தேன்.

2012 ஆம் ஆண்டில் எனக்குத் தெரிந்த நண்பர்களில் மூன்றாவது விவாகரத்து இது. மற்ற இரண்டு விவாகரத்துகளுக்கான அடிப்படைக் காரணம்-வெர்ச்சுவல் செக்ஸ். மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்த சாட்டிங் விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி தெரிந்து கொள்ள அதில் இருந்து கணவன் மனைவிக்கு இடையேயான விரிசல் வேறு பல காரணங்களின் மூலமாக அதிகரித்து இறுதியில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

இவள் மஹாராஷ்டிராக்காரப் பெண். என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்டாள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இணையத்தில் சாட்டிங் செய்வதை கணவன் அனுமதிப்பதில்லை என்றும் தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்களை அவன் கண்காணிக்கிறான் என்றும் சொல்லியிருந்தாள். இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால் மூன்று விவாகரத்துக்களிலும் ’வெர்ச்சுவல் உலகம்’ முக்கிய பங்காற்றியிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சமூகச் சிக்கல் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தத் தலைமுறையில் தம்பதிகளுக்கிடையே விரிசலை உருவாக்கும் விஸ்வரூப பகைவனாக வெர்ச்சுவல் உலகம் அவதாரம் எடுத்திருக்கிறது. சாட்டிங், எஸ்.எம்.எஸ்களில் ஒபாமாவின் அரசியல் பிரச்சினைகளையும், மேட்டூரின் நீர் மட்ட அளவையுமா பேசுகிறார்கள்? பெரும்பாலானாவை பாலியல் சார்ந்த உரையாடல்கள்தான். தனிமை தரும் விரக்தியும், டெக்னாலஜி தரும் செளகரியங்களும் ஒருவனை எளிதாக ‘வெர்ச்சுவல் உலகத்தின்’ பக்கமாக தள்ளிவிடுகிறது. 

தனது சிக்கல்களை பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர்கள் இல்லை என்பதால் இணையத்தை நாடுகிறார்கள் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாகச் சொன்னார்கள். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. இணையத்திலேயே அதிக நேரம் செலவழிப்பதால் நல்ல நண்பர்கள் இல்லை என்கிறார்கள். இணையத்தில் உருவாகும் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களில் எண்பது சதவீதம் பொய்யானவை என்கிறார்கள். தொடர்ந்து பொய்யை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யும் போது மனிதன் மிகுந்த சிக்கல்கள் நிறைந்தவனாக மாறி விடுகிறான். 

இணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. ஒருவரால் ஒரே நேரத்தில் பத்து பேருடன் உறவுகளை தொடர முடிகிறது. அது எத்தனை அந்தரங்கமான உறவாக இருந்தாலும் அது பற்றி மற்ற ஒன்பது பேருக்கும் துளியும் தெரியாமல் பாதுகாத்துவிட முடியும். அந்தரங்கமான உறவும் உரையாடலும் தரக்கூடிய ’த்ரில்’ ஒருவனை தொடர்ந்து அடிமையாக்கி தன்னுடனேயே வைத்துக் கொள்கிறது. ஒரு அந்தரங்க உறவு கசக்கும் போது இன்னொரு உறவை ’வெர்ச்சுவல் உலகத்தில்’ தொடங்குவது என்பது மிக எளிதான காரியமாகியிருக்கிறது. உறவுகளை உருவாக்குவது, அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது, போர் அடிக்காமல் பாலியல் உரையாடல்களை தொடர்வது, அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அவற்றை பாதுகாப்பது போன்றவற்றிற்காக ஒரு இளைஞனும், இளைஞியும் தங்களின் சிந்தனையில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள் என ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்தது. இளைஞனும், இளைஞியும் மட்டும்தானா? என்று ஆய்வை நடத்தியவர்களுக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.

எதனால் பாலியல் சார்ந்த ’வெர்ச்சுவல்’ உரையாடல்கள் சமூகத்தில் மிக முக்கியமான இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். இந்திய சமூகத்தில் மட்டும் இது பிரதான பிரச்சினையில்லை. உலகம் முழுவதுமே இது வளர்ந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் காலங்காலமாக ‘பண்பாடு/கலாச்சாரம்’ என்ற பெயரில் பாலியல் இச்சைகள், அது சார்ந்த உரையாடல்களை தடை செய்து வைத்திருந்த ஆசிய நாடுகளில் பூதாகரமானதாக மாறியிருக்கிறது. 

பாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவது குற்றச்செயல் என்ற பிம்பம் நம் அறிவுகளில் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது அபிலாஷைகளை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கூட பேசாமல் தன்னை ‘புனிதராக’ கட்டமைத்துக் கொள்ளும் பாவனையைச் செய்வது நமக்கு பழக்கமானதாகியிருக்கிறது. இத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு பாலியல் சம்பந்தமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான கட்டடற்ற வெளியை ‘வெர்ச்சுவல்’ உலகம் உருவாக்கித் தந்துவிடுகிறது.

இணையத்தில் உருவாகும் நட்புகளில் தன்னை ‘புனிதராக’ மெய்ண்டெய்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதால் எதைப்பற்றி வேண்டுமானாலும் துணிச்சலாக பேசி, எந்த Extremeக்கு வேண்டுமானாலும் செல்வது சாதாரணமாகியிருக்கிறது. இது நகர்ப்புறம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. கிராமப்புறத்தில் நிகழும் கள்ள உறவுகள் சார்ந்த  பிரச்சினைகளின் பிண்ணனியிலும் எஸ்.எம்.எஸ்கள் மூலமாக உருவாகும் ‘வெர்ச்சுவல் உலகம்’ மிக முக்கியமான இடம் பெறத்துவங்கியிருக்கிறது. இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Oct 15, 2012

சுத்தி...சுத்தி...வேட்டைநாய்கள்
நேற்று மழை. பேய்மழை. சேலத்தில் இருந்து பெங்களூரை அடையும் போது பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியிருக்கும்.  நடப்பது பிரச்சினையில்லை. ஆனால் பயமூட்டக் கூடிய விஷயம்- இந்தப் பாதையில் வீடுகள் அதிகம் இல்லை. திருடர்களின் மீதான பயம் ஓரத்தில் இருந்தாலும் நாய்களின் மீதான பயம்தான் என்னை முழுவதுமாக கவ்வியிருந்தது. அந்த ஏரியாவை தங்களைவிட்டால் காவல் காக்க ஆளில்லை என்பது போல தெருநாய்கள் செய்யும் அழிச்சாட்டியம் டூ மச்.

தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க சில உபாயங்களை கண்டறிந்து வைத்திருக்கிறேன். முடிந்தவரை செருப்பு நிலத்தில் உரசும் சத்தம் கேட்காமல் நடப்பது, நடக்கும் போது கைகளை கட்டிக் கொள்ளாமல் அல்லது பாக்கெட்களில் நுழைத்துக் கொள்ளாமல் இருப்பது, வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடக்கக் கூடாது. மித வேகத்தில் நடக்க வேண்டும் அதே சமயம் நாய்கள் இருப்பது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இல்லை என்ற பாவனையில் நடிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாதபட்சத்தில் குனிந்து கல்லை எடுப்பது போல ‘ஆக்‌ஷன்’ செய்ய வேண்டும்.  பெரும்பாலான தெருநாய்கள் தாங்கள் குட்டியாக இருந்த
காலத்தில் இருந்தே கல்லடி வாங்கி வளர்ந்தவை என்பதால் கல்லுக்கு பயப்படாத தெருநாய்கள் மிக அரிது. இத்தனையும் மீறி குரைத்துக்கொண்டு வந்தால் எனக்கு வழி தெரியாது. பாடிகாட் முனீஸ்வரன் காப்பாற்றுவார் என நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்று பஸ்ஸை விட்டு இறங்கியதுமே சில கற்களை பொறுக்கி கைகளில் வைத்துக் கொண்டேன். கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். பின்னால் நான்கு இளைஞர்கள் நடந்துவந்தார்கள். நான்கு பேருக்கும் இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். சினிமா பார்த்துவிட்டோ அல்லது வேறு எங்கிருந்தோ வருகிறார்கள். அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.  இவர்கள் இருப்பதால் நாய்களிடம் இருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என்பதால் கற்களை கீழே போட்டுவிட்டேன். அவர்களுக்கும் எனக்கும் தூரம் ஒரே அளவில் இருக்கும் படியாக வேகத்தை குறைத்தும் அதிகரித்தும் நடந்தேன்.

பாதி தூரம் நடந்த பிறகு ஒருவன் எனக்கு முன்பாக வந்து “அண்ணய்யா” என்றான். அவனை பார்த்தேன். கன்னடத்தில் ஏதோ கேட்டான். வழி கேட்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. “கொத்தில்லா” என்றபடியே மெலிதாக சிரித்துவிட்டு நகர்ந்தேன். இப்பொழுது நான்கு பேரும் அருகில் வந்திருந்தார்கள்.

ஒருவன் பணம் வேண்டும் என்றான். ஏன்? எதற்கு? என்று கேட்பதில் அர்த்தமில்லை என்று தெரியும். “பணம் இல்லை” என்றேன். பர்ஸைக் கொடு என்றான். அவன் கேட்டதில் எனக்கு கடன்காரன் கடனாளியிடம் கேட்பது போன்ற தொனி இருந்தது. பர்ஸ் இல்லை என்றேன். சட்டைப் பாக்கெட்டில் எழுபது ரூபாய், பேண்ல் பாக்கெட்ட்டில் இருநூற்றுச் சொச்சம் இருந்தது. பஸ்ஸில் வரும்போது தூங்குவதற்கு வசதியாக பையில்  மறைவாக இருக்கும் ‘ஜிப்’புக்குள் பர்ஸை வைத்திருந்தேன்.

எனது பையை காட்டச் சொன்னான். ஜூனியர்விகடன், டைம்பாஸ், கல்கி தவிர எதுவுமில்லாத பை அது. பையிலிருந்த இன்னொரு ‘ஜிப்’பை திறந்து காட்டச் சொன்னான். அதில் மொபைல் சார்ஜர் மட்டும் இருந்தது. அதையும் வாங்கிக் கொண்டான். மறைவாக இருந்த ஜிப் அவன் கண்ணுக்கு படவில்லை. பாக்கெட்களில் இருந்த பணத்தை எடுத்துக் காட்டினேன். கையில் இருந்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டார்கள். கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி அடிக்கப்பட்ட கொள்ளை அது.

நான் போகிறேன் என்றேன். கையை ஓங்கிக் கொண்டு வந்தான் இன்னொருவன். அறைந்துவிடுவான் என்று நினைத்தேன். அடிக்கவில்லை. போய்விடு என்றான். எதுவும் காட்டிக் கொள்ளாமல் நகர்வதைத் தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

என் மீதான வன்முறைக்கு எந்த பதிலடியும் தரவியலாத கையலாகாததனம் வேதனைக்குள்ளாக்கியது. வேட்டையாடபட்ட மனநிலையில் இருந்தேன். நூறு ரூபாய்க்கு ஒரு பொம்மை கேட்டான் என்பதற்காக மகனை கடிந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்து எனது வேதனையில் பெட்ரோலை ஊற்றியது.

வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு திருப்பத்தில் நாய்கள் குரைத்துக் கொண்டு வந்தன. மனித நாய்களுக்கு இவை பரவாயில்லை என்று தோன்றியது. அவை பரிதாபகரமானவையாகத் தோன்றின. இப்பொழுது அந்த நாய்களை அடிப்பதற்காக குனிந்து கல்லை எடுக்கவில்லை.

Oct 13, 2012

கூச்சம் கொள்ளச் செய்யும் கவிதைகள்


ஒரு கவிஞன் வாழும் சமகாலத்தின் முகத்திற்கும் முதுகுக்குமான தொடர்பை மொழிவழியில் கண்டடைகிறான். அதில் தன் விடுதலைக்காக மட்டுமின்றி தேச விடுதலைக்கான தேடலையும் மேற்கொள்ள வேண்டியிருக்கு. பெருத்த மனக்குழப்பங்களோடு ததும்பும் கண்ணீரில் வா.மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெளிச்சம்’ தொகுப்பு பயணிக்கிறது. இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் குழந்தைகள் உலகம், மரணம், காதலென பரவியுள்ளது.

கணக்கற்ற கவிதைகளையும் கதையாடல்களையும் உலகெங்கும் தன் வெளிச்சத்தில் பிதுக்கியபடி இருக்கும் நிலாவை ‘நிலவு மிதந்த சாக்கடை’ கவிதையில், நிலாப் பாட்டியை ‘வீதி நுனிச்/சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்’ எனும் வரிகளின் மூலமாக வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியாமல் மழுப்பலான பதிலாலோ, அதிகாரத்தை கையாண்டோ சமாளித்து விடுவதை ‘கடலுக்குள் புதைந்த கேள்விகள்’ கவிதையில் 'கடலுக்குள்/மிதக்கின்றன/ஆயிரம் கேள்விகள் கேட்பாரற்று' என முடித்திருப்பார். 

குழந்தைகள் வியத்தகு கற்பனைகள் நிரம்பியவர்கள் என்பதை 'கடவுளும் ஸ்ரீநிதியும்’ கவிதையில் அழகிய கதையாடலை வாசிப்பவர்களின் நினைவில் ஊன்றிவிடுகிறார். கடவுள் ஒரு வெள்ளைத்தாளில் புது உலகை படைக்க நினைத்து வரைய முற்பட்டு முடியாது போக ஸ்ரீநிதியிடம் கொடுத்துவிடுவார், அவளோ வெற்றுத்தாளில் அம்மா, ஆடு, இலை வரைந்து அம்மா வேடிக்கை பார்க்க ஆடு இலையை தின்றது என முடிந்திருப்பதை கடவுள் பார்க்க ஆடு தின்ற மீதி இலை தாள் முழுவதும் விரவிக்கிடக்க இனி புது உலகம் இல்லை எனும் செய்தி பரவியது என முடியும் கவிதை. நாம் அம்மா, ஆடு, இலையை வாசித்தும் கேட்டும், கற்றும் கொடுத்திருக்கிறோம் இனி இம் மூன்று வார்த்தைகளும் இக்கதையாடலை நினைவூட்டும்.

‘எந்தப் புகாரும் இல்லை’ கவிதை குழந்தைகள் எல்லாவற்றையும் அவர்களின் மனவோட்டத்தில்தான் அணுகுவார்கள் என்பதை காட்டுகிறது. காதல் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். ஒவ்வொருவருக்குமான தனித்த அனுபவம் அலாதியானது. வாழ்வின் எல்லா கணங்களிலும் காதலியின் நினைவோடு இருப்பவனுக்கு அதை சொல்வது எவ்வளவு கடினம் என்பதை ‘பிரியம் படிந்த வாக்குமூலம்’ கவிதையில் உனை நினைக்காத நேரத்தை மட்டும் சொல்வது எனக்கு எளிது என்கிறார். இப்படியான வாழ்முறையில் இருப்பவனுக்கு பிரிவு எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கு.

ஒரு அழுகை, துயரம், வெறுமையென ஒற்றை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதென்பதை ‘போன்றில்லாத பிரிவு’ கவிதையிலும், அவளற்ற வெறுமையை என்ன செய்வதென்ற பித்த நிலையை ‘நீ இல்லையென்றும் வெறுமை’ கவிதையிலும், எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தின் தனிமையின் எச்சம் நினைவின் சாலையெங்கும் பறவையின் எச்சமாக உதிர்ந்து கிடக்கும் அவஸ்தையை ‘யாரும் பாதிக்காத கால்தடங்கள்’ கவிதையிலும், பிரிவை விடவும் காதல் புறக்கணிப்பு அவஸ்தைமிக்கது. 

கண்ணீர், விசும்பல், நெஞ்சுக்குழியெங்கும் வியாபித்திருக்கும் கசப்புச்சுவையை ஒத்ததென்கிறார், 'புறக்கணிப்பின் கசப்புச் சுவை’ கவிதையில் கருணையின் நஞ்சை/கொஞ்சம் பருக விடுவென கேட்கும் ‘அன்பின் சாட்சியோடு’ கவிதை ‘முத்தத்தின் பழைய ஈரம்‘ கவிதையில் வெட்டுப்பட்ட மரத்தின் கசிவென/கசக்கிறது/நம் முத்தத்தின்/பழைய ஈரம் என முடிவுறுகிறது.

காதல் இன்பத்திலும் கொல்லும் அவஸ்தையிலும் கொல்லும் என்ற உண்மையின் உயிர் கவிதைகளில் பரவிக்கிடக்கிறது. ஆசை, பயம் இன்றி வாழ்வு உண்டா? மரண பயமின்றி யார் இருக்கிறோம். மரணம் பெருத்த மௌனத்தையும், வரலாற்றையும் கொண்டது. பிற சொற்களை சொல்லி எளிதில் கடந்து விடுவதைப்போல ‘மரணம்’ என்ற சொல்லை வெறுமனே சொல்லி கடந்துவிட முடியாதென்பதை ‘மரணத்தை எப்படி சொல்வீர்கள்’, கவிதையிலும், நமக்கேன் வம்பு என பார்த்தும் பார்க்காதவாறு புறக்கணித்த அனாதை பிணங்களை கண்முன் ஊசலாட விடுகிறார் ‘அநாதமையின் நிகழ் வரலாறு’  கவிதையில்.

மயானத்தின் சூழல் எந்த பிண வரவையும் எவ்வித சலனமின்றி இயல்போடு ஏற்றுக்கொள்வதை ‘ஸ்தம்பிதமில்லாத மயானம்’ கவிதையிலும், பேருந்து அல்லது ரயிலில் அடிப்பட்டு செத்துக் கிடப்பவர்கள் குறித்து பயணிப்பவர்கள் தங்களின் எல்லையற்ற யூகங்களை அவர்களை எட்டிப் பார்த்துவிட்டு கூறிக்கொண்டிருப்பதை கேலி செய்கிறது ‘விடைகளற்ற புதிர்கள்’ கவிதை. மலர்தலின் கணிதம்/சிகரெட் புகையின் ஓவியம்/உறங்கும் குழந்தையின் புன்னகையென எளிய சூத்திரம்தான் மரணம் என்கிறார் ‘மரணச் சூத்திரம்’ கவிதையில். இக்கவிதையின் நீட்சியை ‘எளியதொரு மரணத்திற்கான காத்திருப்பு’, உயிர் பிரிதலின் ஓசை’ கவிதைகளில் காணமுடிகிறது. 

அச்சம் சூழ எட்டிப்பார்க்கும் பிணவறையை பிசாசுகளின் விடுதி’ கவிதையிலும் உள்ள மோனநிலை அவஸ்தையை நமக்கும் தொற்றிக்கொள்ள செய்கிறார். மரணம் தன் சார்ந்து நிகழ்கையில் பெரும்வலி நிரம்பியும், வேறானவர்களுக்கு நிகழ்கையில் செய்தியாக மாற்றம்கொள்வதன் யதார்த்தம் மரணம் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

மழை ஓய்ந்த பின் இரவின் அமைதியை கொண்டாடப்பட வேண்டிய மரணம் என்கிறார் ‘மழை ஓய்ந்த இரவு’ கவிதையில். நகரங்களின் தெருவோரம் பஸ், ரயில் என தான் விற்கும் பொருளை தன் வார்த்தைகளில் சொற்களை நதியென அலைவுறச் செய்து விற்பனை செய்யும் லாவகம் மிக்க சாதூரியத்தை ‘வண்ணக் கைக்குட்டை விற்பவன்’ கவிதையில் ஓவியமாக்கியுள்ளார்.

நம்மில் இருந்து பிரியும் நிழல், நாம் ஆச்சரியம் கொள்ள பெருத்தும் சிறுத்தும் அலைவுறுவது குறித்த ஆய்வில் நிழலோடு விளையாடி சலித்து தோற்ற குழந்தையாகத்தான் நிற்கிறோம் என்கிறார் ‘நிழல் குறிப்பு’ கவிதையில்.

கவிதையின் பாடுபொருள்கள் பஞ்சமற்று கிடக்கிறது நம் கண்முன். தினசரி தோற்றம் கொள்ளும் விசயம்தான் யாராவது கவிதையில் சுட்டிக்காட்ட சுரணை வருகிறது. சுண்ணாம்பை உதிர்த்து ஓவியங்களை வரைந்து நிற்கும் சுவர்கள் குறித்த ‘சுவரில் ஊரும் கதைகள்’ கவிதை நாம் பார்த்த சுவருக்கும் நமக்குமான வாழ்பனுவங்களை நினைவில் தெறிக்கச் செய்கிறது.

நல்ல நேர்த்தியான வெளிப்பாடு, விளம்பர பலகையில் படுத்துக்கிடக்கும் பெண்ணிற்கும் பார்வையாளனுக்குமான ஈர்ப்பு குறித்து ‘வினைல் காதல்’ கவிதை. காலமாற்றத்தில் நாம் இழந்து நிற்கும் பல அனுபவங்களை நிழலென தொடரச் செய்து விடுகிறது. ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதை. கண்களில் சாந்தம் பொங்க கனவற்று வேட்கையற்று நிதானமாக நகர்வலம் வரும் பைத்தியக்காரன்களையும் ‘மேலும் ஒரு பைத்தியக்காரன்’ கவிதையில் ஆயிரம் காரணங்கள்/அவனுக்கு என தன் கவனிப்பை பதிந்துள்ளார்.

வெகு நாட்களாய் கூட்டிலிருந்த குருவி தன் நிழலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறது. கூடு திறக்க பறந்தலின் சுகத்திற்காக உயரம் செல்ல நிழல் சிறிதாகிறது. தன் காதலை இழந்துவிடுவோமோ என பயத்தால் தன்னை கல்லாக்கிக்கொண்டது எனும் ‘அமத்தா சொன்ன கதை’ கவிதை நினைவில் அசைபோட்டு லயிக்கச் செய்கிறது.

தட்டான் வாலில் புல் செருகி ராக்கெட்டாக பறக்க விடுதல், பொன்வண்டை நூலில் கட்டிவைத்து வண்ண முட்டை காணுதல், நாயின் மீது கல்லெறிதல், குளிக்கும் பெண்ணை எட்டிப்பார்த்து அவள் திட்டுவதை ரசித்தல், கோழியின் கழுத்தை திருகி கொல்லுதல் என எளிதில் கிட்டும் ஆத்ம திருப்திக்காக நீளும் அவரின் பட்டியல்களையும் மீறி அவரவர்களுக்கான பட்டியல் இன்னும் நீண்டு பால்யத்தில் வாழவைக்கிறது ‘ஆத்மதிருப்தி’ கவிதை.

பிரக்ஞையற்ற மரக்கிளை/சாவாதனமாக/சன்னலை உரசுகிறது, 

ஒருத்தியின் சிரிப்பொலியோடு/மெல்ல நகர்கிறது ரயில்,

கடைசி பேருந்துக்காக /காத்திருக்கும் இளம் தம்பதி,

மழைக்காற்று உதிர்த்த/செடிக் கிளைச்/சூரியன்கள்-

என நீளும் நிறைய தெறிப்புகள் தொகுப்பெங்கும் காணக்கிடக்கிறது. நாம் காணத் தவறிய சொல்ல நினைத்த விசயங்களை அக்கறையோடு எளிமையோடு சொல்லிச் செல்லும் இவரின் கவிதைகள் கூச்சம் கொள்ள செய்துகிறது.

[கண்ணாடியில் நகரும் வெயில் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் ந.பெரியசாமி எழுதிய விமர்சனம். கவிதைத் தொகுப்பை மின் நூலாக தரவிறக்கம் செய்ய  க்ளிக் செய்யவும். ந.பெரியசாமியின் வலைப்பதிவு இங்கே]

Oct 12, 2012

மாற்றான் - வென்றானா? தோற்றானா?


பெங்களூரின் குளு குளு ஏ.சி தியேட்டர் களை கட்டியிருக்கிறது. பார்த்த பக்கமெல்லாம் சூர்யாவும் காஜல் அகர்வாலும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்றான் ரிலீஸ் பெங்களூர் தியேட்டர்களையும் பதம் பார்த்திருக்கிறது. தமிழில் வெளியிட தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். கன்னட பதிப்புக்கே இத்தனை அலப்பறையும்.

கதை சிம்பிள். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் அதிரடி சரவெடிதான் படம் முழுவதும். எம்.ஜி.ஆர் மச்சம் வைத்து தோற்றத்தை மாற்றி 'டபுள் ஆக்ட்' தருவது போல ஹேர்ஸ்டைலில் வித்தியாசம்  காட்டியிருக்கிறார் சூர்யா. இரண்டு சூர்யாக்களின் படத்தை அருகருகே போடும் போஸ்டர்களிலாவது புருவத்தில் வித்தியாசம் காட்டியிருக்கலாம். சண்டைக்காட்சிகளில் சூர்யா அடித்து நொறுக்குகிறார். படம் பார்ப்பவர்களுக்கும் முறுக்கேறுகிறது. ரொமான்ஸ் காட்சிகளில் அமுல்பேபியாகியிருக்கிறார். இரட்டையர்களில் ஒருவரான அகி தான் டாப் ஸ்கோரர்.

காஜல் அகர்வால்- பெயரில் மட்டும் ஸ்வீட் கடை இல்லை. ஆளே ஸ்வீட்தான். அந்தக் கண்களும், சிரிப்பும்...அவருக்காகவே இந்தப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் போலிருக்கிறது. ஆனால் அவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் மற்ற அனேக தமிழ்ப்படங்களைப் போலவே 'துக்கினியூண்டு'தான். கிடைத்த வாய்ப்பில் சிரித்து கொஞ்சம் டூயட் பாடி போயிருக்கிறார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் ஏமாற்றவில்லை. அயன், கோ- இதையெல்லாம் கலந்து அடித்திருக்கிறார். இந்தப் படங்களை  நான் முன்பு பார்த்ததில்லை. மாற்றான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் இரண்டு நாட்களாக டிவிடியில் பார்த்திருந்தேன். தனது முந்தைய படங்களின் பாடல்காட்சிகளில் தான் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் கே.வி.ஆனந்த் இந்தப் படத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நாணி கோணி பாடல் காட்சி நார்வேயில் படமாக்கப்பட்டிருக்கிறது. அத்தனை குளுமை. அத்தனை அழகு.

இந்தப்பாடல் மட்டுமில்லை எல்லாப்பாடல்களுமே ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான துள்ளலுடன் அட்டகாசம். தாமரையின் 'யாரோ யாரோ' பாடல்வரிகள் அக்மார்க் தாமரை ரகம். நா.முத்துக்குமார், விவேகாவும் பின்னியிருக்கிறார்கள். ஹாரிஸ் சார், நீங்க பேக்ரவுண்ட் மியூஸிக்கில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அப்பப்போ கோட்டை விட்டிருக்கீங்க.

ஒளிப்பதிவாளர் சுந்தர்ராஜூக்கு ஒரு சல்யூட். சூர்யாவின் அறிமுகக் காட்சியில் காமிராவை இன்னும் பதினோரு டிகிரி கீழே இருந்து கோணலாக வைத்திருக்கலாம். மற்றபடி படம் முழுவதும் அப்படியே கண்ணுக்குள் பதிகிறது.

கல்பாத்தி எஸ்.அகோரத்திற்கு தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் பொன் ஆகிறது. இப்பொழுது மாற்றான் மூலம் இன்னுமொரு ஹிட் அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

[நான் இன்னும் 'மாற்றான்' பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமும் இல்லை. படம் பார்க்காமல் 'ப்லாக்'கில் விமர்சனம் எழுதுவது எப்படி என்ற முயற்சியின் தொடக்கம் இது. ரிலீஸே ஆகாத படத்துக்கு விமர்சனம் எழுதுவது குறித்து 'துப்பாக்கி'யை வைத்து முயற்சி நடக்கிறது]

மரங்கொத்திக்கும் புழுவுக்குமான போராட்டம்


கவிதை என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வரையறை எதுவும் இல்லை. 'இதைத்தான்' கவிதை செய்ய வேண்டும் என்று சொல்வதற்கான உரிமையும் யாருக்கும் இல்லை. மக்களின் பிரச்சினைகளையும், சமூகத்தின் சிக்கல்களையும் பேசுவதுதான் கவிதை என வரையறைக்குள் குறுக்குவதெல்லாம் கிட்டத்தட்ட பாவச்செயல் மாதிரிதான். சமூகம், புரட்சி என எல்லாவற்றையும் தாண்டி சாமானிய தனிமனிதனின் சிக்கல்களையும், அவனின் ரசனை சார்ந்த விஷயங்களை மட்டுமே கூட ஒடுங்கிய குரலில் தாராளமாக  பேசலாம். 

பொன்.வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை" என்னும் தொகுப்பில் இருக்கும் கவிதை இது. இன்று வாசிக்கும் போது வித்தியாசமான அனுபவமாக உணர முடிந்தது.                                                      உயிர்ப்பிரதி

வெகுநாட்களுக்குப் பிறகு
மரங்கொத்திப் பறவையைக் 
காண நேரிட்டது

காயத்ரியின் புத்தகத்திலிருந்த
அம்மரங்கொத்தி
மொட்டை மரத்தொன்றில்
ஏற்கனவே வரையப்பட்டிருந்த
பொந்திற்குள் தன் அலகை நுழைத்தபடி
பெருங்குரூரம் ஏதுமற்று
தனக்கான உணவுப் புழுக்களைத்
அத்துவாரத்தில் தேடிக் கொண்டிருந்தது

புழுக்களோ மரங்கொத்தியின்
உணவுத்தேவை குறித்த
கவலையேதுமற்று
அதே அறிவியல் புத்தகத்தின்
உயிரியல் பிரிவில்
மல்லாந்து கிடந்து
பாவனை செய்து கொண்டிருந்தது
காயத்ரி வரைவதற்கு ஏதுவாய்.


காயத்ரியின் புத்தகத்தில் ஒரு மரங்கொத்திப்பறவையின் ஓவியம் இருக்கிறது. ஒரு பொந்திற்குள் தன் அலகை நுழைத்தபடி இருப்பது போல அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அந்த ஓவியத்தை வரைந்தவன் ஏதோ ஒரு காரணத்திற்காக மரங்கொத்திப் பறவை பொந்துக்குள் தன் அலகை நுழைத்திருப்பது போல வரைந்திருக்கக் கூடும். இந்த ஓவியத்திற்கு கவிஞன் உயிர் கொடுக்கிறான். ஓவியத்திலிருக்கும் அந்தப் பறவை புழுவை தேடுவதற்காகத்தான் தன் அலகை பொந்துக்குள் நுழைத்திருக்கிறது என  உறுதியாக நம்புகிறான். இது கவிஞனின் கற்பனை. ஓவியத்திலிருந்து இயற்கையை நோக்கி பயணிக்கும் கவிஞனின் கற்பனை.

அதே புத்தகத்தில் இன்னொரு பக்கத்தில் புழு இருக்கிறது. இதுவும் ஓவியம்தான். முன்பு பார்த்த மரங்கொத்திப்பறவையை இந்தப் புழுவோடு தொடர்பு படுத்துகிறது கவிதை. மரங்கொத்திப்பறவை தன்னைத் தின்றுவிடக் கூடும் என்ற எந்தக் கவலையுமில்லாமல் காயத்ரி தன்னை வரைவதற்கு ஏதுவாக 'போஸ்' கொடுத்துக் கொண்டிருக்கிறது புழு என்கிறார் கவிஞர். புழுவுக்கு கவலையில்லை என்பதும் கவிஞனின் Assumption தான்.

1 - புழுவுக்காகத்தான் பொந்துக்குள் தேடுகிறது, 2- கவலையற்ற புழு என்ற கவிஞனின் இரண்டு உறுதியான முடிவுகள்தான் கவிதையில் இருக்கும் வாசகவெளி என நம்புகிறேன். கவிஞன் எதனால் இத்தனை உறுதியாகச் சொல்கிறான் என்ற கேள்வி வாசகனுக்கு கிளைக் கேள்விகளை உருவாக்குகிறது. குஞ்சுகளுக்கு உணவு தருவதற்காக கூட அந்தப்பறவை தனது அலகை பொந்துக்குள் நுழைத்திருக்கலாம் அல்லது வேறு காரணத்திற்காக ஏன் அலகை நுழைத்திருக்கக் கூடாது என வாசகன் சுயமாக யோசிக்க இடம் இருக்கிறது. Reader's space எனப்படும் வாசகருக்கான வெளியை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் சுவாரசியத்தின் அளவை நம்மால் கூட்டிக் கொள்ள முடியும். 

மரங்கொத்திக்கும் புழுவுக்குமான இடையிலான போராட்டத்தை நம் வாழ்வுக்கும் நமக்குமான போராட்டத்தோடு எளிதில் பொருத்திக் கொள்ள முடியும். நாம் ஒவ்வொரு நாளும் வேட்டையாடப்படுவதாகவோ அல்லது வேட்டையை நடத்துபவராகவோ நம்மை கற்பனை செய்துகொள்ள முடிகிறது.  காயத்ரியின் புத்தகத்தை விட்டு மரங்கொத்திxபுழு என்ற இரு படிமங்களை வைத்து கவிதையை வெவ்வேறு தளத்திற்கு வாசகனால் நகர்த்த முடிகிறது. இந்த நகர்த்தல், இந்த கற்பனை, இந்த அனுபவத்தைத்தானே வாசிப்பனுபவம் என்கிறோம். இதைத்தானே கவிதையிடம் இருந்து வாசகன் எதிர்பார்ப்பது?

ஓவியங்களுக்கு உயிர்கொடுத்து அவற்றை கவிதைகளில் உலவச் செய்வதும், கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து கவிதை எழுதுவதும் கவிதையியல் நுட்பம். கொஞ்சம் பழைய நுட்பம் கூட. ஆனால் அதை சரியாகச் செய்துவிடும் போது சுவாரசியம் குறைவதில்லை என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம். சலனத்தை நேரடியாக வாசகனுக்குள் கவிதை உருவாக்குவதில்லை. ஆனால் சலனமடைவதற்கு ஏதுவான அத்தனை சூழலையும் உருவாக்கியிருக்கிறது இந்தக் கவிதை.

Oct 11, 2012

பொய்யர்கள் சூழ் உலகுதன்னை யாராவது Optimist என்று சொல்லிக்கொண்டால் அவர்களை பார்க்க பாவமாக இருக்கிறது. யோசிப்பவையெல்லாம் நல்லனவாகவும், நேர்மறையானதாகவும் இருக்க வேண்டுமானால் அது எவ்வளவு கடினமானது? வாழ்க்கை அத்தனை எளிமையானதாகவா இருக்கிறது? எப்பொழுது வேண்டுமானாலும் எந்த பிரளயமும் அரங்கேறலாம் என்ற நெருக்கடியான வாழ்முறையில் எல்லாவற்றையும் நல்லதாகவே யோசித்துக் கொண்டிருப்பது இன்னுமொரு நெருக்கடி.

கணேஷ் என்ற நண்பர் அப்படியான ஆப்டிமிஸ்ட். திருநெல்வேலிப்பக்கத்துக்காரர்.  வயது நாற்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்துகொள்ளவில்லை. பெங்களூரில் ஒரு ப்ளாட் விலைக்கு வாங்கி தனியாக வாழ்கிறார். குடியிருக்கிறார் என்பதை விட வாழ்கிறார் என்பதுதான் சரியாக இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக செலவு செய்வார். அதுவும் தனக்கே தனக்காக. இவரைப் போல எந்த மனிதனுக்கும் வாழ்க்கை அமையாது என்று நினைக்க வைத்துவிடும் கேரக்டர். ஞாயிற்றுக்கிழமை காலையில் போன் அடிக்கும். எடுத்துப் பேசினால் "கூர்க் வந்திருக்கேன். ரம்மியமா இருக்கு. ஒரு ரோஜா செடி கிட்ட நின்னுட்டு இருக்கேன். இயற்கையா நிலத்தில் முளைச்ச செடி. பனியில நனைஞ்சிருக்கு. உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சு" என்பார். 

இன்னொரு நாள் இரவு காதைக் கிழிக்கும் இசையின் பின்ணனி சப்தத்தில் அழைப்பார் "நீங்க பேசறது ஒண்ணுமே கேட்கலை" என்று கத்த வேண்டியிருக்கும். அவருக்கு கேட்கிறதோ இல்லையோ பக்கத்துவீட்டில் இருக்கும் செவிட்டு தாத்தாவுக்கே கேட்கும். "ஒரு நிமிஷம்... வெளியே வர்றேன்" என்று சொல்லிவிட்டு அமைதியான சூழலில் நின்று ஒரு அப்டேட் தருவார். "ஒண்ணுமில்ல நம்ம டீம்ல இருக்காளே நிவேதிதா அவ கூட ஒரு பப்புக்கு வந்தேன். அவளோட ஃப்ரெண்ட்டை பார்த்துட்டா. அவன் கூட பேசிட்டு இருக்கா. கேப்ல உங்களுக்கு போன் பண்ணினேன்" என்று சொல்லிவிட்டு சிரிப்பார். நிவேதிதாவா என்று என் வாயைப் பிளக்க வைப்பதில் அவருக்கு ஒரு சந்தோஷம். நிவேதிதா மராத்தி. சுண்டினால் ரத்தம் தெறிக்கும் நிறம் என்று சொல்வார்களே அதை அவளின் நிறத்தை பார்த்தபிறகுதான் நம்பினேன்.

"நம்ம மேனேஜர் சரியில்லை" என்றால் "நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்" என்பார். "ரிசஸன் வந்துடும் போல" என்றால் "வரவரைக்கும் என்ஜாய்" என்று கடுப்பேற்றுவார். "இந்த ஊரில் வேலையில்லை என்றால் ப்ளாட்டை விற்றுவிட்டு திருநெல்வேலிக்கே போய்டுவேன்" என்று அவர் சொல்வார். அவருக்கு அது ரொம்ப ஈஸி. பசங்களுக்கு ஸ்கூல், பெர்சனல் லோன், ஹவுஸிங் லோன், இ.எம்.ஐ இத்யாதி இத்யாதி என்று எந்தப் பிக்கலும் இல்லை. நமக்கு அப்படியா? நினைத்தாலே தலை சுற்றும். 

சென்றவாரம் அலுவலகத்தில் கடும் வேலை. மென்று துப்பினார்கள். வெள்ளிக்கிழமை வந்த போது சுமந்து கொண்டிருந்த பெரும் பாறாங்கல்லை கீழே இறக்கி வைத்தது போல இருந்தது. சனிக்கிழமை முழுவது கணேஷோடு எங்காவது சுற்ற வேண்டும் என்று விரும்பினேன். அவரிடம் முன்பே சொல்லாமல் சனிக்கிழமை காலையில் அவர் வீட்டிற்கு சென்று அழைத்துக் கொள்ளலாம் என்பது திட்டம். அவர் வெள்ளிக்கிழமை இரவே கூட ஏதாவது ஊருக்கு போய்விட வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்றிருந்தால் விட்டுவிடலாம் என்றிருந்தேன்.

சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு அவரது ப்ளாட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டில்தான் இருப்பதாக செக்யூரிட்டி சொன்னார். சந்தோஷமாக இருந்தது. வீட்டின் காலிங்பெல்லை அழுத்தாமல் செல்போனில் அழைத்தேன். உடனடியாக எடுத்தார். "உங்க வீட்டிற்குத்தான் வரலாம்ன்னு..." என்று முடிப்பதற்குள் "அட முதலே சொல்லியிருக்கலாம்ல...நான் இப்போ மைசூரில் இருக்கேன்...இப்போ பேலஸ் பார்க்கப் போறேன்" என்றார். குழப்பமாக இருந்தது "சரிங்க இன்னொரு நாள் பார்க்கலாம்" என்று கட் செய்துவிட்டு கதவுக்கு முன்னால் நின்றபோது டி.வி ஓடும் சத்தம் கேட்டது. நிச்சயமாக வீட்டில்தான் இருக்கிறார்.

எதற்காக இந்த மனிதர் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று வருத்தமாக இருந்தது. "அவருடைய சனிக்கிழமையை நான் தின்பதில் அவருக்கு விருப்பமில்லாமல் இருக்கக் கூடும்" என்று ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. திங்கட்கிழமை ஜோசப்பிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவனும் எங்கள் டீம்தான். கணேஷும் அவனும்தான் டீமில் சீனியர்கள். கணேஷ் பற்றி பேச்சு வந்தது. நான் பெரும்பாலும் அலுவலகத்தில் இன்னொருவரைப் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவேன். என்னையும் மீறி சனிக்கிழமை கணேஷ் நடந்து கொண்டது பற்றி சொல்லிவிட்டேன். ஜோசப் அதிர்ச்சியாகவில்லை. கணேஷ் பற்றி நிறையச் சொன்னான். இறுதியாக, கணேஷ் depression ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொய் சொல்வது அவருக்கு ஒரு வடிகால் என்றான்.

நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சனிக்கிழமை சொன்னது மட்டும்தான் பொய்யா அல்லது இதுவரை சொன்னது அனைத்துமே பொய்யா என்று யோசனை ஓடியது. அதற்கு மேல் கணேஷ் பற்றி பேச விரும்பாமல் பேச்சை மாற்றிக் கொண்டோம்.  மர்பியின் விதி ஞாபகத்திற்கு வந்தது - "ஏதாவது தவறாக நடக்குமானால் அது நிச்சயம் நடக்கும்"(Anything that can go wrong will go wrong).இதை எதிர்மறையான சிந்தனைகளின்(pessimism) அடிப்படையான விதி என்பார்கள். அது சரி என்று தோன்றியது.