Sep 23, 2012

ரஜினி - பணம் காய்ச்சி மரம்அலுவலகத்தில் பெங்காலி பையன் ஒருவன் இருக்கிறான். பெருங்குரலோன். அவன் பேசினால் அந்தத் தளத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். 'பேசினால்' என்பதை விட 'கத்தினால்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேற்றும் கத்திக் கொண்டிருந்தான். அவன் கத்திக் கொண்டிருந்தது ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை. அரைகுறைத் தமிழில் டயலாக்குகளை கீழே போட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவனது தமிழ் உச்சரிப்பை தொடர்ந்து கேட்டால் காதுகளில் இரத்தம் வந்துவிடக் கூடும் என்பதால் அவனை சாந்தப்படுத்துவது தலையாயக் கடமையாகிவிட்டது. குறுக்கே புகுந்துவிட்டேன்.

ஒரு சிறு புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இத்தனை அலப்பறையும் செய்து கொண்டிருந்தான். புத்தகத்தின் பெயர் "Rajni's Punchtantra". ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புத்தகம். அமெரிக்கா சென்றிருந்த நண்பன் இவனுக்கு அன்பளிப்பாக வாங்கி வந்தானாம். 

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் முப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் ரஜினியின் படம். அடுத்த பக்கத்தில் டயலாக்கை தங்கிலீஷில் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக "Sollraan...senjittan" அதன் கீழேயே அர்த்தத்தை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள் " I committed..I delivered". 

இத்தோடு நிறுத்தவில்லை. அதற்கு அடுத்த பக்கம் இந்த டயலாக்கை தொழிலில் எப்படி பயன்படுத்துவது, வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்று பாடம் நடத்துகிறார்கள். ரஜினி என்ற பெயரை எப்படி வேண்டுமானாலும் காசாக்கிவிடலாம். இந்த புத்தகமும் அப்படித்தான் போலிருக்கிறது என்று வாசித்தால் மயக்கம் வராத குறைதான். 

புத்தகத்தில் "இது எப்படி இருக்கு" என்ற டயலாக்கும் இருக்கிறது. இதை தொழிலில் எப்படி பயன்படுத்தலாம்? 

சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பாணியிலேயே வாசியுங்கள்.  "குழுவாக செயல்படும் போது மேனேஜர் குழுவில் இருக்கும் உறுப்பினர்களிடமெல்லாம் "இது எப்படி இருக்கு" என்று கேட்க வேண்டும். உறுப்பினர்கள் சக உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்" இதே வரியை முக்கால் பக்கத்திற்கு நீட்டி முழக்க முடியாதல்லவா? அதனால் ஐன்ஸ்டீனை எல்லாம் உள்ளே இழுத்து கும்மியிருக்கிறார்கள்.

இந்த டயலாக்கை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம்? சிம்பிள். டீம் மெம்பர்,மேனேஜர் என்ற சொற்களை தூக்கிவிட்டு உறவினர்கள், நண்பர்கள் என்ற வார்த்தைகளை நிரப்பிக் கொள்ளவும். இவர்களிடமெல்லாம் "இது எப்படி இருக்கு" என்று கருத்துக் கேளுங்கள். அப்பொழுதுதான் சந்தோஷமான குடும்பத்தையும், வாழ்க்கையையும் அமைக்க முடியுமாம்.

ஒவ்வொரு டயலாக்கும் இப்படித்தான் புல்லரிக்க வைக்கிறது. 

உங்களின் Lateral Thinking க்கு ஒரு கேள்வி. "பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்" என்ற டயலாக் தரும் மெசேஜ் என்னவாக இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்த அற்புதமான புத்தகத்தை பி.சி.பாலசுப்ரமணியன் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு பேர் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்திருக்கிறார். அருணாச்சலம் படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவராக வருவாரே அவரேதான். இரண்டு பேரில் இனிமேல் யாரை பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரஜினி டயலாக்குகளை குதறியிருக்க வேண்டியதில்லை. 

இந்த புத்தகம் NHM இல் கிடைக்கிறது. முன்னேற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்கலாம்.

ம்ம்..."பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்" டயலாக் தரும் மெசேஜ்  "Time is most precious thing- do not waste it"

மீண்டும் இமான் நினைவுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.