Sep 17, 2012

அணு விஞ்ஞானி நாராயணசாமியின் கதைநாராயணசாமி பிறந்தவுடன் அழவே இல்லை. வெறுமனே நாராயணசாமி என்று சொல்வதைவிட அணுவிஞ்ஞானி நாராயணசாமி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பிரசவம் பார்த்த வைத்தியர் தலை கீழாக தொங்கவிட்டு முதுகில் தட்டிப்பார்த்தார், கிள்ளியும் பார்த்தார். ம்ஹூம். அழுவதாகத் தெரியவில்லை. நர்சை அழைத்து முயற்சிக்கச் சொன்னார். அவரும் எதை எதையோ செய்துவிட்டு 'ஙே' என விழித்ததுதான் மிச்சம். மனுஷன் அத்தனை அழுத்தம்.

வீட்டில் குறும்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டரை வயதில் பள்ளிக்கூடத்தில் அமுக்கிவிட்டார்கள். பள்ளிக்கூடம் போகும் போது செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது. அடித்தாலும் சரி, உதைத்தாலும் சரி  நம் கதாநாயகன் அடங்கியதாக வரலாறு இல்லை. வாத்தியார்கள் நூடுல்ஸ் ஆனதுதான் மிச்சம். 

மின்சாரத்தை ஆராய்கிறேன் என்று ஹேர்பின்னை ப்ளக் பாயிண்டிற்குள் நுழைத்தார். நம் கெட்டநேரம் அவர் பிழைத்துக் கொண்டார். தன் வீட்டிற்கு வரும் சிறுவர்களை தொட்டித்தண்ணீருக்குள் அழுத்தி சாகடிக்கப்பார்த்தார். ஆராய்ச்சி செய்கிறேன் என்று துணிக்கு போடும் நீலம், மண்ணெணெய், சுண்ணாம்புத்தண்ணீர் என  வீட்டில் ஒன்றையும் விட்டு வைத்ததில்லை. கிடைப்பதையெல்லாம் கோக்குமாக்காக கலக்குவதுதான் ஆராய்ச்சி. அவரது ஆராய்ச்சி செட்டப் பார்க்க வேண்டுமே, நீயுட்டனின் ஆராய்ச்சிக் கூடமே தோற்றது போங்கள். இத்தனைக்கும் ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார்.

அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அடுத்தவரை திகிலூட்டக் கூடியதாக இருக்கும்.எழுத்துப்பிழைகளோடு அடுத்தவர்களுக்கு புரியாதபடிக்கு 'என்கோடிங்' செய்து எழுதி வைத்திருப்பார். வீட்டில் ஒரு சாமானை விட்டுவைப்பதில்லை என்று அவரது அம்மா மொத்துவார். ஆனால் விஞ்ஞானி வழிக்கு வருவதாகவே இல்லை. தனக்குதான் கையும் வாயும் வலிக்கிறது என்பதால்  'எப்படியோ தொலையட்டும்' என்று விட்டுவிட்டார். 

இத்தனை நடந்து கொண்டிருக்கும் போது அவருக்கே தெரியாமல் பேக்ரவுண்டில் 'ஒரு நாயகன் உதயமாகிறான்' போன்று ஏதோ ஒரு பில்ட்-அப் பாடல் இருபத்தி நான்கு மணி நேரமும் பாடிக் கொண்டிருந்தது.

தனது ஆராய்ச்சியின் முடிவுகளை சோதனை செய்கிறேன் பேர்வழி என்று ஊர்வன பறப்பன என எல்லாவற்றையும் டார்ச்சர் செய்யத் துவங்கினார். கரப்பான், எலி, பல்லி என கிடைப்பதன் மீதெல்லாம் அந்த 'ஆராய்ச்சி திரவத்தை' ஊற்றுவார். அவை அடுத்த சில நிமிடங்களில் செத்துவிடும். கெரசின் ஒன்று போதாதா ஒரு உயிரைக் கொல்ல? அந்த ஜீவன் சாகும் வரைக்கும் சுண்டு விரலில் ரத்தம் வரும் வரைக்கும் நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். ரிசல்ட்டுக்காக வெயிட்டிங் என்பதை வெளிப்படுத்தத்தான் இந்த 'நகக்கடி' எஃபெக்ட்.  அந்த உயிர் பிரிந்தவுடன் சக்ஸஸ், சக்ஸஸ் என அட்டகாசம் செய்வார். ஜந்துக்கள்  இவருக்கு வேண்டியே அவரது வீட்டிற்குள் வராமல் பயந்து தப்பித்துக் கொண்டிருந்தன. 

அவிநாசியில் இருக்கும் தனது சக விஞ்ஞானியான பெரியம்மா பையனுக்கு இன்லேண்ட் கவரில் ஆராய்ச்சி முடிவுகளை கடிதமாக எழுதுவதும் உண்டு. "அன்புள்ள ரவியண்ணனுக்கு, நலம் நலமறிய அவா. இங்கு ஆராய்ச்சி சக்ஸஸ். ஆனால் தயாரிப்பு முறை பரம ரகசியம். கடிதத்தில் எழுதினால் யாராவது திருடிக் கொள்வார்கள். உங்கள் ஆராய்ச்சி என்ன ஆனது? நேரில் சந்திக்கும் போது சொல்லித்தருகிறேன்" என்று தகவல் பரிமாற்றம் நடக்கும். இந்தக்கடிதங்களை சி.பி.எஸ்.ஈ பள்ளிகள் பாடத்திட்டமாக மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனவாம்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்வில் பெரும் புயல் அடித்தது. அது மத்திய அணு ஆய்வுக்கழகம் நடத்திய தேர்வில் நம் விஞ்ஞானி வெற்றி பெற்றதுதான். தேர்வுக்கு முந்தின நாள் வரைக்கும் அவருக்கு தேர்வு நடப்பதே தெரியாமல்தான் இருந்தது. ஆனால் அணு ஆய்வுக்கழகத்தின் கெட்டநேரம்- கடைசி நேரத்தில் நாராயணசாமியின் அப்பா தேர்வுகுறித்து ஞாபகப்படுத்தி தொலைத்துவிட்டார். அழிக்கும் ரப்பரில் நான்கு பக்கத்திலும் (A)(B)(C)(D) என்ற எழுத்துக்களை எழுதி குலுக்கி குலுக்கி வீசினார். எந்த எழுத்து வருகிறதோ அந்த விடையை குறித்தார். அணு ஆய்வுக்கழகத்திற்கு சனி உச்சத்தில் ஆட்டம் போட்டிருக்கக் கூடும். நாராயணசாமிதான் முதல் மதிப்பெண். 

நேர்காணலுக்கு அழைத்தார்கள். முதன் முதலாக மும்பைக்கு ட்ரெயின் ஏறினார். அருகில் இருந்தவர்களிடம் எல்லாம் தன்னை 'நியூக்ளியர் சயின்டிஸ்ட்' என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். இண்டர்வியூ நடத்தியவர்கள்தான் பாவம். கதற வைத்துவிட்டார். எடுத்தவுடனே எனக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது என்று சொன்னார் நாராயணசாமி. வேறு யாராவதாக இருந்தால் துரத்திவிட்டிருப்பார்கள். இவர்தான் முதல் மதிப்பெண் ஆயிற்றே. ஒரு தமிழ் தெரிந்தவரை அழைத்து கேள்வி கேட்கச் சொன்னார்கள். வந்தவருக்கு நாக்கில் சனி டெண்ட் அடித்து குடியிருப்பார் போல. அணு என்றால் என்ன என்றுதான் ஆரம்பித்தார். நாராயணசாமிக்கு உச்சந்தலையில் முடி நட்டுக் கொண்டது. "அனு பக்கத்துவீட்டுப் பெண் சார். செம ஃபிகர்" என்று ஆரம்பித்து பல்ப் கொடுத்தார். அதற்கு பிறகு அரை மணிநேரத்திற்கு இதே கசமுசாதான். துரத்திவிடும் கட்டத்தில் எந்த ஊர்? என்றார். கடுக்குகாரன்பட்டி என்றார் நாராயணசாமி. அவ்வளவுதான். இன்னும் சில கேள்விகளில் நா.சாமியின் பெரியப்பாவின் பெண்ணுக்கு பேசி முடித்திருந்த மாப்பிள்ளைதான் இத்தனை கேள்விகளையும் கேட்டவர் என்று தெரிந்துவிட்டது. வருங்கால மச்சினனை துரத்த முடியுமா? தமிழ் தெரியாத மற்ற அதிகாரிகளிடம் இவரை பற்றி சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லி "அணு விஞ்ஞானி" ஆக்கிவிட்டார்.

அணு ஆராய்ச்சி கழகத்தில் இவர் செய்தது எல்லாமே நட்டாமுட்டி வேலைதான். அணுக்கரு பிளவு பற்றி படித்து வரச்சொன்னால் குமுதம் விகடனை மட்டும் படித்து வருவார். யுரேனியம் பற்றி குறிப்பு எழுதச் சொன்னால் செளகார் ஜானகி பற்றி கட்டுரையே எழுதினார். மேல்மட்டத்தில் கூடி விவாதித்து இனிமேல் நாராயணசாமி ஆணியே பிடுங்கத் தேவையில்லை என்று அறிவித்துவிட்டார்கள். ஆறுமாதம் விடுப்பு கொடுத்து ஊருக்கும் அனுப்பி வைத்தார்கள். அமெரிக்காக்காரனுக்கே நான்தான் ட்யூசன் எடுக்கிறேன் என்று கடுக்குக்காரன்பட்டி முழுவதும் அடித்துவிட்டார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையனிடம் ஹிந்தியிலும் ஆற்றுமேட்டில் துணி வெளுப்பவனிடம் ஆங்கிலத்திலும் பேசி மிரள வைத்தார். இவரது ஆங்கில, ஹிந்தி புகழ் சுத்துப்பட்டிலும் ஃபேமஸ் ஆக யாரும் இவர் முன்னால் எதிர்படவே தயங்கினார்கள்.

ஆறுமாதம் விடுப்பு முடிந்து போனபோது அணு கழகத்தில் இவரை ஜோக்கராக பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்திருந்தார்கள். அதாவது பத்திரிக்கையாளரை சந்திப்பதுதான் இவரது வேலை. அணு ஆற்றல் பற்றி சம்பந்தமே இல்லாமல் எதையாவது பேசி குழப்ப வேண்டும். குழப்ப வேண்டாம் என்று சொன்னாலே குழப்பக் கூடிய மனிதர். குழப்பு என்று சொன்னால்? பத்திரிக்கையாளர்கள் நொந்து போனார்கள். 

இதன்பிறகாக மீடியாக்காரர்கள் அவரது புகழை கொடிபறக்கச் செய்தார்கள். தலையங்கங்களில் நகைச்சுவை இடம் பெற்றன. அதாவது தலையங்கங்களை நா.சாமி ஆக்கிரமிக்கத்துவங்கினார். நாராயணசாமி என்ற பெயரை வாசித்தாலே மக்கள் குதூகலம் அடையத் துவங்கினார்கள். டிவி சேனல்களில் இவர் இடம்பெறும் செய்திக்காட்சிகள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எகிறின. ஒவ்வொரு செய்தியிலும் குறைந்தபட்ச பத்து நிமிடம் இவர் பேசுவதை ஒளிபரப்புமாறு டிவி நிர்வாகிகள் உத்தரவிட்டார்கள். செய்தி பார்க்கும் போது மக்கள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கும் வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. ஆனால் நாராயணசாமி எதைப்பற்றியும் கவலைப்படாமல் கலக்கிக் கொண்டிருந்தார். மெகா சீரியல்காரர்கள் தலையில் துண்டு போடலாம் என்றுதான் நினைத்தார்கள் ஆனால் இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போர்வையை போட்டுக் கொண்டார்கள். வானிலை அறிக்கை புகழ் ரமணன் தன் இழந்த புகழை மீட்பது குறித்து சீரியஸ் டிஸ்கஷன் நடத்துவதாகக் கேள்வி.

வெறும் பி.ஆர்.ஓ வேலையை மட்டும் செய்ய முடியாது என அணு ஆராய்ச்சிக்கழகத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நார்ஸை இப்பொழுது அமைச்சரும் ஆக்கிவிட்டார்கள். இவரை விட வேறு யாராலும் பிரச்சினையை திசைதிருப்ப முடியாது என பிரதமர் முழுமையாக நம்புகிறாராம். சைரன் கார், கறுப்பு பூனைப்படை என்று பட்டையைக் கிளப்பும் நார்ஸ் அதே ஈக்குவேஷனில்தான் டாப்கியரில் போய்க்கொண்டிருக்கிறார். என்ன ஈக்குவேஷனா? அதாங்க யுரேனியம் vs செளகார் ஜானகி. யுரேனியம் அப்படியேதான் இருக்கிறது. செளகார் ஜானகிதான், லட்சுமி, அம்பிகா,ராதா என பயணித்து அமலாபாலில் வந்து நிற்கிறார். யுரேனியம் பற்றி யாராவது கேட்டால் அசராமல் அமலா பால் பற்றி சொற்பொழிவு ஆற்றுகிறார் நம் அணு விஞ்ஞானி. இப்பொழுது சில நாட்களாக அவரைக் காணவில்லை. விசாரித்ததில் லண்டனில் இவரது மெழுகுச் சிலை வைக்கவிருக்கிறார்களாம். போஸ் கொடுக்க போயிருக்கிறார் என்கிறார்கள்.