Sep 14, 2012

எதில் அரசியல் இல்லை?எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் என்றால் பெரிய சித்தாந்தம் எல்லாம் கிடையாது. காரணம் கண்டுபிடிப்பதுதான்- அடுத்தவன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னணியில் இருக்கும் ஒன்று அல்லது பல காரணங்களை மோப்பம் பிடித்து அறிவிப்பதுதான். இந்தக் காரணங்களுக்கு சூட்டப்படும் பெயர் பாலிடிக்ஸ். ஒருவனோடு நட்பாக இருப்பதற்கும், இன்னொருவனை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் 'காரணம்' உண்டு. ஒருவனைப் பற்றி புகழ்வதற்கும் மற்றொருவனை இகழ்வதற்கும் பின்ணணியில் காரணம் இருப்பதைப் போலவேதான் ஒன்றை வாசிப்பதற்கும் மற்றொன்றை விட்டுவிடுவதற்கும் காரணம் இருக்கிறது. 

மற்றவர்களின் செய்கையில் அரசியலை கண்டுபிடிப்பது இருக்கட்டும். ஊரே ஒரு விவகாரத்தில் இரண்டாக பிரிந்து அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் கலவரம் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் சினிமா பற்றியோ, நகுலன் கவிதை பற்றியோ, பாப்கார்ன் பற்றியோ அல்லது நடிகையின் கன்னச்சுருக்கம் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதிலும் ஒரு நிம்மதி இருக்கிறது. இல்லையா? ஒவ்வொரு நிகழ்வுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்பது கட்டாயமா? அல்லது சொல்லுகிற கருத்து பிரச்சினையை புரட்டி போட்டுவிடப் போகிறதா? ஒரு எழவும் இல்லைதான். பிறகு எதுக்கு நாம் ஒன்றைச் சொல்லி அதை எதிர்த்து பேசும் நண்பனிடம் சண்டையிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி...etc etc. சுற்றி நடக்கும் எல்லாவற்றிலுமிருந்து தாமரை இலையாக நழுவிக் கொள்வதற்கு ஒரு சூட்சுமம் வேண்டும். அப்படியே விலகிக் கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள். கள்ளமெளனம் என்று பெயரிடுவார்கள்.

இலக்கிய விமர்சகர் க.நா.சு இலக்கியம் சார்ந்த விஷயங்களைத் தவிர்த்து சமகால அரசியல், பிரச்சினைகள் பற்றி எதுவுமே பேசியதில்லை என்று பெங்களூர் நண்பர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்- ஸ்ரீனி விசித்திரமான மனிதர். நிறைய வாசிப்பவர். மூன்று அல்லது நான்கு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் குதிரைவீரன் பயணம், கல்குதிரை போன்று ஏதாவது சிற்றிதழையோ அல்லது பரமக்குடி சில உண்மைகள் போன்ற புத்தகத்தையோ சில பிரதிகள் சுமந்து கொண்டிருப்பார். நண்பர்களிடம் புத்தகங்களைச் சேர்ப்பதை ஒரு கடமையாகவே செய்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.

இலக்கியம் தவிர்த்து க.நா.சு பிறவற்றை பேசியதில்லை என்ற ஸ்ரீனியின் தகவல் எனக்கு புதிது. க.நா.சு எழுதியதை முழுமையாக வாசித்தது இல்லை. அது சாத்தியமும் இல்லை. எழுபத்தாறு ஆண்டுகாலம் வாழ்ந்த க.நா.சு கிட்டத்தட்ட 107 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.  புத்தகங்களையும், அவரது பிற எழுத்துக்களையும் மொத்தமாக தொகுத்தால் தோராயமாக இருபதாயிரம் பக்கங்கள் வருமாம். Part time-ல் வாசிக்கும் ஒருவனால் இவற்றை ஒரு போதும் வாசித்து முடிக்க முடியாது. க.நா.சு 1912 இல் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு அவருக்கு நூற்றாண்டு.  

இப்படி சமகால பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி வாழ்ந்த/வாழும் நிறைய படைப்பாளிகளை பட்டியலிட முடியும். வெகுஜன ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிவந்த சுஜாதா அரசியல் கருத்துக்களை எழுதியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒன்றும் சிக்கவில்லை. சாவி இதழ் ஆரம்பித்தபோது சில இதழ்களுக்கு தலையங்கம் எழுதியிருக்கிறார். இவை மட்டும்தான் அரசியல் என்று சுஜாதாதேசிகன் சொன்னார். தேசிகன், சுஜாதா என்ற ஆளுமையின் என்சைக்ளோபீடியா. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சுஜாதாவின் எழுத்து பற்றிய சுவாரசியமான விமர்சனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக கண்ணில்பட்டது. யார் எழுதியது என்று இப்பொழுது துழாவியும் கிடைக்கவில்லை.ஞாபகத்திலும் இல்லை. பிரபலங்களுடன் தனக்கு இருக்கு நட்பை சுஜாதா பிரஸ்தாபிப்பது பற்றிய விமர்சனம் அது. ஷங்கருடன் லஞ்ச், மணிரத்னத்துடன் ஸ்நாக்ஸ், இளையராஜாவுடன் டின்னர் என்று போகிற போக்கில் செய்யப்படும் சுஜாதாவின் சுய-பில்ட் அப்களை பற்றி விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனம் சரியானதுதான்.  சுஜாதா தன் காலம் முழுவதுமே விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஆனால் சுஜாதாவின் சுவாரசியமான எழுத்து நடை இத்தகைய விமர்சனங்களை முழுங்கிவிட்டிருக்கிறது. 

சரி விடுங்கள். காரணமே இல்லாமல்தான் இதை எழுதினேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்...

4 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

சரி விடுங்கள் நானும் காரணமே இல்லாமல் தான் கருத்திடுகிறேன்.
//சுற்றி நடக்கும் எல்லாவற்றிலுமிருந்து தாமரை இலையாக நழுவிக் கொள்வதற்கு ஒரு சூட்சுமம் வேண்டும். அப்படியே விலகிக் கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள். கள்ளமெளனம் என்று பெயரிடுவார்கள்.// கொஞ்சம் கஸ்டம் தான்

Anonymous said...

// சுற்றி நடக்கும் எல்லாவற்றிலுமிருந்து தாமரை இலையாக நழுவிக் கொள்வதற்கு ஒரு சூட்சுமம் வேண்டும். அப்படியே விலகிக் கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள். கள்ளமெளனம் என்று பெயரிடுவார்கள்//

:))))

Anonymous said...

எல்லாவற்றையும் பற்றியும் பற்றாமலும் (கவிதை என்ற பெயரில் கிறுக்குவது உட்பட )ஜல்லி அடித்துக் கொண்டு ,கருத்துச்சொல்லி நானும் ‘உள்ளேன் ஐயா’ போடுவதில் அரசியல் இருப்பதாய் நம்புவதும் ஒரு மூட நம்பிக்கை அல்லது நேர விரயம் இல்லையா மணிகண்டன்

வா மணிகண்டன் said...

நன்றி கரிகாலன்.

அனானி,

எனி உள்குத்து ஃபார் மீ? :)