எட்டாம் வகுப்பின் அறிவியல் தேர்வில் "சிரிப்பூட்டும் வாயு என்பது ___________" என்ற கோடிட்ட இடத்தை நிரப்பும் போது நைட்ரஸ் ஆக்சைடு என்று எழுதியிருப்போம். இது சிரிப்பூட்டுமா? ஆமாம். நைட்ரஸ் ஆக்சைடை சுவாசிக்கும் போது அது கிளர்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. இந்த கிளுகிளுப்புதான் உற்சாகத்தையும், போதையையும் கொடுக்கிறது.
ஜோசப் பிரிஸ்ட்லே N2O வை 1772 இல் கண்டுபிடித்து, அதற்கு பெயரையும் வைத்துவிட்டார். பிறகு பதினெட்டு வருடங்கள் அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஹம்ப்ரி டேவி(Humpry Davy) என்பவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து சேர்ந்து இதை சோதனை செய்து பார்க்க நினைத்தார்கள். வழக்கமாக எலி, தவளைகளை சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் "எங்களை வைத்தே பரிசோதித்துக் கொள்கிறோம்" என அறிவித்தார்கள். 'மப்பு' மேட்டர் என்பதால்தான் அவர்களே 'ட்ரை பண்ணுகிறார்கள்" என்று நக்கலடித்தவர்களும் உண்டு.
போதையோடும், உற்சாகத்தோடும் பிரிக்க முடியாத பந்தத்தில் இருக்கும் கவிஞர்கள் வர்க்கமும் இந்த நண்பர்கள் குழாமில் உள்ளடக்கம். Samuel Taylor Coleridge, Robert Southey போன்ற கவிஞர்களும் இந்தச் சோதனையில் ஈடுபட்டார்கள். சோதனையின் முடிவில், இந்த வாயு சரக்காக்க மட்டுமில்லாமல் வலி நீக்கியாகவும், அரை மயக்கம் தருவதாகவும் இருக்கிறது என்ற அறிவித்தார்கள். இதன் பிறகு பல் மருத்துவர்கள் இந்த வாயுவை தங்களின் சிகிச்சையில் மயக்கமூட்டும் மருந்தாக முதலில் பயன்படுத்த துவங்கினார்கள்.
இதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை சுருங்க பார்த்துவிடலாம். அமோனியம் நைட்ரேட்டை கொதிக்க வைக்கும் போது நைட்ரஜன், நீராவி, அமோனியம் நைட்ரேட் புகை ஆகியவற்றோடு சேர்ந்து நைட்ரஸ் ஆக்சைடும் வெளிவரும். வெளிவரும் நைட்ரஸ் ஆக்சைடுடன் வெவ்வேறு 'பாஸ்பேட்'களைச் சேர்த்து சுத்தமாக்குவார்கள். இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 240 டிகிரி செல்சியஸில் நடைபெறும். இந்த வெப்பநிலை கொஞ்சம் அதிகமானாலும் கூட வெப்ப வெளியீட்டு நிகழ்வு(exothermic) தொடங்கிவிடும். இந்த வாயு தயாரிப்பில் வெப்பநிலையை சீரான அளவில் கட்டுப்படுத்துவது என்பதுதான் சிக்கல் நிறைந்தது. கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலோ அல்லது கட்டுப்படுத்தாவிட்டாலோ பெரிய "தீபாவளி"க்கான வாய்ப்புகள் உண்டாகின்றன. ஒஹயோ வேதியியல் விபத்து(1966), டெல்வேர் வேதியியல் விபத்து(1977)க்கள் இந்த சிரிப்பூட்டும் வாயு தயாரிக்கும் போது நிகழ்ந்வைதான். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த விபத்துகளின் வீரியம் பற்றி இன்னமும் கூட அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் நைட்ரஸ் ஆக்சைடு உட்கொள்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. சிரிக்கத்தானே வைக்கிறது என்று எதிர்கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. இதை உட்கொள்ளும் முறையிலிருந்தே இதற்கான ஆபத்துக்கள் தொடங்குகின்றன. ஏடாகூடமாக நைட்ரஸ் ஆக்சைடை உறிஞ்சினால் நுரையீரலின் அழுத்தம் திடீரென குலைந்து நுரையீரலில் வெற்றிடம் உருவாகும். நுரையீலுக்குள் உண்டாகும் அழுத்தக் குறைவை சமன் செய்ய வெளியிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு பெருமொத்தமாக உள்ளே செல்லும். இந்த வாயு உற்பத்தியாகும் போது மிகக் குளிர்ந்த நிலையில் இருக்கும் என்பதால் நுரையீரல் திசுக்கள் உறைந்து போவதற்குமான வாய்ப்புகள் உண்டு. இந்த உறைநிலையை(Frostbite)ஐ தவிர்க்க பொதுவாக இதை பலூனில் நிரப்பி உறிஞ்சுவார்கள்.
இரண்டாவது, தெரியாத்தனமாக தேவையான அளவு ஆக்ஸிஜனை உறிஞ்சாமல் நைட்ரஸ் ஆக்சைடை சுவாசிப்பது ஆளையே கூட முடித்துவிடும். ஆய்வுக் கூடத்தில் நின்று நாம் உறிஞ்ச வேண்டியது நைட்ரஸ் ஆக்சைடா, நைட்ரிக் ஆக்சைடா என்ற குழப்பம் வந்தால் வேறு வினையே தேவையில்லை. நைட்ரிக் ஆக்சைடு மிக அதிக அளவு விஷத்தன்மை கொண்டது. மீன் முள் குத்தி கூட உயிர் போகும். அதற்காக மீன் தின்னாமல் இருக்கிறார்களா என்றால் அதுவும் சரிதான். ஆனால் நைட்ரஸ் ஆக்சைடை தொடர்ந்து கொள்வது விட்டமின் பி12 குறைபாடு, இரத்த சோகை என்று குட்டி குட்டியாகத் தொடங்கி மொத்தமாக மண்டையடியாக அடிக்கும்.
இதற்காக நைட்ரஸ் ஆக்சைடை முழுமையாக தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.நைட்ரஸ் ஆக்சைடை மயக்க மருந்தாக மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆக்சிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடை சரிபாதியாக கலந்து பிரசவம், பல் மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்துவதுண்டு. இரண்டு பங்கு நைட்ரஸ் ஆக்சைடு, ஒரு பங்கு ஆக்ஸிஜன் என்ற விகிதம் இன்னும் கொஞ்சம் வீரியம் மிக்கது.
நைட்ரஸ் ஆக்சைடு ஓஸோனில் ஓட்டை விழுவதற்கான முக்கிய காரணம். கார்பன் டை ஆக்ஸைடு புவி வெப்பத்தில் உருவாக்கும் விளைவுகளை போல பல மடங்கு விளைவுகளை நைட்ரஸ் ஆக்சைடு உருவாக்குகிறது. சில பாக்டீரியாக்கள் இயல்பாக இந்த வாயுவை உற்பத்தி செய்கின்றன. மனிதன் விவசாயத்தில் பயன்படுத்தும் நைட்ரஜன் உரங்கள் போன்றவற்றின் காரணமாகவும் வளி மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது.
யோசித்துப் பார்த்தால் ஹெராயின் அளவுக்கோ அல்லது ஆல்ஹகால் அளவுக்கோ கூட நைட்ரஸ் ஆக்சைடு, ஒயிட்னர் அல்லது வாகனப் புகை போன்றவை போதைப் பொருட்களில்லை. ஆனால் மனிதன் எதிலிருந்தும் போதையை பெற்றுக் கொள்பவனாக இருக்கிறான். பைசர்(Pfizer) நிறுவனத்தின் வயாகராவைக் கூட இந்தப் பட்டியலில் கொண்டுவரலாம் போலிருக்கிறது.
3 எதிர் சப்தங்கள்:
தகவல் நல்லா இருக்கு ஆனா 1972? எனக்கு சந்தேகமா இருக்கு!
1777. மாற்றிவிட்டேன். நன்றி குமாரநந்தன்
நைட்ரஸ் ஆக்ஸைடு குறித்த தகவலுக்கு நன்றி.!
Post a Comment