ஸ்ரீஷங்கரை முதன்முதலாக மதுரையில் சந்தித்தேன். கலாப்ரியாவின் நூல் அறிமுகக் கூட்டம் ஒன்றில் அமர்ந்திருந்த என்னருகில் வந்தவர் அதற்கு கொஞ்சநாட்களுக்கு முன்பாக நான் எழுதி பிரசுரமாகியிருந்த கவிதை விமர்சனத்தை பாராட்டினார். பாராட்டோடு சேர்த்து விமர்சனத்தின் தொடக்க பத்தியாக இடம்பெற்றிருந்த கவிஞனுடனான எனது அறிமுகம் பற்றிய குறிப்பு தேவையில்லாத துருத்தல் என்று வசையும் பாடினார். வசை என்றால் அது போதையின் வசை. அதன் பிறகான அவருடைய தொடர்பில் அவரின் கனிவை அறிய வந்தாலும் முதல் அறிமுகத்திலேயே இப்படியான வசையா என்ற அதிர்ச்சியில் இருந்தேன். இனி எப்பொழுது ஷங்கரின் கவிதைகளைப் பற்றி பேசினாலும் அவருடனான அறிமுகத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தக் கணத்தில் தோன்றியது.
உயிர் எழுத்து நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீஷங்கரின் 'சொற்பறவை' என்ற கவிதைத் தொகுப்பு குறித்து நான் பேசுவதாக முடிவானதும் தொகுப்பை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். பனிக்கால இரவுகளில் சில்லிட்டுக் கிடக்கும் பெங்களூரில் அமர்ந்துகொண்டு பதிப்பு வேலைகள் முடியாத கவிதைத் தொகுப்பை பெற்றுக் கொள்வது என்பது பிறந்த குழந்தையின் மென்பாதத்தை ஸ்பரிசிப்பதை போன்ற மகிழ்ச்சியை அளித்தது. மின்னஞ்சல் கிடைத்த அதே இரவில் சிணுங்கிக் கொண்டிருந்த மகனின் தொட்டிலை ஆட்டுவதனிடையே எனது கவிதை வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் இக்கவிதைகளில் கையாளப்பட்டிருக்கும் மொழியமைப்பு வாசக மனதை கவரக் கூடிய அம்சமாகத் தோன்றியது. "யாவிலும் பனி தன்னை அணிவித்திருக்கும்/அங்கே" என்ற ஒரு வரியை உதாரணமாகக் குறிப்பிடலாம்- "பனி எங்கும் விரவியிருக்கிறது" என்பது போன்ற வழமையான மொழியிலிருந்து "பனி தன்னை அணிவித்திருக்கும்" என்ற ஸ்ரீஷங்கரின் மொழி தனித்து தெரிகிறது. பிறரின் எந்தவொரு கவனத்தையும் கோராமல் பனி தன்னை எல்லாவற்றிலும் அணிவிக்கிறது என்பதை இவ்வரி காட்சிப்படுத்துகிறது. பனி தன் கடமையைச் செய்கையில் அதன் மீதான மற்றவர்களின் விருப்பமின்மை கவிதையில் மறைவான பொருளில் இருக்கிறது. சொற்களை மிகக் கவனமாக பயன்படுத்தி அதன் அர்த்தத்தை வேறொரு திசைக்கு நகர்த்துவதில் ஷங்கர் தேர்ந்தவராக இருக்கிறார்.
"அந்த நிறுவனத்தின் நுழைவாயில்
அவன் சுமந்துவந்த வெயிலை
நிறுத்திவிட்டு
அவனை அனுமதிக்கிறது"
என்ற இன்னொரு கவிதையையும் குறிப்பிடலாம். அவனோடு வந்த வெயிலை வெளியிலேயே நிறுத்திவிடும் அலுவலகம் என்ற வரி உருவாக்கும் சித்திரம் மிகத் தெளிவானது. அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வசதி வாய்ப்புகள் வேறு எந்த வர்ணிப்புகளும் இன்றி எளிதாக புரிகிறது. இவை போன்ற நிறைய வரிகளை தொகுப்பில் உதாரணங்களாகச் சுட்ட முடிகிறது. இத்தகைய வரிகளை கவிதையில் வாசிக்கும் போது நம்முடைய அரை மணி நேரத்தையோ அல்லது அதைவிட அதிகமான நேரத்தையோ கூட ஒற்றை வரி எடுத்துக் கொள்கிறது. இந்த நேர விரயம் கவிதையை வாசிக்கப் பழகிய மனதிற்கான போதை.
கவிதை வாசிப்பில் இரு வாய்ப்புகள் சாத்தியம் எனச் சொல்லலாம் :
1) கவிஞனைப் பற்றிய பிம்பம்(Image of the Poet) வாசகனுக்குள் உருவாகுதல்
2) வெறும் பிரதியின் இன்பத்தை (Pleasure of the Text) மட்டும் உணர்தல்.
கவிஞனைப் பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி வெறும் பிரதியை மட்டும் உள்வாங்குதல் என்பது கவிதைகளை தொகுப்பாக வாசிக்காமல் தனித்தனியாக வாசிக்கும் போது சாத்தியமானதாக இருக்கிறது. ஆனால் கவிதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது கவிஞனைப்பற்றிய மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவே மனம் விழைகிறது.
நவீனத்துவத்திற்கு பிறகான வாசிப்பில் 'படைப்பாளி'யை நிராகரித்துவிட்டு 'பிரதி'யை மட்டும் கவனம் கொள்வது என்பது கோட்பாடாக உருவாகியிருப்பினும் கூட என்னால் கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது கவிஞனின் மனநிலை பற்றி சிறு கணமேனும் யோசனை செய்யாமல் இருக்க முடிந்ததில்லை.
ஒரு கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகளை மட்டுமே வாசித்துவிட்டு அந்தக் கவிஞனைப் பற்றிய முழுமையான சித்திரத்தை பெறுவதென்பதும் எளிதான காரியமில்லை. இந்தத் தொகுப்பும் அதற்கு விதிவிலக்கில்லை.
ஷங்கர் தன்னைப் பற்றிய குறிப்புகளையோ அல்லது தன் உணர்ச்சிகளைப் பற்றிய தகவல்களையோ கவிதைகளில் நிறுவுவதில்லை. பெரும்பாலான கவிதைகள் கதையின் அம்சத்துடன் கூடிய காட்சிகளாக இருக்கின்றன. அதாவது முழுமையடையாத கதைகளாக, கதையின் கவித்துவ காட்சிகளுடன் இருக்கின்றன. இக்காட்சிகள் தற்கால வாழ்வியல் சூழலில் நிகழ்பவனவாக இருப்பதில்லை- மாறாக இயற்கையின் அந்தரவெளியின் நிகழ்வுகளாக இருக்கின்றன.
மழைக்காலத்து கணமொன்றில் தடுக்கி விழும் தொலை நிலம், பப்பாளி மர இலைகளினூடாக தெரியும் துண்டு வானில் தள்ளாடும் கிளி, கிளிஞ்சல் மணற்பரப்பின் தீவு போன்ற வெளிகளும் அதில் நிகழும் கவித்துவ தெறிப்புகளும் கவிதைகளாகியிருக்கின்றன.
இயற்கையின் அந்தரவெளி நிகழ்வுகள் உருவாக்கும் மனநிலையை ஆன்மீகத்தின் கசிவு என்று குறிப்பிடவே விரும்புகிறேன். நோய்மையின் பிடியால் படுக்கையில் விழும் போதெல்லாம் கவனித்துக் கொள்ள ஒருவர் இருந்துவிட்டால் பெரும்பாலான நேரம் மோனநிலையிலேயே கழிகிறது. தரையில் கால்படாமல் சிறகடிக்கும் அந்தக் கணங்கள் அப்போதைய வாதை என்றாலும் பிறகு யோசித்துப்பார்த்தால் நோய்மையும் ஆன்மிகமே என்று தோன்றுகிறது. அத்தகைய ஆன்மிக நிலையை இக்கவிதைகள் உருவாக்குகின்றன என்பது என் அபிப்பிராயம். தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் உருவாக்கும் மனநிலையும்(Mindset) இப்படியானதாகவே இருக்கிறது.
'இடம்' என்ற கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது.
கிளம்பத் தயங்கிக் கொண்டிருந்த
பேருந்தொன்றில் அமர்ந்துகொண்டான்
பேச்சைத் தொடங்கிவிட்டிருந்தனர்
குளிர்மோதும் சன்னலோரப் பயணத்தில்
பதிமூன்று பேர்
நகரத்திலிருந்து வெளியேறி
அறுபது கி.மீ வேகத்தின்மீது சென்றுகொண்டிருக்கும்
அவனில்
வெளிர்கிற பெரும் வான்திரை
சலனிக்கத் துவங்குகிறது
தூரக்குரல்கள்
ஒட்டுக்காட்சிகளாய்
யாவும் பின் கரைந்து
தீர்கிற இடமற்ற இடத்தில்
மங்கலாய்த் தளும்பும் நீலக் குன்றுகளுக்கு
அப்பால் காலம்
அவனை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டிருந்தது
எல்லை வகுத்திராத வாகனமொன்றில்
இக்கவிதை நிகழ்காலத்திலிருந்து அந்தரமான வெளிக்கு கவிதையின் பாத்திரத்தோடு சேர்த்து வாசகனையும் நகர்த்துகிறது. தூரக்குரல்கள் ஒட்டுக்காட்சிகளாகி பிறகு எல்லாமும் கரைந்து போவது வரையிலும் கவிதை நிகழ்காலத்தில் இருக்கிறது. அதன் பிறகாக காலம் அவனை வாகனமொன்றில் ஏற்றிக் கொண்டு கிளம்புவதை இயற்கையின் அந்தரவெளிக்குள்ளான பயணம் என புரிந்துகொள்கிறேன். நிகழ்காலம்xஅந்தரவெளி என்ற தள மாற்றத்தின் உதாரணத்திற்காக இந்தக் கவிதையை குறிப்பிடுகிறேன். ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு அதிர்வில்லாமல் கவிதையை நகர்த்துதல் ஸ்ரீஷங்கருக்கு எளிதான கவிதையியல் விளையாட்டாக இருக்கிறது. கவிதையின் தளம் மாறும் போது வாசகனின் வாசிப்பனுபவம் அவனுக்கான பெரும் வெளியை(Reader’s space) உருவாக்கித் தருகிறது.
'குமிழ்' என்ற கவிதை இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. தன் செல்ல மகள் சோப்பு நீரில் குமிழியிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள், சோப்புக்குழிமிகள் மலர்ச்செடிகளிலும், சுவர்களிலும் மோதி உடைந்து கொண்டிருக்கின்றன. அவளின் உச்சமகிழ்வின் இலக்கான பெரும் குமிழியை படைக்கும் இலாவகத்தை ஒரு சமயம் கண்டறிந்தவள் பெரும் குமிழை உருவாக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறாள் ஆனால் ஊதுகுழலிருந்து வெளியேறும் முன்பாகவே அக்குமிழி அவளின் மூக்கு நுனி பட்டு நொறுங்கிவிடுகிறது. இது கவிதையின் மைய இழை. இந்தக் கவிதையை வாசித்தவுடன் உருவான துக்கத்தைத் தாண்ட நெடு நேரம் தேவைப்பட்டது.
நம் சமூகத்தில் மகள்கள் எப்பொழுதுமே பெரும் குமிழியை அடைந்துவிட வேண்டும் என்று எத்தனிக்கிறார்கள் அவர்களின் முயற்சியை குறிப்பிட்ட எல்லை வரை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் தந்தையர்கள்- ஆனால் பெரும்பாலான கணங்களில் மகள்களின் குமிழிகள் கனவாகவே உடைந்துவிடுகின்றன. உடைதலும் நொறுங்குதலும் இயல்பானதுதான் என்று தம்மைத் தாமே சமதானப்படுத்திக்கொண்டு அதனை மெளனமாக ஏற்றுக் கொள்ள தந்தையருக்கும் மகள்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இக்கவிதை எனக்கு உணர்த்தும் புரிதல்.
தந்தைக்கும் மகனுக்குமான உறவினைக் காட்டிலும் தந்தைக்கும் மகளுக்குமான உறவு பிடித்தம் மிக்கது. அந்த உறவில் கண்ணீருக்கும் பிரியத்திற்கும் நிறைய இடம் இருக்கிறது. இதே கவிதையில் மகளுக்கு பதிலாக மகன் இடம் பெற்றிருந்தால் கவிதை உருவாக்கக் கூடிய அழுத்தம் சற்று மென்மையானதாகவும் அது ஒரு விளையாட்டை மட்டுமே பதிவு செய்யும் கவிதையாக மட்டுமே அமைந்திருக்கும். இந்தச் செல்ல மகளும், குமிழியும் உருவாக்கும் சித்திரங்கள் கவிதையை வேறு தளத்தில் நிறுத்துகின்றன. வாசிப்பவனின் நெஞ்சுக்கூட்டிற்குள் ஒரு வெறுமையை இந்தக் கவிதையால் உருவாக்க முடிகிறது.
தமிழ் கவிதைகளில் சில படிமங்கள் திரும்பத் திரும்ப இடம் பிடித்துவிடுகின்றன. இவை எவ்வளவுதான் முக்கியமான குறியீடுகள் என்றாலும் தொடர்ந்து கவிதைகளில் வாசிக்கும் போது சலிப்பூட்டுகின்றன. இந்த சலிப்பூட்டக்கூடிய படிமங்களில் ஒன்று 'சொல்'. அது இந்தத் தொகுப்பு முழுவதும்- தலைப்பு உட்பட- நிறைய இடங்களில் இருப்பது கவிதைக்குள் புழங்கும் வாசகனுக்கு மனத்தடையை உருவாக்குகிறது. மெளனித்தியங்கும், சிறகலுத்த போன்ற புத்துணர்ச்சியைத் தரக்கூடிய சொற்களை அதிகளவில் பயன்படுத்தியிருக்கும் ஸ்ரீஷங்கர் அதேவேளையில் சன்னம், சலனித்தல் போன்ற சில சொற்கள் நிறைய கவிதைகளில் வருவதையும் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் திருகலானவை இல்லை ஆனால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவையும் இல்லை. பெரும்பாலான கவிதைகளை அடிப்படையான புரிதலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்க வேண்டியிருந்தது. இத்தகைய மறுவாசிப்பு சலிப்பூட்டக்கூடியதாக இருக்கவில்லை, மாறாக கவிதைக்குள்ளாக நுழைந்துவிடுவதற்கான உத்வேக முயற்சியாகவே இருந்தது. மறுவாசிப்பு செய்ய வேண்டியதற்கு அடிப்படையான காரணம் என்று குறிப்பாக எதையும் சுட்ட முடியவில்லை- ஆனால் சொற்களின் தேர்வு, வரிகளின் அமைவு, கவிதை சொல்லி தேர்ந்தெடுத்துக் கொண்ட களம் என ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களை குறிப்பிட முடிகிறது. கவிதை என்ற அடிப்படையில் இத்தொகுப்பின் உத்திகள் புதிய முயற்சிகள். இம்முயற்சிகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியன என்றாலும் தமிழின் நவீன கவிதையை ஒரு இயக்கமாக கொண்டால் இந்தக் கவிதைகள் மட்டுமே அந்த இயக்கத்தின் போக்கில் பெரும் சலனத்தை உண்டாக்கிவிட போதுமானவை இல்லை என்று நம்புகிறேன். அதே சமயம் இத்தொகுப்பை கவனம்பெறத் தக்க தொகுப்பாக முன் வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
தொகுப்பு: சொற்பறவை
வெளியீடு: உயிர் எழுத்து
நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட்’ 2012
4 எதிர் சப்தங்கள்:
ரசித்து எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
/// கவிதைகளை மட்டுமே வாசித்துவிட்டு அந்தக் கவிஞனைப் பற்றிய முழுமையான சித்திரத்தை பெறுவதென்பதும் எளிதான காரியமில்லை. /// - உண்மை... கவிஞர் மட்டுமல்ல... யாராக இருந்தாலும்...
நல்லதொரு கவிதை தொகுப்பை பகிர்ந்தமைக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
நல்ல அனுபவம் தந்த பார்வை பகிர்தல்
மகன்/மகள் - முறையே ஆண்/பெண் தேர்வு செய்யும் பால் பொறுத்து கவிதையின் தன்மை மாறுவது பற்றி எழுதியது ஒரு தனித்த பார்வையை எனக்கு தருகிறது மணி,
அந்தக் குமிழி கவிதையின் தங்களது புரிதல் ஆச்சர்யப்பட வைத்தது!
நல்ல பதிவு. கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவருகிறது? ஆசிரியருக்கு வாழ்த்துகள்..
உங்கள் விமர்சனமே கவிதை போலிருக்கிறது.அருமை
Post a Comment