Ketamine. இதை எப்படி உச்சரிக்கலாம்?
கேட்டமைன் என்று உச்சரிக்கலாம். "கெட்ட"மைன் என்று படித்தாலும் கூட உச்சரிப்பும் பொருளும் சரிதான். அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இந்த கேட்டமைன்.
தனேஷ் நான் சென்னையில் இருக்கும் போது பழக்கமானான். கொழுக் மொழுக் என்றிருக்கும் தனேஷை பார்த்தாலே முடிவு செய்துவிடலாம் அவரிடம் இருக்கும் பணத்தின் அளவை. பணக்களை தாண்டவமாடும். பணத்திற்கு ஒரு களை உண்டா என்றெல்லாம் கேட்கக் கூடாது.
விதவிதமான போதை வஸ்துகளை முயன்று பார்க்கும் தனேஷ்க்கு ஸ்பெஷல் 'கே' பற்றி தெரிய வந்தது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இன்பச் சுற்றுலாவில். விசாகப்பட்டணத்தில் நான்கைந்து நாட்கள் டேரா போட்ட சமயம் சிரஞ்சீவி நடித்து ஆந்திராவில் சக்கைப் போடு போட்ட இந்திரா படம் ரிலீஸ் ஆகியிருந்தது. நண்பர்களோடு கூட்டமாக படத்திற்கு சென்ற போது அங்கு அறிமுகமான ஒரு ஆந்திராவாலா ஏகப்பட்ட காசை இவர்களிடம் வாங்கிக் கொண்டு, (இந்த இடத்தில் இவர்கள் என்று பன்மையில் இருந்தாலும் மொத்த ஸ்பான்ஸரும் தனேஷ்தான்) கெட்டமைனைக் கொடுத்திருக்கிறார்.
கெட்டமைன் தாவரத்திலிருந்து கிடைப்பதில்லை. 1962 ல் Parke-Davis நிறுவனத்தால் செயற்கை முறையில் கண்டறியப்பட்ட இது ஒரு உப்பு வகை வேதிப் பொருள். ஆரம்பத்தில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாக பயன்படுத்தினார்கள். யாரோ ஒரு தில்லாலங்கடி மனிதன் இதை "சரக்காக”வும் பயன்படுத்த முடியும் என்பதனைக் கண்டறிந்து உலகம் முழுவதும் மப்புதாரர்களின் வயிற்றில் பாலை(பினாயில்?)ஐ வார்த்துவிட்டார்.
தனேஷ் குரூப் காசு கொடுத்து கெட்டமைனை வாங்கியது வாங்கிவிட்டார்கள். ஆனால் எத்தனை எடுக்க வேண்டும், எவ்வளவு எடுக்க வேண்டும் என்று தெரியாமல் அந்த இரவில் இணையத்தில் மேய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். Ketaset(கெட்டமைனின் ஒரு வடிவம்) 4 mL உட்கொண்டிருக்கிறார்கள். இது 400 mg கெட்டமைனுக்குச் சமம்.
வெறும் வயிற்றில், ஒரு ஸ்பூனில் இதை வைத்து தொண்டைக்கு அருகில் வைத்து விழுங்கிவிட்டு மேலாக ஆரஞ்சு பழச் சுளைகளை தின்றிருக்கிறார்கள். கெட்டமைனின் சுவை கொடூரமானதாக இருக்கும் என்று தெரியவந்ததால் இந்த நடவடிக்கை. அவ்வளவுதான் தெரியுமாம். அடுத்த இரண்டு நாட்களுக்கு போதையோடு திரிந்திருக்கிறார்கள். என்ன செய்தோம் என்பதெல்லாம் துளியும் ஞாபகத்தில் இல்லை.
பொதுவாக 'கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு' என்ற பெயரில் போதை பயன்பாடுகளுக்காக ‘ஸ்பெஷல் கே’ கிடைக்கிறது. விலையும் மிக அதிகம். ஒரு கிராம் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக ஆகும். 'குருவி சரக்கு'(கடத்தல்) என்றால் கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாயைக் கூடத் தொடலாமாம்.Ketalar(Parke-Davis), Ketaset(Bristol) போன்றவை விற்பனைக்கு கிடைக்கும் கெட்டமைனின் வேறு சில வடிவங்கள்.
தனேஷ் குழுவில் இருந்த சார்லஸ் மட்டும் ஊசி மூலம் தசைகளுக்கு இடையில் செலுத்திக் கொண்டிருக்கிறான்.அடுத்த சில நாட்களுக்கு போதையில் கிடந்தானாம். போதை என்று மட்டும் சொல்வது கெட்டமைனின் போதையை குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடலாம். தன் உடலை விட்டு மனம் முற்றிலும் நீங்கிவிடும் போதை. அவனது சொற்களில் சொன்னால் "இறக்காமல் இறப்பது".
Dissociative Drug என்ற வகையில் ஸ்பெஷல் கே வரும். பிணைப்பு நீக்கி (Dissociative) வகை என்பது மனித மூளையின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் தகவல்களை உணர்வு பகுதிக்குக்குள்(Conscious Mind) அண்டவிடாமல் தடுத்து விடும். இந்தத் தடுப்புதான் போதைக்கான அடிப்படைக் காரணம். இது மூச்சின் வேகத்தை குறைத்தல், இதயத் துடிப்பின் அளவினை குறைத்தல் என சங்கு ஊதுவதற்கான அனைத்து வழிமுறைகளுக்கும் அடிகோலுபவை. உட்கொள்ளும் அளவு ஏடாகூடமாக மாறினால் கட்டையில் ஏறுவது நிச்சயம்.
K-hole என்ற ஒரு சொல் கெட்டமைனை உபயோகப்படுத்துபவர்களிடம் மிகப் பிரபலம். கிட்டத்தட்ட 150 mg அளவுக்கு எடுத்துக் கொண்டால் இந்த K-hole ஐ அடையலாம். மனமும், உடலும் எந்த விதமான தொடர்புமில்லாமல் ஆகும் பிரிவு நிலை. இந்த நிலையை பறப்பது, பட்டுத் துணி மீதாக உடலை உருட்டுதல் என்று காதலின் உச்சத்தில் பிதற்றுவது போன்று ஏதேதோ வர்ணிக்கிறார்கள்.
வழக்கம் போல இதை உட்கொண்டால் அது வரும், இது வரும் என்றெல்லாம் வரிசைப்படுத்தாமல் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம். தொடர்ந்து ஸ்டிரீட் கே (கெட்டமைனின் இன்னொரு பெயர்)வை உபயோகப்படுத்தினால் ஈரலும், சிறுநீரக சுவர்களும் பாதிக்கப்பட்டு விரைவில் "சோலி"யை முடித்துக் கொள்ளலாம்.
செல்லப்பெயர் இல்லாத போதைப் பொருளா? கெட்டமைனுக்கு ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சில சாம்பிள் மட்டும் இங்கே. கெ,கெல்லாக்ஸ், க்ரிப்பிள், கெஸிள், டெய்ஸி, சோன்,கென்னி, கெவின், கிங் காங், கெட்ஸோ, பட்டியல் நீள்கிறது..... உலகத்தில் அதிக செல்லப் பெயர் கொண்ட போதைப் பொருள் இதுவாகக் கூட இருக்கலாம். செல்லப்பெயர் காதலிக்குத் தானே வைப்பார்கள்? ஸ்பெஷல் கே வுக்கு எத்தனை காதலர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.
[The Little Book of Ketamine என்பது கெட்டமைன் குறித்தான உலகப்புகழ்பெற்ற புத்தகம். படிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. அமேசான்.காம்மில் விற்கிறார்கள்]
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment