அஜய் நுனிநாக்கு ஆங்கிலத்தில் செமத்தியாக புருடா விடும் கில்லாடி. பல பேர்கள் சரக்கில்லாமல் (இது மண்டையில் இருக்கும் சரக்கு) ஸீன் போடுவார்களே, அந்த ரகம் இல்லை. ஊட்டி கான்வென்ட் படிப்பு, மெட்ரோ பாலிடன் நகர வளர்ப்பு, பாக்கெட்களில் நிரம்பி வழியும் ரூபாய்த்தாள்கள், ஊரின் பணக்கார பையன்கள்/பெண்களின் சகவாசம், தாறுமாறாக புத்தகங்கள் வாசிப்பது என்று எல்லாம் தானாக அமைந்தது.
Hard drugs, Soft drugs என்று இரண்டு தளங்களிலும் இயங்குவான்.ஹார்ட் என்பது பெரும்பாலும் மருத்துவப் பயன் இல்லாத, அடிமைத்தனத்திற்கும், மரணத்திற்கும் இட்டுச் செல்பவை. கோகெயின், ஹெராயின் போன்றவை இந்த வகையில் வருவன. ஆல்ஹகால், நிகோடினைக் கூட இதில் சேர்க்கிறார்கள். soft drugs இதற்கு நேர்மாறானது. பெரும்பாலும் அடிமையாக்குவதில்லை, மரணம் உண்டாக்குவதில்லை. Cannabis இதற்கு உதாரணம்.
அஜய் போதையேற்றுவதற்காக மட்டும் வெட்கம், மானம், பிரஸ்டீஜ், பட்டர்பிளை என்று எதுவும் பார்க்க மாட்டான். முந்தின நாள் இரவில் குடியாத்தம் அருகே ஓலைக் குடிசையில் அமர்ந்து வெற்றிலை பாக்கு கிழவி சுட்டுத்தரும் ஆம்லெட்டைக் கடித்துக் கொண்டு பட்டைச் சாராயம் அடிப்பான் அடுத்த நாள் சென்னையில் இருக்கும் பிரபலமான பைவ்ஸ்டார் ஓட்டலில் பாரின் விஸ்கியை உள்ளே ஊற்றிக் கொண்டிருப்பான்.
சரக்கடிக்கும் போது கம்பெனி தருபவர்களின் முகங்களும் அப்படியே மாறிவிடும். குடியாத்தத்தில் குடித்தால் தப்புத்தப்பாக ஆங்கிலத்தில் உளறும் விஜயானந்த்(விஜயகாந்த் இல்லை. விஜயானந்த்), பரம்பரைக் குடிகாரன் என்று நிரூபிக்க நிறைய குடித்துவிட்டு வாந்தியெடுக்கும் சிவராமன், ஜெகதீசன் என்ற பட்டியல் இருக்கும். சென்னையில் என்றால் மிகப்பிரபலமான தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் மகன், வைர வியாபாரி, மாடல்கள் என்று உல்டாவாக இருக்கும்.
கடந்த புத்தாண்டுக்கு முந்தைய இரவில் வடபழனி பாரில் இருக்கும் போது, அஜயுடன் ஸ்வப்னா, ஸ்வேதா என்ற இளங்கிளிகளும் வேறு சில பணக்கார பையன்களும் இருந்திருக்கிறார்கள். பியர்,பிராந்தி,விஸ்கி, ஒயின் தவிர்த்து வேறு எதுவும் இல்லையா என்று ஸ்வேதா கேட்டிருக்கிறாள். ஹெராயினில் அவளுக்கு விருப்பமில்லையாம். சுற்றி இருந்த ஆண்மகனார்கள் உச்சி முடி நட்டுக் கொள்ள யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். Cannabis, khat, Kava என்று ஏகப்பட்டவை இருக்கின்றனதான் ஆனால் இந்த நேரத்தில் யாரைப் பிடித்து எதை வாங்குவது என்றுதான் குழம்பியிருக்கிறார்கள். ஒரு மஞ்சக்காட்டு மைனா கேட்டு அதை நிறைவேற்றவில்லை என்றால் இந்த பூமியில் பிறப்பெடுத்து என்ன பயன் என்ற ரேஞ்சில் யோசித்ததாக அஜய் ஒரு நாள் சொன்னான்.
தொலைபேசியில் யார் யாரிடமோ பேசிய போது கானபிஸ் இருப்பதாகச் சொன்னார்கள். கானபிஸ் என்பது ஒரு தாவரம். மரிஜூவானா என்ற பெயரும் அதற்கு உண்டு. பெயரே குண்டக்க மண்டக்க இருப்பதாக குழப்பமாகத் தேவையில்லை. மரிஜுவானா(Marijuana) என்றால் புரியாதவர்கள் எளிமையாக "கஞ்சா" என்று வைத்துக் கொள்ளலாம். ஆமாங்கண்ணா ஆமாங்க. உலகப் புகழ் கஞ்சாவைத்தான் போனில் பிடித்தார்கள்.
கானபிஸ் தாவரம் குறிப்பிட்ட பருவத்தில் பூப்பது. பெண் தாவரத்தின்(ஆண் தாவரத்தை உபயோகப்படுத்துவதில்லை) காய்ந்த மலர்களையும், இலைகளையும் தேர்ந்தெடுத்து டி.ஹெச்.சி என்ற போதைப் பொருளை தயாரிக்கிறார்கள். டெட்ராஹைட்ரோகேனபினால் என்பது இதன் பெயர். இதுதான் கஞ்சாவின் போதைக்கு அடிப்படைக் காரணம்.வேதியியல் முறை, உயிரியியல் முறை என்று எல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. பீடியில் இருக்கும் புகையிலைத் தூளை கொட்டிவிட்டு கஞ்சாப் பொடியை வைத்து உறிஞ்சினாலே போதும். போதை தலைக்கேறி எதை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனாலும் ஆப்பிள் ஆரஞ்சுப் பழங்களை எல்லாம் ஆப்பிள் ஷேக் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது செய்து உள்ளுக்குள் தள்ளுவது போல கானபிஸ் தாவரத்தை அப்படியே பயன்படுத்தாமல் ஹாஷிஷ், கீப், ஹாஷ் எண்ணெய் என்று பல வித வடிவங்களில் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கஞ்சாவை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவிலும் நேபாளத்திலும் சாதுக்கள் இதனை சர்வசாதாரணமாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த கானபிஸ் தாவரத்திற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. மருந்துக்கு குடிக்கிறேன் என்று சொல்லி மொத்தமாக கஞ்சாவுக்கு அடிமையாகி குடும்பத்தாரின் கழுத்தை அறுத்தவர்கள் என்ற பட்டியல்தான் பெரியதாக இருக்கும்.
அந்த தினம் பாரில், அஜய் குழுவினரிடம் ஒரு நடுத்தர வயதுடைய பெரிய மனிதர் பேசினார். ஆரம்பத்தில் தன் பதவி, பணம் குறித்தவர் எல்லாம் பேசியவர் கஞ்சா போதையேறியதும் சொன்னார். "கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். நான் யாருக்கும் குற்றமற்றவனாக, பொய் சொல்லாதவனாக, துரோகம் செய்யாதவனாக இருக்க வேண்டிக் கொள்கிறேன். அதே சமயம் அடுத்தவரின் வஞ்சகம், துரோகம், பொய் எதுவும் என்னை மனதளவில் பாதிக்காமல் இருக்கட்டும்".
அவர் மனைவியின் துரோகத்தை மனதில் வைத்து பேசியதாக உணர முடிந்தது. ஆனால் எதுவாக இருப்பினும் போதையில் மனிதன் குழந்தமையை அடைகிறான். என்ன சொல்கிறீர்கள்?. இல்லை என்பவர்கள் மிகுந்த போதையில் இருப்பவரிடம் சகிப்புத் தன்மையுடன் பேசிப்பார்க்கலாம்.
4 எதிர் சப்தங்கள்:
அதனையும் அவர்களையும் புரிந்து கொள்ள முடிந்தது
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது எழுத்தின் லாவகம்
வாழ்த்துக்கள்
//போதையில் மனிதன் குழந்தமையை அடைகிறான். என்ன சொல்கிறீர்கள்?. இல்லை என்பவர்கள் மிகுந்த போதையில் இருப்பவரிடம் சகிப்புத் தன்மையுடன் பேசிப்பார்க்கலாம்.//
//மரிஜுவானா(Marijuana//
அது மரிஜுவானா இல்லங்க, மாரிய்வானா அல்லது மாரூவானா. அது ஒரு ஸ்பானிய அல்லது இலத்தீன் வார்த்தை.
நன்றி ரமணி, ஆறுமுகம்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி Pepple.
Post a Comment