Aug 31, 2012

கெட்டவன்Ketamine. இதை எப்ப‌டி உச்ச‌ரிக்க‌லாம்?

கேட்டமைன் என்று உச்சரிக்கலாம். "கெட்ட"மைன் என்று படித்தாலும் கூட உச்சரிப்பும் பொருளும் சரிதான். அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இந்த கேட்டமைன்.

த‌னேஷ் நான் சென்னையில் இருக்கும் போது பழக்கமானான். கொழுக் மொழுக் என்றிருக்கும் த‌னேஷை பார்த்தாலே முடிவு செய்துவிட‌லாம் அவ‌ரிட‌ம் இருக்கும் ப‌ணத்தின் அள‌வை. ப‌ண‌க்க‌ளை தாண்ட‌வ‌மாடும். ப‌ண‌த்திற்கு ஒரு க‌ளை உண்டா என்றெல்லாம் கேட்க‌க் கூடாது. 

வித‌வித‌மான‌ போதை வ‌ஸ்துக‌ளை முய‌ன்று பார்க்கும் த‌னேஷ்க்கு ஸ்பெஷ‌ல் 'கே' ப‌ற்றி தெரிய‌ வ‌ந்த‌து க‌ல்லூரியின் மூன்றாம் ஆண்டு இன்ப‌ச் சுற்றுலாவில். விசாக‌ப்ப‌ட்ட‌ண‌த்தில் நான்கைந்து நாட்க‌ள் டேரா போட்ட‌ ச‌ம‌ய‌ம் சிர‌ஞ்சீவி ந‌டித்து ஆந்திராவில் ச‌க்கைப் போடு போட்ட‌ இந்திரா ப‌ட‌ம் ரிலீஸ் ஆகியிருந்த‌து. நண்பர்களோடு கூட்ட‌மாக‌ ப‌ட‌த்திற்கு சென்ற‌ போது அங்கு அறிமுக‌மான‌ ஒரு ஆந்திராவாலா ஏக‌ப்ப‌ட்ட‌ காசை இவ‌ர்க‌ளிட‌ம் வாங்கிக் கொண்டு, (இந்த இடத்தில் இவ‌ர்க‌ள் என்று ப‌ன்மையில் இருந்தாலும் மொத்த‌ ஸ்பான்ஸ‌ரும் த‌னேஷ்தான்) கெட்ட‌மைனைக் கொடுத்திருக்கிறார். 

கெட்ட‌மைன் தாவ‌ர‌த்திலிருந்து கிடைப்ப‌தில்லை. 1962 ல் Parke-Davis நிறுவ‌ன‌த்தால் செயற்கை முறையில் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ இது ஒரு உப்பு வ‌கை வேதிப் பொருள். ஆர‌ம்ப‌த்தில் ம‌னித‌ர்க‌ளுக்கும், வில‌ங்குக‌ளுக்கும் அறுவை சிகிச்சையில் ம‌ய‌க்க‌ ம‌ருந்தாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தினார்க‌ள். யாரோ ஒரு தில்லால‌ங்க‌டி ம‌னித‌ன் இதை "ச‌ர‌க்காக‌”வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியும் என்ப‌த‌னைக் க‌ண்ட‌றிந்து உல‌க‌ம் முழுவ‌தும் ம‌ப்புதாரர்க‌ளின் வ‌யிற்றில் பாலை(பினாயில்?)ஐ வார்த்துவிட்டார்.

தனேஷ் குரூப் காசு கொடுத்து கெட்டமைனை வாங்கியது வாங்கிவிட்டார்கள். ஆனால் எத்த‌னை எடுக்க‌ வேண்டும், எவ்வ‌ள‌வு எடுக்க‌ வேண்டும் என்று தெரியாம‌ல் அந்த‌ இர‌வில் இணைய‌த்தில் மேய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்க‌ள். Ketaset(கெட்ட‌மைனின் ஒரு வ‌டிவ‌ம்) 4 mL உட்கொண்டிருக்கிறார்க‌ள். இது 400 mg கெட்ட‌மைனுக்குச் ச‌ம‌ம்.

வெறும் வ‌யிற்றில், ஒரு ஸ்பூனில் இதை வைத்து தொண்டைக்கு அருகில் வைத்து விழுங்கிவிட்டு மேலாக‌ ஆர‌ஞ்சு ப‌ழ‌ச் சுளைக‌ளை தின்றிருக்கிறார்க‌ள். கெட்ட‌மைனின் சுவை கொடூர‌மான‌தாக‌ இருக்கும் என்று தெரிய‌வ‌ந்த‌தால் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கை. அவ்வளவுதான் தெரியுமாம். அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளுக்கு போதையோடு திரிந்திருக்கிறார்க‌ள். என்ன செய்தோம் என்பதெல்லாம் துளியும் ஞாபகத்தில் இல்லை.

பொதுவாக‌ 'கேட்ட‌மைன் ஹைட்ரோ குளோரைடு' என்ற‌ பெய‌ரில் போதை ப‌ய‌ன்பாடுக‌ளுக்காக‌ ‘ஸ்பெஷல் கே’ கிடைக்கிற‌து. விலையும் மிக‌ அதிக‌ம். ஒரு கிராம் கிட்ட‌த்த‌ட்ட‌ ஆயிர‌ம் ரூபாய்க்கும் மேலாக‌ ஆகும். 'குருவி ச‌ர‌க்கு'(கடத்தல்) என்றால் கிட்ட‌த்த‌ட்ட‌ ஐயாயிர‌ம் ரூபாயைக் கூட‌த் தொட‌லாமாம்.Ketalar(Parke-Davis), Ketaset(Bristol) போன்றவை விற்ப‌னைக்கு கிடைக்கும் கெட்ட‌மைனின் வேறு சில வ‌டிவ‌ங்க‌ள். 

தனேஷ் குழுவில் இருந்த‌ சார்ல‌ஸ் ம‌ட்டும் ஊசி மூல‌ம் த‌சைக‌ளுக்கு இடையில் செலுத்திக் கொண்டிருக்கிறான்.அடுத்த‌ சில நாட்களுக்கு போதையில் கிட‌ந்தானாம். போதை என்று மட்டும் சொல்வது கெட்டமைனின் போதையை குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடலாம். த‌ன் உட‌லை விட்டு மனம் முற்றிலும் நீங்கிவிடும் போதை. அவ‌ன‌து சொற்களில் சொன்னால் "இற‌க்காம‌ல் இற‌ப்ப‌து". 

Dissociative Drug என்ற‌ வகையில் ஸ்பெஷ‌ல் கே வ‌ரும். பிணைப்பு நீக்கி (Dissociative) வ‌கை என்ப‌து ம‌னித‌ மூளையின் ம‌ற்ற‌ ப‌குதிக‌ளில் இருந்து வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை உண‌ர்வு ப‌குதிக்குக்குள்(Conscious Mind) அண்டவிடாம‌ல் த‌டுத்து விடும். இந்த‌த் த‌டுப்புதான் போதைக்கான‌ அடிப்ப‌டைக் கார‌ண‌ம். இது மூச்சின் வேக‌த்தை குறைத்த‌ல், இத‌ய‌த் துடிப்பின் அள‌வினை குறைத்த‌ல் என‌ ச‌ங்கு ஊதுவ‌த‌ற்கான‌ அனைத்து வ‌ழிமுறைக‌ளுக்கும் அடிகோலுப‌வை. உட்கொள்ளும் அள‌வு ஏடாகூடமாக மாறினால் க‌ட்டையில் ஏறுவ‌து நிச்ச‌ய‌ம்.

K-hole என்ற‌ ஒரு சொல் கெட்ட‌மைனை உப‌யோக‌ப்ப‌டுத்துபவ‌ர்க‌ளிட‌ம் மிக‌ப் பிர‌ப‌ல‌ம். கிட்ட‌த்த‌ட்ட‌ 150 mg அள‌வுக்கு எடுத்துக் கொண்டால் இந்த‌ K-hole ஐ அடைய‌லாம்.  ம‌ன‌மும், உட‌லும் எந்த‌ வித‌மான‌ தொட‌ர்புமில்லாமல் ஆகும்‌ பிரிவு நிலை. இந்த நிலையை ப‌ற‌ப்ப‌து, ப‌ட்டுத் துணி மீதாக‌ உட‌லை உருட்டுத‌ல் என்று காத‌லின் உச்ச‌த்தில் பித‌ற்றுவ‌து போன்று ஏதேதோ வ‌ர்ணிக்கிறார்கள்.

வ‌ழ‌க்க‌ம் போல‌ இதை உட்கொண்டால் அது வ‌ரும், இது வ‌ரும் என்றெல்லாம் வ‌ரிசைப்ப‌டுத்தாம‌ல் ஒன்றே ஒன்று ம‌ட்டும் சொல்லிக் கொள்ள‌லாம். தொட‌ர்ந்து ஸ்டிரீட் கே (கெட்டமைனின் இன்னொரு பெய‌ர்)வை உப‌யோக‌ப்ப‌டுத்தினால் ஈர‌லும், சிறுநீரக‌ சுவ‌ர்க‌ளும் பாதிக்க‌ப்ப‌ட்டு விரைவில் "சோலி"யை முடித்துக் கொள்ள‌லாம். 

செல்ல‌ப்பெய‌ர் இல்லாத‌ போதைப் பொருளா? கெட்டமைனுக்கு ஏக‌ப்ப‌ட்ட‌ பெய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. சில‌ சாம்பிள் ம‌ட்டும் இங்கே. கெ,கெல்லாக்ஸ், க்ரிப்பிள், கெஸிள், டெய்ஸி, சோன்,கென்னி, கெவின், கிங் காங், கெட்ஸோ, ப‌ட்டிய‌ல் நீள்கிறது..... உல‌க‌த்தில் அதிக‌ செல்ல‌ப் பெய‌ர் கொண்ட‌ போதைப் பொருள் இதுவாக‌க் கூட‌ இருக்க‌லாம். செல்ல‌ப்பெய‌ர் காத‌லிக்குத் தானே வைப்பார்க‌ள்? ஸ்பெஷ‌ல் கே வுக்கு எத்த‌னை காத‌ல‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் பாருங்க‌ள்.

[The Little Book of Ketamine என்பது கெட்டமைன் குறித்தான உலகப்புகழ்பெற்ற புத்தகம். ப‌டிக்க‌ச் சுவார‌சிய‌மாக‌ இருக்கிற‌து. அமேசான்.காம்மில் விற்கிறார்க‌ள்]

Aug 30, 2012

கஞ்சாஅஜய் நுனிநாக்கு ஆங்கிலத்தில் செமத்தியாக புருடா விடும் கில்லாடி. பல பேர்கள்  சரக்கில்லாமல் (இது மண்டையில் இருக்கும் சரக்கு) ஸீன் போடுவார்களே, அந்த ரகம் இல்லை. ஊட்டி கான்வென்ட் படிப்பு, மெட்ரோ பாலிடன் நகர வளர்ப்பு, பாக்கெட்களில் நிரம்பி வழியும் ரூபாய்த்தாள்கள், ஊரின் பணக்கார பையன்கள்/பெண்களின் சகவாசம், தாறுமாறாக புத்தகங்கள் வாசிப்பது என்று எல்லாம் தானாக அமைந்தது.

Hard drugs, Soft drugs என்று இரண்டு தளங்களிலும் இயங்குவான்.ஹார்ட் என்பது பெரும்பாலும் மருத்துவப் பயன் இல்லாத, அடிமைத்தனத்திற்கும், மரணத்திற்கும் இட்டுச் செல்பவை. கோகெயின், ஹெராயின் போன்றவை இந்த வகையில் வருவன. ஆல்ஹகால், நிகோடினைக் கூட இதில் சேர்க்கிறார்கள். soft drugs இதற்கு நேர்மாறானது. பெரும்பாலும் அடிமையாக்குவதில்லை, மரணம் உண்டாக்குவதில்லை. Cannabis இதற்கு உதாரணம். 

அஜய் போதையேற்றுவ‌த‌ற்காக‌ ம‌ட்டும் வெட்க‌ம், மான‌ம், பிர‌ஸ்டீஜ், ப‌ட்ட‌ர்பிளை என்று எதுவும் பார்க்க‌ மாட்டான். முந்தின‌ நாள் இர‌வில் குடியாத்த‌ம் அருகே ஓலைக் குடிசையில் அம‌ர்ந்து வெற்றிலை பாக்கு கிழ‌வி சுட்டுத்த‌ரும் ஆம்லெட்டைக் கடித்துக் கொண்டு ப‌ட்டைச் சாராய‌ம் அடிப்பான் அடுத்த‌ நாள் சென்னையில் இருக்கும் பிரபலமான பைவ்ஸ்டார் ஓட்ட‌லில் பாரின் விஸ்கியை உள்ளே ஊற்றிக் கொண்டிருப்பான். 

சரக்கடிக்கும் போது கம்பெனி தருபவர்களின் முக‌ங்க‌ளும் அப்ப‌டியே மாறிவிடும். குடியாத்த‌த்தில் குடித்தால் தப்புத்த‌ப்பாக‌ ஆங்கில‌த்தில் உள‌றும் விஜ‌யான‌ந்த்(விஜ‌ய‌காந்த் இல்லை. விஜ‌யான‌ந்த்), ப‌ர‌ம்ப‌ரைக் குடிகார‌ன் என்று நிரூபிக்க‌ நிறைய‌ குடித்துவிட்டு வாந்தியெடுக்கும் சிவ‌ராம‌ன், ஜெக‌தீச‌ன் என்ற‌ ப‌ட்டிய‌ல் இருக்கும். சென்னையில் என்றால் மிக‌ப்பிர‌ப‌ல‌மான‌ தனியார் ம‌ருத்துவ‌ம‌னையின் நிர்வாக‌ இய‌க்குன‌ரின் ம‌க‌ன், வைர‌ வியாபாரி, மாட‌ல்கள் என்று உல்டாவாக‌ இருக்கும்.

கடந்த புத்தாண்டுக்கு முந்தைய இரவில் வ‌ட‌ப‌ழ‌னி பாரில் இருக்கும் போது, அஜயுடன் ஸ்வ‌ப்னா, ஸ்வேதா என்ற‌ இள‌ங்கிளிக‌ளும் வேறு சில பணக்கார பையன்களும் இருந்திருக்கிறார்க‌ள். பிய‌ர்,பிராந்தி,விஸ்கி, ஒயின் த‌விர்த்து வேறு எதுவும் இல்லையா என்று ஸ்வேதா கேட்டிருக்கிறாள். ஹெராயினில் அவ‌ளுக்கு விருப்ப‌மில்லையாம். சுற்றி இருந்த‌ ஆண்ம‌க‌னார்கள் உச்சி முடி ந‌ட்டுக் கொள்ள‌ யோசிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிறார்க‌ள். Cannabis, khat, Kava என்று ஏக‌ப்ப‌ட்ட‌வை இருக்கின்ற‌ன‌தான் ஆனால் இந்த‌ நேர‌த்தில் யாரைப் பிடித்து எதை வாங்குவ‌து என்றுதான் குழ‌ம்பியிருக்கிறார்க‌ள். ஒரு ம‌ஞ்ச‌க்காட்டு மைனா கேட்டு அதை நிறைவேற்ற‌வில்லை என்றால் இந்த‌ பூமியில் பிற‌ப்பெடுத்து என்ன‌ ப‌ய‌ன் என்ற‌ ரேஞ்சில் யோசித்த‌தாக‌ அஜ‌ய் ஒரு நாள் சொன்னான்.

தொலைபேசியில் யார் யாரிட‌மோ பேசிய போது கானபிஸ் இருப்பதாகச் சொன்னார்கள். கானபிஸ் என்பது ஒரு தாவரம். மரிஜூவானா என்ற பெயரும் அதற்கு உண்டு. பெயரே குண்டக்க மண்டக்க இருப்பதாக குழப்பமாகத் தேவையில்லை. மரிஜுவானா(Marijuana) என்றால் புரியாதவர்கள் எளிமையாக "கஞ்சா" என்று வைத்துக் கொள்ளலாம். ஆமாங்கண்ணா ஆமாங்க. உலகப் புகழ் கஞ்சாவைத்தான் போனில் பிடித்தார்கள்.

கான‌பிஸ் தாவ‌ர‌ம் குறிப்பிட்ட ப‌ருவ‌த்தில் பூப்பது. பெண் தாவரத்தின்(ஆண் தாவரத்தை உபயோகப்படுத்துவதில்லை) காய்ந்த‌ ம‌ல‌ர்க‌ளையும், இலைக‌ளையும் தேர்ந்தெடுத்து டி.ஹெச்.சி என்ற‌ போதைப் பொருளை த‌யாரிக்கிறார்க‌ள். டெட்ராஹைட்ரோகேன‌பினால் என்ப‌து இத‌ன் பெய‌ர். இதுதான் கஞ்சாவின் போதைக்கு அடிப்படைக் காரணம்.வேதியியல் முறை, உயிரியியல் முறை என்று எல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. பீடியில் இருக்கும் புகையிலைத் தூளை கொட்டிவிட்டு கஞ்சாப் பொடியை வைத்து உறிஞ்சினாலே போதும். போதை தலைக்கேறி எதை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனாலும் ஆப்பிள் ஆரஞ்சுப் பழங்களை எல்லாம் ஆப்பிள் ஷேக் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது செய்து உள்ளுக்குள் தள்ளுவது போல கானபிஸ் தாவரத்தை அப்படியே பயன்படுத்தாமல் ஹாஷிஷ், கீப், ஹாஷ் எண்ணெய் என்று பல வித வடிவங்களில் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள். 

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கஞ்சாவை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவிலும் நேபாளத்திலும் சாதுக்கள் இதனை சர்வசாதாரணமாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த கானபிஸ் தாவரத்திற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. மருந்துக்கு குடிக்கிறேன் என்று சொல்லி மொத்தமாக கஞ்சாவுக்கு அடிமையாகி குடும்பத்தாரின் கழுத்தை அறுத்தவர்கள் என்ற பட்டியல்தான் பெரியதாக இருக்கும்.

அந்த‌ தினம் பாரில், அஜய் குழுவினரிடம் ஒரு ந‌டுத்த‌ர‌ வ‌ய‌துடைய‌ பெரிய‌ ம‌னித‌ர் பேசினார். ஆர‌ம்ப‌த்தில் த‌ன் ப‌த‌வி, ப‌ண‌ம் குறித்த‌வ‌ர் எல்லாம் பேசியவ‌ர் க‌ஞ்சா போதையேறிய‌தும் சொன்னார். "க‌டவுளிட‌ம் வேண்டிக் கொள்கிறேன். நான் யாருக்கும் குற்ற‌ம‌ற்ற‌வ‌னாக‌, பொய் சொல்லாத‌வ‌னாக‌, துரோக‌ம் செய்யாத‌வ‌னாக‌ இருக்க‌ வேண்டிக் கொள்கிறேன். அதே ச‌ம‌ய‌ம் அடுத்த‌வ‌ரின் வ‌ஞ்ச‌க‌ம், துரோக‌ம், பொய் எதுவும் என்னை ம‌ன‌த‌ள‌வில் பாதிக்காம‌ல் இருக்க‌ட்டும்".

அவ‌ர் ம‌னைவியின் துரோக‌த்தை ம‌ன‌தில் வைத்து பேசிய‌தாக‌ உண‌ர முடிந்த‌து. ஆனால் எதுவாக‌ இருப்பினும் போதையில் ம‌னித‌ன் குழ‌ந்த‌மையை அடைகிறான். என்ன‌ சொல்கிறீர்க‌ள்?. இல்லை என்ப‌வ‌ர்க‌ள் மிகுந்த‌ போதையில் இருப்ப‌வ‌ரிட‌ம் ச‌கிப்புத் த‌ன்மையுட‌ன் பேசிப்பார்க்க‌லாம்.

Aug 29, 2012

ஹிரோஷிமாவின் குட்டிப்பையன்அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக ஜப்பான் இருக்கிறது. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண நாடாக நாடு பெரும் வளர்ச்சியை நோக்கி 1945இல் ஓடத் துவங்கியது. ஓட்டம், சாதாரண ஓட்டமில்லை. வில்லன் மூன்று குத்து விட்ட பிறகு உதட்டோரமாக வழியும் இரத்தத்தை துடைத்துக் கொண்டு வில்லனை துரத்தும் ஹீரோவின் ஓட்டம். அந்த ஓட்டத்தில் எதிரில் வருபவனை நையப்புடைக்கும் வெறி இருந்தது. இத்தகைய வெறிக்கு காரணம் இருக்கிறது. 

பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருக்கும் நெல்மணிகளைப் போன்ற ஜப்பான் மீது இரண்டாம் உலகப்போரின் போது இரண்டு குண்டுகளை வீசி மூக்கை சொறிந்துவிட்டது அமெரிக்கா. குண்டுகள் என்றால் அணுகுண்டுகள். ஏன் ஜப்பான் மீது அமெரிக்கா வீசியது என்பது எல்லாம் வரலாறு. ஆனால் வீசிய குண்டின் பெயர் "லிட்டில் பாய்". குண்டை தன் மீது ஏந்திக் கொண்ட ஜப்பானிய நகரம் ஹிரோஷிமா.

முதல் அணுகுண்டினால் கருகிய பிணங்களின் வாடை அடங்கும் முன்பாகவே அடுத்த மூன்று நாட்களில் இன்னொரு குண்டை நாகசாகி என்ற நகரத்தின் மீது வீசி ஜப்பானை நிலைகுலையச் செய்தார்கள். ஜப்பானுக்கு ஏற்கனவே நிறைய அழையா விருந்தாளிகள் உண்டு. நிலநடுக்கங்கள் அவ்வப்பொழுது வந்து ' அட்டெண்டென்ஸ்' கொடுத்துவிட்டுச் செல்லும். சுனாமியும் அவ்வப்போது தோள் மீது கை போடும் . இந்த நிலையில் இரண்டு அணுகுண்டுகளும் விழ, 'அவ்வளவுதான் ஜப்பான் தொலைந்தது' என்ற பேச்சு எழுந்தது. இதுதான் ஜப்பான் ஹீரோவாவதற்கான தொடக்கப் புள்ளி.

'லிட்டில் பாய்' இரண்டாம் உலகப்போரின் போது "ப்ராஜக்ட் மான்ஹாட்டன்" மூலம் தயாரிக்கப்பட்டது. உலகில் பிரயோகப்படுத்தப்பட்ட முதல் அணுகுண்டு லிட்டில் பாய்தான். பால் டிப்பட்ஸ் என்ற அமெரிக்க கர்னல் இந்த  குண்டை எறிந்து பாவத்தை பெற்றுக் கொண்டார். பத்தடி உயரமும், 71 செ.மீ விட்டமும் கொண்ட 4000 கிலோ "குட்டிப் பையன்" யுரேனியத்தால் செய்யப்பட்டது. குண்டு வீசும் விமானத்திற்கு Enola Gay என்று தன் அம்மாவின் பெயரைச் சூட்டினார் டிப்பட்ஸ். டினியன் தீவிலிருந்து கிளம்பிய விமானம் காலை 8.15 மணி அளவில் 31,000 அடி உயரத்திலிருந்து குட்டிப்பையனை வெளியில் துப்பியது. 45 வினாடிகளுக்குப் பிறகு நிலத்திலிருந்து 1890 அடி உயரத்தில் குண்டு வெடித்தது. 13 லிருந்து 16 கிலோ டன் ஆற்றல் வெளியானது. காளான் போன்ற தோற்றத்தில் நகரத்தை போர்த்திய வெப்பப் புகையிலிருந்து தப்பிக்க மிக இலாகவகமாக தனது விமானத்தை குட்டிக்கரணம் அடிக்கச் செய்தார் டிப்பட்ஸ். 

தான் செய்த கொலைகளுக்காக எந்த நாளும் அந்தப் புண்ணியவான் வருந்தவில்லை என்பதுதான் குரூரம். வெகுநாட்களுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் "அத்தகைய பணியை இன்னொரு முறை கொடுத்தாலும் தன்னால் செய்ய முடியும்" என்று தெனாவெட்டாகத்தான் சொன்னார். தான் இறந்த பிறகு கல்லறை கட்டினால் அது அணுகுண்டு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்துவதற்கு கூடும் இடமாகிவிடக் கூடும் என்பதால் தன்னை புதைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 2007இல் அவர் இறந்த பிறகு எரிக்கப்பட்டு சாம்பல் ஆற்றில் கரைக்கப்பட்டது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் நாள், ஹிரோஷிமா மீது வீசியவுடன் கிட்டத்தட்ட 1,40,000 பேரை கருக்கியது. முந்தைய பத்தியில் ஒரு பிழை இருக்கிறது. குட்டிப் பையன் "கருக்கினான்" என்பதை விட, "ஆவியாக்கினான்" என்பதுதான் பொருந்தும். 

குண்டு விழுந்த இடத்தில் இருந்து(Zero ground) பத்து மைல் சுற்று வட்டாரத்திற்கு முழுவதுமாக உருக்குலைக்கப்பட்டது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் மணல் உருகி கண்ணாடி ஆனது. அடுத்த பல மைல் சுற்றளவுக்கு கட்டிடங்கள் தரைமட்டமாகின. குண்டு கீழே விழுந்து அணுக்கரு பிளவு ஆரம்பமானவுடன், காற்று மண்டலம் முழுவது எக்ஸ்ரே கதிர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த விளைவு வெப்பத்தையும், கடுமையான அழுத்தத்தையும் உடனடியாக பரப்பியது. இது மின்னலும் இடியும் உருவாக்கும் விளைவுக்கு இணையானது. இடியும் மின்னலும் உருவாக்கும் அதிர்ச்சி 100 மீட்டருக்குள் முடிந்துவிடும். ஆனால் குட்டிப்பையன் பல மைல் சுற்றளவை பொசுக்கித் தள்ளினான்.

ஹிரோஷிமா உருக்குலைக்கப்பட்ட அடுத்த மூன்றாவது நாளில் நாகசாகி மீது "குண்டு மனிதன்" என்ற குண்டை அமெரிக்கா வீசியது. இதற்கடுத்த‌ மூன்று நாட்களில் நிலைகுலைந்த ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. "லிட்டில் பாய்" நவீன உலகம் சந்தித்த முதல் குரூரமான அழித்தொழிப்பு ஆயுதமாக வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டது.

[குரூரம் நிகழ்ந்து இந்த ஆகஸ்ட் மாதத்தோடு 67 வருடங்கள் நிறைவடைகிறது]

Aug 28, 2012

சிக்ஸ் பேக் சீட்டிங்வாழ்க்கை மிக எளிமையாக இருக்கிறது. Simpler than simplest. நாம்தான் அதனை சிக்கலானதாக்கிக் கொள்கிறோம். போதை பொருளின் அறிமுகம் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஒரே முறையில்தான் உண்டாகிறது. பெரும்பாலும் விடலை பருவத்தில் நண்பர்களின் தூண்டுதலால் தொட்டுப் பார்ப்பதில் தொடங்குகிறது இதன் பரிச்சயம். ஆனால் போதைக்கு அடிமையாவதும், அலேக்காக தாண்டி வருவதும் ஒவ்வொரு தனிமனிதனையும் பொறுத்திருக்கிறது. எதற்கு இந்த 'தத்துவம்ஸ்'?. மேட்டருக்கு ஜம்ப் அடிக்கலாம்.

ந‌டிக‌ர் ச‌ந்திர‌பாபு பெத்த‌டின் ஊசிக்கு அடிமையாக இருந்தார் என்ற‌ குறிப்பினை ஏதோ ஒரு கட்டுரையில் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார். த‌மிழ் சினிமாவில் போதையினால் வீழ்ச்சியடைந்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. தமிழ் சினிமாவில் ம‌ட்டுமில்லை உல‌க‌ம் முழுவ‌துமாக‌வே போதைப் பொருட்க‌ளில் த‌ங்க‌ளின் தொழிலையும் வாழ்வையும் தொலைத்த‌வ‌ர்க‌ளின்  எண்ணிக்கை தாறுமாறானதாக இருக்கிறது.

சென்னையில் இருக்கும் உலகப் புக‌ழ்பெற்ற‌ பொறியிய‌ல் க‌ல்லூரியில் ச‌ந்தோஷ் ப‌டித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் கல்லூரியின் இறுதி ஆண்டு படிப்பை முடிக்கும் சமயம். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை ஒன்றை தேடியாக வேண்டிய பதட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். ச‌ந்தோஷுட‌ன் பேசிக் கொண்டிருந்த போது ”நீங்க‌ள் புகழ்பெற்ற க‌ல்லூரியில் ப‌டிக்கிறீர்க‌ள். வேலை தேட வேண்டும் என்ற‌ க‌வ‌லை எல்லாம் உங்களுக்கு தேவை இல்லை, அது தானாக தேடி வரும்” என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தேன். அவசரமாக குறுக்கிட்டவர் "அப்ப‌டி எல்லாம் இல்லை...வேலையும் பணமும் ம‌ட்டுமே வாழ்க்கை இல்லை” என்றவர் சிறிது நிறுத்தி ஆழ்ந்த பெருமூச்சுக்கு பிறகு “என்னால் Drug அடிக்காவிட்டால் தேர்வு கூட எழுத‌ முடியாது. ப‌த்தாம் வ‌குப்பிலிருந்து இந்தப் ப‌ழ‌க்க‌ம்" என்றார். இந்த உலகப்புகழ் வாய்ந்த கல்லூரியில் தம், தண்ணி என்ற எந்தப் பழக்கமும் இல்லாமல் படிப்பும் புக்குமாகச் சுற்றும் பழங்களுக்கு மட்டுமே ஸீட் கிடைக்கும் என்று அதுவரையிலும் நம்பியிருந்தில் பெரும் கல்லை போட்டு அமுக்கினார்.

விஷ‌ய‌ம் ரொம்ப சிம்பிள். ஒன்ப‌தாம் வகுப்பிலிருந்தே ’அந்த‌’க் க‌ல்லூரியில்தான் சந்தோஷ் பி.டெக் ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ க‌ன‌வை பெற்றவர்கள் விதைக்க ஆர‌ம்பித்திருக்கிறார்க‌ள். அப்பொழுதிலிருந்தே இரவு பகலாக படிக்க ஆரம்பித்தவர், முத‌லில் தூக்க‌ம் வ‌ராம‌ல் இருப்ப‌த‌ற்கான‌ மாத்திரைக‌ளை விழுங்கிக் கொண்டாராம். இத‌ற்கு பெற்றோர்க‌ள் எதுவும் ம‌றுப்பு தெரிவிக்க‌வில்லை. முதலில் மாத்திரைகளை சந்தோஷ் விழுங்கியிருக்கிறார். பிறகு மாத்திரைகள் சந்தோஷை விழுங்க ஆரம்பித்திருக்கின்றன. கொஞ்ச நாட்களில் ஏதோ ஒரு புண்ணிய‌வான் வேறு சில‌ போதை ஐட்ட‌ங்க‌ளையும் அறிமுக‌ப்ப‌டுத்த அவை எல்லாமே ச‌ந்தோஷ்க்கு"உற்சாக‌ வ‌ஸ்து"க‌ளாகிவிட்ட‌ன‌. பின்ன‌ர் "அது"வின்றி ஒரு வ‌ரியும் ம‌ண்டைக்குள் ஏறாது என்று முடிவுக‌ட்டி இன்று வரைக்கும் "டோப்"அடித்துவிட்டுத்தான் தேர்வுக்கு ப‌டிக்கிறாராம். உடலில் பலம் வேண்டும் என்று அடிக்கடி ஸ்டீராய்ட் ஊசியும் போட்டுக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. 

இந்த ஸ்டீராய்ட் ஒரு உட்டாலக்கடி வஸ்து. கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடலாம். ஸ்டீராய்டை பெரும்பாலும் விளையாட்டு வீர‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்கள். விளையாட்டு வீரர்களில் ஓட்ட‌ப்ப‌ந்த‌ய‌ம், எடைதூக்குத‌ல், ம‌ல்யுத்த‌ம், நீச்சல், ஈருளி ப‌ந்த‌ய‌ வீர‌ர்க‌ள் (ஈருளி என்பது நம்ம சைக்கிள்தான்‌)  அதிக‌மாக‌ ஸ்டீராய்ட் உட்கொள்கிறார்கள்.  இது அவர்களுக்குள் வேகத்தையும் வெறியையும் அதிகமாக்கிவிடுகிறது. ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்டீராய்ட் பயன்படுத்தப்படுவது தடை செய்துவிட்டார்கள். மீறி பயன்படுத்தி மாட்டிக் கொண்டால் அந்த விளையாட்டு வீரரின் வாழ்க்கையே தொலைந்துவிடும். 

இந்த‌ ஸ்டீராய்டின் விளைவுகள் ப‌ற்றி ஏக‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் குட்டிச்சாத்தான்க‌ளைப் போல‌ திரிந்து கொண்டிருக்கின்ற‌ன‌. எத‌ற்கு இந்த‌ இழ‌வு எல்லாம் என்று முடிவு செய்து உலக அளவில் மொத்த‌மாக‌ த‌டை செய்துவிட்டார்க‌ள். ஆனால் அனைத்து ஸ்டீராய்ட்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிரிவில் வ‌ருவ‌தில்லை. அனபாலிக் ஸ்டீராய்ட்க‌ள்தான் தடை செய்ய‌ப்பட்ட‌வை. இவை வேதியிய‌ல் ரீதியாக‌ டெஸ்டோஸ்டீரோனோடு நேரடியாக‌ தொட‌ர்பு கொண்ட‌வை. (டெஸ்டோஸ்டீரோன் ஆணின் உட‌லில் சுர‌க்கும் ஹார்மோன்). ஆண்களில் இந்த‌ ஹார்மோன்தான் உட‌லின் க‌ட்ட‌மைப்புக்கும், ஆணிய‌ த‌ன்மைக்கும் அடிப்ப‌டை. ஆக ஸ்டீராய்டை உட்கொள்ளும் போது அது டெஸ்டோஸ்டிரானுடன் வினைபுரிந்து ஆளை ‘கட்டுமஸ்தானாக’ மாற்றிவிடுகிறது.

ஸ்டீராய்ட் ப‌ற்றி நிறைய‌ பேச்சு இங்கே இருக்கிற‌து. ஷாருக்கானோ, க‌ம‌ல்ஹாச‌னோ ஒரு படத்தில் ச‌ட்டையைக் க‌ழ‌ற்றி உட‌லைக் காட்டினால் அது ஸ்டீராய்டால் ஏற்ற‌ப்ப‌ட்ட‌ உட‌ல் என்ற‌ பேச்சு த‌லைகாட்டும். நடிகர்கள் மட்டுமில்லை நடிகைகளின் மார்பகங்கள் சிகிச்சையின் மூலமாக பெரிதாக்கப்பட்டதாக கிசுகிசு வெளிப்படும் போதும் ஸ்டீராய்டின் பெயர் எட்டிப்பார்க்கும். ஸ்டீராய்க‌ள் ப‌ல‌ வ‌டிவ‌ங்க‌ளில் கிடைக்கின்ற‌ன. பெரும்பாலானவை தடை செய்யப்பட்டவை என்றாலும் போனால் போகட்டும் என்று குறைந்த அளவில் சில அனபாலிக் ஸ்டீராய்ட்களுக்கு மருத்துவ அனுமதி உண்டு.  ஆண்க‌ளில் உண்டாகும் சில‌ பாலிய‌ல் குறைபாடுக‌ளுக்கும், மார்ப‌க‌ப் புற்று நோய்க்கும் சில‌ கால்ந‌டைகள் ச‌ம்ப‌ந்த‌மான‌ ம‌ருத்துவ‌த்திலும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்‌. குறிப்பாக‌ கால்நடைக‌ளில் ரோம‌ம் அதிக‌மாக‌ வ‌ள‌ர்வ‌த‌ற்கு ஸ்டீராய்ட் பயன்படுத்துகிறது.

ஸ்டீராய்டை வாய்வ‌ழியாக‌ எடுத்துக் கொள்ள‌லாம் அல்ல‌து த‌சைக‌ளுக்கு இடையில் ஊசி மூல‌ம் செலுத்திக் கொள்ள‌லாம். ச‌ரியான‌ கால‌ இடைவெளியில்(period அல்லது cycle) ச‌ரியான‌ அள‌வில் உட்கொள்ள‌ வேண்டும். அதே ச‌ம‌ய‌ம் உட‌ற்ப‌யிற்சியும், ந‌ல்ல‌ உண‌வும் தேவை. இத்த‌னை இருந்தாலும் கூட‌ ப‌க்க‌ விளைவுக‌ள் ஏக‌ப்ப‌ட்ட‌தாக‌ இருக்கும். ஒரு சைக்கிள் என்ப‌து 6 முத‌ல் 14 வார‌ங்க‌ள். இந்த‌ கால‌ அள‌வுக்கு பிற‌கு கொஞ்ச‌ நாள் இடைவெளி த‌ர‌வேண்டும். இந்த முறையில் ஸ்டீராய்டை எடுத்துக் கொள்வத‌ற்கு சைக்கிளிங் என்று பெய‌ர். 

இன்னொரு முறையும் இருக்கிறது. அதற்கு 'அடுக்குத‌ல்'(ஸ்டாக்கிங்) என்று பெயர். ப‌ல்வேறு ஸ்டீராய்டுக‌ளை தொட‌ர்ச்சியாக உட்கொள்வ‌து. ஸ்டீராய்டை எடுத்துக் கொள்வதில் மூன்றாவது முறையும்(Method) இருக்கிற‌து. அது "பிர‌மிட்" முறை முத‌லில் குறைந்த‌ அள‌வு உட்கொள்ள‌த் துவ‌ங்கி இந்த‌ அள‌வினை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ அதிக‌ப்ப‌டுத்துவார்க‌ள். உச்ச‌க‌ட்ட‌ அளவிற்கு பிற‌கு ப‌டிப்ப‌டியாக‌ குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

இப்ப‌டியெல்லாம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்வ‌தால் வ‌ரும் பின் விளைவுகள் ப‌ற்றி உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் ப‌க்க‌ விளைவுக‌ளை(Side effect) உட‌ன‌டியாக‌ தெரிந்து கொள்ள‌லாம். ர‌த்த‌ அழுத்த‌ம், கொழுப்பு அள‌வு அதிக‌ரித்த‌ல், வ‌ழுக்கை, உடலுற‌வு பிர‌ச்சினைக‌ள் ஆகியவை பொதுவான‌ பிரச்சினைகள். இவை த‌விர்த்து வேறு சில‌ காமெடியான‌ டிராஜ‌டிக‌ளையும் ஸ்டீராய்ட் உருவாக்கும். பெண்க‌ளில் மார்ப‌ளவினை சிறியதாக்கலாம், ஆண்க‌ளில் தாறுமாறான மார்ப‌ள‌வு வ‌ள‌ர்ச்சியை உருவாக்க‌லாம். பெண்க‌ளுக்கு குரல் முரட்டுத்தனமாக மாறிவிடலாம், சகட்டுமேனிக்கு ரோமம் முளைப்பதும் கூட நிகழலாம். சில‌ர் கோபமும் காமமும் மிக்க முர‌ட்டு ஆசாமிக‌ளாக‌ மாற‌வும் ஸ்டீராய்ட் விதை விதைக்கும். 

அது கிடக்கட்டும். மிடில் கிளாஸ் மாத‌வ‌ன்க‌ளுக்கு எல்லாம் இது ப‌ற்றிய‌ பெரிய‌ க‌வ‌லை எல்லாம் எதற்கு? இருக்கிற‌ உடலமைப்பு போதாதா. சிக்ஸ்பேக் டெவலப் செய்து ஜாக்கிசான் உடன் சண்டைக்கு போகப் போகிறோமோ அல்லது ஏஞ்சலினா ஜோலியை பிக்கப் செய்யப் போகிறோமா?

Aug 26, 2012

ஹெராயின்                                                                    
உலகின் வெளிச்சம் ப‌டாத‌ ப‌குதிக‌ள் என்று போதை உலகைச் சொல்ல‌லாம். இந்த‌ உல‌க‌ம் குறித்தான‌ எந்த‌ நிக‌ழ்வும் சாமானிய‌ர்க‌ளின் பார்வைக்கு அதிக‌ம் வ‌ருவ‌தில்லை. ஒரு கிலோ போதைப் பொருள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான‌ ம‌திப்புடைய‌து என்ப‌து நம்மை வாய‌டைக்க‌ வைக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் மிஞ்சக் கூடிய - நம்மை ஆச்சரியத்தின் நுனிக்குச் அழைத்துச் செல்லக் கூடிய சமாச்சாரங்கள் எல்லாம் இந்த போதை உலகில் உண்டு.

முத‌ன்முத‌லாக‌ ம‌னித‌ன் எப்ப‌டி போதையை கண்டறிந்திருப்பான் என்று யோசிப்பவ‌ர்க‌ள் க‌ற்ப‌னைக் குதிரையை த‌ட்டிவிட‌லாம். ப‌சி நேர‌த்தில் கைக்கு கிடைத்த‌ செடியின் இலையையோ அல்லது பூவையோ மென்றுவிட்டு ஏறிய‌ போதையில் ம‌ணிக்க‌ண‌க்கில் குப்புற‌ விழுந்து கிட‌ந்திருக்க‌லாம். எழுந்து பார்த்த‌வ‌ன் "எவனோ ம‌ண்டையில ஓங்கி த‌ட்டிட்டான்டா" என்று புல‌ம்பியிருக்க‌லாம் அல்ல‌து வில‌ங்குக‌ளிட‌ம் இருந்து கூட க‌ற்றுக் கொண்டிருக்க‌லாம். 

வில‌ங்குக‌ளில் 'ம‌ப்பு' ஏற்றிக் கொள்ளும் பெருங்கூட்ட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆஸ்திரேலிய‌ கோலாக்கள் யூக்க‌லிப்ட‌ஸ் இலைக‌ளுக்கான‌ அடிமைக‌ள். அந்த‌ போதைக்காக‌ யூக்க‌லிப்ட‌ஸைத்தான் உண‌வாக‌வே உண்கின்ற‌ன‌. விடிந்தும் விடியாம‌ல் டாஸ்மாக் சென்றுவிடும் குடிம‌க‌ன்க‌ளைப் போன்ற‌வை இவை. இவை தவிர அணில், காட்டுப் பூனைகள் என்ற பல விலங்கினங்கள் சில குறிப்பிட்ட தாவரங்களை பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றன. விலங்கினங்களின் தாவர அறிவு நமக்கு புதிரானவை. இந்திய வகைக் குரங்கு (பெயர் சரியாக நினைவில் இல்லை) நாக பாம்பு கொத்தினால் ஓடிச் சென்று ஒரு வகை தாவர இலையை தின்றுவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடும் என்று படித்த ஞாபகம் மூளைக்குள் ஏதோ ஒரு நியூரானில் ஒளிந்திருக்கிறது.
                                
சில தாவரங்களில் போதைத்தன்மை உண்டு. இத்தகைய தாவரங்களை பயிரிடுவதும் உபயோகப்படுத்துவதும் நம் தாத்தாக்கள் காலத்திலேயே துவங்கிவிட்டது. இந்த தாத்தாக்களின் எலும்பு கூட மிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை. ஏறத்தாழ கி.மு. 7000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தாத்தாக்கள் இவர்கள்.

போதையின் நுணுக்க‌மே அத‌ன் உபயோக‌ அளவிலிருந்துதான் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் தூக்க மருந்தாக இருக்க கூடிய அதே பொருள் கொஞ்சம் அளவு(அவுன்ஸ் கணக்கில்தான்)மாறும் போது போதையாகிவிடுகிறது. வேறொரு அளவில் உட்கொண்டால் ஆளையே கூட முடித்துவிடுகிறது. 

                                                                         ***


"டோப் அடிச்சிருக்கான்" என்று யாராவது சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.டோப் என்பது ஹெராயினுக்கு ஒரு செல்லப்பெயர். ஹெராயினுக்கு இப்படி தெருக்களில் புழங்கும் லோக்கல் செல்லப் பெயர்கள் நிறைய உண்டு. டீசல், குதிரை, ஜென்னி, பிரவுன், ஹெச் என்பதெல்லாம் அவற்றில் சில.

உலகம் முழுவதும் ஹெராயின் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஹெராயின் தயாரிப்பு, விற்பனை அல்லது கைவசம் வைத்திருத்தல் என எப்படியாயினும் அது சட்டவிரோதம். ஆனால் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் டையாமார்பின் என்ற பெயரில் மருந்துக் கிடைகளில் இவை கிடைக்கின்றன. சில மருத்துவ பயன்களுக்காக இந்த ஹெராயினை உபயோகப்படுத்துகிறார்கள். அதேசமயம் மருத்துவத்தின் பெயரில் திருட்டுத்தனமாக போதைக்காக பயன்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது.

1874 ஆம் ஆண்டு பிரிட்ட‌னைச் சார்ந்த‌ ஆல்ட‌ர் ரைட் என்ற‌ வேதியிய‌லாள‌ர் மார்பின் என்ற வேதிப்பொருளை ப‌ல்வேறு அமில‌ங்க‌ளுட‌ன் சேர்த்து எதையோ தயாரிக்க முய‌ன்று கொண்டிருந்தார். மார்பினை, அசிட்டிக் அமில‌த்தின் ஒரு வ‌கையுட‌ன் சேர்த்து அடுப்பில் ம‌ணிக் க‌ண‌க்கில் கொதிக்க‌வைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு சந்தோஷத்தில் த‌லை மீது குண்டு ப‌ல்பு எரிய ஆர‌ம்பித்துவிட்ட‌து. தான் ஒரு மிகச் சிறந்த வேதிப்பொருளை கண்டுபிடித்துவிட்டதாக துள்ளிக் குதித்தார். இது மிகச் சிறந்த மருத்துவக் குணம் நிறைந்ததாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. அவரை துள்ளிக்குதிக்க வைத்த வஸ்துதான் ஹெராயின். ஹெராயினை கண்டுபிடித்தாயிற்று. பரிசோதிக்க வேண்டுமே. வ‌ழ‌க்க‌ம் போல‌வே ஏமாந்த‌ சோண‌கிரிகளான‌ நாய்க‌ளுக்கும், எலிக‌ளுக்கும் இவை கொடுக்க‌ப்ப‌ட்டு ப‌ரிசோதிக்க‌ப்ப‌ட்ட‌து. ஆய்வு முடிவுக‌ள் பின்வ‌ருமாறு இருந்த‌து. "ப‌ய‌ம், தூக்க‌ம் போன்ற‌வை உண‌ர‌ப்ப‌ட்டது, க‌ண்க‌ள் மித‌ப்ப‌து போலிருக்கின்ற‌ன, சில‌வ‌ற்றில் வாந்தி உண‌ர‌ப்ப‌ட்டது, அதிக‌மாக‌ எச்சில் வ‌டிக்கின்ற‌ன‌.." 

பேய‌ர் என்னும் ஜெர்மன் நிறுவ‌ன‌த்தின் ஃபெலிக்ஸ் ஹாப்மேன் என்ப‌வ‌ர், ஹெராயின் என்னும் பெய‌ரை 'ட்ரேட்மார்க்'காக‌ ப‌திவு செய்தார். ஆஸ்பிரின் என்ற மருந்தின் பின்/ப‌க்க‌விளைவுக‌ள் குறித்த‌ ப‌ய‌த்தின் கார‌ணமாக ஆஸ்பிரினுக்கு மாற்று ம‌ருந்தாக ஹெராயின் ப‌ர‌வ‌லாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. 1898லிருந்து 1910 வரைக்கும் ஹெராயின் மருத்துவத்துறையில் கொடிகட்டியது. குழந்தைகளுக்கான இருமல் மருந்தாக முக்கிய இடம் பெற்றது. மார்பினுக்கு அடிமையான‌வ‌ர்க‌ள்(இந்த‌ இட‌ம் வ‌ரைக்கும் ஹெராயின் வேறு மார்பின் வேறு என்ற‌ எண்ணம் இருந்து வ‌ந்த‌து) ஹெராயினை உட்கொள்வ‌து மூல‌ம் மார்பின்‌ அடிமைத்த‌ன‌த்திலிருந்து வெளிவ‌ர‌லாம் என்ற‌ ரீதியில் ஹெராயினை பேய‌ர் நிறுவ‌ன‌ம் வ‌ணிக‌ப்ப‌டுத்திய‌து. பின்ன‌ர் ஏதோ ஒரு ப‌ரிசோத‌னையில் ம‌னித‌னின் ஈர‌லில் ஹெராயின், மார்பினாக‌ மாற்ற‌ப்ப‌டுகிற‌து என்று க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு அதிர்ச்சியை உண்டாக்கிய‌து. இது பேய‌ர் நிறுவ‌ன‌ம் வ‌ர‌லாற்றுப் பிழை ஒன்றை செய்துவிட்ட‌து என்று உறுதியாக்கிய‌து.

போதைகளில் ஓபியம், க‌ஞ்சாச் செடி போன்ற விவசாய‌ப் ப‌யிர்க‌ள் ஒரு வ‌கை என்றால், ஆல்ஹ‌கால் போன்று நொதித்த‌ல் முறைக‌ளில் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை இன்னொரு ர‌க‌ம். ஹெராயின் இர‌ண்டாவ‌து வகை என்றாலும் ஓபியத்திலிருந்தும் ஹெராயினை தயாரிக்க முடியும். ஹெராயினை தயாரிக்க பெரிய அறிவும் ஆற்றலும் தேவையில்லை. நம் ஊர்ப்பகுதிகளில் பேட்டரித்தூளைப் போட்டு சாராயம் காய்ச்சுபவர்களிடம் சொல்லிக் கொடுத்தால் அவர்களே கூட தயாரித்துவிடலாம். ஓபியத்திலிருந்து முதல் மூன்று தரமுடைய(grades) ஹெராயின் தயாரிப்பது மிகச் சுலபம். ஆனால் அதற்கு அடுத்த தரம் மிகச் சிக்கலானது.இன்றைய மார்கெட் மதிப்பில் அரை கிலோ ஹெராயின் $5000லிருந்து $7000 வரைக்கும் விலை போகிறது. (1$=55 ரூபாய்கள்).

டெக்னாலஜி இதுதான் - மார்பினை முதலில் ஓபிய‌த்திலிருந்து பிரிக்கிறார்க‌ள் (ஓபிய‌த்தை நீரில் கரைத்து, சுண்ணாம்போடு சேர்த்து வீழ்ப‌டிய‌ச் செய்ய‌ வேண்டும். அத‌ன் பிற‌காக‌ இதை அமோனியாவுட‌ன் சேர்த்து வினைபுரிய‌ச் செய்ய‌ வேண்டும். இதை வ‌டிக‌ட்டினால் மார்பின் கிடைக்கும்). இந்த‌ மார்பினை நீர‌ற்ற‌ அசிட்டிக் அமிலத்துடன் உட‌ன் ஐந்த‌டுக்கு வ‌ழிமுறையில் வினை புரிய‌ச் செய்து ஹெராயினை த‌யாரிக்கிறார்க‌ள்.

ஐந்தடுக்கு முறையில் முத‌லில் மார்பினை அதே அளவு எடையுள்ள நீர‌ற்ற‌ அசிட்டிக் உட‌ன் சேர்த்து 85 டிகிரி செல்சிய‌ஸில் கொதிக்க‌ வைக்கிறார்க‌ள். இர‌ண்டாவ‌து நிலையில்(Second stage) முதல் நிலையில் கிடைத்த பொருளை நீருட‌னும், ஹைட்ரோ குளோரிக் அமில‌த்துட‌னும் சேர்த்து வினை புரிய‌ச் செய்யப்ப‌டுகிற‌து. மூன்றாவது நிலையில் இந்தப் பொருளை சோடிய‌ம் கார்ப‌னேட்டுட‌ன் சேர்த்தால், திட‌ப்பொருளாக‌ குடுவையின் அடிப்ப‌குதியில் ப‌டிகிற‌து. இந்த திடப்பொருள் நான்காவது நிலையில்(Fourth Stage) ஆல்க‌ஹால் ம‌ற்றும் தூண்ட‌ப்ப‌ட்ட‌ கார்கோலுட‌ன் சேர்த்து ஆல்க‌ஹால் முற்றாக ஆவியாகும் வ‌ரை கொதிக்க வைக்க‌ப்ப‌டுகிற‌து. இப்பொழுது ஹெராயின் தயார். இதற்கடுத்த ஐந்தாவ‌து நிலை அவ‌சிய‌மான‌து இல்லை என்றாலும் இந்த‌ முறையில் ஹெராயின் வெண்மை நிற‌ ப‌வுட‌ராக‌ மாறுகிற‌து. இது மேற்க‌த்திய‌ நாடுக‌ளுக்கு ப‌ர‌வ‌லாக‌ க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. இத‌ற்கு "நெ.4 ஹெராயின்" என்று பெய‌ர். இந்த‌ ஐந்தாவ‌து நிலை ம‌ட்டுமே மிக‌ச் சிக்க‌லான‌தும், ஆப‌த்து நிறைந்த‌தும் ஆகும்.

ம‌ற்ற‌ போதைப் பொருட்களைக் காட்டிலும் ஹெராயினை அதிகம் விரும்புப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். இர‌த்த‌த்தில் மிக‌ வேக‌மாக‌ க‌ல‌ந்து மூளையை குத்தாட்டம் போட வைக்கும் வேகத்தில் ஹெராயினுக்கு நிக‌ர் ஹெராயின் தான். ஹெராயினை எப்ப‌டி உட்கொள்வ‌து என்ப‌த‌ற்கு ஒரு ப‌ட்டிம‌ன்ற‌மே ந‌ட‌த்த‌லாம். ஊசி மூல‌மாக உடம்புக்குள் செலுத்திக் கொள்ளலாம்‌, ரூபாய்த்தாளை கூம்பு வடிவத்தில் சுருட்டி அதன் ஒரு முனையில் ஹெராயினை வைத்து மறுமுனையில் மூக்கு அல்ல‌து வாயின் வ‌ழியாக‌ உறிஞ்சிக்கொள்ளலாம். "டிராக‌னை துர‌த்துதல்(chasing the dragon)" என்ற‌ ஒரு முறையும் இருக்கிற‌து.இந்த முறையில் ரூபாய்த்தாள் போன்ற‌ கெட்டியான‌ காகித‌ம் ஒன்றில் ஹெராயினை வைத்துக் கொண்டு அதன் கீழ் ப‌குதியில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்துவிடுவார்கள். சூடேறுவதால் ஹெராயினிலிருந்து கிளம்பும் புகையை உறிஞ்சுவார்கள். இது இமிடியேட் சொர்க்கமாம்.

ஒவ்வொரு முறையில் உட்கொள்ளும் போதும் போதை உண்டாவ‌தற்கான‌ நேர‌ அள‌வு மாறுப‌டும். தசைகளில் ஊசி மூலமாக செலுத்தினால் 5 முதல் 8 நிமிடங்கள் என்றால் ந‌ர‌ம்புக‌ளில் ஊசி மூல‌மாக‌ செலுத்தினால் 7 முத‌ல் 8 வினாடிக‌ளிலேயே போதை ஏறிவிடும். "டிராக‌ன்" முறையில் 2‍முத‌ல் 5 நிமிட‌ங்க‌ளில் மண்டை கிறுகிறுத்துவிடும்.

ஹெராயினுக்கு அடிமையானவர்கள் திடீரென்று ஹெராயின் உட்கொள்வதை நிறுத்தினால் அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும். இதற்கு withdrawal syndrome என்று பெயர். ஹெராயினை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தவர் அதனை நிறுத்திய ஆறு மணி நேரத்தில் விளைவுகள் தென்படத் துவங்கும். வியர்வை, மன அழுத்தம், பதட்டம், மூட்டுகளில் உண்டாகும் வலி, தூக்கமின்மை, தசை மற்றும் எலும்பு வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு என்று இந்தப் பட்டியலை நீட்டினால் இன்னும் அரைப்பக்கத்திற்கு மேலாக போகும்.ஹெராயினை எந்தவிதமான மருத்துவ ஆலோசனையும் இன்றி திடீரென நிறுத்துவது எதிர்மறையான விளைவுகளிலேயே முடிந்திருக்கின்றன. அதிக பட்சமாக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் காரணமான‌ தற்கொலைகள் வரை.

பார்த்து சூதானமா நடந்து கொள்ளாவிட்டால் கதை கந்தலாகிவிடும்.

[சில ஆண்டுகளுக்கு முன் உயிரோசை-இணைய இதழில் வெளியானது]

Aug 25, 2012

ஃபயரிங் & ஷேரிங்      சில வருடங்களுக்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பும் போது ஒரு நண்பர் “நாளைக்கு நம்ம கம்பெனியிலிருந்து ஆயிரம் பேரை ஃபயர் பண்ணப் போறாங்களாமே?” என்றார். இது வதந்தியா உண்மையா என்று தெரியவில்லை ஆனால் கேள்விப்பட்டேன் என்ற ’பிட்’டையும் போட்டுவிட்டார். இவர் கேட்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக வீடு சேர்ந்திருக்கலாம். அவர் சொன்னதையே நினைத்துக் கொண்டு பைக் ஓட்டியதில் ஒரு ஜீன்ஸ் மங்கையின் பைக் மீது மோதத் திரிந்தேன். அவள் என்னை நோக்கி எதையோ சொல்லிச் சென்றாள். அது நான்கெழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தையாக கேட்டது. பின்னால் துரத்திச் சென்று ”என்ன சொன்னீங்க” என்ற போது அவள் ஹெல்மெட்டை கழற்றினாள். அறுபதுக்கும் குறைவாக ஐம்பத்தைந்துக்கும் அதிகமாக இருக்கும். “இடியட்” என்றேன் என்றாள். “ஐம்பது என்ன சொல்லியிருந்தால் எனக்கென்ன” என்று நினைத்துக் கொண்டு எண்ணங்களை மீண்டும் அலுவலகத்திற்கு திருப்பிவிட்டேன். அன்றிரவு உண்ட உணவு, பேசிய வார்த்தைகள் என எதுவும் ஞாபகத்தில் இல்லை. 

அடுத்த நாள் வழக்கத்திற்கு மாறாக ஊரில் இருக்கும் எல்லா கடவுளரையும் என் பைக்கில் ஏற்றிக் கொண்டு அலுவலகம் வந்தேன். அவர்கள் என் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்கள். மதியம் ஒரு மணி வரைக்கும் எந்தச் செய்தியும் இல்லை. உடன் வேலை செய்யும் பெண்ணொருத்தி ஸ்வீட் கொடுத்தாள். கறுவிக்கொண்டு வாயில் போட்டேன். காரணம் எதுவும் கேட்கவில்லை. கேட்கும் மனநிலையும் இல்லை. அவளாகவேதான் ஆரம்பித்தாள். எனக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பிறந்தநாள் வந்து போனது அதற்காக இன்று மதியம் வெளியே சாப்பிட போகலாம் என்றாள். நீங்கள் நினைப்பது போல நானும் அவளும் மட்டும் தனியாக இல்லை. டீம்மோடுதான்.

பெங்களூர் இந்திரா நகரில் ஒரு ரெஸ்டாரண்ட். இந்திரா நகர் ரெஸ்டாரண்ட்காரர்கள் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மசாலாவே அரைப்பார்கள் என்பதால் எனக்கு அவர்கள் மீது மரியாதை இல்லாத பயம் உண்டு. சரி எப்படியும் அவள்தானே பணம் கொடுக்கப் போகிறாள் என தொண்டை வரை நிரப்பியதில் மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்ப்பது மட்டும்தான் பாக்கியாக இருந்தது. பில் வரட்டும் என்று காத்திருந்தோம். பில்லை அந்தப் பெண் வாங்கவில்லை. வேறொருவன் வாங்கி தனது கிரெடிட் கார்டை நீட்டினான். ’இவர்களின் கதை அப்படியிருக்குமோ’ என்று நினைத்துக் கொண்டே கொடுத்த சோம்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு வெளியேறினேன்.

வெளியில் ஒரு குழுவாகக் கூடினார்கள். பில் ஐந்தாயிரத்துச் சொச்சம் ஆகியிருக்கிறது. ஆளுக்கு ஐநூற்றைம்பது ரூபாய் “ஷேர்” செய்து கொள்ளலாம் என்றார்கள். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. கடையில் நூறு ரூபாய் பில் ஆனாலே தின்ன சோறு செரிக்காது. என்னிடம் ஐந்நூற்றைம்பது கேட்டால்? வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பாகற்காய் குழம்போடு சோலியை முடித்திருக்கலாம். ஏமாந்துவிட்டேன்.

அத்தனை சாமிகளையும் கூட்டி வந்தது தப்பாகிப் போனது. ’ஃபயரிங்’ என்ற குண்டை மறைக்க ’ஷேரிங்’ என்ற இன்னொரு குண்டை எறிந்துவிட்டார்கள் போலிருக்கிறது. அந்தக் கணத்திலிருந்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு தின்னதும் சரி பேசியதும் சரி, சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.

                                                                          ***

கல்கியில் எழுதிக் கொண்டிருக்கும் ரோபோஜாலம் தொடருக்காக நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. ரோபோடிக்ஸ் வடிவமைப்பு பற்றி மட்டும் எழுதினால் கல்கிக்காரர்கள் ஒதுக்கித் தந்திருக்கும் மூன்று நான்கு பக்கங்கள் பாலைவனம் ஆகிவிடக் கூடும் என்பதால் ரோபோ பற்றிய சுவாரசிய தகவல்களை தேடுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று ரோபோ குறித்த ஜோக்குகளை தேடிக் கொண்டிருந்தேன். ஜோக்குகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் பெரும்பாலானவை அசைவ ஜோக்குகள். மிகக் குறைவாகவே கிடைக்கும் சைவ ஜோக்குகளில் அத்தனையுமே மொக்கையானவை. 

ஒரு சாம்பிள் ஜோக்.

கோயிந்து தன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சர்ப்ரைசாக ஒரு ரோபோ வாங்கி வந்தார். அது ஒரு தில்லாலங்கடி ரோபோ. யாராவது பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும். அதோடு நின்றால் பரவாயில்லை ‘சப்’பென்று அறைந்தும் விடும். அதனால் ’பதினாறு வயதினிலே’ ஸ்ரீதேவியின் பரம ரசிகரான நம்ம கோயிந்து ரோபோவிற்கு சப்பாணி என்று பெயர் வைத்துவிட்டார். 

அன்றைய தினம் கோயிந்துவின் மகன் சுப்பிணி கல்லூரி முடித்து மிக தாமதமாக வந்தான். வீட்டில் ரோபோ இருப்பதை பார்த்தவன் அதன் அருகில் நின்றபடியே கோயிந்து கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “ஏன் இவ்வளவு லேட்?” என்ற போது ரோபோ பற்றித் தெரியாத சுப்பிணி “ஸ்பெஷல் க்ளாஸ்ப்பா” என்றான். ’சப்’ விட்டது சப்பாணி. 

அதன் பிறகுதான் “இந்த ரோபோ பொய் சொன்னால் அறைந்துவிடும்” என்று கோயிந்து விளக்கினார். அலெர்ட் ஆகிய சுப்பிணி ”இல்லப்பா சினிமாவுக்கு போனேன்” என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.

“சரி விடு நான் எல்லாம் படிக்கிற காலத்தில் வீடு, வீடுவிட்டா காலேஜ்ன்னு இருந்தேன்” என்று கோயிந்து அளக்கத் துவங்கினார் அவரும் ’சப்’ வாங்கிக் கட்டிக் கொண்டார். சுப்பிணி நக்கலாக சிரித்தான். கோயிந்துக்கு அவமானாகிப் போனது. மகனிடம் எகிற ஆரம்பித்தார்.

சமையலறைக்குள்ளிருந்து வெளியே வந்த கோயிந்துவின் மனைவி அவரை சமாதானப்படுத்தும் விதமாக “விடுங்க, உங்க மகன் தானே” என்று சொல்லி முடிக்கவில்லை. “பளார்” என்ற சத்தம் கேட்டது.

Aug 22, 2012

சூனியக்காரனின் முதலிரவுஆலாந்துறை நஞ்சப்பன் படு பிரபலம் ஆகிவிட்டார். தனக்கு பிடிக்கவில்லையெனில் யாரை வேண்டுமானாலும் கொன்றுவிடுவார் என்பது முதற்காரணம். பில்லி சூனியத்தில் அவரை அடிக்க சுற்றுவட்டாரத்தில் ஆள் இல்லை என்பது இரண்டாவது காரணம். 

நாற்பது வயது. நெடு உருவம். கறுத்த தேகம். ரெட்டை மாடு பூட்டப்பட்ட வண்டியில் ஆஜானுபாகுவான அவர் போகும் போதெல்லாம் பெண்கள் வீடுகளுக்குள் புகுந்து தாழிட்டுக் கொள்வது சாதாரணமான காட்சி. ஆண்கள் தங்களின் தோளில் துண்டு இருந்தால் எடுத்து அக்குளில் செருகிக் கொள்வார்கள். இந்த மரியாதையைச் செலுத்துவதில் வயது, சாதி என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. 

நஞ்சப்பன் வெளியூர்க்காரர். ஆலாந்துறைக்கு முதன் முதலாக வந்து மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக குடிசை போட்டபோது அவருக்கு அப்படியொன்றும் மரியாதை இல்லை. வெளியூர்க்காரனை எப்படி பார்ப்பார்களோ அப்படித்தான் ஆலாந்துறைக்காரர்கள் பார்த்தார்கள். அந்த ஊர் பெரிய தோட்டத்து பழனிச்சாமிக்கு கடவுள் என்றாலே ஆகாது பில்லி சூனியம் என்றால் ஆகுமா? நஞ்சப்பனின் குடிசைக்கு முன்பாக வந்து அவரை கண்டபடி திட்டத்துவங்கினான். வெற்றிலை பாக்கை மென்றபடிக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நஞ்சப்பன் அவன் நகர்ந்தவுடன் அவனது காலடி மண் ஒரு பிடியை எடுத்துக் கொண்டு தனது குடிசைக்குள் போனதை அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். அடுத்த மூன்றாவது நாள் காலையில் படுக்கையில் இருந்து எழ முடியாமல் பழனிச்சாமி ஓலமிட்டான். ஊரே திரண்டுவிட்டது. இதற்கு காரணம் நஞ்சப்பன் என்று ஊர்க்காரர்கள் முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர யாரும் வெளிப்படையாக பேசவில்லை. 

இதன் பிறகாக முச்சந்தி, இட்டேரி என பல இடங்களிலும் முட்டை, தலைமுடி கோர்க்கப்பட்ட எலுமிச்சை போன்ற வஸ்துகளுடன் சில சமயங்களில் மண்டையோடு கூட தென்படத் துவங்கின. ஊர்க்காரர்கள் நஞ்சப்பனைக் கண்டு பயப்பட ஆரம்பித்தார்கள். அதே சமயம் நஞ்சப்பனை பார்க்க வெளியூர்க்காரர்கள் வந்து போவது சகஜமாகிவிட்டது. அமாவாசை தினங்களில் சுடுகாட்டில் மந்திர உச்சாடனம் படு பயங்கரமாக கேட்கத் துவங்கியது. அந்த நேரத்தில் நஞ்சப்பனின் குரல் அதிரும். இடையிடையே கேட்கும் பெண் குரல்தான் நஞ்சப்பனின் குரலை விடவும் திகிலூட்டுவதாக இருக்கும். சில சமயங்களில் அது பரிதாபமான அபயக் குரலாகவும், வேறு சில சமயங்களில் மிரட்டலாகவும், பல சமயங்களில் வெறும் அழுகையாகவோ அல்லது சிரிப்பாகவோ இருக்கும்.

இந்த வித்தியாசமான சத்தங்களினால் இரவில் விழித்துக் கொள்ளும் குழந்தைகளை தூங்க வைப்பது ஊர்க்காரர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. அடுத்த நாள் குழந்தைகளுக்கு அனேகமாக காய்ச்சல் வந்திருக்கும். புருவ முடிகள் விறைத்துக் கொண்டு நிற்பதாக கிழவிகள் அடையாளம் காட்டுவார்கள். தூக்கிக் கொண்டு நஞ்சப்பனிடம் போவதைத் தவிர ஊர்க்காரர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. சுடுகாட்டு சாம்பலை நெற்றியில் பூசி விடுவார் அல்லது யந்திரம் ஒன்றைக் கொடுத்து பொழுது சாய்வதற்கு முன்பாக அரைஞாண் கயிறில் கட்டிவிடச் சொல்லி அனுப்பிவிடுவார். சில குழந்தைகள் ஜன்னி கண்டு இறந்துவிடுவதும் உண்டு. ஆனால் அப்பொழுதும் கூட யாரும் நஞ்சப்பனை எதிர்க்க துணியவில்லை. ஊர்க்காரர்களுக்கு நஞ்சப்பனைக் கண்டால் அத்தனை பயம்.

வசியம் செய்வதற்கும், எதிரிகளை நசுக்குவதற்கும் பணம் படைத்தவர்கள் நஞ்சப்பனை தேடி வரத் துவங்கினார்கள். முதலில் தனது கஸ்டமரின் எதிரிகளை அழைத்து மிரட்டிப்பார்ப்பார். வழிக்கு வராத பட்சத்தில் துப்பாக்கியை காட்டுவார்.  அப்படியும் மசியாத போதுதான் பில்லி சூனியத்தை கையில் எடுப்பார். கோபம் எல்லை மீறும் சமயங்களில் கொன்றும் விடுவதும் உண்டு. நஞ்சப்பனின் வருமானம் யாருமே எதிர்பாராத அளவில் கொட்டியது. நாதே கவுண்டன் புதூர் பெரியதோட்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார். தன்னால் கொல்லப்பட்டவர்களை அந்த தோட்டத்தின் கிணற்று மேட்டிலேயே புதைத்து விடுகிறார் என்றும் பேச்சு உண்டு. 

இதன் பிறகுதான் ரெட்டை மாட்டு வண்டி, பெண்கள் தாழிட்டுக் கொள்ளுதல், ஆண்கள் அக்குளில் துண்டை செருகுதல் இத்யாதி, இத்யாதி எல்லாம்.

நஞ்சப்பனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. அறுபதைத் தாண்டியும் வாரிசு இல்லாமல் இருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணாகிவிட்டதாகவும் முதல் மனைவியின் இரத்தத்தை ஒரு காட்டேரி கேட்டதால் அவளின் கழுத்தை அறுத்து காட்டேரிக்கு கொடுத்துவிட்டு அதற்கு பிரதியுபகாரமாக அதனிடமிருந்து பெரும் பலத்தை பெற்றுக் கொண்டாராம். இதை நஞ்சப்பனின் தோட்டத்தில் வேலை செய்யும் கருப்பன்தான் சொல்லியிருக்கிறான். ஆனால் இதை யாரும் பார்த்ததில்லையாம். கருப்பன் சொல்வது உண்மையாக இருக்க கூடும் என ஆலாந்துறைக்காரர்கள் நம்பினார்கள்.

தனக்கு வாரிசு இல்லை என்பதைப் பற்றி நஞ்சப்பன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்காகவாவது ஒரு வாரிசு தேவை என நினைத்தார். திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு பல இடங்களுக்கும் ஆள் அனுப்பினார். ஒருவரும் பதில் சொல்வதாகத் தெரியவில்லை. 

மூன்று மாதங்களுக்குப் பிறகாக  மிரட்டுவதுதான் வழி என்று முடிவு செய்த நஞ்சப்பன் மேட்டாங்காட்டு ராமசாமியை அழைத்து வரச் சொன்னார். ராமசாமிக்கே நஞ்சப்பனை விட குறைந்த வயதுதான். ஆனால் அவரது மகளை நஞ்சப்பனுக்கு கட்டித்தர வேண்டுமாம். பர்வதத்துக்கு ஆவணி வந்தால்தான் பதினேழு வயது முடிகிறது. நேரடியாக மறுப்புத் தெரிவிக்க முடியாமல் ராமசாமி தயங்கினார். குடும்பத்தையே தன்னால் விளங்காமல் செய்துவிட முடியும் என்ற நஞ்சப்பனின் அஸ்திரத்திற்கு ராமசாமி பணிய வேண்டியதாயிற்று.

திருமணம் தடபுடலாக நடந்தது.அத்தனை செலவையும் நஞ்சப்பன் ஏற்றுக் கொண்டார். திருமணம் முழுவதும் பர்வதம் அழுது கொண்டேயிருந்தாள். அவளது அம்மாவும் கதறிக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் வெளியில் தெரியாத அளவுக்கு முகம் வீங்கிக் கிடந்தது. நஞ்சப்பன் செருக்குடன் தாலி கட்டினார். பர்வதம் தனது பாதத்திற்கு கீழாக பூமி வழுக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். முதலிரவுக்கான ஏற்பாடுகளை நஞ்சப்பனின் வீட்டிலேயே செய்திருந்தார்கள். பர்வதம் தலையைக் கூட உயர்த்தவில்லை. 

அடுத்த நாள் காலையில் நஞ்சப்பன் பர்வதத்தின் முகத்தை பார்க்க விருப்பமில்லாமல் விடிவதற்கு முன்பாகவே தோட்டத்திற்கு போய்விட்டார். பர்வதம் தன்னை இளக்காரமாக பார்ப்பதாகவே நஞ்சப்பனுக்கு தோன்றியது. சுற்றுவட்டாரத்தையே தன் மிரட்டலால் அடக்கும் தான் இந்தச் சிறுமியிடம் தோற்றுவிட்டதாக நினைக்கத் துவங்கினார். 

அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே நஞ்சப்பன் பில்லி சூனியம் வைப்பதை குறைத்துக் கொண்டார். வெளியாட்கள் யாரையும் தான் பார்க்க விரும்பவில்லை என்றும் அறிவித்தார். நஞ்சப்பன் களையிழக்கத் துவங்கியபோது ஊர் மீது படிந்திருந்த சாம்பல் திரை விலகத் துவங்கியது. தனக்கு வாரிசு இல்லாததால்தான் நஞ்சப்பன் வருத்தமுற்றிருப்பதாக ஊருக்குள் நினைத்துக் கொண்டார்கள். 

வடக்கு தோட்டத்து சுந்தரேசனிடம் மட்டுமே நஞ்சப்பன் அவ்வப்போது பேசுகிறார். போன வெள்ளிக்கிழமை மாலையில் நஞ்சப்பனை பார்க்க வந்திருந்தார். அவர்தான் பேச ஆரம்பித்தார் “இந்த பில்லி சூனியத்தை சுத்தமா வுட்டுடு. அப்போத்தான் வம்சம் பெருகும்ன்னு சொல்லுறாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு கோடாங்கி இருக்கான் அவனை நான் கூட்டியாரேன். அவனுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இந்தக் கருமத்தை நீ தலை முழுகிடு. அடுத்த பத்தாவது மாசம் ஊட்ல தொட்டில் ஆடும் பாரு”என்றார். கேட்டுக் கொண்டிருந்த பர்வதம் தனது அறையை நோக்கி ஓடினாள். கதவை ஓங்கி அறைந்து தாழிட்டுக் கொண்டாள். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கத் துவங்கினாள். அது பிரவாகமான சிரிப்பாக இருந்தது. சுந்தரேசன் இருக்கையில் இருந்து எழுந்தார். நஞ்சப்பன் தலையைக் குனிந்து கொண்டார். அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பல்லி சத்தம் எழுப்பத் துவங்கியது. அதுவும் சிரிப்பொலியைப் போலவே இருந்தது.

Aug 20, 2012

மிஞ்சிய குழந்தைஉனக்கும் எனக்குமான அத்தனை தொடர்புகளையும்
துண்டிக்கிறேன்.

உனது ஞாபகங்களை புதைத்துவிடுவேன்
என்ற போது
அது சாத்தியமா என நீ சிரித்த கணத்தை
ஒரு முறை நினைத்துக்கொண்டு புதைக்கிறேன்

உனக்கான கண்ணீரை கொஞ்சம் மிச்சம் வைத்திருந்தேன்
அதை வற்றிய இந்தக் குளத்தில் ஊற்றிய போது
குளத்தின் காய்ந்த கண்களில் தெரிந்த கருணை
நமது முதல் ரகசிய முத்தத்தை நினைவூட்டியது தற்செயலானதுதான்

நம் மாலைப் பொழுதுகளை
தீர்த்த
இந்த ஆலமரத்தை வெட்டச் சொல்லி ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது

படுக்கையை யாரோ ஒருத்திக்கு கையளித்தாயிற்று
தலையணை
மெத்தை
படுக்கை விரிப்புகள்-
நாம் பகிர்ந்து கொண்ட சகலமும்
எரிந்து கொண்டிருக்கின்றன

புன்னகைகளை அழிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை
விட்டுவிட்டேன்

உனது உடைமைகளை பிரித்து எடுத்துக் கொண்டாய்

எனது முதல் வாழ்த்துமடலை
நீ கசக்கிய போது
நம்மிடம் எந்தச் சலனமுமில்லை
இப்பொழுது கடைசியாக
இந்த வீட்டில் மிடறு தண்ணீரை
அருந்திக் கொள்கிறோம்

சிலிண்டரை திறந்துவிட்டு
பூட்டியாகிவிட்டது

ஒரு தீக்குச்சியை உள்ளே வீசப் போகிறேன்

கடைசியாக மிஞ்சும் இந்தக் குழந்தையை
எரியும் வீட்டிற்குள் வீசுவதா
அல்லது
கைப்பைக்குள் வைத்திருக்கும் ப்ளேடை எடுப்பதா
என
நீ யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
நானும்.

நன்றி: மலைகள் இணைய இதழ்

Aug 18, 2012

சரோஜாதேவிமழைச் சாரல் வாசலை நனைத்துக் கொண்டிருந்தது. ரவியும் பிரணீதாவும் அலுவலகத்திற்கு கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தது. எட்டரை மணிக்கு சரோஜக்கா வந்துவிடுவார். அவர் வந்தவுடன் கிளம்பிவிடுவார்கள். இவர்களின் வீட்டுப் பக்கத்தில் குடிசைகள் இருக்கும் ஏரியாவில்தான் சரோஜக்காவும் குடியிருக்கிறார். ரவி திருமணம் முடிந்து பிரணீதாவுடன் இந்த வீட்டிற்கு வந்த புதிதிலிருந்து வீட்டு வேலை செய்வதற்காக சரோஜக்கா வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பாத்திரங்கள் கழுவி வீடு சுத்தம் செய்துவிட்டு போய்விடுவார். அதற்கு  மாதம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.  பிறகு பிரணீதா கர்ப்பமானவுடன் சமையல் பொறுப்பையும் சரோஜக்காவே எடுத்துக் கொண்டார். உப்புக்காரம் தூக்கலான அவரது சமையலுக்கு இரண்டு பேருமே அடிமையாகிக் கிடந்தார்கள்.

“தம்பி, இன்னைக்கு வரும் போது எலுமிச்சம் பழம் வாங்கியாந்துடுங்க. பாப்பாவுக்கு வாந்தி நிக்கறதேயில்லை” என்று ரவி அலுவலகம் கிளம்பும்போது சொல்லியனுப்புவார். மாலையில் மறந்துவிட்டு வந்துவிடுவான். இரவு எட்டு மணி ஆகியிருந்தாலும் கூட மெயின்ரோட்டில் இருக்கும் நாடார் கடை வரைக்கும் சென்று சரோஜக்காவே வாங்கிவந்துவிடுவார். “புள்ள பெத்துக்க ஆசப்பட்டா மட்டும் போதுமா கண்ணு” என்று நக்கலடிக்கவும் தவறமாட்டார். வாழ்க்கை வசந்தமாக இருந்தது.

கர்ப்பமாக இருக்கும் மகளை பார்த்துக் கொள்வதற்காக பிரணீதாவின் அம்மா வந்திருந்தார். நம் ஊருக்கு போய்விடலாம் என்று அழைத்துப் பார்த்தார். “இன்னும் ரெண்டு மாசம் வொர்க் ஃபர்ம் ஹோம்ம்மா.. முடிச்சுட்டு போயிட்டா டெலிவரிக்கு அப்புறம் ஆறுமாசம் வரைக்கும் லீவு இருக்கு” என்று பிரணீதா மறுத்துவிட்டாள். பிரணீதாவின் அப்பா ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வார் என்று அவளது அம்மா கவலைப்பட்டார். வீட்டிலிருந்து வேலை செய்வதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்தான். ஆனால் அவர்கள் ஊரில் இண்டர்நெட் கனெக்டிவிட்டி நல்லபடியாக இருப்பதில்லை. அரை மணி நேரம் சிக்னல் கிடைக்கும் அப்புறம் கட் ஆகிவிடும். பத்து நிமிடம் போராடினால் திடீரென்று கனெக்ட் ஆகும். அதனால் இங்கேயே இருப்பதுதான் நல்லது என்று பிரணீதா நினைத்தாள். ரவியை வருடக்கணக்கில் பிரிந்து இருக்கவும் அவள் விரும்பவில்லை என்பது இன்னொரு காரணம். 

சரோஜக்கா படுபாந்தமாக பிரணீதாவை கவனித்துக் கொண்டார். குளிக்கும் போது முதுகு தேய்த்துவிடுவதிலிருந்து இரவு தூங்கப்போவதற்கு முன்பாக குங்குமப்பூ போட்ட பாலை குடிக்க வைப்பதிலிருந்து அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். “பாப்பாவும் எம்புள்ள மாதிரிதாம்மா நான் பார்த்துக்குறேன் நீங்க ஊருக்கு போய்ட்டு வாங்க” என்று சரோஜக்கா சொன்னபோது பிரணீதாவின் அம்மாவிற்கு கண்ணீர் கசிந்தது. யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டார். ஒரு வாரம் வரைக்கும் இருந்துவிட்டு சரோஜக்காவிம் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவரும் ஊருக்கு கிளம்பிவிட்டார். 

அடுத்த இரண்டு மாதங்களில் சரோஜக்கா இவர்களின் இன்னொரு குடும்ப உறுப்பினராக ஆகியிருந்தார். தன்னை விடவும் பிரணீதாவை சரோஜக்காதான் அதிகமாக கவனித்துக் கொள்வதாக ரவிக்குத் தோன்றியது. அந்த மாதத்திலிருந்து சரோஜக்காவுக்கு ஆறாயிரம் ரூபாயாக கொடுக்கத் துவங்கினான். “அக்கா, பிரணீதா பிரசவத்துக்கு போன பின்னாடியும் எனக்கு சாப்பாடு செஞ்சு, வீடு சுத்தம் செஞ்சுட்டு போங்க. பணத்தை பத்தி கவலைப்படாதீங்க” என்றான் ரவி. “ஒருத்தருக்கு சாப்பாடு செஞ்சு போட்டு வீடு சுத்தம் செய்யறதுக்கு ஆறாயிரம் ரூபாய் அதிகம் தம்பி” என்ற போது ரவி மென்மையான முறுவலோடு நகர்ந்துவிட்டான்.

பிரணீதாவுக்கு சிசேரியன் நடந்தது. ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க வேண்டும் என சரோஜக்கா விரும்பியதால் ரவி தனது காரிலேயே அழைத்துச் சென்றான்.  “பாப்பாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைல்ல தம்பி? அந்தக்காலத்துல ஆபரேஷன் எல்லாம் கெடையாது... ஆனா இப்போ எல்லாம் சகஜம் ஆகிடுச்சு” என்று தானாகவே கேட்டு தானாகவே தேற்றிக் கொண்டிருந்தார். நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு பிரணீதாவை பார்த்த போது சரோஜக்கா உருகிப்போனார். குழந்தையை அதைவிடவும் கொஞ்சினார். ரவியை உரித்து வைத்திருப்பதாக சொன்னபோது அவனுக்கு பெருமையாக இருந்தது. “இவர்கள் இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு போய் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று அடக்கமாட்டாமல் சொல்லிவிட்டார். பிரணீதா சிரித்துக் கொண்டே இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவதாகச் சொன்னாள். பிரணீதாவையும் குழந்தையயும் பார்த்துவிட்டு ஊர் திரும்பும் போது சாலைகளின் இரண்டு பக்கமும் வாதநாராயண மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. குரங்குகள் மரங்களின் கீழாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. மழைக்காலம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கிவிடும் போலிருந்தது.
                                            
                                                              ***

ஒரு வருடம் ஆகியிருந்தது. ஆகஸ்ட் மாத மழை அவ்வப்போது நிலத்தை நனைத்து போகிறது. பிரணீதா மூன்று மாதங்களாக வேலைக்கு போகத் தொடங்கியிருக்கிறாள். குழந்தையை சரோஜக்காதான் பார்த்துக் கொள்கிறார். அவரது சம்பளமும் எட்டாயிரத்தை தொட்டிருந்தது. அவர் வேலை செய்து வந்த மற்ற வீடுகளுக்கு இப்பொழுது போவதில்லை. இந்த ஒரு வீட்டு வேலைதான். காலையில் எட்டரை மணி வரைக்கும் வீட்டு வேலைகளைச் செய்வார். அதுவரையும் ரவியும் பிரணீதாவும் ஒருவர் மாற்றி ஒருவ குழந்தையை பார்த்துக் கொள்வார்கள்.

இரண்டு பேரும் அலுவலகம் போய்விட்ட பிறகு திரும்பி வரும் வரைக்கும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய வேலை மட்டும்தான். அவர்கள் திரும்பி வந்த பிறகு மீண்டும் சமையல் வீட்டு வேலை என்று முடிய இரவு ஒன்பதாகிவிடும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான நாட்களில் இவர்கள் வீட்டிலேயே தூங்கிக் கொள்கிறார். கொஞ்ச நேரம் ஹாலில் சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார் அவரையும் அறியாமல் தூங்கிவிடுவார். ரவிதான் டிவியை அணைத்துவிட்டு ஒரு போர்வையை எடுத்து அவர் கால் மீது போர்த்திவிட்டுச் செல்வான்.

இதுவரை உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடந்த சில வாரங்களாக மிகவும் சோர்வாக இருக்கிறது. காலை நேரத்தில் கொஞ்சம் விளையாடுகிறது. ஆனால் மாலையில் எந்த விளையாட்டும் இல்லாமல் இருக்கிறது. ரவியும் பிரவீணாவும் பதறிப்போனார்கள். இது குழந்தைப் பருவத்தில் சாதாரணமானதுதான் என்று சரோஜாக்கா ஆறுதல் சொன்னார். பிரணீதா அவளது அம்மாவிடம் போனில் அழுதாள். போனை பிரணீதாவிடமிருந்து வாங்கி சரோஜக்காதான் “அது ஒண்ணுமில்லம்மா குழந்தைக்கு என்னமோ சோக்க. ரெண்டொரு நாள்ல சரியாப் போய்டும் நா பாத்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க” என்றார். 

ரவி தூங்கிவிட்டான். பிரணீதாதான் புரண்டு புரண்டு படுத்தாள். குழந்தை அருகில் தூங்கிக் கொண்டிருந்தது. முகம் கருத்திருந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தையின் முகத்தை பார்த்து தன்னையும் அறியாமல் கண்ணீர்விட்டாள். இரவு பூதாகரமானதாக இருந்தது. தூக்கத்தை தராமல் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது. கடவுள்களை உள்ளூர பிரார்த்திக்கொண்டிருந்தாள்.

மறுநாள் அலுவலகம் கிளம்பும் போது குழந்தை ஓரளவுக்கு உற்சாகமாக இருந்தது. இருவரும் கிளம்பிப்போய்விட்டார்கள். ஆனால் அலுவலகத்தில் பிரணீதாவிற்கு மனம் லயிக்கவில்லை. குழந்தையின் நினைப்பாகவே இருந்தது. மேனஜரிடம் விடுப்பு சொல்லிவிட்டு ஆட்டோ ஏறிக்கொண்டாள். தான் வீட்டிற்கு வருவதைச் சொல்லிவிட சரோஜக்காவிற்கு போன் செய்தாள். அவர் எடுக்கவில்லை. ரவிக்கும் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்துவிட்டாள். 

வீட்டிற்கு வந்து சேரும் போது மணி பத்தரை இருக்கும். காலிங்பெல்லை அடித்தாள். டிவி ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சரோஜக்கா கதவைத் திறந்தார். யாரோவாக இருக்கக் கூடும் என  திறந்திருப்பார் போலிருக்கிறது. பிரணீதாவை பார்த்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தார். பிரணீதா  “குழந்தை எப்படியிருக்கிறது” என்றாள். சரோஜக்கா பதில் பேசவில்லை.  “குழந்தை எங்கே” என கேட்டாள். அப்பொழுதும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தார். பிரணீதா பதட்டமடைந்தாள் “என் குழந்தை எங்கே அக்கா” என்று கேட்டபோது பிரணீதாவின் பதட்டம் கோபமாக மாறியிருந்தது. வீடு முழுவதுமாக குழந்தையை தேடினாள். எங்கும் இல்லை. அப்பொழுதே ரவிக்கு போன் செய்து கதறினாள். “குழந்தையைக் காணங்க...சரோஜா பதிலே சொல்ல மாட்டேங்குறா” என்று முதன்முறையாக சரோஜாவை மரியாதைக் குறைவாக குறிப்பிட்டாள்.

ரவி அவசரகதியில் கிளம்பி வந்தான்.  போலீஸூக்கும் தகவல் கொடுத்திருந்தான். போலீஸ் அதிகம் தாமதிக்கவில்லை. ஒரு பெண் கான்ஸ்டபிளும் வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சரோஜக்காவை ஓங்கி அறைந்தார் அந்த கான்ஸ்டபிள். சரோஜக்கா நிலை குலைந்தாள். பிரவீணாவை நோக்கி முதன் முறையாக வாய் திறந்தாள்.  “நான் குழந்தையை கொண்டு வந்துடுறேன். அடிக்க வேண்டாம்ன்னு சொல்லும்மா” என்றாள். போலீஸ் ஜீப்பிலேயே கிளம்பிப் போனார்கள். 

அவர்களது வீட்டிலிருந்து மூன்றாவது சிக்னலில் ஒருவள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். அவளின் கையில் குழந்தை இருந்தது. துணியைக் கொண்டு சுத்தி வைத்திருந்தாள். அசையாமல் இருந்த அந்தக் குழந்தை பிரவீணாவின் குழந்தைதான். போலீஸூடன் சரோஜாக்காவை பார்த்தவுடன் பிச்சைக்காரி ஓட எத்தனித்தாள். ஆனால் தப்பிக்க முடியவில்லை. குழந்தைக்கு ஒரு நாள் வாடகை இருநூறு ரூபாய் என்று தெரியவந்தது. குழந்தைக்கு தூக்க மருந்து போல எதையோ ஒன்றை ஊட்டியிருந்தாள். அது அரை மயக்கத்தில் கிடந்தது. சரோஜக்காவையும் பிச்சைக்காரியையும் ஜீப்பில் ஏற்றினார்கள். எதற்காக சரோஜக்கா இப்படி செய்தாள் என்று பிரவீணாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சரோஜக்காவை பார்த்து “இப்படி செய்துவிட்டீர்களே” என்ற பாவனையில் முகத்தை ஆட்டினாள். சரோஜா கீழே குனிந்து கொண்டாள்.  “நீங்க அப்புறமா ஸ்டேஷனுக்கு வாங்க சார், ஃபார்மாலிட்டிஸ் இருக்கு” என்றார் கான்ஸ்டபிள். ரவி தலையை ஆட்டினான். பிரவீணா மீண்டும் ஒரு முறை குழந்தையை பார்த்தாள். அது அசைவில்லாமல் படுத்திருந்தது. மழை தூறலிடத் துவங்கியது . இப்பொழுது பிரவீணாவுக்கு கதறியழ வேண்டும் போலிருந்தது.

Aug 16, 2012

கண்ணாடி மீன் கோமாளிகளுக்குச் சொன்ன கதைகள்


சம்பான் என்னும் மாட்டுக்காரச் சிறுவன் வெள்ளந்தி ஆற்றின் அருகே தனது மாடுகளை மேய விட்டுவிட்டு ஆற்றுக்குள் குரவை மீன்களைத் தேடிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது ஆலான் என்ற பசுமாட்டுக் கன்று ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் உளுவை மீன்களை பார்க்கிறது. அதில் விமாசு என்ற உளுவை மீன் ஒன்று ஆலானிடம் பேசுகிறது. 

ஆலானை தனது கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளும் விமாசு உவர்மண் நாட்டு வீரன் ஐராபாசீயின் மாளிகையை பற்றி புளாங்கிதம் அடைகிறது. தான் அந்த மாளிகைய பார்க்கப் போவதாகவும் ஆலானும் உடன் வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. ஆனால் மாட்டுக்காரச் சிறுவன் சம்பான் தன்னை தேடக் கூடும் என்பதால் இன்று வேண்டாம் என்றும் நாளை மாளிகையை பார்க்கச் செல்லலாம் என்று சொல்லிவிட்டு ஆலான் வீடு திரும்புகிறது.

மறுநாள் ஆலானும் விமாசுவும் ஐராபாசீயின் மாளிகையை நோக்கிய தங்களது பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். வழியில் விதவிதமான உயிரினங்களைச் சந்திக்கிறார்கள். உலகில் யாருமே செய்ய முடியாத மணி மாலைகளை செய்யும் செரலி என்னும் செம்புகப் பறவையை முதலில் பார்த்து அதன் கதையை கேட்கிறார்கள். முப்பத்தி ஆறு நாட்களின் உழைப்பிற்கு பிறகாக அதி அற்புதமான மணிமாலை ஒன்றை பஞ்சவர்ணக்கிளிகளுக்காக செய்த விதத்தை செரலி விளக்குகிறது. ஆலானுக்கு அது பேரதிசயமாக இருக்கிறது.

அடுத்து துபரி என்னும் எலியை பார்க்கிறார்கள். கடும் வெள்ள காலத்தில் துபரியும் நூற்றியறுபது இளம் எலிகளும் சேர்ந்து சுரங்கம் அமைக்கின்றன. அது முக்கடலும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் பவளப்பாறை குகைகளை அடைவதற்கான சுரங்கம்.வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பிற உயிர்களை இந்தச் சுரங்கம் வழியாக அழைத்துச் சென்று காப்பாற்றியது குறித்து துபரி விவரிக்கிறது. ஆலான் பிரமித்துப்போகிறது.

இப்படியாகவே தங்களின் பயணம் முழுவதும் அதாளி-சேக்கு என்னும் முயல்கள், சிரேசா என்னும் தூதுப்புறா, பாமனி என்ற கானாங்கோழி, குலாடன் என்ற காடை என இன்னும் பலரையும்  வரிசையாக சந்தித்து அவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் விமாசுவும் ஆலானும் கேட்டுக் கொண்டே ஐராபாசீயின் மாளிகையை அடைகிறார்கள். 

அது நீருக்குள் கட்டப்பட்ட மாளிகை. ஏகப்பட்ட அறைகளும்,மண்டபங்களும்,குளங்களும் மாளிகைக்குள் இருக்கிறது. நீரிலும் நிலத்திலும் வாழும் அத்தனை உயிரினங்களும் அந்த மாளிகையில் தங்கிவிட முடியும் என்ற அளவிற்கு வசதிகள் நிரம்பியது. காட்டுப்புலி ஒன்று அந்த மாளிகைக்கு காவலனாக இருந்தது. இப்படியொரு அதி அற்புதமான மாளிகையை கட்டிய ஐராபாசீக்கு தனிமை ஒரு பெருந்துக்கமாக இருந்திருக்கிறது. 

துக்கத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனது மூதாதையரை ஒத்திருக்கின்றன. சிங்கக்குட்டி சிங்கத்தை போலிருக்கிறது. யானைக்குட்டி யானையை போலிருக்கிறது. ஆனால் ஐராபாசீ யாரைப் போலவும் இல்லை. ஐராபாசீக்கு இறக்கையும் வாலும் உண்டு. என்றாலும் அவன் மனிதன் தான். ஆனால் தன்னை மனிதன் என்று உணராத மனிதன். தான் யாரைப்போலவும் இல்லாததால் தனிமையை உணர்ந்த ஐராபாசீ பிற உயிர்களை தனது துணையாக கருதிக் கொள்கிறான். இயற்கைச் சீற்றங்களிலும் மனிதர்களிடம் இருந்து பிற உயிரினங்களை காப்பாற்ற இந்த அற்புத மாளிகையை கட்டியிருக்கிறான். 

இது ஐராபாசீ என்னும் சிறார் நாவலின் சாராம்சம்.
                                    
***

கதைகள் தீர்ந்துவிட்ட இரவில் மகனுக்குச் சொல்வதற்காக கதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்லும் போது நாம் தொலைத்துவிட்ட பால்யத்தை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த பால்யத்தில் நாம் தவறுவிட்டுவிட்ட சிங்கத்தின் குகைகளும், பூச்சாண்டிகளின் பெரு விழிகளும், ஏழு கடல் தாண்டிய சுரங்கங்களும் இப்பொழுது மன இடுக்கின் ஏதோ ஒரு மூலையில் கைவிடப்பட்ட துக்கங்களாக ஒண்டிக் கிடக்கின்றன. அவற்றை கண்டுபிடிப்பது பெரிய சிரமம் இல்லை. ஆனால் நமக்குதான்  அதற்கான பொறுமையும் அவகாசமும் இல்லை.

காணாமல் போன பால்யத்தை கண்டுபிடிப்பதற்கான எளிய சூத்திரமாக வேலு சரவணன் எழுதிய ஐராபாசீ என்னும் சிறார் நாவல் அமைந்துவிட்டது வரம்தான். நாம் மறந்து போன, தற்பொழுது எளிதில் கற்பனை செய்யமுடியாத சிறுவர்களின் உலகத்தை மிக இயல்பாக காட்டிவிடுகிறார் வேலு சரவணன். ஆற்றங்கரை, சதுப்புநிலங்கள், கடற்கரை என விரியும் காட்சிகளின் வழியாக நாவலில் ஒவ்வொரு உயிரினமும் தனது கதையை விவரிக்கும் போது பரவசமான பால்ய மனதினை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது என்பது இந்த நாவலின் சிறப்பாகத் தோன்றுகிறது.

ஆலானும் விமாசுவும் தங்களின் பாதை முழுவதும் ஒவ்வொரு உயிரினத்தை பார்ப்பதும் ஒரு சிறுகதையாக இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் நெருங்கி பிணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளின் தொகுப்புதான் ஐராபாசீ என்னும் நாவல். நாவலில் வில்லன் இல்லை, மிரட்டும் பூதம் இல்லை, பேய்கள் இல்லை. மாறாக நாவலில் வரும் ஒவ்வொருவருமே விற்பன்னர்கள். ஏதாவது சாதனையைச் செய்தவர்கள்.மென்மையான வருடலாக  நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குபவர்கள்.  

குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவு. இந்தச் சூழலில் குழந்தைகளுக்கான நாடகம், அவர்கள் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே தனது உலகம் என்று அமைத்துக் கொண்ட வேலு சரவணின் இந்தப் புத்தகம் மிக முக்கியமானது.

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

Aug 15, 2012

சமூகத்தின் பாலியல் சிக்கல்கள்அனிரூத் - ஆண்ட்ரியா முத்தக் காட்சிகளின் நிழற்படங்கள் ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. சாதாரண படம் என்று நினைத்தது ஒரே நாளில் இண்டர்நெட் முழுவதையும் ஆக்கிரமிக்கும் மிகப்பெரிய செய்தியாக மாறிய போதுதான் குத்தியது. குத்தியது என்றால் உயிர்போவதெல்லாம் இல்லை. ஆனால் நாம் வாழும் காலத்தில் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லை என்ற குத்தல்தான். காசுக்கு தன் உடலை விற்கும் பெண்மணி கூட அடுத்தவன் தன் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதை விரும்பமாட்டாள். அப்படியிருக்கும் போது நமக்கு சம்பந்தமேயில்லாத பெண்ணை ஒருவன் முத்தமிடும் காட்சியை கொண்டாடும் மனநிலை நோய்மை பீடித்த மனநிலையாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் தலையிடுவதோடு மட்டும் நாம் நிறுத்திக் கொள்வதில்லை. சர்வசாதாரணமாக அவை குறித்தான எள்ளலையும் பரிகாசத்தையும் வெளிப்படுத்துகிறோம். இந்த அந்தரங்கங்களை வைத்து காமெடி செய்யும் ஒவ்வொரு மனிதனும் வாய்ப்பு கிடைக்காதவனாகவும் அல்லது வாய்ப்பு கிடைத்த பட்சத்தில் வெளியுலகம் அறியாதபடிக்கு நடந்து கொண்டவனாகவும் இருக்கிறான் என்பதை எந்தக் கோயிலில் வைத்தும் சத்தியம் செய்யலாம். 

அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறவதற்கான சுதந்திரங்களை உண்மையில் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒழுக்கம் சார்ந்த சுயக்கட்டுப்பாடு சிதைந்து(Self discipline) போயிருப்பதும், கணினி யுகத்தில் யாராலும் நம்மை  ஒன்றும் செய்துவிட முடியாது ’விர்ச்சுவல்’பயமின்மையும்தான் அடிப்படை.

இத்தகைய கொண்டாட்டங்கள் பாலியல் வறட்சியின் வெளிப்பாடு என்பதும் கூட சரியாக இருக்கும். நமக்கு வாய்த்திருக்கும் சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் உருவாக்கித்தரும் வாய்ப்புகள்(சாட்டிங் முதலானவை) எதிர்பாலினரை உடல் ரீதியாக அடைந்துவிடுவது மிக எளிதான காரியம் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. ஆனால் சிக்கல்களால் நிரம்பியிருக்கும் ரியாலிட்டியின் சிறைகளுக்குள் இருக்கும் ஒருவனால் அத்தனை சீக்கிரமாக தான் விரும்பும் உடலை அடைய முடிவதில்லை. 

உடல்குறித்தான ஏக்கமும், அடைந்துவிடுவதற்குரிய தூரத்தில் அந்த உடல் இருப்பதான பிம்பமும், உண்மையில் அதை அடைய முடியாத சிக்கல்களுமே நாம் வாழும் காலத்தில் உருவாகும் பாலியல் வறட்சிக்கு அடிப்படையான காரணமாகிறது. இங்கு நிலவும் பாலியல் வறட்சியும், பாலியல் சிக்கல்களும் சமூகத்தின் பெரும் பிரச்சினை. ஆனால் இவை வெறும் தனிமனித சிக்கல்களாக மட்டுமே நம்மால் பார்க்கப்படுவது துக்கம்தான். இந்த வறட்சியும் ஏக்கமும் அந்நிய பெண்ணொருத்தியின் அந்தரங்கத்தை கொண்டாடி திருப்திப்பட்டுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறது. அப்படித்தான் இத்தகைய நிழற்படங்களை சுகித்துக் கொள்கிறோம் போலிருக்கிறது.
                                                    
                                                                   ***

கள்ள உறவுகளும், அது சார்ந்த கொலைகளும் இயல்பான நிகழ்வுகளாகியிருக்கின்றன. அதற்கான உளவியல் காரணங்கள் எதுவும் ஆராயப்படுவதாகத் தெரியவில்லை. கள்ள உறவுகளைப் பற்றி கிசு கிசு பாணியில் பேசுவதும், தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக் கொள்வதும் நம் பாரம்பரியமாக இருந்திருக்கிறது. அதே பாரம்பரியத்தை ‘ஹைடெக்’ ஆக நாம் முகநூலில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

இத்தாலிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு முன்பாக  தனக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகான பதினைந்து வருடங்களில் வேறு பெண்ணை நாடியதில்லை என்றார். தனது பெரும்பாலான ஐரோப்பிய நண்பர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவரின் நம்பிக்கை. ஆச்சரியமாக இருந்தது. இது இந்தியாவில் உல்டாவாக இருக்கிறது. திருமணம் வரைக்கும் வேறொரு பெண்ணுடனான தொடர்புக்கு வாய்ப்பில்லாதவன் திருமணத்திற்கு பிறகாக பல பெண்களை நாடுவது சாதாரணமாக இருக்கிறது. இதற்கு  காரணம் என்னவாக இருக்க முடியும்?

இவை போன்ற பாலியல் சிக்கல்கள் தனிமனித உளவியலை(Individual Psychology) சீராக்குவதன் மூலம் களையப்பட முடியும் என்று தோன்றவில்லை. இது சமூக உளவியலின்(social psychology) அங்கம்.
                                                                       ***

நடிகையின் முத்தம் ஒன்றை போட்டோவில் பார்ப்பதற்கு இத்தனை பெரிய பஞ்சாயத்தா? இதை கலாச்சாரம், ஒழுக்கவியல் என்பனவற்றுடன் எல்லாம் பொருத்தி பார்க்க வேண்டியதில்லை. மிக எளிமையாக,நம் குடும்பப் பெண்ணொருத்தியின் முத்தக்காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகும் போது நமக்கு உண்டாகும் அதிர்ச்சி மனநிலையை ஒரு கணம் யோசித்துப் பார்க்கும் தெளிவு இருந்தால் போதும் எனத் தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் வலியை போகிற போக்கில் உணர்ந்து கொண்டாலும் கூட போதும்.

அந்த தெளிவும், புரிதலும் இல்லாத வரையில் நயன்தாராவும், ரஞ்சிதாவும், ஆண்ட்ரியாவும் நமக்கு தீனியாகிக் கொண்டிருப்பார்கள். 

Aug 14, 2012

பக்குவம்அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் மின்னஞ்சல் வந்திருந்தது. அடுத்த நாள் காலையில் மேனஜருடன் மீட்டிங். மேனஜருக்கு இது வாடிக்கையாகிவிட்டது. மறுநாள் காலை சரியாக ஒன்பது மணிக்கு மீட்டிங் என்று முந்தின நாள் மாலை ஏழு மணிக்கு மின்னஞ்சலை அனுப்புவார். ஏழு மணிக்கு முன்பாக வீட்டிற்கு கிளம்பியவர்கள் மீட்டிங் இருப்பதே தெரியாமல் லேட்டாக வருவார்கள். சீக்கிரம் கிளம்பிவிடுகிறீர்கள் லேட்டாக வருகிறீர்கள் என்று மேலேவிழுந்து பிறண்டாத குறையாக கும்முவார். தனசேகரனுக்கு இது பிரச்சினையாக இருந்ததில்லை. எப்பொழுதுமே காலை எட்டுமணிக்கு கர்மசிரத்தையாக அலுவலகத்திற்குள் நுழைந்துவிடுவான். இரவு பத்து மணிக்கு வாட்ச்மேன் லைட்டாக தூக்கத்தை தொடும் போது ”நான் கெளம்புறேண்ணே” என்று கலைத்துவிட்டு வருவான். 

தனசேகரனுக்கு வேறு வழியும் இல்லை. பன்னிரெண்டாவது வரைக்கும் தமிழ் மீடியத்தில் படித்தான், கல்லூரியிலும் தத்துபித்து. முப்பாதயிரம் சம்பளமாகக் கொடுத்து சாஃப்ட்வேரில் வேலை கொடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் உருண்டு புரண்டு படித்துக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. இப்பொழுது கம்ப்யூட்டரில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆங்கிலம் பேசுவதுதான் பிடிபட்டாமல் போக்கு காட்டுகிறது. ஆனால் தனசேகரனின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இவன் சிரமப்படுவது எல்லாம் தெரியாது. இரண்டு பேருமே கூலி வேலைதான். பெரும்பாலும் விவசாயக் கூலிக்குத்தான் போவார்கள். தோட்டங்காடுகளில் வேலை இல்லையென்றால் கட்டடவேலைக்கு போவார்கள். இவர்களுக்கு தனசேகரன் ஒரே மகன் என்பதால் பாசத்திற்கும் செல்லத்திற்கும் பஞ்சமேயில்லை என்றாலும் வீட்டில் அவ்வப்போதுப் பஞ்சம் வந்துவிடும். இருபது ரூபாய்க்கு தனாவின் தந்தை அலைந்த கதையெல்லாம் உண்டு.

தான் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருப்பதாக தனா சொன்னபோது அவனது அப்பாவுக்கு அது பெரிதாக தெரியவில்லை. சம்பளத்தை அவர் கேட்கவும் இல்லை. அவனாகத்தான் மாசம் முப்பாதாயிரம்ப்பா என்றான். அவரால் ஒரு கணம் நம்பமுடியவில்லை. தன் வாழ்நாளில் அவர் அதிகபட்சமாக பார்த்த தொகை பதினாலாயிரத்து முந்நூறு ரூபாய். அதுவும் தனாவின் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு போனபோது அத்தனை கவனமாக சுமந்து சென்றார். இதனாலேயே அவனது சம்பளம் திகைப்படையச் செய்தது. கிள்ளிப்பார்த்துக் கொண்டவர் அவரையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகளை சிந்திவிட்டார். அவனது அம்மா ஊரில் இருக்கும் சாமிகளை எல்லாம் கும்பிட்டுக் கொண்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்களது உலகம் மொத்தமாக மாறியிருந்தது. ஊருக்குள் அத்தனை பெருமையாக பேசிக் கொண்டார்கள்.

வேலைக்கு சேர்ந்த பத்து மாதங்களுக்கு பிறகாக பதினெட்டு சதவீத வட்டியில் தனசேகரன் பெர்சனல் லோன் வாங்கினான். குடிசையை முதலில் மாற்றிவிட வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. ஒரு மாத இ.எம்.ஐ கூட கட்டி விட்டான். தனாவின் அம்மாவும் அப்பாவும் இத்தனை சிரித்து அவன் பார்த்ததில்லை. இப்பொழுது வாராவாரம் ஊருக்கு வந்துவிடுகிறான். வாழ்க்கையின் அத்தனை வசந்தங்களையும் பார்க்கத் துவங்கியிருந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போலவே எட்டு மணிக்கு போய்விட்டான். கொஞ்ச நேரம் மெயில், கொஞ்ச நேரம் செய்திகள் என்று கம்ப்யூட்டரில் மேய்ந்து கொண்டிருந்த போது மேனேஜர் வந்தார். கையில் கொஞ்சம் ஃபைல்களுடன் வந்தவர் தனது வழக்கமான உறுமலுடன் அறைக்கு அழைத்தார்.

                                                                 **

“தனசேகரன் சொல்லுறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு ஆனால் டாப் லெவல் மேனேஜ்மெண்ட் ஆர்டர் உங்களை ஃபயர் பண்ணவேண்டியதாகிடுச்சு”

“சார் திடீர்ன்னு...என்ன சார் இப்படி சொல்லுறீங்க?”

“இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க நீங்களாவே ரிசைன் பண்ணிட்டு போற மாதிரி டாக்குமெண்ட்ஸ் தர்றோம்” 

“சார்...எனக்கு வேற எதுவுமே தெரியாது சார்...லோன் எல்லாம் வாங்கியிருக்கேன்”

“அழாதீங்க தனா. நீங்க மட்டும் இல்லை இன்னைக்கு மட்டும் இன்னும் முந்நூறு பேரை வெளியே அனுப்ப போறோம்”

“என்ன ரீஸன் சார்?”

“சாரி..அதெல்லாம் கான்பிடென்ஷியல்”

“சார்..ப்ளீஸ் சார்”

“என்கிட்ட எதுவுமே இல்ல தனா. சொன்னா புரிஞ்சுக்குங்க”

“அம்மா அப்பா என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காங்க சார்”

“ம்ம்ம்”

“வேற ஆப்ஷனே இல்லை”
                                                 
                                                                       **

கையெழுத்திட்டவுடன் தயாராக இருந்த சில தாள்களை கொடுத்துவிட்டு ‘ஆல் த பெஸ்ட்’ சொன்னார்கள். தனது டேபிளில் இருக்கும் உடைமைகளை எடுத்துக் கொள்ள தனசேகரன் அனுமதிக்கப்பட்டான். அலுவலகத்தில் இருக்கும்வேறு யாருடனும் பேசக் கூடாது என்று முன்பே சொல்லிவிட்டார்கள். தனாவின் முகம் வெளிறிக்கிடப்பதை பார்த்தவர்கள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொண்டார்கள். இது அவர்களுக்கு இன்னுமொரு ‘ஃபயரிங்’ அவ்வளவுதான். தனா இன்னமும் இத்தகைய இடிகளை தாங்கிக் கொள்ளும் பக்குவமற்றவனாக இருந்தான். பெர்சனல் லோன் வாங்கியதன் இ.எம்.ஐ தான் அவன் முன்பாக இருந்த பூதாகர பிரச்சினை. இன்னொரு வேலை தேடிவிடலாம் என்ற சிந்தனை துளியுமற்றவனாக இருந்தான். இந்த உயர்ந்த கட்டட நிறுவனங்கள் கருணையற்றதாகத் தோன்றின. ஒரு மாதம் முன்பாக அறிவித்திருந்தால் கூட வேறு ஏதேனும் வழிகளை தேடியிருக்கலாம் என்று நினைத்த போது அழுகை பீறிட்டது. 

அம்மா அப்பாவை நினைத்து பெரும் வேதனையடைந்தான். அவர்களின் ஒரே பற்றுதலாக தான் மட்டுமே இருப்பதைவிடவும் இந்தத் தோல்வியை தெரிவித்து அவர்களை வருத்தமடையச் செய்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். தற்கொலை செய்துகொண்டால் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. ரயில்வே ட்ராக் அருகேதான் நின்று கொண்டிருந்தான். தூரத்தில் மின்சார ரயில் வருவது தெரிந்தது. முடிவு செய்ய முடியாமல் குழம்பினான். மின்சார ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனது அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டான். இன்னும் ஒரே ஒரு வினாடிதான். பெரும் சப்தத்துடன் ட்ரெயின் தாண்டியது. நீங்களும் நானும் நினைத்ததும் நடக்கவில்லை. தனா நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். ட்ரெயின் அவனை தாண்டுவதற்கு முன்பான ஒரு வினாடியில் தனா முடிவு செய்திருந்தான். வாழ்வை இன்னொரு முறை எதிர்கொண்டு பார்க்கலாம் என. 

Aug 11, 2012

அடியாள்
பொருளாதார அடியாள்-  பெயர்தான் சிம்பிளாக ’அடியாள்’ என்றிருக்கிறது. ஆனால் இவர்கள் அடியாட்கள் மட்டுமில்லை. ஜகஜ்ஜால கில்லாடிகள். மிதமிஞ்சிக் கிடக்கும் தங்களின் அறிவையும் திறமையையும் கொண்டு பிற நாட்டின் தலைவர்களையும் அவர்களின் வழியாக அந்த நாடுகளையும் ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் விழச் செய்பவர்கள். பிறநாட்டு தலைவர்களை அடிபணியச் செய்வதற்காக மிரட்டலில் ஆரம்பித்து மாமா வேலை வரை அத்தனைவிதமான சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். 

ஒரு நாட்டை இன்னொரு நாட்டின் காலில் விழ வைப்பது அத்தனை சுலபமா? கான்செப்ட் ரொம்ப சிம்பிள். வளரும் நாடுகளில் முதலில் வளர்ச்சி வாய்ப்புளுக்கான சர்வே எடுப்பார்கள். சர்வேயின் முடிவில் நாங்கள் பரிந்துரைக்கும் திட்டங்களால் அந்த நாட்டின் பொருளாதாரம் பூதாகரமாக வளரும், வேலையில்லாத்திண்டாட்டம் இருக்கவே இருக்காது என்றெல்லாம் ‘கிளப்பி’விடுவார்கள். பிறகு வளர்ச்சித் திட்டங்களுக்கான பணத்தை உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி என அத்தனை வங்கிகளின் மூலமாகவும் கடனாக ஏற்பாடு செய்வார்கள். ஆனால் வளர்ச்சிப்பணிகளை அமெரிக்க நிறுவனங்களே செய்து முடிக்கும் என ஒப்பந்தமும் போட்டுவிடுவார்கள். அதாவது வங்கிகள் கடனாக கொடுத்த பணத்தை வேலை செய்கிறேன் பேர்வழி என்று ‘நைசாக’ அமெரிக்காவுக்கு திருப்பிவிடுவார்கள். பணிகள் முடிந்த பிறகு கடன் வாங்கிய நாடு வட்டியோடு திரும்பத் தர வேண்டியிருக்கும்.  இந்த வட்டி+கடனுக்காக ஐ.நாவில் அமெரிக்காவுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் விதித்துவிடுவார்கள். அமெரிக்கா ஒரு இராணுவ முகாமை அந்த நாட்டில் அமைத்துக் கொள்ளலாம். இத்யாதி இத்யாதி. இப்பொழுது அந்த நாடு அமெரிக்காவிடம் முழு சரண்டர். 

அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார அடியாளில் ஜான் பெர்க்கின்ஸ் முக்கியமானவர். தனது தொழில் பொருளாதார அடியாள் என்று மிரட்டல்களையும் மீறி துணிச்சலாக அறிவித்துக் கொண்டவர். இவர் தனது வாழ்வை புத்தகமாக எழுதியிருக்கிறார். தன் பிறப்பிலில் தொடங்கி, கல்வி,  குடும்பம் தன்னை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள், அதற்கு பிறகாக அளிக்கப்பட்ட பயிற்சிகள், ஈக்வெடார் நாட்டிலிருந்து சவூதி அரேபியா வரைக்கும் உலகநாடுகளில் தன்னால் செய்து முடிக்கப்பட்ட வேலைகள் என அத்தனையும் அதிபயங்கர சுவாரசியமான தகவல்களுடன் எழுதப்பட்ட புத்தகம் Confessions of an Economic Hit man என்பது. தமிழில் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. விடியல் பதிப்பகத்தின் மூலமாக இரா.முருகவேள் மொழிபெயர்த்த இந்தப்புத்தகம் 2006 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. எனக்கு இப்பொழுதுதான் வாய்த்தது. 

இந்த புத்தகம் ஜான்பெர்க்கின்ஸ் என்ற தனிமனிதனின் கதை மட்டும் இல்லை. தனது பணியின் நிமித்தமாக தான் பயணிக்கும் நாடுகளின் அமைப்பு, காலநிலை, பொருளாதார நிலை, அது சீரழிக்கப்பட்ட விதம், அந்த மக்களின் பண்பாடு,இரவு வாழ்க்கை என ஒவ்வொரு அம்சத்தையும் சுவாரசியம் குறையாமல் சொல்லிச் செல்கிறார். 1960களுக்கு பிறகாக  -குறிப்பாகச் சொன்னால் வியட்நாம் போருக்கு பிறகாக கம்யூனிசத்தை எந்த நாடும் பின்பற்றிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் பிரயத்தனங்களையும் உலக வரலாற்றோடு சேர்த்து பேசுகிறார்.

ஈரானில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், தனக்கு ஒத்துவராத நாடுகளின் தலைவர்களுக்கு குடைச்சல் தருவதற்காக உருவாக்கப்படும் தெருச்சண்டைகள்,கலவரங்கள், இந்தோனஷியாவில் மின் திட்டம் ஆரம்பிப்பதாகச் சொல்லி தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்த முறை என  நூற்றுக்கணக்கான சுவாரசியத் தகவல்களால் புத்தகம் நிரம்பியிருக்கிறது.

சவூதி அரேபியாவில் குப்பை அள்ளுவதற்கு எந்த சுயமரியாதையுள்ள மனிதனும் தயாரில்லை என்பதால் ஆடுகள்தான் குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கமாம். ஆடுகளுக்கு பதிலாக நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் குப்பை அள்ளும் என்ற ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா சவூதிக்குள் கால் வைக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு அடிகோலிட்டவர் ஜான்பெர்க்கின்ஸ். இதன் பிறகாக சவூதியின் ஒவ்வொரு விஷயத்திலும் அமெரிக்கா மூக்கை நுழைத்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு அமெரிக்காவுடன் சவூதி இரண்டறக் கலந்துவிட்டது. இப்பொழுது அமெரிக்காவின் ’ஜிங்க்சக்’ நாடுகளின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் முதல் மூன்று இடத்திற்குள் சவூதி அரேபியா இருக்கும். 

அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் சிறு நிலப்பகுதியில் ஒரு கால்வாயை அமைக்க அமெரிக்கா விரும்பியது.இந்தக் கால்வாயை அமைத்துவிட்டால் அமெரிக்காவின் கப்பல் போக்குவரத்து சுலபமாகிவிடும். ஆனால் தனது நிலத்தில் கால்வாயை அனுமதிக்க முடியாது என கொலம்பியா முரண்டு பிடித்தது. சும்மா இருப்பாரா பெரியண்ணன்? கொலம்பியாவிடமிருந்து கொஞ்சம் நிலப்பரப்பை பிரித்து பனாமா என்ற சுதந்திர நாட்டை அறிவித்துவிட்டது. பனாமாவில் தனக்கு தலையாட்டும் பொம்மை அரசையும் அமைத்துவிட்டது. இதன் பிறகாக வெற்றிகரமாக கால்வாய் அமைக்கப்பட்டது என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு இருபத்திநான்காயிரம் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் செப்டெம்பர்  11 தாக்குதலில் இறந்த மூவாயிரம் பேரை முன்னிறுத்தி அமெரிக்கா போர்களை நிகழ்த்தி வருவதன் பின்னணியை புரிந்து கொள்ளவும், ஒரு பக்கம் உணவுக்காக நாடுகள் ஏங்கிக் கொண்டிருக்க தங்களது காருக்கு பெட்ரோல் போடுவது குறித்தான கவலைப்படும் நாடுகளின் கொடூர முகத்தை அறிந்து கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவக் கூடும். 

இந்தியா ஏன் அமெரிக்காவுக்கு அடிபணிகிறது என்பதையும், வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாரம் இந்தியாவில் சூறையாடப்படுவதை பற்றியும், எதனால் சொந்த மக்களை விடுத்து இன்னொரு நாட்டின் ஆர்வத்திற்கு அதிகார வர்க்கம்  தலையசைக்க வேண்டும் என  நமக்குள் எழும் அத்தனை கேள்விகளுக்கான பதில்களையும் இந்தப் புத்தகம் தந்துவிடும்.

Aug 9, 2012

சில்க் ஸ்மிதாவிஜயலட்சுமி என்னும் பெண் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதாவாக அறிமுகமாகிய 1979 ஆம் ஆண்டுதான் நந்தகோபால் பிறந்தான். ஈரோட்டுக்கு பக்கம் கவுந்தப்பாடியில் நந்து  பிறந்த போது ஸ்மிதாவுக்கு பத்தொன்பது வயது. ஸ்மிதாவாக மாறுவதற்கு முன்பாகவே விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகியிருந்தது. ஆனால் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். விஜயலட்சுமி சினிமாவில் கொடி பறக்கவிடப்போவதை பற்றி கனவு கூட கண்டதில்லை. ஆனால் அவள் விரும்பியோ விரும்பாமலோ அடுத்த பதினேழு வருடங்களுக்கு தென்னிந்தியாவில் ஸ்மிதாவின் ராஜ்ஜியம்தான். அதை சிலுக்கு ராஜ்ஜியம் என்றும் சொன்னார்கள்.

நந்தகோபாலின் அப்பா பொதுப்பணித்துறையில் ப்யூனாக இருந்தார். நந்து பிறந்த ஆறாவது நாளில் சில்க் ஸ்மிதாவின் வண்டிச்சக்கரத்தை சாந்தி தியேட்டரில் பார்த்தவர் கொஞ்சம் சொக்கித்தான் போனார். மனைவியிடம் ஒரு முறை சில்க்கை பற்றி புகழ்ந்து ’கோக்குமாக்காக’ வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பிறகு சில்க்கை பற்றி வீட்டிற்குள் வாய் திறந்து பேசுவதில்லை. 

ஆறு வயது வரைக்கும் மற்ற குழந்தைகளைப் போலத்தான் நந்துவும் வளர்ந்தான். அதற்கு பின்பாகவே அவனுக்கு சில்க் ஸ்மிதா அறிமுகமானாள். நந்துவுக்கு ஸ்மிதா அறிமுகமாவதற்கு முன்பாகவே கோடிக்கணக்கான ஆண்களுக்கு அறிமுகமாகியிருந்தாள். அதில் பெரும்பாலானோருக்கு சீக்ரெட் லவ்வராகவும் மாறியிருந்தாள். சீக்ரெட் லவ்வர் என்பதை விடவும் ‘சீக்ரெட் வைப்பாட்டி’என்பது இன்னமும் பொருந்தலாம். ஆனால் இதெல்லாம் கற்பனையில் மட்டுமே சாமானிய ஆண்களுக்கு சாத்தியமானதாக இருந்தது. 

வீடுகளில் அதிகம் டிவி யில்லாத அந்தக் காலத்தில் பஞ்சாயத்து போர்டு டிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க நந்துவை அவனது அம்மா தூக்கிப் போவாள். கவர்ச்சிகரமான பாடல்களை மறந்தும் கூட ஒளிபரப்பபடாத ஒளியும் ஒலியும் பாடல்கள் பெரும்பாலும் சைவமானதாகவே இருக்கும்.   நந்து ஒளியும் ஒலியும் பார்க்க போயிருந்த அன்று ஒரு நாளும் இல்லாத திருநாளாக சில்க்கி பாடல் ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதுவும் மூன்றாம் பிறையிலிருந்து “உருகுதே பொன்மேனி” பாடல். பெண்கள் டிவி நிலையத்தார் மீதும் சில்க்கின் மீது வசை பொழிந்தார்கள். ஆண்கள் பல்லிளித்துக் கொண்டிருந்தார்கள். நந்து சில்க்கை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை காமம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஸ்மிதா மீதான ஒருவித ஈர்ப்பு. பாடல் முடிந்த பிறகாக நந்து அழ ஆரம்பித்துவிட்டான். சுற்றியிருந்தவர்கள் என்ன செய்தும் அழுகை கட்டுக்குள் வரவில்லை. வயிற்று வலியாக இருக்கும், பசியாக இருக்கும், பூச்சி ஏதாச்சும் கடித்திருக்கும் என என்னனவோ பண்டிதம் பார்த்தும் பலனில்லை. இருட்டுக்குள் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போனதுதான் காரணம் என்று குத்தம் கண்டுபிடிக்க மாமியாருக்கு ஒரு சாக்கு கிடைத்தது. ஆனால் நந்து ஸ்மிதாவின் பாடலை திரும்பக் கேட்டுதான் அழுகிறான் என்று ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

நந்து எட்டாம் வகுப்பு போகும் போது சில்க் சினிமா உலகின் உச்சாணிக் கொம்பில் இருந்தாள்.  அப்பொழுதுதான் நந்துவின் வயதையொத்த மாணவர்கள் சைட் அடிக்கவும் பெண்களைப் பற்றியும் பேசத் துவங்கியிருந்தார்கள். காதலைப் பற்றி பேசும் போதெல்லாம் தங்களுக்கு விருப்பமான பெண்களை ராதா, ரேவதி போன்ற நடிகைகளுடன் ஒப்பிடுவார்கள். எந்தப் பெண்ணையெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை சில்க்குடன் ஒப்பிடுவார்கள். நந்து அவர்கள் மீது எரிச்சல் மிகுந்தவனாக நகர்ந்து போவான். இந்தச் சமயத்தில்தான் சில்க் மீதான நந்துவின் விருப்பம் அவள் மீதான பிரியமாக மாறியிருந்தது. அவளோடு மானசீகமாக உரையாடத் துவங்கியிருந்தான். அவள் அரைகுறையான உடைகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான்.

ஆனால் நந்துவின் பிரார்த்தனைக்கு சாமியும் சரி, சில்க்கும் சரி செவி சாய்க்கவில்லை. இருந்தாலும் சில்க்கின் புகைப்படங்களை நந்து சேகரித்துக் கொண்டிருந்தான். தன் அக்காவைப் போல புடைவையில், பக்கத்து வீட்டு பெண்ணைப் போல பாவாடை தாவணியில் இருக்கும் சில்க்கின் படங்களைத் தேடி எதுவும் கிடைக்காமல் கிடைத்ததை வாங்கி வைத்துக் கொள்வான். சினிமா நடிகர்களின் படங்களை வீட்டில் வைத்திருந்தாலே கடும் கோபம் கொள்ளும் நந்துவின் அப்பா இவன் நூற்றுக்கணக்கான சில்க்கின் படங்களை வைத்திருப்பதை பார்த்துவிட்டார். அத்தனை படங்களையும் தீயிட்டு எரித்ததோடு நில்லாமல் இவனை விளாசித் தள்ளிவிட்டார். நந்துவின் அம்மா தடுக்க முற்பட்டு மேலுதட்டை கிழித்துக் கொண்டாள். சில்க்கை தகாத வார்த்தைகளால் நந்துவின் அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். பெண்களின் அவமானச் சின்னமாக சில்க் மீது முத்திரை குத்தப்பட்டிருப்பதை நந்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் வலியோடு அமர்ந்து சில்க் ஸ்மிதாவுக்கு நந்து ஒரு கடிதம் எழுதினான். கடிதம் முடிகிறபாடில்லை. பக்கங்கள் நீண்டு கொண்டிருந்தது. அது ஸ்மிதாவின் மீதான காதலை வெளிப்படுத்தும் காதல் கடிதமாகவும் அவள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் கடிதமாகவும் தொடர்ந்தது. கடிதத்தை முடித்த போது சில்க்கின் முகவரி அவனிடம் இல்லை. ”நடிகை சில்க் ஸ்மிதா, சென்னை” என்று எழுதி தபால்பெட்டியில் போட்டுவிட்டு அது அவளை அடைந்துவிடும் என்று மனப்பூர்வமாக நம்பினான். அடுத்த மூன்று வருடங்களுக்கும் சில்க்கிடமிருந்து பதில் கொண்டு வருவார் என போஸ்ட்மேனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் விசிறிகள் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களின் அடையாளத்தை அறிவித்துக் கொண்டபோது நந்து மனதிற்குள் மட்டுமே சில்க்கை கொண்டாடிக் கொண்டிருந்தான். எல்லோருமே சில்க்கை கொண்டாடினார்கள் ஆனால் தங்களின் மனதிற்குள் மட்டும் வைத்துக் கொண்டார்கள். வெளிப்படையாக சில்க்கின் ரசிகர் என்று அறிவித்துக் கொள்ள கூச்சப்பட்டார்கள். 

நந்து +2 வந்திருந்த போது சில்க் சினிமாவில் நடிப்பது வெகுவாக குறைந்திருந்தது. ஸ்மிதாவின் மீதான நந்துவின் காதல் வெகுவாக பெருகியிருந்தது. காதல் கவிதைகளை நூற்றுக்கணக்கில் எழுதிக் குவித்தான். இன்னமும் சில்க் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது நந்துவுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் சில வருடங்களில் அவளை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்று முழுமையாக நம்பினான். 

காலாண்டுத் தேர்வு முடிந்து வகுப்புகள் ஆரம்பித்திருந்தன. வீட்டில் டிவி, சிடி ப்ளேயர் இடம் பிடித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமையன்று சில்க் நடித்திருந்த அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்துவிட்டு சில்க்கை நினைத்துக்கொண்டே நந்து தூங்கியிருந்தான். அடுத்த நாள் நந்துவின் தலையில் இடி மின்னல் எல்லாம் சேர்ந்து இறங்கியது. சில்க் இறந்துவிட்டதான செய்தி வந்தது. அவள் தூக்கிட்டு இறந்து போனாள் என்று அறிவித்தார்கள். எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டு தமது வேலைகளை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். அதுவரையும் ஸ்மிதாவை சதைப்பிண்டமாக பார்த்த ஊடகங்கள் அவளின் இறப்புக்கான காரணங்களை அறிந்து கொள்ள துடித்தன. சில்க்கை வைத்து புதுக்கதைகள் புனையப்பட்டன. இறந்தபின்னும் சில்க் ஸ்மிதா அவர்களின் வியாபாரப்பண்டமாக இருந்தாள்.

நந்து அத்தனை செய்திகளையும் வெறுத்தான். அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கூடத்தில் இருக்கும் அரசமரத்தின் கீழ் படுத்துக் கிடந்தான். சோறு தண்ணியில்லாமல் கிடப்பவனை சமாதானப்படுத்த அவனது நண்பர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். ஒரு வாரத்திற்கு பிறகாக பள்ளிக்குச் செல்லத் துவங்கினான். அப்பொழுதும் அவன் களையிழந்தவனாகவே இருந்தான்.

நந்துவுக்கு இப்பொழுது முப்பத்தி மூன்று வயதாகிறது. வேலைக்கு போகிறான். நிறைய கவிதைகள் எழுதுகிறான். திருமணம் செய்து கொள்ளவில்லை. வீட்டில் வற்புறுத்தி தோற்றுப்போனார்கள். சில்க்கின் மீது பைத்தியமாகச் சுற்றுகிறான் என்பதும் அவர்களுக்கும் தெரியும். சில்க்கை பற்றி நண்பர்களிடம் அரிதாக பேசுவான். "ஒவ்வொரு பெண்ணுக்கும் வயதாகிவிடும். என் சில்க் தேவதை. அவள் இறக்கும் போது எப்படியிருந்தாளோ அதே மாதிரியேதான் நான் இறக்கும் போதும் இருப்பாள்" என்பான். நந்து இதைச் சொல்லும் போதெல்லாம் அவனது வரவேற்பறையில் இருக்கும் சில்க் சிரித்துக் கொண்டிருப்பாள். அது அவனுக்கு மட்டுமே கேட்கிறது.

Aug 8, 2012

மலைச்சாமியின் கைகள்கவிதையின் தேவை என்ன?

அவசியமான கேள்விதான். இந்த கேள்விக்கு நிறைய எதிர்கேள்விகளை கேட்கலாம்.
  • அமத்தாவும் ஆயாவும் சேகரித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான விடுகதைகளுக்கான தேவை என்ன?
  •  சூடோகூ என்ற புதிர்களின் அவசியம் என்ன?
  •  குறுக்கெழுத்துப்போட்டிகள் உங்களுக்கு தருவதென்ன?
  •  கதைகளை எதற்காக படிக்க வேண்டும்?


இதில் எந்த ஒரு கேள்விக்காவது பதில் தெரியும் என்றால் அதே பதிலை “கவிதை எதற்கு தேவை” என்ற கேள்விக்கு பதிலாக்கிக் கொள்ளலாம். 

வாசிப்பின்பத்தைத்(Reading Pleasure)தவிர வேறெதையும் கவிதை தருவதில்லை. ஆனால் சரியான முறையில் கவிதையை வாசிப்பதால் கிடைக்கும் வாசிப்பின்பம் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலும்(கதை, நாவல், கட்டுரை) கிடைக்கும் இன்பத்தை விடவும் ஒரு படி மேல் என்பதை வேண்டுமானால் உறுதியாகச் சொல்லிவிட முடியும். அதே சமயம் புரிந்துகொள்ளாமல் கைவிட்டுவிட்டால் கவிதை ‘பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாதது’. கவிதைக்கான பில்ட் அப்பை இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

                                                               ***

கவிதை வாசகனுக்கு தரும் அனுபவத்தை இரண்டு வகையாக பிரித்துவிட முடியும்.

1) கவிதையில் கவிஞனின் அனுபவத்தை அப்படியே புரிந்து கொள்வது- (Core experience)
        கவிதையில் மரம் என்றிருந்தால் அது மரம் மட்டுமே. மலர் என்றிருந்தால் அது மலரை மட்டும் குறிக்கும். வாசகன் தன்னை அதிகம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

2) கவிதையின் அனுபவத்தை வாசகன் தன் அனுபவத்தோடு சேர்த்து புரிந்து கொள்வது- (Reader's space)
         இது கவிதை வாசித்தலில் இரண்டாவது படி. கவிஞன் மலர் என்று குறிப்பிடுவதை மலர் என்று மட்டும் புரிந்து கொள்வதில்லை. மலர் மலரையும் குறிக்கலாம், பெண்ணையும்                 குறிக்கலாம், குழந்தையையும் குறிக்கலாம், மென்மையையும் குறிக்கலாம் அல்லது வேறெதையும் குறிக்கலாம்.

இந்த புரிதல் வாசகனின் அனுபவம் சார்ந்தது. உதாரணமாக ”விழுந்துவிட்டேன்” என்ற ஒற்றைச் சொல்லை நீங்கள், நான் மற்றும் நம் நண்பர் ஆகியோர் ஒரே நேரத்தில் வாசிக்கிறோம். நான் முந்தாநாள் பைக்கிலிருந்து கீழே விழுந்ததை நினைத்துக் கொள்ளக் கூடும். நீங்கள் சென்ற வருடம் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடும். நமது நண்பர் யாரோ ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டதை யோசிக்கக் கூடும். 

ஒரே சொல்தான்- ஆனால் வாசிப்பவரின் அனுபவம் மற்றும் அந்தக் கணத்தில் அவரது மனநிலையை பொறுத்து சொல் வெவ்வேறு பரிணாமத்தை அடைகிறது. 

வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு பரிணாமத்தை ஒரே கவிதை கொடுக்க வேண்டுமானால் கவிதையில் ஒரு சூட்சுமம் இருக்கும். கவிஞன் தான் சொல்ல விரும்புவதை ’இதுதான்’ என்று  Explicit ஆக சொல்லாமல் விட்டுவிடுவது. இந்தத் தன்மை நவீன கவிதையில் மிக முக்கியமானது. Explicit ஆகச் சொல்லிவிடும்போது கவிஞன் எதை நினைத்து எழுதுகிறானோ அதையேதான் வாசகனும் புரிந்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறான். அப்படியில்லாத பட்சத்தில் வாசகன் தன் அனுபவத்திலிருந்து வேறொரு கோணத்தில் அந்தக் கவிதையை புரிந்து கொள்ள முடியும். 

வாசகன் யோசிப்பதற்காக கவிதைக்குள் உருவாகும் இத்தகைய இடம் வாசக தளம் (Reader's space)ஆகிவிடுகிறது.
                                  

                                                                ****

மலைச்சாமியின் கைகள்

தாழ் பழுதடைந்த
என் அறைக்குள் நுழைந்த
நள்ளிரவுக் காற்று
இருளில் நெளிந்துகொண்டிருந்த தண்ணீர்க் குடுவையை
நிலை இழக்கச் செய்தது
கலைந்து விழித்தேன்

அனிச்சயாக எழுந்த என் கைகளைப் பார்த்தேன்
மலைச்சாமியின் கைகளாக இருந்தன
மயிர் அடர்ந்திருந்த மார்பும் அவனுடையதாக
தோள்களும் அப்படியே

நான் யாரென் உறுதிசெய்ய முடியாத நிலையில் 
பதற்றம் நீடிக்கிறது.

இந்தக் கவிதை மண்குதிரையின் ”புதிய அறையின் சித்திரம்” என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. (காலச்சுவடு வெளியீடு)

அறைக்கதவின் தாழ்ப்பாள் பழுதடைந்திருக்கிறது. அதனால் கதவு சாத்தப்படவில்லை. அறைக்குள் தண்ணீர் குடுவை இருக்கிறது. நள்ளிரவில் அறைக்குள் புகுந்த காற்றினால் குடுவையின் நீர் சலனமுறுகிறது- இது கவிதை உருவாக்கும் காட்சி.

இந்தச் சலனத்தினால் கவிஞன் விழித்து தனது கைகளை பார்க்கிறான். அது மலைச்சாமியின் கைகளாக இருக்கிறது. மார்பும் தோளும் கூட மலைச்சாமியினுடையதாக இருக்கின்றன. கவிஞன் குழப்பமடைகிறான்.

இது கவிதையின் நேரடி புரிதல். 

இந்தக் கவிதையை வேறு எப்படியெல்லாம் புரிந்து கொள்ளலாம்?

1) கவிஞன் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறான். மலைச்சாமி சகோதரனாக, நண்பனாக ஏதேனும் ஒருவிதத்தில் கவிஞனுக்கு நெருக்கமானவன். விழிப்பிற்கு முன்பாக மலைச்சாமியை கவிஞன் தனது கனவில் நினைத்திருக்கக் கூடும்.  தூக்கக் கலக்கத்தில் கவிஞனின் கைகளும் மார்பும் தோளும் மலைச்சாமியை நினைவுபடுத்துகின்றன

2) மலைச்சாமியும் கவிஞனோடு தூங்கிக் கொண்டிருக்கிறான். தூக்கக் கலக்கத்தில் மலைச்சாமியின் கைகளை, மார்பை, தோள்களை தடவிக் கொண்டு அவற்றை தன்னுடையதாக கவிஞன் நினைத்துக் கொள்கிறன்.

3) மலைச்சாமியும் கவிஞனும் வேறில்லை. இரண்டு பேரும் ஒருவரே.

4) இவை எதுவுமே இல்லாமல் நீங்கள் ஒன்றை கற்பனை செய்கிறீர்களா? சூப்பர். அதுவும் சாத்தியம். 

இப்பொழுது நம் புரிதலில் இருந்து கற்பனைக் குதிரை ஒரு கதையை நோக்கி ஓடித் துவங்குகிறது.

இது கவிதை வாசித்தலின் இரண்டாவது படியை(Reader's space) புரிந்து கொள்ளும் முயற்சி. இப்போதைக்கு இந்த யோசனைகளில் கவித்துவமான(Poetic) புரிதல் எதுவும் தேவையில்லை. லாஜிக்கலாக கவிதையை புரிந்து கொள்வோம். பிறகு கவித்துவத்தை கண்டெடுக்க முயற்சிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
                         கவிதையை புரிதல்

குறிப்பு:
ஏதேனும் குறிப்பிட்ட கவிதைகளைப் பற்றி விவாதிக்க விரும்பினால் மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.