Jul 22, 2012

சீண்டல்


அலுவலகத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு எங்களுடன் வேலை செய்யும் இன்னொருவரைக் கண்டாலே வேப்பங்காய்தான். அவர் என்ன செய்தாலும் குறை கண்டுபிடிப்பதும் சீண்டுவதமாகவே இவருக்கு பொழப்பு ஓடிக் கொண்டிருக்கும். தன்னை நக்கல் அடித்தாலும் சரி, மேனேஜரிடம் போட்டுக் கொடுத்தாலும் சரி அவர் இவரைக் கண்டு கொண்டதில்லை. 

அவரைப் பற்றி மேனஜேரிடம் ஒரு முறை போட்டுக் ’கொடுத்த’போது மேனேஜர் டென்ஷனாகிவிட்டாராம். முன்னேறுவதற்காக கிட்டத்தட்ட எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் குனிகிறார்கள்; காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள். நீங்கள் வளையாதவராகவும் அடுத்தவர்களிடம் சமரசம் செய்துகொள்ளாதவராகவும் இருக்கும் வரை சந்தோஷம்தான். நீங்களும் அதே தில்லாலங்கடி வேலைகளைச் செய்துவிட்டு அடுத்தவன் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று ‘பன்’ கொடுத்திருக்கிறார். இருந்தாலும் வயிற்றெரிச்சலார் மாறியதாகத் தெரியவில்லை.

வயிற்றெரிச்சலார் உங்களை இப்படி சீண்டுகிறாரே ஏன் கண்டுகொள்வதில்லை என வாய் இருக்க மாட்டாமல் கேட்டுவிட்டேன். லெக்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இவர் செய்த வேலையை வயிற்றெரிச்சலார் ஒரு முறை திருடிக் கொண்டாராம். ஆனால் இவர் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்த குற்றவுணர்ச்சியிலோ அல்லது எங்கே இவன் நம்மைப்பற்றி டமாரம் அடித்துவிடுவானோ என்ற பயத்தினாலோ என்று தன்னை சீண்டிக் கொண்டிருப்பதாக அவர் பேசிக் கொண்டேயிருந்தார். இப்படி அடுத்தவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது வம்பு பேசுவதாக ஆகிவிடக் கூடும் என நழுவ வேண்டியதாகிப்போனது.

இவருக்கு ஒரு ப்ரோமோஷனும் கிடைத்துவிட்டது. வயிற்றெரிச்சலாரை பற்றி கேட்கவும் வேண்டுமா. வயிறு பற்றியெரியத் துவங்கியது. ஃபயர் சர்வீஸ் கூட தேவைப்படலாம் என்று அலுவலகத்தில் நக்கல் அடித்துக் கொண்டார்கள். இதன் பிறகாக அலுவலக மீட்டிங்களில் வெளிப்படையாக அவரைச் சீண்டத் துவங்கினார். அப்பொழுதும் இவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம் வயிற்றெரிச்சலார் மீட்டிங்கில் எல்லை மீறிப்போன போது இவர் யாருக்கோ ஃபோன் செய்து சிரித்துக் கொண்டிருந்தார். டென்ஷனான வயிற்றெரிச்சலார் வேறு வழியில்லாமல் அமைதியாகிப் போனார்.

அடுத்த நாள் நோட்டீஸ் போர்டில் “பொன்மொழிக் கார்னர்” என்ற பகுதியில் பின்வருமாறு எழுதியிருந்தது:

”ஒருவன் உங்களைப் பார்த்து வயிறு எரிந்து கொண்டிருக்கும் போது அதை சைலண்டாக அனுபவித்துப்பாருங்கள். அதைவிட வேறு பெரிய சந்தோஷம் இந்த உலகில் இல்லை என்று தோன்றும்”

3 எதிர் சப்தங்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அட... இப்படி கூட சந்தோசப் படலாமா ?(த.ம. 1)

Ramani said...

ஆஹா..நல்ல பழமொழியாகவும்
அவசியம் கடைபிடிக்கவேண்டிய
மொழியாகவும் இருக்கிறதே
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

//ஒருவன் உங்களைப் பார்த்து வயிறு எரிந்து கொண்டிருக்கும் போது அதை சைலண்டாக அனுபவித்துப்பாருங்கள். அதைவிட வேறு பெரிய சந்தோஷம் இந்த உலகில் இல்லை என்று தோன்றும்”///

மிக மிக உண்மை