Jul 5, 2012

தீபம்- வண்டுகளின் காதல் தேவதை


இலங்கையில் வாழும் கவிஞர் அகமது பைசாலின் கவிதைத் தொகுப்பு “நிலத்தோடு பேசுகிறேன்” இந்த மாதம் புது எழுத்து வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

கவனப்படுத்த வேண்டிய படைப்பாளர்களை தனது அத்தனை சிரமங்களுக்கும் இடையில் கவனப்படுத்தும் புது எழுத்து மனோன்மணி வழக்கம்போலவே அகமது பைசாலையும் கவனப்படுத்துகிறார்.

புது எழுத்துக்கும், அகமது பைசாலுக்கு, புது எழுத்துக்கு பைசாலை அறிமுகப்படுத்திய கவிஞர் றியாஸ் குரானாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

’நிலத்தோடு பேசுகிறேன்’ தொகுப்புக்கு நான் எழுதிய சிறுகுறிப்பு இது. தொகுப்பில் முன்னுரையாக இணைக்கப்பட்டிருக்கிறது.  அதற்காக அகமது பைசாலுக்கும், மனோன்மணிக்கும் நன்றி.

இக்குறிப்பு தொகுப்பிற்கான நல்ல அறிமுகத்தை தருமெனில் மிகுந்த மகிழ்ச்சி.

  ***

தீபம்- வண்டுகளின் காதல் தேவதை



       கவிதை உருமாறிகொண்டே இருக்கிறது. தனக்கான வடிவம், மொழி, பாடுபொருள், வெளிப்படுதன்மை எனத் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் கவிதையில், கவிதைக்கான வாசகன் ‘உண்மை’ என்ற அடிப்படையான அம்சத்தின் மூலமாகவே கவிதையோடு நெருக்கமாகிறான் என நம்பலாம். இருபது வருடங்களுக்கு முன்பாக அறிவியல் தொழில்நுட்பம் தன் கோரமுகத்தை காட்டத் துவங்கியிருக்காத சமயத்தில் மாற்றங்கள் மெதுவானதாகவும் ஓரளவு கணிக்கக் கூடியதாகவும் இருந்தன என்று யூகித்துக் கொள்கிறேன். சூழலிருந்து அந்நியமாதலும், சுய அடையாளமிழப்பின் அவஸ்தைகளும் கவிதைகளில் பெருமளவில் பதிவு செய்யப்பட்டதை இந்தக் காலகட்டத்தோடு சேர்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. 

தொழில்நுட்பம் தன் அகோரப்பசிக்காக வாயைத் திறக்கத்துவங்கியதற்கு பிறகாக இன்றைய தினம் வரையிலும் கவிதை எதிர்கொள்ளும் நெருக்கடிகளும், கவிஞனின் சிக்கல்களும் பன்மடங்கு அதிகரித்துத்தானிருக்கின்றன. இவை எளிய மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு துளியும் சளைக்காதவை அல்லது அதைவிடவும் கடுமையானவை. சமூக வலைத்தளங்கள், மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் தொடர்பியல் சாதனங்கள், வாழ்வியல் முறைகள் என ஒவ்வொன்றும் தம் கரங்களைக் கோர்த்துக்கொண்டு கவிதையை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. போலிகள், வெற்றுப்புலம்பல்கள் அல்லது தட்டையான சொல்முறைகள் ஆகியவற்றுக்குள் பகீரத பிரயத்தனங்களினூடாக கவிதைக்கான வாசகன் நகர்ந்து கொண்டிருக்கிறான்.

அகமது பைசால் அனுப்பியிருந்த கவிதைகளை மட்டுமே கடந்த இருபது நாட்களாக வாசித்து அவற்றோடு புழங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரே கவிஞனின் கவிதைகளில் புழங்குவதில் சுவாரசியம் இருக்கிறது. கவிதைகள் மனதோடு நெருக்கமானதாக இருப்பின் இன்னமும் சுவாரசியம் கூடி விடுகிறது. இந்த சுவாரசியம் கவிதைகளின் வழியாக கவிஞன் என்ற ஆளுமையை புரிந்துகொள்வதில் வாசகனுக்குள் முனைப்பை உருவாக்குதலை எளிதாகச் செய்துவிடுகிறது. 

தன் கவிதைகளில் புனைவை உருவாக்குகிறார் அகமது பைசால். புனைவுகள் குறுகுறுப்பை உருவாக்கக் கூடியனவாக இருக்கின்றன. அகமது பைசாலின் கவிதைகளில் இடம்பெறக்கூடிய புனைவுகள் நிகழவியலா புனைவுகள்(Non-Realistic). நிகழவியலா புனைவுகள் உருவாக்கக் கூடிய வெற்றிடம் வாசகனுக்கான இடம் (Reader's space) ஆக அமைந்துவிடுவது இந்தக் கவிதைகளின் பெரும் பலமாகத் தோன்றுகிறது. இந்த வாசகவெளியில் வாசகனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் பைசால் அளிக்கிறார்.

ஒரு யானை/முதுகில் பெரும் பூமியைச் சுமந்து கொண்டு போகிறது” ”நான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்/ அது பராக்குக் காட்டி என்னை கூட்டிச் செல்கின்றன” என்பன போன்ற வரிகளை உதாரணமாக்க முடியும். மேற்சொன்ன கவிதை வரிகளில் இரண்டாவது வரி ”திசைகள்” என்னும் கவிதையில் இடம் பெறுகிறது. இந்தக் கவிதையின் நாயகன் தான் செல்லும் பாதையில் எதிர்ப்படுபவர்களிடமிருந்து அவரவரின் திசைகளைப் பெற்றுக் கொள்கிறான். அவற்றை மொத்தமாக சுமந்து சென்று கடலில் கரைத்துவிடுகிறான். கவிதையில் வரக்கூடிய இன்னொரு மனிதன் கடலில் தனது கால்களை நனைத்துவிட்டு வெளியேறும் போது புதிய திசைகளை தனது கால்களில் ஒட்டிக் கொள்கிறான் என்று கவிதை முடிகிறது. கவிதை முடிந்த பிறகும் கடலுக்குள் அடங்கியிருக்கும் கதைகளைப் பற்றிய எண்ணங்களை இந்தக் கவிதை தூண்டுகிறது. 

கடலைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களின் திசைகளை கடலினுள் கரைத்துவிடுகிறார்கள். கடல் அத்தனை திசைகளையும் தனக்குள் அமிழ்த்திக் கொண்டு திசையற்றதாகவும், திசைகள் குறித்த எந்தவிதமான பிரக்ஞையுமற்றதாகவும் தன் நீல அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திசைகளின் மீதான கடலின் தீர்க்கவே முடியாத பசி பற்றிய சிந்தனையை இந்தக் கவிதை உருவாக்கியது. இனி எப்பொழழுது கடலை பார்த்தாலும் இந்தக் கவிதை நினைவுக்கு வரக்கூடும். நண்பனிடம் பெற்றுக் கொண்ட வைத்தியசாலைக்கான திசை, காதலியின் இல்லம் அமைந்திருக்கும் திசை, சீனத்தில் திசையைக் கரைக்கும் இன்னொருவன் போன்றவை இக்கவிதையில் கிளை புனைவுகள். கவிதை வாசித்த கணத்திலிருந்து கிளை புனைவுகள் வெவ்வேறு மனநிலையை உருவாக்கி அலைவுறச் செய்து கொண்டிருக்கின்றன. கவிதை என்ற உலகத்திலிருந்து எண்ணங்கள் என்ற இன்னொரு உலகத்திற்குள் வாசகனைத் தள்ளிவிடுவது ஒரு நுட்பம். இதைத்தான் ’வாசகவெளி’ எனக் குறிப்பிடுகிறேன்.  

அகமது பைசால் தனது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்த போது அவரது பெயர் அறிமுகமாகியிருக்கவில்லை. கவிதையை வாசிப்பதற்கு கவிஞனின் பெயர் அவசியமில்லை என்பதை எனக்கு நானே நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இந்தக் கவிதைகளை எடுத்துக் கொள்ள முடிந்தது. இரு ஆத்மாக்களுக்கிடையில் அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையை கவிதை நிகழ்த்துகிறது என நம்பிக்கொண்டிருப்பவாக இருக்கிறேன். இரு ஆத்மாக்கள் என்பதனை கவிஞன்xவாசகன் என்ற இருமைக்குள்ளாக மட்டுமே அடக்கிவிட வேண்டியதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுவிடலாம். மெளனித்த அந்தரங்கமான பரிபாஷனை நிகழ்த்தும் எந்தக் கவிதையும் வாசகனளவில் வெற்றியடைந்த கவிதைகள்தான். இதை அகமது பைசாலின் கவிதைகள் மிக இயல்பாக நிகழ்த்துகின்றன. சில குறைகள் தொகுப்பில் உண்டு. உதாரணத்திற்கு அகப்பை என்ற தலைப்பில் இருக்கும் சில தட்டையானவைகளை தொகுப்பாக்கும் போது நிராகரித்திருக்கலாம் என மனம் விரும்புகிறது. 

மற்றபடி கவிதைக்கான முன்னுரை என்பதன் அவசியம் குறித்து எனக்கு பெரும் சந்தேகம் இருக்கிறது. முன்னுரை, அணிந்துரை என்பனவற்றில் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளைப்பற்றி எழுதுவது “நான் இந்தக் கவிதைகளை புரிந்து கொண்ட விதத்திலேயே நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்வதாக அமைந்துவிடக் கூடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது. விரிவான அலசல்களுக்கான இடத்தை விமர்சனங்கள் அளிக்க வேண்டும் எனவும், தொகுப்பின் முன்னுரை சில கோடுகளைக் காட்டினால் போதும் எனவும் தோன்றுகிறது. அதை எனது இந்தக் குறிப்பு செய்திருந்தால் பெரும் மகிழ்ச்சி.

எந்தவிதமான முன்முடிவுகளும், எதிர்பார்ப்புகளுமில்லாமல் கவிதைகளை வாசிப்பதே அந்தக் கவிதைகளுக்கு வாசகனாகச் செய்யக்கூடிய முறைமை என்று நம்புகிறேன். இதன் காரணமாகவே அகமது பைசாலின் கவிதைகளில் இருக்கக் கூடிய சில குறைகளை தொகுப்பின் முன்னுரையில் எழுத வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். 

அதே சமயம் தமிழ்க் கவிதைச் சூழலில் கவனம் பெறத்தகுந்த தொகுப்பாக பைசாலின் கவிதைகளை முன் வைக்கிறேன்.


நன்றி.

பிரியங்களுடன்,
வா.மணிகண்டன்.
கோடைகாலம்-2012