Jun 30, 2012

பறவளவுருக்குள்ள பறையனுகளுக்கு ஏகப்பட்ட திமிரு ஆயி போச்சு”

“பேரணி நடத்துறானுகளாமா”

“ராசுக்கவுண்டருக்கு இருக்குற செல்வாக்குல அவனுகள அடக்கினாத்தான் உண்டு. இல்லாட்டி கால்மேல கால் போட்டுட்டு நம்மகிட்ட பஞ்சாயத்து பேசுவானுக”

“கவுண்டர் இருக்கிற அந்தஸ்துக்கு சமானமா அவுரு பையன் இல்லை”

“பற வளவுக்கு போய்ட்டு வந்தா தொலையட்டும்ன்னு உட்டுடலாம் ஒருத்தருமில்லாதப்போ பறப் பசங்களை ஊட்டுக்கு கூட்டிட்டு வர்றானாம்”

                                                                ***

“பறப் பசங்க கூட சுத்தறதும் உங்க அய்யனுக்கு சுத்தமா புடிக்கல கண்ணு”
“ம்ம்ம்”

“தொரை வாயத் தொறந்து பேச மாட்டாரோ”

“நம்பியூர் பாலாஜி கல்யாண மண்டபத்தை அவுங்களுக்கு ஏன் வாடகைக்கு தர மாட்டேங்குறாங்க?”

“லட்சக்கணக்குல செலவு செஞ்சு மண்டபத்தை கட்டி சக்கிலிக்கும் பறயனுக்கும் கொடுத்தா நாளையும் பின்ன எந்த குடியானவன் மண்டவத்துக்கு வருவான்?”

“என்னதுக்கு வெட்டி பேச்சு? இதோட நிறுத்திக்ககுற. அவ்வளவுதான் சொல்லுவேன்”

“ஊருக்குள்ள மானம் போவுது”

“உம்பையன் இனிமே பறவளவு சக்கிலி வளவுக்கு போறான்னு தெரிஞ்சா கொன்னுபோடுவேன் இல்லன்னா நான் நாண்டுக்குவேன்”

“வெள்ளிக்கிழமயும் அதுவுமா ஏன் அவசகுணமா பேசறீங்க நம்ம பையன்தான, நாஞ் சொல்லுறேன் போங்க”
                       
                                                                      ***

“மினிஸ்டரு ஆர்.டி.ஓவுக்கு போன் பண்ணியிருக்காரு. கை மீறுனா சுடச் சொல்லுறேன்னு ஆர்.டி.ஓவும் சொல்லிட்டாரு”

“எம்.எல்.ஏ கிட்ட ராசுக்கவுண்டரு பேசிட்டாப்ல. புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் பொம்பளகிட்டயும் பேசியாச்சு. அதுவும் நம்ம சாதிப்புள்ளதான்”

“இதெல்லாம் நம்மளக்குள்ளயே இருக்கட்டும். நாலஞ்சு பசங்கள சுட்டுத்தள்ளுனாத்தான் அடங்குவாங்க”

“ஊருக்குள்ள கலவரமா கெடக்குது. காத்தால இருந்து உம்புள்ள எங்க போனான்?”

“ஒண்ணுஞ் சொல்லலீங்களே”

“வக்காரோளி, சொன்னா கேக்காம பறயனுக கூட சேந்து சுத்த போய்ட்டானா? சுட்டாங்கன்னா சாவுட்டும் புள்ளையே இல்லைன்னு நெனச்சுக்குறேன்”

“அய்யோ”

“புள்ளைய வளத்துன லட்சணத்துக்கு ஒப்பாரி வெக்குறியா.....கலத முண்ட”

“அளுக்குளியில நாலு பசங்க ரொம்ப ராங்கு பண்ணியிருக்கானுக கை வெச்சுட்டானுகன்னு கேஸ் போட்டு அந்த இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் பண்ணிடுச்சாமா”

“கடத்தூர் ஸ்டேஷன்ல வெச்சு அடிச்சதுல ஒரு பறப்பையன் டிக்கெட் வாங்கிட்டான். சாவட்டும்”

“வாங்க கவுண்டரே...ஸ்டேஷன் பக்கம் வந்திருக்காப்ல”

“கவுண்டரே உங்க பையன அரெஸ்ட் பண்ணுவமா? அவுரு இங்கே வரலை... வேற எங்கேயாச்சும் போயிருப்பாப்ல..நாங்களே தேடி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் நீங்க போங்க”

“அன்புள்ள அம்மாவுக்கு, பறையன் சக்கிலி என்று வெறுப்பை உமிழும் அய்யனுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. நான் தெளிவாக இருக்கிறேன். அவருக்கு ஆகாத சாதியிலேயே ஒரு பெண்ணோடு செல்கிறேன். திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன்..................”

Jun 29, 2012

கூச்சம்கொள்ளச் செய்யும் கவிதைகள்மணி.

ரொம்ப வருடங்களுக்கு முன்னால் எழுதியது. வேறு எதையோ தேட கிடைத்தது.

ந.பெரியசாமி.

***


கண்ணாடியில் நகரும் வெயில் தொகுப்பிற்கு கவிஞர் பெரியசாமி எழுதிய மதிப்புரைக் குறிப்பு.
******
கூச்சம்கொள்ளச் செய்யும் கவிதைகள்

ஒரு கவிஞன் வாழும் சமகாலத்தின் முகத்திற்கும் முதுகுக்குமான தொடர்பை மொழிவழியில் கண்டடைகிறான். அதில் தன் விடுதலைக்காக மட்டுமின்றி தேச விடுதலைக்கான தேடலையும் மேற்கொள்ள வேண்டியிருக்கு. பெருத்த மனக்குழப்பங்களோடு ததும்பும் கண்ணீரில் வா.மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெளிச்சம்’ தொகுப்பு பயணிக்கிறது. இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் குழந்தைகள் உலகம், மரணம், காதலென பரவியுள்ளது.

கணக்கற்ற கவிதைகளையும் கதையாடல்களையும் உலகெங்கும் தன் வெளிச்சத்தில் பிதுக்கியபடி இருக்கும் நிலாவை ‘நிலவு மிதந்த சாக்கடை’ கவிதையில், நிலாப் பாட்டியை ‘வீதி நுனிச்/சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்’ எனும் வரிகளின் மூலமாக வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியாமல் மழுப்பலான பதிலாலோ, அதிகாரத்தை கையாண்டோ சமாளித்து விடுவதை ‘கடலுக்குள் புதைந்த கேள்விகள்’ கவிதையில் கடலுக்குள்/மிதக்கின்றன/ஆயிரம் கேள்விகள் கேட்பாரற்று என முடித்திருப்பார். குழந்தைகள் வியத்தகு கற்பனைகள் நிரம்பியவர்கள் என்பதை கடவுளும் ஸ்ரீநிதியும்’ கவிதையில் அழகிய கதையாடலை வாசிப்பவர்களின் நினைவில் ஊன்றிவிடுகிறார். கடவுள் ஒரு வெள்ளைத்தாளில் புது உலகை படைக்க நினைத்து வரைய முற்பட்டு முடியாது போக ஸ்ரீநிதியிடம் கொடுத்துவிடுவார், அவளோ வெற்றுத்தாளில் அம்மா, ஆடு, இலை வரைந்து அம்மா வேடிக்கை பார்க்க ஆடு இலையை தின்றது என முடிந்திருப்பதை கடவுள் பார்க்க ஆடு தின்ற மீதி இலை தாள் முழுவதும் விரவிக்கிடக்க இனி புது உலகம் இல்லை எனும் செய்தி பரவியது என முடியும் கவிதை. நாம் அம்மா, ஆடு, இலையை வாசித்தும் கேட்டும், கற்றும் கொடுத்திருக்கிறோம் இனி இம் மூன்று வார்த்தைகளும் இக்கதையாடலை நினைவூட்டும். ‘எந்தப் புகாரும் இல்லை’ கவிதை குழந்தைகள் எல்லாவற்றையும் அவர்களின் மனவோட்டத்தில்தான் அணுகுவார்கள் என்பதை காட்டுகிறது.

காதல் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். ஒவ்வொருவருக்குமான தனித்த அனுபவம் அலாதியானது. வாழ்வின் எல்லா கணங்களிலும் காதலியின் நினைவோடு இருப்பவனுக்கு அதை சொல்வது எவ்வளவு கடினம் என்பதை ‘பிரியம் படிந்த வாக்குமூலம்’ கவிதையில் உனை நினைக்காத நேரத்தை மட்டும் சொல்வது எனக்கு எளிது என்கிறார். இப்படியான வாழ்முறையில் இருப்பவனுக்கு பிரிவு எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கு.

ஒரு அழுகை, துயரம், வெறுமையென ஒற்றை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதென்பதை ‘போன்றில்லாத பிரிவு’ கவிதையிலும், அவளற்ற வெறுமையை என்ன செய்வதென்ற பித்த நிலையை ‘நீ இல்லையென்றும் வெறுமை’ கவிதையிலும், எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தின் தனிமையின் எச்சம் நினைவின் சாலையெங்கும் பறவையின் எச்சமாக உதிர்ந்து கிடக்கும் அவஸ்தையை ‘யாரும் பாதிக்காத கால்தடங்கள்’ கவிதையிலும், பிரிவை விடவும் காதல் புறக்கணிப்பு அவஸ்தைமிக்கது. கண்ணீர், விசும்பல், நெஞ்சுக்குழியெங்கும் வியாபித்திருக்கும் கசப்புச்சுவையை ஒத்ததென்கிறார், ‘‘புறக்கணிப்பின் கசப்புச் சுவை’’ கவிதையில் கருணையின் நஞ்சை/கொஞ்சம் பருக விடுவென கேட்கும் ‘அன்பின் சாட்சியோடு’ கவிதை ‘முத்தத்தின் பழைய ஈரம்‘ கவிதையில் வெட்டப்பட்ட மரத்தின் கசிவென/கசக்கிறது/நம் முத்தத்தின்/பழைய ஈரம் என முடிவுறுகிறது.

காதல் இன்பத்திலும் கொல்லும் அவஸ்தையிலும் கொல்லும் என்ற உண்மையின் உயிர் கவிதைகளில் பரவிக்கிடக்கிறது.

ஆசை, பயம் இன்றி வாழ்வு உண்டா? மரண பயமின்றி யார் இருக்கிறோம். மரணம் பெருத்த மௌனத்தையும், வரலாற்றையும் கொண்டது. பிற சொற்களை சொல்லி எளிதில் கடந்து விடுவதைப்போல ‘மரணம்’ என்ற சொல்லை வெறுமனே சொல்லி கடந்துவிட முடியாதென்பதை ‘‘மரணத்தை எப்படி சொல்வீர்கள்’, கவிதையிலும், நமக்கேன் வம்பு என பார்த்தும் பார்க்காதவாறு புறக்கணித்த அணாதை பிணங்களை கண்முன் ஊசலாட விடுகிறார் ‘அநாதமையின் நிகழ் வரலாறு’ கவிதையில்.

மயானத்தின் சூழல் எந்த பிண வரவையும் எவ்வித சலனமின்றி இயல்போடு ஏற்றுக்கொள்வதை ‘ஸ்தம்பிதமில்லாத மயானம்’ கவிதையிலும், பேருந்து அல்லது ரயிலில் அடிப்பட்டு செத்துக் கிடப்பவர்கள் குறித்து பயணிப்பவர்கள் தங்களின் எல்லையற்ற யூகங்களை அவர்களை எட்டிப் பார்த்துவிட்டு கூறிக்கொண்டிருப்பதை கேலி செய்கிறது ‘விடைகளற்ற புதிர்கள்’ கவிதை. மலர்தனின் கணிதம்/சிகரெட் புகையின் ஓவியம்/உறங்கும் குழந்தையின் புன்னகையென எளிய சூத்திரம்தான் மரணம் என்கிறார் ‘மரணச் சூத்திரம்’ கவிதையில். இக்கவிதையின் நீட்சியை ‘எளியதொரு மரணத்திற்கான காத்திருப்பு’’, உயிர் பிரிதலின் ஓசை’ கவிதைகளில் காணமுடிகிறது. அச்சம் சூழ எட்டிப்பார்க்கும் பிணவறையை ‘பிசாசுகளின் விடுதி’ கவிதையிலும் உள்ள மோனநிலை அவஸ்தையை நமக்கும் தொற்றிக்கொள்ள செய்கிறார்.

மரணம் தன் சார்ந்து நிகழ்கையில் பெரும்வலி நிரம்பியும், வேறானவர்களுக்கு நிகழ்கையில் செய்தியாக மாற்றம்கொள்வதன் யதார்த்தம் மரணம் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

மழை ஓய்ந்த பின் இரவின் அமைதியை கொண்டாடப்பட வேண்டிய மரணம் என்கிறார் ‘மழை ஓய்ந்த இரவு’ கவிதையில்.

நகரங்களின் தெருவோரம் பஸ், ரயில் என தான் விற்கும் பொருளை தன் வார்த்தைகளில் சொற்களை நதியென அலைவுறச் செய்து விற்பனை செய்யும் லாவகம் மிக்க சாதூரியத்தை ‘வண்ணக் கைக்குட்டை விற்பவன்’ கவிதையில் ஓவியமாக்கியுள்ளார்.

நம்மில் இருந்து பிரியும் நிழல், நாம் ஆச்சரியம் கொள்ள பெருத்தும் சிறுத்தும் அலைவுறுவது குறித்த ஆய்வில் நிழலோடு வி¬ளாயடி சலித்து தோற்ற குழந்தையாகத்தான் நிற்கிறோம் என்கிறார் ‘நிழல் குறிப்பு’ கவிதையில்.

கவிதையின் பாடுபொருள்கள் பஞ்சமற்று கிடக்கிறது நம் கண்முன். தினசரி தோற்றம் கொள்ளும் விசயம்தான் யாராவது கவிதையில் சுட்டிக்காட்ட சுரணை வருகிறது. சுண்ணாம்பை உதிர்த்து ஓவியங்களை வரைந்து நிற்கும் சுவர்கள் குறித்த ‘சுவரில் ஊறும் கதைகள்’ கவிதை நாம் பார்த்த சுவருக்கும் நமக்குமான வாழ்பனுவங்களை நினைவில் தெறிக்கச் செய்கிறது.

நல்ல நேர்த்தியான வெளிப்பாடு, விளம்பர பலகையில் படுத்துக்கிடக்கும் பெண்ணிற்கும் பார்வையாளனுக்குமான ஈர்ப்பு குறித்து ‘விணைல் காதல்’ கவிதை.

காலமாற்றத்தில் நாம் இழந்து நிற்கும் பல அனுபவங்களை நிழலென தொடரச் செய்து விடுகிறது. ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதை.

கண்களில் சாந்தம் பொங்க கனவற்று வேட்கையற்று நிதானமாக நகர்வலம் வரும் பைத்தியக்காரன்களையும் ‘மேலும் ஒரு பைத்தியக்காரன்’ கவிதையில் ‘ஆயிரம் காரணங்கள்/அவனுக்கு என தன் கவனிப்பை பதிந்துள்ளார்.

வெகு நாட்களாய் கூட்டிலிருந்த குருவி தன் நிழலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறது. கூடு திறக்க பறந்தலின் சுகத்திற்காக உயரம் செல்ல நிழல் சிறிதாகிறது. தன் காதலை இழந்துவிடுவோமோ என பயத்தால் தன்னை கல்லாக்கிக்கொண்டது எனும் ‘அமத்தா சொன்ன கதை’ கவிதை நினைவில் அசைபோட்டு லயிக்கச் செய்கிறது.

தட்டான் வாலில் புல் செருகி ராக்கெட்டாக பறக்க விடுதல், பொன்வண்டை நூலில் கட்டிவைத்து வண்ண முட்டை காணுதல், நாயின் மீது கல்லெறிதல், குளிக்கும் பெண்ணை எட்டிப்பார்த்து அவள் திட்டுவதை ரசித்தல், கோழியின் கழுத்தை திருகி கொல்லுதல் என எளிதில் கிட்டும் ஆத்ம திருப்திக்காக நீளும் அவரின் பட்டியல்களையும் மீறி அவரவர்களுக்கான பட்டியல் இன்னும் நீண்டு பால்யத்தில் வாழவைக்கிறது ‘ஆத்மதிருப்தி’ கவிதை.

பிரக்ஞையற்ற மரக்கிளை/சாவாதனமாக/சன்னலை உரசுகிறது, 

ஒருத்தியின் சிரிப்பொலியோடு/மெல்ல நகர்கிறது ரயில்,

கடைசி பேருந்துக்காக /காத்திருக்கும் இளம் தம்பதி,

மழைக்காற்று உதிர்த்த/செடிக் கிளைச்/சூரியன்கள்

என நீளும் நிறைய தெறிப்புகள் தொகுப்பெங்கும் காணக்கிடக்கிறது. நாம் காணத் தவறிய சொல்ல நினைத்த விசயங்களை அக்கறையோடு எளிமையோடு சொல்லிச் செல்லும் இவரின் கவிதைகள் கூச்சம் கொள்ள செய்துகிறது.

Jun 27, 2012

ஸ்ட்ரிப் க்ளப்
"மச்சி ஆஸ்டின் போகும் போது கண்டிப்பா ஸ்ட்ரிப் க்ளப் போறோம்"

"வித் அவுட்ல ஆடுவாங்களா?"

"அதே அதே"


"துணியில்லாம ஆடினா அதுல என்னடா த்ரில்?"

"த்ரில் இல்லையா? வேற எதுக்கு ஸ்ட்ரிப் க்ளப் நடத்திட்டு இருக்காங்க? சமூக சேவைக்கா?"

"சரி விடு. பார்த்துடலாம்"

"செலவு?"

"ஆஸ்டின்ல ரிக்ஸ்ன்னு ஒரு க்ளப் இருக்கு. பத்து டாலர்தானாம்"


"சூப்பர்"

"ஓகே...வீட்டுக்கு கிளம்பறேன்"

"ஏங்க, அமெரிக்கா போனா எத்தனை நாள் கழிச்சு வருவீங்க"

"ஒரு மாசம் ஆகும்ன்னு நினைக்கறேன். ப்ராஜக்ட் மேனஜர் அப்படித்தான் சொன்னான்"

"சாப்பாட்டுக்கு எல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காதாங்க?"

"அமெரிக்காவுல எங்க போனாலும் நம்ம ஊர்க்காரங்கதான். கொஞ்ச நாள்ல அமெரிக்கபாளையம்ன்னு பேர் மாத்தினாக்கூட மாத்திடுவாங்க"

"எங்களுக்கு எல்லாம் என்ன வாங்கிட்டு வருவீங்க"

"அங்க கிடைக்குற ஐட்டம் எல்லாமே சீனா தயாரிப்புதானாம். இங்கேயே வாங்கிக்கலாம்"

"என்ன இருந்தாலும் அங்க வாங்குற மாதிரி இருக்குமாங்க"

"ம்ம்ம் பார்க்கலாம்"

"ஃபோன் வைப்ரேட்டர் மோட்ல இருக்குமாட்ட..அதுருது பாருங்க"

"சொல்லு மச்சி....என்ன இந்த நேரத்துல?"

"ஸ்டிரிப் க்ளப் பத்தி நெட்ல தேடினேன். செம இண்டரஸ்டிங். காசு சேர்த்து கொடுத்தா நம்ம மடி மேல உக்காந்து ஆடுவாங்களாமாடா"

"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...காலையில பேசிக்கலாம்...இப்போ வீட்ல இருக்கேன்"

"ஓகே மச்சி...குட் நைட்"

"என்ன மச்சி நேத்து நேரங்கெட்ட நேரத்துல போன் பண்ணியிருந்த.. அதிதீவிர தேடுதல் வேட்டையா?"

"ஆமாம் தூக்கமே இல்லை"

"பாஸ்போர்ட் கொண்டு வந்துட்டியா இன்னைக்கு விசாவுக்கு அனுப்பறதா சொன்னாங்க"

"யெஸ்"

"மேனேஜரை பார்த்துட்டு ட்ராவல் டிபார்ட்மெண்ட்டுக்கு போலாம்"

"ஹேய்...ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருக்கீங்களா? நானே உங்ககிட்ட வரலாம்ன்னு இருந்தேன். ஒரு அப்டேட். நீங்க இந்த மாசம் ஸ்டேட்ஸ் போகலை. இப்போத்தான் மெயில் வந்துச்சு"

"என்னாச்சு?"

"ரிஷஸன் வரலாம்ன்னு க்ளையண்ட் சைட்ல பயப்படுறாங்க....மூணு மாசம் கழிச்சு பார்க்கலாமாம்..பை த வே...நீங்க ரெண்டு பேருமே இதுவரைக்கும் ஃபாரின் ட்ரிப் போனதில்லையா?"

"ஆமா...போனதில்லை"

"ஓ..பிட்டி....ஐ ம் ஸாரி"

"வேற ஏதாச்சும் ஆப்ஷன் இருக்கா? நாங்க போறதுக்கு"

"ஓயெஸ்...நீங்க சொந்தமா டிக்கெட் எடுத்தா போகலாம்...ஹாஹா....ஸாரி, உங்க ஃபீலிங் புரிஞ்சுக்க முடியுது. பட் நோ அதர் ஆப்ஷன்"

”.............”

"என்ன மச்சி யுஎஸ் போகலைன்னு வருத்தமா?"

"இல்லை..ஸ்ட்ரிப் க்ளப் போகலைன்னு"

"விடு மச்சி. சேலம் பக்கம் ஜலகண்டாபுரத்துல ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும். அதுக்கு ப்ளான் பண்ணலாம்"

Jun 26, 2012

போலி’ஸ் என்கவுண்ட்டர்" ங்களை ரவுண்ட் அப் செஞ்சிருக்கோம். வெளியே வந்துடுங்க. இல்லாட்டி ஃபயரிங் செய்ய வேண்டியிருக்கும்”

“வேளச்சேரி பேங்க் ராப்ரி, தாம்பரம் காலேஜ் பொண்ணு ரேப் அண்ட் மர்டருக்காக உங்க நாலு பேரையும் அரெஸ்ட் செய்ய ஆர்டர் இருக்கு. நீங்க கோ-ஆப்ரேட் செய்யலைண்ணா என்கவுண்ட்டர் செய்வோம்”

“அசிஸ்டெண்ட் கமிஷனர் பேசறேன். உங்க உயிருக்கு நான் க்யாரண்டி. கம் அவுட்”

“பாஸ், போலீஸ் அட்டாக்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாம ஆரம்பிச்சுடலாமா”

“............”

“வேண்டாம். ரொம்ப குறைவான போலீஸ்காரங்கதான் வெளியே இருக்காங்க. நாம ஈஸியா தப்பிக்க நிறைய சான்ஸ் இருக்கு”

“பின்னாடி இருக்கிற கதவுக்கு பக்கத்தில் யாரும் இல்லை அது வழியா தப்பிக்கலாமா?”

“சார்..அவங்க வேற ஏதோ ஒரு ப்ளான்ல இருக்காங்க போல இருக்கு. சரண்டர் ஆகச் சொல்லி இன்னொரு தடவை சொல்லலாமா”

”ம்ம்ம்ம். செய்யுங்க”

“பாஸ், பின்னாடி இருக்கிற கதவையும் பூட்டிட்டாங்க”

“இன்னும் பத்து எண்ண போறோம். அதுக்குள்ள சரண்டர் ஆகிடுங்க”

“கவுண்ட் ஸ்டார்ட்ஸ் நவ்”

“ரவி, நீ பின்னாடி கதவுக்கு போ. பிரசாத் அந்த ஜன்னல் வழியா பாரு”

“டென்”

“நைன்”

“பாஸ் சரண்டர் ஆகிடலாமா?”

“என் கூட இருக்கிறவங்க இருக்கலாம். சரண்டர் ஆகிறவங்க ஆகலாம்”

“செவன்”

“சிக்ஸ்”

“எல்லோரும் பொசிஷன்ல ரெடியா இருங்க. வி வில் ஃபயர் நவ்”

“ஃபோர்”

“த்ரீ”

“இதுக்கு மேல வேற வழியில்லை..போலீஸ் சுட ஆரம்பிக்க போறாங்க. நாமும் சுடுவோம்”

“டூ”

“ரெடி”

“ஒன்”

“ஃபயர்ர்ர்ர்ர்ர்........”

டுமீல், டமார், டிஷ்யூம்....டுமீல்

“அம்மா”

தொப்...குப்...தப்

“சனி, ஞாயிறு ஆனா போதும் மனுஷன் வீட்ல இருக்க முடியறதில்லை... பிஞ்சுல பழுத்ததுக” 

குப்...தப்...குப்

“எங்கேயாச்சும் போய் விளையாடுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா நாலு மொத்து மொத்துனாத்தான் அடங்குறீங்க”

Jun 25, 2012

குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார காலத்திற்கு ரங்கநாதன் ஃப்ரான்ஸ் போய் வர வேண்டுமாம். கேட்ட வினாடியில் இதயம் உச்சந்தலைக்கும் அடிவயிற்றுக்கும் குத்தாட்டம் போட்டது. அத்தனை குஜால்களுக்கும் ஃப்ரான்ஸில் இடம் உண்டு என்று யாரோ அவனிடம் கொளுத்திப் போட்டிருந்தார்கள். அந்த ’கொளுத்தல்’ அவனது உற்சாகத்திற்கு காரணமாக இருந்தது.

தெற்கு ப்ரான்ஸில் இருக்கும் மாண்ட்பெல்லியே என்ற ஊரில் ரங்கு பணியாற்றும் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இருக்கிறது. இந்தியாவில் இருந்து அவ்வப்போது யாரேனும் சென்று அவர்களுக்கு உதவியாக இருப்பது வழக்கம். இந்த முறை ரங்கநாதனை போகச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பை டீம் லீடர் அல்லது மேனஜர் தான் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த முறை ரங்கநாதனை போகச் சொல்லும் போதே அவன் ‘அலர்ட்’ ஆகியிருக்க வேண்டும். ஆனால் ரங்கு ஒரு வெப்பளத்தான். புரியும் படி சொன்னால் டூமாங்கோலி. சரி என்று மண்டையை ஆட்டிவிட்டான். 

ஃப்ரான்ஸ்க்கான விசா வாங்குவதில் பெரும் சிரமம் இருக்கவில்லை. நான்கு நாட்களில் கிடைத்துவிட்டது. அதன்பிறகாக பயணத்திற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் அவனும் அவனது அம்மாவும் அலப்பறையை ஆரம்பித்திருந்தார்கள். 

ரங்குவின் அம்மா காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல பதட்டத்தோடு அலைந்து கொண்டிருந்தார். ஊறுகாயில் ஆரம்பித்து உப்பு உட்பட அத்தனை சமையல் சாமான்களையும் மூட்டைகளாகக் கட்டி வைத்துவிட்டார். ஏரோப்ளேனின் பின்னாடி தனியாக ஒரு லாரியைக் கட்டிக்  கொண்டு பறந்தால் வேண்டுமானால் அத்தனையும் எடுத்துக் கொண்டு போகலாம் போலிருந்தது. 

ரங்குவைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. மொபைல் பில் இரண்டு மூன்று நாட்களில் ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. தனது மொபைலில் இருக்கும் அத்தனை எண்களுக்கும் போன் செய்து தான் ஃப்ரான்ஸ் போவதாகச் சொல்லிவிட்டான். எப்பொழுதோ நெம்பர் வாங்கி வைத்திருந்த முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆட்டோக்காரரிடம் கூடச் சொன்னான். அவருக்கு சத்தியமாக இவனைப் பற்றிய ஞாபகம் இருந்திருக்காது. தனக்கு ஏர்போர்ட் வரைக்கும் ஒரு சவாரி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு வாழ்த்தைச் சொன்னார். இவர்களின் போர்க்கால நடவடிக்கையில் லுங்கியெல்லாம் கூட மட மட வென அயர்ன் செய்யப்பட்டது. லுங்கி மட்டுமில்லை. பனியன் ஜட்டியையும் விட்டு வைக்கவில்லை.

அவனவன் பொடக்காலிக்கு போவது போல வெளிநாடுகளுக்கு போய் வரும் காலம்தான் என்றாலும் ரங்கநாதனுக்கு இதுதான் முதல் விமான பயணம் என்பதால் நடுக்கமாகத்தான் இருந்தது. முடிந்தவரைக்கும் நடுக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தான். அவனது அம்மா ”பத்திரம் பத்திரம்” என்று இதுவரை பல்லாயிரம் முறைகள் சொல்லிவிட்டார். விமான நிலையத்தில் அவனை பிரியும் வரையிலும் சொல்லிக் கொண்டிருந்தார். 

பெங்களூரில் இருந்து பாரீஸ் பிறகு அங்கிருந்து மாண்ட்பெல்லியே என இரண்டு விமானங்களில் பறக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடையை விடவும் அதிகமாக இருக்கிறது என ஏகப்பட்ட பொருட்களை பெங்களூர் விமான நிலையத்திலேயே கழித்துவிடச் சொன்னார்கள். அம்மா கட்டி கொடுத்திருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்த போது ரங்கநாதனையும் அறியாமல் அவன் கண்கள் கசிந்து கொண்டிருந்தன. 

கிட்டத்தட்ட பத்து மணி நேர பயணம். மாண்ட்பெல்லியேவில் பதிவு செய்யப்பட்டிருந்த விடுதியை அடைந்தவன் ஒரு குளியலை முடித்து சட்டை லுங்கியோடு வெளியே வந்தான். 

எதிர்பட்டவர்கள் ‘போன்ஜூர்’ என்று வணக்கம் வைத்தார்களே தவிர ஒவ்வொருவரும் இவனது லுங்கியை முப்பத்திரண்டு டிகிரி கோணத்தில் மார்க்கமாக பார்த்தார்கள். அதனால் வெளியே போன வேகத்திலேயே அறைக்குத் திரும்பி முடங்கிவிட்டான். கண்டதையெல்லாம் பெட்டியில் வைத்தவர்கள் ஒரு அரைக்கால் டிரவுசரை எடுத்து வைக்காமல் மறந்துவிட்டார்கள். 

ஹோட்டலுக்கு வெளியே குளிர் மைனஸ் டிகிரிகளில் இருப்பதாகச் சொன்னார்கள். குளிரை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் லுங்கி அவனை வெளியில் அனுமதிக்கவில்லை. பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாக அவனது அம்மாவுக்கு போனைச் செய்துவிட்டு தூங்கிப்போனான். அப்பொழுதும் அவனது அம்மா ‘பத்திரம்’ என்றார்.

அடுத்த நாள் காலையில் அலுவலகம் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த வாடகைக் கார் வந்திருந்தது. விடுதியை விட்டு வெளியே வந்த கணத்தில் அந்த ஊரின் குளிரை உணர்ந்தான். ஜெர்க்கினை மீறியும் முதுகெலும்புகளில் ஊசிகளை இறக்குவது போலிருந்தது. பனியில் நனைந்த இரண்டு நிமிடங்களுக்குள் தொண்டை கமறத் தொடங்கியது. முகம் வறண்டு போனது. வேகமாக ஓடி காரில் ஏறிக் கொண்டான்.

விடுதியில் இருந்து அலுவலகம் வெகுதூரத்தில் இருந்தது. அலுவலகம் இருக்கும் பகுதி ஒரு வனாந்திரம். வழி நெடுகிலும் காடுகளையும் அதன் மீதான வெண்பனியையும் மட்டுமே பார்த்தான். அப்பொழுது தன்னை ஃப்ரான்ஸூக்கு அனுப்பிய மேனஜரின் ’பெருந்தன்மை’யை நினைத்து டைப் அடித்துக் கொண்டிருந்த பற்களை சிரமப்பட்டு நறநறத்தான்.

ரங்கு அலுவலகத்தை அடைந்த போது அது அத்தனை சிறிய அலுவலகமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த அலுவலகத்தில் மொத்தமே பதினேழு பேர்கள்தான் வேலை செய்தார்கள். இவனுக்கு முன்பாகவே பதினேழு பேரும் வந்திருந்தார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் மட்டும் ஆக்சஸ் கார்ட் இருந்தது. கதவை வெளியில் இருந்து திறப்பதற்கு ஆக்சஸ் கார்ட் அவசியம். அலுவலகத்தின் உள்ளே இருந்து கதவைத் திறக்க கார்ட் அவசியம் இல்லை. கதவு அருகில் இருக்கும் ஒரு சுவிட்சை அழுத்தினால் உட்புறமாக இருந்து திறந்து கொள்ளலாம். ஆக்சஸ் கார்ட் இல்லாமல் வெளியே நின்று கதவைத் தட்டுபவர்களுக்கு ஸ்டிஃபானியே என்ற நளினமான ரிசப்சனிஸ்ட் தான் கதவைத் திறந்துவிடுவாள்.

முதல் நாளிலேயே தாமதமாக போனதன் குற்றவுணர்ச்சியுடன் இருந்தவனை ஒலிவியே தேற்றினான்.

“ஸ்டிஃபானியே வருவதற்கு முன்பாக நீ வந்திருந்தால் வெளியில் இருக்கும் குளிரில் நீ விறைத்திருப்பாய்” என்றான்.

அதுவும் சரியெனப்பட்டது. மாலையில் விடுதிக்கு திரும்பும் போதும் கவனமாக இருக்குமாறு ஒலிவியே சொன்னான். ஸ்டிஃபானியே நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பிவிடுவாளாம். உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிட்டால் கதவு தானாக மூடிக் கொள்ளும் பிறகு ஆக்சஸ் கார்ட் இல்லாமல் திறக்க முடியாது என்பதையும் நினைவூட்டினான். 

“ஒருவேளை உனது வாடகைக் காரை தவறவிட்டுவிட்டால் நீ வெளியில் குளிரிலேயே விறைக்க வேண்டியதாகிவிடும். இந்தப் பகுதியில் அறிமுகம் இல்லாத கார்களை நம்பி லிஃப்ட் கேட்பதைப் போல ஆபத்து வேறு எதுவுமில்லை” என்றான் ஒலிவியே.

ரங்கு திகிலுடன் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தான். பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றிற்காகவோ கொலை செய்துவிட்டு காட்டிற்குள் வீசுவது சகஜம் என்றான்.

அந்த நாளிலோ அல்லது மற்றொரு நாளோ ரங்கநாதன் உறைபனியில் மாட்டிக் கொள்வான் என்றுதான் இந்தக் கதை முடியும் என நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஆம். சரிதான். அந்த நாளின் மாலையில்தான் குளிரில் உறையும் வைபவம் நிகழ்ந்தது.

ரங்கு அன்றைய தினத்தின் பணியை முடித்திருந்தபோது ஸ்டிஃபானியே அலுவலகத்திலிருந்து வெளியேறியிருந்தாள். அலுவலகத்தின் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் கவனமாகவே வெளியில் எட்டிப்பார்த்தான். வாடகைக் கார் நின்று கொண்டிருந்தது. திறந்த கதவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு டிரைவரிடம் கையசைத்துக் காட்டினான். டிரைவரும் கார் கண்ணாடியை திறக்காமலேயே சைகை காட்டினான். தனக்காக வந்திருந்த கார்தான் என நினைத்துக் கொண்டு அருகில் போன போது அலுவலகத்தின் கதவு மூடிக் கொண்டதை ரங்கு பார்த்தான். டிரைவரிடம் ஆங்கிலத்தில் பேசிய போது அவன் ஃப்ரெஞ்சில் பேசினான். விடுதியின் விசிட்டிங் கார்டை காட்டினான். டிரைவர் சலிப்படைந்த முக பாவனையைக் காட்டிவிட்டு காரை நகர்த்தினான். ரங்குவுக்கு ஒரு கணம் உயிர் போய் திரும்பி வந்தது. உயிர் திரும்ப வந்து பேச்சை ஆரம்பிப்பதற்குள் கார் அந்த இடத்தை விட்டு போய் இருந்தது.

யாராவது கதவைத் திறக்க மாட்டார்களா என தட்டிப்பார்த்தான். குளிர் எலும்புகளில் சில்லிட்டது. யாரும் கதவைத் திறப்பதாக இல்லை. பனியில் தனது உதடுகள் வெடிப்பதை உணர்ந்தான். முகம் முழுவதும் பனி படந்தது. கண்கள் சிவக்க கன்னத்தை தடவிய போது பனிவெடிப்புகள் ஆழமான கீறல்களாய் விழுந்து கொண்டிருந்தது. மூச்சுவிடுவதும் சிரமமாக இருந்தது. பனியின் தாண்டவம் ரங்கநாதன் மீது நிகழ்ந்து கொண்டிருந்த போது இன்னும் சில நிமிடங்களில் தான் இறந்துவிடக் கூடும் என முடிவு செய்து கொண்டான். சில கடவுள்களிடம் வேண்டினான். அம்மாவை நினைத்துக் கொண்டான். விரல்கள் விறைத்திருந்தன. கிளம்புவதற்கு முன்பாக போன் செய்த பேசிய ஆட்டோக்காரனின் முகம் காரணமில்லாமல் சில வினாடிகள் வந்து போனது.

தன் அம்மாவை யாராவது கடைசி வரைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு முறை ஆழ்மனதில் நினைத்துக் கொண்டான். அது அவனைப் பொறுத்தவரைக்கும் கடைசி ஆசை அல்லது அல்லது கடைசி பிரார்த்தனை. அப்பொழுது ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. காடு, கொலை, பணம் என்று ஒலிவியே சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது என்றாலும் துணிந்து லிப்ட் கேட்டான். கார் மிகுந்த சப்தத்துடன் ப்ரேக் அடித்து நின்றது. ரங்கநாதன் ஏறிக் கொண்டான்.

ரங்கநாதன் உறைபனியில் மாட்டிக் கொள்வான் என்பதை யூகித்த நீங்கள் ரங்கநாதன் என்ன ஆனான் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Jun 22, 2012

சமூகத்தின் மொன்னைத் தன்மையும் ஒரே மாதிரிக் கவிதைகளும்


நேற்று ஆறுமுகம் முருகேசன் என்ற நண்பர் வந்திருந்தார். பகல் நேரம் என்பதால் நேராக அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்று வழியைச் சொல்லியிருந்தேன். தனது நண்பருடன் வந்திருந்தார். இதற்கு முன்பாக அவரிடம் நேரடி அறிமுகம் கிடையாது. ஓரிரு மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பதாகச் சொன்னார். உண்மையிலேயே அதுபற்றி எனக்கு மறந்துவிட்டது. அவரை முகநூலில் கவனித்திருக்கிறேன். இதுவரை நான்கைந்து நாடுகளில் பணியாற்றியிருக்கிறாராம். அடுத்ததாக ஈராக் போகிறார். அதற்கு முன்பாக கொஞ்ச நாட்கள் உள்ளூர் விசிட். விசிட்டின் ஒரு பகுதியாக எனக்காக இரண்டு மணி நேரங்களை ஒதுக்கியிருந்தார். 

இரண்டு மணி நேரத்தில் கவிதைகளைப் பற்றியும் பொதுவாகவும் பேசிக் கொண்டிருந்தோம். அதைப் பற்றியே இரவும் யோசிக்கத் தோன்றியது.

                                                                        ***

ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கவிதை ஏதாவதொரு சித்தாந்தத்தில் அல்லது இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கிறது. அது இடதுசாரி தத்துவமாகவோ, தலித்திய அல்லது பெண்ணிய இயக்கமாகவோ, தனிமனித இருப்பு சார்ந்ததாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றுமாகவோ இருந்திருக்கிறது.

கடந்த பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளை கவனித்துப் பார்த்தால் கவிதை எந்தவிதமான பிணைப்பும் அற்றதாக இருந்து கொண்டிருப்பதாக உணர முடிகிறது. இது கவிதைக்கு பலமா பலவீனமா என்று உறுதியாகக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் என்னளவில் இது பலவீனம் தான். கவிதை ஒரு இயக்கமாக பெற வேண்டிய இடத்தை சமூகத்தில் இழந்து கொண்டிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த காலகட்டத்தோடு ஒப்பிடும் போது இன்றைக்கு தனிமனிதனும் சமூகமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சிக்கல்களும் குறைந்த மாதிரி இல்லை. மாறாக அதிகரித்திருக்கின்றன. தொழில்நுட்பத்தின் பிரமாண்டத்தில் சிக்கல்கள் வேறொரு பரிமாணத்தை அடைந்திருக்கின்றன. ஆனால் இந்த நெருக்கடிகளில் இருந்து மீளும் விதமாகவோ அல்லது இந்தச் சிக்கல்களை எதிர்த்தோ எந்த இயக்கமும் வலுப்பெறாதது கவனிக்கத்தக்கது. யோகா சொல்லித்தருகிறேன், வாழும் முறைகளைக் கற்றுத்தருகிறேன் என்ற போலி ஆன்மிகம் மட்டுமே பேரியக்கமாக வளர்ந்திருக்கிறது.

இயக்கங்கள் வலுப்பெறாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. நம் மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டு மற்றும் பொருளியல் சார்ந்த பல்வேறு தாக்குதல்களினால் மொன்னைத் தன்மை அடைந்து வருகிறோம் அல்லது மொன்னையாக்கப்பட்டிருக்கிறோம் என்பது முக்கியமான காரணம். போராட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் போது கூட நமக்கு எந்தவிதமான ஆபத்தையும் விளைவிக்காத போராட்ட வழிமுறைகளை எடுத்துக் கொள்கிறோம். போராட்டம் என்றால் அரசாங்கத்தை எதிர்த்தோ அல்லது ஆதிக்க சக்திகளை எதிர்த்தோ நிகழ்த்தப்படும் போராட்டங்கள் மட்டும் இல்லை. சாதாரணமாக அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில் கூட குரலை உயர்த்தாத மழுங்கடிக்கப்பட்ட தன்மையை பெற்றிருக்கிறோம். கவிதைகள் சமூகத்தை அல்லது தனிமனிதனை பிரதிந்திவப்படுத்துபவை. இந்த மொன்னைத் தன்மையான சூழலிலிருந்து என்னவிதமான கவிதைகளை எதிர்பார்க்க முடியும்? 

கவிதைக்கு மொழியும் அனுபவமும் இரண்டு முக்கியமான அம்சங்கள் எனச் சொல்லலாம். மொழியை வசப்படுத்துவது எளிது. தொடர்ச்சியாக முப்பது கவிதைகளை சிரத்தையாக எழுதும் போது முப்பத்தொன்றாவது கவிதையில் மொழி வசப்பட்டுவிடும். அனுபவம் அப்படியானது இல்லை. தனிமனித அனுபவங்களைக் கூட அனைவரும் ஒரே மாதிரியானதாக பெறுவதற்கான சூழலை அமைத்துக் கொண்டிருக்கிறோமோ எனத் தோன்றுகிறது. மேலோட்டமாக அல்லது லெளகீகமாகப் பார்த்தால் அப்படி இல்லை என்றுதான் தோன்றும். ஆனால் நான் குறிப்பிடுவது Inner Experience. தற்பொழுது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கவிதைகள் ஒரே மாதிரியானவையாக இருப்பதன் அடிப்படையை யோசித்தால் இதுதான் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
***

எழுதுவதன் மூலமாக கிடைக்கும் நட்புகள் நெகிழச் செய்வதாக இருக்கின்றன. அறிமுகமே இல்லாத ஒரு நபருடன் எழுத்துக்களின் மூலமாக மட்டுமே உருவாகும் நட்பும் உறவும் ஆச்சரியமளிப்பதாகவும் இருக்கிறது. நேற்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.

Jun 21, 2012

கண்ணாடியில் நகரும் வெயில் - மின் நூல் வடிவில்


”கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுப்பு மின் நூலாக மாற்றப்பட்டிருக்கிறது.

இணைப்பில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ளும் உங்களின் அன்பிற்கு எனது நன்றிகள்.

2005 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை ’நிழற்குறிப்பு’ உயிர்மை இதழில் பிரசுரமானது. அதுதான் பிரசுர வாய்ப்பினை பெற்ற முதல் கவிதை. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பது கவிதைகள் பிரசுரமாகின. இவற்றோடு இன்னும் சில கவிதைகள் சேர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ என்ற தொகுப்பாக உயிர்மையால் வெளியிடப்பட்டது. 

நவீன கவிதை உலகில் நான் தேடிக் கொண்ட சிறு கவனத்திற்கு இந்தத் தொகுப்பும் கவிதைகளும் மிக முக்கியமானவை என நம்புகிறேன். எதிர்பாராத முகங்கள் இந்தத் தொகுப்பை பற்றி பேசிய போதெல்லாம் உண்மையிலேயே நான் நெகிழ்ந்திருக்கிறேன்.தொகுப்பை 2007 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் காட்சியில் எழுத்தாளர் சுஜாதா வெளியிட திரைக்கலைஞர் ரோகிணி பெற்றுக் கொண்டார். சுஜாதா அவர்கள் தன் வாழ்நாளில் வெளியிட்ட கடைசித் தொகுப்பு ’கண்ணாடியில் நகரும் வெயில்’என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் உண்டு வருத்தமும் உண்டு. 

இரண்டாவது கவிதைத் தொகுப்பான “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” வெளிவரவிருக்கும் சமயத்தில் முதல் தொகுப்பை மின் நூலாக கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.

வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். காத்திருக்கிறேன். வழக்கம் போலவே.

அன்புடன்,
வா.மணிகண்டன்

Jun 20, 2012

மின்னல் கதைகள்- கடிதங்கள்


அன்புள்ள மணிகண்டன்,

உங்களுடைய தூங்கான் (எ) சொக்கநாதன் கதையை வாசித்தேன். தூங்கி வழியும் ஒருவனின் வாழ்க்கைப் போக்கைப் பற்றின கதையில் கந்தசாமி வாத்தியார் வந்து நொந்து சென்று பிறகு அவனைத் தொடையில் கிள்ளி எழுப்ப ஒரு சிறுவன் நியமிக்கப்படும் இடம் வரை கதை சுவாரசியத்தைப் பெறுகிறது. மேலும் கல்யாணத்திற்குப் பிறகான குழந்தை பெற்ற தகவல் "வேறு எபிசோடு" என்று சொல்லிய இடத்தில் சிறிய புன்னகையுடன் எண்ண ஓட்டம் தனக்கேயான இயல்புடன் அதற்கான இடத்தினை கப்பென்று பிடித்துக்கொண்டுவிடும்.

ஆனால் அவன் நோயினால் அகப்பட்ட பின் கதை தனக்கான தடத்தை விட்டு விலக ஆரம்பித்தது கவனிக்கப்படவேண்டியது. இதுதான் கதையின் முக்கியமான இடம் என்று நினைக்கிறேன். அதி சுவாரஸ்யம் அடைந்து இதுவரையில் ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் பயணித்த கதை வாசகனை உள்ளிழுக்க ஆரம்பிக்கிறது. மேலும் இறுதி பத்தி அதற்கு முன்னர் வரை அவன் சலனமில்லாமல் படித்ததை அவனுடைய புருவம் சுருங்க சிந்தனைக்கு உள்ளாக்குகிறது. சொக்கநாதன் இறக்கவில்லை என்பதை உறுதிபடுத்தக்கூடிய இடத்தில் விவேகம் பேச வேண்டும் என சொல்ல வருகிறது. அதற்கு முந்தைய பத்திகளுக்கும் இதற்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டதே கதையில் தேக்க நிலையில்லாமல் இருப்பதற்கு செய்துவிட்டது. முழுவதும் ஒரு பயணம் இறுதியில் ஒரு முரண் தன்மையற்ற இணைப்பு.

அவனது முழுமையான புற அக தோற்றத்தைப் பற்றின தகவல்களை கதையின் மூல மத்திய பத்திகளில் தெரிவித்ததிலிருந்து சொக்கநாதன் பணத்தின் மேல் ஈடுபாடற்றவன் என்பது தெளிவு. எனவே அவனது இடையூறுகளிலிருந்து மற்றவர்களை விடுவிக்க அவன் விரக்தி ஏற்பட்டு தற்கொலை என்கிற முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. அவன் பைக்கை எடுத்ததே அவனுக்கு கிடைக்காத சுதந்திரத்தை சிறிதேனும் அனுபவிக்கவே. அதே போல வண்டி ஓட்டும்போது தூங்கி வழிந்து வண்டியை ரயில்வே ட்ராக்கில் விட்டுவிட்டதாக ஒரு சந்தேகம் வந்தாலும் , ஒரு வட்டத்தில் அடைபட்ட போது அவன் உணர்ந்த மன நிலையில் அந்த தூங்கும் வியாதியிலிருந்து குணமடைந்ததை அவன் மனம் அவனுக்குரிய வெளிப்புறத்தை அணுக துடிக்கிறது என்பதனால் இந்த முடிவையும் சொல்ல முடியாது. இத்தகைய விரிவுபடுத்துதலை வாசகனிடத்தில் படைப்பானது அப்படைப்பாளியின் சாயலின்றி அளிக்கிறது.

ஒரு வகையில் வசனங்கள் தேவையற்ற காட்சிப்படமாகவும்  இக்கதையை சொல்லலாம். இதற்கு முன்னர் நீங்கள் எழுதிய "அசைவுறாக் காலம்" , "மழையில் முளைத்த காமம்" போன்ற கதைகளும் முழுமையான விரிவாகத்துக்குரியதே. வாசகன் அடைய வேண்டிய தேர்ந்த இடத்துக்கு இத்தகைய படைப்புகள் முதல் உதாரணம்.
                                                       
அன்புடன்,
சிவகுரு.
                                                                   ***

அன்புள்ள சிவகுரு,

வணக்கம்.

இந்தக் கதை இத்தனை விரிவான கடிதத்திற்கு தகுதியானதா என்று கூட சந்தேகமாக இருக்கிறது என்றாலும் உங்களின் மின்னஞ்சல் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. கதைகளை எனது எழுத்துப்பயிற்சிக்கான கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். சுவாரசியம் மட்டுமே அதில் அடிப்படையாக இருக்கட்டும் என்பதை நான் விரும்பியே செய்கிறேன்.

இது போன்ற விரிவான மின்னஞ்சல்களைத் தவிர்த்து ஒரு வரி அல்லது இருவரிகளில் நிறைய மின்னஞ்சல்களை மின்னல்கதைகள் பெற்றுத்தருகின்றன.

“இப்போ என்ன சொல்ல வர்ற? முழுமையா சொல்லு” “தீரன் சின்னமலையை வம்பிக்கிழுப்பதை நிறுத்திக் கொள். விளைவுகள் விபரீதமாக இருக்கும்” “கதை அருமை. தொடர்ந்து எழுதுங்க” என்பதெல்லாம் சில உதாரணங்கள்.

இந்த மின்னஞ்சல்கள் நான் எதிர்பார்த்ததைவிடவும் கதைகள் வேறொரு திசையில் வேறொரு வாசகர்களை நோக்கி நகர்கிறது என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து வாசியுங்கள்.

உணவு விடுதிகளில் எழுதி வைத்திருப்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது - குறைகளை என்னிடமும் நிறைகளை நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்

Jun 19, 2012

ஃபேஸ்புக் புரட்சியாளரும் அர்ச்சனாவும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஃபேஸ்புக் புரட்சியாளர்கள் என்ற ஒரு பிரிவைச் சேர்க்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வரும் இந்தக் காலகட்டத்தில்தான் நவீனும் ஒரு ஃபேஸ்புக் புரட்சியாளராக உருவெடுத்து வருகிறான். கோக்குமாக்கான ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ஃப்ரொபைலில் போட்டு புரட்சிக்கு வித்திட்டவன் எல்லோரையும் தோழர் என்றழைக்கிறான். ஃபேஸ்புக்கில் அவனையும் மற்றவர்கள் தோழர் என்றுதான் அழைக்கிறார்கள். லெனின், மார்க்ஸ் என்ற பெயர்களை தெரிந்து வைத்திருப்பவன் சேகுவேரா, அம்பேத்கர், பெரியார் என்ற பெயர்களை திரும்பத் திரும்ப எழுதுவதால் அவனை புரட்சியாளன் என்று மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள். 

நவீன் புரட்சியாளனாக மாறுவதற்கு முன்பாகவே சோற்றுக்கும் சொத்துக்கும் வழி செய்திருந்தான். லேரி எலிசனின் இந்திய நிறுவனத்தில் மிகச் சிறந்த அடிமையாக இருப்பதற்கு நவீனுக்கு மாதம் அறுபதாயிரம் சம்பளம் கொடுக்கிறார்கள். புரட்சி நடத்துவதற்கும் குடும்பம் நடத்துவதற்கும் அந்தப்பணம் சரியாக இருப்பதால் சாவகாசமான புரட்சியாளராக நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

சமீபத்தில் அவனை வேறோரு மேலாளரிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே நிறுவனத்தில்தான் பணி ஆனால் இனிமேல் புது மேலாளரின் அணியில் பணியாற்ற வேண்டுமாம். அந்த மேலாளர் மற்ற அனைத்து மேலாளர்களையும் போலவே ஆரம்பத்தில் குளுகுளு என்று பேசியதால் அவரது அணியில் சேர்வதற்கு சம்மதித்துவிட்டான். ஓரிரு வாரங்களில் அவர் தனது உண்மையான சொரூபத்தை காட்டத் துவங்கினார். கரும்பு ஆலையில் நசுக்கி மண்டை வழியாக இரு ‘ட்யூப்’ போட்டு உறிஞ்சுவது போல நவீனை உறிஞ்சத் துவங்கினார்கள். புரட்சியை காலையில் அரை மணி நேரமும் இரவில் அரை மணி நேரமும் மட்டும் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பகல் இரவு பார்க்காமல் உழைக்கத் துவங்கிய நவீன் நேற்றிரவு ஒரு மணிக்குத்தான் அலுவலகத்தில் வேலையை முடித்தான். இரவு நேரங்களில் விவேக் நகர் வழியாக பைக்கில் போவது அத்தனை உசிதம் இல்லை. பணத்தை பறித்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இப்பொழுதெல்லாம் பைக் ஓட்டும் போது அடுத்து வரப்போவது வலது திருப்பமா அல்லது இடது திருப்பமா என்பதை விடவும் ஃபேஸ்புக்கில் அடுத்த ஸ்டேட்டஸ் என்ன எழுதலாம் என்று யோசிப்பவனாக நவீன் மாறியிருந்தான். அதே ஃபேஸ்புக் நினைப்பில் விவேக் நகருக்குள் வண்டியை நுழைத்திருந்தான். அந்த பகுதியைத் தாண்டிய சாலையில் மரங்கள் மட்டுமே நிறைந்திருந்தன. பயமூட்டும் நிசப்தம் நமது புரட்சியாளனை புரட்டிப் போட்டது. திகிலோடு வேகமாக முறுக்க ஆரம்பித்தான். இரு நூறு மீட்டர்கள் தாண்டி ஒரு ஹோண்டா சிட்டி கார் நின்று கொண்டிருந்தது.

பயம் கொஞ்சம் அதிகமானது. நிற்காமல் போய்விட வேண்டும் என்று நினைத்த போது அந்தக் காரின் முன்புறத்திலிருந்து ஒரு பெண் வந்தாள். தேவதை என்ற சொல்லை கேட்டுக் கேட்டு சலித்துப் போனதால் அதை விட வேறு நல்ல சொல் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீல நிறச்சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தாள். சட்டை இடுப்பு வரைக்கும் மட்டுமே இருந்தது. இவளுக்காக பைக்கை நிறுத்தவில்லையென்றால் தான் பிறந்ததே வீணாகப்போய்விடும் என்று அத்தனை பயத்திலும் ‘ஃபீல்’ செய்து ப்ரேக் அடித்தான் என்றால் அவளின் அழகை நீங்களே கணித்துக் கொள்ளலாம். 

அவள் பெயர் அர்ச்சனாவாம். எலெக்ட்ரானிக் சிட்டி போய்க் கொண்டிருக்கிறாள். இடையில் வண்டி நின்றுவிட்டது. ஹோண்டா சிட்டி கார் சர்வீஸ் நிறுவனத்திற்கு தகவல் சொல்லியிருக்கிறாளாம் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. வேறு ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தாள். நவீனுக்கு கார்களைப் பற்றி எதுவும் தெரியாதென்றாலும் அவள் அமர்ந்திருந்த ஸீட்டில் அமர்ந்து அவள் கை பட்டிருந்த ஸ்டியரிங்கை தடவிப்பார்த்தான். ஹார்ன் அடித்தான். கியரை முன் பின்னாக அசைத்து பார்த்தான். காருக்குள் வீசிய சுகந்தமும் அவள் பயன்படுத்தியிருந்த ஏதோ ஒரு வாசனைத் திரவியமும் கிறங்கடித்தது.

இரவும் தனிமையும் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் புரட்சியாளனை தட்டி எழுப்பிவிடும் போலிருந்தது. சுதாரித்துக் கொண்டவன் ரேடியேட்டரில் தண்ணீரின் அளவை பார்க்க வேண்டும் என்றான். கேட்காமல் இருந்திருக்கலாம். கேட்டு விட்டான்.அவள் காருக்கு வெளியே நின்றவாறு உடல் முழுவதையும் உள்ளே நுழைத்து பாட்டிலில் இருந்த நீரை எடுத்தாள். இந்த வளைதல் நெளிதலில் அவளின் ஆடை இறுகிய போது நவீனுக்கு வியர்க்கத் துவங்கியது. ஒரு மிடறு குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் கொடுத்தாள். அவள் தொண்டை வழியாக நீர் இவனுக்குள் சுடுநீராக கொதித்தது. பத்து நிமிடங்கள் நவீன் அந்தக் காரோடும் தனது இளமையோடும் போராடிக் கொண்டிருந்தான்.

அந்த மூன்று பேர்களும் தன்னை ஆரம்பத்திலிருந்தே பார்த்து கொண்டு நிற்கிறார்கள் என்றாள் அர்ச்சனா. ஒரு திசையையும் காட்டினாள். நவீனுக்கு சில்லிட்டது. இந்த இரவில் மூன்று பேர்களா என்றவன் விக்கித்துப் போனான். மெதுவாக திரும்பிப்பார்த்த போது கொஞ்ச தூரத்தில் நின்றிருந்தார்கள். மூன்று பேருமே புகைத்துக் கொண்டிருந்தார்கள். காரை பூட்டி சாவியை எடுத்துக் கொள்ளுங்கள் நான் உங்களை எலெக்ட்ரானிக் சிட்டியில் இறக்கிவிடுகிறேன். இங்கே நிற்பது ஆபத்து என்றான்.

அவள் தயங்கினாள். தான் மட்டும் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாகவும் உதவிக்கு அழைக்க நண்பர்கள் இல்லை என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். இதை எதற்கு சம்பந்தமில்லாமல் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று நவீன் நினைத்த போது மூவரும் இவர்களை நோக்கி நகர்ந்து வந்தார்கள். நவீன் வெடவெடக்கத் துவங்கினான். தனது ஃபேஸ்புக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம் என மொபைலில் சில ‘க்ளிக்’குகளை எடுத்தான். அப்பொழுது அவர்கள் கிட்டத்தட்ட இவர்களிடம் வந்துவிட்டார்கள்.

“மே ஐ ஹெல்ப் யூ” என்றான் ஒருவன். அர்ச்சனாதான் பேச ஆரம்பித்தாள். நல்லவர்கள் போலிருக்கிறது என்று நவீன் ஆசுவாசமானான். “யாது ஊரு” என்று மற்றொருவன் நவீனை பார்த்துக் கேட்டான். “கோயமுத்....” என்று நவீன் முடிக்கும் முன்னரே நவீனின் மூக்கு மீது ஓங்கி ஒரு குத்து இறங்கியது. கொஞ்ச நேரம் ‘கிர்ர்ர்’ என்று இருந்தது. கொஞ்ச நேரம் என்பது இரண்டு அல்லது மூன்று வினாடிகள்தான். மூக்கைத் தடவிப்பார்த்தான். வழுவழுவென்றிருந்தது. இரத்தம் வருகிறது. ”ஓடுடா தமிழ்நாட்டு தே...பையா” என்றான். அடுத்து என்ன பேசினாலும் அடி விழக்கூடும் என்பதால் வண்டியை எடுக்க முயற்சித்தான். இன்னொருவன் பொடனி மீது அடித்து பர்ஸ், பைக் சாவி, மொபைல் போனை வாங்கிக் கொண்டான். 

இன்னொரு முறை அவன் கையைத் தூக்கிய போது நவீன் ஓடத் துவங்கியிருந்தான். 

Jun 18, 2012

சைபர் சாத்தான்கள்- மின் நூல் வடிவில்

”சைபர் சாத்தான்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு மின் நூலாக மாற்றப் பட்டிருக்கிறது. பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தளத்தின் வலதுபுறமாக இருக்கும் புத்தகத்தின் படம் மீது ‘க்ளிக்’ செய்தும் தரவிறக்கம் செய்யலாம்.


சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்தான இந்தக் கட்டுரைகள் 2009 ஆம் ஆண்டு புத்தகமாக ”சைபர் சாத்தான்கள்” பெயரில் உயிர்மை வெளியீடாக வந்தது. 

கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு ‘ப்ரொஜக்ட்’ வேலைக்காக சைபர் க்ரைம் குறித்தான தகவல்களைச் சேகரிக்கத் துவங்கியிருந்தேன். இவை முதலில் அந்திமழை.காம் என்ற தளத்தில் தொடராக வந்தது. எதிர்பாராத மனிதர்களிடம் இருந்து வந்த மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் இதனை புத்தகமாக்கும் தைரியத்தை தந்தது.

கட்டுரைகள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகாகவே நூலாக்கம் பெற்றது. அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. எழுதப்பட்ட போது இவை அதிகமான உழைப்பைக் கோரின. நான் பணியாற்றிய நிறுவனத்தில்- (அதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த முதல் வருடம்) ஜனவரி-மார்ச் மாத காலங்களில் அந்த ஆண்டில் ஊழியர்கள் செயல்பட்ட விதத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் செய்வார்கள். எனக்கு அந்த ஆண்டு மிக மிகக் குறைவான ஊதிய உயர்வை அளித்தார்கள். அதற்கு எனது மேலாளர் சொன்ன காரணம் “சைபர் கிரைம் பற்றிய புத்தகத்திற்காக அலுவலக நேரத்தை நீ பயன்படுத்திக் கொண்டதான புகார் இருக்கிறது”.

இந்தப் புத்தகத்தால் பொருளாதார ரீதியாக எனக்கு ஒற்றை ரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆனால் நான் அந்தப் பலனை எப்பொழுதும் எதிர்பார்க்கவில்லை.

கோயமுத்தூரிலும், சேலத்திலும் தலா ஒரு கல்லூரியில் சைபர் க்ரைம் பற்றிய வகுப்பு எடுத்தது இந்த நூலுக்கான அங்கீகாரம் என்று நினைத்திருந்தேன். சில மாதங்கள் கழித்து சிங்கப்பூரில் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் Elective Module ஆக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கிடைத்த தகவலே எனது உழைப்பிற்கான உச்சபட்ச மகிழ்ச்சி.

மற்றபடி இந்தப்புத்தகம் இதுவரையிலும் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்ற தகவல்கள் என்னிடம் இல்லை. 

கணினியுலகில் ஒரு விதி இருக்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் ஆயுள் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான். இந்த புத்தகம் எப்பொழுது காலாவதியாகும் என்று தெரியாது. ஆனால் அடிப்படைகள் அப்படியேதான் இருக்கும் என நம்புகிறேன்.

புத்தகமாக வெளியிட்டிருந்த உயிர்மை பதிப்பகத்திற்கு நன்றி.

புத்தகத்தை வாசித்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் சொல்லிச் செல்லுங்கள். எனக்கு அது ஊக்கமாக அமையும்.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.

Jun 14, 2012

தூங்கான் (எ) சொக்கநாதன்

சொக்கநாதன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தூக்கநாதன் என்று  வைத்திருக்கலாம். அரசு அலுவலர்களே கூட அவ்வப்போது வந்து டிப்ஸ் கேட்டுச் செல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு சொக்கநாதன் தூக்கத்தில் நிபுணராக ஆகியிருந்தான். படுத்தால் தூக்கம், படித்தால் தூக்கம் என்றிருந்தால் பிரச்சினையில்லை. நின்று கொண்டிருந்தாலும் சரி தின்று கொண்டிருந்தாலும் சரி சொக்கனுக்கு தூக்கம் வந்துவிடுகிறது. 

எட்டாம் வகுப்பு வரை ஒழுங்காக இருந்தவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் இப்படி நேரம் கெட்ட நேரம் தூங்க ஆரம்பித்தான். கணக்கு வாத்தியார் கந்தசாமிதான் அவனது வகுப்பிற்கும் பொறுப்பாசிரியர். சொக்கன் தூங்கும் போதெல்லாம் அருகில் இருக்கும் வேறொரு மாணவனை அழைத்து கொட்டு வைக்கச் சொல்வார். கொட்டு வாங்கிய சொக்கன் கொஞ்ச நேரம் தலையை தேய்த்துவிட்டு தூங்கிவிடுவான். பிறகு மாணவர்களின் கொட்டுக்கள் மட்டுமே சொக்கனை எழுப்ப போதுமானவை இல்லை என்று கந்தசாமி வாத்தியாரே களத்தில் இறங்கினார். சொக்கன் வகுப்பில் தூங்கும் போதெல்லாம் அடித்தார். பிறகு மிதித்தார். ம்ஹூம். எதுவும் பயன் தரவில்லை. இதெல்லாம் சரிப்பட்டு வராது என வெயிலில் முழங்காலிடச் சொன்னார். அசராத சொக்கன் முழங்காலிட்டவாறே தூங்கி வழிந்தான். 

கந்தசாமி வாத்தியார் சலித்துப்போனவராக சொக்கனை ஹெட்மாஸ்டரிடம் அனுப்பி வைத்தார். வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் எடுத்துவிடுவதுதானே பெரும்பாலான ஹெட்மாஸ்டர்களுக்கு விருப்பமான செயல். அடுத்த நாள் ப்யூனை அனுப்பி சொக்கனின் பெற்றோரை அழைத்து வரச் சொன்னார். வந்தவர்களிடம் வேறு ஏதேனும் பேச்சை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் ஹெச்.எம்மின் நாக்கில் சனி வாடகைக்கு இருப்பார் போலிருக்கிறது. உங்கள் பையன் வகுப்புகளில் அதிகமாக தூங்கி வழிகிறான் என்ற கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கிறது என்று தொடங்கினார்.

வெறுத்துப்போன சொக்கனின் அப்பா ”இதையேதான் நாங்க அவன்கிட்ட சொல்லிச் சொல்லி சடஞ்சு கிடக்கிறோம் நீங்களும் இதைச் சொல்லத்தான் கூப்ட்டீங்களா? அவன் தூங்குனா நாலு சாத்து சாத்துங்க இல்லைன்னா துரத்திவிடுங்க. நாலு கழுதை வாங்கித் தர்றேன் மேய்ச்சு பொழைக்கட்டும் “ என்று ஹெச்.எம் ஐ தாளித்துவிட்டு போனார். இவர் எரிந்து விழுவதை சமாளிப்பதற்கு பதில் அவன் தூங்கியே வழியட்டும் என்று அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவட ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டார். அதன் பிறாக அவனுக்கு கடைசி வரிசையில் ஒரு இடம் ஒதுக்கி விட்டார்கள். தூக்குமூஞ்சி என்றும் தூங்கான் என்றும் உடன் படித்த பையன்களிடம் பட்டப்பெயரையும் பெற்றுக் கொண்டான்.

தூங்கக் கூடாது என சொக்கன் நினைத்தாலும் தூங்காமல் இருக்க முடிந்ததில்லை. தூக்கம் என்றால் மணிக்கணக்கான தூக்கம் இல்லை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான். தூங்கிக் கொண்டிருப்பவன் தலையில் இடி விழுந்ததைப்போல திடீரென எழுவான் கொஞ்ச நேரத்திலேயே அவனையுமறியாமல் மீண்டும் சாய்ந்துவிடுவான். அடுத்த ஒரு வருடம் மட்டும் எப்படியோ வகுப்புகளையும் தேர்வுகளையும் சமாளித்து பத்தாம் வகுப்பை முடித்துவிட்டான். 

படிப்பிற்கு பிறகாக திருப்பூரில் மில் வேலைக்கு போனவனை ஓரிரு மாதங்களிலேயே துரத்திவிட்டுவிட்டார்கள். பிறகு யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசில் தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்தவனுக்கு கம்பி வெட்டும் வேலை கொடுத்திருந்தார்கள். மெஷினில் கம்பி வெட்டிக் கொண்டிருந்த போது தூங்கித் தொலைந்துவிட்டான். கம்பிக்கு பதிலாக விரலை மெஷினுக்குள் விட்டுவிட்டான். கத்தரித்துவிழுந்த ஆள்காட்டி விரலை பாலித்தீன் கவரில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். சொக்கனை தூக்கிக் கொண்டு போனவர்கள் வலியால் மயங்கிவிட்டான் என நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் சொக்கன் அப்பொழுதும் தூங்கிக் கொண்டிருந்தான்.

இப்படியாக தூங்கிக் கொண்டிருந்த சொக்கனுக்கு திருமணத்தை செய்து வைத்தால் அவனுக்கு பொறுப்பு வந்துவிடும் என நினைத்தவர்கள் ஏமாளிகளைத் தேடத் துவங்கினார்கள். 

சொக்கனுக்கு திருமணம் ஆன கதையை சொல்ல வேண்டுமா? அது கதையில்லை. வரலாறு. பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்த போதே ஒரு சிறுவனை ‘செட்’ செய்திருந்தார்கள். எப்பொழுதெல்லாம் சொக்கன் தூங்குகிறானோ அப்பொழுதெல்லாம் அவனைத் தொடையில் கிள்ள வேண்டும் என்பதுதான் ’செட்டப்’. சொக்கனும் இந்த ‘செட்டப்’பிற்கு சம்மதித்திருந்தான். பெண் வீட்டிற்கு கிளம்பிய கணத்திலிருந்தே அந்தப் பொடியன் கிள்ளுவதை ஆரம்பித்திருந்தான். அந்த நாள் முழுவதும் வகை தொகையில்லாமல் கிள்ளி சொக்கனை விழிப்பிலேயே வைத்திருந்தான் பொடியன். அடுத்த நாள் காலையில் சொக்கனின் தொடை வீங்கி ஏதோ திரவம் வடிந்து கொண்டிருந்தது. 

திருமண நாள் அன்றும் அதே செட்டப் தான். பொடியனைத்தான் துணை மாப்பிள்ளையாக அமர வைத்திருந்தார்கள். பொடியனின் சீரிய பணியையும் மீறி தாலி கட்டும் நேரத்திற்கு சில வினாடிகள் முன்பாக சொக்கன் தூங்க ஆரம்பித்திருந்தான். சுதாரித்த பொடியன் ஒரு ‘நறுக்’கை போட்டான். இப்படியாக திருமணம் கிள்ளலும் வீங்கலுமாக முடிந்தது. மனைவியாக வந்தவள் பெரும் சொத்தோடு வந்து சேர்ந்தாள். சொக்கன் இனி இரண்டு மூன்று தலைமுறைக்கு கால் நீட்டி தூங்கலாம் என்று பேசிக் கொண்டார்கள்.

சொக்கனின் முதலிரவில் நடந்ததெல்லாம் வேறொரு எபிசோட். எப்படியோ ஒரு வருடத்தில் குழந்தையும் பிறந்துவிட்டது. இந்தச் சமயத்தில் சொக்கனின் மனைவி இவனது தூக்கம் பற்றி தெரிந்து கொண்டு நிறைய புலம்பி கொஞ்சம் அழுது ஒருவாறாக மனதை தேற்றியிருந்தாள். மருத்துவரிடம் போயே தீர வேண்டும் என்ற அவளது வற்புறுத்தலில் சில பரிசோதனைகளையும் செய்தார்கள். கடைசியாக நார்கோலெப்ஸி என்ற தூங்கும் வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்து இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்ற ஒரு வெடிகுண்டுக்கும் சேர்த்து பில் போட்டு அனுப்பி வைத்தார்கள்.

அதன் பிறகாக இருபது வருடங்களாக சொக்கன் தனியாக எதைச் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேலையையும் அவனது மனைவியோ அல்லது மகனோ செய்யத்துவங்கினார்கள். சொக்கன் வெளியே போவதும் தடை செய்யப்பட்டது. கழிவறைக்கு கூட தாழ்ப்பாள் போடாமல் போக வேண்டும் என்பது விதியாக மாற்றப்பட்டது. தான் ஒரு நோயாளி என்பதை அவனை முழுமையாக உணரச் செய்தார்கள். சொக்கன் பெரும்பாலான நாட்களில் யாருக்கும் தெரியாமல் அழத் துவங்கினான். 

கடந்த ஓரிரு வாரங்களாக ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தான் தூங்கி விழுவதில்லை என்று சொக்கன் உணரத்துவங்கினான். இதை அவனது மனைவியிடமும் மகனிடமும் சொன்ன போது அவர்கள் நம்பத் தயாரில்லை. கண்காணிக்கத்துவங்கினார்கள். கண்காணிப்பின் போதும் அனைத்து தடைகளும் அமலில் இருந்தன. ஒரே ஒரு முறை தனியாக வெளியே செல்ல வேண்டும் என சில வருடங்களாக சொக்கன் விரும்பியிருந்தான். இப்பொழுது மனைவியிடம் தனது ஆசையை வெளிப்படுத்தினான். அனுமதி கிடைக்கவில்லை. நேற்று மதியம் மகன் தூங்கிக் கொண்டிருந்த போது பைக்கை எடுத்து ஓட்டத்துவங்கினான். இருபது வருடங்களுக்கு முன்பாக பைக் ஓட்டிய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன என்றாலும் ஓட்ட முடிந்தது. 

அடுத்த அரை மணி நேரத்திற்குள் சொக்கன் திருட்டுத்தனமாக வெளியே சென்றிருக்கிறான் என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள். அவனது மனைவி கடுங்கோபம் அடைந்திருந்தாள். இரண்டு மணி நேரம் ஆகியும் சொக்கன் வீடு திரும்பவில்லை. கோபம் பதட்டமாக மாறத் துவங்கியது. மூன்று மணி நேரங்களுக்கு பிறகாக காணாமல் போனவனை தேடத்துவங்கினார்கள். உதவிக்கு பலரையும் அழைத்துக் கொண்டார்கள்.

யாரோ ஒருவன் மிக வேகமாக ஓடி வந்து ரெயில்வே ட்ராக்கில் பைக்கில் வந்த யாரோ ஒருவர் அடிபட்டுக்கிடப்பதாகக் கூறினான். சொக்கனின் மனைவி பெருங்குரலெடுத்து அழத்துவங்கினாள். மற்ற சில பெண்களும் அழத் துவங்கினார்கள். ஆனால் கதை இங்கு முடியவில்லை.

பீரோவில் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் காணாமல் போய் இருந்தால் இறந்து கிடப்பவன் சொக்கனாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் பீரோவில் பணம் இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை. சொக்கனின் மனைவி பீரோவை பார்த்தால் இறந்தது சொக்கனா வேறு யாரேனுமா என்று தெரிந்துவிடும். ஆனால் அவள் ரெயில்வே ட்ராக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள்.

Jun 8, 2012

கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல்


கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல் என்று சொன்னால் நீங்கள் எரிச்சல் அடையக் கூடும் என்பதால் பொன்னானுக்கும் சின்னாளுக்கும் அரும்பிய காதல் என்றுதான் இந்தக் கதையைத் தொடங்க வேண்டும். கதை என்றால் ஹைதர் அலி காலத்துக் கதை. 1761 இல் கொங்குப்பகுதிகளோடு சேர்த்து மொத்த மைசூர் சாம்ராஜ்யத்திற்கும் ஹைதர் அலி மன்னர் ஆகியிருந்த காலம் அது. ஹைதர் அலியும் சரி அவனது மகன் திப்புசுல்தானும் சரி போருக்கு போவதும், போரில் வென்றால் தோற்றவர்களை சிறை பிடிப்பதும், தோற்றுப்போனால் வென்ற மன்னர்களுக்கு கப்பம் கட்டுவதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். கப்பம் கட்டுவதற்கான பணம் கஜானாவில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கவில்லை. வரி வசூல் என்ற பெயரில் கொங்கு நாட்டு மக்களைத்தான் வறுத்தெடுத்தார்கள். 

ஹைதர் அலி பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில் 3000 வீடுகள் இருந்த ஈரோட்டில் வரிகள், போர்கள் என்ற அக்கப்போர்களைத் தாங்காமல் வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டிருந்தது. ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தானின் காலத்தில் நிலைமை இன்னும் மோசம் ஆனது. அவன் காலத்தில் எண்ணிக்கை 1000 வீடுகளாக சுருங்கிப்போனது. இவர்கள்தான் அலும்பு என்றால் வெள்ளைக்காரனின் அட்டகாசம் இதைவிடவும் அதிகம். ஜெனரல் மெடோஸ் ஈரோட்டை மொத்தமாக அழித்த பிறகு 1800 ஆம் வருடம் வெறும் 400 வீடுகள் மட்டுமே இருந்தன. இப்படி அல்லல்பட்ட கொங்குநாட்டில் இருந்த காவேரிபுரம்தான் பொன்னாக்கவுண்டனின் ஊர். காவேரிபுரம் எங்கேயிருக்கிறது என்று இப்பொழுது தேடினால் மண்டை காய்வதுதான் மிச்சம் ஆகும். காவிரி ஆற்றுக்கு குறுக்கில் மேட்டூர் அணை கட்டிய போது அழிந்து போன ஊர்களில் காவேரிபுரமும் ஒன்று. 

அழிந்து போன ஊரின் காதல் கதை எப்படித் தெரியும் என்ற கேள்வியைக் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் சொல்லிவிடுவது உத்தமம். அறச்சலூர் கொழந்தாக்கவுண்டன் வீட்டின் தாழ்வாரத்தில் வருடக்கணக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஓலைச்சுவடியில்தான் இந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. இந்த ஓலைச்சுவடி பொன்னாக்கவுண்டனின் அந்தரங்க டைரியாக இருந்திருக்கிறது. ஹைதர் அலியும் திப்புசுல்தானும் மக்களின் மீது விதித்த வரிக்கொடுமையிலிருருந்து பெரிய தோட்டத்து சுப்பாயாளின் வாலிப வனப்பு வரை அத்தனையையும் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார். 

காவேரிபுரத்தை உள்ளடக்கியிருந்த தாலுக்காவிற்கு ’சேனபாக’மாக இருந்த அண்ணய்யனிடம்தான் பொன்னாக்கவுண்டன் எழுதப்படிக்க பழகியிருக்கிறார். அண்ணய்யன் கன்னட தேசத்தில் இருந்து வந்திருந்த பிராமணன், ஒரு தாலுக்காவிற்கு அமுல்தாராக இசுலாமியனையும் பிற நிர்வாகங்களுக்கு பிராமணனையும் ஹைதர் அலி காலத்தில் நியமித்திருந்தார்கள். அமுல்தார் என்பவர் கிட்டத்தட்ட இன்றைய தாசில்தார் மாதிரி.

பொன்னாக்கவுண்டன் கருகருவென்று உயரமாக இருப்பாராம். இரண்டு காதுகளிலும் கடுக்கண்கள் உண்டு. நீளமாக வளர்த்தியிருந்த சடையை சுருட்டி கொண்டை போட்டிருந்த அவரோடு உடன்பிறந்த மூத்தவர்கள் ஆறு பேர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் திருமணம் ஆகியிருந்தாலும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். பொன்னாக்கவுண்டனுக்கும் திருமணத்தை முடித்துவிட்டு சொத்துக்களை பாத்தியம் செய்துவிடுவதாக அவரது அப்பா யோசித்து வைத்திருந்தார். அப்பொழுது பொன்னாக்கவுண்டனுக்கு பதினாறு வயது ஆகியிருந்தது. சைட் அடிக்க பழகத் துவங்கிய வயதுதான். சைட் என்றால் தூரத்தில் தலையைக் குத்திக் கொண்டு போகிற பெண்களை ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் பார்த்துக் கொண்டு பொன்னாக்கவுண்டனும் தலையை குத்திக் கொள்வார். இந்தப்பருவத்தில்தான் கவுண்டனின் வாழ்க்கையின் குறுக்காக சின்னாள் ஒரு கோட்டை அழுந்தக் கீறினாள்.

ரங்கவண்ணானின் மூன்றாவது மகள்தான் சின்னாள். மூத்தவளை கணக்கம்பாளையத்திற்கு கட்டிக் கொடுத்திருந்தார்கள். இரண்டாவதாகப் பிறந்திருந்த மகன் வீட்டில் இருந்தபடியே வெள்ளாவி போடுவதையும், பெட்டி தேய்ப்பதையும் பார்த்துக் கொள்வான். பொழுது விடிந்தவுடன் ரங்கவண்ணானும் சின்னாளும் கவுண்ட வளவில் எடுத்த அழுக்குத்துணிகளை  மோலியாகக் கட்டி கழுதை மீது வைத்து வண்ணான் பாறைக்குச் செல்வார்கள். பொழுது உச்சி ஏறும் வரை வெளுப்பார்கள். வெளுத்த துணிகளை காயவைத்துவிட்டு ரங்க வண்ணான் கண் அயரும் போது சின்னாள் கொஞ்சம் விறகு வெட்டி விடுவாள்.

கவுண்ட வளவில் துணி எடுக்க வந்த போதெல்லாம் சின்னாளை சைட் அடித்திருக்கிறார் பொன்னாக்கவுண்டன். சின்னாளுக்கு பதின்மூன்று வயதுதான். ஆனால் வேலை செய்து முறுக்கேறிக் கிடந்த உடம்பு. அப்பொழுதெல்லாம் ஜாக்கெட் என்ற கான்செப்ட் வந்திருக்கவில்லை போலிருக்கிறது. மேலாக்கை மீறித்தெரியும் அவளது சிறு மார்பு பார்ப்பதற்கு தேங்காய் குருத்து போலிருந்தது என எழுதியிருக்கிறார். இப்படி சைட் அடிப்பதும் கவிதை எழுதுவதுமாக நிறுத்தியிருக்கலாம். சின்னாள் அழுக்குத்துணி எடுக்க வரும் போதெல்லாம் நூல் விட்டதில் ஒரு கட்டத்தில் அவள் பிக்-அப் ஆகிவிட்டாள். 

காதல் மொட்டுவிட்டிருந்த ஆரம்ப கட்டத்தில் ”உங்க சாதிக்காரங்களுக்குத் தெரிந்தால் எங்களை வெட்டிப்போடுவார்கள்” என்று தயங்கியிருக்கிறாள். அடிமேல் அடி வைத்து ஆலமரத்தையே இடம் மாற்றும் பொன்னாக்கவுண்டனுக்கு சின்னாள் மனதையா மாற்ற முடியாது. மாற்றிவிட்டார். காதல் பற்றிக் கொள்வது கூட அத்தனை பெரிய சிரமம் இல்லை. ஆனால் தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்வதுதான் பெரும்பாடாக இருந்திருக்கிறது.

அபார்ட்மெண்ட்டும், தியேட்டரும் இல்லாத அந்தக்காலத்தில் காவேரிபுரத்தில் மொத்தமே 32 வீடுகள் தான். ஊரின் எந்த மூலையில் ஒளிந்தாலும் ஏதோ கண்கள் பார்த்துவிடக் கூடும் என்ற பயத்திலேயே இடம் தேடியிருக்கிறார். கடைசியாக பெரிய தோட்டத்தில் இருக்கும் பாழ்கிணறு சரியான இடம் என்று தேர்வு செய்து பொன்னாக்கவுண்டனே இறங்கி சுத்தம் செய்திருக்கிறார். முழுக்கிணறையும் சுத்தம் செய்யவில்லையாம். இவர்கள் மறைவாக அமர்ந்து ரொமான்ஸ் செய்யும் அளவிற்கு தோதான இடத்தை தயார் செய்திருக்கிறார்.

இப்படியே வளர்ந்த காதலுக்கு ஆசிட் ஊற்றும் விதமாக கிணற்றுக்குள் கும்மாளமடித்த இவர்களின் அட்டூழியத்தை பார்த்த ராசாக்கவுண்டன் பொன்னாக்கவுண்டனின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். பொன்னாக்கவுண்டனின் அப்பா மூன்று ஆட்கள் தின்னும் சோற்றை ஒரே ஆளாகத்தின்னும் கழுமுண்டராயன், பொன்னாக்கவுண்டனை பொடக்காலியில் விட்டு வெளுத்துக்கட்டிவிட்டார். 

ரங்கவண்ணானையும் தென்னை மரத்தில் கட்டி வைத்து இரண்டு நாட்களுக்கு அடித்திருக்கிறார்கள். ஏகப்பட்ட வலியிலும் வெறுப்பிலும் வீடு வந்த ரங்க வண்ணான் சின்னாளை வெள்ளாவியில் வைக்காத குறையாக நொக்கியிருக்கிறான். வலி பொறுக்க முடியாமல் சின்னாள் கதறியது கவுண்ட வளவில்லெல்லாம் கேட்டிருக்கிறது. ரங்கவண்ணான் அவளை இழுத்துச் சென்று வண்ணாரக்கருப்பராயன் முன்னால் சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறான். இனிமேல் பொன்னாக்கவுண்டனும் சின்னாளும் பார்த்தால் கூட அவளைக் கொன்றுவிட்டு தானும் செத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறான். அவன் செய்தாலும் செய்துவிடுவான்.

தன் அப்பனிடம் வாங்கிய அடியில் பொன்னாக்கவுண்டனுக்கும் முகம் பிய்ந்து தொங்குகிறது. வலி அடங்கும் வரை டைரி எழுதுவதை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறார். அதற்கு பிறகான ஓரிரு மாதங்கள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பொன்னாக்கவுண்டனுக்கும் சின்னாளுக்கும் கசமுசா நடந்திருக்கும் போலிருக்கிறது. 

பொன்னாக்கவுண்டன் சின்னாளை வைத்திருக்கிறான் என ஊருக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பதிலிருந்து சுவடி மீண்டும் தொடங்குகிறது. இந்தப் பேச்சால் வெறுத்துப்போன பொன்னாக்கவுண்டனின் பெற்றோர் அவனது மாமன் மகள் சரசாளையே கட்டி வைப்பதாக முடிவு செய்துவிட்டார்கள். இதைத் தெரிந்து கொண்ட சின்னாள் பொன்னாக்கவுண்டனிடம் அழுது தீர்த்திருக்கிறாள். இத்தனை நாள் சின்னாளை உறிஞ்சிய பொன்னாக்கவுண்டன் தன் புத்தியைக் அப்பொழுது காட்டியிருக்கிறான். நாம் இப்படியே இருந்துவிடலாம் என்றும் கடைசி வரைக்கும் உன்னை வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னானாம் இது ஒத்துவராத பட்சத்தில் செத்துப்போ எனச் சின்னாளிடம் எரிந்து விழுந்திருக்கிறான்.

எதிர்த்துப் பேசினால் கொன்று போடக் கூட தயங்கமாட்டான் என்பதால் சின்னாள் அமைதியாகிவிட்டாள். இரண்டொரு நாட்கள் மனம் அமைதியில்லாமல் கிடந்தவள் நேற்றிரவு தூங்கும் போது கறுக்கு அரிவாளை தலையணைக்கு அடியில் வைத்திருக்கிறாள். கறுக்கு அரிவாள் ரம்பத்தில் இருப்பதைப் போன்று பற்களைக் கொண்டிருக்கும். நெல் அறுக்க கறுக்கு அருவாளைத்தான் பயன்படுத்துவார்கள். பொன்னாள் தலையணைக்கு அடியில் அரிவாள் வைப்பதைப் பார்த்த ரங்க வண்ணான் அரிவாள் எதற்கு என்று கேட்டிருக்கிறான். ஒரு சாரைப்பாம்பை அறுத்து வீசப்போவதாகச் சின்னாள் சொல்லியிருக்கிறாள். ’பாம்பை அடித்துக் கொல்லாமல் அறுத்து வீசுவதாகச் சொல்லுகிறாள் கிறுக்கன் மவ’ என்று சிரித்துக் கொண்டே தூங்கிப்போனவன் அடுத்த நாள் அழுக்குத்துணி எடுக்கும் வீடுகளில் எல்லாம் இதைச் சொல்லியிருக்கிறான். எல்லோரது வீட்டிலும் சிரித்திருக்கிறார்கள். பொன்னாக்கவுண்டனுக்கு மட்டும் கோபம் உச்சிக்கு ஏறியது. ஆனால் யோசித்தவன் கோபத்தை அடக்கிக் கொண்டு ஆறேழு மாதங்களாக சின்னாளின் கண்களில் படாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறான். ஹைதர் அலி இறந்து திப்பு சுல்தான் பதவிக்கு வந்திருந்தான்.

Jun 5, 2012

அழிந்துவரும் தெருக்கூத்து- கொஞ்சம் கை கொடுங்கள்

எழுத்தாளர், மணல்வீடு சிற்றிதழின் ஆசிரியர், ஜிந்தால் இரும்பாலையின் கூலித்தொழிலாளி என மு.ஹரிகிருஷ்ணனுக்கு பன்மைத் தன்மை வாய்ந்த முகம். அவரது எழுத்துக்கள் விளிம்பு நிலை மாந்தர்களின் வலியையும் வேதனையும் இம்மிபிசகாமல் கொங்குத்தமிழ் நடையில் முன்வைப்பவை. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும் தனது உழைப்பையும், நேரத்தையும், வருமானத்தையும் அழிந்து வரும் தெருக்கூத்துக் கலைக்காவும், கலைஞர்களுக்காகவும் முழுமையாக அர்பணித்து வருகிறார். அழியும் கலைக்காக இத்தகைய அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் வேறு மனிதர்கள் யாரையும் நான் அறிந்திருக்கவில்லை.

இவரும் இவரது நண்பர் இர.தனபாலும் நிறுவிய களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் பல இடர்பாடுகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தெருக்கூத்து கலைக்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. அவற்றில் சில-

1) கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் ஆகியனவற்றை சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில் நிகழ்வுகள் நடத்தியது.

2) சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்திருக்கிறது.

3) கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ”அருங்கூத்து” என்றதோர் தொகைநூற்பிரதியையும், ”விதைத்தவசம்” என்றதோர் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

4) மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.

5) தெருக்கூத்து கலைஞர்களை உத்வேகப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது

மேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம், சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை சேலம்மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கவிருக்கிறது. எந்தவிதமான இலாப நோக்கமும் இல்லாத இம்முயற்சி அழிந்து வரும் கலையை காப்பாற்றுவதையும், விளிம்புநிலைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதையும், கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

இரண்டாயிரத்து எண்ணூறு சதுரடியில் அமைந்த பள்ளிக்கட்டிடம் மற்றும் வளாகம் திட்டமிடப்பட்டிருக்கிறது. மராமத்து பணிகள், மூன்று அறைகளுக்கு ஓட்டுக்கூரை வேய்தல், மின் இணைப்பு,கழிவறைஅமைக்க என மொத்தம் பதினான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறதாம்.

ஜிந்தால் இரும்பாலையில் கூலித்தொழிலாளியாக பணிபுரியும் தனியொரு மனிதனால் இந்தத் தொகையை ஏற்பாடு செய்வது என்பதில் இருக்கும் சிக்கல்களை புரிந்துகொண்டு நீங்கள் கனிவுடன் உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

கூத்துக் கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது பண்பாட்டு அடையாளமுமாகும். அவசர உலகமும் நுகர்வுக்கலாச்சாரமும் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கலைகளை காப்பதற்கு நாம் எந்தச் செயல்பாட்டினை முன்னெடுக்கவில்லை என்றாலும் கூட காக்க முயலும் தனியொரு மனிதனுக்கு உதவுவது கடமை என்று நம்பலாம்.

சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளவே முடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம் உடல்,பொருள்,ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள். அத்தகைய அரிதான கலைஞர்களை பாராட்டுவதும் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதலையும் கடமையாகக் கொண்டு செயலாற்றிவரும் நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் அழிந்து வரும் தொன்மையான கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றை நமது அடையாளங்களாக அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பும்
நமக்கிருக்கிறது. உங்களால் இயன்ற உதவியை அளித்து உதவுங்கள்.நீங்கள் அளிக்கும் ஒற்றை ரூபாய் கூட துளி சுமையைக் குறைக்கக் கூடும். எனவே உதவியின் அளவு பற்றிய தயக்கமில்லாமல் உதவுங்கள்.

இந்தத் தகவலை நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்.


தொடர்புக்கு:
manalveedu@gmail.com
9894605371

Kalari Heritage and Charitable Trust
a\c.no.31467515260 (sb-account)

State Bank of India
Mecheri branch
Branch code-12786.
IFSC code-SBIN0012786
MICRCODE-636002023

Jun 2, 2012

மின்னல் கதைகள் குறித்து- கடிதம்

அன்புள்ள மணி,

மின்னல் கதைகளின் வரிசையைப்பற்றி என் அபிப்பிராயத்தை சொல்வதானால் அது படைப்புத்திறமையின் மற்றுமொரு பிம்பம். மொத்தமாக கதைத் தொகுப்புகளுக்கு வேறு பெயர் கொடுத்துவிட்டதால் அது சிறுகதை என்கிற வடிவத்திலிருந்து மாறுப்பட்ட மற்றொரு வடிவம் என்று ஆகிவிடுகிறது. நவீனக் கவிதைகள் எழுதும் ஒருவர் வெகுஜன கதைகளைக் கையாள்வது என்பது அக்குறிப்பிட்டவரின் பன்முக மன அமைப்பைப்  பற்றியது. அதில் சுஜாதா தெரிகிறார் இதில் பாலகுமாரன் தெரிகிறார் என்பது வாசிப்பைப் பொருத்தது.

இப்படி எடுத்துக்கொண்டால் சுஜாதா கூட 'நகரம்','ஆட்டக்காரன்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளில் மற்ற சிறுகதைத் தொகுப்புகளைப் பார்க்கும்போது தனது பிரதியின்மையைக் காட்டினார். நாஞ்சில் நாடன் 'கும்பமுனிக் கதைகள்','கல்யாணக்கதைகள்' என்று வேறு சில பெயர்களில் சிறுகதைகள் அல்லாத கதைகளை எழுதினார். அது அவரது யதார்த்த எழுத்திலிருந்து வேறுபட்டிருந்தது.

உங்களின் கவிதைகள் மூலம் நீங்கள் வெளிப்பட்டதை பரந்த உலகுக்கு சென்றுசேரும் கதைகள் மூலம் வெளிப்படுவது வாசகர்களுக்கு சற்று நெருடலாக இருப்பதுபோல் தோன்றுமே தவிர இது போன்று முயற்சிப்பது என்பது எத்தனை பேர் செய்வார்கள் என்ற வினாவிற்கு உரியதே. 

பொதுவாகவே ஆங்கிலத்திலிருந்து நம்மவர்கள் கறந்து இந்திய தமிழக கலாச்சாரத்தின் சாயம் கலந்து படங்களை எடுப்பதும் அதற்கு ஆதாரமாக ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் மின்னஞ்சல்களிலும் வார இதழ்களிலும் உலாவுவதும் அனைவரும் அறிந்தது. அப்படி சில வருடங்களுக்கு முன் "The Life of The David Gale" என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன். அது நமது விருமாண்டியை நினைவூட்டினாலும் அதில் நம்மவர் எடுத்துக்கொண்ட ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா பாணியும் கதையின் தெளிவும் குறிப்பிடத்தக்கதாகவும் நான் கண்ட படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும் இருந்தது. உலக முயற்சிகளிலேயே இது போன்ற பின்பற்றுதல்,சாயல்தன்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் சரக்கு எப்போதும் நம்முடையதாக இருக்கிறது.

நவீன இலக்கியத்தை அடைவதற்கு இத்தகைய முயற்சிகள் ஒரு படிக்கட்டாக அமையும்போது மற்ற சிலரும் மணிகண்டனின் சாயலையொத்த கதையினை எழுத ஆரம்பிப்பார்கள் என்பதே என் கருத்து. 


அன்புடன்
ஆ. கிருஷ்ணகுமார்
                                                        ***

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

முதலில் இந்தக் கடிதத்தை என்னால் பாராட்டுக்கடிதமா அல்லது வசவுக்கடிதமா என்று தரம் பிரிக்க முடியவில்லை. அது அவ்வளவு முக்கியமுமில்லை. ஒருவர் மெனக்கெட்டு மற்றவரின் படைப்பு குறித்து சில
வரிகளை எழுதுகிறார் என்பதே மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு. அதுவே அந்த எழுத்திற்கான அங்கீகாரமும் கூட.

கவிதையோ, கதையோ, விமர்சனமோ- ஏதோ ஒன்றை எழுதி முடித்த இரவு மகிழ்ச்சியாக உறங்க முடிந்தால் அதுவே என்னளவில் திருப்தியான தருணம். 
அதைத்தான் சமீப காலங்களில் மின்னல்கதைகள் எனக்குத் தந்து கொண்டிருக்கின்றன. க்ளிஷேவாகச் சொன்னால் ஆத்மதிருப்தி. இந்தக் கதைகளை என் உரைநடை எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்காகவே எழுதத் துவங்கினேன்.

ஆனால் இந்தச் சின்னஞ்சிறு கதைகள் பெற்றுத்தந்து கொண்டிருக்கும் எதிர்வினைகள் தொடர்ந்து எழுதச் செய்வதற்கான உத்வேகத்தைத் தருகின்றன. இவை எதிர்பாராத மனிதர்களிடமிருந்து கிடைக்கும் எதிர்பாராத பாராட்டுகளாகவோ அல்லது குட்டுக்களாகவோ இருக்கின்றன.

“சுவாரசியம்” என்ற ஒரு அம்சத்தைத் தவிர தற்சமயத்தில் வேறு எந்த நோக்கமும் இந்தக் கதைகளில் இல்லை. நகர்ந்து கொண்டிருக்கும் போது அவை தமக்கான சரியான திசையைக் கண்டறிந்துவிட முடியும் என நம்புகிறேன்.

உங்களின் மின்னஞ்சலுக்கு உளப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்.
மணிகண்டன்
01-06-2012 11.24 pm