Apr 26, 2012

மழையில் முளைத்த காமம்
ரவி தனது நீல நிற ஸ்பெளண்டர் ப்ளஸ் வண்டியை வாங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடியப்போகிறது. ஏழாயிரம் கிலோமீட்டர்கள் ஓட்டியிருந்த அந்த வண்டியில் ஒரு கீறல் கூட விழாமல் வைத்திருக்கிறான். காலையில் டூத்ப்ரெஷுக்கு பற்பசை போட மறந்தாலும் கூட வண்டியை துடைக்க மறப்பதில்லை. ’தினமும் அரை மணி நேரத்துக்கும் குறைவில்லாமல் வண்டியைத் துடைக்கிறேன்’ என்பதே அவனுடைய பெருமைமிகு வாசகமாக அவனோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. நான்கு பேர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது இரண்டு மூன்று பேர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதோ தவறாமல் இதைச் சொல்லிவிடுகிறான். கூடவே இருக்கும் இப்ரஹிம் இதைக் திரும்பத் திரும்பக் கேட்டு எரிச்சல் ஆகிக் கொண்டிருக்கிறார் என்பது ரவிக்குத் தெரிந்தாலும் அவனால் தனது பிரதாபத்தை அடக்க முடிவதில்லை. இப்பொழுது அது பிரச்சினையில்லை மூன்றாண்டுகளில் ஒரு பெண் கூட தனது வண்டியில் ஏறியதில்லை என்பதுதான் ரவியின் வருத்தம். தன்னை விடவும் தனது வண்டிக்கு இது பெரும் வருத்தம் என்கிறான். வண்டி நினைப்பது பற்றி இவனுக்கு எப்படித் தெரியும் என்று கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 
பெங்களூரில் இன்று கோடை மழை பின்னியெடுத்துவிட்டது. மழை வரும் முன்னே ட்ராபிக் வரும் பின்னே என்பது பெங்களூருக்குச் சாலப் பொருந்தும். வெந்து தணிந்துகொண்டிருந்த கான்கிரீட் காடு கொஞ்சம் தாகம் தீர்த்துக் கொண்டிருந்த ஆறு மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு ரவி கிளம்பிவிட்டான். கோடைகாலம் என்பதால் வெளியில் இன்னமும் வெளிச்சம் மிச்சமிருந்தது. அவன் தனது அலுவலகத்தில் இருந்து மூன்றாவது சிக்னலைத் தாண்டியவுடன் மழை மீண்டும் ஆரம்பித்திருந்தது. மழையை சபித்தவன் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவள் லிப்ட் கேட்டதை நம்பமுடியாமல் திகைத்து பிரேக் அடித்தான். சிவப்பு நிற டீ-சர்ட்டும், கறுப்பு நிற ஜீன்ஸூம், வெள்ளை நிறத்தில் ஹூவும் அணிந்திருந்த அட்டகாசமான அஸ்ஸாம் பெண் அவள். இனி அவளை பற்றிய வர்ணிப்புகளை நீங்களே கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான்.

அடுத்த இரண்டு கிலோமீட்டர்களில் இறங்கிக் கொள்வதாகக் கூறினாள். அந்த மென்குரலில் தான் வழுக்கிவிழுந்துவிடக்கூடும் என பயந்து வண்டியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். இன்று வழக்கமாக முதுகில் அணிந்துகொள்ளும் பையை எடுத்து வராமல் வந்திருந்தான். பை எடுத்து வராதது அதிர்ஷ்டமா துரதிருஷ்டமா என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனது தோள்களை ஸ்பரிசித்து இரு புறமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்தாள். மழை பெருக்கெடுக்கத் துவங்கியிருந்தது. இப்பொழுது மழை மீதான தனது சாபத்தை வாபஸ் பெற்றுக் கொண்டான். மழை நிற்கும் வரைக்கும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒதுங்கிக் கொள்ளலாமா என்று அவளிடம் கேட்டதற்கு “உங்க இஷ்டம்” என்றாள். வண்டி நகர்ந்து கொண்டிருந்தது.

வண்டி ஓட்டும் போது “சொட்ட சொட்ட நனையவைத்தாய்” பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். நெருக்கிக் கொண்டிருந்த ட்ராபிக்கில் துளித் துளியாக வண்டியை நகர்த்தியதில் அவள் சொன்ன இடம் வந்திருந்தது. அரை மனதாக வண்டியை நிறுத்தினான். இதுவரை அவளின் பெயரைக் கூட கேட்காதது கையில் இருந்து பழம் நழுவிக் கொண்டிருக்கும் நினைப்பை உருவாக்கியிருந்தது. மழை அதிகமாக இருக்கிறதே வீட்டுக்கு வாங்க என்று அவள் அழைத்த போது நழுவிய பழம் பாலுக்குள் விழுந்து கொண்டிருந்தது. 
வீட்டிற்குள் நுழைந்தபோது யாரும் இல்லை. அவள் பெயர் தீபாலி சின்ஹாவாம். ரவிஷங்கர் தண்டாயுதபாணி என்று தனது முழுப்பெயரையும் சொல்ல வெட்கப்பட்டு ரவி என்றான். ஈரத்தை துடைக்கத் துண்டை எடுத்துத் தந்தாள். அந்தத் துண்டில் ஃபாண்ட்ஸ் பவுடர் மணந்தது. இனி நடக்கப்போவது தமிழ் சினிமாவில் நீங்கள் பார்த்துச் சலித்த காட்சிகள் என்பதால், இந்தக் கதைக்கும் ‘யு’ சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்பதற்காக சென்சார் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். அவன் அவளது நெற்றியில் முத்தமிட்டுத் தொடங்கிய காட்சியை மட்டும் விவரித்துவிடுகிறேன். அவன் அவளது நெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த போது அவள் தனது கண்களை மெதுவாக மூடினாள். அது கண்களை மூடுதல் இல்லை. கண்களைச் செருகுதல். 

இன்னும் கொஞ்சம் அவளை நெருங்கிய போது அவள் ஏதோ முனகத்துவங்கினாள். அவளின் வெப்பக்காற்று அவனது கழுத்து ஈரத்திற்கு இதமளித்தது. அவளது முனகலையும் மீறி ‘க்ரீச்’ என ப்ரேக் அடிக்கும் சப்தம் கேட்டது. ரவி மீது ஸ்பெளெண்டர் ப்ளஸ் கிடந்தது. இதுவரை கீறல் இல்லாத வண்டியில் பெரும் கீறலும் ஒடிசல்களும் புரியாத ஓவியங்களை உருவாக்கியிருந்தன. ரவி தனது முட்டியின் காயங்களை பார்த்துக் கொண்டிருந்தான். செருப்பை குருதி நனைத்துக் கொண்டிருந்தது.

அவன் அலுவலகத்திலிருந்து வண்டியை எடுத்த கணத்திலிருந்து கனவு கண்டிருப்பான் போலிருக்கிறது. நான்தான் இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மையிலேயே நடக்கின்றன என நம்பிவிட்டேன். லிப்ட் கொடுப்பவனையெல்லாம் எந்தப்பெண்ணாவது படுக்கை வரைக்கும் அனுமதிப்பாளா என்று நான் யோசித்திருக்க வேண்டும் அல்லது நீங்களாவது ஆரம்பத்திலேயே சொல்லி இந்தக் கதையை முடித்திருக்க வேண்டும். இப்பொழுது பாருங்கள் தமிழ்ச் சூழலில் இன்னுமொரு கதை உலவ ஆரம்பித்துவிட்டது. 

Apr 25, 2012

பருவம் மாறும் பிரியம் அல்லது வேறெதுவும்அது துவக்கத்தில் மிக எளிதானதாக இருந்தது
உறைந்த தேங்காய் எண்ணெயில் கீறப்படும் கோடு என
நீங்கள் குறிப்பிட்டபோது
வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்த ரோஜாப்பதியனின் பனித்துளிகளை
மென்சுண்டுதலில் சிதறடித்துக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கிறது

அதுவே பிறகு சற்று கடுமையானதானது
கறிவேப்பிலை மரத்தில் பூச்சி பிடித்திருந்த அந்தப் பருவத்தில்
வெடித்திருந்த பாதைகளில்
நடந்து களைத்திருந்தேன்
தாகம் உதடுகளை வறண்டுவிடச் செய்கையில்
அந்த ஈ
முகத்தில் விளையாடிக்கொண்டிருந்தது
நாம் பற்கள் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டோம்

இப்பொழுதெல்லாம் மிகச் சிக்கலானதாகிவிட்டது
முறுக்கேறி கன்னங்கள் பிளந்து கிடக்கின்றன
அவ்வப்பொழுது இரத்தம் போன்ற திரவம் பிசுபிசுத்து அப்பியிருக்கிறது
இந்த அவலத்தை நீங்கள் பார்த்துவிட வேண்டாம்
உங்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாத
நான்
அழுவது குறித்தான நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்.

Apr 24, 2012

வருங்கால குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்: வாழ்த்துக்கள்அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத்தலைவர் ஆக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் துவங்கியிருக்கின்றன. தமிழர், விஞ்ஞானி, சிறுபான்மை சமூகத்தவர், குழந்தை நேசன் என்ற பல்வேறு முகமூடிகளை வெற்றிகரமாக அணிந்துகொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர வேறு எதைச் சொன்னாலும் உங்களை நோக்கி தேசத்துரோகி என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கலாம் என்பதனால் எதிர்ப்பதையெல்லாம் விட்டுவிட்டு இந்திய வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக தமிழனொருவன் குடியரசுத்தலைவர் ஆவதாக புளாங்கிதம் அடையலாம்; 2020 இல் இந்தியாவை வல்லரசாக்க துடிக்கும் விஞ்ஞானி மீண்டும் ஒருமுறை குழந்தைகளை வழிநடத்த வரவிருப்பதாக உற்சாகம் கொள்ளலாம் அல்லது எளிமையின் எவரெஸ்ட், கனவுகளால் கட்டப்பட்ட பிரம்மச்சாரி ஒருவர் மீண்டும் இந்த தேசத்தை கனவு காணச் சொல்ல வருகிறார் என விசில் அடிக்கலாம்.

அதேசமயம் பிரதீபா பாட்டிலுக்கு முன்பாக குடியரசுத்தலைவராக இருந்த அப்துல்கலாம் அந்த ஐந்து ஆண்டுகள் காலமும் என்ன சாதனைகளைச் செய்தார் என்ற கேள்வியை அப்துல்கலாமின் எதிர்ப்பாளர்கள் எழுப்பக்கூடும். அதற்கான பதிலை இந்தியவாத ஊடகங்கள் இன்னும் சில தினங்களில் கர்மசிரத்தையாக தங்களின் பக்கங்களில் கசியச் செய்வார்கள். வழவழப்பான தாளில் புன்னகை சிந்தப்போகும் அப்துல்கலாமின் படங்களுக்குக் கீழாக அவர் ஏவுகணை செலுத்தியதையும், பொக்ரானில் அணுகுண்டை வெடித்து பாகிஸ்தானுக்கு பராக்கு காட்டியதையும் எழுதி நம்மை மெய்சிலிர்க்கச் செய்வார்கள். 

தன் பதவிக்காலம் முடிந்த போது தன்னையே அடுத்த முறையும் குடியரசுத்தலைவர் ஆக்குவார்கள் என ஏங்கிக் கொண்டிருந்ததை நாசூக்காக மறைத்து தான் பதவிகள் மீது விருப்பமற்றவன் என்றும், ஏவுகணை செய்வதைவிடவும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு எடையற்ற செயற்கைக் கால்கள் செய்ததே தனது பெரும் சாதனை என்றும் தன் பிரதாபங்களை அடுக்கும் அப்துல்கலாமை சந்தேகிப்பவனை தெருவில் நிறுத்தி சுடுவதை விடவும் வேறு எந்த தண்டனை பொருத்தமானதாக இருக்க முடியும்?

இந்தச் சாதனையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு அப்துல்கலாமின் பிற சாதனைகளைத் தேடினால் தன் பதவிக்காலம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளைச் சந்தித்திருக்கிறார் என்பதனைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்க மறுக்கிறது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட குஜராத் படுகொலைகளுக்குப் பிறகாக அதே ஆண்டு ஜூலையில் ராஷ்டிரபதி பவனின் நாற்காலியை அலங்கரிக்கத் துவங்கிய அப்துல்கலாம் இந்தக் கலவரத்திற்கெதிராக அரசுக்கு என்ன அறிவுறுத்தல்களை மேற்கொண்டார் என்ற கேள்வியும் துருத்திக் கொண்டு நிற்கிறது. தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல் மைல் தூரத்தில் கசக்கியெறியப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக குறைந்தபட்ச குரலையாவது உயர்த்தினாரா இந்தத் தமிழர் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

இந்துத்துவ தேசியவாத அமைப்புகள், ஒரு முஸ்லீம் இந்தியாவில் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றனவோ அந்த எதிர்பார்ப்பிலிருந்து துளிபிசகாமல் வாழும், பகவத் கீதையை தினந்தோறும் வாசிக்கும் “இசுலாமியராக” இருப்பதைத் தவிர அப்துல்கலாமை ஆதரிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு காரணமும் வெளியில் தெரிய மறுக்கிறது. உத்தரப்பிரதேசத்திலும், மஹாராஷ்டிராவிலும் முஸ்லீம்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதைத் தவிர சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவக்கும், சரத்பவாருக்கும் அப்துல்கலாமின் வேறு எந்த சாதனைகள் கண்ணை உறுத்துகின்றன என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

தேசியவாதம் பேசிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இங்கு ஒரு முகத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முகம் இந்த தேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் படித்த, நடுத்தர மனோபாவத்திற்கு ’இந்திய ரத்தத்தை’ பாய்ச்சுவதற்கும், துப்பாக்கியில் நிரப்புவதற்கு ரவை தீர்ந்து கிடக்கும் இந்திய ராணுவத்தை உலகின் பெரும்பலம் வாய்ந்த ராணுவம் என பொய்யாக சித்தரிப்பதற்கும் உதவும் முகமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியைச் சாராதவர் என்ற பிம்பம் அந்த முகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். படித்த நடுத்தர மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பின் இன்னும் உசிதம். அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்சியாளர்களுக்கு அப்துல்கலாமின் முகம் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. 

குழந்தைகளிடம் கனவு காணச்சொல்லும் அப்துல்கலாம் இந்த நாட்டின் கல்விமுறைகளில் நிகழ்த்தப்பட வேண்டிய மாறுதல்கள் குறித்தான திட்டம் எதுவும் கொண்டிருக்கிறாரா என்பதும், கிராமப்புற குழந்தைகளின் மேம்பாட்டிற்கான என்ன திட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் பதில் இல்லாத வேறு சில கேள்விகள் என்றாலும் ஒரு தேசியவாதியின் செயல்பாடு குறித்து சந்தேகிப்பவர்களை பிரிவினைவாதி என்றோ கலகக்காரன் என்றோ உதாசீனப்படுத்திவிடலாம்.

அவர் குடியரசுத்தலைவராக இருந்த போதுதான் வடகிழக்கு மாநிலங்களில் அரசபயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதும் மஹாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனதும் ஞாபகத்திற்கு வருகிறது. 

குடியரசுத்தலைவருக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பணிகள் மற்றும் ஆட்டோகிராப் வாங்கவும், கைகுலுக்கவும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் முகம் இத்தகைய ’சின்னச்சின்ன’ பிரச்சினைகளை அவரிடம் இருந்து மறைத்திருக்கக்கூடும் என்பதை நீங்களும் நானும் புரிந்துகொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.

குடியரசுத்தலைவராக இல்லாத போது அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது என்று அத்தாட்சி வழங்குவதற்கும், அணுமின் நிலையங்களே இந்தியா வல்லரசாகுவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கும் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட அப்துல்கலாம் என்னும் ’விஞ்ஞானி’ அணுமின் நிலையங்களால் பாதிக்கப்படவிருக்கும் மக்களுக்கான மாற்றுவழிகள் எதையும் முன்வைக்க மறந்துபோயிருக்கிறார். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை குடியரசுத்தலைவர் ஆனபிறகு ’மாற்றுவழிகள்’ பற்றிய கனவுகளைக் காண்பதற்கான வழிகளை நமக்குச் சொல்லித்தர காத்திருக்கிறார் வருங்கால வல்லரசின் வருங்கால மேதகு குடியரசுத்தலைவர்.

ஜெய் ஹிந்த்!


Apr 16, 2012

டைனோசர்களுடன் வாழ்பவன்


டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை
தெருவோரம் கிடந்த டைனோசர் குட்டியை
முதன் முதலாக
அவர் எடுத்து வந்தபோது
அருகாமையில் எதிர்த்தார்கள்
அக்குட்டி வளர்கையில்
இரத்த கவிச்சை வீச குறையத் துவங்கியது
எதிர்த்தவர்களின் எண்ணிக்கை
இப்பொழுது நிறைய டைனோசர்களை வளர்க்கிறார்
அவைகளுக்கென வீடுகளை
வாடகைக்கு பிடிக்கிறார். வீடு தராதவர்களை
அவைகளுக்கு உணவாக்கி விடுவதாக மிரட்டுவதும் உண்டு
அதன்பிறகாக வாடகை தருவதில்லை
டைனோசர்கள் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவதை
அவரின் பாதத்தை தம் சொர சொர நாவினால் தடவுவது உட்பட-
ஜன்னலில் ஒளிந்து பார்த்திருக்கிறேன்
சமீபமாக
வீடுகளுக்கு அதிக சேதாரமில்லாமல்
அவை
அடங்கி வாழக் கற்றுக் கொண்டதாக டீக்கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார்
டைனோசர்களுடன் வாழ்வது எப்படி என்ற புத்தகம் வாசிப்பதை 
தினசரி வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு
டைனோசர்களின் அருகில்
அவன்
என் குழந்தையயை தூக்கிச் சென்றதாக கேள்விப்பட்ட
வெள்ளிக்கிழமையிலிருந்து
விரல்கள் சில்லிட்டுக் கிடக்கின்றன
எதிர்க்கவே முடியாத மனிதனிடம்
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை
கூகிளில் தேடி
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன
இதுவரை கடுமை காட்டப்படாத குழந்தையிடம்
இனி அவனிடம் போகக்கூடாது என மிரட்டிய கணம்
அதன் பற்கள் சிமிட்டியதை பார்த்தேன்.


நன்றி: 361 டிகிரி சிற்றிதழ்

Apr 11, 2012

கவிதையில் புறச்சூழல்-ஓசூர் கவிதையுரையாடல்


ஓசூரில் ஏப்ரல் 08 ஆம் நாள் நிகழ்ந்த கவிதை உரையாடலில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை தமுஎகச-புது எழுத்து இணைந்து உருவாக்கித் தந்திருந்தார்கள். றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” சாகிப் கிரானின் “வண்ணச்சிதைவு” ஆகிய தொகுப்புகள் உரையாடலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. சாகிப்கிரானின் தொகுப்பு குறித்தான கட்டுரையை சமயவேல் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்க, அந்தக் கட்டுரையை முகிலன் வாசித்தார். அதைத் தொடர்ந்து றியாஸின் தொகுப்பு குறித்து எச்.பீர் முகமது கட்டுரை வாசித்தார். ஒவ்வொரு தொகுப்பு குறித்தும் இருவர் பேசுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது என்பதனால் இவர்களைத் தொடர்ந்து ”வண்ணச்சிதைவு” பற்றிய கட்டுரையை சம்பு வாசிக்க, நான் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” குறித்து கட்டுரை வாசித்தேன்.

கட்டுரை வாசிப்பினைத் தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது. நான் கலந்துகொண்ட வரையிலும் ஓசூரில் நிகழும் இலக்கிய உரையாடல்கள் எப்பொழுதுமே இதமானதாக இருந்திருக்கின்றன. ஆதவன் தீட்சண்யா, பா.வெங்கடேசன் உரையாடல்களை சுவாரசியமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஸ்ரீனிவாசன்,பெரியசாமி,முகிலன்,சம்பு போன்றவர்கள் மிகுந்த அன்புடன் பழகுவார்கள். வீடு திரும்பும் போது ஏதோ ஒன்று குறித்து “உருப்படியாக” பேசிய திருப்தி இருக்கும். 

கூட்டத்தில் புது எழுத்து மனோன்மணி அவர்களை நீண்டகாலத்திற்கு பிறகாக சந்திக்க முடிந்தது. இந்தப்பருவத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் கவனம் பெற்ற தொகுப்புகளான வெய்யிலின் “குற்றத்தின் நறுமணம்”, றியாஸ் குரானாவின் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு”, சபரிநாதனின் “களம் காலம் ஆட்டம்”, பாம்பாட்டிச் சித்தனின் “இஸ்ரேலியம்” ஆகிய தொகுப்புகளை புது எழுத்துதான் வெளியிட்டிருக்கிறது என்பது கவிதையின் வாசகனாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதனை கட்டுரை வாசிப்பதற்கு முன்பாக சுட்டிக் காட்டி சந்தோஷம் அடைந்து கொண்டேன்.

ஓசூர் நண்பர்களைத் தவிர்த்து பெங்களூரிலிருந்து ராம் சின்னப்பயல், கிருஷ்ணகுமார், திரு, கன்னட கவிஞர் கோவிந்தராஜ் ஆகியோரும், பெயர் பரிச்சயமில்லாத இன்னும் பல நண்பர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

                                                                 ****

இலக்கிய அரங்குகளில் கட்டுரை வாசிப்பதோடு நின்றுவிடுகிறேன். உரையாடலில் நான் அதிகமும் கலந்துகொள்வதில்லை. ‘கொள்வதில்லை’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘கொள்ளமுடிவதில்லை’ என்பது பொருந்திவரக்கூடும். 

விவாதத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த விவாதத்திற்கான பதிலை அல்லது எனது கருத்தை வெளிப்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை பதட்டத்துடன் மனதிற்குள் கோர்க்கத் துவங்கிவிடுகிறேன். கோர்த்து முடித்து பேசத் தயாராகும் போது விவாதம் வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கும். பிறகு அமைதியாகிவிடுகிறேன். நண்பர்களுடன் தனித்து இருக்கும் போது நீண்ட நேரம் கவிதைகள் குறித்து பேசும் என்னால் கூட்டத்தில் பேச முடியாதது வியப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. கோர்த்த தரவுகள் பிறிதொரு சமயம் கட்டுரையாக எழுதிவிடுவதற்கு பயன்படுகின்றன என்பதே விவாதத்தை முழுக்கவனத்துடன் கவனிக்கச் செய்யும் உந்துதலை அளித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்திலும் ஆதவன் தீட்சண்யாவும், பா.வெங்கடேசனும் முன்வைத்த கருத்து ஒன்றிற்கு பதிலளிக்க வேண்டும் என விரும்பினாலும் அதிகம் பேசாமல் மெளனமாக இருந்தேன். றியாஸ் குரானாவின் கவிதைகளை வாசிக்கும் வாசகரால், றியாஸ் வாழ்ந்த காலத்தின் புறச்சூழலையோ அந்தச் சூழல் எதிர்கொண்ட நெருக்கடிகளையோ காண முடியவில்லை என்று ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்டார். கவிஞனின் சூழல் சார்ந்த நெருக்கடி அல்லது புறச்சூழல் குறித்தான எந்தவிதமான சுவடுகளும் இந்தத் தொகுப்பில் இல்லை என்று பா.வெங்கடேசன் பதிவு செய்தார். 

கவிதையில் புறச்சூழல் குறித்தான பதிவு அவசியமில்லை என்பது என் நிலைப்பாடு. புறச்சூழல் பற்றிய பிம்பத்தை வாசகனுக்கு அந்தக் கவிதை உருவாக்கினால் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் புறச்சூழல் கவிதையில் இடம் பெறாத போது ’ஏன் புறச்சூழலை கவிதை பேசவில்லை’ என்று கவிஞனைப் பார்த்து கேட்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

கவிஞன் வாழும் சூழலில் அவன் கவிதையாக்கிவிடுவதற்கான ஆயிரமாயிரம் அனுபவங்களும் காட்சிகளும் விரிந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எவற்றை கவிதையாக்க வேண்டும் என்பதும் எவற்றை தவிர்த்துவிட வேண்டும் என்பதும் கவிஞனின் படைப்பு சார்ந்த உரிமை. கவிஞன் காலத்தின் பிரதிநிதியாகவோ அல்லது நிலத்தின் பிரதிநிதியாகவோ இருக்க வேண்டியதான அவசியமில்லலை என்பதைப் போலவே கவிதையும் காலத்தையும் நிலத்தையும் பதிவு செய்ய வேண்டிய தரவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கவிதையின் வழியாக கவிஞன் தன் சிந்தனாமுறையையும்(Thought Process) அதனூடாக தன் அந்தரங்க அனுபவத்தையும் வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த வெளிப்பாடு கவிஞன் என்ற மனித ஆத்மாவின் அந்தரங்கத்தின் வெளிப்பாடுதான். அந்த அந்தரங்க வெளிப்பாட்டை கவிஞனின் பெயரோடு சேர்த்து வாசிக்க வேண்டிய தேவையில்லை. கவிதையை வெறும் பிரதியாகக் காண்பதும்,  அந்தப்பிரதியின் வழியாக பெயரற்ற ஒருவனின் சிந்தனை வெளிப்பாட்டு முறையையும், அனுவத்தையும் புரிந்து கொள்வதும், அந்தப் பிரதி வாசகனின் அனுபவத்தில் உருவாக்கும் சலனத்தையும், வாசக மனதிற்குள் கலைத்துப் போடும் வர்ணங்களையும்தான் கவிதை தரக்கூடிய வாசிப்பனுவம் என்று நம்புகிறேன்

அந்தரங்கமான அனைத்து செயல்பாடுகளையும் அல்லது ஆசைகளையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் தனிமனிதனுக்கு இல்லாதது போலவேதான் கவிஞனுக்கும் தான் சார்ந்த அனைத்துச் சூழல்/அனுபவம் குறித்து வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

நேரடியாகச் சொல்ல முடியுமானால் பெயரற்ற அல்லது அடையாளமற்ற இருவருக்கு இடையிலான அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையாக மட்டுமே கவிதை இருந்தால் போதும் என்றும் அது புறம், காலம், நிலம் என்ற எந்தக் கூறு குறித்தும் பிரதிநிதித்துவப் படுத்த தேவையில்லை எனவும் கவிதையின் வாசகனாக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.

றியாஸ் ஏன் போர்ச்சூழலை கவிதையில் கொண்டு வரவில்லை என்ற வினாவிற்கான பதில் “அது அவரின் உரிமை” என்பதாக இருக்கக் கூடும். அவர் தன் போர்ச்சூழலை எழுதாமல் தவிர்த்திருப்பதே கூட போரில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான கருவியாக தம் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்.


Apr 4, 2012

திசை எனும் வாகனங்கள்

இலங்கையின் பொத்துவில் என்னும் ஊரிலிருந்து அகமது பைசால் என்னும் நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது அடுத்த கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரை எழுதித் தரக் கேட்டபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அவரின் கவிதைகள் எனக்கு இதுவரை அறிமுகமானவை இல்லை என்பது அடிப்படையான காரணம். கவிதைகள் மனதுக்கு நெருக்கமானவையாக இருப்பின் நிச்சயம் கவிதைகள் குறித்து எழுதுவதாக உறுதியளித்திருந்தேன். கவிதைகளை பிரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். விட்டுவிட்டு பெய்யும் மழை போல. 

திசை எனும் வாகனங்கள்” என்ற ஒரு கவிதை இது.

திசைகள்
தன் கால்களையும், கைகளையும்
அகல விரித்து தெருவெல்லாம் கிடக்கின்றன 


நான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்
அது பராக்குக் காட்டி என்னை கூட்டிச்செல்கின்றன


போகும் வழியில்
பள்ளிக்கால நண்பனைக் கண்டு  
கொஞ்சம் அவனோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
விடைபெறும் நேரத்தில்
அவனிடமும் ஒரு திசையை வாங்கிக்கொண்டேன்
அது வைத்திய சாலைக்குப் போகும் திசை


என் எதிரில் ஒரு திசை
மண்ணில் உருண்டு புரண்டு என் முகத்தை ஆவலாகப் பார்க்கிறது
அது என் காதலியின் வீட்டுக்குப்போகும் திசை
அது என் கழுத்தை இறுக்கி என்னைக் கைது செய்கின்றது


இப்போது நான் 
திசைகளை கடலில் கொண்டுபோய் கரைக்கின்றேன்
கடலுக்குள் இறங்கிய ஒரு திசை
முதலாம் கடலை முதுகில் ஏற்றிக்கொண்டு 
சீனா செல்கின்றது
அங்கேயும் ஒருவன்
கடல் நீரில் திசைகளைக் கரைத்துவிட்டு
வெளிறிய கால்களுடன் திரும்பிச் செல்கின்றான்


புதிய திசைகள் 
அவனது கால்களில் ஒட்டிக்கொள்கின்றன

கடலைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களின் திசைகளை கடலினுள் கரைத்துவிடுகிறார்கள். கடல் அத்தனை திசைகளையும் தனக்குள் அமிழ்த்திக் கொண்டு திசையற்றதாகவும், திசைகள் குறித்த எந்தவிதமான பிரக்ஞையுமற்றதாகவும் தன் நீல அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திசைகளின் மீதான கடலின் தீர்க்கவே முடியாத பசி பற்றிய சிந்தனையை இந்தக் கவிதை உருவாக்கியது. இனி எப்பொழ்து கடலை பார்த்தாலும் இந்தக் கவிதை நினைவுக்கு வரக்கூடும். நண்பனிடம் பெற்றுக் கொண்ட வைத்தியசாலைக்கான திசை, காதலியின் இல்லம் அமைந்திருக்கும் திசை, சீனத்தில் திசையைக் கரைக்கும் இன்னொருவன் என்பவை இக்கவிதையில் கிளை புனைவுகள். கவிதை வாசித்த கணத்திலிருந்து இந்த கிளை புனைவுகள் வெவ்வேறு மனநிலையை உருவாக்கி அலைவுறச் செய்து கொண்டிருக்கின்றன.

பைசால் அகமதுவின் இன்னும் சில கவிதைகளை நிலத்தோடு பேசுகிறேன் என்னும் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.

Apr 3, 2012

தேரி கவிதையுரையாடல்: சிவந்த மண்ணில் சிதறியவை


பிப்ரவரி 18 ஆம் நாள் தூத்துக்குடிக்கு அருகாமையில் கவிதை உரையாடல் நிகழ்வை 361 டிகிரி மற்றும் அகநாழிகை சிற்றிதழ்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தன. அம்மாவட்டத்தில் புதுக்கோட்டை என்னும் சிற்றூரிலுள்ள ஒரு தோப்பில் இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்களும், கவிதை சார்ந்து இயங்குபவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. வாசகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிருஷ்ணகுமார் தொடங்கி சமயவேல், கோணங்கி உள்ளிட்ட சென்ற தலைமுறைகளின் படைப்பாளர்கள் வரை பங்கேற்று நவீன கவிதை சார்ந்து உரையாடினார்கள். 

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சில நண்பர்கள் முந்தைய இரவிலேயே வந்திருந்தார்கள். பிறர் அதிகாலையிலிருந்து தேரித் தோட்டத்தில் கூடத் துவங்கினார்கள். ஆறரை மணியிலிருந்து நெல்லிக்காயை கடித்தும், வேம்பின் கிளைகளை முறித்தும், மயில் இறகை சேகரித்துக் கொண்டும் நீர்த்தொட்டியில் குளிக்கத்துவங்கியவர்கள் தோட்டத்தின் பெரும் நிசப்தத்தை சிரிப்பின் அதிர்வுகளால் சலனமூட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள். கதிர்பாரதி, கார்த்திகை பாண்டியன், நேசமித்ரன், கறுத்தடையான் முதலானோரை இந்த நிகழ்வில் முதன்முதலாக சந்திக்க முடிந்தது. 

பங்கேற்பாளர்களுக்கான மூன்று வேளை உணவையும் தோப்பிலேயே தயார் செய்து கொண்டிருந்தார்கள். காலை சிற்றுண்டிக்கு பிறகாக பத்தரை மணியளவில் தோட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது. மேடைxபார்வையாளர் என்ற மரபு விலக்கப்பட்டு ஒவ்வொருவரும் பங்கேற்பாளர்கள் என்பதான ஏற்பாடு அழைப்பிதழ் வடிவமைப்பிலிருந்து, பந்தலில் இருக்கைகள் இடமமைவு வரை கவனம் கொள்ளப்பட்டிருந்ததாகத் தோன்றியது. வாசிக்கப்பட்ட கட்டுரைகளும், அவை சார்ந்த உரையாடல்களும், சமகால கவிதையின் போக்கு பற்றிய விவாதங்களும் நிகழ்வினை செழுமைப்படுத்தின. யவனிகா ஸ்ரீராமின் கட்டுரை வாசிப்பிற்கு பிறகாக கறுத்தடையானின் ‘ஊட்டு’, கணேசகுமாரனின் ‘புகைப்படங்கள் நிரம்பிய அறை’, றியாஸ் குரானாவின் ‘நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு’, மண்குதிரையின் ‘புதிய அறையின் சித்திரம், மயூ மனோவின் ‘நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திராத மழை’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறித்தான கட்டுரைகளை முறையே வா.மணிகண்டன், லிபி ஆரண்யா, செல்மா ப்ரியதர்ஷன், அகச்சேரன், ஆத்மார்த்தி ஆகியோர் வாசித்தனர். 

உரையாடலில் இளவேனிலின் நேர்மையான குறுக்கீடுகளும், வழமையான இலக்கிய நிகழ்வுகள் பற்றிய இளஞ்சேரலின் கருத்தும் நிகழ்வில் முக்கியமானவையாக தோன்றின. கவிதையை விட்டு உரையாடல் வேறு தளத்தை நோக்கி நகர்ந்த போதெல்லாம் லக்ஷ்மி மணிவண்ணன் சரியான திசை நோக்கி நகர்த்தும் பணியைச் செய்தார். என்னளவில் அவரின் செயல்பாடு இந்த நிகழ்வின் செறிவுத்தன்மைக்கான அடிப்படைக் காரணி. பா.ராஜா, வேல்கண்ணன், பத்மபாரதி, ந.பெரியசாமி முதலான நண்பர்கள் அதிகமும் பேசாமல் நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார்கள். காலை அமர்விற்கு பிறகு மதிய உணவிற்காக மேசையின் முன்பாக அமர்ந்திருந்த கணத்தில் முடிவுற்றிருந்த அமர்வானது முழுமையானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்ததென உணர முடிந்தது. 

மது அருந்துவதற்கு நான் எதிரியில்லை என்றாலும் மது அருந்திவிட்டு இலக்கியம் பேசுவதில் நம்பிக்கையிருப்பதில்லை என்பதால் மதியத்திற்கு பிறகான வடிவமைக்கப்படாத உரையாடலில் கலந்துகொள்ள விரும்பவில்லை. தோட்டத்திற்குள் சில நண்பர்களோடு அமர்ந்திருந்தபோது எங்களின் முன்பாக மதுவின் வாசனையோடு வார்த்தைகள் தெறித்து உதிர்ந்து கொண்டிருந்தன. மதுவிற்கு பிறகான உரையாடலின் இறுதியில் உரையாடியவர்கள் நெகிழ்ந்தும் பிரியம் மிக்கவர்களாகவும் மாறிப்போகிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் ஒருமுறை உருவாகியது. அதுவரை இருந்த விறைப்பான படைப்பாளிகள் இளகிய மனம் படைத்த குழந்தைகளாக தம் ஈகோவை நொறுக்கிவிட்டு அழக்கூடியவர்களாகவும், பிரிதலின் துன்பத்தை முழுமையாக உணர்ந்தவர்களாகவும் உருவம் பெற்றார்கள்.

இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களில் சிலர் ’தன்னை’ பிரஸ்தாபித்துக்கொள்ள சில உபாயங்களைச் செய்வதுண்டு; இந்த வித்தைகள் உடனிருப்பவர்களையும் எதையாவது செய்யச் சொல்லி தூண்டிவிடக் கூடிய பலம் மிக்கவை. தம்மால் உருவாக்கப்படும் ‘பிரதி’யைத் தவிர நிகழ்த்தப்படும் அத்தனை செப்படி வித்தைகளும் கண நேரத்தில் உடைந்து போகக்கூடிய சோப்புக்குமிழிகளை மட்டுமே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றாலும்  இத்தகைய பதட்டமான அபாயங்களைத் தாண்டி இலக்கிய நிகழ்வுகள் படைப்பாளியினுள் உருவாக்கும் மாறுதல்கள் பற்றிய யோசனை தோன்றுவதுண்டு. நிகழ்வுகளின் உரையாடல்கள் நம்மைச் சலனப்படுத்தும்பட்சத்தில் அவை ஆழ்மனதில் பதிந்துகொள்கின்றன. பின்னர் உருவாக்கும் எந்தப்படைப்பிலும் ஆழ்மனதில் பதிந்தவற்றின் தாக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. சலனப்படுத்தக் கூடிய கருத்துகள் எண்ணிக்கையின் அளவில் மிகச் சொற்பமானதாக இருப்பினும் அவை முக்கியமானவையாக இருக்கின்றன. தேரிக் கூட்டமும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையினதாகவே இருந்தது.

நிகழ்விற்கு முன்பாக அலைபேசியில் அழைத்திருந்த நிலாரசிகன் இந்தக் கூட்டம் பங்கேற்பாளர்களின் நினைவில் இருந்து நீண்டகாலத்திற்கு அகலாதபடி சிறப்பானதாக ஏற்பாடு செய்ய விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று ஊர் திரும்பும் போது தோன்றியது. இரவில் திருப்பூர் செல்வதற்காக ஆட்களில்லாத பேருந்தின் கடைசி இருக்கையில் கால் நீட்டிப்படுத்திருந்தேன் அதிகாலையில் தேரியின் சிவந்த மண் நிகழ்வின் நினைவுகளென இருக்கை முழுவதும் அப்பியிருந்தது. 

ஒரு இலக்கியக் கூடலை நிகழ்த்துவது தேர் இழுப்பதற்குச் சமம் என்றே நம்புகிறேன். சாத்தியப்படுத்திய நிலாரசிகனுக்கும், பொன்.வாசுதேவனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

வா.மணிகண்டன்.