Mar 26, 2012

யுகாதி தினத்தில்..


காலையில் பதினோரு மணிவாக்கில் ஹெப்பால் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தபோது, சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்புலன்ஸைச் சுற்றிலும் நான்கைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தபோது ஆம்புலன்ஸிற்குள் ஒரு பெண்மணியை படுக்க வைத்திருந்தார்கள். புடவை கட்டுதலின் நேர்த்தியும், காலில் கொலுசும் தெரிந்தது. முகம் தெரியவில்லை. ஆம்புலன்ஸின் அடுத்த பக்கமாக சென்று முகத்தை காண்பதற்கு முன்பாக அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம் ”என்ன ஆனது?” என கேட்டதற்கு ஓடும் ரயிலில் இருந்து விழுந்துவிட்டதாகச் சொன்னார். இறந்துவிட்டாரா என்று கேட்கத் தோன்றியது என்றாலும் கேட்கவில்லை. 

யுகாதி பண்டிகையின் கொண்டாட்டத்தில் பெங்களூர் களைக் கட்டியிருந்தது. தலையிலும் உடலிலும் எண்ணெயை பூசிக்கொண்டு ஆண்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அநேகமாக குளித்து முடித்து நெற்றியில் விபூதியும் குங்குமமாக இருந்தார்கள். மாவிலையும், வேம்பிலையும் உச்சகட்ட வியாபாரத்தில் பிதுங்கிக் கொண்டிருந்தன.

ஆம்புலன்ஸின் மறுபக்கம் நகரும் போதே அந்தப்பெண்மணியின் புடவை விலாகமல் இருப்பதற்காக கால்களின் நடுவில் அவர் அணிந்திருந்த செருப்பினை வைத்திருந்தது தெரிந்தது. மிக அருகே நகர்ந்து அவளது முகத்தை பார்த்த போது வாய் சற்று திறந்திருக்க சற்றே உப்பியிருந்த முகத்தில் பாறையில் அழுத்திக் கீறப்பட்ட கோடென ரத்தம் வடிந்திருந்த கறை காய்ந்து அப்பியிருந்தது. ஈக்கள் மொய்க்கத் துவங்கியிருந்தன. 

அதற்கு மேல் முகத்தை பார்க்க விருப்பமில்லை. நகர்ந்த போது காக்கிச் சட்டையணிந்திருந்த பெண் போலீஸ் மிக இயல்பாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஆம்புலன்ஸிற்குள் கிடப்பது அவருக்கு மற்றுமொரு பிணமாக இருந்தது. சலனமற்ற அவரிடம் யார் இவர் என்று கேட்ட போது அடையாளம் எதுவுமில்லை என்றும் செல்போன் கூட வைத்திருக்கவில்லை என்றார்.

என்னையறியாமல் “ப்ச்” என்றேன். ஒரு நெரிசல் மிகுந்த நகரத்தின்  அரிதாரத்தை பூசிக் கொண்டிருக்கும் சாமானியனான நான் அந்த “ப்ச்” சப்தத்தோடு அந்த இடத்தில் எனக்கான காட்சி முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். 

யுகாதி கொண்டாட்டத்தின் பாதியில் அவரது குடும்பம் அம்மாவை, மனைவியை அல்லது மகளைக் காணவில்லை என்று சற்று பதட்டமடைந்தவர்களாகி தேடத் தொடங்கியிருப்பார்கள். அவளைக் கண்டறிய இன்னும் இரண்டொரு நாட்கள் ஆகக் கூடும். அப்பொழுது இவள் ஏதேனும் அரசு மருத்துவமனையின் பிணவறையில் தனக்காக ஒதுக்கப்பட்ட ஓய்விடத்தில் எந்த விசனமுமில்லாமல் ஒடுங்கிக் கிடப்பாள். 

Mar 25, 2012

நிழற்படக் கலையும், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவியும்

ஆறு வருடங்களுக்கு பிறகாக இந்த வருட இறுதியில் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு காலச்சுவடு பிரசுரமாக வெளிவருகிறது. அநேகமாக “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” என்பது தலைப்பாக இருக்க்கூடும்.

காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பின் அட்டைக்கு ஒரு நிழற்படம் வேண்டும் என்றார்கள். இதுதான் சிக்கலாகிப்போனது. பெங்களூரில் எந்த ஃபோட்டோ ஸ்டுடியோவிற்கு போனாலும் ”பல்லைக்காட்டுங்க பல்லைக்காட்டுங்க” என்று ஒரு வழி செய்துவிடுகிறார்கள் அல்லது படத்திற்கான தேவையைச் சொன்னதும் தாவாக்கொட்டையில் பேனாவை வைத்து விட்டத்தை முறைக்கச் சொல்கிறார்கள் அதைவிடக் கொடுமையாக கையில் ஒரு பூவை வைத்துக் கொண்டு ரொமாண்டிக் லுக் விடச் சொல்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி ஜீவ்ஸிடம் புலம்பினேன். ஜீவ்ஸ் பெங்களூரில் பதினாறு வருடங்களாக இருக்கிறார். நிழற்படக்கலையின் விற்பன்னர். என்னை அவரே படமாக எடுத்துத் தருவதாகச் சொன்னார்.

இன்றைக்கு காலையில் தலைக்கு குளித்து “ஒரு நாயகன் உதயமாகிறான்” ஸ்டைலில் அவரின் வீட்டிற்கு போய் இருந்தேன். நான் குளித்த குளியலில் அனேகமாக சோப் இந்த முறை குறைவான நாட்களுக்குத்தான் வரும்.

ஜீவ்ஸ் தெரிந்து வைத்திருக்கும் நிழற்படக்கலையில் எனக்கு ஒரு சதவீதம் கூடத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் முகத்தைக் கழுவி, ஒன்றரை இஞ்ச்க்கு பவுடர் அப்பிக் கொண்டு கேமராவிற்கு முன் நிற்க வேண்டும் என்பதுதான். மனுஷன் சூரியன் அதிகம் இருந்தால் கண்ணுக்கு கீழே நிழல் அடிக்கும் என்கிறார், ஜன்னலைத் திறக்காமல் இருந்தால் முகத்தில் இருட்டடிக்கும் என்கிறார். தூரமாக நின்று படம் எடுத்தால் ஒரு லென்ஸ், பக்கமாக என்றால் ஒரு லென்ஸ், நடுவால என்றால் இன்னொரு லென்ஸ். ஸ்ஸ்ப்பா!!!

படம் எடுத்து முடித்த பிறகு போட்டோவிற்கு ஏதோ ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி பவுடர் அடிக்கிறார், கண்ணைக் கூர்மையாக்குகிறார், முகப்பருவை நீக்குகிறார். விட்டால் ஃபர்யூம் கூட போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. ரஜினி எப்படி ரோபோ ஆனார் என்பதன் தொடக்கப்புள்ளி இங்கு இருக்கும் போலிருக்கிறது.

மணி மூன்றாகியிருந்தது. பசி என்னை தன் பிடிக்குள் இறுக்க ஆரம்பித்திருந்தது. எனக்கு பொறுமையும் இல்லை, இதில் திறமையும் இல்லை என்பதால் “முடிச்ச வரைக்கும் போதும். கொடுங்க சாப்பிடப்போலாம்” என்று ஓடி வருவதிலேயே குறியாக இருந்தேன்.

வீட்டிற்கு திரும்பும் போது இந்தக் கலையின் நுணுக்கங்கள்தான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. மற்ற கலை வடிவங்களைக்காட்டிலும் நிழற்படக்கலை மிக அதிகமான மக்களிடம் தாக்கத்தை உருவாக்குவதன் அடிப்படையான காரணத்தை இன்று ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

Mar 22, 2012

மூன்று தினங்களாக உங்களை அழைத்துக் கொண்டிருப்பவன்


மூன்று தினங்களாக
உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவனுக்கு
பெயர் எதுவுமில்லை
ஓவ்வொருவரின் பெயரையும்
அவர்கள் திரும்பிப்பார்க்கும் வரை உச்சரித்துவிட்டு
பிறகு சலனமில்லாமல் நகர்ந்துவிடுகிறான்
இதுவரை நீங்கள் திரும்பிப்பார்க்காதது குறித்த
எந்த வருத்தமுமற்ற அந்த மனிதன்
தன்
ஈரம் வற்றிய குரலில்
உங்களின் பெயரை
கமறிக் கொண்டிருக்கிறான்
உங்களை அழைப்பதற்கு முன்பாக
எதிர்வீட்டு கணித ஆசிரியரை அழைத்திருந்தான்
குழப்பத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர்
டெட்டால் வாசனை வீசிக்கொண்டிருக்கும்
மண்டை காயத்துடன் பரிந்துரைக்கிறார்
அவனை நீங்கள் திரும்பிப்பார்க்க வேண்டுமென
எதைப்பற்றியும் கவலையுறாத
நீங்கள்
நெற்றியில் மூன்றாவது கண் முளைக்கத் தொடங்கும்
என நம்பிக் கொண்டிருக்கையில்
நிலவும் வெள்ளியும்
இன்றிரவு
நேர்கோட்டில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்
பெட்ரோலை ஊற்றி முடித்திருந்தார்
உங்களின் தலையுச்சியில்


நன்றி: கல்கி வார இதழ்

Mar 13, 2012

நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கடா!ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் நிலையில் தீர்மானம் வெற்றிபெற்றால் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகாக்களும் சாகும் வரை தூக்கிலிடப்படக்கூடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஜெயலலிதாவும், கருணாநிதியும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை வலியுறுத்திய வேகத்தில் நான் இன்னும் கொஞ்சம் உற்சாகமடைந்து ராஜபக்சேவை எண்ணெய் கொப்பரையில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடுவார்கள் என்று நம்பிவிட்டேன். 

நல்லவேளையாக அமெரிக்கா,சீனா, இந்திய வல்லரசுகள் ஒரு நாட்டின் அதிபரையோ அல்லது வேறு ஒரு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியையோ தண்டிக்கும் அளவிற்கு கல்நெஞ்சம் படைத்தவைகள் அல்ல என்பது ஆறுதலான செய்தி. இத்தீர்மானத்தைச் சுற்றி நிகழும் களேபரங்கள், ஒரு குஞ்சுக்கோழியை நடுவில் வைத்துக் கொண்டு இரு பெரும் யானைகள் மோதிக்கொள்வதைப் போன்று ’பாவ்லா’ காட்டுவதான பிம்பத்தை உருவாக்குகிறது. இங்கே குஞ்சுக்கோழிகள் இலங்கையின் தமிழ் மக்கள்.

அமெரிக்காவின் இந்த ‘திடீர்’ செயல்பாட்டை ”சீனாவுடன் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் மீதான அமெரிக்காவின் ராஜதந்திர நெருக்குதல்” என்று குறிப்பிடுகிறார்கள். சீனாவுடன் இலங்கை நெருங்குவதை பல வழிகளிலும் அமெரிக்கா தடுத்து பார்த்தது. ஆனால் இலங்கை ஒருபோதும் அமெரிக்காவின் எதிர்ப்பினை காதிலேயே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்காவில் மிக உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்த நிலையிலும், இலட்சக்கணக்கான அப்பாவி மனிதர்கள் இரவும் பகலுமாக கொன்றழிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சலனத்தையும் காட்டிக் கொள்ளாத ஒபாமாவின் அரசு, இப்பொழுது மட்டும் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் குறித்து விழித்துக் கொள்வதற்கு வேறு ஏதேனும் சிறப்புக்காரணத்தை அமெரிக்காவே நினைத்தாலும் கூட வெளிப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இந்தியாவிற்கும் சீனா-இலங்கை நெருக்கத்தில் உடன்பாடில்லையென்றாலும் இலங்கையை மிரட்டி, சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பினை ஒரே சமயத்தில் சமாளிக்கும் தெம்பில்லை. உலக அரங்கில் சீனாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு இலங்கை சுற்றக்கூடாது என்பதனை வலியுறுத்தவே அமெரிக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தத் தீர்மானம் குறித்து தன் மெளனத்தை கடைபிடிக்கிறது இந்தியா என்ற பேச்சும் உலவுகிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தியதைக் கூட இதனுடன் முடிச்சுப் போட்டு பார்க்கலாம். இலங்கையை மிரட்ட இந்தியாவின் அரசுக்கு உதவியது போலும் ஆகிவிட்டது; தமிழகத்தில் ஈழ ஆதரவாளர் என்ற முகமூடியை அணிந்துகொள்ளவும் உதவிவிட்டது.

ஆடு நனைய ஓநாய் அழுவது நினைவுக்கு வந்தாலும் இப்படியாகவேனும் ஸ்ரீலங்கா நிகழ்த்திய கொடூரங்களின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பக்கூடும் என்பதான ஆறுதல் உண்டாகிறது. அதே சமயம் உலகநாடுகளின் இந்தக் கவனத்தைத் தவிர வேறு ஏதேனும் பலன்கள் உண்டா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.

போருக்குப் பிறகாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ”கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு”(Lessons Learned and Reconciliation Commission-LLRC)வினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த LLRC யின் அறிக்கையில்தான், போர் நிறுத்தப் பகுதிகளில் பாதுகாப்பு படைகள் குடிமக்களின் மீது வேண்டுமென்றே தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டு பாதுகாப்பு படையினருக்கு “ரொம்ப நல்லவர்கள்” சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதே சமயம், இந்த அறிக்கையின் சில பரிந்துரைகளை குறிப்பிட்டாக வேண்டும் - போரில் குடிமக்கள் இறந்தது குறித்தான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், தேசிய நில ஆணையம்(National Land commission) அமைக்கப்படல் வேண்டும், போரில் இறந்தவர்களுக்கு தக்க நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதானவற்றை குறிப்பிடலாம். அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெறுவதன் பலனாக ஸ்ரீலங்கா இந்ந்தப்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநேகமாக பயன் கிட்டலாம்.

அமெரிக்கா முன் வைத்திருக்கும் தீர்மானம் ஸ்ரீலங்காவை LLRC யின் பரிந்துரைகளை அமல்படுத்தச் செய்ய வலியுறுத்துவதோடு, பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் வழிமுறைகளை அறிக்கையாகத் தரச்சொல்கிறது மேலும் போரின் போது அனைத்துலக சட்டங்களை மீறிய செயல்களை அறிந்துகொண்டு அவை மீதான நடவடிக்கைளை ஸ்ரீலங்கா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் கோருகிறது. மேற்சொன்ன பரிந்துரைகளை செயல்படுத்தும் போது ஐ.நா மனித உரிமைகள் சபையின் வழிகாட்டுதல்களை ஸ்ரீலங்கா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

இந்தத் தீர்மானம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டு-[சீனா,ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் எதிர்ப்புகளை மீறி தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது அடிப்படையான சந்தேகம்], ஸ்ரீலங்கா அதை மீறினால் அமெரிக்கா அந்நாட்டுடனான தனது இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டு பொருளாதாரத்தடைகளையும் மேற்கொள்ளக் கூடும். அதற்கு மிக நீண்டகாலம் ஆகலாம் என்றாலும் இதை எதுவும் அமெரிக்கா செய்யப்போவதில்லை என்றே தோன்றுகிறது- அமெரிக்காவின் அத்தனை மறைமுகமான மிரட்டல்களையும் சீனாவின் நிழலில் அண்டிக்கொண்டு உதாசீனப்படுத்திய ஸ்ரீலங்காவிற்கு இத்தீர்மானம் என்பது அமெரிக்கா விடுக்கும் நேரடியான மிரட்டல். ஒருவேளை தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் கூட சீனாவின் ஆதரவு தரக்கூடிய தெம்பில் இலங்கை அமெரிக்காவிற்கு பயப்படாமல் இருக்கக் கூடும், அப்படியில்லாமல் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்டமும் கொட்டமும் இன்னமும் கூடுதலாகலாம்.

அமெரிக்காவின் தீர்மானத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான உரிமையை மூன்றாம் நாடு அல்லது மூன்றாம் அமைப்பிற்கு அளிக்க வேண்டும் என கோரப்படவில்லை என்பதும், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பதும் தீர்மானம் வெற்றிபெற்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக் கூடிய தண்டனைகள் ஆகியவற்றின் மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சந்தேகத்தை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு சற்று ஆழமாக யோசித்தால் இத்தீர்மானமே கூட மூன்றாம் உலகநாடுகளின் அழுத்தத்திலிருந்து இலங்கை தப்புவதற்கும், அதன் தலைவர்கள் போர்குற்ற தண்டனைகளிலிருந்து நழுவுவதற்குமான உபாயமாக இலங்கையின் நட்பு நாடுகளின் கூட்டுச் சதியாக இருக்கலாம் என்ற மற்றுமொரு சந்தேகத்தை உருவாக்காமல் இல்லை. ஒருவன் அடிப்பது போல் அடிக்க, இன்னொருவன் தடுப்பது போல தடுக்க, இலங்கை அழுவது போல நடிக்க வேண்டும் என்பது இதன் சாராம்சமாக இருக்கக் கூடும். 

எப்படியிருப்பினும், சக தமிழனாக நீங்களும் நானும் இலங்கையின் கொடூரிகள் பெற வேண்டிய தண்டனை என நம் மனதில் நினைத்துக் கொண்டிருப்பனவற்றில் ஒரு சதவீதத்தைக் கூட இந்தத் தீர்மானம் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

Mar 9, 2012

என்னை பார்த்து ஏண்டா அந்தக் கேள்வியைக் கேட்ட?


நேற்றிரவு முகநூலில் ஒரு பெண்ணிடமிருந்து நட்பிற்கான வேண்டுகோள் வந்திருந்தது. வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இரண்டாம் நிமிடத்தில் சாட்டில் வந்து “ஹாய்” என்றார். அப்பொழுது நள்ளிரவு தாண்டி ஒரு மணியை நெருங்கியிருந்தது. இரவு என்ன ஆனாலும் காலையில் ஆறரை மணிக்கு  நான் எழுந்துவிட வேண்டும் என்பதால் ஒரு மணி ஆனால் தூங்கியே தீர வேண்டும் என்ற பதட்டம் வந்துவிடும். அதற்கு பிறகும் தூங்காமல் இருந்தால் அடுத்த நாள் அலுவலகத்தில் தூக்கம் பிதுங்கிக் கொண்டிருக்கும்.

எங்கள் வீட்டில் ஒரு ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. குழந்தையை ஒரு மணி வரைக்கும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்- ச்சூச்சூ போனால் துணி மாற்றுவது, இடையில் அழுதால் தொட்டிலை ஆட்டிவிடுவது, பாலைக் காய்ச்சி குடிக்க வைப்பது போன்ற பணிகளுக்கிடையில் ஃபேஸ்புக், ஜிமெயில், ஏதாச்சும் வாசிப்பது என்று கழிந்து கொண்டிருக்கும். ஒரு மணிக்கு மேலாக விடியும் வரைக்கும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என் மனைவிக்கு. நான் தூங்கிக் கொள்ளலாம். 

முகநூலில் நேற்று அறிமுகமான இந்தப் பெண் ஒரு மணியளவில் தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளரைக் குறிப்பிட்டு அவரைப் பற்றிய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். என்னிடம் இதுவரையில் யாரும் அடுத்தவரைப் பற்றி இத்தனை கேள்விகளைக் கேட்டதாக ஞாபமில்லை. அதுவும் அறிமுகமான மூன்றாவது நிமிடத்திலிருந்து. இது அந்தப் பெண்ணின் நம்பகத்தன்மை குறித்தான சந்தேகத்தை உருவாக்கியது.

சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவரின் முகநூல் சாட்டில் கண்டறிந்த ஐ.பி முகவரியையும், எனக்கு சந்தேகமான “எழுத்தாளரிடமிருந்து” வந்திருந்த மின்னஞ்சலின் ஐபியையும் ஒப்பிட்டால் இரண்டும் ஒன்றாக இருந்தது. இதுதான் பஞ்சாயத்து.

‘என்னை பார்த்து ஏண்டா அந்தக் கேள்வியைக் கேட்ட?’ என்று கவுண்டமணி செந்திலிடம் கேட்பது போல் ’என்கிட்ட ஏன்யா இந்த தில்லாலங்கடி வேலையைச் செய்தாய்’ என்ற கேள்வி விடியும் வரை மண்டைக்குள் ரிங் அடித்துக் கொண்டிருந்தது. இதோ இதைத் தட்டச்சிக் கொண்டிருக்கும் இப்பொழுது வரையிலும் கூட.

இந்த பஞ்சாயத்திற்குள் போவதற்கு முன்பாக இதன் நுட்பத்தை சொல்லிவிடுகிறேன். முகநூலில் சாட் செய்பவரின் ஐபியைக் கண்டறிய மற்ற அனைத்து வலைப்பக்கங்களையும் மூடிவிட்டு Cache ஐ சுத்தம் செய்துவிட வேண்டும். இப்பொழுது எதிராளியிடம் பேச்சு கொடுக்க வேண்டும்- அதாவது முகநூலும், முகநூலில் எதிராளியுடனான சாட் பெட்டி மட்டும் திறந்திருக்க வேண்டும். Start->Run இல் cmd என்று தட்டச்சினால் வரும் பெட்டியில் Netstat -an என்று தட்டச்சி ‘எண்டர்’ அழுத்தினால் எதிராளியின் ஐ.பி முகவரியை எடுத்துவிடலாம். மின்னஞ்சலின் ஐபி ஐ கண்டறிவது மிகச் சுலபம். Header பகுதியிலேயே ஐ.பி இருக்கும். 

கோபத்தின் உச்சியில் ”என்னிடம் இந்தச் சில்லரைத்தனத்தை காட்டிக் கொண்டிருக்காதீர்கள்” என்றதற்கு மீண்டும் கேள்விகளை அடுக்கினார். உங்களின் ஐ.பி தெரியும் நண்பரே விரிவாக நீங்கள் யாரென்று நாளை பதிவிடட்டுமா என்ற வினாவிற்கு ”மிரட்டுகிறாயா” என்றார். நுட்பத்தைச் சொன்னவுடன், “வேண்டாம்..இத்தோட நிறுத்திக்குவோம்” என்று சொல்லிவிட்டு மாயமாகிப்போனார். இடையில் நடந்த சாட் வெறும் அக்கப்போர்.

                                                             ***
                               
எழுத்து சார்ந்து விவாதிக்கலாம், இலக்கிய அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துகள் இருப்பின் முகத்துக்கு நேராக பேசலாம்.  அதைவிட்டு எதற்கான இந்த கையலாகத்தனமான செயல்பாடுகள் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. முளைத்து மூன்று இலைவிட்டு பிறகு அரசியல் பற்றி யோசிப்பதுதான் உசிதம். முளைப்பதற்கும் மூன்று இலை விடுவதற்குமே அரசியல் தேவைப்பட்டால் முருடு பாய்ந்து குழியோடு நின்றுவிட வேண்டியிருக்கும்.


நிறுவன பலத்துடன் அடுத்தவர்களுடன் மோதுவது, இரைச்சலாக கத்திக் கொண்டிருப்பது என்று எப்படி வேண்டுமானாலும் Publicity Stunt செய்ய முடியும். மூன்றே மாதத்தில் ஃபேமஸ் ஆகிவிடலாம். எதையோ செய்து கொள்ளுங்கள் ஆனால் அடுத்தவனைக் கிள்ளிவிடாமல் அதைச் செய்து கொண்டிருங்கள். தெரிந்து கொண்டவன் சத்தமில்லாமல் விலகிச் சென்றுவிடுவான் அதே சமயம் பெருகும் ரசிகக் குஞ்சுகள் உங்களுக்கு விசிலடித்துக் கொண்டிருப்பார்கள்.

                                              

Mar 8, 2012

மூக்குத்தி தேவதைவிபத்துகளில் தப்பித்துக் கொண்டிருந்த
அவனிடம்
மூன்று கேள்விகளை கேட்க விரும்பிய கடவுள்
முதலில்
ஒரு பன்றிக்குட்டியை தூது அனுப்பினார்
தொந்தரவுகளை விரும்பாதவன்
முதல் கேள்வியே புரியவில்லை என்று திருப்பியனுப்பியதில்
கோபமுற்ற கடவுள்
முதல் கேள்வியைத் தவிர்த்துவிட்டு
இரண்டாம் கேள்விக்கான பதிலை தரச்சொல்லி
குழந்தையை அனுப்பியிருந்தார்
அக்குழந்தைக்கு இனிப்பொன்றை கொடுத்து
பதிலின்றி அனுப்பி வைத்தான்
அவமானமுற்ற கடவுள்
மூன்றாம் கேள்வியுடன் அவன் இடத்தை அடைந்தபோது
அவன் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள்
217 வருடங்களாக
அவனைத் தேடிக் கொண்டிருக்கும் கடவுளின்
கேள்விகளை கண்டறிய
தவமிருக்கும்
இந்த மூக்குத்தி தேவதைக்கு தெரிய வாய்ப்பில்லை
அந்தக் கேள்விகள் உங்களிடம் இருக்கிறதென.

Mar 5, 2012

18வது அட்சக்கோடு- முன்னுரையும் துளி சந்தோஷமும்

காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் செவ்வியல் பதிப்பாக வெளிவந்திருக்கும் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை பல பாராட்டுகளை பெற்றுத் தந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன்.


பின்வரும் கடிதம் இன்று கிடைத்தது. இன்னுமொரு துளி மகிழ்ச்சி. 

                                          **** 

அன்பின் மணிகண்டன்,

புத்தத்திற்கு தங்கள் முன்னுரை அருமை. புத்தகம் இரண்டாம் முறை தற்போது படித்தேன். மிக சுவாரசியமாக இருந்தது. முதல் முறை சற்று போரடித்த கிரிக்கட் வர்ணனைகள்(நான் கிரிக்கட் ரசிகனல்ல)கூட இம்முறை  ஒரு சிறுவனுடைய பார்வையில் மிக நன்றாக இருந்தது. அதுதான் அசோக மித்திரன் ஞானி கூறுவதுபோல் படிக்கப் படிக்கத்தான் சுவைகூடும் ரகுமான் ம்யூசிக் போல.

உங்கள்  எழுத்துக்களை எங்கு படிக்கலாம்? எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.ஒரு நல்ல எழுத்துக்கும் ஒரு தேர்ந்த ரசிகன்  அறிமுகமோ, விமரிசனமோ(?) தேவைப்படுகிறது. உங்கள் முன்னுரைஅதைச் செய்கிறது. மிக அருமை

உங்களைப்பற்றி விவரம் தரமுடியுமா? 

நான் ராதாகிருஷ்ணன். ரிடையர்டு எஞ்சினியர் மதுரை நகரில் வசிக்கிறேன். புத்தகங்கள் படிப்பதும், வலைத்தளங்கள் மேய்வதுமே பொழுது போக்கு. பிடித்த எழுத்துக்கள் தேவன், தி.ஜா,அ. மோ.,லா.ச.ரா., மற்றும் பலர்.

அன்பின் திரு.ராதாகிருஷ்ணன் அய்யா,

வணக்கம்.

தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நாவல் உட்பட எந்த இலக்கியப்பிரதியும் மறுவாசிப்பின் போது வேறொரு பரிமாணத்தை வாசகனுக்கு கொடுக்கிறது.

இதுவரை ஒருமுறையேனும் கூட வாசித்திராத எழுத்துக்களின் எண்ணிக்கை குவியல் மலைப்பைத் தந்துகொண்டேயிருக்கிறது. இந்த மலைப்பை மீறி மறுவாசிப்பு செய்வதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. மறுவாசிப்பு செய்யத்தூண்டும் எந்த படைப்பும் அந்த குறிப்பிட்ட வாசகனளவில் வெற்றிபெற்ற படைப்பாகிவிடுகிறது. எழுப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களை மீறி வெற்றியடைந்த 18வது அட்சக்கோடு நாவல் தன் வாசகனை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டேயிருப்பதாக உணர்கிறேன்.

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்திலும், பிரசுரிக்கப்பட்ட காலத்திலும் நான் பிறந்திருக்கவில்லை. செவ்வியல் பதிப்பாக வெளிவரும் சமயத்தில், அசோகமித்திரன் என்ற ஆளுமையின் நாவலுக்கு முன்னுரை எழுத எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை அங்கீகாரமாக கருதிக் கொண்டாலும் எனது தகுதியின் மீது எப்பொழுதும் ஒரு சந்தேகப்பார்வையை வைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தையும் இந்த வாய்ப்பு உருவாக்கியிருக்கிறது.

18வது அட்சக்கோடு நாவலுக்கு எழுதிய முன்னுரை எதிர்பாராத திசைகளிலிருந்து முகம் தெரியாதவர்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. அதற்கான நன்றி காலச்சுவடுக்கும் உரித்தானது.

எழுத்து சார்ந்த என் பங்களிப்புகளின் விவரத்தை www.nisaptham.com என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தங்களின் அன்பிற்கும் நேரம் ஒதுக்கி பாராட்டியமைக்கும் நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.