Feb 14, 2012

உதிரிகள் (14-02-2012): வெயில்நதி, தேரி


பெங்களூரில் சங்கம்(www.sangamhouse.org) அமைப்பினர் லேக்கனா(Lekhana) என்னும் இலக்கிய நிகழ்வை பிப்ரவரி 10,11,12 ஆகிய நாட்களில் நிகழ்த்தினார்கள். 

கன்னடம்,ஹிந்தி,பெங்காலி,தமிழ்,மலையாளம் உள்ளிட்ட சில மேற்கத்திய மொழிகளின் படைப்பாளர்களோடு கவிதை வாசிப்பு, விவாதங்கள், நாடகம் என மூன்று நாட்களும் National Gallery for Modern Arts களை கட்டியிருந்தது. நண்பர்கள் சிலருடன் பிப்ரவரி 12 ஆம் நாள் பார்வையாளனாக என்னால் கலந்து கொள்ள முடிந்தது. தமிழில் இருந்து சுகுமாரனும், குட்டிரேவதியும்,லக்ஷ்மி ஹோல்ம்ஸ்டோர்மும் கவிதை வாசித்தனர்.  நவீன கவிதைகளை மேடையில் வாசிக்கும் போது அது எந்தவிதமான சலனத்தையும் வாசகர்களிடம் உருவாக்குவதில்லை. கவிதை வாசகனால் வாசிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டியது. மாறாக கவிஞன் மேடையில் வாசித்து அதை வாசகன் கேட்பதில் கவிதைக்கு எந்த இடமும் இருப்பதில்லை- அது படைப்பாளிக்கான அங்கீகாரமாக மட்டுமே இருக்கிறது. அந்தவிதத்தில் தமிழின் மூன்று ஆளுமைகளுக்கான அங்கீகாரமாக மகிழ்ச்சியாக இருந்தது.

கவிதை வாசிப்பு தவிர்த்து நாடகம்,விவாதம் போன்ற செயல்பாடுகள் இநிகழ்வின் முக்கிய அம்சமங்களாக இருந்தன. 

சுகுமாரன் அவர்களுடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க முடிந்தது. விவேக் ஷான்பாக் அவர்களுடன் பேசவும் சிறிது நேரம் கிடைத்தது. 

மேல்தட்டு வாசர்களுக்கான இலக்கியக் கூட்டமாக தோற்றமளித்த இந்தக் கூட்டத்தில் தமிழில் நாம் பரவலாக காணக்கூடிய வாசகர்களுக்கான இடம் என்ன என்பது கூட்டம் முடிந்து வெளியில் வந்த பிறகும் வெகுநேரம் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.



                                                      *****
செஞ்சியைச் சார்ந்த இலக்கிய நண்பர் இயற்கை சிவம் ”வெயில் நதி” என்னும் சிற்றிதழுக்கான முயற்சிகளில் இருக்கிறார். தமிழில் நிறைய சிற்றிதழ்கள் வெளிவருவது ஆரோக்கியமான சூழலாகத் தெரிகிறது.

வணிக இதழ்களிலும் இடைநிலை இதழ்களிலும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத இடத்தை சிற்றிதழ்கள் உருவாக்கித் தருகின்றன. சிற்றிதழ்களின் இயக்கமே படைப்புகளை அடுத்த தளத்திற்கு நகர்த்துகின்றன என்பதனை முழுமையாக நம்பலாம். சிற்றிதழ்களின் மிகப்பெரிய பலமாக அவற்றின் சமரசமற்ற தன்மையைக் குறிப்பிடலாம். எப்பொழுது சிற்றிதழ் சமரசம் செய்துகொள்கிறதோ அப்பொழுது அது தனக்கான இடத்தை இழந்துவிடுகிறது.  

’வெயில் நதி’ சமரசமற்ற தன்மையுடன், இலக்கிய வெளியில் தனக்கான இடத்தை பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்.

நண்பர்கள் படைப்புகள் அனுப்பவும் சந்தா செலுத்தவும் பின்வரும் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்:

இயற்கைசிவம்
எண் :- 1 டி, சந்தை மேடு, சிருகடம்பூர், செஞ்சி - 604202 ,
விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா.,
கைப்பேசி எண்கள் :- 99411 16068 , 89409 62277 ,
மின்னஞ்சல் :-
veyilnathi@gmail.com 
                                                         ***

பிப்ரவரி 18 ஆம் தேதி 361 டிகிரி சிற்றிதழ் சார்பில் நிலாரசிகனும், அகநாழிகை பொன்.வாசுதேவனும் தூத்துக்குடியில் ‘தேரி’ கவிதை உரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். (தேரி என்பது தூத்துக்குடி வட்டாரத்தில் காணப்படும் மண் என்கிறார் நிலாரசிகன்). சிற்றிதழ்கள் அதிகம் வெளிவருவதைப் போலவே  இலக்கியக் கூட்டங்கள் நிகழ்வதும் மகிழ்ச்சியானது. சில கவிதைத் தொகுப்புகளுக்கான விமர்சனமும் நிகழ்கிறது. இயலக்கூடிய வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

1 எதிர் சப்தங்கள்:

யியற்கை said...

மிக்க நன்றி தோழர், 'சிற்றிதழ்களின் மிகப்பெரிய பலமாக அவற்றின் சமரசமற்ற தன்மையைக் குறிப்பிடலாம்.' இந்தக் கருத்தின் மூலம் வெயில்நதி பயணிக்க வேண்டிய திசையை மறைமுகமாகவும் சுட்டியிருக்கிறீர்கள் கண்டிப்பாக அதற்க்கு மாற்றுக் கருத்தே இல்லை, மேலும் வணிக, மற்ற இதழ்கள் உருவாக்காத படைப்புலக தளத்தை வெயில்நதி உருவாக்கவேண்டியதன் பொறுப்பும் அடர்வாக புரிந்தது. மீண்டும் நன்றிகள்... தங்களின் படைப்புகள் வெயில்நதியின் முதல் இதழிலும் இடம்பெறவேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்... பக்க வேலைகள் செய்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்கள் படைப்புகள் வந்து சேர்வது பெரிதும் உதவியாக இருக்கும்.

தவிர மேடையில் கவிதைகள் குறிப்பாக நவீனக் கவிதைகள் வாசிக்கையில் உண்டாகும், அசவுகரியத்தை நேர்த்தியாக பதிவு செய்திருப்பது உங்கள் எழுத்தின் இடையூறுகளற்ற பயணத்தை மீண்டுமொருமுறை புரிவிக்கிறது...
அன்புடன் -இயற்கைசிவம்