Feb 17, 2012

தூத்துக்குடி,படிமம்,குறியீடு


நாளை (பிப்ரவரி 18) தூத்துக்குடியில் நடைபெறும் தேரி கவிதையுரையாடல் நிகழ்ச்சிகான தயாரிப்புகளில் இருக்கிறேன். கறுத்தடையானின் “ஊட்டு” கவிதைத் தொகுப்பு(மணல்வீடு வெளியீடு) குறித்தான கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்திருக்கிறார்கள். இப்படியான நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது. 

கவிதை விமர்சனம் என்பது அதிகபட்ச உழைப்பை கோரக் கூடியதாகத் தோன்றுகிறது. சற்றேறக்குறைய இருபது நாட்கள் ஒரு கட்டுரையை முடிக்க தேவைப்படுகிறது. இந்தச் சமயத்தில் வேறு எதுவும் எழுதும் மனநிலை அமைவதில்லை. தொகுப்பின் கவிதைகளை திரும்ப திரும்ப வாசிப்பதும் ஒன்று அல்லது இரண்டு பத்தி எழுதுவதுமாக நேரம் தீர்கிறது. ”கவிஞன் கவிதை விமர்சனம் எழுதுவது என்பது தற்கொலை முயற்சிக்கு சமம்” என்று ஒரு கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்திய கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். அதில் உண்மையும் இருக்கிறது. பிற கவிதைகளில் இருக்கும் குறைகளை பற்றி அதிகமும் யோசிக்கும் போது நாம் கண்டறிந்த குறைகள் இல்லாமல் ஒரு கவிதையை எழுதிவிடவே மனம் விரும்புகிறது. ஆனால் எழுத முடிவதில்லை. கவிதையின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவாகிவிட்ட போதிலும் பிறரின் கவிதைகளைப் பேசுவதும், நாம் முன்வைக்கும் விமர்சனங்களை கவிதையை வாசிப்பவர்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதும் தொடர்ந்து விமர்சனங்களை எழுதுவதற்கான உத்வேகம் அளிக்கக்கூடியவை.

தொடர்ச்சியாக அடுத்த மாதம் சபரிநாதனின் “களம் காலம் ஆட்டம்” (புது எழுத்து வெளியீடு), அய்யப்ப மாதவனின் “ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்” (உயிர்மை வெளியீடு) ஆகிய தொகுப்புகளுக்கான விமர்சனக்கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது.

கவிதை விமர்சனக்கட்டுரையை கவிதையை வாசிக்காதவர்கள் வாசிக்கும் போது எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்ற வினா எழுகிறது. விமர்சனக் கட்டுரைகள் கவிதை வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களையும் கவிதையை திரும்பிப்பார்க்கச் செய்பவனாக இருக்க வேண்டும் என்றும், கவிதைகளை மட்டும் இல்லாது “கவிதையியல்” குறித்து அதிகம் பேச வேண்டும் என்றும் விரும்புகிறேன். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தால் விமர்சகனாக இருக்கலாம். இயலாதபட்சத்தில் நானும் எழுதுகிறேன் என்று இல்லாமல் வேறு பக்கம் கவனம் செலுத்தலாம்.

                                  ***

வணக்கம்

இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் பொலுது உங்களின் தளத்தை கண்டேன். சில இலக்கிய நாவல்களை படிக்கும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை காரணம் தேடிய போது அவை குறியீட்டு மொழியில் எழுதப்பட்டதாகவும், படிமங்களின் வடிவில் எழுதப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த குறியீடு, படிமம்... போன்றவற்றை எப்படி அறிந்து/புரிந்துகொள்வது என்று விளக்க முடியுமா

நன்றி

பா.பூபதி


அன்புள்ள பூபதிக்கு,

வணக்கம்.

இது பொதுவான குற்றச்சாட்டு. எந்த நாவலை நீங்கள் வாசிக்க முயற்சித்தீர்கள் என்றும், அதில் புரியாத அம்சம் எது என்றும் குறிப்பிட்டீர்களேயானால் நாம் விரிவாக விவாதிக்கலாம். 

குறியீடு, படிமம் என்பவை வாசகர்களுக்கு புரியாமல் போக வேண்டும் என்பதற்காக படைப்பாளிகள் பயன்படுத்துவதில்லை. அவை படைப்பு மொழியின் கருவிகள். தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாகவும், விவாதத்தின் மூலமாகவும் அவற்றை நெருங்க முடியும். வாசிப்பு என்பது பல படிநிலைகளைக் கொண்டது, அதில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை பதிலளிப்பதற்கு முன்பாக நான் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.Feb 14, 2012

உதிரிகள் (14-02-2012): வெயில்நதி, தேரி


பெங்களூரில் சங்கம்(www.sangamhouse.org) அமைப்பினர் லேக்கனா(Lekhana) என்னும் இலக்கிய நிகழ்வை பிப்ரவரி 10,11,12 ஆகிய நாட்களில் நிகழ்த்தினார்கள். 

கன்னடம்,ஹிந்தி,பெங்காலி,தமிழ்,மலையாளம் உள்ளிட்ட சில மேற்கத்திய மொழிகளின் படைப்பாளர்களோடு கவிதை வாசிப்பு, விவாதங்கள், நாடகம் என மூன்று நாட்களும் National Gallery for Modern Arts களை கட்டியிருந்தது. நண்பர்கள் சிலருடன் பிப்ரவரி 12 ஆம் நாள் பார்வையாளனாக என்னால் கலந்து கொள்ள முடிந்தது. தமிழில் இருந்து சுகுமாரனும், குட்டிரேவதியும்,லக்ஷ்மி ஹோல்ம்ஸ்டோர்மும் கவிதை வாசித்தனர்.  நவீன கவிதைகளை மேடையில் வாசிக்கும் போது அது எந்தவிதமான சலனத்தையும் வாசகர்களிடம் உருவாக்குவதில்லை. கவிதை வாசகனால் வாசிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டியது. மாறாக கவிஞன் மேடையில் வாசித்து அதை வாசகன் கேட்பதில் கவிதைக்கு எந்த இடமும் இருப்பதில்லை- அது படைப்பாளிக்கான அங்கீகாரமாக மட்டுமே இருக்கிறது. அந்தவிதத்தில் தமிழின் மூன்று ஆளுமைகளுக்கான அங்கீகாரமாக மகிழ்ச்சியாக இருந்தது.

கவிதை வாசிப்பு தவிர்த்து நாடகம்,விவாதம் போன்ற செயல்பாடுகள் இநிகழ்வின் முக்கிய அம்சமங்களாக இருந்தன. 

சுகுமாரன் அவர்களுடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க முடிந்தது. விவேக் ஷான்பாக் அவர்களுடன் பேசவும் சிறிது நேரம் கிடைத்தது. 

மேல்தட்டு வாசர்களுக்கான இலக்கியக் கூட்டமாக தோற்றமளித்த இந்தக் கூட்டத்தில் தமிழில் நாம் பரவலாக காணக்கூடிய வாசகர்களுக்கான இடம் என்ன என்பது கூட்டம் முடிந்து வெளியில் வந்த பிறகும் வெகுநேரம் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.                                                      *****
செஞ்சியைச் சார்ந்த இலக்கிய நண்பர் இயற்கை சிவம் ”வெயில் நதி” என்னும் சிற்றிதழுக்கான முயற்சிகளில் இருக்கிறார். தமிழில் நிறைய சிற்றிதழ்கள் வெளிவருவது ஆரோக்கியமான சூழலாகத் தெரிகிறது.

வணிக இதழ்களிலும் இடைநிலை இதழ்களிலும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத இடத்தை சிற்றிதழ்கள் உருவாக்கித் தருகின்றன. சிற்றிதழ்களின் இயக்கமே படைப்புகளை அடுத்த தளத்திற்கு நகர்த்துகின்றன என்பதனை முழுமையாக நம்பலாம். சிற்றிதழ்களின் மிகப்பெரிய பலமாக அவற்றின் சமரசமற்ற தன்மையைக் குறிப்பிடலாம். எப்பொழுது சிற்றிதழ் சமரசம் செய்துகொள்கிறதோ அப்பொழுது அது தனக்கான இடத்தை இழந்துவிடுகிறது.  

’வெயில் நதி’ சமரசமற்ற தன்மையுடன், இலக்கிய வெளியில் தனக்கான இடத்தை பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்.

நண்பர்கள் படைப்புகள் அனுப்பவும் சந்தா செலுத்தவும் பின்வரும் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்:

இயற்கைசிவம்
எண் :- 1 டி, சந்தை மேடு, சிருகடம்பூர், செஞ்சி - 604202 ,
விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா.,
கைப்பேசி எண்கள் :- 99411 16068 , 89409 62277 ,
மின்னஞ்சல் :-
veyilnathi@gmail.com 
                                                         ***

பிப்ரவரி 18 ஆம் தேதி 361 டிகிரி சிற்றிதழ் சார்பில் நிலாரசிகனும், அகநாழிகை பொன்.வாசுதேவனும் தூத்துக்குடியில் ‘தேரி’ கவிதை உரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். (தேரி என்பது தூத்துக்குடி வட்டாரத்தில் காணப்படும் மண் என்கிறார் நிலாரசிகன்). சிற்றிதழ்கள் அதிகம் வெளிவருவதைப் போலவே  இலக்கியக் கூட்டங்கள் நிகழ்வதும் மகிழ்ச்சியானது. சில கவிதைத் தொகுப்புகளுக்கான விமர்சனமும் நிகழ்கிறது. இயலக்கூடிய வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

Feb 6, 2012

கவிதைxதகுதி


ஆ.கிருஷ்ணகுமாரின் கடிதம்:

வணக்கம் மணி,

தாங்கள் தெரிவித்த கவிதை நூல்களை வாங்கி விட்டேன். இன்னமும் அதை படித்துத் தெரிந்துகொள்வதற்கான கட்டத்திற்கு நான் தகுதி அடையவில்லை. ஏதோ ஆர்வத்தின் காரணம் எனலாம். இருந்தாலும் முயற்சிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புதுக்கவிதைகள் பெரும்பான்மையினருக்கு சென்றுசேரும்.ஏனென்றால் அதில் காதலர்கள் காதலிகளை வர்ணனம் செய்ய இயற்கையை கையிலெடுத்துக்கொண்டு பூவே, கனியே, மலரே, நதியே, கடலே, நிலவே, இதயமே,... என்று கன்னா பின்னா-வென எழுதி வைப்பார்கள்.இத்தகைய நுட்பமான கவிதை வரிகளே(?) நம்மவர்களுக்கு அதிகம் பிடிக்கும். ஏனென்றால் அது நமது உள்ளூர் தனியார் பேருந்துகளில் ஒலிபரப்பப்படும் சினிமாப்பாடல் போன்றது. அதை சீக்கிரம் மனம் பெற்றுக்கொள்ளும். (நானும் இதுபோன்று கிறுக்கியிருக்கிறேன், மன்னித்துக்கொள்ளவும்)

என்னைப் பொருத்தவரை கவிதைகள் என்பது மேலே குறிப்பிட்ட வரையரைகளுக்குள் மட்டுமே இருந்தது.

தங்களுடைய வலைதளம் எனக்கு அறிமுகமான பின் கிட்டத்தட்ட இந்த இரண்டு வருடங்களில் பற்பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஏறக்குறைய அனைத்து கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். (குறிப்பாக "இந்த நூற்றாண்டின் முதல் தற்கொலை" என்கிற கவிதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று)

சமீபத்தில் தங்களுடைய "நவீன கவிதையும் புதுக்கவிதையும் ஒன்றா?" என்கிற விளக்கக்கட்டுரையை படித்தேன்.மிகவும் முக்கியமான ஒரு பதிவென்று தோன்றுகிறது.

இதற்கு முன்பாக நவீன கவிதை பற்றிய தங்களது கட்டுரைகளையும்,பிறருடைய கவிதைகளைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த கட்டுரை சற்று எளிமையாக இருப்பதாக நினைக்கிறேன்.

நவீன கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இக்கட்டுரை அக்கவிதைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இப்பதிப்பினை முகப்புத்தகத்தில் வலையேற்ற தாங்கள் அனுமதியை நாடுகிறேன்.

அக்கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்:

"புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன".

"நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே".

"இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை".

பற்பல நூல்களை எனக்கு அறிமுகம் செய்தமைக்கும்,பரிந்துரை செய்தமைக்கும் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ஆ.கிருஷ்ணகுமார்.

    ***
அன்புள்ள கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

கவிதை நூல்களை வாசிப்பதற்கான ’தகுதி’ என்பது தொடர்ச்சியான வாசிப்பினால் வாசகன் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்வதுதான். இதற்கு ஆர்வம்தான் அடிப்படை.உங்களிடம் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் வாசிக்கத் தொடங்குவதே நல்லதுதான். கடினமான கவிதைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் அவற்றை ஒரு முறை வாசித்துவிட்டு சிறிது நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ இன்னொரு முறை வாசிக்கலாம். திரும்பத் திரும்ப கவிதையை வாசிப்பது என்பது கவிதையை அணுகுவதற்கு எளிமையான வழிமுறை.  இதை அறிவுரை என எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- கவிதையோடான என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.

தொடர்ந்து கவிதைகளை வாசிப்பதும் அவற்றைப் பற்றி விவாதிப்பதும் கவிதையின் புரிதலையும், வாசிப்பின் அடுத்த கட்ட நகர்வையும் வாசகருக்கு துரிதப்படுத்தும். வாசிப்பின் அடுத்த கட்டம் என்பதை இன்னும் சற்று தெளிவாகவே பேசலாம்.

கவிதை எப்பொழுதும் ஒரே பரிமாணத்தைக் கொண்டிருப்பதில்லை- உங்களால் புரிந்துகொள்ள முடியும் அதே கவிதையை நான் இன்னொரு பரிமாணத்தில் புரிந்துகொண்டிருக்கக் கூடும். நீங்களும் நானும் குறிப்பிட்ட கவிதையைப் பற்றி உரையாடும் போது நம் இருவருக்குமே அந்தக் கவிதையின் வேறொரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. பிறகு இன்னொரு கவிதையை வாசிக்கும் போது முதல் வாசிப்பில் புரிந்து கொள்ளும் பரிமாணத்தோடு அந்தக் கவிதையின் வேறு பரிமாணங்கள் குறித்து யோசிக்கத் துவங்குகிறோம். 

புரிதல் என்பது கவிதை வாசித்தலின் மிக அடிப்படையான கூறு. இதுதான் சற்று கடினமான படி. பெரும்பாலான வாசகர்கள் கவிதை தமக்கு புரிவதில்லை என்று கவிதையை விட்டு நகர்ந்துவிடுவதும் கூட இந்தச் சிக்கலால்தான் என்று நம்புகிறேன். இந்தப்படியை(புரிந்துகொள்ளுதல்) தாண்டிவிடும்பட்சத்தில் கவிதையின் இன்னபிற கூறுகளை - உதாரணமாக: கவிதை மொழி, அதன் கட்டமைப்பு, ஒப்பீடுகள் போன்றவற்றை நோக்கி கவிதை வாசகனால் நகரமுடியும். இது போன்ற கூறுகளை Elements of Poetics எனக் குறிப்பிடுகிறார்கள். கவிதைக் கூறுகளை அறிந்துகொள்ளுதலும் கண்டறியாத புதிய கூறுகளை நோக்கி நகர்தலுமே கவிதை வாசித்தலின் அடுத்த கட்ட நகர்வுகள் என்று குறிப்பிடுகிறேன்.

கவிதைகளை கூர்ந்து கவனித்தால் அவை தம்மை தொடர்ந்து புதுப்பித்தும் உருமாறியும் வருவதை புரிந்துகொள்ள முடியும். இந்த புதுப்பித்தலும் உருமாற்றமும் இனியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதால் தன்னை ’கவிதையியலின் பண்டிதன்’ என உளமார ஒருவராலும் சொல்லிக் கொள்ள முடியாது. இப்படி இலக்கிய ஆணவத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்வதே கூட கவிதையின் தனிச்சிறப்புதான். யாராவது கவிதையை முன்னிறுத்தி பிறரை ‘பயமுறுத்தினால்’ கவிதை அவர்களைப் பார்த்து ‘ஈ’ என பல்லிளித்து ஏளனம் செய்துவிடும்.

கவிதையை வாசித்தல் ஒரு சூத்திரம். வாசிப்பின் பலனாக வாசகன் கண்டறியும் சூத்திரம். சூத்திரத்தைத் தெரிந்துகொண்டால் கவிதையின் சிண்டுகளை அவிழ்ப்பது மிக எளிது.

கவிதை வாசிப்பதில் விருப்பமுடைய ஒருவருக்கு எனக்கு முக்கியமான புத்தகங்களாகத் தோன்றுவதை சுட்டிக் காட்டுவது என்பது மகிழ்ச்சியான செயல்பாடுதான். அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு பரிந்துரைத்ததன் மூலம் பெற்றுக் கொண்டேன். நீங்கள் முகநூலில் எனது கட்டுரையை பகிர்ந்துகொள்வதில் எனக்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை :)

நன்றி,

அன்புடன்,
வா.மணிகண்டன்

Feb 4, 2012

நீலவெளிச்சத்தில் ஒளிரும் கவிதைகள்இன்றைக்கு கவிதையின் விமர்சனம் என்பது மிகச் சிக்கலானதாயிருக்கிறது. விமர்சனம் என்பது கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு என்பதை விட விமர்சகனுக்கும் கவிஞனுக்குமான உறவின் அளவுகோலாகிவிடும் துக்கங்களை எதிர்கொண்டிருக்கிறோம். சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு கவிதை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தட்டையான அல்லது கவித்துவமற்ற  வரிகளை கொண்டாட வேண்டும் அல்லது மெளனமாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தங்கள் வாசகனுக்கு உருவாகிவிடுகிறது. கவிதையின் மீதான எந்த எதிர்மறையான விமர்சனத்தையும் பல கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றே உணர்கிறேன். கவிதையில் ஒரு குறை சுட்டிக் காட்டப்படும் போது அந்தக் குறையைத் தவிர்த்து வேறு அம்சங்களை பேசலாம் என்று கவிஞன் விரும்பினால்-வாசகன் அதற்கு ஒத்துப் போகக்கூடும். ஆனால் விமர்சகன் கவிதையின் பலங்களை விடவும் பலவீனங்களையே குறிப்பிட விரும்புகிறான்.  அதுவே கவிதைக்கான நல்ல சூழலாக இருக்கும். 

ஒரு மழைக்கால இரவில் எஸ்.செந்தில்குமாரின் முன் சென்ற காலத்தின் சுவைகவிதைகளை வாசிக்கத்துவங்குகிறேன். இந்நகரத்தில் பெய்யும் மழை இந்த நகரத்தைப் போலவே கருணையில்லாதது. அமிலத்தை தன்னுள் புதைத்திருக்கும் மழையில் நனைவதை யாரும் பொருட்படுத்துவதில்லை. மழையை அசட்டை செய்து அவமானப்படுத்தும் இந்தக் கூட்டத்திமிடமிருந்து தப்பிக்க மழை இரவில் பெய்து கொண்டிருக்கிறது. கூரைகளைத் தட்டித் தட்டி தான் வைத்திருக்கும் ஆயிரமாயிரம் கதைகளை நம்மிடையே பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் மழையைப் போலவே எஸ்.செந்தில்குமார் நமக்குச் சொல்ல ஓராயிரம் கதைகளை வைத்திருக்கிறார். எஸ்.செந்தில்குமாரின் கவிதைகள் கதைசொல்லியின் கவிதைகள்.புனைவுகளை கவித்துவத்தின் உச்சங்களுடன் கவிதைகளில் நிறுவுவதில் செந்தில் தனித்துவம் மிக்கவராகத் தெரிகிறார்.

இவரின் கவிதைகளில் சொற்களை இடம் மாற்றியமைத்தல், வரிகளுடனான விளையாட்டு, திருகல் என்ற மொழியியல் சார்ந்த முயற்சிகள் அதிகமில்லை.  புதிர்களை கவிதைக்குள் வைத்திருத்தல், புரியாத தன்மை என்ற அறிவு சார்ந்த தூண்டுதல்களும் இல்லை. ஆனால் தனது கதை சொல்லும் பாங்கின் காரணமாகவும், இயல்பான வெளிப்பாட்டு முறையின் காரணமாகவும் இந்தக் கவிதைகள் செந்திலின் கட்டுப்பாட்டிற்குள் வாசகனை நகர்த்துகின்றன.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள முன் சென்ற காலத்தின் சுவைகவிதையை ஒரு உதாரணமாகச் சொல்ல முடியும்.

கிணற்றில் மிதக்கும் வேப்பம்பூக்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாள் அம்மங்கை
வழக்கமாக
மின்சாரம் தடைபடும் நேரம் நெருங்குகிறது
அப்பொழுது 
கடந்துபோகையில்
அவன் கட்டியணைத்து முத்தமிடுகிறான்
எந்த மறுப்பும் இன்றி முத்தத்தை
ஏற்றுக் கொள்கிறாள்
நரையின் நிழல் படர்ந்திருக்கும்
அம்முத்தம்
தடைபட்ட மின்சாரம் வந்ததும்
நிறம் மாறிடத் தொடங்குகிறது
கிணற்றில் காறி உமிழ்கிறாள்
அம்முத்தத்தை
பூக்களோடு பூக்களாய் மிதக்கிறது
காலம் தன்னைக் கடந்து சென்ற வேதனையில்.

முதிர்வெய்திய நிகழ்காலத்திற்கும் முத்தம் பெற்றுக்கொண்ட கடந்துபோன இளம்பருவ காலத்திற்கும் இடைப்பட்ட நீண்ட காலம், மின்சாரம் தடைபடும் கணநேரத்தில் சித்திரமாக வந்து போகிறது இந்தக் கவிதையில். கொஞ்சம் காதல், கொஞ்சம் சலிப்பு, கொஞ்சம் துக்கம் என புரளும் இக்கவிதையின் உருவாக்கம் நேர்கோட்டில் அமைந்திருக்கிறது. இந்த நேர்கோட்டு கவிதை உருவாக்கம் செந்தில்குமாரின் பெரும்பாலான கவிதைகளை சிக்கலற்றதாக்குகிறது. சிக்கலற்ற கவிதைகள் மட்டுமே சிறந்த கவிதைகள் என்பதில்லை வாதம்- ஆனால் சமகாலத்தில் கவிதைகள் எளிமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.  எளிமைப்படுத்தலில் ஒரு அபாயமும் இருக்கிறது. மிதமிஞ்சிய எளிமையாக்கம் எவ்வித கவித்துவமும் இல்லாத வெற்று வரிகளை உருவாக்கிவிடக்கூடும். இத்தொகுப்பு அந்த அபாயத்தை அனாயசமாகத் தாண்டியிருக்கிறது.

கவிதைக்கும் வாசகனுக்கும் இடைப்பட்ட இடைவெளி பெரும்பாலும் வாசகனை சலிப்படையச் செய்து அவனை கவிதையை விட்டு விலகிவிடச் செய்கிறது.  கவிதையை வாசிக்கும் போது கவிதையை உள்வாங்க முடியாத போதும் அல்லது கவிதையின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியாத போதும் வாசகன் அடுத்த கவிதைக்கு நகர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமகாலத்தில் கவிதைகள் என நம் முன் வைக்கப்படும் மொன்னையானடெம்ப்ளேட் கவிதைகளின் கசகசப்புகளுக்குள்ளாக ஆசுவாசம் அளிப்பவையாக இத்தொகுப்பின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. கவிதைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பதட்டம் கவிஞனுக்கு இல்லை- கவிதையாகிவிட வேண்டிய உடனடி அவசரம்கவிதைக்கும் இல்லை. இந்த அவசரமின்மை/நிதானம் தொகுப்பு முழுக்க இருக்கிறது. அது "அறுவடைக் காலத்தில்/மஞ்சள் பறவை தாமதமாக வந்திறங்கலாம்" என்ற வரிகள் தரும் காட்சிக்கு இணையானது.  அவசரமின்மைதான் காரணமாக இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையென்றாலும் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. 

செந்திலின் கவிதைகள் தரும் இன்னொரு அனுபவமாக இடையீட்டு’(in between) வாசிப்பனுவத்தைச் சொல்ல முடியும். அது நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் இடையிலானதாகவோ, உருவத்திற்கும் உருவமின்மைகளுக்கும் இடையிலானதாகவோ, இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையிலானதாகவோ என ஏதேனும் 'இரண்டிற்கு' இடையிலானதான கவிதைகள். 

காய்ந்த துணிகளில் வெயிலின் வாசம்/வாசத்திலிருந்து சூரியன் சொட்டுச் சொட்டு நீராய்/வடிந்துகொண்டிருக்கிறதுஎன்ற வரிகள் மிகப் பிடித்திருந்தது. ”கூடடைந்துகொண்டிருக்கும் புறாக்கள்என்னும் தலைப்பிலான இந்தக் கவிதையில் உருவமுள்ள சூரியன் உருவமில்லாத நீராக வடிந்து கொண்டிருக்கிறது.   கவிதையின் அடுத்த வரிகள் உலரும் துணிகளில் புறாக்கள்/கூடடைந்து கொண்டிருக்கின்றன என்று முடிகின்றன. 

காய்ந்து கொண்டிருக்கும் துணிகளிலிருந்து உதிரும் நீர்த்துளிகளில் சூரியன் தெரிவது நேரடியாகச் சொல்லப்படாத ஆனால் புரிந்துகொள்ள சிரமமில்லாத காட்சி.  இதன் தொடர்ச்சியாக இருக்கும் 'கூடடையும் புறாக்கள்' என்பது எளிதில் பிடிபடாத படிமம். புறாக்கள் ஏன் துணிகளில் கூடடைய வேண்டும் என்ற வினா எழும் போது- கவிதையில் வரும் புறா, புறாவைத்தான் குறிக்கிறதா என யோசனை உருவாகிறது. இதைத்தான் இடையீட்டுவாசிப்பு அனுபவம் என நினைக்கிறேன். உருவத்திற்கும் உருவமின்மைக்கும் இடையில் வாசகனுக்குள் உருவாக்கப்படும் சிந்தனையோட்டமும், ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு தடையின்றி கவிதை நகர்வதும், நகரும் கவிதையானது தன்னோடு சேர்த்து வாசகனின் மனநிலையை இடம் மாற்றுவதும் இந்தத் தொகுப்பில் தொடர்ந்து நிகழ்கிறது.

"இடைப்பட்ட" அனுபவத்தை தரக்கூடிய கவிதைகள் முதல் வாசிப்பிலேயே புரிந்துகொண்டாலும் கூட இன்னும் சில முறைகள் மறுவாசிப்பு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பிரெஞ்ச் விமர்சகர் ரோலண்ட் பார்த்தெஸ் "மறுவாசிப்பை மறுப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பிரதியை எல்லா இடத்திலும் வாசிக்கிறார்கள்"  என்று குறிப்பிட்டது செந்தில் குமாரின் கவிதைகளுக்கு சரியாக பொருந்தி வருகிறது. இந்தக் கவிதைகளின் பலமாக ஒவ்வொரு வாசிப்பிலும் அது காட்டும் நுண்ணிய வித்தியாசத்தை குறிப்பிட முடியும். 

மாலையில் தலை முடியை அவிழ்த்துச்/சிக்கெடுக்கிறாள் வீடு திரும்பிய மாணவி/முடிகளிலிருந்து உதிர்கின்றன உதிர்கின்றன/அவ்வளவு ஆண்களின் கண்கள்” என்பது தொகுப்பில் இன்னும் ஒரு கவிதை. வீடு திரும்பும் மாணவியை ஆண்கள் பார்க்கிறார்கள், பெண்களும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் உதிரும் கண்கள் ஆண்களின் கண்கள் மட்டுமே- ஆண்களின் கண்களுக்கு தரப்படும் அழுத்தம் கவிதையை வாசிப்பவனை திசை மாற்றுகிறது. இத்தகைய கவனமான சொற் பயன்பாடுகளை கவிதைகளில் பரவலாகவே உணர முடிகிறது.

செந்தில்குமாரின் கவிதைகள் எளிய மனிதனின் கவித்துவ பார்வையிலிருந்து எழுதப்படும் கவிதைகள்- இவை அன்றாட வாழ்க்கையில் சாமானியர்கள் எதிர்கொள்ளும் காட்சிகளின் கவித்துவ எழுச்சி. "..எம்பிராய்டரி வேலை செய்யும்/பெண்ணின் கைகளிலிருந்து/உதிர்ந்து கொண்டிருக்கின்றன/அபூர்வமான சில பூக்கள்" என்பது எஸ்.செந்தில்குமாரின் கவிதைகளுக்கும் பொருந்திப்போகிறது; இவரின் கவிதைகளில் எளிய காட்சிகளிலிருந்து அபூர்வமான கவித்துவ தெறிப்புகள் உதிர்கின்றன.

இந்தக் கவிதைத் தொகுப்பில் போலஎன்ற சொல் விரவிக்கிடக்கிறது. சங்குப்பூவின் வடிவம் போல’ ‘ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர் பறவைகளைப் போல’ ‘காத்திருப்பேன் இப்போது போல என்பன சில உதாரணங்கள். கவிதையில் 'போல' என்பதே துருத்தல்தான். உரைநடையில் ஏதேனும் இரண்டை ஒப்புமைப்படுத்த இது அதைப் போலஎனச் சொல்வது சுலபமானதாகிவிடுகிறது. இந்தச் சுலபமானதை கவிஞன் செய்யத் தேவையில்லை. இதை செந்தில் குமார் தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

கணிதவியலிலும், இயற்பியலிலும் மூன்றாம் பரிமாணம் என்பது வரையிலும் சற்று தெளிவு இருக்கிறது. நான்காம் பரிமாணம் என்பது என்னவாக இருக்கும் என்பது ஒரு போதும் தெளிவாக புரிந்ததில்லை. கணிதத்திலும் தத்துவவியலிலும் இதற்கான தெளிவான வரையறை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் வெளியையும் காலத்தையும்(Spacetime) இணைப்பது நான்காம் பரிமாணம் என்று ஏதோ ஒரு குறிப்பினை கல்லூரிக்காலத்தில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த பரிமாணங்களுடன் கவிதையை உறவுபடுத்தினால் கவிதை என்பது நான்கு பரிமாணங்களையும் தாண்டி- வெளியையும், காலத்தையும் தாண்டிய இன்னொரு பரிமாணத்தில்-ஐந்தாவது பரிமாணத்தில் இயங்குகிறது எனலாம். என்னளவில் தொகுப்பின் அனைத்து கவிதைகளையும் மிகச் சிறந்த கவிதைகள் என்று  பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும் முன் சென்ற காலத்தின் சுவை தொகுப்பின் கவிதைகளை ஐந்தாம் பரிமாணத்தை புரிந்துகொள்ள உதவும் கவிதைகளாகக் கருதுகிறேன்.

நன்றி: காலச்சுவடு, பிப்ரவரி’2012