Jan 31, 2012

உரையாடல்கள்


கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவிதை குறித்து பேசியும்,எழுதியும் வரும் நவீன கவிஞர்கள் இருபத்தைந்து பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் மதுரையில் நடைபெற்றிருக்கிறது. என்னால் கலந்துகொள்ள முடியாத வருத்தம் இருப்பினும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்ததாக நண்பர்கள் தெரிவித்தார்கள். 

இலக்கிய உரையாடல்களே படைப்பு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.உரையாடல்கள் படைப்புகளில் உடனடி தாக்கத்தை உண்டாக்கக்கூடியவை இல்லை.அதன் விளைவுகள் மெதுவானவை அதே சமயம் ஆழமானவை.உரையாடல்களிலிருந்து குறைந்தபட்சம் ஓரிரு கருத்துக்களாவது படைப்பாளியின் ஆழ்மனதில் பதிகிறது. இதன் பிறகாக அவன் உருவாக்கக்கூடிய படைப்புகளில் அவன் மனதில் பதிந்திருக்கும் இந்தக் கருத்துக்களின் விளைவை உணர முடியும்.இந்த விளைவு படைப்பு மொழி, உள்ளடக்கம்,வெளிப்பாட்டு முறை என ஏதேனும் ஒரு பரிமாணத்தில் வெளிப்படலாம்.இந்த விளைவுகள்தான் படைப்புகளின் திசையை மாற்றியமைக்கின்றன.இலக்கிய உரையாடல்கள் படைப்பாளிகளுக்கும் படைப்பு மொழிக்கும் இன்றியமையாதவை.வாசிப்பின் தாக்கத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது சரியான உரையாடலின் தாக்கம். 

தனக்கு உரையாடல்கள் எதுவும் தேவையில்லை என்றோ அல்லது எந்த உரையாடலிலும் தனது கருத்துக்களே இலக்கிய உலகின் உச்சபட்ச தீர்ப்புகள் என்றோ நினைக்கக் கூடிய படைப்பாளியின் படைப்புகள் அந்தப்புள்ளியோடு தேங்கிப் போகின்றன எனத் தோன்றுகிறது.

சமகாலத்தில் உற்சாகமாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்கள் தங்களுக்குள் நடத்திய உரையாடல் தமிழ்க் கவிதை மொழியில் நிச்சயம் சிறு சலனத்தை உருவாக்கும் என நம்பலாம். படைப்பாளிகள் மட்டுமே கலந்துகொண்ட குற்றாலம் பட்டறை போன்றவை இன்னமும் இலக்கிய வட்டாரத்தில் குறிப்பிடப்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மதுரையில் நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
                                                           ****
மிக அதிசயமாக வரக்கூடிய தபால்கள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, அலைபேசி அழைப்புகள் என எல்லாவற்றையும் விட ஒற்றைத் தபால் சுமந்து வரக்கூடிய சந்தோஷம் அளவற்றது. அப்படியொரு சந்தோஷத்தை மேட்டூரிலிருந்து ஆசைத்தம்பி என்ற பெயரில் வந்திருந்த தபால் அளித்தது. கண்ணாடியில் நகரும் வெயில் தொகுப்பினை வாசித்துவிட்டு அதிலிருந்த முகவரிக்கு கடிதம் எழுதியிருந்தார். தொகுப்பில் இருக்கக் கூடிய முகவரி என் கிராமத்து இல்லத்தின் முகவரி. அந்த முகவரிக்குத்தான் கடிதம் வந்திருந்தது. பதினைந்து நாட்களாக யாரும் இல்லாத வீட்டின் உட்புறத்தில் சாலையின் தூசிகளை சுமந்து கிடந்த கடிதத்தை பிரித்து வாசித்த சந்தோஷம் இன்னமும் தொண்டைக்குக் கீழாக குளிர்ந்து கொண்டிருக்கிறது.

கடிதத்தை முடிக்கும்  பத்தியில் நான் ஏன் கவிதை,கவிதை விமர்சனம் தவிர வேறு எதுவும் முயற்சிப்பதில்லை என்று வினவியிருந்தார்.கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இனிமேல்தான் அதற்கான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Jan 7, 2012

நம் மழைக்காலம்

உள்துறை இலாகவை என் அமைச்சரவையில் சேர்ப்பதற்கான அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்த கவிதை. Irreversible dent :-)
உன் ப்ரியம்
படர்ந்த
நாட்களின் நடனத்தில்
கரைகிறது
தீராத் தனிமை

சாரலில்
நிறமழியாமல் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்த்துகளில் தொடங்கும்
நம்
மழைக்காலத்தில்
உன் கரங்களை
பற்றிக் கொள்கிறேன் -

ஆயிரம் ஆண்டுகளுக்கான
தீரா
ப்ரியங்களுடன்.

Jan 5, 2012

முதல் பரிசு ஆல்டோ கார்!

ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது சிலிர்ப்பாகவே இருந்திருக்கிறது. இந்த வருடமும் அப்படியே இருக்கிறது.

புத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நண்பர்களோடு எழுத்தை பற்றி பேசுவது விரும்பிய போதெல்லாம் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின் சந்தோஷம் எனக்கு பெங்களூரில் நடக்கும் கண்காட்சியிலோ அல்லது வேறொரு ஊரில் நடக்கும் கண்காட்சியிலோ கிடைப்பதில்லை.

இதுவரைக்கும் முகமே அறிந்திராத ஒருவருடன் வாசிப்பு பற்றி பேசுவதன் சுகம் தனித்துவமானது.அந்த அறிமுகம் இல்லாத முகங்களுடன் நீண்ட நேரம் பேசியதுண்டு.  இத்தகைய சாத்தியங்கள் நிறைந்த இடம் என்பதற்காகவே புத்தகக் கண்காட்சிக்கு செல்ல மனம் குறுகுறுக்கிறது.

புத்தகக் கண்காட்சியில் அதிகபட்சமான நாட்கள் அலைய வேண்டும் என்று விரும்பினாலும் 'குடும்பஸ்தன்' என்று விசிட்டிங் கார்டில் அடித்துவிட்ட பிறகு இயலாமல் ஆகிவிடுகிறது. 

பயணம் சார்ந்த பெரும்பாலான மசோதாக்கள் உள்துறையின் அனுமதிக்கு பிறகே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்கு மட்டும் அனுமதி தேவை என மசோதாவில் சேர்த்துவிட்டு இன்னும் ஒரு நாளை முன் அனுமதியின்றி சேர்த்துவிட திட்டம் வைத்திருக்கிறேன்.

7 ஆம் தேதி(சனிக்கிழமை) புத்தகக் கண்காட்சிக்கு வரும் நண்பர்கள் 9663303156 என்ற எண்ணிற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அழையுங்கள். நிச்சயம் சந்திக்கலாம். நான் அன்னா ஹசாரேவை தற்சமயம் பின் தொடர்வதில்லை என்பதால் 'மிஸ்டு கால்'கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
                                                                        *****
எனது 'கண்ணாடியில் நகரும் வெயில்'  கவிதைத் தொகுப்பும், 'சைபர் சாத்தான்கள்' கட்டுரைத் தொகுப்பும் உயிர்மையில் கிடைக்கின்றன. ஏற்கனவே இரண்டும் தலா 2001 பிரதிகள் விற்றுவிட்டதாகவும் 20001 பிரதிகள் அச்சடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனை பொய்யாக்கும் விதத்தில் நான் 30001 பிரதிகள் விற்க வேண்டுமென டார்கெட் வைத்திருக்கிறேன். ம்ம்ம்..தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

பிரதி வாங்கிக் கொண்ட விபரத்தை பில் நெம்பரோடு மின்னஞ்சலில் அனுப்பினால் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக்கல் முறையில் பம்பர் பரிசாக ஒரு ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக இரண்டு ஹோண்டா ஆக்டிவாவும் வழங்கப்படுகிறது. பிரதிகள் வாங்கிய அத்தனை பேருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பிரதிகளை ரூ.30001, ரூ.25001 வீதம் ஏலம் எடுத்த வாசக கோடிகளுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.                                                              


Jan 4, 2012

கலை கலைக்காக


வணக்கம் மணிகண்டன்.

உங்களின் புதிய வலைப்பூ வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அப்புறமாக, வசுமித்ர தளத்தின் விவாதத்தில் 'கலை கலைக்காகவே' என்பதன் விமர்சனம் இருந்தது. ரசனை சார்ந்து நீங்கள் கவிதையைப் பற்றி எழுதுகிறீர்கள். கொஞ்சம் விரிவாக உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள். 

பிரியமுள்ள,
கிருஷ்ணப்பன்.

                                                   ***

அன்புள்ள கிருஷ்ணப்பன்,

வணக்கம்.

நண்பர் வசுமித்ர தளத்தில் நடைபெறும் விவாதம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றே நினைக்கிறேன். அவர் தேவதச்சனை முடிந்துபோன கவிஞர் என்பதாக- சற்று கடினமான வார்த்தைகளில்- பிணம் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வருத்தத்தையளித்தது. 

அது சார்ந்த உரையாடலில் 'கலை கலைக்காகவே' என்ற சொற்றொடர் இடம் பெற்றிருந்தது. 'கலை கலைக்காக'வே என்பதும் 'கலை மக்களுக்காக'வே என்பதும் இருவேறுவிதமான கூற்றுகளாக நவீனத்துவத்தில் புழங்கி வருகின்றன.  

கலை கலைக்காவே என்பது நவீன வாழ்வியல் தரும் நெருக்கடிகளின் ஊடாக தன் இருப்பு(Self-Existence) குறித்தான படைப்புகளை முன்னெடுக்கும் படைப்பாளிகளின் வாதம். சுயம் சார்ந்த படைப்புகள் வாசகனுக்கு அளிக்கும் வாசிப்பனுவமே போதும் என்பதும் படைப்புகள் பிறர் சார்ந்த பிரச்சினைகளை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதும் அதன் சாராம்சம். இன்னமும் குறிப்பாகச் சொன்னால் படைப்புகளின் வழியே தனிமனித சிக்கல்களின் சிண்டுகளை அவிழ்க்கும் முயற்சி. 

கலை மக்களுக்காகவே என்பது பெரும்பாலும் இடதுசாரி கருத்துக்களைக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் கருத்தாக இருக்கிறது. கலை என்பது மக்களையும், மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தும் இருத்தல் வேண்டும் என்கிறார்கள். படைப்புகள் என்பன வெறும் தனிமனிதச் சிக்கல்களை மட்டும்  பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதும், அவை வெற்றுப் புலம்பல்களாகிவிடுகின்றன என்பது இவர்களின் வாதம்.

கலை என்பது வெறும் கவிதை வடிவத்தை மட்டும் குறிப்பிடுவதில்லை. எழுத்தும் கலை, இசையும் கலை, நாடகமும் கலை. இதில் என் அபிப்பிராயம் என்று கேட்டால் என்னால் 'கவிதையை' மட்டுமே முன்னிறுத்திப் பேச முடியும் என்று நினைக்கிறேன்.

கவிதை மக்களின் பிரச்சினைகளை(சமூகச் சிக்கல்களை) சார்ந்து இயங்கக் கூடும். அப்படி இயங்குவதில் தவறும் இல்லை. ஆனால் அவை பிரச்சார தொனியிலானதாகவோ அல்லது கவித்துவத்தின் கூறுகளை இழந்துவிடுமேயானால் அவற்றை முற்றாக நிராகரிக்கலாம்.

அதே சமயத்தில், கவிதை தனிமனிதச் சிக்கல்களை பேசக் கூடாது என்பது முற்றாக தூக்கியெறியப்பட வேண்டிய வாதம். தனிமனித சிக்கல்களை புரிந்து கொள்ளாமலும், இந்தச் சமூகமும் வாழ்வியல் முறைகளும் என் மீது தரக்கூடிய அழுத்தத்தைப் பற்றி பேசாமலும், என்னால் சமூகத்தின் சிக்கல்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்? இந்த சுய புரிதலுக்கு கவிதைகளை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவிதை, அதன் வடிவம், அதன் பாடுபொருள் உள்ளிட்ட அதன் நுண் சூட்சுமங்களை புரிந்து கொள்வதில்தான் நான் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். 

இந்தக் கணத்தில்- கவிதை என்பது எனக்கான ஆசுவாசம் தருவதாக இருந்தால், என்னைக் கொண்டாடச் செய்வதாக இருந்தால், என் பிரியமும் துக்கமும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள தன் தோள்களைக் கொடுத்தால் போதுமானது என்று நினைக்கிறேன். இன்னமும் ஆழ்ந்த வாசிப்பும், தொடர்ச்சியான சிந்தனையும், நீண்ட உரையாடல்களும் இந்த எண்ணத்தில் மாற்றம் உருவாக்கக் கூடும். 

நன்றி.

Jan 2, 2012

காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலையும் வண்ணத்துப்பூச்சி

கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டின் விளக்கு விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தனித்துவமான கவிதை மொழியில் தமிழின் நவீன கவிதையை உயிர்ப்புடன் முன்னகர்த்திச் செல்லும் முன்னோடிக் கவிஞர் தேவதச்சன். 

எனக்கு முதலில் அறிமுகமான தேவதச்சனின் கவிதை 

என்
அன்பின் சிப்பியை
யாரும்
திறக்க வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்

முதல் வாசிப்பிற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை என்னால் என்றைக்குமே விவரிக்க முடிந்ததில்லை. அன்பும் பிரியமும் உதாசீனப்படுத்தப்படும் போதெல்லாம் இந்தக் கவிதைதான் மனதின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறது. தனிமையில் கசங்கிக் கிடந்த இரவுகளில் எல்லாம் இந்த வரிகளை யோசித்ததுண்டு. இரண்டு அல்லது மூன்று வரிகளில் எழுதப்படும் கவிதைகள் நல்ல அனுபவத்தை தருவதில்லை என்று வாதிடும் நண்பர்களை தர்க்க ரீதியாக தோல்வியடையச் செய்வதற்கு இந்தக் கவிதையை முன் வைத்திருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதை மட்டுமே தேவதச்சனின் நல்ல கவிதையன்று.

தனக்கும் முன்பும் தனக்குப் பின்னாலும் இல்லாத கவிதையின் வடிவத்தில், அடர்த்தியில், பாடுபொருளில் தனித்தன்மையான கவிதைகளால் நிரம்பியிருக்கிறது தேவதச்சனின் கவிதை உலகம். கவிஞர் மிகச் சாதாரணமான கவிதைக் காட்சிகளில் சிக்கலான புதிர்களை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களையும் சிக்கல்களையும் புதிர்களாகக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் விடுகதைகளைப் போன்றவை. இந்தப் புதிர்களின் விடைகளைக் கண்டறிவதில் இருக்கும் சுவாரசியத்தைத்தான் வாசக மனம் விரும்புகிறது. தேவதச்சனின் துண்டிக்கப்பட்ட கவிதைக் காட்சிகளை இணைத்துப் பார்ப்பதே புதிர்களின் சிண்டுகளை நீக்குவதைப் போலத்தான் இருக்கிறது.

தனக்குள் வரும் உயிரிகளை வெளியேற முடியாதபடி மூடி அவற்றை நொதிக்கச் செய்யும் 'நெப்பந்தெஸ்(Nepenthes)'தாவரத்தின் செயற்பாடுக்கு எந்தவிதத்திலும் சளைக்காததாகத்தான் தேவதச்சனின் கவிதைகளை என்னால் மதிப்பிட முடிகிறது. தனக்குள் வரும் வாசகனை திரும்பத் திரும்ப பேசச் செய்வன இக்கவிதைகள். இந்த நொதித்தல் குறுகுறுப்பான நொதித்தல். அந்த குறுகுறுப்பு மனம் விரும்பும் குறுகுறுப்பு.
ஊட்டியில் நித்யா கவிதை அரங்கில் தேவதச்சனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையியலைப் பற்றி மிக நுணுக்கமாக வெகு நேரம் பேசக் கூடிய ஆளுமைகளில் தேவதச்சனை மிக முக்கியமானவராகக் கருதுகிறேன். கவிதை அரங்கு முடிந்து மேட்டுப்பாளையம் வரும் வரையில் அவரோடு பயணித்தேன். வெற்றிலைக் குதப்பலின் மணத்தோடு வீசிய கவிதைகளை இன்னமும் சில கணங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

தேவதச்சனுக்கு வாழ்த்துக்களும், தகுதியானவருக்கு விருதைச் சூடிய அமைப்பினருக்கு பாராட்டுகளும்.

(தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் விரிவான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

டிசம்பர் சீஸன்

* புது வருடம் பிறந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவிலான பதிவுகள் கடந்த ஆண்டில்தான் பதிவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை 'ரீவைண்ட்' செய்ததில் மண்டையில் உறைக்கும்படி அடித்தவைகளில் இதுவும் ஒன்று. வில்லனிடம் மூன்று அடி வாங்கிய பிறகு- மூன்றாவது அடியில் உதட்டோரம் வழியும் துளி இரத்தத்தை துடைத்துக் கொண்டு வெறியுடன் தாக்கும் கதாநாயகனை என நேற்று முழுவதுமாக போராடியதில் தளத்திற்கு புதிய வடிவமைப்பு வந்திருக்கிறது. இனி பதிவிட வேண்டியதுதான் பாக்கி. பாடிகாட் முனீஸ்வரனின் முழு அருள் கிடைக்க யாராவது சிபாரிசு செய்தால் நிறைய எழுத முடியும் போலிருக்கிறது.

* டிசம்பர் சீஸன் இசைக்கு மட்டுமில்லாமல் இலக்கியத்திற்கும் வந்துவிட்டது. ஜனவரியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு முன்னோட்டமாக டிசம்பர் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் புத்தகவெளியீட்டு விழா நிகழ்வுகள் நடைபெறுகிறது. சொல்லிவைத்தாற்போல முக்கியமான பதிப்பகங்கள் பெரும்பாலான கூட்டங்களை தேவநேயப்பாவணர் அரங்கில்தான் நடத்துகின்றன. பத்துக்கு பத்து அறையொன்று சல்லிசாக அண்ணாசாலையில் வாடகைக்கு கிடைத்தால் டிசம்பர் மாதம் இலக்கியபெருங்குடி மக்களோடு இனிதே கழியும் போலிருக்கிறது.

* உயிர் எழுத்து சார்பில் நடைபெறவிருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீஷங்கரின் சொற்பறவை கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை வழங்க சுதீர் செந்தில் அழைத்திருந்தார். மேடையில் இருக்கும் போது எதிரில் இருக்கும் பார்வையாளர்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டால் தைரியமாக பேசிவிடலாம் என்று ஒன்பதாம் வகுப்பில் தமிழாசிரியர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. ஆனால் இலக்கியக் கூட்டத்தில் மட்டும் இதைச் செயல்படுத்த முடிந்ததில்லை. புன்னகையே இல்லாமல் மாமனார் வீட்டில் சண்டைபிடித்துவிட்டு வந்தவர்களைப் போல இருக்கும் ஒவ்வொருவரும் என்னைவிடவும் அதிகம் வாசித்தவர்கள் என்ற நினைப்பு வந்து கொன்றுவிடுகிறது. அதனாலயே ஒரு கூட்டத்தில் பத்து நிமிடங்கள் பேச வேண்டுமானால் பதினைந்து நாட்கள் தயாரிப்பு தேவைப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கும் அப்படியான தயாரிப்பிற்கு பிறகு 'தானே' புயலின் காரணமாக கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தகவல் வந்தது. Just miss!

*தமிழில் நவீன இலக்கியத்தின் முன்னோடி கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்(க.நா.சு) பற்றிய மிக சுவாரசியமான கட்டுரை டிசம்பர்'2011 காலச்சுவடில் வெளிவந்திருக்கிறது. அச்சில் வாசிக்காதவர்கள் ஆன்லைனில் வாசிக்கலாம். பழ.அதியமானின் நகைச்சுவையுணர்வூட்டும் எழுத்துக்காகவே மூன்று முறை வாசிக்க முடிந்தது.

* இரண்டாம் முறை பிரான்ஸ் சென்றிருந்த போது கெப்'ட்-அக்ட் (Cap d'agde) என்ற கடற்கரைக்குச் சென்று வந்தேன். அது என்ன மாதிரியான கடற்கரை என்பதை கூகிளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 'த்ரில்' ஆக இருந்தாலும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவம். சற்று விரிவாகவே எழுத விரும்புகிறேன். இதற்கும் பாடிகாட் முனீஸ்வரனை துணைக்கு அழைத்தால் அவர் கடுப்பாகிவிட வாய்ப்பு அதிகம் என்பதால் தனியாகவே முயற்சிக்கிறேன்.

* பொங்கல் வருகிறது- சென்னை சங்கமம் உண்டா என்றுதான் தெரியவில்லை.