Dec 23, 2011

நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா?

வணக்கம்

என்னுடைய பெயர் சா.பாலமுருகன்.

குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் ''தமிழ்க் கவிதைகள் - ஓரு மதிப்பீடூ''
என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். உங்களூடைய கலாப்ரியா குறித்த கட்டுரையை பார்வையிட நேர்ந்தது. மிகவும் நன்றாக இருந்தது

வினா : நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா? வேறுபாடுகள் இருந்தால் சுட்டவும்

நன்றி
**************************
அன்புள்ள பாலமுருகன்,

வணக்கம்.

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை Modern Poetry என்கிறார்கள்.

Modern Poetry என்ற சொல்லை நவீன கவிதை என்றும் அல்லது புதுக்கவிதை என்றும் மொழி பெயர்க்க முடியும் என்றாலும்- தமிழ் கவிதைச் சூழலில் நவீன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் அந்தச் சொற்களின் புழக்கத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. மரபை உடைத்த கவிதைகளில் பெரும்பாலானவை கூச்சல்கள் நிறைந்தவையாகவும், அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தருவனவாகவும் இருக்கின்றன. சில கவிதைகள் பிரச்சார தொனியிலானவை. இக்கவிஞர்கள் 'கவிதைக்கு பொய்யழகு' என வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார்கள்.

தமிழ் கவிதையியலில் நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா,சி.மணி,கலாப்ரியா,கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வரும் கவிதைகளை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது. Contemporary Poetry என்ற ஆங்கிலச் சொல் இந்தக்கவிதைகளுக்கு சரியாக பொருந்தும். இக்கவிதைகள் மேற்சொன்ன புதுக்கவிதைக்கு நேர்மாறானவை. நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே.

கவிதைகள் தரக்கூடிய வாசிப்பனுபவம் என்பதையும் இந்தக் இரு வகையான கவிதைகளைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். எதுகை மோனை போன்ற மொழி அலங்காரங்களும், நிறுத்தற்குறிகள் போன்ற பிளவுகளும் புதுக்கவிதையின் பிரதான அம்சங்களாக இருக்கின்றன. இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை.

நவீன கவிதைகளில் 'படிமம்' என்ற நுட்பம் பரவலாக பயன்படுகிறது. உதாரணத்திற்கு 'உடைந்த பாறை' என்பது ஒரு படிமம். கவிஞன் பாறை என்பதனை கவிதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருக்கக் கூடும். இங்கு பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது சிதைந்த ஆளுமையைக் குறிப்பிடவோ, நொறுங்கிய மனதினைக் குறிப்பிடவோ கூட இருக்கலாம். என் அனுபவம் சார்ந்து அந்த படிமத்தை நான் 'எதுவாக' வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக் கூடும். அனுபவம் சார்ந்து கவிதை உருவாக்கும் சலனம் ஆழ்மனதோடு தொடர்புடையது. இதனை நவீன கவிதையின் முக்கியமான அம்சம் என நான் நம்புகிறேன்.

'படிமம்' என்பது மட்டுமே நவீன கவிதையின் நுட்பமில்லை. எல்லாக்கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. அப்படியானால் இவை 'புதுக்கவிதை'யின் பிரிவில் வரக்கூடியனவா என்ற வினா எழலாம். இந்த இடத்தில் கவிதையின் வடிவம், அதன் உள்ளடக்கம் ஆகியவை கவனிக்கத் தக்கவை. (துருத்தலின்மை, கூச்சலின்மை போன்றவையும்). இந்த வித்தியாசத்தை தொடர்ச்சியான கவிதை வாசிப்பின் மூலமாக மிக விரைவில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த விளக்கம் மிகச் சிறிய குறிப்பு மட்டுமே. உங்களின் வினாவுக்கான பதிலை இன்னமும் விரிவாக்க முடியும்.

நன்றி.

வா.மணிகண்டன்.

Dec 19, 2011

குழந்தையின் ஒற்றை நாணயம்ஒற்றை நாணயத்தை
சுண்டிக் கொண்டிருக்கும்
குழந்தையின் அருகில்
அசிரத்தையாக பேசிக்கொண்டிருந்தார்கள்-
அவன்
மார்கழியில் குளிர் அதிகமாகிவிட்டதாகச் சொன்ன போது
ஒவ்வொரு வருடமும் இதையே சொல்கிறார்கள் என்றான்
இன்னொருவன்
வலதுகையில் புதிதாகத் தோன்றியிருக்கும் கரும்புள்ளியைக் காட்டியவனை
அசட்டை செய்தவன்
நேற்றைய மதுவிற்கு கடித்துக் கொண்ட மாமிசத்துண்டு
நன்றாக வெந்திருக்கவில்லை என்ற கணம்
அவள்
குங்குமப்பூ நிறச் சுடிதாரில் கடந்து சென்றாள்
கண்களை மட்டும் அவள் மீது திருப்பியவர்கள்
தேநீர் அருந்த விரும்புகிறார்கள்
சிகரெட் பற்றவைக்காத அந்தத் தருணத்தில்
அவனது செல்போன் அழைத்தது
சில வார்த்தைகளுக்குப் பிறகாக முகம் இருண்டவன்
பாதி நிரம்பியிருந்த தேநீர் குடுவையை வைத்துவிட்டு
ஓடத் துவங்குகையில்
குழந்தை நாணயத்தை
மீண்டும் சுண்டியது
ஒரு முறை கூட சுழலாத நாணயத்தை
திரும்பத் திரும்ப சுண்டியது
பூவும் தலையும் இடம்மாறினால்
அவனின் வானமும் பூமியும்
மாறிவிடக் கூடும் என நினைத்தவன்
வெறுமையின் சாயலோடு சிகரெட்டை பற்றவைத்தான்.