Aug 29, 2011

கொலை மேடைக் குதிரைகள்


பாலையின் புதைமணலில்
ஓடிக் களைத்த குதிரைகள்
மூச்சிரைத்துக் கிடக்கின்றன

வன்மத்தின் நோய்மை
விரவிக் கிடக்கும் லாயத்தில்
கறுப்பு முகமூடிக் காவலர்கள்
விஷ ஊசிகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்

வெப்பத்தின் கசகசப்பில்
முகமூடியை நீக்காமல் சிகரெட்டைப் பற்றவைக்கிறான் அவன்
திரும்பி நின்று சிறுநீர் கழிக்கிறான் இன்னொருவன்
நேற்றிரவு
நீலப்படம் பார்த்து வந்தவன்
குதிரையின் கால்களை இறுகக் கட்டுகிறான்
கொஞ்சம் எதிர்ப்பைக் காட்டிய குதிரைகள்
இயலாமல் விம்முகின்றன.

வாழ்நாளை
பாலையின் வெம்மையிலும்
கொடுமணலின் வாதையிலும்
கழித்த குதிரைகள்
இனி இறக்க வேண்டுமென
அரசி அறிவித்ததை தெரிவிக்கிறார்கள்.

எந்தக் குதிரையும் அசையவில்லை இப்பொழுது

கட்டப்பட்ட கால்களை வெறித்துப் பார்த்த
ஒரு குதிரையின் கண்கள்
கசிந்து கொண்டிருக்கின்றன
தன் முதுகில் தீட்டப்பட்ட வரலாற்றின் வடுக்களில்
ஈக்கள் மொய்த்திருப்பதை ஒரு குதிரை உணர்கிறது
சொடுக்கப்பட்ட சவுக்குகளை நனைத்த குருதி
சுவர்களில் தோய்ந்துகிடக்கிறது

எலும்புகளை இசிக்க
காத்திருக்கின்றன வேட்டை நாய்கள்
அந்நாய்களின்
குரூரக் கண்கள்
குதிரைகளின் கண்களில்
பிரதிபலிக்கின்றன

ஊசிகளை எடுத்துவருகிறான்
ஒரு முகமூடிக்காரன்
இனி
குதிரைகள்
ஓடிக் களைக்க வேண்டியதில்லை
வெளியுலகத்தின் வண்ணக் கனவுகளில் ஏங்க வேண்டியதில்லை

கழுகு வட்டமிடத் துவங்குகிறது

இப்பொழுது
ஏற்றுகிறார்கள்
அஹிம்சையின் கொடிக்கம்பத்தில்
ரத்தம் நனைத்த
வெள்ளைத் துணியொன்றை.

2 எதிர் சப்தங்கள்: