Jun 14, 2011

இது விபத்து நடந்த பகுதி



கருணையில்லாத
இந்நகரத்தின் மழைக்கால சாலைகள்
விபத்தில்
இறந்தவர்களின் கதைகளை
வட்டமிட்டு காட்டுகின்றன

மார்கெட் சாலையின்
மூன்றாவது திருப்பத்தில்
ஷோபனா
விழுந்துகிடந்த இடத்தில்
வட்டத்தினை
வரைந்து கொண்டிருந்தார்கள்

வட்டத்திலிருந்து
ஐந்தரையாவது அடியில்
அமர்ந்திருந்த
ஒரு கிழவி
மூன்று வயது நவ்நீத்தை
தவிக்கவிட்டுவிட்டாள்
என வஞ்சித்துக் கொண்டிருந்தாள்

துடைக்க
எந்தக் கையும்
நீளாத வெறுமையில்
ஈரமான கண்களுடன்
உறங்கிக் கொண்டிருக்கிறான்
நவ்நீத்.

முடிவுறாத கோடை நாளின்
மதியத்தில்
அவனுக்கான பாடல் ஒன்றை
இசைத்துக் கொண்டிருக்கிறது
தூரத்து தனிப்பறவை

வெறிச்சோடிக் கிடக்கும்
வசந்தகாலத்தின் சாலைகளில்
இவன்
அசைவில்
பதறி எழுகிறது
ஒரு செம்பறவை

பொம்மைகள் கிறுக்கப்பட்டிருக்கும்
அறையின் சுவர்களில்
வழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் குளிர்

பேய்க்காற்று அவனுக்கான
கதைகளை சுமந்து
அலையும்
இன்று
ஷோபனாவின் வட்டத்திற்கு
அருகில்
இன்னொரு வட்டத்தை வரைகிறார்கள்.

ஒரு பருவத்தில்
இருந்து
இன்னொரு பருவத்திற்கான
இடைவெளியில்
இறந்து பிறக்கிறான்
நவ்நீத்
நீங்களும்
நானும் அறியாமல்.

6 எதிர் சப்தங்கள்:

Agape Tamil Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

Krishna said...

கவிதை வரிகள் நெகிழவைக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு பருவத்தில் இருந்துஇன்னொரு பருவத்திற்கானஇடைவெளியில்இறந்து பிறக்கிறான் நவ்நீத்நீங்களும்நானும் அறியாமல்.

இராஜராஜேஸ்வரி said...

வரிகளுக்குப் பாராட்டுக்கள்

கருணாகார்த்திகேயன் said...

நல்ல கவிதை
தொடருங்கள் ...

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

Anonymous said...

ஒரு பருவத்தில் இருந்து இன்னொரு பருவத்திற்கான இடைவெளியில் இறந்து பிறப்பது கொடுமையிலும் கொடுமை!