Apr 28, 2011

35 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்த தொடரூர்தி


8.25 க்கு திருப்பூரை வந்தடைய வேண்டிய
தொடரூர்தி
இன்று
35 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது.

நடிகையொருத்தியின் படம்
நிர்வாணமாக வரையப்பட்டிருக்கும்
கழிப்பறையையுடைய
S7 பெட்டியின்
35 வது இருக்கையில்
அமர்ந்திருக்கிறாள் ப்ரவீணா
நளினமாக
பாப்கார்ன் தின்று கொண்டிருக்கும்
அவளின் குழந்தை
தண்ணீர் குழாயை
திருகி
விளையாட விரும்புகிறது

தொப்பூரைத் தாண்டிய 13வது நிமிடத்தில்
கருப்புக் கிடாவை வெட்டிய காட்சி
கண நேரம் வந்து போனது
அவனுக்கு.

தலை துண்டிக்கப்படுவதை கவனித்த
அவனால்
குருதியின் நிறத்தை பார்க்க முடியவில்லை.

சிவப்பாகத்தானிருக்கும் என்கிறான்
கதவருகில் நின்றிருந்தவரிடம்.

சிரித்துக் கொள்கிறார்கள் இருவரும்.

நீலம் பாரிய முட்டைக் கோசு செடிகளை
வழியெங்கும்
பார்த்துக் கொண்டிருந்தவனிடம்
கழிப்பறைக் குழாயில்
பச்சை ரத்தம் வழிவதாக
சொல்லிக் கொண்டிருந்தது குழந்தை

ப்ரவீணா
குழந்தையின்
நனைந்த கைகளை
பார்த்துக் கொண்டிருந்தாள்

எந்தச் சலனமும்
இல்லாமல்
36வது இருக்கையில் இருந்தவன்
ஒரு புத்தகத்தில்
217வது பக்கத்தின் நுனியை
மடித்துவிட்டு
உறங்க எத்தனிக்கிறான்.

Apr 27, 2011

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

ஈழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும், போரின் பெயரால் அரங்கேற்றப்பட்ட அக்கிரமங்களும், சிங்கள இராணுவத்தின் ஊடாக வல்லரசுகள் அவிழ்த்துவிட்ட இன அழிப்பும் சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலானவற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன அல்லது அங்கு வன்முறைகளே நிகழவில்லை என்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு உலகச் சமூகத்தின் கண்களிலிருந்து இக்கொடுமைகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டன.

நிர்வாணப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவனும், உடல் சிதைக்கப்பட்டு மாண்டு போனவளும், குண்டுகளால் மண்ணுள் புதைந்து போன சிறுவனும், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்ட சிறுமியும், வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அழித்தொழிக்கப்பட்ட மனிதனும் இன்று நம்மிடம் வேண்டுவது அவர்களின் மரணத்திற்கான சிறு பதிலை மட்டுமே.

சிங்கள இராணுவத்தினரால் சூறையாடப்பட்ட தமிழினத்தின் அடையாளங்கள் கருமை படிந்த சுவடுகளாக இணையத்தில் பதிந்து கிடக்கின்றன. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை பதைபதைப்புடன் தேடிய ஒவ்வொரு இதயமும் கொஞ்சம் கசிந்ததோடு தனக்குத்தானே கேட்டுக்கொண்ட வினா "இந்த அரக்கர்களுக்கு எந்த தண்டனையுமே கிடையாதா?" என்பதுதான்.

உலகத்தலைவர்கள் தங்களிடம் வினவியவர்களுக்கு மெளனத்தை பரிசளித்தார்கள். வல்லரசுகளை நோக்கி எழுப்பப்பட்ட இந்த வினாவுக்கு நமுட்டுச் சிரிப்பு பதிலாக்கப்பட்டது. இந்த கொடூரங்களின் சாட்சிகள் யாவும் ஈழத்தமிழனோடு சேர்த்தே புதைக்கப்பட்டுவிட்டன என சோர்ந்திருந்த தருணத்தில் சிங்கள இராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்தான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

குற்றவாளிகளை காப்பதற்கென வல்லோன்களும் வகுத்தவர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வெகுமக்களின் அழுத்தம் இருந்தால் மட்டுமே குற்றவாளிகள் கூண்டிலேற்றப்படுவார்கள். இவர்கள் கழுவிலேற்றப்பட வேண்டியவர்கள்- இப்பொழுதுதான் நாம் கூண்டிலேற்றுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஈழத்துக்காக எரிந்த முத்துக்குமார் எழுதி வைத்த "காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமமானது" என்ற வரிதான் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Apr 21, 2011

குடையின் கீழ் தனித்துக் கிடக்கும் கடிதம்உலர்த்துவதற்காக விரித்து வைக்கப்பட்டிருக்கும்
குடையின் கீழ்
தனித்துக் கிடக்கும்
இந்தக் கடிதத்தில்தான்
என் தோல்வியடைந்த காதல்கள்
ஆவணமாக்கப்பட்டிருக்கின்றன

சலனமில்லாத தொலைக்காட்சிக்கு
நேரெதிராகப் படபடக்கும்
அந்த கடிதத்தில்தான்
நம் துரோகங்களின் சாட்சிகள்
பட்டியலிடப்பட்டிருக்கின்றன

நள்ளிரவில் அணைக்கப்படாத
விளக்கு வெளிச்சத்தில்
பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்
கரப்பான் பூச்சியொன்று
கண நேரம் நின்று சென்ற
இந்தக் கடிதத்தின்
மூன்றாம் பத்தியில்தான்
உன் சல்லாபங்கள் தொடங்குகின்றன

பிரியத்தின் சொற்களால் நிரம்பிக் கொண்டிருந்த
கடிதம்
பதினோராவது பத்தியின் மூன்றாம் சொல்லிலிருந்து
துரோகத்தின் கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

தீராத நடுக்கத்தில்
பகல்களையும்
இரவுகளையும்
பெளர்ணமிகளையும் தாண்டி
இந்தக் கடிதத்தை எழுதியவன்
முடிக்க எத்தனிக்கையில்
முகத்தில் வியர்வை பெருக்கெடுத்தது

கொஞ்சம்
தண்ணீர் அருந்தினான்.

தீர்க்கவே முடியாத கணக்குகளை
மீண்டும்
வரிகளாக்கத் துவங்கியவன்
உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின்
நடுவிரலைக் கீறி
கொஞ்சம் குருதியை பருகினான்

பின்னர்
முடிவே இல்லாத இந்தக் கடிதத்தை
முகவரி எழுதாமல் வீசினான்

அவன் கிழிக்காமல் எறிந்த
அந்தக் கடிதம்
இப்பொழுது
உலர்த்துவதற்காக விரித்து வைக்கப்பட்டிருக்கும்
குடையின் கீழ்
தனித்துக் கிடக்கிறது.