Jan 21, 2011

காலச்சுவடு கவிதைகள்

தொலைக்கப்பட்ட குண்டுகள்

ஆலிலைகள் நிறைந்திருக்கும் பள்ளிக்குள்
வெடித்திருக்க வேண்டிய குண்டு ஒன்றை
வைத்த இடம் தெரியாமல் தேடுகிறார்கள்

9:17க்கு வெடிக்கும் என்ற
தொலைபேசிக் குரலில்
உருவமெடுத்தவனின் சொற்களிலிருந்து
தேட ஆரம்பித்தவர்கள்
முதலில்
குட்டிச் சூரியன்கள் உள்ளிறங்கும்
வகுப்பறைகளை அலசினார்கள்
பின்னர்
நூற்றாண்டு பாசி படிந்த
தண்ணீர்த் தொட்டிக்குள் நுழைந்தவர்கள்
குண்டுகளை விடுத்து
ஊறிக்கிடந்த
கதைகளை எடுத்துவந்தார்கள்

துரை வாத்தியாரையும்
லாவண்யா டீச்சரையும்
இணைத்து வரையப்பட்ட
படங்களாலான கழிவறையிலோ
புன்னகையோடு வெளியேற்றப்பட்ட
சிறுவர்களின் புத்தகப் பைகளிலோ
குண்டு கிடைக்கவில்லை

தேடிச் சலித்தவர்கள்
ஓய்வெடுக்க விரும்புகிறார்கள்

வெளிச்சத்தின் செதில்கள்
உதிரத் துவங்கிய மாலையில்
தோல்வியை
ஏற்றுக்கொள்ள விரும்பாமல்
கிடைத்த தகவல்
வெறும் வதந்தி என்று
அறிவிக்கிறார்கள்
சத்யன் நம்புகிறான்-
கிடைக்காத குண்டு
அசைவுறாத காலத்தின்
ஒரு கணத்தில்
வெடிக்கக்கூடியது என்றும்
தான்
புரட்டிப் படுக்கும் இந்தத் தலை
சிதறியிருக்க வேண்டியது-
கொஞ்சம் இடம் மாறியதில்
தப்பித்துக்கொண்டது என்றும்.

==============

கருணையின் கடவுள்

மரணத்திற்கும்
உடல் சிதறலுக்குமான
இடைவெளியில்
நிகழ்ந்த விபத்தொன்றில்
சிவப்புச்சாயத்தில் விழுந்த
துணியெனக் கிடந்தவனை
நிலம் உரச வெளியில் இழுத்தார்கள்

அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையைப்
புதிரான ஓவியமாக்கியவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக்கொண்டான்

நினைவு வந்த கருநாளில்
அவனிடம்
தண்டுவடம் முறிந்துபோனதென
சொன்னபோது
இடுப்புக் கீழ் செயல்படாதென்ற
துக்கத்தின் கண்ணீர்
ஈரமாக்கிய தலையணையிலிருந்து
கருணையின் கடவுள் தோன்றினார்
மது அருந்துவதிலும்
சிகரெட் உறிஞ்சுவதிலும்
தடையில்லை என்றதில்
சற்று ஆசுவாசமடைந்த
மெலிபவனின் பொழுதுகள்
காற்றில் அலையும்
டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று

சலனமில்லாத வெறும் பகலில்
ஒரு தலைவன் மார்க்ஸியம் பேசிக்கொண்டிருக்கிறான்
பழைய கிரிக்கெட் போட்டியில் ஒருவன் பந்தை விரட்டிக்கொண்டிருந்தான்
கவிஞன் என்று சொல்லிக்கொண்டவன் தன் பிரதாபங்களை அடுக்குகிறான்
பெட்ரோல் விலை பற்றி வட்டமாக அமர்ந்த நால்வர் அரிதாரங்களுடன் பேசுகிறார்கள்
காட்டெருமைகளால் நிரம்பிய வனத்தில் ஒரு யானை தனித்து அலைகிறது

சலித்து
சேனலை மாற்றியவன்
உந்திச் சுழி தெரிய
நடந்துகொண்டிருந்த
நெடுந்தொடர் நாயகியை அழைக்கிறான்

யாரும் இல்லாத தனிமையில்
அவள்
டிவியில் இருந்து இறங்கி வருகிறாள்
கண்களை மூடிக்கொண்டவனுடன்
சல்லாபித்துத் திரும்பியவள்
இனிமேல்
வரப்போவதில்லை எனச்
சொல்லிச் செல்கிறாள்

அதிர்ந்தவன்
காரணம் அறிய
எத்தனிக்கும் கணத்தில்
வேறொரு விளம்பரப் பெண்
ஆட
வந்துவிடுகிறாள்.

============

குரூரத்தின் ஊசி

குரூரத்தின் கிளைகளுடைய
மரத்தில் வசித்துவரும்
உங்களிடம்
பனி ஊசி ஒன்றிருக்கிறது.

வெளிக்காற்றில் உருகிவிடாத
அதை
உங்களிடம் அகப்படுபவர்களிடம் எல்லாம்
பரிசோதிக்கிறீர்கள்.
அது உருகுவதில்லை
என்னும் ஆணவத்தோடு.

முன்னொரு நாள்
ஒருவனின் நகக்கண்ணில் நுழைத்தீர்கள்
பிறகு
அவளது நுண்ணிய விழி மைய வெண்பரப்பில்
இன்று
கிடைத்தவனின் குரல்வளையிலும் முயன்று பார்த்தீர்கள்.

உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை-
மூன்று இரவுகளாக
உறக்கம் விழித்தவனின்
சிவந்த கண்களை
நீங்கள்
பாக்கிவைத்திருக்கும் வரைதான்
அந்த ஊசிக்கு
ஆயுள் என்று.

வா. மணிகண்டன்

http://www.kalachuvadu.com/issue-133/page96.asp


Jan 13, 2011

சென்னை சங்கமம்

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் நிகழும் 'கவிதை சங்கம'த்தில் கவிதை வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். தொடக்கத்தில் எனது கவிதைகளுக்கான அங்கீகாரமாகக் கருதியும் பின்னர் வந்த ஆண்டுகளில் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து பங்களித்து வந்தேன்.

இந்த ஆண்டும் கவிதைச் சங்கமத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. என்னை நினைவில் வைத்திருந்து அழைத்த நண்பர்களுக்கு நன்றி. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் கலாப்ரியா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. ஆனால் இந்த ஆண்டு கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சிபிஐ-ன் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் இந்த ஆண்டும் சென்னை சங்கமத்தில் பிரதான பங்களிப்பைச் செய்கிறது. சென்னை சங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் மையம் பற்றி சிலாகிக்கப்பட்டிருக்கிறது.
கறையின் நிழல் விழுந்த ஒரு நபருக்கும் அவரது அமைப்புக்கும் சென்னை சங்கமம் அளிக்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கிறேன். எதற்காக தமிழ் மையத்திற்கும் ஜெகத் கஸ்பருக்கும் சென்னை சங்கமம் இடமளிக்கிறது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கவிஞர் கனிமொழியின் இடத்தை ஸ்திரமாக்கப்படுவதற்கு நடத்தப்படுகிறது என்பது ஒரு காரணம் என்றாலும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடமாக சென்னை சங்கமம் விளங்கி வருவதாக உணர்கிறேன். அதே சமயம் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகாக தனது புனித பிம்பத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ள முனையும் கஸ்பருக்குத் துணையாக இந்தச் சென்னை சங்கமம் அமைந்துவிடக் கூடாது என்பதை நான் விரும்புகிறேன்.

இலக்கியமும் கலையும் சினிமா கவர்ச்சியிலும், அதிகாரத்தின் விரலசைவிலும், அரிதாரங்களினாலும் வெளிச்சம் பெறுவதில்லை. அப்படி விழக் கூடிய வெளிச்சம் தற்காலிகமானதுதான். தன் சுய நலங்களுக்காக இலக்கியத்தையும் கலையையும் பயன்படுத்திக் கொள்பவர்களை காலத்தின் சுழல் தாட்சண்யமின்றி தூர எறிந்துவிடும்.

சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சாட்டினை மறைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் கலையையும், இலக்கியத்தையும் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த ஆண்டு நடைபெறும் கவிதைச் சங்கமத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.

நான் புறக்கணிப்பதனால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் வரப்போவதில்லை; அதே சமயத்தில் எனது கவிதைகளுக்கான பிரசுர வாய்ப்புகள் குறையலாம் -எனினும் அது பற்றிய எந்தவிதமான விசனமும் இல்லாமல் எனது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி.

Jan 3, 2011

இந்த வருடத்தின் முதல் தற்கொலை.உங்கள் மீதான அதீத நம்பிக்கையில்
என் அந்தரங்கங்களை
பூட்டாமல் விட்டுச் செல்கிறேன்
அல்லது
ரகசிய அறையின் சாவியை
உங்களிடமே கொடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இல்லாத நேரத்தில்
மிக அவசரமாக
என் ரகசியங்களை சோதனையிடுகிறீர்கள்

எப்பொழுதும்
என்னுடையதாகவே
இருந்திருக்க வேண்டிய
அந்தரங்கங்கள்
இப்பொழுது
நம்மிடையே
பொதுவானதாகிறது.

நேர்த்தியாக என் குற்றங்களை வரிசைப்படுத்துகிறீர்கள்
எனக்கு எதிராக எழுப்ப வேண்டிய வினாக்களை
தயார்படுத்துகிறீர்கள்
வினாக்களுக்கு தரப்படும் பதில்களை பொறுமையாக
பெற்றுக் கொள்ளும் நீங்கள்
அதே வினாக்களை வேறுபடுத்திய வரிசைகளில்
திரும்ப
என் கண்களை நோக்கி செலுத்துகிறீர்கள்
நான் தலை குனியத் துவங்கும் போது
உங்களின் வேகம் அதிகரிக்கிறது.

நான் தோல்வியடைகிறேன்.

என்னிடமிருந்து
கண்ணீர் பெருகும்
கணத்திலிருந்து
நான்
நசுக்கப்படுகிறேன்

உங்களுக்கும் எனக்கும்
இடையில்
கட்டப்பட்ட
எனது பிம்பம்
சிதைந்து
கொண்டிருக்கிறது.

எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ள
தயாராகிறேன்.
கைகளை கிழித்துக் கொள்வதோ
அல்லது
நெருப்பினில் விரல் வைப்பதோ
உங்களை ஆசுவாசப்படுத்தும்
என நினைக்கிறேன்.

நீங்கள்
எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

வினாக்கள்
இன்னொரு வரிசையில்
விழத் துவங்குகின்றன.

நான் ரகசியமாக
வைத்திருந்த சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன.

எனது வானத்தில்
பறந்து கொண்டிருந்த
சிறு பறவைகளை
சுட்டு வீழ்த்துகிறீர்கள்.

எனது பாடல் வரிகள்
களைத்தெறியப்படுகின்றன.

நான்
உடைந்து கொண்டிருக்கிறேன்.
அல்லது
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்

வீதிகளில்
எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று

பட்டாசுகள் வெடிக்கத் துவங்குகின்றன.

இப்பொழுது
என் அறை சாத்தப்படுகிறது
மெதுவாக.