Dec 23, 2011

நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா?

வணக்கம்

என்னுடைய பெயர் சா.பாலமுருகன்.

குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் ''தமிழ்க் கவிதைகள் - ஓரு மதிப்பீடூ''
என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். உங்களூடைய கலாப்ரியா குறித்த கட்டுரையை பார்வையிட நேர்ந்தது. மிகவும் நன்றாக இருந்தது

வினா : நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா? வேறுபாடுகள் இருந்தால் சுட்டவும்

நன்றி
**************************
அன்புள்ள பாலமுருகன்,

வணக்கம்.

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை Modern Poetry என்கிறார்கள்.

Modern Poetry என்ற சொல்லை நவீன கவிதை என்றும் அல்லது புதுக்கவிதை என்றும் மொழி பெயர்க்க முடியும் என்றாலும்- தமிழ் கவிதைச் சூழலில் நவீன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் அந்தச் சொற்களின் புழக்கத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. மரபை உடைத்த கவிதைகளில் பெரும்பாலானவை கூச்சல்கள் நிறைந்தவையாகவும், அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தருவனவாகவும் இருக்கின்றன. சில கவிதைகள் பிரச்சார தொனியிலானவை. இக்கவிஞர்கள் 'கவிதைக்கு பொய்யழகு' என வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார்கள்.

தமிழ் கவிதையியலில் நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா,சி.மணி,கலாப்ரியா,கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வரும் கவிதைகளை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது. Contemporary Poetry என்ற ஆங்கிலச் சொல் இந்தக்கவிதைகளுக்கு சரியாக பொருந்தும். இக்கவிதைகள் மேற்சொன்ன புதுக்கவிதைக்கு நேர்மாறானவை. நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே.

கவிதைகள் தரக்கூடிய வாசிப்பனுபவம் என்பதையும் இந்தக் இரு வகையான கவிதைகளைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். எதுகை மோனை போன்ற மொழி அலங்காரங்களும், நிறுத்தற்குறிகள் போன்ற பிளவுகளும் புதுக்கவிதையின் பிரதான அம்சங்களாக இருக்கின்றன. இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை.

நவீன கவிதைகளில் 'படிமம்' என்ற நுட்பம் பரவலாக பயன்படுகிறது. உதாரணத்திற்கு 'உடைந்த பாறை' என்பது ஒரு படிமம். கவிஞன் பாறை என்பதனை கவிதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருக்கக் கூடும். இங்கு பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது சிதைந்த ஆளுமையைக் குறிப்பிடவோ, நொறுங்கிய மனதினைக் குறிப்பிடவோ கூட இருக்கலாம். என் அனுபவம் சார்ந்து அந்த படிமத்தை நான் 'எதுவாக' வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக் கூடும். அனுபவம் சார்ந்து கவிதை உருவாக்கும் சலனம் ஆழ்மனதோடு தொடர்புடையது. இதனை நவீன கவிதையின் முக்கியமான அம்சம் என நான் நம்புகிறேன்.

'படிமம்' என்பது மட்டுமே நவீன கவிதையின் நுட்பமில்லை. எல்லாக்கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. அப்படியானால் இவை 'புதுக்கவிதை'யின் பிரிவில் வரக்கூடியனவா என்ற வினா எழலாம். இந்த இடத்தில் கவிதையின் வடிவம், அதன் உள்ளடக்கம் ஆகியவை கவனிக்கத் தக்கவை. (துருத்தலின்மை, கூச்சலின்மை போன்றவையும்). இந்த வித்தியாசத்தை தொடர்ச்சியான கவிதை வாசிப்பின் மூலமாக மிக விரைவில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த விளக்கம் மிகச் சிறிய குறிப்பு மட்டுமே. உங்களின் வினாவுக்கான பதிலை இன்னமும் விரிவாக்க முடியும்.

நன்றி.

வா.மணிகண்டன்.

Dec 19, 2011

குழந்தையின் ஒற்றை நாணயம்ஒற்றை நாணயத்தை
சுண்டிக் கொண்டிருக்கும்
குழந்தையின் அருகில்
அசிரத்தையாக பேசிக்கொண்டிருந்தார்கள்-
அவன்
மார்கழியில் குளிர் அதிகமாகிவிட்டதாகச் சொன்ன போது
ஒவ்வொரு வருடமும் இதையே சொல்கிறார்கள் என்றான்
இன்னொருவன்
வலதுகையில் புதிதாகத் தோன்றியிருக்கும் கரும்புள்ளியைக் காட்டியவனை
அசட்டை செய்தவன்
நேற்றைய மதுவிற்கு கடித்துக் கொண்ட மாமிசத்துண்டு
நன்றாக வெந்திருக்கவில்லை என்ற கணம்
அவள்
குங்குமப்பூ நிறச் சுடிதாரில் கடந்து சென்றாள்
கண்களை மட்டும் அவள் மீது திருப்பியவர்கள்
தேநீர் அருந்த விரும்புகிறார்கள்
சிகரெட் பற்றவைக்காத அந்தத் தருணத்தில்
அவனது செல்போன் அழைத்தது
சில வார்த்தைகளுக்குப் பிறகாக முகம் இருண்டவன்
பாதி நிரம்பியிருந்த தேநீர் குடுவையை வைத்துவிட்டு
ஓடத் துவங்குகையில்
குழந்தை நாணயத்தை
மீண்டும் சுண்டியது
ஒரு முறை கூட சுழலாத நாணயத்தை
திரும்பத் திரும்ப சுண்டியது
பூவும் தலையும் இடம்மாறினால்
அவனின் வானமும் பூமியும்
மாறிவிடக் கூடும் என நினைத்தவன்
வெறுமையின் சாயலோடு சிகரெட்டை பற்றவைத்தான்.

Nov 22, 2011

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவிகருமுகில் திரண்டு நிற்கும்
இந்த மழைக்கால மாலையில்
மிக மூர்க்கமாக முயன்று கொண்டிருக்கிறேன்
செம்மண்ணைக் குழப்பி 
ஒரு குருவியைச் செய்துவிட-

தன் 
அழகின்மையின் துக்கத்தை 
கண்களில் சேகரித்திருக்கும் 
தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்கவிருக்கிறேன்

சின்னஞ்சிறு மஞ்சள் அலகில்
வயல்வெளியைத் தூக்கிச் செல்லும்
என் குருவி
தன் தலையை சிலுப்பி 
ஒரு நதியை இடம் மாற்றும்

அதன் 
சிறகுகளின் சாம்பல் நிறத்திற்காக
இந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி வைத்திருக்கிறேன்
அலகுகளின் நிறத்திற்கு
சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை சேகரித்திருக்கிறேன்
சீரற்ற அதன் பாடலுக்கு
வாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்

தனக்கான போட்டியாளனை விரும்பாத
கடவுள்
பறக்கவே முடியாத இந்நகரத்தில்
குருவியின்
எளிமையான முதல் சிறகசைப்பு குறித்து
கேலி செய்கையில்
https://mail.google.com/mail/images/cleardot.gif
அவனை செருப்பால் அடித்து 
விரட்டிய கணம்
குழைத்த சேற்றுக்குள்
விழுகிறது
முதல் மழைத்துளி

Nov 15, 2011

பறத்தலை மறந்த புறா


மெஜஸ்டிக் சிக்னலில்
இரண்டரை மாதங்களுக்கு முன்னதாக
கட் அவுட் ஒன்றை நிறுத்தினார்கள்-
ஜன்னல் திறந்த வீட்டில்
நடுங்கும் மெழுகுவர்த்தியென
காற்றசைவுக்கு சிறகை அசைக்கும்
32 அடி புறாவின்
நிறம் நீலம்
அதன்
கண்களுக்கு நேரெதிரில்
தன் பின்புறத்தை
கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கும்
உள்ளாடையணிந்த
‘ஹாட் மாம் க்ளப்’க்காரியின் பெரும்படத்தை
நேற்றிரவு பொருத்தியிருக்கிறார்கள்
தன்னை யாரும் கவனிப்பதில்லை என்பதை
இன்று காலையில் புரிந்து கொண்ட புறா
தன் சிறகசைப்பை நிறுத்தி கண்களை மூடியது
சலனமற்ற இருப்பை தவமாக்கிய புறாவின் மீது
முன்னிரவு ஏழேகாலுக்கு சூடான பெருமூச்சை சொரிந்தாள்
க்ளப்காரி
தான் சிங்கமாக இருந்திருந்தால்
கட்டுகளை பிய்த்தெறிந்திருக்க முடியும் என நம்புகிறது
புறா
பறத்தலின் நுட்பத்தை மறந்துவிட்டிருந்தால்
விழுந்து நொறுங்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருக்கிறது
நீங்களும் நானும்
இந்த ஊரும் அடங்கிப்போன ஒரு கணத்தில்
பிங்க் நிற உள்ளாடையிலிருந்தவள்
பச்சை நிறத்திற்கு மாறுகிறாள்
புறா அந்த நொடியில் என்ன நினைத்தது
என்று யோசிக்கிறீர்கள்
தன் கண்களைத் திறந்திருந்தது
மறுநாள் காலை.

Nov 10, 2011

துளிகளின் கவிதை:தீபச்செல்வனின் கவிதைகளை முன்வைத்து.கவிதை ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொருவிதமான பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. "இதுதான் கவிதை" என்று எவ்விதமான தீர்க்கமான முடிவுக்கும் கவிதை வாசகனாலும் கவிதையின் விமர்சகனாலும் வர முடிவதில்லை. கவிதையின் இந்த நீர்மைத்தன்மைதான் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலிருந்தும் அதனை தனித்துவமாக்கிக்காட்டுவதாக தோன்றுகிறது. கவிதை, கவிஞனின் அபத்தங்களின் வழியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் முழுமையாக நம்புகிறேன். அபத்தங்களின் கோர்வைதான் கவிதைக்கான எல்லையை யாராலும் நிர்ணயிக்க முடியாததாக மாற்றுகிறது. அபத்தத்தை உதறிவிட்டு அடுத்தவர்கள் தன்னை கவனிக்கத் துவங்குகிறார்கள் என்பதனை கவிஞன் உணரும் போதும், அவன் அடுத்தவர்களின் கவனத்தை யாசிக்கும் போதும் கவிதை பொலிவிழக்கத்துவங்குகிறது. 


சமீபகாலத்தில் எதிர்கொண்ட ஈழத்து கவிஞர்களின் கவிதை தொகுப்புகளை ஒருசேர வாசிக்கும் போது நீர்மைத்தன்மைxஅபத்தம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்காமல் இருக்க முடியவில்லை. தற்கால ஈழத்தின் கவிதைகளை குறிப்பிட்ட வரையறைக்குள்- அதன் வடிவம், உள்ளடக்கம், கவிதை மொழி என குறிப்பிட்ட அம்சங்களின் மூலமாக தொகுக்க முடியுமா என்று முயற்சித்தால் இயலாது என்றே தோன்றுகிறது. தமிழின் பெரும்பான்மையான தற்கால கவிதைகளை குறிப்பிட்ட சில அம்சங்களின் மூலமாக தொகுக்க முடிவதில் இருக்கும் அதே சிக்கல்கள்தான் தற்கால ஈழக்கவிதைகளை தொகுப்பதிலும். மிகச் சமீபமாக வாசித்த அனார், தீபச்செல்வன், தமிழ்நதி, ரிஷான்செரீப், மாதுமை, அலறி, ஆகர்ஷியா, ஃபஹீமாஜஹான் என சில கவிஞர்களின் கவிதைகளில் இருந்தே இந்த முடிவுக்கு வர முடிந்திருக்கிறது. இவர்கள் மட்டுமே ஈழக்கவிஞர்கள் இல்லையென்றாலும் இவர்களை நிராகரித்துவிட்டு தற்கால புலம்பெயர் அல்லது ஈழக்கவிதைகளைப் பற்றி பேச முடியும் என்று தோன்றவில்லை. மேற்சொன்ன கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேர வாசித்தாலும் கவிதைகளை தொகுத்து கட்டுரையாக்குவாக்க அல்லது ஒப்பீட்டு விமர்சனமாக செய்ய முயலும் போது நேர்த்தியாக முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.ஈழத்தின் மூத்த கவிஞர்களை சு.வில்வரத்தினம், வ.ஐ.ச.ஜெயபாலன், புஷ்பராஜன், சிவரமணி, சேரன், திருமாவளவன், செழியன் என்ற வரிசையில் மனதில் புரட்டினால் போர்ச்சூழல் குறித்தான கவிதைகளையே இந்த படைப்பாளிகளின் முக்கியமான கவிதைகள் என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் தற்கால ஈழக கவிஞர்களின் முக்கியமான கவிதைகள் என்று எனக்குப்படுவதை தொகுத்தால் போர்ச்சூழல் தாண்டிய கவிதைகளையும் காண முடிகிறது. விதிவிலக்காக  தீபச்செல்வனின் முக்கியமான கவிதைகள் பெரும்பாலும் போர்ச்சூழல் சார்ந்த கவிதைகளாகத்தான் இருக்கின்றன. இரத்தத்திற்குள்ளும், துப்பாக்கி ரவைகளின் பயணத்தினூடாகவும் வாழும் கவிஞனின் பதிவுகள் அவை. மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் ஈழத்தின் துக்கங்களுக்கும் அந்த நிலம் எதிர்கொண்ட குரூரங்களுக்கும் சாட்சியாகி இருப்பவை. இரத்தத்தின் ஈரப்பசைகளையே இவரின் பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. அந்த நிலத்தின் வேதனையும் பலிகளும் நிறைந்த நாட்களில் அவற்றை அந்த மண்ணிலிருந்தே பதிவு செய்தவை தீபச்செல்வனின் கவிதைகள். இந்தக் கவிதைகள் வாசிப்பவனின் மயிர்க்கால்களைச் சில்லிடச் செய்கின்றன என்பதே அதன் பலம். 'சில்லிடச் செய்தல்' மட்டுமே கவிதையின் அடையாளமாக இருப்பதில்லை. கவிதையின் உண்மைத் தன்மை அந்த கவிதைக்கான அடையாளமாகிறது. தீபச்செல்வனின் கவிதைகளில் இருக்கும் தனித்துவமாக இதை குறிப்பிடுவேன். இந்த தனித்துவத்திற்காக ஈழத்தின் தற்கால கவிஞர்களின் பிரதிநிதியாக தீபச்செல்வனின் கவிதைகளை கவனிக்க முடிகிறது.


பின்வரும் ஒரு கவிதையை வாசித்துவிட்டு தீபச்செல்வனின் பிற கவிதைகளை வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.

"எருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி
குழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்
எருக்கலை மரத்தின் வேர்களில் 
சகோதரனோ முகத்தை பரவியிருக்கிறான்
குழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்
மண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று
பிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்"

கவிதை தரும் பதட்டம் விரல்களை நடுங்கச் செய்கிறது. எருக்கம் பூச்செடியை என் கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எதிர்கொள்கிறேன். இதுவரை அதன் வெண்மை படர்ந்த இலைகளும் ஊதாநிறம் விரவிய வெண்மலர்களும் தவிர்த்து வேறந்த விதத்திலும் அது கவனத்தைக் கோரியதில்லை. இந்தக் கவிதையை வாசித்த தினத்திலிருந்து எருக்கம் செடி உள்ளூர அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்வினை எழுத்துக்களாலும் வார்த்தைகளாலும் மட்டுமே விவரிக்க முடியும் என்று தோன்றவில்லை. வெம்மையில் தழைத்து நிற்கும் எருக்கம் கோடைக்கும் வறட்சிக்குமான குறியீடு. இங்கு எருக்கம்செடி மரணத்தின் குறியீடாகிறது. அந்த மரணம் வெம்மையில் நிகழும் மரணம். இம்மரணங்க்கள் அதீத பீதி மிகுந்தவை.வெம்மையையும் பீதியையும் கவிதை குறிப்புணர்த்துகிறது. கவிதையை வாசித்துச்செல்பவன் 'குழந்தையாகிய தாயின்' என்ற சொல்லில் தேங்கி விடக் கூடும். அவள் ஏன் குழந்தையாகிறாள் என்பதற்கான விடை தேவைப்படுகிறது. எந்த அதிர்ச்சியையும் தாங்கி மீண்டு வருபவள்தானே தமிழ்ப்பெண். அப்படித்தான் இங்கு காலம்காலமாக படிமமாக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மனவலிமை கொண்ட பெண்ணை குழந்தையாக்கிய அதிர்ச்சி எத்தகையது என்பதான வினாக்களில் மனது சுற்றி வருகிறது. இந்த வினாவுக்கான பதில் முந்தைய  வரிகளில் இருக்கிறது. அத்தனை உறவுகளையும் மரணத்திற்கு தாரை வார்த்துவிட்டு பிதற்றிக் கொண்டிருக்கிறாள் தாய்.

"குழந்தையின் சோற்றுக்கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்"

என்ற வரிகள் தரும் காட்சிகளை விட்டு நகரமுடியாதபடி இருக்கிறது அதன் ஆழம். எத்தனை குரூரமான மனம் உடையவன் என்றாலும் அவன் குழந்தையிடம் இரக்கக் குணமுடையவனாக இருப்பான் என்பது நம் கற்பிதம். இந்த அடிப்படைதான் அடுத்தவனால் தன் உயிர்போகும் சூழலில் ஒருவன் கடைசியாக பிரயோகப்படுத்தும் சொற்கள் "நான் புள்ளகுட்டிக்காரன்" என்பதாக இருக்கிறது என ஒரு மனோவியல் நூலில் வாசித்தேன். ஆனால் குழந்தைகளும் கூட போர்ச்சூழலில் எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் கொல்லப்படுகின்றன. ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்தின் குழந்தைகளை அழிக்கிறார்கள் அரக்கர்கள். வன்மம் மிகுந்த மனிதர்களின் முகங்கள்தான் இவ்வரிகளில் புதைந்து கிடக்கின்றன. ஒரு நிழற்படமும், சலனப்படமும் தொந்தரவு செய்ய முடியாத ஒரு மனதை இரு வரிகள் தொந்தரவு செய்துவிட முடியும் போலிருக்கிறது.
                                                                 (2)

கவிதை ஒரு குவியத்தை நோக்கி நகரவேண்டியதில்லை அல்லது அது வேறு எதையும் சுட்ட வேண்டியதில்லை.(Pointless) வன ஓடையின் திசையின்மையைப் போலவே கவிதையும் தன் நகர்தல் பற்றிய பிரக்ஞையின்றி இருக்கலாம். இந்த திசையின்மையையும் நவீன கவிதைகளின் ஒரு கூறாகவே பார்க்கப்படவேண்டும். தீபச்செல்வனின் கவிதைகளுக்குள்ளாக இந்த அம்சம் இருக்கிறது. அதாவது கவிதையின் சில பத்திகள் இந்த திசையின்மையுடன் இருக்கின்றன.ஆனால் ஒரு கவிதை முழுவதையும் வாசிக்கும் போது அந்த அனுபவம் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடிவதில்லை. 

"வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமும்
அதைத்தூக்கியபடியும் பறவையும்
அடைபட்டுக் கொண்டிருந்தது"

மேற்சொன்ன கவிதைக்காட்சி "பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்" என்ற கவிதையில் இருக்கிறது. இக்கவிதையின் பத்திகளும் மேற்குறிப்பிட்ட பத்தியும் கவிதையின் திசையற்ற நகர்தலை காட்சிப்படுத்துகிறது. ஆனால் கவிதையின் தலைப்பும் , ,முழுமையான கவிதையும் இந்தக் கவிதையின் திசையை அடையாளப்படுத்துகின்றன. கவிதையை கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சகனுக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் வாசகனாக கோட்பாடுகளை கொஞ்சம் நகர்த்திவிட்டு கவிதையை மட்டுமே வாசிக்க மனம் விரும்புகிறது.

கவிதை மனம் வாய்க்கப்பெற்றவனுக்கு துக்கத்திலும் நடுக்கத்திலும் கவிதையே அவனது கரம் பற்றும் ஆறுதலாக இருக்கக் கூடும் என்பதனை தீபச்செல்வனின் கவிதைகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகரம் வெறிச்சோடிய போதும், கிளைமோர் தாக்குதலில் மனிதப் பணியாளர் பலிகொள்ளப்படும்போதும், முக்கிய சாலை பயன்பாட்டிற்கில்லை என பூட்டப்படும் போது, கவிஞன் ஒருவன் கொல்லப்படும் போது இவருக்கும் கவிதையே வேதனையின் வடிகாலாக இருந்திருக்கிறது.

"உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக் கொண்டிருந்தது
நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்துகிடந்தன"

எந்தக் கணத்திலும் குண்டுகள் தம் தலைமீது விழக்கூடும் என்ற நிலையில் பதுங்குழியில் இருப்பவன் இயற்கையும் அழகியலையும் சிதைத்துவிடவே விரும்புகிறான் அல்லது குறைந்தபட்சம் அவற்றை உதாசீனப்படுத்துகிறான். அடுத்த கணம் பற்றிய நிச்சயமின்மை அவனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் போது மென்மையான உணர்வுகளுக்கு அவன் இடம் அளிப்பதில்லை. இந்த புரிதலே எனக்கு முந்தைய வரிகளில் உருவாகிறது.

"எனது அறையைச் சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
இரவைக் கடித்து குதறிய
மிருகங்களின் வாயில் கிடந்து
இரவு சீரழிந்தது
நிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின் முன்பாக
எனது இரவின் பாடல்
விழுந்து சிதறிக் கிடந்தது
இன்னும் எனது காதலி
அறை போய்ச்சேரவில்லை"

ஷெல்களுக்குள்ளும், எறிகணைக்குள்ளும் வாழ்பவனும், களத்தில் ஆயுதம் ஏந்தியவனும் காதலிக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தக் காதல் எளிமையானதில்லை.அதன் சிக்கல்களும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களும் வெறும் காதலுக்கானது மட்டுமில்லை. அவர்களின் உரிமைக்கும், அந்தரங்கத்திற்கும், உயிருக்கும் ஆனது. இதை மேற்சொன்ன கவிதை வரிகள் துல்லியமான படமாக்குகிறது.
                                                        
                                                               (3)

தீபச்செல்வனின் கவிதைகளில் உரிமை கோரல் இல்லை, தாம் இழந்துவிட்டவைகளுக்காக அடுத்தவர்களின் கருணை கோரல் இல்லை, புலம்பல்கள் இல்லை- ஆனால் கவிதைகளை வாசித்து முடிக்கையில் அவர்கள் இழந்த உரிமைக்காக ஒரு கணம் யோசிக்கிறேன்; அவர்களின் இழப்புகளுக்காக சற்றேனும் விசனப்படுகிறேன்; அவர்களின் துக்கங்களுக்காக சிறிதேனும் புலம்புகிறேன். கவிதைகளில் இருக்கும் துருத்தலின்மையை இவரின் கவிதைகளின் முக்கிய அம்சமாக சொல்லத் தோன்றுகிறது.

"ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ் நகரம்"

என்ற கவிதை ஒரு காட்சியை சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறது. அந்தக் கவிதையில் கவிஞன் வருந்தவில்லை; கோபப்படவில்லை, எந்தவிதமான உணர்ச்சியுமில்லாத செய்தி அறிவிக்கும் வானொலிப்பெட்டியென இருக்கிறது கவிதை. இனந்தெரியாத பிணமும் அதற்கு முந்தைய வரி சுட்டும் உணவகம்- குறிப்பாக கொத்து ரொட்டிக் கடையும் அதன் பிறகான அமைதியும் உருவாக்கும் ஒரு வெளி வாசகனுக்குள்ளாகவும் அமைதியை உருவாக்குகிறது. அது வெறுமையான அமைதி.அந்த அமைதி வாசிப்பவன் யோசிப்பதற்கான பெரும் இடத்தை அளித்துவிடுகிறது. இதுவே வாசகனுக்கும் கவிதைக்குமிடையேயான உறவு. இத்தகைய கவிதை-வாசகன் உறவை தனது ஒவ்வொரு கவிதையிலும் தீபச்செல்வன் உறுதிப்படுத்துகிறார். இதையே தீபச்செல்வனின் முக்கியமான பலமாக நான் கருதுகிறேன்.

"இந்த நகரத்தில் மட்டும்
ஏதோ ஒரு விதத்தில்
மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள்
தங்கள் பிள்ளைகளை
மரணங்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு
புதைந்துபோன தாய்மார்களின் 
கண்ணீரில் எரிந்த நகரம்
சூடேறிக்கொண்டிருந்தது"

துப்பாக்கிகளுக்கு முன்பாகவும் வேட்டை மிருகங்களின் கோரப்பற்களுக்குமிடையில் காதலும் உறவுகளும் அகப்பட்டுக்கொள்கின்றன. மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சொற்பிரயோகம் கவனிக்கப்படத்தக்கது. தீர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றிருக்க முடியும். அப்படியிருப்பின் அது தரக்கூடிய பொருள் வேறு. தீர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படி தீர்கிறார்கள் என்பதனை ஒரு கேள்வியாக வைத்திருக்கிறது- மர்மமான முறையில் தீர்கிறார்கள். இந்த நகரம்தான் குழந்தைகளை இழந்துவிட்ட தாய்களின் "கண்ணீரில் எரிந்தது". இப்பொழுது சூடேறிக் கொண்டிருக்கிறது. இப்படியான சொற்களின் விளையாட்டை கவிதைகளில் சாவகாசமாக நிகழ்த்துகிறார். 

தீபச்செல்வனின் "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" தொகுப்பாகட்டும், தனது வலைத்தளத்தில் அவர் எழுதும் பிற கவிதைகளாகட்டும்- அந்தக் கவிதைகள் சுற்றி வருவது மிகச் சிறிய வட்டமே. போர்ச்சூழலில் இன்னல்படும் மக்கள், தானும் தன் குடும்பமும் எதிர்கொள்ளும் வாதைகள், சண்டையில் உருமாறும் நகரமும் நகரத்தின் அங்கங்களும். இது எல்லா கவிஞனுக்கும் கிடைக்காத அனுபவம். அனுபவத்தை நேரடி சாட்சியாக எந்தவிதமான வெற்று அலங்காரமும் இல்லாமல் பதிவு செய்கிறார் தீபச் செல்வன். இந்த நேர்மையான சாட்சியமே என்னை தீபச்செல்வனை இக்காலத்திய மிக முக்கியமான ஈழக் கவிஞனாக குறிப்பிடச் செய்கிறது. 

இவரது பெரும்பாலான கவிதைகள் சொற்களுக்காகவும், நேர்த்திக்காகவும் காத்திருக்காத கவிதைகள். செதுக்கப்படாத சொற்களின் அடுக்குகளாகவே இந்த கவிதைகளை காண்கிறேன். நேர்த்தியின்மையும், சொற்சிக்கனமின்மையும் கவிதையின் பலவீனமாகத் தென்படுகிறது. ஆனால் பாடுபொருளின் கனமும் அது தன்னுள் புதைத்திருக்கும் தீர்க்கவே முடியாத சோகமும் இந்த பலவீனங்களை வீழ்த்திவிடுகிறது. இதுவே தீபச்செல்வனை ஈழத்தின் கவிதை தொடர்ச்சியில் அழுத்தமான இடம்பெறச் செய்கிறது.

(விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10.9.2011 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)


நன்றி: உயிர் எழுத்து- நவம்பர்'2011

Oct 29, 2011

18வது அட்சக்கோடு: ஏரிக்கரையில் அலைந்து கொண்டிருக்கிறது குளிர்காற்று
ஹைதராபாத்/செகந்திராபாத் இரட்டை நகரங்களுக்கும் எனக்குமான உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்ல முடியாவிட்டாலும் மறந்துவிட முடியாதது. படிப்பிற்கு பிறகாக முதலில் வேலை கிடைத்த இடம் என்ற மகிழ்ச்சியிருந்தாலும் அந்நகரம் அளித்த தனிமையும், வாழ்க்கையின் வெறுமையான கணங்கள் உருவாக்கிய விரக்தியும், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்கிற புரட்டல்களும் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு வதக்கிக்கொண்ருந்தன. அந்தச் சமயத்தில் வாசிப்பு மட்டுமே எனக்கான ஆசுவாசமாக இருந்தது. அத்தருணத்தில் செகந்திராபாத் நகரத்தை கதைக்களமாகக் கொண்டு அசோகமித்திரன் எழுதியது என்று “18 வது அட்சக்கோடு” நாவலை நண்பர் வெங்கடாசலம் அளித்தது நினைவில் இருக்கிறது.

18வது அட்சக்கோடு வரலாற்று நாவல்- சுதந்திரத்துக்கு பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்று பதிவுகளை எளிய இளைஞனை சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாக பதிவு செய்கிறது. பெரும்பாலான வரலாறுகள் அமைப்பின்/நிறுவனத்தின் உச்சியில் இருந்தே பதிவு செய்யப்பட்டிருகின்றன. ஒரு தேசத்தை மையமாக வைத்து அதன் மன்னர்கள், மாகாணங்கள், குடிகள் என்று கீழ் நோக்கி வருதல் அல்லது தேசத்தின் பொருளியத்தை உச்சியில் வைத்து அதன் குடிமக்களின் வாழ்வாதார நிலைகளை நோக்கி இறங்குவரிசையில் பதிவு செய்தல் அல்லது தேசத்தின் அரசியலை மையமாகக் கொண்டு அதன் மக்களின் அரசியல் செயல்பாடுகள் பற்றி பேசுதல் என ’மேக்ரோ’வரலாறுகள்தான் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. 18வது அட்சக்கோடு தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கி பார்க்கும் ‘மைக்ரோ’ வரலாறு. இதில் தனிமனிதர்களின் அரசியல் கோட்பாடுகள் பதிவு செய்யப்படுகிறது, அவர்களின் பொருளாதார நிலை பேசப்படுகிறது, தனிமனித பார்வையில் நிஜாமினுடைய காரியதரிசிகளின் செயல்பாடுகள் அலசப்படுகிறது. ‘மைக்ரோ’ வரலாறுகள் காலத்தின் ஓட்டத்தில் மறுவாசிப்புகளிலும், மறு ஆய்வுகளிலும் மாற்றம் பெறுவதில்லை. அவை தனிமனிதனின் பார்வையில் இருந்து எழுதப்படும் எளிய சாட்சிகளாக படிமங்களாகின்றன.

வாசிப்பு என்பது பல படிநிலைகளைக் கடந்துவருவதான இயக்கம். தனது ஒவ்வொரு வாசக நிலையிலும் வாசகன் ‘நல்ல படைப்பிற்கான விதிகளை’ தானாகவே தன் வாசிப்பனுவத்தின் மூலமாக வகுத்துக் கொள்கிறான். பிறகு தன் விதிகளுக்கு முரணான படைப்பை எதிர்கொள்ள நேரும் போது ஒன்று படைப்பை நிராகரிக்கிறான் அல்லது படைப்பு வீரியமிக்கதாக இருப்பின் தன் விதிகளை மாற்றியமைத்துக் கொள்கிறான்.  

நாவல் வாசிப்பது என்பது ஒரு கதையை அறிந்துகொள்ளுதல் என்பதான எனது சித்தாந்தம் காலாவதியாகிவிட்ட ஒன்று என்பதனை உணர்ந்த தருணம் அது. நாவல் நேர்கோட்டில் பயணிக்கக்கூடாது; தர்க்கரீதியான வினாக்களை தன் ஓட்டம் முழுவதுமாக தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும் போன்ற விதிகளை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் நாவலுக்கு இத்தகைய விதிகள் அவசியமில்லை என பொய்யாக்கியது 18வது அட்சக்கோடு. சந்திரசேகரனின் அத்தனை பதட்டங்களும் என் விரல்களுக்குள் பரவிக்கொண்டன. அவனது ஓட்டங்கள் என்னை திகிலடையச் செய்தன. அந்த நாவலுக்குள் என்னை புதைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான உணர்ச்சி துருத்தல்களும், அலங்காரங்களுமின்றி சந்திரசேகரனின் பாத்திரமும் அவனைச் சுற்றிலுமான நிகழ்வுகளும் வாசகனை இந்திய யூனியன் சுதந்திரம் அடைவதற்கும் முன்பாகவும் சுதந்திரத்திற்கு பிறகு ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைக்கப்படும் வரைக்குமான குறுகிய காலகட்டத்துக்குள் கொண்டு சேர்க்கின்றன. அசோகமித்திரனின் கதைசொல்லும் பாங்கும், நாவல் ,முழுவதும் இழையோடும் நகைச்சுவையுணர்வும் காட்சிகளின் துல்லியத்தன்மையும் இந்நாவலின் மிகப்பெரிய பலங்களாக தோன்றுகிறது.

நாவல் பதிவு செய்யப்படும் காலகட்டத்தில் இந்நாவலின் களமான ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் நாவலின் கதாபாத்திரங்களுக்கு வேறொரு நாட்டின் இரட்டை நகரங்கள். அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சந்திரசேகரனும் அவனது மத்தியதர தமிழ்க் குடும்பமும் தங்களைச் சுற்றி உருவாகி வளரும் மதம்,தேசம்,மொழி, பயங்கரவாதம் என்ற வலைப்பின்னல்களின் காரணமாக இனம்புரியாத பயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மென்பதட்டத்திலேயே நாவல் முழுவதுமாக நகர்கிறது. தன் வீட்டு மாடு அடுத்தவர்களின் தோட்டத்தில் மேய்வதால் அந்நியரிடம் தான் எதிர்கொள்ள வேண்டிய சண்டைகளில் இருந்து, வேற்று ஆடவனிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தன் ஆடைகளை துறக்கத் துணியும் பெண்ணிடம் இருந்து தப்பியோடுவது வரையிலும் என இளம்பிராய அதிர்ச்சிகளால் சந்திரசேகரன் பின்னப்படுகிறான்.

அரசியல் கோட்பாடுகளின் புரிதலற்ற, மதம் பற்றிய ஆழ்சிந்தனைகள் அற்றவனாக தனது பருவத்திற்குரிய குறுகுறுப்புகளுடனும், கிரிகெட் விளையாடிக் கொண்டும், தன் வீட்டு குடும்ப பொறுப்புகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவனை அரசியல் சமூக நிகழ்வுகள் தன் முரட்டுபிடிகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. வரலாற்றின் பிடிகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சந்துரு சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கவியலாதவனாக தத்தளிக்கிறான். திடீரென அழைத்து மேடையில் பாடச் சொல்லும் ஆசிரியரிடம் மறுப்பு தெரிவிக்க முடியாதவனாகவும், போராட்டக்களத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியாதவனாகவும் தொடர்ந்து சூழல்களின் கைதியாகிறான்.

வரலாறு யாரையும் விட்டுவைப்பதில்லை- வரலாற்றுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் வரலாற்றின் மெளனசாட்சிகள் என்று யாரும் இருப்பதில்லை. வரலாற்றின் ஏதாவது ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் உறைந்துவிடுகிறார்கள். இப்படி உறையும் கதாபாத்திரமாகத்தான் சந்திரசேகரனையும் பிற நாவல் பாத்திரங்களையும் அணுக முடிகிறது. காந்தி இறந்த தினத்தை இன்னொரு ’தேசத்தில்’ இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சந்துருவும் அவனது குடும்பத்தாரும். மொத்த இந்திய தேசமும் பெரும்பதட்டத்தில் சிக்குண்ட அந்த நாள் நிஜாமின் தேசத்தில் சற்றே பரபரப்பான சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய ராணுவம் சமஸ்தானத்திற்குள் நுழைவது மிகப்பெரிய பரபரப்பான நிகழ்வாக இருக்கிறது.

இந்த நாவலை வாசித்துவிட்டு அதன் இடங்களை ஹைதராபாத்திலும், செகந்திராபாத்திலும் தேடியலைந்த ஞாயிறுகள் நினைவில் வந்து போகின்றன. நகரப்பேருந்துகளின் வெக்கையில் வியர்வை கசகசப்பில் ரஜாக்கர்கள் வாழ்ந்த இடங்களுக்கும், செகந்திராபாத் ரயில்வே குடியிருப்புக்கும், டேங்க் பண்ட் சாலைக்கும், ராணிகஞ்ச்க்கும் என சந்திரசேகரன் அலைந்த இடங்களில் ஒரு இடத்தையாவது அதே அடையாளத்துடன் பார்த்துவிட முயன்றிருக்கிறேன்.நிஜாம் கல்லூரியும் சாலர்ஜங் மியூசியமும் மட்டுமே நாவலின் தொடர்ச்சியாக தங்களின் அடையாளத்தை பெரிதும் மாற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன என்று நம்பினேன்.அது என் தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே. உண்மை வேறாகவும் இருக்கலாம். ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் தங்களின் பெரிய ஆலமரங்களை தொலைத்துவிட்டு அதற்கு ஈடாக பிற நகரங்களைப் போலவே வணிகவளாகங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அசோகமித்திரனை ஒரு முறை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஹைதராபாத் வந்திருந்த போது அவரும் மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணனும் காரின் பின்புறமாக அமர்ந்துகொள்ள நான் முன்புறத்தில் அமர்ந்திருந்தேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு கிடைத்த ஐந்து நிமிடங்களில் 18வது அட்சக்கோடு பற்றி சில வினாக்களை எழுப்பினேன். அப்போதைய செகந்திராபாத்தும் ஹைதராபாத்தும் இப்பொழுது தேடினாலும் கிடைப்பதில்லை என்றார். அதைச் சொல்லி முடித்த போது அவரது முகத்தில் புன்னகையும் இல்லாத வருத்தமும் இல்லாத வெறுமையை உணர முடிந்தது. 

இந்நாவலை வாசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாவல் பற்றி உரையாடும் போது சில நண்பர்கள், நாவலில் பிற இன(இஸ்லாம்) வெறுப்பு தென்படுவதாகவும், மாற்று இனத்தவரின் உணவுகளையும் பழக்கவழக்கங்களையும் எள்ளுவதாகவும் விமர்சித்தார்கள். என் வாசிப்பில் இந்த எதிர்மறை கருத்துக்களை உணர முடிந்ததில்லை. அதனால் வாசித்த பகுதிகளை மறுவாசிப்பு செய்ய வேண்டியிருந்தது. சந்திரசேகரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் அவன் பிறப்பு மற்றும் வளர்ப்புச்சூழலிருந்து வாசிக்கும் போதும் இவை யதார்த்தமான காட்சிகளாகவேபடுகிறது. 

1940களின் நிகழ்வுகள் 1970களில் நாவலாக பதிவு செய்யப்பட்டு 2010களில் வாசிக்கும் இன்றைய தலைமுறை வாசகனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு இந்நாவல் பயணப்படுகிறது. Freshness இந்த நாவலில் மிக முக்கியமான அம்சம். அது இன்னும் பல வருடங்களுக்கும் இருக்கக்கூடும்.

மிகச் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தபோது டேங்க் பண்ட் சாலையில் வாகனங்கள் நெருக்கிக் கொண்டிருந்தன. ஏரிக்காற்றோடு பேசுவதற்காக நான் ’இரும்பு பெஞ்ச்’ மீது அமர்ந்தேன். அப்பொழுது ஒடிசலான தேகத்தில் கிரிக்கெட் உடையுடன் ஒருவன் மிதிவண்டியை அழுத்திக் கொண்டிருந்தான். “சந்துரு” என்று எனக்கு மட்டுமே கேட்குமளவுக்கு அழைத்துக்கொண்டேன். அவன் திரும்பிப்பார்க்கவில்லை. அநேகமாக என் அழைப்பு வேளச்சேரியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அசோகமித்திரனுக்கு கேட்டிருக்கலாம்.

வா.மணிகண்டன்
=========
(எழுத்தாளர் அசோகமித்திரனின் "18வது அட்சக்கோடு" நாவல் செம்பதிப்பாக(Classic Series)காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. இந்தப் பதிப்புக்கு நான் எழுதிய முன்னுரை இது)

Oct 18, 2011

கவிதை மொழி

கோவையில் “அருவி” அமைப்பினர் அக்டோபர் 16-2011 அன்று ஒழுங்கு செய்திருந்த சந்திப்பில் ’கவிதை மொழி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையாடலின் “பவர் பாய்ண்ட்” வடிவம்.

இந்தக்கூட்டத்தில் தமிழ்க்கவிதை குறித்தான என் புரிதல்களையும், கவிதையோடு எனது அனுபவம் பற்றியும் பேசுவது என்று முடிவு செய்திருந்தேன். இவை இதுவரை கவிதைகள் பற்றி நான் எழுதிய குறிப்புகளின் சாராம்சம்தான்.


1) தமிழ்ச் சூழலில் கவிதை பொதுவாக எந்த வழிமுறைகளில் நமக்கு அறிமுகமாகிறது என்பது பற்றியும், அவை எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து ஆரம்பம் அமைந்தது.


2) கவிதையின் பெரும் பிரிவுகளாக நமக்கு அறிமுகமானவை குறித்து

மரபுக் கவிதை வாசிக்க ஆரம்பித்த பள்ளிப்பருவத்தில் புறநானூற்றின் சூழலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமையும், அகப்பாடல்கள் குறிப்பிடும் தனக்கு அனுபவம் இல்லாத வயதும், அந்த பருவத்தில் அக்கவிதைகளை விட்டு விலகச் செய்கின்றன.

புதுக்கவிதையின் அதீத ஓசைகளும் அதன் துருத்திக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளும் புதுக்கவிதையை விட்டு விலகச் செய்கின்றன.

இந்நிலையில் நவீன கவிதை அறிமுகமாகிறது. நவீனத்துவம் என்றால் என்ன  என்பதை தேடிச் செல்ல மனம் ஆயத்தமாகிறது.


3) நவீனத்துவத்திற்கான அடிப்படையும், அதன் துவக்கமும் குறித்து


4) நவீனத்துவம்: சிறு குறிப்பு


5) புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்கான நகர்தல் குறித்து


6) கவிதைக்கான வரையறை


7) எனக்கான கவிதை


8) கவிதையில் உண்மைத்தன்மை


9) கவிதையில் இருண்மை: 

கவிதையின் இருண்மைத் தன்மைக்கு நகுலனின் கவிதைகளை முன் வைத்தும், ஜெயமோகன் சமீபத்தில் நகுலன் படைப்புகள் குறித்து எழுப்பிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றவும் இந்த இடம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.  எனக்கு நகுலன் கவிதைகள் உருவாக்கும் இருண்மையும், அதில் உருவாகும் வாசகனுக்கான இடமும் மிக முக்கியமானவை. அதனாலேயே எனக்கு நகுலன் மிக முக்கியமான படைப்பாளி.

10) கவிதையில் உருவாக்கப்படும் காட்சிகள்
           நேரடியான காட்சிகளில் இருக்கும் பிரச்சினை -ஸ்டேட்மெண்ட்           
           பூடகமான காட்சிகளில் இருக்கும் சிக்கல்- புதிர்த்தன்மை


11) தமிழ்க் கவிதைகளில் நாம் எதிர்கொள்ளும் படிமங்கள், அது உருவாக்கும் புரிதல்கள்

12) கவிதை வாசிப்பும் மனநிலையும்:

தன் மனநிலையிலிருந்து கவிதையை புரிந்து கொள்ளுதலில் மனநிலை இரு விதமான நிலையில் இருக்கலாம்- அமைதியான மனநிலை அல்லது கொதிநிலை


13) கவிதை என்பதன் சுயம்


14) தனித்துவத்துடன் அமையும் கவிதைகள்


15) கவிதையை அணுகுதல்: ரசனை சார்ந்து அல்லது கோட்பாடு சார்ந்து


16) கவிஞன் x கவிதாளுமை

17) இன்றைய கவிஞர்களுக்கு முன் இருக்கும் சவால்கள்


18) கவிஞனின் தெளிவற்ற தன்மைகுறிப்புகள்:

’அருவி’ அமைப்பு குறித்து:

அருவி அமைப்பு கோவையில் சூரி,ஸ்ரீநி,சுரேஷ் ஆகிய மூன்று நண்பர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள் கல்லூரிக்காலத்தில் (1981-1986) இல் “உயிர்மெய்” என்ற சிற்றிதழை நடத்தியவர்கள்( 8 இதழ்கள்)

இவர்களோடு சேர்ந்து இன்னொரு நண்பரும் இயங்குகிறார். அவரோடு அதிகம் பேசவில்லை- பெயரும் நினைவில் இல்லை.

இணையதளம்: www.aruvikovai.com

கூட்டம் குறித்து:

1) நவீன கவிதை குறித்து பேசும் போது ந.பிச்சமூர்த்தி, நகுலன்,பசுவய்யா,ஆத்மாநாம்,தேவதேவன்,தேவதச்சன்,சுகுமாரன் போன்ற பெயர்களை குறிப்பிட்டு பேச வேண்டியிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ’வானம்பாடிகள்’ கவிஞர் அக்னிபுத்திரன், இத்தனை கவிஞர்களை குறிப்பிட்டவன் ஏன் இன்குலாப்பின் பெயரை சேர்க்கவில்லை என்றார். இன்குலாப், மு.மேத்தா ஆகியோர் என நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது “இன்குலாப்பையும் மு.மேத்தாவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே உங்களுக்கு அந்தக் கவிதைகளில் பரிச்சயம் இல்லை” என்றார். நான் பதில் சொல்லவில்லை- என்னிடமிருந்த பதில் அந்த கூட்டத்தை திசையிருப்பிருக்ககூடும்.
     
பதில் இதுதான்:
ந.பி, சு.ரா,தேவதச்சன் வரிசையில் கவிதை வாசித்து அவற்றைக் கொண்டாடுபவனுக்கு இன்குலாப்பும் ஒன்றுதான், மு.மேத்தாவும் ஒன்றுதான், கருணாநிதியும் ஒன்றுதான்.

2) திருவள்ளுவருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளில் பாரதியாரில்தான் கவிதை நிற்கிறது என்ற போது பொதியவெற்பன் “பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம்” எல்லாம் கவிதைகள் இல்லையா என்றார்.

3) கவிதையை ரசனை சார்ந்து அணுகுதல் அல்லது கோட்பாடு சார்ந்து அணுகுதல் பற்றி விவாதிக்கும் போது பொதியவெற்பன் படைப்பில் ரசனை சார்ந்து மட்டுமே அணுகினால் உனக்கு அடுத்தவன் கவிதையை விமர்சிக்கும் யோக்கிதை இல்லையென்றார். கவிஞனாக நான் ரசனை சார்ந்து மட்டுமே அணுகுவேன், கவிதை ப்ரியனாகவும் நான் அதையே செய்வேன். கோட்பாட்டிற்காக கவிதையை பிரிப்பது எனது படைப்பு மனநிலையை சிதைக்கிறது. எனது யோக்கியதை பற்றிய சான்றுக்காக நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

4) கவிஞர்கள் உதிரிகளாக இருந்தாலே போதும் அவர்கள் தங்களை எந்த நிறுவனத்துடனும் இணைத்துக்கொள்ளத் தேவையில்லை என்றபோது மனிதன் உதிரியாக இருக்க முடியாது என்றும் அவன் பிறரோடு சேர்ந்தே இருக்க வேண்டும் என அக்னிபுத்திரன் சொன்னார். “மனிதன் சேர்ந்து இருக்கலாம் ஆனால் படைப்பாளி உதிரியாக இருக்கலாம்” என்றேன்.

5) அமரநாதன் என்பவர் என் கவிதைகளைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லி என்னை சந்தோஷ அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

6) இசை,இளங்கோ கிருஷ்ணன், தென்பாண்டியன்,அவை நாயகன்,சம்யுக்தா ஆகிய படைப்பாளிகள் உட்பட தோராயமாக முப்பது பேர் கலந்து கொண்டார்கள்.

7) ஆனந்த், வீரராகவன் ஆகியோர் உரையாடலில் பங்குபெற்றார்கள்.

8) சில மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

9) முந்தைய நாள் முகநூலில் நான் எழுதிய அருவி நிகழ்ச்சி குறித்தான செய்தியில் தன் பெயரை குறிப்பிடாதது குறித்தான வருத்தத்தை இளஞ்சேரல் தொலைபேசியில் அழைத்து பகிர்ந்து கொண்டார். அவர் இளவேனில் சார்பாகவும் பேசுவதாகச் சொன்னார். அந்த செய்தியில் பெயர் குறிப்பிடாமல் விட்டதில் எந்த அரசியலும் இல்லை அது ஒரு தற்செயல் என்று விளக்க வேண்டியிருந்தது.

10) நிகழ்ச்சியை தொகுத்த மாணவியின் பெயர் மறந்துவிட்டது.

--------
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: vaamanikandan@gmail.com

Oct 13, 2011

அருவி: நான்காம் நிகழ்வு

அன்பு நண்பர்களுக்கு,
அருவி அமைப்பின் நான்காம் நிகழ்வு எதிர்வரும் 16 அக்டோபர் 2011 அன்று,  சித்ர மஹால், பழைய கங்கா ஆஸ்ப்பத்திரி அருகில்,ராம் நகர், கோவை-9 என்ற முகவரியில் நிகழ்கிறது.


நான் கலந்து கொண்டு நண்பர்களுடன் கவிதை பற்றி விவாதிக்கிறேன். இயலும் நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.


நன்றி.

Sep 9, 2011

சிவகாசி இலக்கிய கருத்தரங்கு

நண்பர்களுக்கு,

வணக்கம்.

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில்  9.9.2011 மற்றும் 10.9.2011 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் இலக்கியக் கருத்தரங்கில் "புலம்பெயர் கவிதைகள்" குறித்தான அரங்கில் நானும் பங்கு பெற்று உரையாற்றுகிறேன்.

இயலுமெனில் விருப்பமுள்ள நண்பர்கள் வருக.

நன்றி!

Sep 7, 2011

குழந்தை அழுது கொண்டிருக்கிறது


நீங்கள் பெங்களூர் வந்திருக்கிறீர்களா? சுஜாதா பாரத் எலெக்ட்ரானிக்ஸில் பணிபுரிந்த காலத்தில் நீங்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டால் அதை "செல்லாது செல்லாது" என்று சொல்லிவிடலாம். சாலையோர மரங்களை எல்லாம் மேம்பாலம் கட்டுகிறேன் என்றும், மெட்ரோ ரயில் கொண்டு வருகிறேன் என்றும் வெட்டிய பிறகு, ஒசூர் தாண்டியவுடன் ஐ.டி நிறுவனங்கள் கண்ணாடிக்கட்டிடங்களாக முளைத்த பிறகு, ஃபோரம்,மந்த்ரி மால் என்று திரும்பின பக்கமெல்லாம் பெரும் வணிகவளாகங்கள் வந்த பிறகு நீங்கள் பெங்களூர் வந்திருந்தால் சொல்லுங்கள். அப்படியான ஒரு அசந்தர்ப்பத்தில்தான் தன் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு கட்டியவளையும் துணைக்கழைத்துக் கொண்டு ஒரு மே மாத ஞாயிற்றுக்கிழமையில் ரகு இந்த திரு ஊரில் இறங்கினான். பெங்களூரில் மே மாதத்தில் கூட குளிரடிக்கும் என்று சொல்லி அவனை உசுப்பேற்றியவர்கள் இன்று கிடைத்தால் சுண்ணாம்புக் கால்வாயில் குப்புற படுக்க வைத்துவிடுவான். 

ரகு வந்து இறங்கிய சமயத்தில் கிருஷ்ணராஜபுரம் தொடரூர்தி நிலையம் வெந்து கொண்டிருந்தது. இரவிலாவது தணியுமா என்று தெரியாமலேயே ஆட்டோ பிடித்தான். "தமிழ் கொத்தா?நாக்கு கன்னடா கொத்தில்லா" என்ற போது "இங்க அத்தினி பேருக்கும் தமிழ் தெர்யும் சார்,பரவால்ல தமிழ்லயே பேசுங்க" என்றார் ஆட்டோக்காரர். அது அவனை நக்கல் அடிப்பது போல் இருந்தது என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பற்களே தெரியாமல் ஒரு சிரிப்பு, நேருக்கு நேராக பார்க்காமல் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடிப்பது போலவோ, மீட்டரை போடுவது போலவோ வேறு எதையோ செய்து கொண்டே ஒரு வாக்கியத்தை உதிர்ப்பது- இப்படியாக நீங்கள் பலவற்றையும் கோர்த்து அந்த 'சிச்சுவேஷனை' மனக்கண்ணில் கொண்டு வந்துவிடலாம். இதெல்லாம் யோசிக்க முடியாது என்று நினைத்தால் "ஆட்டோக்காரர் நக்கலடித்தார்" என்று நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ரகு பெங்களூர் வந்த கதை ஓரமாக கிடக்கட்டும்.அவர்கள் வந்து சேர்ந்த வாரத்திலிருந்தே பெங்களூரிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அவன் மட்டும் பேருந்து பிடித்து சொந்த ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் வந்தது. அலுவலக நண்பர்கள் யாரையாவது பிடித்து அவர்களின் வாகனத்தில் அலுவலகத்திலிருந்து மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான். மடிவாலாவில் வெள்ளிக்கிழமை மாலை தொலைதூர பேருந்து பிடிப்பது என்பது வானம் ஏறி வைகுந்தம் பிடிப்பது போல்தான். வைகுந்தம் ஏறி அமர முடியாவிட்டாலும் கூட பேப்பரை விரித்து நடைபாதையில் அமர்ந்து கொள்வதுண்டு. டிக்கெட் தர வரும் கண்டக்டர் பெருமான் 'அடுத்த பஸ்ஸில் வரலாம்ல' 'ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க' என ஏதாவது சொல்வார் ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருக்க முடியுமா? டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நூற்று நாற்பத்தியேழாவது முறையாக 'போக்கிரி' அல்லது 'சிவகாசி'யை பார்க்க ஆரம்பித்துவிடுவான்.சேலம் செல்லும் பேருந்துகளில் இந்தப் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப போடுகிறார்கள். கண்டக்டர் டிரைவருக்கு இந்த படங்கள் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் அந்த சிடிக்கள் மட்டுமே தட்டுபடாமல் அவர்கள் வைத்திருக்கும் புராதன சிடி ப்ளேயரில் ஓடும் போலிருக்கிறது. 

பெங்களூரில் கண்ணில்படுபவர்கள் ஒன்று சாப்ட்வேர் ஆளாக இருக்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்கள், மத்தியதர வாழ்க்கை வாழ்பவர்கள் என பல தரப்பும் இல்லாமலே ஆகிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தொலைதூர அரசு பேருந்துகளில் இடம் பிடிப்பதில் கூட இந்த பன்னாட்டு நிறுவனங்களில் கூலி பெறுபவர்களுக்கும்,  பெங்களூரில் கட்டிட வேலையோ காய்கறிக்கடை வேலையோ செய்து கூலி பெறுபவர்களுக்கும்தான் போராட்டம் நடக்கும். முதல் வகைக் கூலிகளில் இன்னொரு பிரிவு உண்டு, ஆன்லைனில் ஆம்னி பேருந்தில் டிக்கெட் பதிவு செய்து அலுங்காமல் குலுங்கி குலுங்கி பயணிப்பவர்கள். வாராவாரம் பயணிக்கும் ரகு ஒவ்வொரு வாரமும் ஆம்னியில் டிக்கெட் போட்டால் பதினெட்டு சதவீதத்தில் 'பெர்செனல்' லோன் வாங்கித்தான் சோறு தின்ன வேண்டி இருக்கும் என்பதால் அவனுக்கு அரசு பேருந்துகளே சரணம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏதோ காரணத்திற்காக வியாழக்கிழமையே ஊருக்கு கிளம்பினான். வெள்ளிக்கிழமையை தவிர்த்து வேறு எந்த நாளாக இருந்தாலும் டீலக்ஸ் பேருந்திலும் கூட கூப்பிட்டு ஏற்றிக் கொள்வார்கள். அத்தனை காலியாக இருக்கும். ரகு மடிவாலா சிக்னலில் நின்று கொண்டிருந்த போது டீலக்ஸ் பஸ் நின்றது. நடத்துனர் சேலத்துக்கு இருநூறு ரூபாய்கள் என்க, இவன் நூறுதான் என்று சொல்ல கடைசியில் நூற்றி இருபத்தைந்தில் பேரம் முடிந்தது. 

அது திருச்சி செல்லும் பேருந்து. மொத்தமாக இருபது பேர்கள் மட்டுமே இருந்தார்கள். அதிசயமாக கருப்பு வெள்ளை பாடல்களை டிவிடியில் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். 

ரகு ஏறும் போதிலிருந்தே ஒரு குழந்தை அழத் துவங்கியிருந்தது. அதற்கு பத்து மாதங்கள் இருக்கலாம். அதனை பெற்றவர்கள் அதன் அழுகையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியைத் தாண்டுவதற்குள்ளாக வீறிடத் துவங்கியது. அதன் அழுகை நிற்காது போலிருந்தது. ரகு சிறுகுழந்தையாக இருக்கும் போது ஒரு முறை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் வலிப்பு வந்துவிட்டதாகவும் கையில் சாவி கொடுத்தும் நிற்காமல் அழுது கொண்டிருந்ததாகவும் பிறகு பொன்காளியம்மன் திருநீறை நெற்றியில் பூசிய பிறகுதான் வலிப்பு நின்றதாக குறைந்து முந்நூறு முறையாவது அம்மா சொல்லியிருக்கிறார். அப்படி இந்தக் குழந்தைக்கும் வலிப்பு வந்துவிடுமோ என்பதைவிடவும் அதை தான் பார்க்க வேண்டியிருக்குமே என்ற பயமே ரகுவை அதிகம் பதறச் செய்தது. ஏதாவது பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவது உத்தமமான செயல். அதைத்தான் ரகு எப்பொழுதுமே செய்வான். 'ஏன் அங்கிருந்தும் நீ எதுவும் செய்யவில்லை' என்று யாராலும் கேட்க முடியாது அப்படியே கேட்டாலும் 'நான் அந்த இடத்திலேயே இல்லை' என்று சொல்லி நல்லவனாகிவிடலாம். எப்படியாவது குழந்தையின் சத்தம் எனக்கு கேட்காதவாறு ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று எத்தனித்தான்.

ஒரு பெரியவர் "டிவியை நிறுத்துங்கள்" என்றதற்கு கண்டக்டர் "அதெல்லாம் முடியாது சார்...டிப்போல பன்னிரெண்டு மணி வரைக்கும் ஓட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.பெரியவரோடு இன்னும் இரண்டு பேர்கள் சேர்ந்து கொள்ள குழந்தையின் அழுகையைவிட சண்டைச் சத்தம் அதிகமானது. ஒரு வழியாக ஓட்டுநர் தலையிட்டு டிவியை நிறுத்தியபோது சிவாஜி கணேசன் பத்மினியை நெருங்கும் சமயத்தில் புள்ளியாகி இருவரும் காணாமல் போயினர். 

அப்பொழுதும் குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கவில்லை. இன்னும் அழுகைச் சத்தம் அதிகமானது. இப்பொழுது ரகுவிற்கிருந்த பதட்டம் மற்றவர்களிடமும் உருவாகியிருக்கும் போலிருந்தது. 'ஏன் சார் குழந்தை அழுகிறது?''பசிக்குமோ என்னமோ' 'தட்டிக் கொடுத்துப்பாருங்க; அப்படியே தூங்கிடும்' என்று அந்த தம்பதியினரை நெருக்கத் துவங்கினார்கள். அந்த நெருக்கடிகளுக்கு முதலில் பதில் சொன்ன அவர்கள் பின்னர் அதீத பதட்டமிக்கவர்களாக என்ன செய்வதென்றே தெரியாமல் நடுங்கினார்கள். செல்போனில் யாருடனோ பேச முயன்றான். அநேகமாக அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கக்கூடும். 

குழந்தையின் அழுகையைவிடவும் மழை தூறிக்கொண்டிருக்கும் அந்த இரவில் அவனைச் சுற்றி எழும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான திராணியில்லாமல் போனதே அவனை இன்னமும் பதட்டமடையச் செய்திருக்க வேண்டும். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அவனை பேருந்துக்குள்ளேயே நடக்கச் சொன்னாள். அவன் ஏதோ சாக்குபோக்கு சொன்னான். மீண்டும் ஒரு முறை அவள் சொன்னாள் அல்லது சொல்ல முயன்றாள். அப்பொழுது அடி விழும் சத்தம் கேட்டது. ரகு எதுவுமே தெரியாதவன் போல திரும்பிக் கொண்டான்.

இப்பொழுது ரகுவிடம் திருநீறு எதுவும் இல்லை ஆனால் பொன் காளியம்மனை வேண்டிக் கொள்ள முடியும்- கொண்டான். ஆனால் அவன் ஓசூருக்கு அருகே ஆனேக்கல்லில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வேண்டிக் கொண்டது சிவகிரியில் இருக்கும் பொன்காளியம்மனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை போலிருக்கிறது. அதனால் பொ.கா.அம்மன் குழந்தையின் அழுகையை நிறுத்தவில்லை.

அத்திப்பள்ளியை நெருங்கிய போது அவர்கள் பேருந்தை விட்டு இறங்கிவிடுவதாக கண்டக்டரிடம் சொன்னார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஓசூர் வழியாகச் சென்றால் அத்திப்பள்ளிதான் நுழைவாயில்."வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது ஓசூரிலாவது இறங்குங்கள்" என்றார் நடத்துனர். அவர்கள் கேட்பதாக இல்லை. எல்லோரும் குழந்தையை பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த பெண்ணின் வேதனையைப் பற்றி எந்த கவலையும் படாமல் தனது நெருக்கடிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவளை அறைந்தவனை ரகு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நல்ல போதையில் இருப்பது போலிருந்தது. அவன் எப்படியோ போகட்டும் குழந்தை அழுகையை நிறுத்தினால் போதும் என்று ஆரம்பப்புள்ளிக்கே வந்துவிட்டான்.

"இல்ல சார், இங்க இருந்து ஆட்டோ புடிச்சு திரும்ப போய்டறோம்" என்றான். ரகுவுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது ஆனால் எது தடுத்தது என்று தெரியவில்லை. அவர்கள் இறங்கிய பிறகு பேருந்துக்குள் பதட்டம் வடியத்துவங்கியது. மீண்டும் சிவாஜியும் பத்மினியும் புள்ளியிலிருந்து வந்து பாடினார்கள். ஊரில் அவனுக்குத் தெரிந்த சில கடவுள்களை வேண்டிக் கொண்டே ரகு தூங்கிவிட்டான். சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கியவன் அத்தனை பதட்டத்திலிருந்து எப்படி சில மணித்துளிகளில் உறங்க முடிந்தது என்று அவனது மனிதாபிமானத்தை நிறுத்தி கேள்வி கேட்கத் துவங்கினான்.மனிதாபிமானம் மெளனமாக நின்று கொண்டிருந்தது. இனி அதனோடு பேசி பலனில்லை என்பதால் ஈரோட்டுக்கு பேருந்தை பிடித்து மீண்டும் தூங்கிவிட்டான்.

சனிக்கிழமைக் காலையில் காபி கொடுக்க ரகுவை அவனது அம்மா எழுப்பினார். எழுந்தவுடன் பல் துலக்காமல் ஃபேஸ்புக்கில் தனது கடைசி ஸ்டேட்டஸ் மெசேஜூக்கு எத்தனை லைக்குகளும் கமெண்ட்களும் வந்திருக்கின்றன என்று தேடிக் கொண்டிருந்தான். அம்மா அவனைத் திட்டத்துவங்கினார் அப்பொழுது அம்மாவை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அவனுக்கு. செய்தி படிப்பதாகச் சொன்னால் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார். அவன் ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகிவிடுவான் என்று அவனது நாற்பது வயதுக்கு அப்புறமும் அவனின் அம்மா நம்புவார் போலிருக்கிறது. உள்ளூர் செய்திகளை வாசிக்க  தினத்தந்தியின் பெங்களூர் பதிப்பை இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.

அத்திப்பளிக்கு அருகில் சாலையோர முட்புதருக்குள் பத்து மாதஆண் குழந்தை பிணம் ஒன்று கிடைத்ததாகவும் மழையில் நனைந்திருந்த அதன் முகத்தை எறும்புகள் அரித்திருந்ததால் அடையாளம்...என்று செய்தி தொடர்ந்து கொண்டிருந்தது. விரல்கள் நடுங்கத் துவங்கின. தலையை வலிப்பது போலிருந்தது. மனைவியை அடித்தான் என்பதற்காக குழந்தையையும் புதரில் எறிவான் என்று அர்த்தமில்லை என்று ரகு தன்னை  தேற்றிக் கொண்டான். ஒரு வேளை குழந்தை இறந்து போய் எறிந்திருக்கலாம் என்றும் தோன்றியது. அப்படி இருக்காது-குழந்தை இறந்தே போயிருந்தாலும் கூட புதரில் எறிய மனம் வந்திருக்காது என்றும் நம்பினான். அவனைப்போலவே நீங்களும் அந்த அழுத குழந்தையை முன்வைத்து அதுவாகத்தான் இருக்குமோ என்று தர்க்கத்தில் இறங்கக் கூடும்.

ரகு குழந்தையை முன்வைத்து தர்க்கம் செய்யாமல் நிறுத்திக் கொண்டான். அந்தக் குழந்தையோ அல்லது வேறு எந்தக் குழந்தையோ, பத்து மாதக் குழந்தை புதருக்குள் எறும்பு தின்னக் கிடந்தது என்பதைத் தெரிந்த பிறகு எப்படி தூங்க முடியும் என்று மீண்டும் அவன் மனிதாபிமானத்தை கேள்விகேட்கத் துவங்கியிருந்தான்.

Sep 5, 2011

துளிகள்


(1)
ஹெல்மெட்
கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டிருக்கிறான்-
நசுங்கிய கால்.


(2)
எந்த நடிகையும்
அழுவதில்லை-
என் அறைச் சுவர்களில்

(3)
வியர்வையில்
நெளிகிறாள்-
நிறமேற்றப்பட்டவள்.

(4)
மூடாத விழிகளில்
வானம் நோக்குகிறது-
அநாதைப் பிணம்

Aug 29, 2011

கொலை மேடைக் குதிரைகள்


பாலையின் புதைமணலில்
ஓடிக் களைத்த குதிரைகள்
மூச்சிரைத்துக் கிடக்கின்றன

வன்மத்தின் நோய்மை
விரவிக் கிடக்கும் லாயத்தில்
கறுப்பு முகமூடிக் காவலர்கள்
விஷ ஊசிகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்

வெப்பத்தின் கசகசப்பில்
முகமூடியை நீக்காமல் சிகரெட்டைப் பற்றவைக்கிறான் அவன்
திரும்பி நின்று சிறுநீர் கழிக்கிறான் இன்னொருவன்
நேற்றிரவு
நீலப்படம் பார்த்து வந்தவன்
குதிரையின் கால்களை இறுகக் கட்டுகிறான்
கொஞ்சம் எதிர்ப்பைக் காட்டிய குதிரைகள்
இயலாமல் விம்முகின்றன.

வாழ்நாளை
பாலையின் வெம்மையிலும்
கொடுமணலின் வாதையிலும்
கழித்த குதிரைகள்
இனி இறக்க வேண்டுமென
அரசி அறிவித்ததை தெரிவிக்கிறார்கள்.

எந்தக் குதிரையும் அசையவில்லை இப்பொழுது

கட்டப்பட்ட கால்களை வெறித்துப் பார்த்த
ஒரு குதிரையின் கண்கள்
கசிந்து கொண்டிருக்கின்றன
தன் முதுகில் தீட்டப்பட்ட வரலாற்றின் வடுக்களில்
ஈக்கள் மொய்த்திருப்பதை ஒரு குதிரை உணர்கிறது
சொடுக்கப்பட்ட சவுக்குகளை நனைத்த குருதி
சுவர்களில் தோய்ந்துகிடக்கிறது

எலும்புகளை இசிக்க
காத்திருக்கின்றன வேட்டை நாய்கள்
அந்நாய்களின்
குரூரக் கண்கள்
குதிரைகளின் கண்களில்
பிரதிபலிக்கின்றன

ஊசிகளை எடுத்துவருகிறான்
ஒரு முகமூடிக்காரன்
இனி
குதிரைகள்
ஓடிக் களைக்க வேண்டியதில்லை
வெளியுலகத்தின் வண்ணக் கனவுகளில் ஏங்க வேண்டியதில்லை

கழுகு வட்டமிடத் துவங்குகிறது

இப்பொழுது
ஏற்றுகிறார்கள்
அஹிம்சையின் கொடிக்கம்பத்தில்
ரத்தம் நனைத்த
வெள்ளைத் துணியொன்றை.

Aug 16, 2011

பிசிறில்லாத பாடல்


நீங்கள் நடந்த பாதைகளில்
என்னை நடக்கச் சொல்கிறீர்கள்.
பதற்றத்தோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் பொறுக்கிய முத்து ஒன்றினை
என்னிடம் கையளிக்கிறீர்கள்
சிரத்தையோடு
பற்றிக் கொள்கிறேன்

நீங்கள் பாடிய பாடல்களை
எனக்கு கற்றுத் தருகிறீர்கள்
பிசிறில்லாமல்
இசைத்துக் கொண்டிருக்கிறேன்

நீங்கள் கொய்திய தலைகளை
எண்ணச் சொல்கிறீர்கள்
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்

நீங்கள் ஊட்டிய
விஷங்களின் குறிப்புகளை
தொகுக்க உத்தரவிடுகிறீர்கள்
என் மேசை முழுவதும்
மரணக் குறிப்புகள்.

துளி விஷம்
கூரிய கத்தி
கொஞ்சம் வன்மம்

போதுமானதாயிருக்கிறது-

உங்களின் பிரியத்திற்கும்
என் காமத்திற்கும்

Aug 4, 2011

காலச்சுவடுக்கு எழுதிய கடிதம்.

காலச்சுவடு நூலகங்களில் வாங்கப்படக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இதழியலின் சுதந்திரத்திற்கு ஆதரவாக முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்களும்.

இந்த வழக்கின் வெற்றிச் செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னதாக நான் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

காலச்சுவடு இதழ் நூலகங்களில் வாங்கப்பட்டு கடந்த ஆட்சியில் திடீரென நிறுத்தப்பட்டபோது பலரது எதிர்வினையையும் காலச்சுவடு கோரியிருந்தது. பல நண்பர்கள் 'கருத்து' அமைப்புக்கு தங்களது எண்ணங்களை மின்னஞ்சல் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் தெரியப்படுத்தினார்கள். அந்தச சமயத்தில் அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை 'கருத்து' அமைப்பின் நிறுவனர்களான கனிமொழிக்கும், கார்த்திக் சிதம்பரத்திற்கும் ஒரு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தேன். இது குறித்து தனக்கு வந்த மின்னஞ்சல்களுக்கும், வேண்டுகோள்களுக்குமான பதிலை ஒரு பொதுவான அறிக்கை மூலமாக கார்த்திக் சிதம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிட்டிருந்தார். கனிமொழி எந்த பதிலும் வெளியிட்டதாக எனக்கு நினைவில் இல்லை.

காலச்சுவடுக்கு ஆதரவான மின்னஞ்சல்கள், அறிக்கைகள் ஆகியவை அதற்கடுத்த மாதத்தின் காலச்சுவடு இதழில் பிரசுரமாகியது. அந்த மாதத்தில் பணி நிமித்தமாக நான் மலேசியாவின் பினாங்கு நகரத்தில் இருந்தேன். சில நண்பர்கள் இந்த கடிதத்தின் பிரசுரம் பற்றி தெரிவித்திருந்தார்கள். அப்பொழுது விசா புதுப்பிப்பிற்காக இரண்டு நாட்கள் மட்டும் இந்தியா வந்து திரும்ப வேண்டியிருந்தது. அப்பொழுது ஹைதராபாத்தில் என்னுடன் தங்கியிருந்த நண்பரும் வேறொரு தேசத்திற்கு சென்றிருந்ததால், அந்த பத்துக்கு பதினொன்று அறையில் நிரம்பிக்கிடந்த தூசிகளின் மீதாக பாய் விரித்து அழுக்கடைந்த தலையணையில் தலை வைக்க விருப்பமில்லாமல் கைகளை தலைக்கு அணைத்துக் கொண்டு படுத்திருந்தேன்.

அந்த இரவில் வந்த அநாமதேய அழைப்பின் வசவுகளும் மிரட்டல்களும் இன்னமும் என் நினைவில் சாரலாக இருக்கின்றன. வெளியில் கசகசவென மழை பெய்து கொண்டிருந்தது. என் இலக்கிய செயல்பாடுகள் அத்தனையும் அந்த கடிதத்தோடு முடிவுக்கு வந்துவிடும் எனவும் எனது மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டதாகவும் பேசத் துவங்கியவர், நான் ஏதோ பதில் சொல்லத் துவங்க வேறொரு தொனியில் எனக்கான அர்ச்சனைகளை ஆரம்பித்தார். அந்த மனிதர் உதிர்த்த சொற்களில் பெரும்பாலானவை 'வக்கிரம்' அல்லது 'குரூர வன்மம்' குறித்தான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படுமாயின் அதில் சேர்க்கத்தக்கவை. பாதியில் இணைப்பைத் துண்டித்துவிட்டு, இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களும் எனது அலைபேசியை 'சுவிட்ச் ஆஃப்' செய்துவிட்டு சுற்றிக் கொண்டிருந்தேன்.

ஒரு இதழுக்கு ஆதரவாக அனுப்பியிருந்த நான்குவரி மின்னஞ்சல் இத்தனை கீழ்த்தரமான எதிர்வினையை பெற்றுத்தரும் என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இலக்கிய உலகத்தைச் சுற்றி பின்னியிருக்கும் மட்டரகமான அரசியலின் ஒரு முகத்தை உணர்ந்த தருணம் அது.உலகின் சிதைவுகளுக்குள் எனது இருப்பை வெளிப்படுத்துவதை தவிர வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் மழுங்கலான மனநிலையில் இருந்த எனக்கு அது அயற்சியை மட்டுமே தந்தது.

இந்தியா திரும்பிய பிறகு தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்களில் பங்கெடுப்பதும் புதிய நண்பர்களைச் சந்திப்பதும் கொஞ்சம் எழுதுவதும் நிறைய வாசிப்பதும் என இலக்கியத்தில் இயங்கும் மனநிலையிலேயே இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கமத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு கவிதையும் வாசித்து வந்தேன். இந்தச் சூழலில்தான் கடந்த ஆண்டு சென்னை சங்கமத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அழைத்தபோது ஒத்துக் கொண்டேன்.

தொடர்ச்சியாக சங்கமம் குறித்தான செய்திகளும் அதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டவர்களும் பற்றிய எதிர்மறையான எண்ணம் உருவானபோது கவிதைச் சங்கமத்தில் கவிதை வாசிக்காமல் புறக்கணிக்கிறேன் என ஒரு மின்னஞ்சலை நண்பர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தேன். இந்த மின்னஞ்சல் சவுக்கு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. ஞாநி அவர்கள் கல்கியிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் என்னைப் பற்றிய குறிப்பினை எழுதியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இணையத்தளங்களில் உருவான எதிர்வினைகள் எனக்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சில தனிமனித வசைகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து எதிர்வினைகளும் கருத்தியல் ரீதியான மோதல்களாகவே இருந்தன. இவை முன்னரே செய்திருக்க வேண்டிய சில முடிவுகளை எனக்குத் உணர்த்தினவே தவிர, வருத்தமளிக்கவில்லை.

சங்கமத்தில் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு இடையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றால் என்னை அழைத்த நண்பர்களுக்கு சங்கடம் வரலாம் என்று அவர்களை தொடர்புகொள்ள முயன்றபோது எந்த பதிலையும் பெற முடியவில்லை.

அதே நேரத்தில் தொலைபேசி வாயிலாக நான் எதிர்கொண்ட மிரட்டல்கள் வகைவகையானவை. ஒருவர் புறக்கணிப்பு என்னும் எனது செயலை பாராட்டுவதாகக் கூறி தனது உரையாடலை தொடங்கி மிரட்டும் தொனியில் எனது நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தில் வகிக்கும் பதவி,மேலாளரின் பெயர் போன்ற விவரங்களைக் கேட்கத் துவங்கினார். பிறகு தான் மத்திய அரசில் மிகப்பெரிய பதவியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இதன் பிறகாக அவர் பேசியது எதுவும் நினைவில் பதியவில்லை.

இன்னொருவர் எனது அறிக்கையினால் உளவுத்துறையின் கழுகுப்பார்வைக்குள் நான் வந்துவிட்டதாகவும், இதிலிருந்து தப்பிக்க அந்த அறிக்கையை ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக நகைச்சுவையாக வெளியிட்டுவிட்டேன் என்று ஒரு பதிவு எழுதினால் விளைவுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள தான் முயல்வதாகச் சொன்னார். இன்னொரு நண்பர் என்னைப்பற்றிய விவரங்களை 'மேலிடத்தில்' கேட்பதாக தெரிவித்தார். இப்படியான மிரட்டல்கள் ஒரு புறமும் , அச்சில் வர முடியாத வசவுகளின் தனிப்பட்டியல் ஒரு புறமும் அடுத்து வந்த சில நாட்களுக்கு மன உளைச்சலைத் தரத்துவங்கின.

நான் எதிர்கொண்ட இந்த எதிர்வினைகள் குறித்து எனக்கு எந்தவிதமான புகாரும் இல்லை இதைப்பற்றி எந்த இடத்திலும் குறிப்பிட்டதுமில்லை. மிக அரிதாக சில நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். அதே சமயத்தில் இந்த பதிவு அரசியல் ரீதியாக தோற்றவர்களின் மீது புகார் அளிக்கத்துவங்கும் காலகட்டத்தின் நீட்சியும் அன்று.

எழுத்து, சொல்,செயல் என யாவும் நுண்ணரசியலால் பின்னப்பட்ட இலக்கியச்சூழல்தானே இது. இதை தெரிந்தும் விரும்பியுமே இருந்து கொண்டிருக்கிறேன். அதே சமயத்தில் அறிவுஜீவிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியிருப்பதான சித்திரத்தில் அருவருப்பான நிகழ்வுகளை பதிவு செய்யவே இந்தக் கடிதம்.

[இந்தக் கடிதம் இம்மாத(ஆகஸ்ட் 2011) காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது]

Jul 1, 2011

புனிதக் காதல்


பேருந்து நிறுத்தத்திற்கும்
மதுக்கடைக்கும்
இடையில் ஓடிய
மூத்திர நதியில்
மிதந்து கொண்டிருந்தது
அன்றைய நிலவு

நுரைத்து
தளும்பிய நதியில்
எச்சில் மீன்களை
நான்
சிதறடித்தபோதுதான்
நாம்
முதலில் சந்தித்துக் கொண்டோம்.

இரண்டாவது வாரத்தின்
ஆறாம் நாளில்
நம்
முதல் முத்தத்தை
பரிமாறியபோது
பீடி மணக்கிறதென
சிரித்தாய்.

என்
காதல் புனிதமானது
என்ற போதெல்லாம்
உன்
பழைய காதல்களை
வரிசைப்படுத்தினாய்

நீ
என்னை காதலிப்பதாய்
நெகிழ்ந்த போதெல்லாம்
என்
காதலிகளின் பெயர்களை
உதிர்த்தேன்

சனிக்கிழமையின்
மாலைகளில்
வியர்வைக் கசகசப்பில்
நாம்
ஒதுங்கிய சாலையோரங்களில்
இன்று
பெரும் வீடுகளின்
ஜன்னல்திரைகள் அசைந்து
கொண்டிருக்கின்றன

நாள்
தள்ளிப்போவதாய்
நீ
அழுது நுழைந்த
மருத்துவமனையில்
இன்று
குழந்தைகளின் பள்ளி
நடக்கிறது.

சாந்தி தியேட்டரின்
முத்தக்காட்சிகள் உறைந்து கிடக்கும்
என் டைரியை
இப்பொழுது
வாசித்துக் கொண்டிருக்கிறாள்
இவள்

உதிர்ந்து கொண்டிருக்கும்
அந்தரங்கத்தின்
வெடிச்சிரிப்பில்
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
நான்.

வரிகளுக்கிடையில்
சிரித்துக் கொண்டிருக்கும்
உன்னை
எரிக்கத் துவங்குகிறாள்

குழந்தையின்
வெட்டுப்பட்ட விரலென
இரத்தச் சகதியில்
துடித்துக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு

vaamanikandan@gmail.com