Oct 5, 2010

நாங்களும் ரெவுடிதான்..

சென்ற வாரம் வியாழக்கிழமை. பெங்களூரில் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒரு இளைஞனோடு இன்னொருவன் கீழே நின்று கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தான். தகராறு செய்தவனுக்கு முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கும் கறுப்பு பேண்ட், மடிப்புக் கலையாத வெள்ளைக் கதர்ச் சட்டை அணிந்திருந்தான். தன்னை இந்தப் பகுதியின் கதாநாயகன் என்று நினைத்துக் கொண்டிருப்பான் போல் இருந்தது. பைக்கில் இருந்தவனின் சட்டையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருந்தான்.

பைக்கில் இருந்தவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். மிகச் சாதுவாக இருந்தான். அவனை பைக்கில் இருந்து கீழே இறங்க விடாமல் நாலைந்து பேர் சுற்றிலும் நின்றார்கள். அவர்கள் கலவையான வயதுகளில் இருந்தார்கள். ஒருவர் முடி நரைத்தவர். இன்னொருவருக்கு தலைச்சாயம் வெளுத்து செம்பட்டை நிறம் பல்லிளித்துக் கொண்டிருந்த தலை. இன்னொருவர் அனேகமாக ஓய்வு பெற்ற அரசு அலுவலராக இருக்கலாம்.

'வெள்ளைச் சட்டை' தவிர்த்து மற்ற எல்லோருமே "சும்மானாச்சுக்கும் கெத்து காட்டுபவர்கள்". உடன் வலிமையான ஒருவன் இருந்ததால் உதார் விட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு பைக்கில் இருந்தவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. செல்போனில் பேச முயன்று கொண்டிருந்தான்.

'செம்பட்டையார்' கேள்வி கேட்க அதற்கு 'பைக்' பதில் சொல்லும் கணத்தில் 'வெள்ளைச் சட்டை' பளார் என்று அறை விட்டது. விரல்கள் பதிந்திருந்தது. இப்பொழுது 'பைக்' யார் பேசுவதையும் கேட்காமல் செல்போனை டயல் செய்யது துவங்கியது. அவனது சட்டை இன்னும் வெள்ளைச் சட்டையின் பிடிகளில்தான் இருந்தது. "சரி யாருக்கு பேசணுமோ பேசுடா" என்றது வெள்ளைச் சட்டை.

"அப்பா, இந்த பி.நாராயணபுரத்துல என்னைச் சுத்தி ஒரு மூணு நாலு பேர் நின்னுகினு இருக்காங்க. ஒருத்தர் அடிச்சுட்டாரு பா"

..................

"ஆமாப்ப்பா அந்த ரோடுதான். ஆங்...அப்படியும் வரலாம் ககடாஸ்புராவுல இருந்தும் வரலாம்"

...........

"சரிப்பா"

..........

"சரிப்பா".

வெள்ளைச்சட்டையிடம் திரும்பி "இன்னும் அஞ்சு நிமிஷத்தில் அப்பா வந்துடுவாரு. பேசிக்குங்க" என்றான் பைக்காரன்.

"தமிலா?"

"இல்ல. கன்னடம். தமிலும் தெரியும்"

ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. ககடாஸ்புரா சாலையில் இருந்து இரண்டு சுமோ வந்து நின்றன. ஒரு நிமிட இடைவெளியில் எதிர் சாலையில் இருந்து ஹோண்டா சி.ஆர்.வி வந்து நின்றது. மொத்தமாக பத்து பேர்கள் இறங்கியிருப்பார்கள். இப்பொழுது அந்தப் பையன் கதாநாயகனுக்குரிய தொனியோடு வண்டியை விட்டு கீழே இறங்கி ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான்.

வண்டிகளில் இருந்து இறங்கியவர்கள் "இவனா அடிச்சான்" என்று கேட்டு வெள்ளைச் சட்டையின் முகத்திலும் வயிற்றிலும் நான்கைந்து குத்துக்களை நொடிக் கணத்திற்குள் இறக்கி விட்டார்கள். வெள்ளைச் சட்டை நிலை குலைந்து போயிருந்தது. அலறிப் போன நரைமுடி, செம்பட்டை, அரசு எல்லாம் நழுவுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள். செம்ப்பட்டையை "பைக்" இழுத்து முகத்தில் காறித் துப்பியது.

அரசு "பைக்" ஆதரவாளன் போல பேசத்துவங்கிய போது, "மூடுறா" என்றான் பைக்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இருந்த சாது இப்பொழுது ரவுடி ஆகியிருந்தான். இப்பொழுது வெள்ளைச் சட்டையிடம் செல்போனைக் காட்டி "சரி யாருக்கு பேசணுமோ பேசுடா" என வெள்ளைச் சட்டையின் டயலாக்கை அதே ஸ்டைலில் உச்சரித்து உத்தரவிட்டான்.

"நீங்க செஞ்சது தப்புதானே? நான் இந்த ஏரியாக்காரன்" என்று வெள்ளைச் சட்டை பயந்தவாறே சொல்லத் துவங்கிய போது இன்னும் நாலைந்து குத்துக்கள் இறங்கின.

எனது ஒட்டுமொத்த பரிதாபமும் பைக்காரன் மீதிருந்து வெள்ளைச்சட்டைக்கு மாறியது. "வண்டில ஏறு மத்ததை அங்க போய் பேசிக்கலாம்" என்றார்கள். வெள்ளைச் சட்டைக் காரன் தயங்கினான். கூட்டத்தினரைப் பார்த்து கலைந்து போகுமாறு உத்தரவிட்டார்கள்.

நான் நகர்ந்துவிட்டேன்.

===============

நேற்று முன் தினம் அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலரின் மகன் தனது பரிவாரங்களோடு மாநகராட்சிப் பேருந்து ஓட்டுனரோடு செய்த ரகளையினால் ஒட்டுமொத்த சென்னையின் போக்குவரத்தும் நேற்றுக் காலையில் ஸ்தம்பித்து போனது என்று செய்தித்தாளில் படித்த போது முந்தைய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டேன்.

பதவியும் பணமும் இருந்தால் யாரை வேண்டுமானால் அடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ள முடியும் என்பது மிக மோசமான கலாச்சாரம். நமது அரசியல் அதிகார அமைப்பில் மிகக் கீழ்நிலையில் இருக்கும் பதவி கவுன்சிலர். அவர் கூட இல்லை, அவரது மகன் அதிகார பலத்தை காட்டியிருக்கிறார்.

மாநகராட்சிப் போக்குவரத்து ஓட்டுனர்கள் ஒன்றும் சாதுக்கள் இல்லை. "பாடு,ங்கோத்தா,த்தூ" என்ற சொற்களைத்தான் புனிதச் சொற்களாக பயன்படுத்துபவர்கள். பஸ்ஸில் ஏறுபவர்கள் அவர்களின் அடிமைகள், சாலையைப் பயன்படுத்துபவர்கள் அவர்களின் எதிரிகள்.

பின்னாடி நின்று 'ஹார்ன்' அடித்தான் என்பதற்காக வாய் நிறைய இருக்கும் பீடா எச்சிலை மேலே துப்பிய ஓட்டுனரை பார்த்திருக்கிறேன்.

இரண்டு தாதாக்கள் மோதிக் கொண்டதில் மாட்டிக் கொண்டவர்கள் சாமானியர்கள். ஆட்டோக்காரர்களுக்கு நேற்று காலண்டரில் ராசிபலன் "பெருத்த பணவரவு" என்றிருந்திருக்க வேண்டும்.

3 எதிர் சப்தங்கள்:

சென்ஷி said...

//எனது ஒட்டுமொத்த பரிதாபமும் பைக்காரன் மீதிருந்து வெள்ளைச்சட்டைக்கு மாறியது.//

:))

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

Unknown said...

Enna Mani sir,

Vellai sataikran mela thapu....
avan sorry solli iruntha vitu irukanum....
background theriyama modha koodathu....