Sep 2, 2010

மரண தண்டனை

மரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும் போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்துவிடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையின் ஆதரவாளர்கள்(இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் அரசும், நீதியமைப்பும் அடக்கம்) மரண தண்டனை இந்தச் சமூகத்தில் உருவாக்கும் விளைவு என எதனை குறிப்பிட முடியும்?

தண்டனைகள் என்பது குற்றவாளிகள் தனது குற்றங்களை குறித்து மனம் வருந்துவதற்கான வாய்ப்பாகவும் அவன் திருந்தி வாழ்வதற்கான வழியினை உருவாக்குபவனவாகவுமே இருக்க வேண்டும். மரணத்தின் பெயரால் குற்றவாளிளை பழிவாங்குவதை பக்குவப்பட்ட அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது. மனிதனின் அடிப்படை உரிமையான 'வாழ்தலை' நிராகரிக்கும் அரசு பக்குவப்பட்ட அரசாக இருக்க முடியாது.

தண்டனைகளுக்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. ஒரு குற்றத்தை செய்வதற்கு முன்னதாக அவன் தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று பயந்து குற்றத்தைச் செய்ய தயங்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதனால் இந்தச் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை முழுவதுமாக தவறு என்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த பயத்தை மரண தண்டனைதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை.

மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமானது. குற்றவாளிக்கான அதிகபட்ச தண்டனை என்பது மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வேறு விதமான தண்டனைகள் மூலமும் குற்றவாளியை தண்டிக்க முடியும்.

ஒருவனை அரசாங்கமும் சட்டமும் சேர்ந்து கொல்வது என்பது அந்தக் குற்றவாளியை மட்டும் தண்டிப்பதில்லை. குற்றவாளி உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி என்று தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்யும் காலத்திலும் தண்டனை நிறைவேற்றப்படும் வரையிலும் குற்றவாளியோடு சேர்த்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றவாளியுடன் சேர்த்து அவனது குடும்பம் தண்டிக்கப்படுதலை சட்டம் எந்தவிதத்தில் நியாயப்படுத்தும்?

வெளிநாடுகளில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மின் நாற்காலி, விஷ ஊசி,விஷவாயு அறை என்ற பல முறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால் எந்த முறையானாலும் ஒரு மனிதனை சட்டம் மற்றும் நீதியின் பெயரால் கொல்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல். குற்றம் புரிந்தவனை அரசாங்கம் திட்டமிட்டு கொல்லுதல் என்பதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடிவதில்லை.

குற்றவாளிகள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியற்றவர்கள் என இந்த சட்டம் முடிவு செய்கிறது என்றாலும் எந்தக் குற்றவாளியும் தனது மரண தண்டனை நிறைவேறும் காலத்தில் தனது குற்றங்களுக்காக மனம் வருந்துபவனாகவே மாறியிருக்கிறான். அவன் குற்றங்களுக்காக மனம் வருந்துபவன் எனும் போதே அவன் வாழ்வதற்கான தகுதியுடையவனாக மாறிவிடுகிறான்.

சமீபத்தில் மும்பை தீவிரவாத தாக்குதல் கசாப்புக்கும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்தான செய்திகளின் கீழ் இருந்த பின்னூட்டப்பகுதிகளில் மிக அதிகப்படியானவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'தீர்ப்பு சரி', 'கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்', 'தீயில் இட வேண்டும்' போன்ற இன்னபிற கருத்துக்களையும் எழுதியிருந்தார்கள்.

மரண தண்டனைகள் இந்தச் சமூகத்தில் உருவாக்கும் வன்முறையாகவே இதனைப் பார்க்கிறேன். "மன்னிப்பு" என்பதற்கான எந்தவிதமான மனநிலையும் நம் மக்களிடையே காண முடிவதில்லை. பேருந்தில் தன் காலை மிதித்தவனைக் கூட ஜென்மவிரோதியாகவே பார்க்கும் மனநிலைக்கு இந்தச் சமூகம் ஏற்கனவே வந்துவிட்டது. இந்த கோபத்தையும் வன்மத்தையும் சற்றேனும் சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளைத்தான் இந்த அரசாங்கம் எடுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைப் 'பழி வாங்கும்' நோக்கில் சமூகத்தில் வன்முறையை ஊன்றுவது பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாகவே இதை உணர வேண்டும்.

8 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

சரியாகச் சொன்னீர்கள்...

முழுவதுமாய் ஒத்துப்போகிறேன்...

R. Gopi said...

நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.html

kishan said...

Indha Katturaiyin Saramsam Niraiveterrappadavendiya Unmai. Nangu Yosiththal Vanmuraiyai Adiyodu Olippadhu Yenbadhu Kadinam,Maraga Adhai Kattuppaduththalam Yengira Visayaththai Azahgaga Solliullergal Mani.

vinu said...

enathu 3vathu eathir saptham avalavaeeeeeeeeeee

மந்திரன் said...

//குற்றவாளியோடு சேர்த்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள்//
இது தேவைதான் . மரண தண்டனை தனி நபர் சார்ந்தது அல்ல. அது அவனை திருத்த அல்ல. அது சமூகத்தை திருத்த பயன்படுகிறது .
ஒருவன் மூலம் வரும் சந்தோசம் மட்டும் குடும்பத்திற்கு வேண்டும் .ஆனால் அவன் மூலம் வரும் துன்பம் வேண்டாம் .இது என்ன நியாயம் .

பொதுவாக மரணதண்டனை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வுக்குதான் தரப் படுகிறது . அதனால் தெரியாமல் குற்றம் செய்து விட்டான் என்று மன்னித்து விட முடியாது .
தண்டனைகள் தான் ஒரு சமுகத்தை உடனடியாக காப்பாற்றும் . போதனைகள் / மன்னிப்புகள் நீண்டகால பலனுக்கு உதவும் . சமூகம் இல்லை என்றால் பின்னர் யாருக்கு போதனைகள் / மன்னிப்புகள் கொடுக்க போகிறீர்கள் ?

rvelkannan said...

ஆழமாய் யோசிக்கவைக்கிறது உங்களின் வரிகள்

ம.தி.சுதா said...

இது கட்டாயம் ஒளிக்கப்படணும்..
என் தளத்திற்க தங்களை அன்புடன் வரவேற்கிறேன்..
mathisutha.blogspot.com

ம.தி.சுதா said...

@ மந்திரன்
ஐயா தங்கள் கருத்த சரி என்ற வைத்தக்கொள்வொம்.. அப்படியானால் ராஜீவ் கொலையில் மரணதண்டனை பெற்றவருக்கு தங்களின் பதில் என்ன..?