Sep 29, 2010

அயோத்தி விவகாரம்- வேலையற்றவர்களின் வீண் வேலை.

பெரியாரின் 132 வது ஆண்டு பிறந்த மாதத்தில் நிகழும் அசிங்கங்களைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.

மதத்தின் பெயரால் இத்தனை கீழ்த்தரமான செயல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி என்பது பற்றியெல்லாம் இதுவரைக்கும் எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாத தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வண்ணக் கலவைகளால் மெருகூட்டப்பட்ட பிரம்மாண்ட சிலைகளை நிறுத்தி வைத்து சினிமாப் பாடல்களை முழங்கவிட்டு வீட்டுக்கு வீடு பத்து,இருபது என வசூல் செய்து கொஞ்சம் செலவை விநாயகனுக்கும் மீதியை குவார்ட்டருக்கும் செலவு செய்து திளைக்கும் வாலிப வயோதிகர்களை இந்து அமைப்புக்கள் கொம்பு சீவி விடுகின்றன.

இந்து அமைப்புகளுக்கு இருக்கும் பெரும்பயம் அல்லேலூயாக்காரர்கள் வெளிநாட்டு டாலரையும் யூரோவையும் கொடுத்து சுப்பிரமணியை சூசையாகவும் மாரியம்மாளை மேரியாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் தேசம் முழுவதும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் அலசப்படுகிறது. ஒவ்வொரு இசுலாமியனும் இந்த தேசத்தின் விரோதியாகப் பார்க்கப்படுகிறான்.

இந்த தேசத்தில் நிகழும் மத சம்பந்தமான எந்த ஒரு விவாகரத்திலும் மதத்தையும் கடவுளையும் விடவும் பணமும் அரசியலுமே பிரதானமாக விளங்குகிறது. மதம் என்பதை வெறும் கருவியாகப் பயன்படுத்தி தங்களின் வயிறு வளர்க்கும் கூட்டம்தான் எங்கு திரும்பினாலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தியானம் கற்றுத்தருகிறேன், வாழ்வதை கற்றுத்தருகிறேன், பாவத்தை நீக்குகிறேன், கர்ப்பமாவதைக் கற்றுத்தருகிறேன் என்று மதவாதிகள் செய்து வரும் சில்லரைத்தனங்களை அடக்க முடியாத அரசு, அயோத்தி இடம் யாருக்கு என்ற தீர்ப்பு நாளைக்கு வருவதால் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடப்போகிறது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வேட்டைநாய்கள் அமைதிகாக்கச் சொல்லி அறிக்கை விடுகின்றன.

அரைசெண்ட் இடம் உனக்கா அல்லது எனக்கா என இந்த தேசம் முழுவதும் இலட்சக்கணக்கான சாமானியர்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பல பேர்களுக்கு அந்த பிரச்சினைக்குரிய இடம் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த அரை செண்ட் இடம் அந்த சாமானியனுக்கு அளிக்கும் பலனில் ஒரு சதவீத பலனையாவது இந்த 'அயோத்தி' ஏதேனும் ஒரு சாமானியனுக்கு அளித்திருக்கிறதா?

'அயோத்தி' நாடு முழுவதும் சர்ச்சையையும் வன்முறையையும் கிளப்பியதைத் தவிர வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த இடத்திற்காக வக்பு வாரியமும் இந்து மகா சபையும் வழக்கு நடத்துகிறார்கள். இந்த இரண்டு அமைப்புகளின் இட விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தேசத்திலும் நூற்றுப்பத்து கோடி மனிதர்களிலும் பதற்றம் தொற்றிக்கொள்ள விடுவதுதான் இந்த தேசத்தின் அவலம்.

இந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்.

இந்த மத சம்பந்தமான விவகாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய எந்த அரசியல் அமைப்பும் தயாரில்லை. ஏதேனும் விதத்தில் தனக்கு நன்மை சேர்ந்துவிடாத என கசாப்புக் கடையின் முன்பாக காத்திருக்கும் வெறிநாய்களாகவே அவை இருக்கின்றன.

விநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்கு பாதுக்காப்பு, டிசம்பர் 6 க்கு பாதுகாப்பு, இனி அயோத்தி 'உயர் நீதி மன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு', அப்புறமாக 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு' என அரசு ஆண்டு முழுவதும் 'ரெட் அலர்ட்' அளிக்கப்போகிறதா என்று தெரியவில்லை.
மத ரீதியான கட்டடங்களை விடவும் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும், தொழிற்சாலைகளும், குறைந்தபட்ச வசதிகளுடன் மயானமும்தான் நமக்கு அவசியம்.
இதில் எதையாவது ஒன்றை கட்டித் தொலையுங்கள். மனிதர்களை அமைதியாக வாழவிடுங்கள்.