Sep 30, 2010

மரணம் தின்னும் காமம்


காமத்தால் நிரம்பியிருக்கும்
தன்
குளிர்ந்த இரவொன்றில்
இவன்
மரணத்தை நினைக்கத் துவங்குகிறான்

மரணத்தின் நிறமென
அடித்து இழுக்கப்பட்ட
பிணத்தின்
அடர் சிவப்பு குருதிப் பட்டை
கொன்று
எரிக்கப்பட்ட உடற்கருமை
பீய்ச்சிய
விந்தின் வெண்மை
எதுவும் பொருந்தவில்லை

சாவின் உருவமென
ஓடிய நீரின் ஒழுங்கீனம்
நடுங்கும் நெருப்பின் நடனம்
முலைகளில் பதிந்த விரல்வரிகள்
எதுவும் ஒப்புதலில்லை

மரணத்தின் குரலென
குரல்வளையில் துளையிடப்பட்ட
குழந்தையின் வீறிடல்
நொறுங்கும் கண்ணாடியின் ஒசை
கலவியின் உச்சத்தில் முனகும்
பெண்ணின் குரல்
எதுவும் பொருத்தமில்லை

சாவின் வடிவமென
விஷமேற்றப்பட்ட ஊசி
விட்டத்தில் அசையும் நைலான் கயிறு
தரை தெரியாத மலையுச்சி
எதுவும் அமையவில்லை

நள்ளிரவு தாண்டிய
நடுங்குதலில்
மரணம் பிடிபடாத
துக்கத்தில்
இவன்
இப்பொழுது
மரணத்தை விடுத்து
காமத்தின் நுனியை தொட
முயல்கிறான்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன
காமமும்
மரணமும்
பந்தலிருந்து
நழுவிச் சொட்டும்
நீர்த்திவலைகளென.

Sep 29, 2010

அயோத்தி விவகாரம்- வேலையற்றவர்களின் வீண் வேலை.

பெரியாரின் 132 வது ஆண்டு பிறந்த மாதத்தில் நிகழும் அசிங்கங்களைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.

மதத்தின் பெயரால் இத்தனை கீழ்த்தரமான செயல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி என்பது பற்றியெல்லாம் இதுவரைக்கும் எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாத தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வண்ணக் கலவைகளால் மெருகூட்டப்பட்ட பிரம்மாண்ட சிலைகளை நிறுத்தி வைத்து சினிமாப் பாடல்களை முழங்கவிட்டு வீட்டுக்கு வீடு பத்து,இருபது என வசூல் செய்து கொஞ்சம் செலவை விநாயகனுக்கும் மீதியை குவார்ட்டருக்கும் செலவு செய்து திளைக்கும் வாலிப வயோதிகர்களை இந்து அமைப்புக்கள் கொம்பு சீவி விடுகின்றன.

இந்து அமைப்புகளுக்கு இருக்கும் பெரும்பயம் அல்லேலூயாக்காரர்கள் வெளிநாட்டு டாலரையும் யூரோவையும் கொடுத்து சுப்பிரமணியை சூசையாகவும் மாரியம்மாளை மேரியாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் தேசம் முழுவதும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் அலசப்படுகிறது. ஒவ்வொரு இசுலாமியனும் இந்த தேசத்தின் விரோதியாகப் பார்க்கப்படுகிறான்.

இந்த தேசத்தில் நிகழும் மத சம்பந்தமான எந்த ஒரு விவாகரத்திலும் மதத்தையும் கடவுளையும் விடவும் பணமும் அரசியலுமே பிரதானமாக விளங்குகிறது. மதம் என்பதை வெறும் கருவியாகப் பயன்படுத்தி தங்களின் வயிறு வளர்க்கும் கூட்டம்தான் எங்கு திரும்பினாலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தியானம் கற்றுத்தருகிறேன், வாழ்வதை கற்றுத்தருகிறேன், பாவத்தை நீக்குகிறேன், கர்ப்பமாவதைக் கற்றுத்தருகிறேன் என்று மதவாதிகள் செய்து வரும் சில்லரைத்தனங்களை அடக்க முடியாத அரசு, அயோத்தி இடம் யாருக்கு என்ற தீர்ப்பு நாளைக்கு வருவதால் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடப்போகிறது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வேட்டைநாய்கள் அமைதிகாக்கச் சொல்லி அறிக்கை விடுகின்றன.

அரைசெண்ட் இடம் உனக்கா அல்லது எனக்கா என இந்த தேசம் முழுவதும் இலட்சக்கணக்கான சாமானியர்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பல பேர்களுக்கு அந்த பிரச்சினைக்குரிய இடம் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த அரை செண்ட் இடம் அந்த சாமானியனுக்கு அளிக்கும் பலனில் ஒரு சதவீத பலனையாவது இந்த 'அயோத்தி' ஏதேனும் ஒரு சாமானியனுக்கு அளித்திருக்கிறதா?

'அயோத்தி' நாடு முழுவதும் சர்ச்சையையும் வன்முறையையும் கிளப்பியதைத் தவிர வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த இடத்திற்காக வக்பு வாரியமும் இந்து மகா சபையும் வழக்கு நடத்துகிறார்கள். இந்த இரண்டு அமைப்புகளின் இட விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தேசத்திலும் நூற்றுப்பத்து கோடி மனிதர்களிலும் பதற்றம் தொற்றிக்கொள்ள விடுவதுதான் இந்த தேசத்தின் அவலம்.

இந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்.

இந்த மத சம்பந்தமான விவகாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய எந்த அரசியல் அமைப்பும் தயாரில்லை. ஏதேனும் விதத்தில் தனக்கு நன்மை சேர்ந்துவிடாத என கசாப்புக் கடையின் முன்பாக காத்திருக்கும் வெறிநாய்களாகவே அவை இருக்கின்றன.

விநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்கு பாதுக்காப்பு, டிசம்பர் 6 க்கு பாதுகாப்பு, இனி அயோத்தி 'உயர் நீதி மன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு', அப்புறமாக 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு' என அரசு ஆண்டு முழுவதும் 'ரெட் அலர்ட்' அளிக்கப்போகிறதா என்று தெரியவில்லை.
மத ரீதியான கட்டடங்களை விடவும் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும், தொழிற்சாலைகளும், குறைந்தபட்ச வசதிகளுடன் மயானமும்தான் நமக்கு அவசியம்.
இதில் எதையாவது ஒன்றை கட்டித் தொலையுங்கள். மனிதர்களை அமைதியாக வாழவிடுங்கள்.

Sep 2, 2010

மரண தண்டனை

மரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும் போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்துவிடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையின் ஆதரவாளர்கள்(இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் அரசும், நீதியமைப்பும் அடக்கம்) மரண தண்டனை இந்தச் சமூகத்தில் உருவாக்கும் விளைவு என எதனை குறிப்பிட முடியும்?

தண்டனைகள் என்பது குற்றவாளிகள் தனது குற்றங்களை குறித்து மனம் வருந்துவதற்கான வாய்ப்பாகவும் அவன் திருந்தி வாழ்வதற்கான வழியினை உருவாக்குபவனவாகவுமே இருக்க வேண்டும். மரணத்தின் பெயரால் குற்றவாளிளை பழிவாங்குவதை பக்குவப்பட்ட அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது. மனிதனின் அடிப்படை உரிமையான 'வாழ்தலை' நிராகரிக்கும் அரசு பக்குவப்பட்ட அரசாக இருக்க முடியாது.

தண்டனைகளுக்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. ஒரு குற்றத்தை செய்வதற்கு முன்னதாக அவன் தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று பயந்து குற்றத்தைச் செய்ய தயங்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதனால் இந்தச் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை முழுவதுமாக தவறு என்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த பயத்தை மரண தண்டனைதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை.

மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமானது. குற்றவாளிக்கான அதிகபட்ச தண்டனை என்பது மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வேறு விதமான தண்டனைகள் மூலமும் குற்றவாளியை தண்டிக்க முடியும்.

ஒருவனை அரசாங்கமும் சட்டமும் சேர்ந்து கொல்வது என்பது அந்தக் குற்றவாளியை மட்டும் தண்டிப்பதில்லை. குற்றவாளி உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி என்று தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்யும் காலத்திலும் தண்டனை நிறைவேற்றப்படும் வரையிலும் குற்றவாளியோடு சேர்த்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றவாளியுடன் சேர்த்து அவனது குடும்பம் தண்டிக்கப்படுதலை சட்டம் எந்தவிதத்தில் நியாயப்படுத்தும்?

வெளிநாடுகளில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மின் நாற்காலி, விஷ ஊசி,விஷவாயு அறை என்ற பல முறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால் எந்த முறையானாலும் ஒரு மனிதனை சட்டம் மற்றும் நீதியின் பெயரால் கொல்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல். குற்றம் புரிந்தவனை அரசாங்கம் திட்டமிட்டு கொல்லுதல் என்பதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடிவதில்லை.

குற்றவாளிகள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியற்றவர்கள் என இந்த சட்டம் முடிவு செய்கிறது என்றாலும் எந்தக் குற்றவாளியும் தனது மரண தண்டனை நிறைவேறும் காலத்தில் தனது குற்றங்களுக்காக மனம் வருந்துபவனாகவே மாறியிருக்கிறான். அவன் குற்றங்களுக்காக மனம் வருந்துபவன் எனும் போதே அவன் வாழ்வதற்கான தகுதியுடையவனாக மாறிவிடுகிறான்.

சமீபத்தில் மும்பை தீவிரவாத தாக்குதல் கசாப்புக்கும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்தான செய்திகளின் கீழ் இருந்த பின்னூட்டப்பகுதிகளில் மிக அதிகப்படியானவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'தீர்ப்பு சரி', 'கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்', 'தீயில் இட வேண்டும்' போன்ற இன்னபிற கருத்துக்களையும் எழுதியிருந்தார்கள்.

மரண தண்டனைகள் இந்தச் சமூகத்தில் உருவாக்கும் வன்முறையாகவே இதனைப் பார்க்கிறேன். "மன்னிப்பு" என்பதற்கான எந்தவிதமான மனநிலையும் நம் மக்களிடையே காண முடிவதில்லை. பேருந்தில் தன் காலை மிதித்தவனைக் கூட ஜென்மவிரோதியாகவே பார்க்கும் மனநிலைக்கு இந்தச் சமூகம் ஏற்கனவே வந்துவிட்டது. இந்த கோபத்தையும் வன்மத்தையும் சற்றேனும் சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளைத்தான் இந்த அரசாங்கம் எடுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைப் 'பழி வாங்கும்' நோக்கில் சமூகத்தில் வன்முறையை ஊன்றுவது பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாகவே இதை உணர வேண்டும்.