Jul 3, 2010

உதிரிகள் 03-07-2010: சாரு,மாண்ட்பெல்லியர்,கவிதை

திரிகளைத் தொடரலாமே என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்த நண்பர்களுக்கு நன்றி. (நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கும் நன்றி என்று எழுதினால் நம்பவா போகிறீர்கள்? அதனால் குத்துமதிப்பாக நண்பர்களுக்கு நன்றி என்று முடித்துக் கொண்டேன்).

நான் எழுதுவதில் பெரும்பாலானவற்றிற்கு தாமதமான எதிர்வினை கிடைக்கிறது. சுஜாதா குறிப்பிட்டது போல, வலைப்பதிவில் எழுதிவிட்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் வரும் பின்னூட்டத்திற்கு காத்துக் கொண்டிருந்தால் நான் ஏமாந்து விடுவேன். அனேகமாக ஒன்றுமே வந்திருக்காது. நான் எப்பொழுதோ எழுதியதற்கு அவ்வப்போது மின்னஞ்சலோ அல்லது பின்னூட்டமோ விழுந்து கிடக்கும் அவ்வளவுதான்.

எழுதுபவர்கள் இரண்டு வகை. தனக்கு வாசகர்கள் நிறைய வேண்டும் என்பது முதல் வகை. நான் எழுதுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன் வாசிப்பவர்கள் வாசிக்கட்டும், யாருமே வாசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்பது இரண்டாம் வகை. இரண்டாவது வகையில் எனக்கு ஒப்புதலில்லை. எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் 'வாசிக்கும் தன்மையுடன்' (ரீடபிள்) ஆகக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையிலேயே எனக்கு சுஜாதாவை பிடிக்கிறது. மற்ற பலருக்கும் அவரைப் பிடிக்கிறது.

ரீடபிளாகத் தருகிறேன் என்று தான் நினைத்தையெல்லாம் எழுதி ரம்பத்தை வைத்து கழுத்தை அறுக்கும் எழுத்தாளர்களோடும் நாம் சமகாலத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. உதாரணம் சாரு நிவேதிதா. தெஹல்காவில் வெளியான கதையொன்றை தனது பதிவில் வெளியிட்டிருந்தார். 'முகத்தின் எதிரே மரண நிழல் படிந்ததும் முகச்சவரம் செய்து கொண்டு வெள்ளைக் கொடி பிடித்து சரணடையச் சென்று விட்டான்' என்ற ஒரு வரி இருக்கிறது. (இது யாரையும் குறிப்பிடவில்லை என்ற லேபிளோடு)

மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற பயத்தில் இருப்பவன் சவரம் செய்து கொள்வது எப்படிச் சாத்தியம்? மரணம் எந்தவிதமான அசைவையும் தனக்குள் உருவாக்க இயலாத போதுதான் ஒருவன் முகச்சவரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட முடியும். அப்படி சலனம் அடையாதவன் சரணடைய வேண்டிய அவசியமே எழுவதில்லை.

மரண நிழல் படியும் போது சவரம் செய்ய வேண்டுமானால் ஏதாவது சாமியாரிடம் மனதைச் சாந்தியடையைச் செய்யும் வித்தையைக் கற்றிருக்க வேண்டும், சாமியாரிடம் வித்தை கற்றுக் கொள்ளும் எழுத்தாளருக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் எழுத வேண்டும், இல்லையெனில் மொன்னைச் சமூகம் கிட்டத்தட்ட மறந்து போன ஒரு விஷயத்தில் சலனத்தை உண்டாக்கி கவனத்தை தன் பக்கம் திருப்பும் வித்தைகளைச் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுவது நல்லது என்னும் கட்சியைச் சார்ந்தவன் நான்.
===
இன்று இரவு மாண்ட்பெல்லியர் கிளம்ப வேண்டும். ஏற்கனவே சென்று வந்த ஊர்தான். பாரீஸிலிருந்து எந்நூறு கிலோ மீட்டர் தெற்கில் இருக்கிறது. ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும். வேலை நாட்களைத் தவிர்த்து அடுத்த சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் முழுமையாக எனக்கே எனக்கானதாக இருக்கிறது. பாரீஸ் செல்வதற்கான உத்தேசமும் உண்டு. ஓரிரு நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள்.
திட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில் பாரீஸ். இல்லையெனில் மாண்ட்பெல்லியருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு ஊரைச் சுற்ற வேண்டும். பழங்கால ரோமானிய கட்டடங்கள் நிறைந்த நிம்ஸ் என்ற ஊரை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது அதனால் வேறு ஏதேனும் இடங்களைச் சொல்லுங்கள் என்றதற்கு Cab d'Agde என்ற இடம் பற்றிய பரிந்துரையை உடன் வேலை செய்யும் கிளென் செய்தார். இடம் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள கூகிளாரை துணைக்கு அழைத்துக் கொள்ளவும்.
===
கவிதை

மின்னற்பொழுதிற்கும்
சற்றே குறைவான
கணத்தில்
தன் பாடல்களை மறந்துவிட்டான்
குழந்தைகளுக்கான பாடகன்.

பைத்தியமென திரியும்
அவனது
வெறுமையை நிரப்ப
தேவைப்படுகிறது
ஒரு குழந்தையின் முத்தம்
அல்லது
ஒரு இழுப்பு பீடிச் சுவை.

4 எதிர் சப்தங்கள்:

செல்வராஜ் ஜெகதீசன் said...

'கற்றதும் பெற்றதும்' ஸ்டைலில் இது நன்றாக இருக்கிறது மணிகண்டன்.
நிறைய தொடருங்கள். பயணம் நல்லபடி அமைய வாழ்த்துகள். ('துக்கள்' தவறாமே!)

பரிதி நிலவன் said...

//முகத்தின் எதிரே மரண நிழல் படிந்ததும் முகச்சவரம் செய்து கொண்டு வெள்ளைக் கொடி பிடித்து சரணடையச் சென்று விட்டான்' என்ற ஒரு வரி இருக்கிறது.//

சாரு அவரை மாதிரியே மற்றவரும் கொள்கையை அடகு வைத்து விட்டு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று ஜல்லி அடிப்பார்கள் என்று நினைத்து விட்டார் போல் இருக்கிறது. இந்த கருமாந்திரத்தை எல்லாம் படிக்க வேண்டும் என்று நம் தலையில் எழுது வைத்திருக்கிறது.

anand said...

ஒருவேளை நிறைய தாடி வளர்ந்திருக்கலாம். அன்ஈஸியா ஃபீல் பண்ணி ஷேவ் பண்ணிருக்கலாம்.சரணடைஞ்சபிறகு மீடியாக்களில் மூஞ்சி பளிச்னு தெரியணுமுல்ல.

kishankumar said...

Arumaiyana varigal mani.

I like very much...