Jul 29, 2010

வெறும் சூசகம்


நான் எதையும் விரைவில் சூசகமாக உணர்ந்து கொள்பவன் என்று நண்பர்கள் கூறுவார்கள். அதற்கு உதாரணமாகச சென்ற வியாழக்கிழமை நடந்த- நான் சம்பந்தப்பட்ட-ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறார்கள்.

அன்று காலை நான் திகில் நிறைந்த மர்ம நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். நல்ல பகல் நேரம்தான். இருந்தாலும் ஏதோ ஒரு சூசக உணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். இரத்தவெறி பிடித்த ஒரு கொலைகாரன் பெரிய கடாரியுடன் அடுக்களைக்குள் இருப்பதாகவும், நான் அங்கே நுழைந்ததும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கடாரியால் என் முதுகில் குத்துவான் என்றும் அந்த உணர்வு தெரிவித்தது. அடுக்களை வாசலுக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தேன். என் கண்ணைத் தப்பி யாரும் செல்ல வேறு எந்த வழியும் இல்லை. இவ்வளவு இருந்தும் கொலையாளி அடுக்களைக் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பதாகவே என் மனதுக்கு தோன்றிக் கொண்டிருந்தது.

அந்த உணர்வுக்கு நான் முற்றிலும் ஆட்பட்டிருந்தேன். அடுக்களைக்குள் செல்லப் பயமாயிருந்தது. சாப்பாட்டு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கோ உள்ளே செல்லாமல் முடியாது. இந்தக் கவலையில் ஆழ்ந்திருந்தபோது வாசலில் மணி அடித்தது.

"வாருங்கள்" கத்தினேன். "கதவு திறந்துதான் இருக்கிறது".

வீட்டுக்காரர் உள்ளே வந்தார். கையில் இரண்டு மூன்று கடிதங்கள் இருந்தன.
"தூங்கிவிட்டேன்" என்றேன். "அடுக்களைக்குப் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வருவீர்களா?"

"தாராளமாக" என்றார் வீட்டுக்காரர். அடுக்களைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். "ஆ" என்ற அலறலும், பாத்திரங்களை உருட்டித் தள்ளியபடி ஓர் உடல் விழும் ஓசையும் கேட்டன. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து அடுக்களைக்கு ஓடினேன். முதுகில் இறங்கிய ஒரு பெரிய கடாரியுடன் பாதி உடல் மேஜை மேல் கிடக்க, வீட்டுக் காரர் இறந்து கிடந்தார். அடுக்களையில் கொலைகாரன் யாருமில்லை எனத் தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அமைதியடைந்தேன்.

பாருங்கள். எல்லாம் சூசக உணர்வுதான்.
====
ஃபெர்ணாண்டோ ஸோரண்டினோ(Fernando Sorrentino) எழுதிய ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்ற தொகுப்பில் இருந்து.(தமிழில்: எம்.எஸ், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்)

Jul 28, 2010

நித்யானந்தன்- மெழுகுச் சிலை


பெங்களூரு நகரில் நித்யானந்தனுக்கு மெழுகில் சிலை செய்து நான்கு கிலோ மீட்டருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து ஒரு பக்த சிகாமணி இந்தச் சிலை செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். பக்த சிகாமணி செய்ததா அல்லது நித்யானந்தனின் ஆசிரமமே செய்ததா என்பதைவிட பெங்களூரு போன்ற மாநகரில் இவனுடைய சிலையின் ஊர்வலத்தை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிக்க எந்த அமைப்போ அல்லது தனிமனிதனோ இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒளிந்து கொண்டிருந்தவனை இமாச்சலப் பிரதேசம் சென்று கைது செய்த காவல்துறை இதை எப்படிப் பொறுத்துக் கொண்டது? பக்கம் பக்கமாக இவனைப் பற்றி எழுதிக் கிழித்த ஊடங்கள் என்ன செய்து கொண்டிருந்தன
என்று என் அரை மண்டையில் தோன்றுகிறது.

நித்யானந்தன் தவறு செய்வதாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவன் ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஸ்தீரிலோலனாக இருந்திருக்கிறான் என்பது. இன்றைக்கு ஆன்மிகவாதி என்றாலே அவன் அயோக்கியத்தனம் செய்பவன் என்று உறுதியாக நம்புவதால் மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக அவன் மீது கோபம் எதுவுமில்லை.

ஆனால் பணக்காரர்களால், ஊடகங்களால், எழுத்தாளனால், பிரபலங்களால் கடவுளுக்கு இணையானவனாக கட்டமைக்கப்பட்ட ஒருவனது முகத்திரை கிழிந்து தொங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த சாமியார் ஒருவனை தூக்கிப் பிடிக்க ஓரிரு வருடங்களுக்காவது தயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் நாய்கள் கூட அவனது முகத்தில் சிறுநீர் கழித்துச் சென்ற காட்சி மறைவதற்குள்ளாக அவன் மீண்டும் கடவுள் வேடம் ஏற்பதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு கயமைத்தனத்தில் சிக்கிக் கொண்டே அதே பொறுக்கியை அவனது ஆட்களே தாங்கிப் பிடிக்கிறார்கள். அவனது முழு உருவ மெழுகுச் சிலையை நான்கு கிலோ மீட்டருக்கு ஊருவலமாக எடுத்து வருகிறார்கள்.
முதலில் நான் உத்தமன் என்றான், பின்னர் நடிகையை நல்ல பக்தை என்றான். இன்று அவனது ஆசிரம நிர்வாகி ஒருவர் நடிகையை ஆசிரமத்திற்குள் அனுமதிப்போம் என்கிறார்.

காமத்தின் அடிப்படையில் இச்சமூகம் துரோகியாக, கயவனாக, காமுகனாக உருவகித்த ஒருவன், எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அதே பல்லிளிப்புடன் மூன்றே மாதங்களில் காட்சி தருகிறான். குரு பெளர்ணமி நடத்துகிறேன் அனுமதி இலவசம் கலந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறான்.

காமுகன் என்றும் ஆன்மிக துரோகி என்றும் நிரூபிக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து மிக வேகமாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். இனி இந்தச் சமூகம் இவனைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மறந்து போகும். இவனது காலடியில் பணத்தைக் கொட்டி சேவகம் செய்வதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிடும்.

அத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.

சாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.

திருமணத்திலும், இரவுக் களியாட்டத்திலும், அடுத்தவன் மனைவியுடனான சல்லாபத்திலும் காமம்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை முரட்டுத்தனமாக எதிர்க்கும் சமூகம் மற்றதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறது.

காமத்தை உள்ளுக்குள் ரசித்து அனுபவிக்கும் தன்மைதான் இந்தவிதமான அத்தனை செய்திகளையும் பரபரப்பாக்குகிறது. காமத்தின் பரபரப்பு புணர்ச்சியில் அடங்குவதைப் போலவே இந்தக் காமம் சார்ந்த செய்திகளின் பரபரப்பும் ஓய்ந்துவிடுகின்றன.

இனி நித்யானந்தன் வழக்கம்போலவே ஆன்மிகச் சுடரொளியுடன் நகர்வலம் வருவான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். நமக்குள் எத்தனை சிக்கல்கள்?

Jul 21, 2010

ரமேஷ்-பிரேமின் "உப்பு" தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள்

(1)
பறம்பு மலை
பேரரசர்களால் சுற்றி வளைக்கப்பட்டது

கபிலன்
குழந்தைகளை அள்ளிக் கொண்டு
ரகசிய மலைப்பாதை வழியாக வெளியேறுகிறான்

மலையுச்சிக் குடிலில்
பாரி
சிறைபட மறுத்து
கபிலன் விட்டுச் சென்ற
எழுத்தாணியால் தொண்டைக் குழியில்
குத்திக்கொள்கிறான்

தமிழ் நிலத்தின்
முதல் காவியம் எழுதப்படுகிறது

(2)
அழகு பற்றிய எல்லாவிதமாயைகளும் உடைந்துவிட்டன
அவளும் அவனும் மலங்கழிக்க
நிலவுக்குச் சென்ற அன்று

Jul 3, 2010

உதிரிகள் 03-07-2010: சாரு,மாண்ட்பெல்லியர்,கவிதை

திரிகளைத் தொடரலாமே என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்த நண்பர்களுக்கு நன்றி. (நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கும் நன்றி என்று எழுதினால் நம்பவா போகிறீர்கள்? அதனால் குத்துமதிப்பாக நண்பர்களுக்கு நன்றி என்று முடித்துக் கொண்டேன்).

நான் எழுதுவதில் பெரும்பாலானவற்றிற்கு தாமதமான எதிர்வினை கிடைக்கிறது. சுஜாதா குறிப்பிட்டது போல, வலைப்பதிவில் எழுதிவிட்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் வரும் பின்னூட்டத்திற்கு காத்துக் கொண்டிருந்தால் நான் ஏமாந்து விடுவேன். அனேகமாக ஒன்றுமே வந்திருக்காது. நான் எப்பொழுதோ எழுதியதற்கு அவ்வப்போது மின்னஞ்சலோ அல்லது பின்னூட்டமோ விழுந்து கிடக்கும் அவ்வளவுதான்.

எழுதுபவர்கள் இரண்டு வகை. தனக்கு வாசகர்கள் நிறைய வேண்டும் என்பது முதல் வகை. நான் எழுதுவதை எழுதிக் கொண்டிருக்கிறேன் வாசிப்பவர்கள் வாசிக்கட்டும், யாருமே வாசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்பது இரண்டாம் வகை. இரண்டாவது வகையில் எனக்கு ஒப்புதலில்லை. எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் 'வாசிக்கும் தன்மையுடன்' (ரீடபிள்) ஆகக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையிலேயே எனக்கு சுஜாதாவை பிடிக்கிறது. மற்ற பலருக்கும் அவரைப் பிடிக்கிறது.

ரீடபிளாகத் தருகிறேன் என்று தான் நினைத்தையெல்லாம் எழுதி ரம்பத்தை வைத்து கழுத்தை அறுக்கும் எழுத்தாளர்களோடும் நாம் சமகாலத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. உதாரணம் சாரு நிவேதிதா. தெஹல்காவில் வெளியான கதையொன்றை தனது பதிவில் வெளியிட்டிருந்தார். 'முகத்தின் எதிரே மரண நிழல் படிந்ததும் முகச்சவரம் செய்து கொண்டு வெள்ளைக் கொடி பிடித்து சரணடையச் சென்று விட்டான்' என்ற ஒரு வரி இருக்கிறது. (இது யாரையும் குறிப்பிடவில்லை என்ற லேபிளோடு)

மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற பயத்தில் இருப்பவன் சவரம் செய்து கொள்வது எப்படிச் சாத்தியம்? மரணம் எந்தவிதமான அசைவையும் தனக்குள் உருவாக்க இயலாத போதுதான் ஒருவன் முகச்சவரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட முடியும். அப்படி சலனம் அடையாதவன் சரணடைய வேண்டிய அவசியமே எழுவதில்லை.

மரண நிழல் படியும் போது சவரம் செய்ய வேண்டுமானால் ஏதாவது சாமியாரிடம் மனதைச் சாந்தியடையைச் செய்யும் வித்தையைக் கற்றிருக்க வேண்டும், சாமியாரிடம் வித்தை கற்றுக் கொள்ளும் எழுத்தாளருக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் எழுத வேண்டும், இல்லையெனில் மொன்னைச் சமூகம் கிட்டத்தட்ட மறந்து போன ஒரு விஷயத்தில் சலனத்தை உண்டாக்கி கவனத்தை தன் பக்கம் திருப்பும் வித்தைகளைச் செய்யாமல் அமைதியாக இருந்துவிடுவது நல்லது என்னும் கட்சியைச் சார்ந்தவன் நான்.
===
இன்று இரவு மாண்ட்பெல்லியர் கிளம்ப வேண்டும். ஏற்கனவே சென்று வந்த ஊர்தான். பாரீஸிலிருந்து எந்நூறு கிலோ மீட்டர் தெற்கில் இருக்கிறது. ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும். வேலை நாட்களைத் தவிர்த்து அடுத்த சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் முழுமையாக எனக்கே எனக்கானதாக இருக்கிறது. பாரீஸ் செல்வதற்கான உத்தேசமும் உண்டு. ஓரிரு நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள்.
திட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில் பாரீஸ். இல்லையெனில் மாண்ட்பெல்லியருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு ஊரைச் சுற்ற வேண்டும். பழங்கால ரோமானிய கட்டடங்கள் நிறைந்த நிம்ஸ் என்ற ஊரை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது அதனால் வேறு ஏதேனும் இடங்களைச் சொல்லுங்கள் என்றதற்கு Cab d'Agde என்ற இடம் பற்றிய பரிந்துரையை உடன் வேலை செய்யும் கிளென் செய்தார். இடம் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள கூகிளாரை துணைக்கு அழைத்துக் கொள்ளவும்.
===
கவிதை

மின்னற்பொழுதிற்கும்
சற்றே குறைவான
கணத்தில்
தன் பாடல்களை மறந்துவிட்டான்
குழந்தைகளுக்கான பாடகன்.

பைத்தியமென திரியும்
அவனது
வெறுமையை நிரப்ப
தேவைப்படுகிறது
ஒரு குழந்தையின் முத்தம்
அல்லது
ஒரு இழுப்பு பீடிச் சுவை.