Jun 30, 2010

மருத்துவமனைகள்: துண்டிக்கப்பட்ட உலகங்கள்

மூன்று வயதுக் குழந்தைக்கு டெங்குக் காய்ச்சல் என்றார்கள். குழந்தைக்கு நோய் முற்றிவிட்டது என்றும், மிக அதிகமான இரத்த இழப்பு என்பதால் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் முன்பே சொல்லியிருந்தார்கள். ஒரே ரத்தவகை உடையவர்கள் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம்.

நேராகச் சென்று கொண்டிருக்கும் நெரிசலான நகரச் சாலையில் திடீரென உள்வாங்கித் திரும்பி இருந்தது மருத்துவமனை. மருத்துவமனைக்கு அருகே செல்வது வரையிலும் இல்லாத பதட்டம் நுழைவாயிலைத் தாண்டி நுழையும்போது விரல்களின் வழியாக பரவத் துவங்குகிறது. முகத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சிக் களையை மறைப்பதற்கான எத்தனிப்புகளை மனம் மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. வாடித் தொங்கிய முகங்களோடும், அழுது வீங்கிய கண்களோடும் மனிதர்கள் தொடர்ந்து தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிரில் வரும் மனிதர்களைப் பார்ப்பதற்கான திராணியோ விருப்பமோ இல்லாதவர்கள் காற்றைப் போல நகர்ந்துவிடுகிறார்கள்.

முந்தின நாள் இரவு வரையிலும் புன்னகைத்துக் கொண்டிருந்தவரின் குடும்பத்தை நெஞ்சுவலியோ, பக்கவாதமோ அல்லது பெயரில்லாத வேறொரு நோயோ துன்பத்தின் முகமூடியை அணிந்து வந்து கசங்கச் செய்கிறது. வாரியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதுவரையிலும் இருந்த குடும்பத்தின் திட்டங்கள் வலுக்கட்டாயமாக வேறு வடிவத்தைப் பெற்றுக் கொள்கின்றன.

தன் வாழ்நாளின் அதிகபட்ச கொடூர கணங்கள் என்பது என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது யோசனை தோன்றும். காதல் தோல்வியடைவது என்றும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உழல்வது என்றும், தன் நெருங்கிய உறவொன்றை இழப்பது என்றும், உறுப்பொன்று செயல் இழப்பது என்றெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால் இவை எதுவுமே திருப்தியான பதிலாக இருந்ததில்லை.

இந்த நொடியில், மனிதனுக்குத் தான் வாழும் காலத்தில் கடக்கும் மிக வேதனையான கணம் என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினருக்காக வெளியில் காத்திருப்பதுதான் என்று தோன்றுகிறது. நகரத்தின் மருத்துவமனைகள் உயிரைக் காப்பதற்கென கட்டப்பட்டிருக்கும் கொள்ளிவாய் கூடாரங்கள். எந்தவிதமான தாட்சண்யமும் பார்க்காத மிக மூர்க்கத்தனமான நாட்டாமைகள். இயந்திரங்களின் இலாவகத்தில் மனிதர்களைக் கையாள்கிறார்கள்.

நம் பிரியத்திற்குரியவர் நொறுங்கிக் கிடக்கும் அறையிலிருந்து வெளியே வரும்போது முகத்தில் அறையும் காற்று கூடவும் கண்களில் நீரைக் கசியச் செய்கின்றன. இந்த உலகமே அன்பற்ற இருண்ட பாலைவனமாகத் தோன்றுகிறது. வேதனையின் களியாட்டங்கள் மனிதர்களின் வாழ்வில் திடீரென நிகழ்த்தும் பிரளயம்தானே மருத்துவமனை வாசம்.

பணம் இல்லாதவர்கள் கொள்ளிவாய்க் கூடாரங்களைத் தவிர்த்துவிடுகிறார்கள். பணம் இருப்பவர்கள் தங்களிடம் இருப்பதில் கொஞ்சத்தை உயிருக்காகச் செலவழிக்கிறார்கள். இருந்தும் இல்லாதவர்கள் இருப்பதை எல்லாம் கொடுத்து பொருளாதாரத்தின் தொடக்கத்திற்குத் திரும்பவும் வருகிறார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக சில கணங்கள் நின்றிருந்தபோது ஒருவன் தன் தந்தையின் சிறுநீரகம் இரண்டும் செயல்படவில்லை என தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் என்று புலம்பிய வேறொருவனிடம், யாரேனும் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த செவிலிக்கு அப்பொழுதுதான் செல்போன் சிணுங்கியது- செவிலிப் பெண்ணின் காதலனாக இருக்கலாம், ஓரமாகச் சென்று சிரித்துக் கொண்டு வந்தாள். கல்லூரிப் பெண்ணொருத்திக்கு விபத்தில் பலத்த அடியாம். ஒரு குடும்பமும் கொஞ்சம் மாணவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். விஷம் அருந்தியவன் இன்னமும் அபாய கட்டத்தில்தான் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை அவசரத்திலும் மருத்துவமனை வழக்கம் போல மிக இயல்பாக இயங்குகிறது. ஊழியர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள். செவிலியர்கள் மிக இயல்பாகத் தன் செவிலியத் தோழியிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த செவிலியர் தன் பணியில் ஒத்துழைக்காதது பற்றியும், மருத்துவரோடான தனது சம்பாஷணைகள் பற்றியெல்லாம் உற்சாகத்தோடு அளாவுகிறார்.

குழந்தைப் பிறந்ததை பார்க்கவும்,சான்றிதழ்கள் பெறுவதற்காகவும் வந்து செல்லும் சிலர் பளிச்சென்றற முகத்தோடு, மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், செல்போனில் குழாவிய படியும் இயல்பின் சிறு பிசிறின்றி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரியமானவர்கள் வெளியில் நின்று வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் கடவுளராகவும் செவிலியர் பூசாரிகளாகவும் பெரும் உருவம் பெறுகிறார்கள். குறைந்தபட்சம் உயிரைக் காப்பாற்ற முடியுமா என்று ஒருவரின் மனைவி மன்றாடிக் கொண்டிருந்தார். கை கால் அசைக்க முடியாது, பேச முடியாது ஆனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்கிறார் மருத்துவர். உயிரோடு கணவரைப் படுக்கையில் வைத்து இறுதிக்காலம் வரை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் மனைவி.

அன்பின் உச்சத்தில் அந்தக் கணத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உதிரும் சொற்களா அல்லது தீர்க்கமாக யோசித்து வெளியே பிதுங்கும் வார்த்தைகளா அவை?

இந்தத் துக்கங்கள் நமக்கும் நேர்ந்துவிடுமோ என்று ஒரு கணம் மனம் பதைக்கிறது. அப்படியெல்லாம் நடந்துவிடாது என்று நம்பிக்கையைத் தானாக மனம் உருவாக்கி சற்று ஆறுதல்படுத்திக் கொள்கிறது. இந்த இடத்தை தாண்டிவிடுவது சற்று ஆசுவாசம் தரலாம். நகர்ந்துவிடுவது உத்தமம் என்று மனம் ஆசைப்படுகிறது. அது, இருள் வெளியேறுவதைப் போல சலனமில்லாமல் மருத்துவமனையை நீங்குவதற்கு தருணத்தை எதிர்பார்க்கத் துவங்குகிறது.

மருத்துவமனையின் சுவரைத் தாண்டி வந்துவிட்டால் தென்படும் உலகம் மிக இயல்பானது. இந்தக் கட்டிடத்திற்குள் உயிர்கள் பணயமாக்கப்படுகின்றன என்ற எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாமல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவசரத்தில் அடுத்த ரயிலைப் பிடிக்கவோ அல்லது தவறவிட்டுவிட்ட பர்ஸைத் தேடியோ நகரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. வெளியில் வந்த சில கணங்களில் அவசர உலகம் நம்மையும் அள்ளியெடுத்து தன் அகோர வாய்க்குள் போட்டுக் கொள்கிறது. நாமும் ஓடத் துவங்கிவிடுகிறோம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு. நகரச் சாலைகளை அடித்துச் சுத்தம் செய்துவிட்டு மறைந்துவிடும் மழையைப் போல நாம் மறந்துவிடுகிறோம்.

மரணம் கொடுமையானதா அல்லது மரணத்தைப் பற்றி நினைப்பது கொடுமையானதா என்ற கேள்விக்கு இந்தக் கணத்தில் என்னிடம் இருக்கும் பதில், மரணத்தைப் பற்றி நினைப்பதுதான் கொடுமையானது என்பது. ஒரு வேளை மரணிக்கும்போது கேட்டால் மாற்றிச் சொல்லக் கூடும்.
நன்றி: உயிரோசை