Jun 9, 2010

புலி, பண்ணாரி வனம்

ஈரோட்டில் 29-05-2010 இல் சேகர் தத்தாத்ரியின் "புலி: ஒளிரும் ரகசியங்கள்" என்ற குறும்படத்தின் திரையிடலுக்கு கோவையைச் சேர்ந்த ஓசை என்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சேகர் தத்தாத்ரியும் வந்திருந்தார்.சூழலியல் சார்ந்த ஆவணப்படங்களை எடுத்து வருபவர் என்ற அளவில் எனக்கு இந்தப் பெயர் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் மிக முக்கியமான பெயரும் கூட.

அரங்கத்தில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான இடம் குழந்தைகளால் நிரப்பப்பட்டிருந்தது.

படம் 40 நிமிடங்களுக்கு ஓடுகிறது. புலி தன் இரையை வேட்டையாடல், இணை சேர்தல்,குட்டிகளோடான அதன் உறவு, காட்டில் புலிகளின் அன்றாட செயல்பாடுகள் என்று நகரும் படத்தில் புலிகள் தற்சமயம் எதிர்கொள்ளும் வாழ்வு சார்ந்த வேதனைகளை சற்று விரிவாக அலசுகிறார்கள். வேட்டையாளர்களின் கருணையற்ற தன்மை குறும்படத்தில் விரிவாக்கப்படுகிறது.

படம் முடிந்த பிறகு சேகர் தத்தாத்ரியுடனான உரையாடல் நிகழ்ந்தது.

தரவுகள் அதிகமாகவும் பிரச்சார யுக்திகள் குறைவாகவும் இருத்தல் வேண்டும் என்று ஆவணப்படம் என்பதற்கு என்னளவில் ஒரு வரையறை இருக்கிறது. அப்படி எந்த வரையறையும் இருக்கத் தேவையில்லை என்பது சேகர் தத்தாத்ரியின் கூற்று. இந்தக் குறும்படம் என் வரையறைக்கு நேர் எதிர்.

புலி குறித்தான புரிதலையும், அவை மீதான கருணையையும் இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்கும் உருவாக்கியிருந்தது என்பது உறுதி.

மேலதிக தகவல்களை பின்வரும் தளத்தில் அறியலாம்: http://truthabouttigers.org/ -புலி: ஒளிரும் ரகசியங்கள் குறும்படத்தை இந்தத் தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக அனுப்பியும் வைக்கிறார்கள்.
===
வழக்கமாக பெங்களூரிலிருந்து செல்லும் போது ஈரோட்டில் இறங்கி கோபி செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டும். அந்த இரவு நேரத்திலும் பேருந்தில் இடம் பிடிக்க துக்கினியூண்டு சண்டை நடக்கும். இந்த வாரம் இரவில் ஒன்றே முக்காலுக்கு வந்த மைசூரு பேருந்தில் வீரப்பிரதாபங்களை காண்பித்து ஒரு இடத்தை பிடித்துவிட்டேன்.

வழக்கமாக ஏழு மணி நேரப் பயணத்தில் உறக்கம் வருவதில்லை. விஜய் போக்கிரியாகவோ அல்லது சிவகாசியாகவோ வந்து மகிழ்விப்பார். மைசூரு பேருந்தில் இதற்கு வழியில்லாததால் கண்ணைச் சுழற்றியது. விழிப்பு வந்த போது காட்டுக்குள் பேருந்து சென்று கொண்டிருந்தது. "நடத்துனரிடம் கோபி வந்துடுச்சா சார்?" என்றதற்கு, "கோபி போச்சு, சத்தி போச்சு, பண்ணாரி வர்து" என்று தமின்னடத்தில் மாத்தாடினார்.

பண்ணாரி கோயிலில் இறங்கி நின்றால் சுற்றிலும் அடர்ந்த இருட்டுதான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் மைசூரிலிருந்து வந்த இன்னொரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

என்னுடைய நல்ல நேரமாகத்தான் இருக்க வேண்டும். பண்ணாரி தாண்டிய வனப்பகுதியில் மூன்று யானைகள் நடுச் சாலையில் நின்று கொண்டிருந்தன. விளக்குகளை அணைத்துவிட்டு வெகு தூரமாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார். பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். சாலையில் வேறு எந்த வண்டிகளும் இல்லை. சற்று நேரத்தில் எல்லாம் ஆஜானுபாகுவான யானைகள் வெகு மெதுவாக சாலையைக் கடந்து வனத்திற்குள் புகுந்தன.பயம் கலந்த சிலிர்ப்பாக இருந்தது.

இதைப் பார்ப்பதற்காகவே கூட ஒவ்வொரு முறையும் பண்ணாரி வரலாம் போலிருக்கிறது.

குறிப்பு: இந்திய அளவில் புலிகள் காணப்படும் பகுதிகள் எனக் குறிக்கப்படும் வரைபடத்தில்(மேப்) இந்த வனப்பகுதி முதன்முதலாக இடம்பெற்றிருக்கிறது.