Jun 30, 2010

மருத்துவமனைகள்: துண்டிக்கப்பட்ட உலகங்கள்

மூன்று வயதுக் குழந்தைக்கு டெங்குக் காய்ச்சல் என்றார்கள். குழந்தைக்கு நோய் முற்றிவிட்டது என்றும், மிக அதிகமான இரத்த இழப்பு என்பதால் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் முன்பே சொல்லியிருந்தார்கள். ஒரே ரத்தவகை உடையவர்கள் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம்.

நேராகச் சென்று கொண்டிருக்கும் நெரிசலான நகரச் சாலையில் திடீரென உள்வாங்கித் திரும்பி இருந்தது மருத்துவமனை. மருத்துவமனைக்கு அருகே செல்வது வரையிலும் இல்லாத பதட்டம் நுழைவாயிலைத் தாண்டி நுழையும்போது விரல்களின் வழியாக பரவத் துவங்குகிறது. முகத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சிக் களையை மறைப்பதற்கான எத்தனிப்புகளை மனம் மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. வாடித் தொங்கிய முகங்களோடும், அழுது வீங்கிய கண்களோடும் மனிதர்கள் தொடர்ந்து தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிரில் வரும் மனிதர்களைப் பார்ப்பதற்கான திராணியோ விருப்பமோ இல்லாதவர்கள் காற்றைப் போல நகர்ந்துவிடுகிறார்கள்.

முந்தின நாள் இரவு வரையிலும் புன்னகைத்துக் கொண்டிருந்தவரின் குடும்பத்தை நெஞ்சுவலியோ, பக்கவாதமோ அல்லது பெயரில்லாத வேறொரு நோயோ துன்பத்தின் முகமூடியை அணிந்து வந்து கசங்கச் செய்கிறது. வாரியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதுவரையிலும் இருந்த குடும்பத்தின் திட்டங்கள் வலுக்கட்டாயமாக வேறு வடிவத்தைப் பெற்றுக் கொள்கின்றன.

தன் வாழ்நாளின் அதிகபட்ச கொடூர கணங்கள் என்பது என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது யோசனை தோன்றும். காதல் தோல்வியடைவது என்றும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உழல்வது என்றும், தன் நெருங்கிய உறவொன்றை இழப்பது என்றும், உறுப்பொன்று செயல் இழப்பது என்றெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால் இவை எதுவுமே திருப்தியான பதிலாக இருந்ததில்லை.

இந்த நொடியில், மனிதனுக்குத் தான் வாழும் காலத்தில் கடக்கும் மிக வேதனையான கணம் என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினருக்காக வெளியில் காத்திருப்பதுதான் என்று தோன்றுகிறது. நகரத்தின் மருத்துவமனைகள் உயிரைக் காப்பதற்கென கட்டப்பட்டிருக்கும் கொள்ளிவாய் கூடாரங்கள். எந்தவிதமான தாட்சண்யமும் பார்க்காத மிக மூர்க்கத்தனமான நாட்டாமைகள். இயந்திரங்களின் இலாவகத்தில் மனிதர்களைக் கையாள்கிறார்கள்.

நம் பிரியத்திற்குரியவர் நொறுங்கிக் கிடக்கும் அறையிலிருந்து வெளியே வரும்போது முகத்தில் அறையும் காற்று கூடவும் கண்களில் நீரைக் கசியச் செய்கின்றன. இந்த உலகமே அன்பற்ற இருண்ட பாலைவனமாகத் தோன்றுகிறது. வேதனையின் களியாட்டங்கள் மனிதர்களின் வாழ்வில் திடீரென நிகழ்த்தும் பிரளயம்தானே மருத்துவமனை வாசம்.

பணம் இல்லாதவர்கள் கொள்ளிவாய்க் கூடாரங்களைத் தவிர்த்துவிடுகிறார்கள். பணம் இருப்பவர்கள் தங்களிடம் இருப்பதில் கொஞ்சத்தை உயிருக்காகச் செலவழிக்கிறார்கள். இருந்தும் இல்லாதவர்கள் இருப்பதை எல்லாம் கொடுத்து பொருளாதாரத்தின் தொடக்கத்திற்குத் திரும்பவும் வருகிறார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக சில கணங்கள் நின்றிருந்தபோது ஒருவன் தன் தந்தையின் சிறுநீரகம் இரண்டும் செயல்படவில்லை என தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் என்று புலம்பிய வேறொருவனிடம், யாரேனும் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த செவிலிக்கு அப்பொழுதுதான் செல்போன் சிணுங்கியது- செவிலிப் பெண்ணின் காதலனாக இருக்கலாம், ஓரமாகச் சென்று சிரித்துக் கொண்டு வந்தாள். கல்லூரிப் பெண்ணொருத்திக்கு விபத்தில் பலத்த அடியாம். ஒரு குடும்பமும் கொஞ்சம் மாணவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். விஷம் அருந்தியவன் இன்னமும் அபாய கட்டத்தில்தான் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை அவசரத்திலும் மருத்துவமனை வழக்கம் போல மிக இயல்பாக இயங்குகிறது. ஊழியர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள். செவிலியர்கள் மிக இயல்பாகத் தன் செவிலியத் தோழியிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த செவிலியர் தன் பணியில் ஒத்துழைக்காதது பற்றியும், மருத்துவரோடான தனது சம்பாஷணைகள் பற்றியெல்லாம் உற்சாகத்தோடு அளாவுகிறார்.

குழந்தைப் பிறந்ததை பார்க்கவும்,சான்றிதழ்கள் பெறுவதற்காகவும் வந்து செல்லும் சிலர் பளிச்சென்றற முகத்தோடு, மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், செல்போனில் குழாவிய படியும் இயல்பின் சிறு பிசிறின்றி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரியமானவர்கள் வெளியில் நின்று வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் கடவுளராகவும் செவிலியர் பூசாரிகளாகவும் பெரும் உருவம் பெறுகிறார்கள். குறைந்தபட்சம் உயிரைக் காப்பாற்ற முடியுமா என்று ஒருவரின் மனைவி மன்றாடிக் கொண்டிருந்தார். கை கால் அசைக்க முடியாது, பேச முடியாது ஆனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்கிறார் மருத்துவர். உயிரோடு கணவரைப் படுக்கையில் வைத்து இறுதிக்காலம் வரை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் மனைவி.

அன்பின் உச்சத்தில் அந்தக் கணத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உதிரும் சொற்களா அல்லது தீர்க்கமாக யோசித்து வெளியே பிதுங்கும் வார்த்தைகளா அவை?

இந்தத் துக்கங்கள் நமக்கும் நேர்ந்துவிடுமோ என்று ஒரு கணம் மனம் பதைக்கிறது. அப்படியெல்லாம் நடந்துவிடாது என்று நம்பிக்கையைத் தானாக மனம் உருவாக்கி சற்று ஆறுதல்படுத்திக் கொள்கிறது. இந்த இடத்தை தாண்டிவிடுவது சற்று ஆசுவாசம் தரலாம். நகர்ந்துவிடுவது உத்தமம் என்று மனம் ஆசைப்படுகிறது. அது, இருள் வெளியேறுவதைப் போல சலனமில்லாமல் மருத்துவமனையை நீங்குவதற்கு தருணத்தை எதிர்பார்க்கத் துவங்குகிறது.

மருத்துவமனையின் சுவரைத் தாண்டி வந்துவிட்டால் தென்படும் உலகம் மிக இயல்பானது. இந்தக் கட்டிடத்திற்குள் உயிர்கள் பணயமாக்கப்படுகின்றன என்ற எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாமல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவசரத்தில் அடுத்த ரயிலைப் பிடிக்கவோ அல்லது தவறவிட்டுவிட்ட பர்ஸைத் தேடியோ நகரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. வெளியில் வந்த சில கணங்களில் அவசர உலகம் நம்மையும் அள்ளியெடுத்து தன் அகோர வாய்க்குள் போட்டுக் கொள்கிறது. நாமும் ஓடத் துவங்கிவிடுகிறோம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு. நகரச் சாலைகளை அடித்துச் சுத்தம் செய்துவிட்டு மறைந்துவிடும் மழையைப் போல நாம் மறந்துவிடுகிறோம்.

மரணம் கொடுமையானதா அல்லது மரணத்தைப் பற்றி நினைப்பது கொடுமையானதா என்ற கேள்விக்கு இந்தக் கணத்தில் என்னிடம் இருக்கும் பதில், மரணத்தைப் பற்றி நினைப்பதுதான் கொடுமையானது என்பது. ஒரு வேளை மரணிக்கும்போது கேட்டால் மாற்றிச் சொல்லக் கூடும்.
நன்றி: உயிரோசை

Jun 25, 2010

பனியில் சிதறிய காட்சிகள்


அதிகாலை
வெண்ணிரவில்
டயர் ஓட்டிச் செல்கிறான்
ஒரு சிறுவன்

இடிந்த சுவரொன்று
தடுத்திருக்கும்
நகரச் சுடுக்காட்டின்
பிணமேட்டு கதகதப்பில்
குறுகிக் கிடக்ககிறது
செந்நாய்

இருள்
கிழித்துச் செல்லும்
லாரியின்
சக்கரத்தில் விழ
எத்தனிக்கிறான்
தற்கொலை
முடிவெடுத்தவன்

வேலிகள் பிடுங்கப்பட்ட
மறைவற்ற
சாலையில் மறைகிறாள்
இந்தக் கரும்பெண்

வெண்புகை வெளிவர
டீ குடிக்கும்
எனக்கான
இன்றைய துக்கம்
பிச்சைக்காரியின்
கால்நனைக்கும்
சிறுநீரால்
ஆசிர்வதிக்கப்படுகிறது.

Jun 22, 2010

மழை


தீராத உக்கிரத்துடன்
இறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவுப் பெருமழை-
முடிவுறாத கதைகளை
கேட்க யாருமில்லாத
நகரத்தின் நிசப்தத்தில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது

கான்கிரீட் கட்டிங்கள்
தன்
இசையைத் தின்றுவிட்ட வெறுப்பில்
மழை
நகரத்தின் ஜன்னல்களை ஓங்கி அறைகிறது

திரைகளிடப்பட்ட ஜன்னலுக்குள்ளான
சல்லாப சண்டைகளை
நிறுத்த முடியாத கோபத்தை
மண் மீது பொழிய
வெறுமை குழைந்த நகரத்து மண் குதித்துப் பழிக்கிறது

காற்றை எதிர்த்து அடிக்கிறது மழை
முறிந்த மரங்களில் இருந்து எழும் பச்சை வாசனையோடு
விசிறத் துவங்கிய காற்று
தன் பலத்தைத் திரட்டி மழையுடன் மோதுகிறது

உக்கிரமான ஈரப்போர்
துளி குருதி இல்லை
ஒரு மரணம் இல்லை
ஆழ்மன வன்மம் இல்லை

ஆனால்
மழை நிகழ்த்த விரும்பும் பிரளயத்தில்
அதிர்ந்து கொண்டிருக்கின்றன
வானமும் பூமியும்

எதையும் கவனிக்காத இந்நகரத்தின்
சோடியம் விளக்குகள்
கண்களை மூடிக் கொள்கின்றன
நகரம் இருளில் மூழ்குகிறது
நடுநிசியில்
விழித்துக் கொண்ட நாய்கள் ஒடுங்குகின்றன

மழைக்கு சலனமுறாத நகரத்தின்
சில வீடுகளில் யு.பி.எஸ்ஸில் இருந்து
கசிகிறது வெளிச்சம்
தொகுப்பு வீடுகளில்
ஜெனரேட்டரை ஓட விடுகிறார்கள்
திரைகள் விலகிய ஜன்னல்களில்
டிவி ஒளிரத் துவங்கிய போது
தன் தோல்வியின் துக்கத்தில்
துவண்டு
அமைதியடைந்தது மழை

போக்கிடமில்லாத மழை
முறிந்த பிரியமென
நகரச் சாலையின் குட்டைகளில் கொஞ்சமாகவும்
தங்க மீன் நீந்தும்
இந்த ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள்
மீதமாகவும்
அடைந்து கொண்டது

Jun 15, 2010

சிட்டுக்குருவி

ங்கள் தாத்தா சிட்டுக்குருவிகள் பிடிப்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.நெல் காயப்போட்டிருக்கும் களத்தில் மூங்கிலால் பின்னப்பட்ட முறத்தை ஒரு சிறு குச்சியை வைத்து நிறுத்தி வைப்பார். அந்தக் குச்சியை ஒரு நூலில் கட்டி நூலின் மற்றொரு நுனியைப் பிடித்துக் கொண்டு ஏதாவது மர நிழலில் அமர்ந்து கொள்வார். நெல்மணிகளைத் தின்ன வரும் சிட்டுக்குருவி முறத்திற்கு கீழாக வரும் போது நூலை இழுத்தால் முறம் சிட்டுக் குருவியை மூடிக் கொள்ளும்.பிறகு சிட்டுக்குருவியை பிடித்துவிடலாம்.

நாங்கள் சற்று பெரியவர்கள் ஆன பிறகு(பத்து வருடங்களுக்குள்ளாக வாசலில் நெல் காயப்போடுவது பெருமளவில் குறைந்து போனது)வாசலில் இருந்து வீட்டின் உட்புறம் வரைக்கும் அரிசியைத் தூவி வைப்போம். குருவிகள் வீட்டிற்குள் வந்த பிறகு கதவை மூடிவிட்டு சிக்கிக் கொண்ட குருவியை எந்த இடத்திலும் அமரவே விடாமல் துரத்தினால் அது களைத்துவிடும்.களைத்துப் போய் பறக்க முடியாமல் அமரும் சிட்டுக்குருவியை கையில் எடுத்தால் இளஞ்சூட்டோடு அதன் மிக வேகமான இதயத் துடிப்பை ரசிக்கலாம். சில அறிவாளிக் குருவிகள் இலாவகமாக கையை விட்டு நழுவிச் சென்று நம்மை ஓரிரு நாட்களுக்கு 'ஃபீல்' செய்ய வைத்துவிடும்.

இப்படியான விளையாட்டில் ஒரு பெண் சிட்டுக்குருவியை அதிகமாக விரட்டியதில் அதன் வாயில் இரத்தம் வழிந்து இறந்து போனது.அதற்கான எல்லாவிதமான ஈமச்சடங்குகளையும் நண்பர்களோடு செய்தபோது சிட்டுக்குருவிகளை இனிமேல் கொல்லக் கூடாது என்று மட்டுமே முடிவு செய்தோம்.துரத்துவதற்கு எந்தவிதமான தடையையும் எங்களின் சிறுவர் படை கொண்டு வரவில்லை.இருந்தாலும் அந்தக் குருவியே நான் பிடித்த கடைசிச் சிட்டுகுருவி.

விஜியன் என்ற நண்பன் கிணற்றுக்குள் இறங்கி பொந்துகளுக்குள் இருந்து குருவியின் குஞ்சுகளை எடுத்து வருவான்.காகமாக இருந்தால் அதன் குஞ்சுகளுக்கு அருகில் போகவே முடியாதபடி மண்டையைக் கொத்தி புண்ணாக்கிவிடும்.சிட்டுக் குருவிகளுக்கு அந்த வலிமை இல்லாததால் சற்றுத் தள்ளி அமர்ந்து தொடர்ச்சியாகக் கத்திக் கொண்டிருக்கும்.

இந்த நீட்டி முழக்கிய குறுவரலாறுகள் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பதைச் சொல்வதற்கான அச்சாரம் என்று முடிவு செய்திருப்பீர்கள்.அதேதான்!.

இன்னமும் எங்கள் ஊரில் இருக்கும் கிணற்றுக்குள் குருவிகள் இருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பார்க்க முடிகிறது.புதிய ஊர்களுக்குச் சென்றால் முதலில் பார்க்க விரும்புவது சிட்டுக்குருவியைத் தான்.அதன் வேகமான பறத்தலும்,பெண் குருவியில் இருக்கும் மென்மையும்,ஆண் குருவியின் கம்பீர தோற்றமும் மிக விருப்பமானவை.
ஆனால் பல ஊர்களில் இவற்றைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

சிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் அழிகின்றன,சோடியம் விளக்குகளால் அழிகின்றன, வாழ்க்கை முறை மாற்றங்களால் அழிகின்றன என்ற காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் இந்த எந்தக் காரணமும் முழுமையான முடிவுகள் இல்லை என்றே தோன்றுகிறது. இதுவரைக்கும் கூட இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் தோராயமான எண்ணிக்கை குறித்தான கணக்கீடுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

சிட்டுக்குருவிகள் எங்கும் காணப்படுவை என்பதாலேயே அவற்றைப் பற்றிய கவனம் நமக்கு இருப்பதில்லை. அவற்றை அறிவியல் பூர்வமாக கண்காணிப்பதுமில்லை. ஆனால் அவை குறைந்து வருகின்றன என்பதை கிட்டத்தட்ட எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்.

சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணமாக சூழலியல் கட்டுரைகளில் சில காரணங்களே திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன.

முதலாவது நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.முன்பு சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி இருந்தது. கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவது நல்ல சகுனம் என்று சொல்வார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்பாக வீட்டின் காலிப்புறத்தில் தானியங்களை உரலில் இடித்து புடைப்பார்கள். சிதறிக் கிடக்கும் தானியங்கள் பறவைகளுக்கான உணவாக இருந்தன. ஆனால் இப்பொழுது சூப்பர் மார்கெட்டிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட தானியங்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம்.ஒரு தானியமணி கூட சிதறாமல் சிக்கனப்படுத்தி பணத்தை வேறு ஊதாரி செலவுகளுக்கு திசைதிருப்பும் வாழ்வுமுறையை பின்பற்றுகிறோம்.

அடுத்ததாக,வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல்(Unleaded-Petrol)புழு,பூச்சிகளை அழித்துவிடுகிறது. வளரும் பருவத்தில் இருக்கும் குருவிக் குஞ்சுகளுக்கு இந்தப் பூச்சி புழுக்கள் முக்கியமான உணவு. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக குருவிகளின் எண்ணிக்கை குறைகின்றன.

மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன.

இத்தகைய காரணங்களில் ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் முழுமையான காரணங்கள் இவை மட்டும்தானா என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு மும்பையின் நரிமன் பாய்ண்ட் பகுதியிலும், அந்நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் கணிசமான அளவில் சிட்டுக்குருவிகளைக் காண முடிகிறது. இந்தியாவில் மற்ற எந்த நகரத்தையும் விடவும் மேற்சொன்ன காரணங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மும்பைதான். ஆனால் அங்கு சிட்டுக்குருவிகள் இருப்பது இந்த முடிவுகள் எவ்வளவு சதவீதம் உண்மையானவை என்று யோசிக்கச் செய்கிறது.

சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலமே சிட்டுக்குருவிகளைக் காக்க முடியும் என்று தோன்றுகிறது.

பறவையினங்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிப்பது சற்று சவாலானது என்றாலும் முடியாதது என்று நினைக்கவில்லை.அவிநாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்பொழுது அதிக எண்ணிக்கையில் மயில்களைக் காண முடிகிறது.மயில்கறி விற்ற உணவு விடுதிகள் பெரும்பாலானவற்றின் மீது அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

தென் மேற்கு பருவமழைக்காலம் துவங்கிவிட்ட இப்பொழுது, இடி மின்னலுடன் கூடிய மாலை நேரத்தில் தோகைகளை விரித்து மயில்கள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.
உயிரோசையில் வெளியான கட்டுரை.

Jun 13, 2010

பிரான்ஸில் ஒரு இரவு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸிலிருந்து எண்ணூறு கிலோமீட்டர் தூரத்தில் மாண்ட்பெல்லியர்(Montepellier) என்ற ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கென்று சிறப்பு எல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே இருப்பதாகச் சொன்னால் இரவு வாழ்க்கையைத் தவிர்த்து வேறெதுவுமில்லை. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் அவ்வப்போது செல்லும் பகல் நேரத்தில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். சாலையில் நடந்து சென்றால் நீங்கள் மட்டும்தான் நடந்து கொண்டிருப்பீர்கள். பேருந்துக்கு 1 யூரோவோ அல்லது டாக்ஸிக்கு 15 யூரோவோ செலவு செய்யத் தயங்கும் உங்களை "டிபிகல் இந்தியன்" என்று கண்டுபிடித்துவிடுவார்கள். (பேருந்து அல்லது ட்ராமில் குறைந்தபட்சமே 1 யூரோதான் டிக்கெட். அதாவது 65 ரூபாய். சேலத்திலிருந்து கோபிச் செட்டிபாளையம் போய் வந்தால் கூட அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்).

மாண்ட்பெல்லியரில் ஒரு பெரிய இடத்தை, கிட்டத்தட்ட சின்ன ஊர் அளவுக்கு ரெஸ்டாரண்ட், நைட் கிளப் மற்றும் பார்களுக்கு என்று கேளிக்கைகளுக்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். Le Shiva என்ற வட‌இந்திய ரெஸ்டாரண்ட் கூட உண்டு. "அரே!பய்யா" என்று வரவேற்பார்கள். ஆனால் சிக்கன் பிரியாணிக்குக் கிட்டத்தட்ட எழுநூறு ரூபாய் தர வேண்டும்.

ஆஸ்திரேலிய பார், ஐரிஷ் பார், பிரெஞ்ச் பார் என்று ஒவ்வொரு நாட்டின் சிறப்புகளோடும் பார்கள் செயல்படுகின்றன. ஆஸ்திரேலியன் பாரின் வெளியில் இரண்டு கறுப்பு நிற திடமான‌ ஆடவர்கள் நின்றிருப்பார்கள். அவர்கள்தான் வரவேற்பும்கூட‌. உள்ளே சென்று குடிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்தால் இவர்கள்தான் 'சாத்து'வார்களோ என்ற பயத்தில் நுழைந்து வரவேண்டும். நல்ல வேளையாக அப்படியெல்லாம் ஒன்றும் செய்யமாட்டார்கள். பாரின் உள்ளே 'இத்தினியூண்டு' துணி அணிந்த ஆஸ்திரேலிய‌ பார் பெண்கள் வாட்டசாட்டமாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். உடன் வந்திருந்த நண்பர், பார் பெண்கள் பாட்டிலைச் சுழற்றிச் செய்யும் வித்தையிலேயே தனக்குத் தலை சுற்றி போதை ஏறுவதாக உளறிக் கொண்டிருந்தார்.

ஆல்கஹால் என்பது எத்தனால் இருக்கும் ஒரு பானம். எத்த‌னாலின் அட‌ர்த்தி 50 ச‌த‌வீத‌த்திற்கும் மேலே போனால் எளிதில் தீப்ப‌ற்ற‌க் கூடிய‌தாகிவிடும். இப்ப‌டித் தீப் ப‌ற்ற‌ வைப்ப‌தாலேயே சுவை பெறக் கூடிய‌ சில‌ பான‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. Dr Pepper, Blue Fiery Mustang எல்லாம் தீப்ப‌ற்ற‌ வைத்துக் குடிக்க‌ வேண்டிய‌வை. இந்தத் தீப்பிடித்த ஆல்க‌ஹால், அலறும் இசை, மென் புகை மற்றும் மங்கிய ஒளி ஆகியவற்றை கால்கள் உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு ஆஸ்திரேலிய‌ன் பார்க‌ளில் கொண்டாடலாம்.

ஐரிஷ் பார், பழைய அயர்லாந்துப் புகைப்படங்கள், புத்தகங்களால் நிரப்பியிருக்கிறது. சிமெண்ட் பூசாத கற்களை அடுக்கி, கலைநயத்தோடு இருந்தது அந்தக் கட்டடம். ஆண்கள்தான் பாரில் பணிபுரிகிறார்கள். ஐரிஷ் பாரில் ஐரிஷ் நாட்டு மது வகைகளைத் தவிர்த்து வேறு எந்தவிதமான பொழுது போக்கு அம்சத்தையும் எதிர்பார்க்க‌க் கூடாதாம். அதே பகுதியில் இருக்கும் பிரெஞ்ச் பார்களில் ம‌துவோடு சேர்த்து வாழ்வின் ச‌க‌ல‌ இன்ப‌ங்க‌ளையும் எதிர்பார்க்க‌லாம்.

ஐரிஷ் விஸ்கி சிறப்பு வாய்ந்தது. பொதுவாக‌ விஸ்கி ப‌ல‌ தானிய‌ங்க‌ளின் க‌லவையிலிருந்து த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌து. ஐரிஷ் விஸ்கியில் 'மிக்ஸ்' கொஞ்ச‌ம் அதிக‌ப்ப‌டியாக‌வே இருக்கும்.
ஸ்காட்ச், Rye, Bourbon என்ப‌வையெல்லாம் விஸ்கியின் வேறுவித‌மான 'ஸ்டைல்'க‌ள். எந்த‌த் தானிய‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து என்ப‌தைப் பொறுத்து பெய‌ர் வேறுப‌டுகிற‌து.

ஜின், பிராந்தி, வோட்கா, விஸ்கியிலிருந்து பிராந்தி வ‌ரை ப‌ல‌ வ‌ஸ்துக‌ள் த‌யாரிப்பு முறையாலும், ஆல்ஹ‌காலின் அள‌வாலும் பெய‌ர்க‌ளைப் பெறுகின்ற‌ன‌.

பியர் அருந்த சாலையோர பார்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏகப்பட்ட பார்கள் சாலைகளையும் இருக்கும் காலியிடங்களையும் நாற்காலிகளால் நிரப்பியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட திருவிழாக்கூட்டம்தான்.

பிய‌ர் பெரும்பாலும் பார்லி அரிசியிலிருந்து த‌யாரிக்க‌ப்ப‌டுகின்றன. பொதுவாக பிராந்தி அல்லது பியர் என்று சொன்னால் அது திராட்சையிலிருந்து தயாரிக்கப்படுவது என்றுதான் கருதப்படும். பியர் நொதித்த‌ல் முறையில் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை என்ப‌தால் 'ஈஸ்ட்' என‌ப்ப‌டும் நுண்ணுயிர்(இட்லிக்கு அரைத்து வைக்கும் அரிசிமாவு புளிப்ப‌திலும் 'ஈஸ்ட்'ன் பங்க‌ளிப்பு உண்டு) பிய‌ர் த‌யாரிப்பில் முக்கிய‌ இட‌ம் வ‌கிக்கின்ற‌ன‌. இவை 18%க்கு மேலாக‌ ஆல்க‌ஹால் இருக்கும் ப‌ட்ச‌த்தில் 'ம‌ண்டையைப் போட்டுவிடும்' கேஸ்க‌ள். என‌வேதான் ப‌ல‌ குடிம‌க்க‌ளின் சாப‌த்தையும் தாண்டி பிய‌ர் க‌ம்பெனிகள் 18%க்கு மேல் ஆல்க‌ஹாலை பிய‌ரில் சேர்ப்ப‌தில்லை.

இர‌வு எட்டு ம‌ணிக்கு ஆர‌ம்பிக்கும் பிரான்ஸ் நகரின் உற்சாக உற்சவத்தில், ஒவ்வொரு பாரிலுமாக‌ அம‌ர்வது, ஷாம்பெயின், பிராந்தி, விஸ்கி, பியர் என்று எதையாவ‌து குடிப்ப‌து, கொஞ்சம் வெட்டியாக‌ப் பேசுவ‌து, ஆணும் பெண்ணுமாக இருந்தால் முத்த‌மிட்டுக் கொள்வது(அரை நொடியிலிருந்து இருபது முப்பது நிமிடங்கள் வரை கூட), அப்புற‌ம் அடுத்த‌ பாருக்கு ந‌டையைக் க‌ட்டி முந்தைய‌‌ பாரில் செய்த‌தையே தொட‌ர்வ‌து என்று அதிகாலை மூன்று, நான்கு ம‌ணிக்கு ஒரு இர‌வை முடிக்கிறார்க‌ள். வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை என்றால் ஆட்டம் பாட்டம் என்று இன்னமும் பட்டையைக் கிளப்புகிறார்கள். பிரான்ஸில் பெரும்பாலான நகரங்களில் இரவு வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

ஜின் ம‌ற்றும் வோட்கா இர‌ண்டும் பிரெஞ்ச் பார்க‌ளில் வெள்ளமாக‌ப் பாய்ந்து கொண்டிருக்கின்றன‌‌. இந்த‌ இர‌ண்டுமே வ‌டிக‌ட்டுத‌ல்(Distillation)மூல‌ம் த‌யாரிக்க‌ப்ப‌டுப‌வை.
வோட்காவிற்கான‌ மூல‌ப்பொருள் என்று த‌னியாக‌ எதுவுமில்லை. தானிய‌ங்க‌ள் ம‌ற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றிலிருந்துதான் வோட்கா அதிக‌மாக‌த் த‌யாரிக்க‌ப்ப‌டுகிறது. வோட்கா த‌யாரிப்பில் முக்கிய‌மான‌ அம்ச‌ம் அத‌ன் வ‌டிக‌ட்டுதல் முறை. மிகத் தீவிர‌மான‌ வ‌டிக‌ட்டுத‌லின் மூல‌மாக‌ அத‌ன் மூல‌ப் பொருளின் சுவை அல்ல‌து ம‌ண‌ம் எதுவும் வோட்காவில் வ‌ந்துவிடாம‌ல் பார்த்துக் கொள்வார்க‌ள்.

ஜின்னும் வ‌டிக‌ட்டுத‌ல் மூல‌மே த‌யாரிக்க‌ப்ப‌ட்டாலும் கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌து. இதில் கொஞ்சம் மூல‌ப்பொருளின் சுவை, ம‌ண‌ம் இருக்குமாறு விட்டுவைப்பார்க‌ள். இறுதியாக‌ Flavours க‌ல‌ப்ப‌தும் உண்டு.

நொதித்த‌லா அல்ல‌து வ‌டிக‌ட்டுத‌லா என்ப‌திலிருந்து பானத்தின் த‌ன்மையும், பெயரும் மாறுகிற‌து. உதாரணத்திற்கு அகாவி என்ற‌ தாவ‌ரத்திலிருந்து நொதிக்க‌வைத்தால் அத‌ன் பெய‌ர் பல்க்(Pulque), வ‌டிக‌ட்டினால் அத‌ன் பெய‌ர் ட‌க்கிலா(Tequila).

பிரான்ஸ் பாரில் அம‌ர்ந்து கோகாகோலாவோ பெப்ஸியோ குடித்துக் கொண்டிருந்தால் அவ‌னையும் இந்திய‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லில் சேர்க்க‌லாம் என்றார் பிலிப் ஹின்ச்சி என்ற அயர்லாந்து வாலா.(ச‌வுத் இந்திய‌ன் என்ற‌ சொல்தான் ச‌ரியாக‌ வ‌ரும்).

டீன் மார்ட்டின் என்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் சொன்ன‌ ஒரு வாக்கிய‌த்தை இந்த‌ இட‌த்தில் குறிப்பிட‌ வேண்டும். "குடிக்காத‌ ம‌க்க‌ளைப் பார்த்து நான் வ‌ருத்த‌ப்ப‌டுகிறேன். காலையில் தூக்கத்தில் இருந்து எழும் தருணத்தை உற்சாக‌மாக‌ உணர்வார்க‌ள். அந்த‌ உற்சாக‌த் த‌ருண‌ம் என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள் ஒரு நாளில் உண‌ர்ந்த‌ ஆக‌ச் சிற‌ந்த‌ த‌ருண‌மாக‌ இருக்கும்".

===

இந்தக் கட்டுரை உயிரோசையில் முன்பு வந்திருந்தது. வலைப்பதிவில் வரவில்லை. மீண்டும் மாண்ட்பெல்லியருக்கு ஒரு வாரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.அதற்காக மாண்ட்பெல்லியர் பற்றிய எனது குறிப்புகளை தேடிய போது கண்ணில்பட்டது.

Jun 11, 2010

உதிரிகள் 11-06-2010: அனுஜன்யா, வேட்டைக்காரன்,டைரி

நேற்று இரவு மூன்று மணி வரைக்கும் தூங்கவில்லை. இரண்டு மிக முக்கியமான வேலைகளைச் செய்தேன். 2012 ருத்ரம், வேட்டைக்காரன் ஆகிய இரண்டு படங்களைப் பார்த்தேன்.

பொதுவாக எனக்கு மசாலாப் படங்கள் மிகப் பிடிக்கும் என்பதனால் ருத்ரம் 2012 ஐ விட வேட்டைக்காரன்தான் பிடித்திருந்தது. அதைவிடவும் ஆங்கிலப்படங்களில் பிரம்மாண்டம் என்ற பெயரில் அவர்கள் வெறுமனே பயமூட்டுகிறார்கள். இப்படித்தான் பயமுறுத்துவார்கள் என்று கிட்டத்தட்ட படம் பார்க்கும் போது யூகித்து விட முடிவதால் ஜூராசிக் பார்க் படத்தில் கிடைத்த 'த்ரில்' பிறகு வந்த படங்களில் கிடைத்ததில்லை. இத்தகைய ஹீரோயிசப் படங்களில் எத்தனை பெரிய அழிவு வந்தாலும் கதாநாயகன் கடைசியில் தப்பித்துவிடுகிறான்.

வேட்டைக்காரன் பற்றி ஏகப்பட்ட பேர் எழுதியிருக்கிறார்கள். விமர்சனம் எழுதுகிறேன்(அதுவும் இத்தனை நாட்களுக்குப் பிறகு) என்று துவங்கினால் பதிவை படிக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் கணிணித்திரையின் வாஸ்துப்படி வலது பக்க மேல் மூலையில் இருக்கும் பெருக்கல் குறியை அழுத்திவிடுவார்கள்.

கதாநாயகன் ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்துவதைப் பார்க்க பரவசமாக இருக்கிறது. சிலிர்த்து நிற்கும் கைகளை உணர்ச்சிவசப்பட்டு சுவற்றில் ஓங்கிக் குத்தி சுவரை இடித்துவிடுவேனோ என்று கூட பயமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது லாஜிக் பார்க்கக் கூடாது என்ற கட்சியில் நான் இருக்கிறேன். அதனால் இரண்டேகால் மணி நேரம் பிரமாதமாக ஓடிப்போனது. மூன்று மணிக்கு மேல் தூங்கினால் என் வீட்டை எல்லாம் ஏதோ ரவுடிக்கூட்டம் அடாவடியாக பிடுங்கிக் கொள்வதாகவே கனவு வந்தது. அதுதான் கொடுமை.
===
அலுவலகப் பணி நிமித்தமாக செவ்வாய்க்கிழமை மும்பை போயிருந்தேன். பிரபல யூத் பதிவர் அனுஜன்யாவை சந்தித்ததைத் தவிர உருப்படியான நிகழ்வு எதுவுமில்லை. அவரது கவிதைகள் எனக்கு மிக விருப்பம். அனுஜன்யாவுக்கு அவரது அலுவலகத்தில் தனி அறை கொடுத்து இரண்டு மூன்று கணிணிகளையும் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிய வேலைக்காரர் போலிருக்கிறது. நான் இருந்த நேரம் முழுவதும் அவரது அறைக்குள் யாருமே வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு "தமிழ் ஆளாக இருந்தால் தமிழில் கவிதை சொல்லுவேன். ஹிந்திக்காரனாக இருந்தால் சலிக்காமல் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் கவிதை சொல்லுவேன்"என்றார். பிறகு ஏன் வரப்போகிறார்கள்.
===
டைரி எழுதுவது போல பல் விளக்கினேன், பாத்ரூம் போனேன் என்று வலைப்பதிவில் எழுதுவதில் விருப்பம் இருந்ததில்லை. குறைந்தபட்சம் எனக்கு உருப்படியான விஷயம் என்று தோன்றுவதைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு.

நேற்று ஒரு நண்பர் ஆன்லைனில் வந்து 'அதை எழுது!இதை எழுது!' என்று உச்சகட்ட டார்ச்சரைக் கொடுத்தார். சிரிப்பானை அடித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக, நான் பல மாதங்களாக உங்கள் பதிவை பார்க்கவில்லை, உங்கள் பதிவின் லின்க் தாருங்கள் என்றார்.

தீர்க்கதரிசி! ப்லாக்கையே பார்க்காமல் இவன் இதைத்தான் எழுதுவான் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்காகவாவது எதையாவது எழுத வேண்டும் போலிருக்கிறது. எதுவுமே எழுதாமல் இருக்கும் நாட்களில் கூட இந்தத் தளத்தை நம்பி திறந்து படிக்கும் சில நூறு பேர்களை இழந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறேன்.
==
'கமெண்ட் மாடரேஷன்' ஐ எடுக்கச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. சுந்தர ராமசாமியின் கவிதை பற்றி "முற்றாகக் களைந்து அம்மணம் கொள்" என்ற தலைப்பில் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்த இடுகைக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று பின்னூட்டங்களாவது கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் அனானி பின்னூட்டங்கள். ஏதோ ஒரு லின்க் மட்டும் பின்னூட்டாமாக இடப்படுகிறது. அந்த பின்னூட்டங்களை நிறுத்த இன்னும் சில நாட்களுக்காவது "கமெண்ட் மாடரேஷன்" தேவைப்படும் என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Jun 9, 2010

புலி, பண்ணாரி வனம்

ஈரோட்டில் 29-05-2010 இல் சேகர் தத்தாத்ரியின் "புலி: ஒளிரும் ரகசியங்கள்" என்ற குறும்படத்தின் திரையிடலுக்கு கோவையைச் சேர்ந்த ஓசை என்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சேகர் தத்தாத்ரியும் வந்திருந்தார்.சூழலியல் சார்ந்த ஆவணப்படங்களை எடுத்து வருபவர் என்ற அளவில் எனக்கு இந்தப் பெயர் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் மிக முக்கியமான பெயரும் கூட.

அரங்கத்தில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான இடம் குழந்தைகளால் நிரப்பப்பட்டிருந்தது.

படம் 40 நிமிடங்களுக்கு ஓடுகிறது. புலி தன் இரையை வேட்டையாடல், இணை சேர்தல்,குட்டிகளோடான அதன் உறவு, காட்டில் புலிகளின் அன்றாட செயல்பாடுகள் என்று நகரும் படத்தில் புலிகள் தற்சமயம் எதிர்கொள்ளும் வாழ்வு சார்ந்த வேதனைகளை சற்று விரிவாக அலசுகிறார்கள். வேட்டையாளர்களின் கருணையற்ற தன்மை குறும்படத்தில் விரிவாக்கப்படுகிறது.

படம் முடிந்த பிறகு சேகர் தத்தாத்ரியுடனான உரையாடல் நிகழ்ந்தது.

தரவுகள் அதிகமாகவும் பிரச்சார யுக்திகள் குறைவாகவும் இருத்தல் வேண்டும் என்று ஆவணப்படம் என்பதற்கு என்னளவில் ஒரு வரையறை இருக்கிறது. அப்படி எந்த வரையறையும் இருக்கத் தேவையில்லை என்பது சேகர் தத்தாத்ரியின் கூற்று. இந்தக் குறும்படம் என் வரையறைக்கு நேர் எதிர்.

புலி குறித்தான புரிதலையும், அவை மீதான கருணையையும் இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்கும் உருவாக்கியிருந்தது என்பது உறுதி.

மேலதிக தகவல்களை பின்வரும் தளத்தில் அறியலாம்: http://truthabouttigers.org/ -புலி: ஒளிரும் ரகசியங்கள் குறும்படத்தை இந்தத் தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக அனுப்பியும் வைக்கிறார்கள்.
===
வழக்கமாக பெங்களூரிலிருந்து செல்லும் போது ஈரோட்டில் இறங்கி கோபி செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டும். அந்த இரவு நேரத்திலும் பேருந்தில் இடம் பிடிக்க துக்கினியூண்டு சண்டை நடக்கும். இந்த வாரம் இரவில் ஒன்றே முக்காலுக்கு வந்த மைசூரு பேருந்தில் வீரப்பிரதாபங்களை காண்பித்து ஒரு இடத்தை பிடித்துவிட்டேன்.

வழக்கமாக ஏழு மணி நேரப் பயணத்தில் உறக்கம் வருவதில்லை. விஜய் போக்கிரியாகவோ அல்லது சிவகாசியாகவோ வந்து மகிழ்விப்பார். மைசூரு பேருந்தில் இதற்கு வழியில்லாததால் கண்ணைச் சுழற்றியது. விழிப்பு வந்த போது காட்டுக்குள் பேருந்து சென்று கொண்டிருந்தது. "நடத்துனரிடம் கோபி வந்துடுச்சா சார்?" என்றதற்கு, "கோபி போச்சு, சத்தி போச்சு, பண்ணாரி வர்து" என்று தமின்னடத்தில் மாத்தாடினார்.

பண்ணாரி கோயிலில் இறங்கி நின்றால் சுற்றிலும் அடர்ந்த இருட்டுதான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் மைசூரிலிருந்து வந்த இன்னொரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

என்னுடைய நல்ல நேரமாகத்தான் இருக்க வேண்டும். பண்ணாரி தாண்டிய வனப்பகுதியில் மூன்று யானைகள் நடுச் சாலையில் நின்று கொண்டிருந்தன. விளக்குகளை அணைத்துவிட்டு வெகு தூரமாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார். பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். சாலையில் வேறு எந்த வண்டிகளும் இல்லை. சற்று நேரத்தில் எல்லாம் ஆஜானுபாகுவான யானைகள் வெகு மெதுவாக சாலையைக் கடந்து வனத்திற்குள் புகுந்தன.பயம் கலந்த சிலிர்ப்பாக இருந்தது.

இதைப் பார்ப்பதற்காகவே கூட ஒவ்வொரு முறையும் பண்ணாரி வரலாம் போலிருக்கிறது.

குறிப்பு: இந்திய அளவில் புலிகள் காணப்படும் பகுதிகள் எனக் குறிக்கப்படும் வரைபடத்தில்(மேப்) இந்த வனப்பகுதி முதன்முதலாக இடம்பெற்றிருக்கிறது.

Jun 3, 2010

உதிரிகள் 04-06-2010: பதிவுலகம், கவிதை, செம்மொழி

ரு வாரமாக திரும்பிய பக்கமெல்லாம் ஆணாதிக்கம், பெண்ணியம், பார்ப்பனீயம், துரோகம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். சலிப்பாக இருக்கிறது. தொடக்கம் தெரியாமல் புதிதாக படிப்பவர்கள் மண்டை காய்ந்து விடுவார்கள். தொடக்கம் தெரிந்திருந்தாலும் கூட இடையில் ஓரிரண்டு கட்டுரைகளை விட்டவர்களின் திண்டாட்டமும் கிட்டத்தட்ட அதுவேதான்.

இணையத்தில் உலவும் பெரும்பான்மையோரினால் இந்த விஷயம் கவனிக்கப்படுவதாக இருப்பதால் தன் மீது வெளிச்சம் விழுவதற்காக துள்ளிக் கொண்டிருக்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. தனிமனிதர்களின் புகழ் போதைகளை நிராகரித்துவிட்டு, இந்தப் பிரச்சினையை கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் மட்டுமே நகர்த்த முடியும் என்று துளியும் நம்பிக்கையில்லை.

இந்தச் சிக்கலில் உருளும் தலைகளின் எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எந்தக் கருத்தைச் சொன்னாலும் ஏதாவது ஒரு தரப்பினரால் உருட்டப்படும் தலைகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகிவிடும். இந்தப் பிரச்சினையில் நடுநிலை என்றெல்லாம் எதுவும் இருக்க முடியாது. மழுப்பலாக வேண்டுமானால் எதையாவது சொல்லிச் செல்லலாம். ஆனால் அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிடுவது உத்தமம்.

வினவின் பதிவில் எழுதிய பின்னூட்டம்தான் என் மனநிலையின் சாராம்சம்.

பூக்காரி கட்டுரைக்கு எனது மிகக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

பைத்தியகாரன் தடுமாறியிருக்கிறார்.அவர் தனது கருத்துக்களை எந்தவிதமான மறைவும் இல்லாமல் தனித்தே தெரியப்படுத்தியிருக்கலாம். அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வருத்தங்களும்,கண்டனமும்.

தொடர்ந்து பூனைக்குட்டிகளும் பெருச்சாளிகளும் வெளியில் வந்து கொண்டேயிருக்கின்றன. எப்பொழுது நிற்கும்?
=====
உப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த ஆணுறை
நடத்துனரின் எச்சில் ஈரத்தோடு
கையில் சேர்ந்த
பத்து ரூபாயில்
லோகுவுக்கான
சங்கேத குறியீட்டை
இந்து
எழுதியிருந்தாள்

சிவப்பு மையில்
பிரியம் நடுங்கிய
காதல் கடிதத்தை
தவறுதலாக பெற்றுக் கொண்ட
10.40 லிருந்து
விரல்கள் வியர்க்கத் துவங்கின

இந்துவுக்கு ஒரு முகமும்
லோகுவுக்கு இன்னொரு முகமும்
பின் வரிசையில் அமர்ந்திருந்த
காதலர்களிடம் இருந்து உருவான
11.32க்கு தான்
மகுடஞ்சாவடி நிறுத்தம் வந்தது

11.33 க்கு
DTS ல் சல்லாபித்திருந்த
நாயகனும் நாயகியும்
இறங்கி
மெளனம் விரவிய
இருளுக்குள் சென்றுவிட்டார்கள்

அந்திப் பெருமழையில் பாதை தொலைந்ததாகவும்
தீராத துக்கத்தோடு யாரோ துரத்துவதாகவும்
உறக்கத்தில்
கண்கள் சுழன்றபோது
சேலம் வந்திருந்தது

12.07 க்கு
முழுவதும் விரியாத கண்களோடு
குளிர்பானம் குடித்து
சிறுநீரோடையில் பங்களிக்கையில்
யதேச்சையாக துழாவிய
விரல்களில் காதல் கடிதம் கிடைக்கவில்லை

அப்பொழுது
உப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த
ஆணுறையொன்றை வாஞ்சையோடு
பார்த்துவிட்டு
அடுத்த பேருந்துக்கு நகர்ந்துவிடுவதைத் தவிர
எனக்கு
இலக்கு எதுவும் இருக்கவில்லை
===========
ரோடு மாவட்ட திமுக இலக்கிய அணித் தலைவர் குமணன் கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்.

அரசியல்வாதிக்கான எந்த அடையாளமுமில்லாத அரசியல்வாதி என்பதாலேயே அவரோடு பழகும் போது இதமான சிநேகம் இருக்கும். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு 'செம்மொழி' என்பதன் அடிப்படைத் தகவல்களை ஈரோடு மாவட்டத்தில் பரப்புவதற்கான விருப்பம் இருப்பதாக் தெரிவித்தார்.

ஒரு பக்க துண்டறிக்கையில் செம்மொழி என்பதற்கான கூறுகளை தெளிவாக்க முடியுமா எனக் கண்டறிய அதற்கான தகவல்களை சேகரித்தேன். இணையத்தில் அதிகத் தகவல்கள் இல்லை.

செம்மொழி என்பது என்ன?

செம்மொழி (Classical language)என்பது ஒரு மொழியை அதன் தொன்மை, இலக்கிய வளம் ஆகிய அடிப்படையிலும் இன்ன பிற தகுதிகளையும் கொண்டு செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.

 • செம்மொழி என்று கருதப்படுவதற்கு அந்த மொழியானது மிகத் தொன்மையானதாக இருக்க வேண்டும்.
 • மொழியின் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராமல் நிகழ்ந்திருக்க வேண்டும்.
 • மொழியானது பிறமொழிகளைச் சார்ந்து இராமல் தனித்து இயங்குதல் வேண்டும்.
 • தனக்கென சுயதன்மையுள்ள பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும்,மொழியின் பாரம்பரியமானது பிற இனம் அல்லது மொழியின் பாரம்பரியத்தைச் சார்ந்திருக்காமல் சுயமாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்.
 • மொழியில் வளமான பழங்கால இலக்கியங்கள் இருக்க வேண்டும்.

உலகின் செம்மொழிகள் :

 • தமிழ்
 • கிரேக்க மொழி
 • சமஸ்கிருதம்
 • இலத்தீன்
 • பாரசீக மொழி
 • அரபு மொழி
 • எபிரேயம்
 • சீன மொழி

தமிழ் ஏன் செம்மொழி?

 1. திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்த மிகத் தொன்மையான மொழி. இந்தியாவில் உருவான பிற மொழி இலக்கியங்கள் யாவும் தமிழில் உருவாகிய தொல்காப்பியத்திற்கு பிறகாகவே தோன்றின.
 2. தமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்கவில்லை.தமிழின் யாப்புகள், இலக்கண வரையறைகள் யாவும் சுயசார்புத் தன்மையுடன் உருவானவை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின் இலக்கியங்கள் பிற எந்த மொழி இலக்கியத்தின் சாயலுமற்ற தனித்தன்மையானவை.
 3. தமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் செம்மொழிகளின் இலக்கியங்களோடு இடம்பெறுவதற்கான தகுதிகளில் எந்த விதத்திலும் தாழ்ந்தவையன்று. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் போன்றவை உள்ளன.
 4. தமிழ் நவீன இந்தியாவின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் தேவையான அடிப்படையை வழங்கிய தனித்து இயங்கும் மொழி. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் உதவுதது போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தேவையாக உள்ளன.


இவை போன்ற இன்னும் பல தனித்துவமும் பெருமையும் மிக்க பண்புகளால் தமிழ் மொழியானது இந்திய நடுவண் அரசால் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

====================

சந்தேகம்:

நடுவண் அரசு மட்டும் தமிழை செம்மொழி என அறிவித்தால் போதுமா என்றும் சர்வேதச அமைப்பு எதுவும் தமிழை செம்மொழி என்று அறிவிக்கத் தேவையில்லையா என்றும் ஒரு வினா இருக்கிறது. அப்படி எந்தவிதமான அதிகாரப்பூர்வ சர்வேதச அங்கீகாரத்தையும் இணையத்தில் கண்டறிய முடியவில்லை.
====================
நச் கமெண்ட்: (நண்பரொருவர் தனது ஆர்குட் பக்கத்தில் எழுதியிருந்தது)

நாட்டை பிரித்து குடும்பத்தாருக்கும் வீட்டை மக்களுக்கும் கொடுத்த நம் முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்