May 25, 2010

செவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம்

23.04.1983 இல் இறந்து போன ராயப்பனை
எடுத்து வந்த போது
இந்த மயானம் ஊருக்கு வெளிப்புறமாக இருந்தது
அன்று
சித்திரை மழையில் சிக்கிக் கொண்டவர்கள்
மழையோடு சேர்த்து ராயப்பனையும் சபித்தார்கள்

மயானத்தை அமானுஷ்யம் சுற்றி வருவதாகச் சொன்னவர்கள்
அருகில் வீடு கட்டிய ரவி
11.07.1989 இல் வாகனத்தில் நசுங்கியபோது
தங்களின் அனுமானத்தை நிச்சயமாக்கிக் கொண்டார்கள்

21.02.1991 இல் தூக்கிலிட்டுக்கொண்ட சங்கரியை
14.08.1985 இல் இறந்தவனுக்கும்
நாள் குறிக்காமல் புதைக்கப்பட்ட இன்னொருவளுக்கும் இடையில்
புதைத்தவர்கள்
அடுத்தநாள்
மயானத்தை விரிவுபடுத்தக் கோரி மனுவும் கொடுத்தார்கள்

மயானத்தை ஒட்டி
ஒரு தொழிற்சாலை வருவதான தகவலைப் பெற்றுக் கொண்டவர்கள்
வாடகைக்கு விடுபவர்களை பேய்கள் தாக்குவதில்லையென்றும்
குடியிருப்பவர்களையே குறி வைப்பதாகவும் உறுதிப் படுத்திக் கொண்டு
வீடு கட்டத் துவங்கினார்கள்

சில கட்டிடங்கள் முளைக்கத் துவங்கிய பகுதியில்
மழைக்கு ஒதுங்குவதிலும்
வெயிலுக்கு நிழல் சேர்வதிலும் பெரிய சிரமமிருக்கவில்லை

1998 இல் மாரடைப்பில் இறந்த ரகுபதியை
எண்பதுகளில் சாய்ந்த
எவனோ ஒருவன் மீதுதான் படுக்க வைத்துவிட்டு வந்தார்கள்

2000 ஆம் ஆண்டில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிரம்மாண்ட நிழல்
புதைக்கப்பட்டவர்கள் மீது விழுந்த போது
மயானத்தின் சுவர்களையொட்டி
இளநீர் கடை
கேரள பேக்கரி
ஆந்திரா மெஸ்
லேடீஸ் டெய்லர்ஸ்
துவக்கியவர்கள்
இன்று பணக்காரர்களாகிவிட்டார்களாம்

17.05.2010 இல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபாத்தை
ஓய்விக்க எடுத்து வந்த போது
மயானம் இந்த பெருநகரத்தின்
சிறு துரும்பாகிவிட்டது
இங்கு
ஏற்கனவே இடம்பிடித்த
நூற்றுக் கணக்கானவர்கள் மீதே
புதியவர்களை புதைக்கிறார்கள்

இந்தப் பகுதியின் வல்லவர்கள்
தங்களின் பிரியமானவர்களை புதைத்த இடத்தின் மீது
கான்கிரீட்டால் ஒரு சதுரக் கட்டடத்தை எழுப்புகிறார்கள்
சாமானியர்கள்
துலுக்கமல்லி பூவையோ செவ்வந்திப் பூவையோ தூவிவிட்டு
செல்கிறார்கள்

மயானத்தின் ஒற்றை மரத்தில்
தலையைச் சிலுப்பிக் கொண்டிருக்கும் குருவி
பறப்பதற்கு எத்தனிக்கையில்
இவன்
நெரிசலில் தொலைந்து போன
தன்
செல்போனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

May 17, 2010

கலாப்ரியா படைப்புக்களம் - நிகழ்வுக் குறிப்புகள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் கலாப்ரியா படைப்புகள் பற்றிய நிகழ்ச்சியில் நான் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசுவதாக நண்பர் செல்வேந்திரனுடன் உரையாடி முடிவு செய்த போதே கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை தேட ஆரம்பித்துவிட்டேன். என்னிடம் கலாப்ரியாவின் வனம்புகுதல்,அனிச்சம் இரண்டு தொகுப்புகள்தான் இருந்தன. கவிதைகளின் மொத்தத் தொகுப்பு இல்லை. மொத்தத் தொகுப்பு காவ்யா பதிப்பகத்தில் ஒன்று வந்திருக்கிறது. தமிழினி பதிப்பகத்தில் இருந்து இன்னொன்று. ஆனால் இரண்டுமே இப்பொழுது கடைகளில் கிடைப்பதில்லை என்று சொன்னார்கள். நண்பர்களிடம் விசாரித்த வரையிலும் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாதது போன்று தோன்றியது. வேறு வழியில்லாமல் கலாப்ரியாவிடமே கேட்டேன். தனக்குத் தெரிந்து பெரும்பாலான நூலகங்களிலும் கிடைக்கும் என்றார். கரட்டடிபாளையம் நூலகத்தில் புத்தகங்கள் மிகக் குறைவு. அங்கு தேடியதில் எடுக்கமுடியவில்லை.

கோபிச் செட்டிபாளையம் நூலகத்தில் நகுலன்,ஆத்மாநாம்,கல்யாண்ஜி தொகுப்புகளை எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் கலாப்ரியா மட்டும் தப்பிவிட்டார். நகுலன் வரலாற்று நூல்கள் பகுதியிலும், ஆத்மாநாம் அறிவியல் பகுதிகளிலும் குடியிருந்தார்கள்.

எழுத்தாளர் பாவண்ணன் ஆபத்வாந்தவன் ஆனார். அட்டையிடப்பட்டு நுனி மடங்காமல் வாசிக்கப்பட்ட தன் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரியிலிருந்து கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை எடுத்து வைத்திருந்தார். அலுவலகம் முடித்துவிட்டு அல்ஸூரில் இருக்கும் அவர் வீட்டுக்குச் சென்று வாங்கிக் கொண்டேன். காவ்யா பதிப்பக வெளியீடு அது. புத்தகம் முழுவதுமே மிக மோசமான பிரசுர வேலைகள். ஏகப்பட்ட தவறுகளும் அச்சுப் பிழைகளும். அந்தப் பிரசுர குறைகளைப் பற்றியே ஒரு தனிக்கட்டுரை எழுதிவிட முடியும்.

புத்தகம் கையில் கிடைத்த சமயத்தில் இருந்தே இரவு பகலாக கவிதைகளை படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரி பொதுத்தேர்வுகளுக்கு பிறகு நான் இத்தனை சிரத்தையாக படித்தது இப்பொழுதுதான் என்று தோன்றுகிறது.

சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு நண்பர் செல்வேந்திரன் தொலைபேசியில் அழைத்து ஞாயிறு காலையில் நடக்கவிருக்கும் ‘கலாப்ரியா படைப்புக்களம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படைப்பாளிகள் கோவை வந்துவிட்டதாகத் தெரிவித்தார். கோபியில் இருந்து கோவைக்கு இரண்டு மணிநேரப் பயணம் தான் என்பதால் நான் காலையில் கிளம்பிவருவதாகச் சொன்னேன்.அடுத்த நாள் காலையில் நான்கு மணிக்கு எழுந்துவிட்டேன். கோபியிலிருந்து கோயமுத்தூருக்கு பயணத்தில் எத்தனை சிக்கல் வந்தாலும் கூட அதிகபட்சமாக மூன்று மணிநேரம் தான் ஆகும். ஆனால் நான் 5 மணிக்கு எல்லாம் கிளம்பத் தயாராகிவிட்டேன். நான் கூட்டத்தில் பேசப் போகிறேன் என்று என்னால் சுலபத்தில் வீட்டில் நம்ப வைக்க முடியவில்லை. நாஞ்சில் நாடன் தலைமை ஏற்கிறார் என்ற போது ‘இப்படியெல்லாமா பேர் வைப்பாங்க’ என்று அம்மா தன் சந்தேகத்தை தீர்க்க முயன்று கொண்டிருந்தார்.

ஞாயிறு காலையில் கோவை காந்திபுரம் கெளரிசங்கர் ஹோட்டலில் பொங்கல் வடைக்கு காத்திருந்த போது சுகுமாரன் தொலைபேசியில் அழைத்தார். உற்சாகமாக விழுங்கிவிட்டு ஆர்.எஸ்.புரம் சன்மார்க்க சங்கம் சென்றிருந்த போது யாரும் வந்திருக்கவில்லை. அருண் தனியாகத் தட்டி கட்டிக் கொண்டிருந்தார். ஒன்பதே முக்கால் மணிவாக்கிலிருந்து வாசகர்கள் வரத்துவங்கினார்கள். நாஞ்சில்நாடன் முதலில் வந்தார். பத்து மணியளவில் மற்ற படைப்பாளிகள் வந்து சேர்ந்தார்கள். கொஞ்ச நேரம் வாசகர்களும் படைப்பாளிகளும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் பத்தரை மணியளவில் ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளரான செல்வேந்திரன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் தொடக்கம் நோக்கம் பற்றி பேசினார். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஜெயமோகனை மையப்புள்ளியாக வைத்து அவரது வாசகர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்றும் இலக்கியப்பரப்பில் தொடர்ந்து இயங்குவதற்கான முடிவுகளுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முதலில் செல்வி.இல.கனகலட்சுமி வரவேற்றார். இவர் கோவையில் இருந்து வெளிவரும் நமது நம்பிக்கை என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியர். பட்டிமன்றங்களில் பேசுவாராம். இது கலாப்ரியாவுக்கு பாராட்டுவிழா என்றுதான் பேச்சைத் தொடங்கினார். படைப்புக்களம் என்று குறிப்பிட்டால் அது பாராட்டும் விமர்சனமும் சார்ந்த நிகழ்வு. பாராட்டுவிழா என்றால் அது முடிந்தவரையில் எதிர்நிலைக் கருத்துக்கள் குறைவாக இருக்கும் நிகழ்வு என்பதுதான் என் புரிதல் என்பதால் சற்று குழப்பமடைந்தேன். கனகலட்சுமி வந்திருந்தவர்களை எல்லாம் பாராட்டி வரவேற்றார்.

நாஞ்சில்நாடன் தலைமை உரையை நிகழ்த்தினார். கொஞ்சநேரமே பேசப் போவதாகச் சொல்லி பேச ஆரம்பித்தவர், எழுபத்தைந்துகளில் தான் எழுத வந்த போது வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களோடு சேர்த்து கலாப்ரியாவையும் வாசித்தது பற்றிப் பேசினார். நாஞ்சில்நாடனுக்கு சற்று கோபம் அதிகம் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். இந்த நிகழ்விலும் தோன்றியது. தமிழகத்தில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றியும் சற்று காட்டமாகவே பேசினார். வரலாறுகளை சரியாக பதிவு செய்பவன் படைப்பாளி மட்டுந்தான் என்று அவர் சொன்னது நினைவில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் பேசி முடித்தவுடன் என்னை அழைத்தார் செல்வேந்திரன். நான் இலக்கிய மேடைகளில் பேசுவது இதுவே முதல் முறை. ஆனால் வேறு மேடைகளில் பேசிய பழக்கமிருக்கிறது. விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அந்த முன் அனுபவங்கள் எல்லாம் உதவி செய்யவில்லை. எனது அடிப்படையான பயம் நான் கலாப்ரியா கவிதைகள் குறித்தான சில எதிர்மறை கருத்துக்களை இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப் போகிறேன் என்பதுதான். கீழே அமர்ந்திருந்த அத்தனை பேரும் என்னை முறைப்பதாகவே பட்டது. எனக்குச் சரியாக ஞாபகம் இருக்குமானால் ஒரே ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து சிரித்தார். பாதி பேசியிருக்கும் போது பேச்சு கோர்வையாக வரவில்லை என்பதனை உணர்ந்தேன். இனி பேசுவது சரிப்படாது என்று உணரத்துவங்கிய சமயம் கையில் வைத்திருந்த கட்டுரையை வாசித்துவிட்டேன். தமிழ்க் கவிதையில் எளிமையோடும், நேரடித்தன்மையோடும் இருக்கும் தனித்துவக் குரல் கலாப்ரியாவினுடையது என்பதும், தொண்ணூறுகளுக்குப் பிறகாக தமிழ்க்கவிதைகளில் நிகழ்ந்த மாறுதல் கலாப்ரியாவின் கவிதைகளில் இல்லாமல் இருப்பது கவிதை வாசகர்களுக்கு பெரும் இழப்பு என்பதும், தமிழ்க் கவிதை கலாப்ரியாவை தாண்டிச் சென்றிருக்கிறது என்றாலும் தமிழ்க் கவிதை வரலாற்றில் கலாப்ரியாவின் இடம் மிக முக்கியமானது அதே சமயம் நிரந்தரமானது என்பதும் என் பேச்சின் அடிப்படை. பேசி முடித்துவிட்டு அமர்ந்தவுடன், நாஞ்சில் நாடன் என்னிடம் ‘கடைசி வரி பிரமாதம். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?’ என்றார். புரிந்தது என்று மூன்று முறை தலையாட்டினேன்.

கவிஞர் வெண்ணிலா வந்தவாசியிலிருந்து வந்திருந்தார். கலாப்ரியாவின் கவிதைகளோடான தனது உணர்வு ரீதியான தொடர்பினைப் பேசினார். கலாப்ரியாவின் பல கவிதைகள் பெண்களுக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் இருப்பதாகச் சொன்னார். தன் வாழ்வில் கிடைத்திடாத பரந்துபட்ட வாழ்வியல் அனுபவங்களின் காரணமாகவோ எதுவோ தன்னால் பல கலாப்ரியாவின் கவிதைகளை முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்பது பற்றியும் பேசினார். கலாப்ரியாவின் கவிதைகளில் தென்படும் தனித்துவம் பற்றிச் சொல்லிவிட்டு, கலாப்ரியாவின் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் போது தான் பெறும் அனுபவங்கள் பற்றி அவர் பேசியது முக்கியமானதாகப் படுகிறது.

வெண்ணிலாவைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா பேசினார். இவர் பட்டிமன்றப் பேச்சாளர். நமது நம்பிக்கை, ரசனை என்ற இரு இதழ்களின் ஆசிரியர். இரண்டு இதழ்களுமே கோவையிலிருந்தே வெளிவருகின்றன. கலாப்ரியாவின் கவிதைகளில் காணப்படும் காட்சி நுட்பம், குழந்தைகள் அல்லது குழந்தமை என்பது பற்றிப் பேசினார்.

நிறையக் கவிதைகளைச் சுட்டிக் காட்டி அந்தக் கவிதைகளில் தனது புரிதல் என்ன என்று விரிவாகச் சொன்னார். முந்தைய விமர்சனம் ஒன்றில் கலாப்ரியாவின் கவிதைகளை ‘சாதாரணர்களின் கலகம்’ என்று சுகுமாரன் குறிப்பிட்டிருப்பதை முத்தையா சுட்டிக் காட்டினார்.

கவிஞர் சுகுமாரன், கலாப்ரியா புத்தக முன்னுரையில் “பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரண நபர்” என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைச் சொல்லி பேசத் துவங்கினார். தனக்கும் மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவுக்கும் வயது, இயங்குதளம் போன்றவற்றில் இருக்கும் ஒற்றுமைகளையும், பாலச்சந்திரனுக்கு அவரது ஐம்பதாவது வயதில் நடத்தப்பட்ட பாராட்டு விழா பற்றியும், தமிழ்ச்சூழலில் அத்தகைய நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் இல்லாதது பற்றியும் பேசினார்.

தமிழின் நவீன கவிதையில் இருக்கும் தொடர்ச்சி பற்றி சுகுமாரன் குறிப்பிட்டது எனக்கு முக்கியமானதாகப் பட்டது. சுந்தர ராமசாமியின் கவிதை வரிசையில் எம்.யுவன் வருகிறார், ந.பிச்சமூர்த்தியின் தொடர்ச்சியாக வேணுகோபாலன் வ்ருகிறார்,ஞானக்கூத்தனை தொடர்ந்து ஆத்மாநாம் இருக்கிறார் ஆனால் கலாப்ரியாவில் தொடங்கினால் கலாப்ரியாவிலேயே தான் முடிக்க முடியும் என்றார். தமிழ் நவீன கவிதைகளில் பல்வேறு விதமான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்ட கவிதைகள் கலாப்ரியாவினுடைய கவிதை என்பதும் சுகுமாரனின் குறிப்பு. இயற்கை அவதானிப்பு என்பது கலாப்ரியாவின் கவிதைகளின் தனித்துவம் என்று சுகுமாரன் பேசினார்.

அடுத்து ஜெயமோகன் பேசினார். அசோகமித்திரனுக்கு அறுபதாவது ஆண்டுமலரை தான் வெளியிட்டது பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டவர், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் தொடக்கம் அதன் நோக்கம் பற்றியும் பேசினார். தான் கலாப்ரியாவின் கவிதைகளை ஏற்கனவே விரிவாக விமர்சனம் செய்திருப்பது பற்றியும் இது பாராட்டுவிழாதான் என்றும் குறிப்பிட்டு கலாப்ரியாவின் கவிதைகளில் உள்ள எளிமையைப் பற்றி பேசினார். பின்னர் கவிதைக்கும் கவித்துவத்துக்கும் இருக்கும் வேறுபாடு/தொடர்பு பற்றி சுவாரசியமான உதாரணங்களோடு விரிவாக்கினார். தான் நூறு வரிகளில் சொல்லக் கூடிய கதை ஒன்றை பக்கவாட்டில் அழுத்தினால் உருவாகக் கூடிய Micro Narration என்பது கவிதை என்றும் பேசி முடித்தார்.

கலாப்ரியா பேசத் துவங்கும்போதே தனக்கு இது மகிழ்ச்சியாகவும், சற்று கூச்சமாகவும் இருப்பதாகச் சொன்னார். தனது நேர்காணல்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்(Pattern) இருப்பதாகச் சொன்னவர், இந்தக் கூட்டத்தில் சற்று வித்தியாசமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதா என்று முயல்வதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் ஒன்பது பேர்களில் தான் மட்டுமே கல்லூரி வரை சென்றதாகவும் அதில் தனக்குக் கிடைத்த சுதந்திரம் மிக முக்கியமானதாகவும் இருந்ததாகச் சொன்னார். ஆனால் தனக்குள் உள்ளூர இருந்த அறம் சார்ந்த கட்டுப்பாடு அல்லது பயம் காரணமாக தனக்கான ஒரு எல்லைக் கோடு தொடர்ந்து இருந்தது என்றார்.

தீர்த்த யாத்திரையை தன் கல்லூரியின் தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களில் எழுதியதாகச் சொன்னவர், நவீன் கணிதத்தில் இருக்கும் Concrete theory இல் இருந்து Abstract Theory க்கு செல்லும் அதே நுட்பத்தைத்தான் தன் கவிதைகளில் தான் முயன்று பார்ப்பதாகச் சொன்னார்.

கல்யாண்ஜி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் பேசாதது எனக்கு ஏமாற்றம்.

கூட்டம் கடைசி வரையில் கலையாமல் இருந்தது, கூட்டத்திற்குப் பிறகாக திட்டு திட்டாக வாசகர்கள், படைப்பாளிகளோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலுக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளுடன் சென்று மதிய உணவை முடித்துவிட்டு, சுகுமாரன் எனக்காகத் திருவனந்த புரத்தில் இருந்து கொண்டு வந்திருந்த மூன்று புத்தகங்களைக் பெற்றுக் கொண்டு கிளம்பினேன். இரண்டு மணி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. கோவையில் வேறு எங்கும் செல்லாமல் பேருந்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன்.

தொலைபேசியில் மனைவி அழைத்து “அப்படியே சென்னை சில்க்ஸ் போயி பையனை உட்கார வெச்சுப் பழக்கும் சேர் ஒண்ணு வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள். அலைய வேண்டும் என்று நினைக்கும் போதே வெயில் மூன்று டிகிரி அதிகமானதாக உணர்ந்தேன். அவளிடம் நான் கூட்டத்தில் ‘பேசு’வதற்காகத்தான் சென்றேன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், அரங்கசாமியிடமும், உடுமலை.காம் சிதம்பரத்திடமும் சொல்லி அச்சடித்திருந்த ஒரு அழைப்பிதழை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். என் பெயர் அதில் இருந்தது. வெயில் அப்படியேதான் இருந்தது.

நன்றி:

இந்தக் கட்டுரை சொல்வனம்.காம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.

புகைப்பட உதவி: சஞ்சய்காந்தி

நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்:
http://picasaweb.google.co.in/blogsking/CkaZhK?feat=flashalbum#
http://picasaweb.google.com/112702711803427276201/KalapriyaCbe#

May 11, 2010

கலாப்ரியா கவிதைகள்: என் பார்வை


வாசிக்கத் துவங்கிய காலத்தில் வார இதழ்களிலும், நூலகத்தில் கிடைக்கும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியிருந்த கவிதைகளை படித்துவிட்டு என்னை ஒரு தீவிரமான கவிதைப் பிரியனாக சிலாகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தை நினைத்துக் கொள்கிறேன். அப்பொழுது புதிது புதிதாக நான் அறிந்து கொண்ட கவிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டு நண்பர்களிடத்தில் என்னை நிரூபித்துக் கொண்டிருந்தேன். கைவசத்தில் ஆத்மாநாம், பசுவய்யா, மனுஷ்ய புத்திரன் போன்ற வித்தியாசமான பெயர்கள் இருந்தால் சற்று அதிகமாகவே பயமுறுத்தலாம். அந்தப் பட்டியல் தயாரித்த போதே வித்தியாசமான பெயர் என்ற வரிசையில் கலாப்ரியா என்ற பெயர் அறிமுகம் ஆகியிருந்தது.

அந்தப் பள்ளிப் பருவத்தில் இருந்து கலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. கலாப்ரியா என்பவள் ஒரு அழகான இளம்பெண் என்ற நினைப்புதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளில் தெறிக்கும் பாலியல் குறியீடுகளும் ஈர்ப்புக்கு இன்னொரு காரணமாக இருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் வாசித்திருந்த கலாப்ரியாவின் வெகு சில கவிதைகளில், யாவுமே ஆணின் பார்வையில் அமைந்த கவிதைகளாக இருந்தன. இது கலாப்ரியா ஆணா பெண்ணா என்ற குழப்ப நிலையிலேயே என்னை வைத்திருந்தது.

அந்த நாட்களில் கலாப்ரியாவின் சில கவிதைகளையே வாசித்திருந்தாலும் அவை அந்த வயதுக்கும், அந்த வயதில் கிடைத்திருந்த வாசிப்பனுவத்துக்கும் ஏற்ப சிலாகிக்கத்தக்க கவிதைகளாக இருந்த சாதாரண கவிதைகள்தான். அவரது முக்கியமான கவிதை எதையும் வாசித்திருக்கவில்லை. உதாரணத்திற்கு பின்வரும் கவிதையை குறிப்பிடலாம்.

அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகிவிட்டாள்.

இப்பொழுது வாசிக்கும் போது இந்தக் கவிதை எந்த விதமான கவிதானுபவத்தையும் தருவதில்லை. இது ஒரு துணுக்கு மட்டுமே. ஆனால் பதினாறு வயது நிரம்பியவனுக்கு இது துள்ளலான கவிதையாக இருக்கும்- எனக்கு இருந்தது.

நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்திருந்த கவிஞர் ஒருவர் "கலாப்ரியாவை படிங்க" என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்பொழுது கவிதை குறித்த பெரிய தேடல் எதுவும் இருக்கவில்லை. அதனால் கலாப்ரியா கவிதைகளை தேட வேண்டும் என்ற உத்வேகம் எதுவும் எனக்குள் உருவாகியிருக்கவில்லை.அதற்கு பிறகாக சென்னை வந்து நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போதுதான் கலாப்ரியாவின் கவிதைகள் பெருமளவில் வாசிக்கக் கிடைத்தது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கையும், கவிதைகளில் தொட்டிருக்கும் தளங்களும் பரந்துபட்டது.

தமிழில் நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போது அவை புரிவதில்லை என்ற கருத்து மெல்ல மண்டையில் ஏறிக் கொண்டிருந்தது. எந்தக் கவிதையும் தான் சொல்ல வந்ததை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்து இருப்பதாகவே நினைப்பு உருவானது. அந்தச் சமயத்தில் உயிர்மை பதிப்பகத்தில் "நவீன கவிதை:ஓர் அறிமுகம்" என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். முக்கியமான தமிழ் கவிதாளுமைகளின் கவிதைகள் அந்தத் தொகுப்பில் இருந்தது.

என்னளவில் இந்தக் கவிதைகளுக்கான திறப்பு என கலாப்ரியாவின் விதி என்ற கவிதையை குறிப்பிடத் தோன்றுகிறது.

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

நவீன கவிதைகள் என்பது புரியவில்லை என்ற முடிவுடன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்தக் கவிதை தரக் கூடிய வெளிச்சம்தான் இந்தக் கவிதையின் வெற்றி. இந்தக் கவிதை தன்னளவில் எந்தவிதமான உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. இந்தக் கவிதையில் எந்தவிதமான புலம்பலும் நேரடியாக இல்லை. ஆனால் ஆழ்ந்த துக்கத்தை, உடனடி பதற்றத்தை வாசகனின் விரல்களுக்குள் பாய்ச்சுகிறது. இந்த 'அமைதியான உணர்ச்சி மாற்றம்தான் நவீன கவிதை' என இந்தக் கவிதையை வைத்து என்னளவில் ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இதன் பிறகாகவே நான் வாசிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலை தயாரிக்க முடிந்தது. நவீன கவிதை என்ற பெருங்கடலின் சூட்சுமங்களை நோக்கி நகர்ந்தவனுக்கு சிக்கல்களை அவிழ்க்கும் சூத்திரங்கள் நிரம்பிய கவிதைகளை அறிமுகமாகத் துவங்கின.

கலாப்ரியாவின் கவிதைகளில் வாசகன் எதிர்நோக்கும் நேரடித் தன்மையும், எளிமையும்தான் இந்தக் கவிதைகளின் தனித்துவமாகத் தெரிகிறது. காட்சிகளையும், இயல்பான பேச்சினிடையே தெறித்த சொற்களையும் அவற்றின் துல்லியம் மாறாமல் கவிதைகளாக்கியிருக்கிறார். வைப்பாட்டி வீடு 'போய்த்' திரும்பும் நெல்லையப்ப முதலியார் ஈரக்காலுடன் நுழைவதும், மூன்றாம் வகுப்போடு படிப்பையும் தோழியையும் பிரிந்த தக்ஷிணாமூர்த்தி எழுத்துக் கூட்டி தந்திப்பேப்பர் பார்க்கும் சலூன் கடை வாசலும் பிசிறில்லாமல் கவிதைகளாகியிருக்கிறது. தமிழில் நவீன கவிதைகள் இறுக்கத்திலிருந்து இன்றைய எளிமையை நோக்கி மிக மெதுவாகவே நகர்ந்து வந்திருக்கின்றன. தமிழ்க் கவிதையின் இந்தப் பயணத்திற்கு- எளிமை நோக்கிய பயணத்திற்கு கலாப்ரியா தன் கவித்தோள்களை கொடுத்திருக்கிறார் என்பதற்கான சாட்சியங்கள்தான் அவரது கவிதைகள்.


சொன்னான், "நெடுநாளாய் ஒரு கவிதைக்காய் காத்திருக்கிறதாய்-" என்ற ஒரு வரியை எழுதியிருக்கிறார். அனுபவங்களை கவிதையாக்குவதற்கான மனநிலை அமையாமல் கவிதைக்காக காத்திருப்பதும் உண்டு, கவிதைக்கணங்களை அனுபவிக்காது 'எதையாவது' கவிதை ஆக்கிவிடுவதற்காகக் காத்திருப்பதும் உண்டு. கலாப்ரியாவின் இந்த காத்திருப்பை முதல் வகையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகை காத்திருப்பிற்கு காரணம் அனுபவ வறட்சி. இந்த அனுபவ வறட்சிதான் கவிதை வருவதற்காக இரவு முழுவதும் பேனா மூடியை திறந்து வைத்து காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை சில கவிஞர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் அனுபவமின்றி கவிதையின் வருகைக்காக காத்திருப்பதற்கான தடயம் எதுவும் கலாப்ரியா கவிதைகளில் தென்படுவதில்லை.

அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் மின்னல் கணங்களில் இருந்தே கலாப்ரியாவின் ஒவ்வொரு கவிதையும் எழுகின்றன. அது பிள்ளைகளை வசைபாடும் அம்மை என்றாலும் சரி, ஞாயிறு தாம்பத்யத்தை நெருங்கி வந்து பார்க்கும் மழையென்றாலும் சரி. சோமசுந்தரத்தின் நிகழ்கணங்களில் இருந்து வந்துதான் கலாப்ரியாவின் கவிதைக்குள்ளாக அமர்கிறார்கள். நினைவின் தாழ்வாரங்களை வாசித்துவிட்டு அவரது கவிதைகளை வாசிக்கும் போது அவரது வாழ்வு சார்ந்த அனுபவங்களையே கவிதைகளாக்கியிருப்பதை கவனிக்கலாம். நினைவின் தாழ்வாரங்களில் கலாப்ரியா என்ற கவிஞனுக்கு இடம் இல்லை. அங்கு சோமசுந்தரம் மட்டுந்தான் வாழ்கிறார். மாறாக கலாப்ரியாவின் கவிதைகளில் சோமசுந்தரத்துக்கு அதிகபட்ச இடத்தை கலாப்ரியா கொடுத்திருக்கிறார். தி.ஜானகிராமப் பிராமணத்திகளின் இடுப்புச் சதை பார்ப்பதும், குழாயடிச் சண்டையில் கறுத்த முண்டையின் மயிர்ப்பிடி உலுக்கலில் முலைதெறிக்க நின்ற-சிவப்பு மூளிப் பறச்சியைப் பார்ப்பதும் சோமசுந்தரம்தான். அந்தப் பார்வையைத்தான் கலாப்ரியா கவிதைகளாக்கியிருக்கிறார்.

கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பதா என்பதும் அல்லது கவிஞனின் ஊடாகவே அந்தக் கவிதையை வாசிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. விமர்சனக் கோட்பாடாகச் சொன்னால் கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பது என்பதை Close Reading என்கிறார்கள். இந்த வாசிப்பில் கவிஞனுக்கு இடம் இல்லை.கவிதையில் 'இருப்பதை' மட்டுமே கவனிக்கும் போது வாசகனுக்கும் கவிதைக்கும் மட்டுமே நேரடித் தொடர்பு உருவாகிறது.
கவிதையை வாசிக்கும் போது கவிஞனின் உணர்ச்சி,மனநிலை போன்றவற்றை படைப்பின் வழியாகத் தேடுதல் என்பது இன்னொரு வாசிப்பு முறை. இப்படி கவிஞனோடு சேர்த்து கவிதையை வாசிப்பது என்பதில் வாசகன் உணர்வுப் பூர்வமாக(Emotional) படைப்பை அணுகக் கூடும். முதலில் சொன்ன Close Reading -இலும் உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுக முடியும் என்றாலும், இரண்டாவதில்தான் உணர்ச்சிப்பூர்வ அணுகலுக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுகும் போது, கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதனை துல்லியமாக நிர்ணயிக்க முடியாமல் போய்விடலாம். இந்தத் துல்லியமில்லாத வாசிப்பினை உணர்வுப்பூர்வ பிழை(Affective Fallacy) எனக் கோட்பாடுகள் குறிக்கின்றன.

இரண்டில் எந்த வகை வாசிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் தேவையில்லை. அது தனிப்பட்ட வாசகனின் விருப்பம் என்பதுதான் என் முடிவு. எனக்கு அமைப்பியல்,கோட்பாடுகள் ரீதியாக கவிதையை அணுகுவதில் விருப்பமில்லை. துல்லியத் தன்மை இருக்க வேண்டும் என்று வாதிடுவதற்கு கவிதை என்பது அறிவியல் இல்லை. மனதோடு கவிதை நிகழ்த்தும் அனுபவ விளையாட்டுதான் பிரதானமாகப் படுகிறது.

கலாப்ரியா என்ற கவிஞரோடு பழகியிருக்கிறேன் என்பதால் அவரது கவிதைகளில் கலாப்ரியாவையும், சோமசுந்தரத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன். நான் பழகியிராத ஆத்மாநாமும், ஞானக்கூத்தனும், கல்யாண்ஜியும் எழுதிய கவிதைகளில் நான் அவர்களைத் தேடுவதில்லை. அங்கு அந்தக் கவிதைகளை மட்டுமே உள்வாங்குகிறேன். அதுதான் சாத்தியமும் கூட.

கலாப்ரியாவை தேடும் மனம் கலாப்ரியோவோடு சேர்த்து கவிதையை வாசிக்கும் போது ஒரு வாசிப்பனுபவத்தையும், கலாப்ரியாவை விடுத்து கவிதையை மட்டும் வாசிக்கும் போது இன்னொரு வாசிப்பனுபவத்தையும் அடைகிறது. எந்த விமர்சனக் கோட்பாடுகளையும் தவிர்த்துவிட்டு கவிதையின் ரசிகனாக எனக்கு இந்த இரண்டு அனுபவங்களுமே சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கின்றன. இந்த இரண்டு வித அனுபவத்தைப் பெறுவதும் கூட கலாப்ரியாவின் கவிதையில் இருக்கும் நேரடித்தன்மையால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது.

கலாப்ரியாவின் கவிதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது பல கவிதைகளில் பழைய வாசம் இருப்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உதாரணமாகக் கவிதை சொல்லியோடு உறவு கொள்வதற்கு குழந்தையை வைத்திருக்கும் பிச்சைக்காரி/விபச்சாரி அவ்வப்போது கவிதைகளில் தென்படுகிறாள்.

நமது மனம் கைக்குழந்தையுடையவளை பரிதாபமான அல்லது இரக்கம் காட்டப்படவேண்டிய ஜீவனாக கட்டமைத்திருக்கிறது. அவளை காமத்தோடு பார்ப்பதும் கூட பாவமான செயல் என்று மனம் சொல்கிறது.

தன் காமத்தை வெல்ல வழியில்லாதவனாக, எந்தப் பெண் என்றாலும் உறவுக்கு தயார் என்னும் மனநிலையில் கவிதை சொல்லி இருக்கிறான் என்னும்படியான தொனியில் கவிதையை வாசிக்கும் போது இரண்டு நுட்பங்கள் புலப்படுகிறது. ஒன்று, தன் காமத்தின் அளவினை கவிதையில் வெளிப்படுத்த கவிஞன் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்லலாம் அல்லது (இரண்டாவதாக) செண்டிமெண்டலாக தன் பார்வையாளனை தன்னை நோக்கி திரும்ப வைக்கும் வெகுஜன சினிமா அல்லது வெகுஜன பத்திரிக்கைக் கதையின் நுட்பமாக ஒப்பிடலாம். இதைக் குறிப்பிடும் போது, தன்னை வெகுஜனத் தளங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்பாத கவிதை ஆளுமை கலாப்ரியா என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. வெகுஜன ஊடகத்தின் மீது விருப்பம் கொண்டிருந்த சோமசுந்தரம், அந்த ஊடகத்தின் சில குணாதிசயங்களை தன்னை அறியாமலேயே தனக்குள் உள்வாங்கிக் கொண்டதன் விளைவே கலாப்ரியாவின் கவிதையில் தென்படும் அதீத அழகியலும், இரக்கம் வேண்டி நிற்கும் கவிதைகளும் என எடுத்துக் கொள்ள முடிகிறது.

கலாப்ரியாவின் மொத்தக் கவிதைளின் வடிவம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது. வடிவம் என்பது கவிதை சொல்லும் பாங்கு(Pattern). வடிவத்தில் வெள்ளம் தொகுப்பில் தொடங்கி வனம்புகுதல் தொகுப்பின் வரையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கவில்லை. மொத்தத் தொகுப்பாக வாசிக்கும் போது ஒரே வடிவக் கவிதைகளில் உண்டாகக் கூடிய சலிப்பு இந்தக் கவிதைகளில் ஒரு சில இடங்களில் தோன்றினாலும், இந்தக் கவிதைகளின் பெரும் பலமாக இருப்பது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் கவிதையின் காட்சிகள்தான். இந்த புதுப்பித்தல் வாசகனை உற்சாகமான மனநிலையில் நிறுத்தும் பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றன. இந்த புதுப்பித்தல்தான் கலாப்ரியாவை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்திருக்கிறது எனவும் நம்புகிறேன்.

ஒரே வடிவந்தான் என்றாலும் இந்தக் கவிதைகளுக்குள்ளாக நிகழ்த்தப்பட்டிருக்கும் புதுமைகளை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. ஒரு கவிதையின் தலைப்பு π=22/7. இன்னொரு கவிதையின் துவக்கத்தில் 6 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேயக்கூடிய பரப்பினைக் கண்டுபிடிக்கச் சொல்லும் ஒரு வினாவும் அதைத் தொடர்ந்த கணக்குப் போடாமல் அடிவாங்கி எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் சங்கரனின் வாழ்க்கை கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

அகம் சுற்றியே நிகழ்ந்த தமிழ்க் கவிதைகளை புறத்திற்கு எடுத்து வந்த முக்கியமான ஆளுமை கலாப்ரியா. கவிதைகளை தன்னில் மட்டுமே நிகழ்த்தாமல் பொதுவில் நிகழ்த்துகிறார் . இவரது கவிதைகளில் பேருந்து நிலையம்,ஆற்றோரம், வாய்க்கால் வரப்பு, ரயிலடிகள் என காட்சிகள் இடத்தையும் உணர்ச்சியையும் தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளில் சாமானிய, நடுத்தர மனிதன் கடக்கும் சகல இடங்களும், சகல உணர்ச்சிகளும், எதிர்கொள்ளும் சகல நிகழ்வுகளும் கவிதையாக்கப்படுகின்றன. கலாப்ரியா நிகழ்த்திய இந்த அக/புற மாற்றம் நவீன கவிதையின் பயணத்தில் மிக முக்கிய இடம் பெறுகிறது.

தொண்ணூறுகளின் மத்திய பகுதிக்குப் பிறகாக தமிழ் நவீன கவிதையில் அதன் வடிவம், உள்ளடக்கம், இயங்குதளம் என பலவற்றில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலை கலாப்ரியாவின் கவிதைகளில் காண முடியவில்லை என்பது கவிதை வாசகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு. தமிழ்க் கவிதையின் தொடக்கம் முதல் இன்றைய தினம் வரை காலவரிசையில் வாசிக்கும் வாசகனுக்கு கலாப்ரியா ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். எதிர்திசையில், அதாவது இன்றைய கவிதைகளில் இருந்து பின்னோக்கி நகர்பவனுக்கு கலாப்ரியாவின் கவிதைகள் தரும் தாக்கம் என்ன என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

கவிதை கலாப்ரியாவைத் தாண்டிச் சென்றிருக்கிறது. அதேசமயம் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் கலாப்ரியா என்னும் கவிதாளுமைக்கான இடம் என்பது நிராகரிக்கப்பட முடியாத இடம்.

May 5, 2010

கலாப்ரியாவின் படைப்புக்களம்

கோவை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தும் கலாப்ரியாவின் படைப்புக்களம் என்ற நிகழ்வு 09.05.2010 அன்று கோவையில் நடைபெறுகிறது.

நாள்
09.05.2010/காலை 10.15 மணி

இடம்
சன்மார்க்க சங்க வளாகம், தேவாங்க மேனிலைப்பள்ளி அருகில், கோவை

வரவேற்புரை
செல்வி. இல. கனகலட்சுமி

தலைமை
நாஞ்சில் நாடன்

பங்கேற்போர்
ஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், அ.வெண்ணிலா, வா.மணிகண்டன்

அன்பின் அழைப்பில்..
வண்ணதாசன், வண்ணநிலவன்

படைப்பனுபவப் பகிர்வு
கலாப்ரியா

தொகுத்துரைக்க
செல்வேந்திரன்

மேலதிக விவரங்களுக்கு
அருண்: 97509 85863
அரங்கசாமி: 98940 33123

அழைப்பிதழை தெளிவாகக் காண படத்தின் மீது இரண்டு முறை 'க்ளிக்' செய்யவும்.