Apr 20, 2010

எங்களை வாழவிடுங்கள்

"வளமையைத் தருவதாக வந்தார்கள். முதலில் கணவனைக் கேட்டார்கள். அவர் இறந்த பிறகு இப்பொழுது மகனைக் கேட்கிறார்கள். போதும். எங்களை வாழவிடுங்கள்". ஒரு வட இந்தியப்பெண்ணின் ஓவியத்துடன் நக்சலைட்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகத்தால் இந்த விளம்பரம் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த விளம்பரத்தின் இலக்கு யார்? நக்சலைட்களுக்கு ஆதரவாக இருப்பது நகர்புறத்தில் ஐ.பி.எல் பார்த்துக் கொண்டிருக்கும் மேல்தர, நடுத்தர வர்க்கம் என்று உள்துறை நினைத்துக் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியானால் இந்த விளம்பரம் பொருளற்றது. வீண் செலவு.

ஆதிக்க சமூகத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நசுக்கப்பட்டு, வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவன் தன்னைக் காத்துக் கொள்ள தீவிர போக்கை நோக்கி நகர்கிறான். அவனுக்கு செய்தித்தாள் விளம்பரமும், அமைச்சரின் அச்சுறுத்தலும் அல்லது வெற்று வாக்குறுதியும் எந்தவிதமான மாறுதலையும் உருவாக்கப்போவதில்லை.

நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் என்றில்லை பொதுவாகவே தலித், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு என சமீபத்திய நடுவண் அரசுகள் என்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன அல்லது எந்தத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்று யோசித்தால் திட்டவட்டமான பதில் எதுவுமில்லை. அரசாங்கங்கள் கீழ் நிலை மக்களுக்கென செயல்படுத்தப்போவதாகச் சொல்லும் வாக்குறுதிகள் யாவும் வெறும் அறிக்கைகளாக நின்றுவிடும் அவல நிலைதான் இருக்கிறது.

அரசுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது.

இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தித்தான் தலித் அரசியல் நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் விளிம்பு நிலை மக்களை உணர்வு ரீதியாக தூண்டிவிட்டு தங்களின் வாக்கு வங்கிகளாக மாற்றுகின்றன.

அரசாங்கம் பிரச்சினைகளின் மூலத்தை கண்டறிவதற்கான செயல்பாடுகளையும் அதை தீர்ப்பதற்கான திட்டங்களையும் முடுக்கிவிடுமானால் பெரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆனால் அரசுக்கு மக்களின் பிரச்சினைகளை விடவும், மேல்தட்டு வர்க்க அதிகாரிகளின் அறிவுரைகள்தான் முக்கியம். அவர்களுக்கு பிரச்சினைகள் பற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. தன் அதிகாரத்தின் மூலம் செலுத்தும் வன்முறைகள் மூலம் எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி. அதற்கு அவர்களுக்குத் தேவையெல்லாம் விசைத் துப்பாக்கிகளும் கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத்தள்ளும் பட்டாலியன் இராணுவத்தினரும் தான்.

அரசாங்கம் மக்களின் அரசாங்கமாக இருக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் புரிந்து கொண்ட அரசாங்கமாக அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வளிக்கும் அரசாங்கமாக இருக்க வேண்டும். புள்ளிவிவரங்களைத் தரும் அதிகாரிகளின் அரசாங்கமாக இல்லை.

ஷரத் யாதவிடம் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து வினவியதற்கு, "அவர் முதலில் பேச்சை குறைக்கட்டும், செயலில் காட்டட்டும்" என்றாராம். அது சரி.

Apr 15, 2010

அவைகளுக்கு கரப்பான்கள் என்று பெயர்காகிதத்துண்டுகள்
சிதறிக் கிடக்கும்
வெறுமையின் வீட்டில்
கரப்பான்கள் மட்டுமே
அதிகாரம் செலுத்துகின்றன.

மின்விசிறியின்
தீராத சுழலை பார்த்துக் கிடக்கும்
படுக்கையின் சுருங்கிய விரிப்புகளுக்குள்
பதுங்குகின்றன
ஒன்றிரண்டு கரப்பான்கள்.

மெல்லச் சொட்டும்
நீர்க் குழாயில் ஒளிந்து
வெம்மை தணிக்கிறது
ஒரு கரப்பான்.

அழுக்கும் கவிச்சையும் கலந்தேறிய
அட்சய பாத்திரத்தில்
கவிழ்ந்த கரும்படகுகளென
இறந்து மிதங்குகின்றன
மூன்று கரப்பான்கள்

கோடையின் தனிமையில்
மெல்ல
கரப்பான்களோடு வாழப் பழகுகிறேன்
கரப்பான் எச்சம் வீசும்
உள்ளாடையை
தயக்கமின்றி அணிகிறேன்
அவை
பெண்ணின் நிர்வாணமென
அரித்திருந்த காகிதத்தில்
ஒரு கவிதையை முயற்சிக்கிறேன்
கரப்பானின்
இருப்பை பொருட்படுத்தாத
சுயமைதுனங்களை
இயல்பானதாக்குகிறேன்
என்றாலும்-
தீயிட்டு
இறந்த நண்பனை
நினைவூட்டி
நள்ளிரவு கழிப்பறையில்
எதிர்ப்படும் கரப்பானால்
நடுங்கிச் சில்லிடுகின்றன
கைவிரல்கள்.

பதிலுக்கு
மறுநாள் காலை
வெந்நீர் ஊற்றி
ஒன்றை
பொசுக்கிவிட்டு
திருப்தியடைகிறேன்.

Apr 13, 2010

தமிழக சட்ட மேலவை


மிழகத்தில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உடனடியாகவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்துக்கு அதில் மூன்றில் ஒரு பங்கான 78 பேர்கள் எம்.எல்.சிக்களாக(Member of Legaslative Council) இருக்கப் போகிறார்கள்.

மாநில அளவில் குறைந்தபட்ச விவாதம் நடத்துவதற்கான கால அவகாசம் கூட இன்றி, தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த காரணத்திற்காக மேலவை அமைக்கப்படுகிறது என்பதனை திமுக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். சமூகத்தின் மேன்மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் கருத்துக்களால் அரசு இயந்திரம் செம்மையாக செயல்படும் என்பதாலேயே மேலவை அமைக்கப்படுகிறது என்னும் கீறல் விழுந்த அறிக்கையே அரசாங்கத்தால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுமெனில், மேலவை அமைப்பதற்கான பின்புலம் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத காரணமாகவே இருக்க முடியும்.

எம்.எல்.சிக்களால்தான் அரசாங்கத்திற்கு நல்ல அறிவுரைகளையும், முக்கியமான விவாதங்களையும் முன்னெடுக்க முடியுமெனில் அதை இந்த அரசு நான்காண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். இந்த அரசின் பதவிக்காலம் முடியும் கட்டத்தில் ஏன் அமைக்க வேண்டும் என்பது மக்களிடையே வினாவாக வலம் வரலாம். மேலவை தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட போது மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி அவர்கள் கண்ணீர் விட்டார் என்பது இத்தனை ஆண்டுகளாக மறந்து போயிருந்ததும் இப்பொழுது திடீரென அரசின் நினைவுக்கு வந்துவிட்டதும் ஆச்சரியம் அளிக்கிறது.

இந்த மேலவையால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. கூடுதலாக இன்னும் 78 அதிகார மையங்களை இந்த அரசாங்கம் உருவாக்குகிறது. அவர்கள் எம்.எல்.ஏக்களைப் போலவே வலம் வரப்போகிறார்கள். எம்.எல்.ஏக்களுக்காவது தொகுதியில் யாரேனும் கேள்வி கேட்கக் கூடும் என்ற சிறு பயமாவது இருக்கும்(இருக்கக் கூடும்). எம்.எல்.சிக்களுக்கு அந்த துளி பயமும் கூடத் தேவையில்லை. ஊதியம், படிகள் என்று ராஜ வாழ்க்கையை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கக் கூடிய 'அறிவுஜீவிகள்' பெறப்போகிறார்கள். எம்.எல்.சிக்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம், இதரசலுகைகள் என்று அரசு தன் தலை மீது சுமையை ஏற்றிக் கொள்கிறது.

எந்தக் கவிஞர்கள், எந்தத் தொழிலதிபர்கள், எந்தக் கல்வியாளர்கள் இந்த அவையை அலங்கரிக்கப் போகிறார்கள் என்னும் உத்தேசப் பட்டியலை குறைந்தபட்ச தமிழக அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட தயாரித்துவிட முடியும். ராஜ்யசபாவில் எத்தனை 'நல்ல'விவாதங்கள் நடக்கிறதோ அதே விதமான 'நல்ல' விவாதங்கள்தான் சட்ட மேலவையிலும் இருக்கும். ராஜ்யசபாவைவிடவும் மோசமாகச் செல்வதற்கும் அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன.

ஏற்கனவே வளமோடும் செல்வாக்கோடும் இருப்பவர்கள்தான் மேலவைக்குச் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கு அது இன்னுமொரு கெளரவப்பதவி. ஓரிரு பிரதிநிதிகள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் அது சொற்ப எண்ணிக்கையிலேயே அமைய முடியும்.

வசதிபடைத்தவர்கள், இந்தச் சமூகத்தால் அறிவுஜீவிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள் போன்றவர்களால் இந்த அரசும், முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே யார் எல்லாம் பாராட்டுவார்களோ அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சேர்க்கப்படவிருக்கிறார்கள்.

மேலவை எதற்காக தமிழகத்தில் கலைக்கப்பட்டது என்பதற்கான திட்டவட்டமான காரணம் இல்லை. கலைஞரும்,அன்பழகனும் மேலவையில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்றும், வெண்ணிற ஆடை நிர்மலா நியமனத்திற்கு உண்டான எதிர்ப்பு போன்ற யூகங்களே முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதே போலவே மீண்டும் மேலவை அமைக்கப்படுவதற்கான திட்டமிட்ட காரணங்கள் சொல்லப்படவில்லை. சில யூகங்களே புதிய மேலவைக்கான காரணமாக வெளிவரத் துவங்கலாம்.

மேலவை அமைப்பதற்காக பழைய திமுக அரசுகளால் இரண்டு முறை தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவை பின்னர் அமைந்த அ.தி.மு.க அரசுகளால் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இப்பொழுது மூன்றாவது முறை.


செண்டிமெண்ட் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

Apr 12, 2010

நாட்டு நடப்பு

டந்த சில ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்கள் குறித்தான ஒரு மந்தமான மனநிலை வந்திருப்பதை கவனிக்கலாம். எவனாவது எப்படியாவது தொலையட்டும் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்கும் வரை சரி என்பதான மனநிலை. இந்த மனநிலை அரசியல் தலைவர்களைப் பற்றியது மட்டுமில்லை. அனைத்து விஷயங்களிலும் அப்படித்தான் இருக்கிறோம். பொதுவாகவே சுரணையற்ற நம் மந்த நிலைதான் சமீப காலங்களில் இன்னும் அதிகமாக மரத்துப் போயிருக்கிறது. எருமை மீது பெய்யும் மழைக் கணக்காவே ஆகியிருக்கிறோம்.

கிட்டத்தட்ட அத்தனை தலைவர்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்றுதல், தன் வாரிசுகளுக்கான இடங்களை உறுதிப்படுத்துதல், பணம் சேர்த்தல் போன்றவை அவர்களுக்கு அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இந்த கொள்கை நிலை வார்டு கவுன்சிலர் தொடங்கி, தேசிய அளவிலான பெரிய தலைவர்கள் வரை ஒரே மாதிரிதான் இருக்கிறது. விதிவிலக்குகள் என்று யாரும் இல்லை. நாமும் இதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம். அதை விடுங்கள்.

ரு நிகழ்வுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தன் பதவியை அமைச்சர் ராஜினாமா செய்வது என்பதெல்லாம் பழங்கதை. நிகழ்வுக்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று யாரும் அதை எதிர்பார்ப்பதுமில்லை. அரசியல் தலைவர்கள் தார்மீகம் என்ற அடிப்படையில் பதவியை விட்டுக் கொடுக்க முட்டாள்களில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.

இந்த நிலையில் தந்தேவாடா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினரை குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளிய நக்சலைட்டுகளின் கொள்கை நிறைவேற விட மாட்டோம் என்று முஷ்டி முறுக்கிய கையோடு சில பல அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு உள்துறை அமைச்சர், ராஜினாமா செய்ய விரும்புவதாக கடிதம் எழுதியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான், சிதம்பரம்ஜி யின் சேவை நாட்டுக்கு மிக அவசியம் என்று மன்மோகன் சிங் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார் என்பதும், சோனியா அவருக்கு ஆதரவாக பேசுவார் எபன்பதையும் யாரும் ஊகித்திருப்பார்கள். பிறகு எதற்கு ராஜினாமா செய்கிறேன் என்று சொல்கிறார் என்றுதான் புரியவில்லை.

தனக்கு உள்துறை வேண்டாம், நிதியமைச்சராக இருப்பதில் மட்டுமே விருப்பம் என்று சூசகமாக தெரிவிப்பதாகக் கூட இருக்குமோ?

ரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திரும்பிய பக்கமெல்லாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு விளம்பரங்கள்தான் கண்ணில்படுகிறது. பேருந்துகளில் திருவள்ளுவரை வரைந்துவிட்டார்கள். 'சூன்' 23-27இல் கோயமுத்தூர் வந்து சேருங்கள் என்று பேருந்தின் பயணச்சீட்டின் பின்புறம் கூட எழுதி வரவேற்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் வாங்கிய அடியை ஈடுகட்டத்தான் கோவையை தேர்ந்தெடுத்தார்கள் என்று யாரோ ஒரு சமயத்தில் சொன்ன போது பெரிதாக உறைக்கவில்லை.

ஆனால் இப்பொழுது பார்த்தால் திமுக மாநாடு என்ற பெயரை மட்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று மாற்றிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. வீதிக்கு வீதி கழகக் கண்மணிகள் வினைல் தட்டி வைத்திருக்கிறார்கள். தரணியை ஆளும் தலைவனும் தங்க தமிழ் மகனும் அழைக்கிறார்கள்- வேங்கைப் புலியின் தலைமையில் அணி திரள்வோம் என்கிறார்கள் அல்லது கர்ஜிக்கும் சிங்கத்தின் தலைமையில் கோவையை அதிரச் செய்வோம் என்கிறார்கள்.

கனிமொழி ஆங்காங்கே இடம் பெறுகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு வினோத பட்டங்களில் கலைத்தாயின் செல்லமகள் என்ற பட்டம் மனதில் நிற்கிறது. விடுவார்களா அடுத்தவர்கள்? கவித்தாய் கயல்விழி அழைக்கிறார் என்று எதிர் சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

கலைஞருக்கு இப்படி நடப்பதெல்லாம் தெரியாமல் இருக்குமா அல்லது அவரேதான் செய்யச் சொல்கிறாரா?

Apr 8, 2010

சமகாலக் கவிஞன்: சுகுமாரன்


தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால் கவிதைகளை வாசிப்பவர்களும் கவிதை பற்றி பேசுபவர்களும் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.
நவீன கவிதைகளைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வரும் மிகச் சொற்பமானவர்களில் முக்கியமானவர் சுகுமாரன். விமர்சனம், முன்னுரை, கவிதையின் போக்கு பற்றியதான கட்டுரைகள், கவிதாளுமைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்ற ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி சுகுமாரனது கட்டுரைகளை கவிதை வாசகர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. சுகுமாரனின் செயல்பாட்டின் சிறப்பம்சமாக அதன் நேர்மைத் தன்மையும் கறார்த்தன்மையையும் குறிப்பிடுவேன்.

சுகுமாரனின் கவித்துவம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்துவிட்டது என்று ஒரு விமர்சனக் குறிப்பை பார்த்தேன். போகிற போக்கில் கருத்துகளை உதிர்த்து செல்வதற்கு முன்னதாக சற்றேனும் நாம் குற்றம் சாட்டுகிறவரின் சமகால இலக்கியச் செயல்பாட்டினை அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி'2010 உயிர்மையை புரட்டிப் பார்த்திருந்தால் கூட, இந்த வாக்கியத்தை எழுத கை நடுங்கியிருக்கும். அதில் ஐந்து முக்கியமான கவிதைகளை சுகுமாரன் எழுதியிருக்கிறார். நான் பிரதி எடுத்து வைத்திருக்கும் "வாசவதத்தை தற்கொலை செய்த இடம்" என்ற ஒரு பிரமாதமான கவிதையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். கவிதையை கவிதையாக மட்டுமே வாசிக்கும் எந்த ஒரு வாசகரும் கவித்துவத்தை நிர்ணயம் செய்து கொள்ளட்டும்.

கவிஞனை அவனது கவித்துவம் பற்றிய எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாக்குவதற்கு முன்னால் கவித்துவம் குறைந்திருக்கும் அந்த கவிஞனது சில சமீப கவிதைகளையாவது முன் வைத்திருக்க வேண்டும்.

கவித்துவம் குறைந்துவிட்டது என்று யாரும் யாரைப் பார்த்தும் சொல்லிவிட முடியும். ஆனால் சொல்லும் இடத்தில் படைப்பு சார்ந்து விவாதிக்க இடம் கொடுத்திருக்கிறோமா என்பதுதான் அந்தக் விமர்சனக் குறிப்பை பொருட்படுத்த வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதை நிர்ணயிக்கிறது. படைப்பு சார்ந்த விவாதிக்க விமர்சனக் குறிப்பில் ஒரு வரி இடமாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தக் குறிப்பில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சுகுமாரன் முன்னால் நடந்து செல்லும் கவிதாளுமை மட்டுமில்லை. தனக்கு பின்னால் வந்து கொண்டிருக்கும் கவனம் பெறத்தக்க கவிஞர்களைப் பற்றி எழுதுவதிலும் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. பெண் கவிஞர்களுக்கு விமர்சனம் எழுதுகிறார் என்று தூற்றும் முன்பு தான் தூற்றும் நபர் வேறு யாருக்கெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கிறார் என்பது பற்றியும், எழுதிய விமர்சனத்தில் என்ன இருக்கிறது என்றும் கவனித்திருக்க வேண்டும். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய பெரும்பாலான இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் சுகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார். உதாரணமாக இந்த ஆண்டு வந்திருக்கும் த.அரவிந்தனின் முக்கியமான தொகுப்பில் மிகச் சிறந்த முன்னுரை சுகுமாரனுடையது. பிருந்தாவின் கவிதைகள் பற்றி எதிர்மறை விமர்சனந்தான் எழுதியிருக்கிறார்.

சுகுமாரன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அவரைப் பற்றிய பொதுவான விமர்சனம் வைக்கப்பட்டிருக்குமாயின் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளான பிரச்சினையாக இருந்திருக்கும் அல்லது மொழி பெயர்ப்பு தவறு என்பது மட்டுமே கட்டுரையின் சாராம்சமாக இருப்பினும் எனக்கு மொழிபெயர்ப்பில் இல்லாத பரிச்சயத்தின் காரணமாக எதுவும் பேசியிருக்க முடியாது.

ஆனால் போகிற போக்கில் சுகுமாரனின் கவித்துவம் முடிந்துவிட்டது என்பதும், அவர் பெண்களுக்கு மட்டுமே பாராட்டுபத்திரம் வாசிக்கிறார் என்பதும் முற்றாக நிராகரிக்க வேண்டிய வாதங்கள்.

ஒரு கவிதை வாசகனாக, தமிழ்க் கவிதைகளை தொடர்ந்து கவனிப்பவனாக, ஒரு முக்கியமான கவிதாளுமை மீதான உண்மையற்ற விமர்சனத்துக்கு அரைப்பக்க பதில் கூட எழுதாமல் இருக்க முடியவில்லை.

இதைப் பதிவிடும் போது சுகுமாரனின் சமீப கவிதைகளையும், அவரது கவிதை சார்ந்த கட்டுரைகளையும் நான் இன்னும் விரிவாகவே பேசியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
===
நேற்று ஹஃபீஸின் கவிதையை இணையத்தில் தேடினேன். இந்தக் கவிதைக்கு தலைப்பு எதுவுமில்லை. "த கிப்ஃட்" என்னும் தொகுப்பில் வேறு சில கவிதைகளுடன் இருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பையும், சுகுமாரனின் மொழிபெயர்ப்பையும் இணைத்திருக்கிறேன்.

I
Have
Learned
So much from God
That I can no longer
Call
Myself

A Christian, a Hindu, a Muslim,
A Buddhist, a Jew.

The Truth has shared so much of Itself
With me

That I can no longer call myself
A man, a woman, an angel,
Or even pure
Soul.

Love has
Befriended Hafiz so completely
It has turned to ash
And freed
Me

Of every concept and image
My mind has ever known
=============
நான்
கடவுளிடமிருந்து ஏராளமாகக்
கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எனவே
ஒரு கிறித்துவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லிம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக் கொள்ள மாட்டேன்

உண்மை
என்னிடம் ஏராளமானவற்றைப்
பகிர்ந்து கொண்டிருக்கிறது

எனவே
ஓர் ஆண் என்றோ
ஒரு பெண் என்றோ
ஒரு தேவதை என்றோ அல்லது
தூய ஆன்மா என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக் கொள்ள மாட்டேன்

அன்பு
முழுமையாக ஹஃபீஸுடன் நட்பு
கொண்டாயிற்று

என் மனம் இதுவரை அறிந்த
எல்லா எண்ணத்தையும்
எல்லா பிம்பத்தையும் சாம்பலாக்கி
விட்டது.

என்னை விடுதலை செய்து விட்டது.
======
உயிர்மை'2010 ல் வெளி வந்த சுகுமாரனின் கவிதை:

வாசவதத்தை தற்கொலை செய்த இடம்
நீங்கள் நின்றிருக்கும் இந்த இடம்
வயலாக இருந்தது முன்பு
இன்னும் மட்காத
ஏதோ விதை நெல்லின்
புனர்ஜென்மச் சுவாசம்
உங்கள் பாதங்களில் படரலாம்

நீங்கள் பார்க்கும் இந்த இடம்
அந்தப்புரமாக இருந்தது முன்பு
இன்னும் கடைத்தேறாத
ஏதோ கணிகையின்
உயிருள்ள விலா எலும்பு
உங்கள் பாதங்களை நெருடலாம்

நீங்கள் மிதித்திருக்கும் இந்த இடம்
காமத்தின் தடாகமாக இருந்தது முன்பு
இன்னும் மோகமடங்காத
ஏதோ விரகிதனின்
வலக்கை நடுவிரல்
உங்கள் பாதங்களையும் சுரண்டலாம்

ஏன் நின்றுவிட்டீர்கள்
தயங்காமல் வாருங்கள்
சொன்னதெல்லாம் நேற்றைய உண்மைகள்
இன்றைய கதைகள்

நீங்கள் நடந்து தீர்க்கும் இந்த இடம்
வயல்களாக இருந்ததால் ஆட்கள் இருந்து
ஆட்கள் இருந்ததால் கணிகையர் இருந்து
கணிகையர் இருந்ததால் கதைகள் படர்ந்த இடம்

உங்களூர்க் கணிகைகள் எப்படி இறந்தார்களென்று
தெரியாது என்கிறீர்கள்
எங்களூர்க் கணிகைகள் எப்படி இறந்தார்களென்று
தெரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு கணிகைக்கும் ஒவ்வொரு மரணம்
ஒருத்திக்கு மூப்பு
ஒருத்திக்குப் பட்டினி
ஒருத்திக்கு வியாதி
ஒருத்திக்கு விபத்து
ஒருத்திக்குக் கொலை
ஒருத்தி மட்டும் தற்கொலையில் முடிந்தாள்

ஏனென்கிறீர்கள் கேளுங்கள்
தெரியாதா உங்களுக்கு
தற்கொலையும் ஓர் ஆயுதம்
எப்படியென்கிறீர்கள் கேளுங்கள்
எப்போதும்
கணிகை நிலம் மன்னர் கலப்பை
கணிகை கொள்கலம் மன்னர் கொடைக் கை
கணிகை இரை மன்னர் வேட்டையாடி
கணிகை பணிவு மன்னர் அதிகாரம்

அந்தப்புரத்தில் துயிலக்
கடமைப்படாத அபூர்வ நாளில்
ஏதோ ஒருவன்
பணிந்து கிடந்தான் கணிகை அமிழ்ந்தாள்
இரையாகக் கிடந்தான் கணிகை கவ்வினாள்
வட்டிலாய்க் கிடந்தான் கணிகை பரிமாறினாள்
நிலமாய்க் கிடந்தான் கணிகை நீராய்ச் சுழன்றாள்

அந்தப்புரத்தில் துயிலக்
கடமைப்பட்ட வாடிக்கைப் பொழுதில்
ஆசைப்பட்டாள்
நிலத்தின் மீது மழையாய் இறங்க
கொடைக்கையாக உயர்ந்தேயிருக்க
இரையை விரட்டி விளையாடிப் பார்க்க
பணிவின்மீது கட்டளையாய்க் கவிய

விபரீதமென்கிறீர்கள் கேளுங்கள்
அடக்கம் ஒருநாள் அடக்கவும் விரும்பும்
ஐயமிருந்தால் துணைவியைக் கேளுங்கள்
சரி, மீதியும் கேளுங்கள்
அந்தப்புரத்து விதிகளை மீறிய
கணிகையை விரட்டியது அரசாணை

நீங்கள் சாய்ந்திருக்கும் இந்த மரத்தின் கிளையில்தான்
நிழலாய்த் தொங்கினாள்
இப்போதும் இலைகளில் கணிகையின் மூச்சு
தம்புரா ஒலிபோல் அசைவதைக் கேளுங்கள்

நீங்கள் மிதித்திருக்கும் இந்த இடத்தில்
மனைவிக்குத் தெரியாமல்
அழாத ஆடவரில்லை.

நீங்கள் நின்றிருக்கும் இந்த இடம்
முன்பு
காமத்தின் தடாகமாக இருந்தது
வாசவதத்தை அதில் நீராகத் ததும்பினாள்
அந்தப்புரத்தின் அதிகாரமாக இருந்தது
வாசவதத்தை அதில் மறுப்பாகத் திமிறினாள்
வயலின் சிலிர்ப்பாக இருந்தது
வாசவதத்தை அதில் தானியமாக முளைத்தெழுந்தாள்

நீங்கள் தெரிந்துகொண்டிருக்கும் இந்த இடம்
முன்பு
வாசவதத்தையின் உடலாக இருந்தது
வாசவதத்தை இங்கே இருந்துகொண்டேயிருக்கிறாள்

Apr 7, 2010

குட்டிப் பழங்கதை: ப்ரான்ஸ் காப்ஃகா

"அய்யோ" என்றது எலி, "ஒட்டு மொத்த உலகமும் ஒவ்வொரு நாளும் சிறியதாகி வருகிறது. தொடக்கத்தில் இது மிகப் பெரியதாக இருந்தது, அது எனக்கு பயமாகவும் இருந்தது. நான் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தேன், தூரத்தில் வலது மற்றும் இடது புறங்களில் சுவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இந்த நீளமான சுவர்கள் மிக விரைவாக நெருங்குகின்றன. நான் ஏற்கனவே இறுதி அறைக்கு வந்துவிட்டேன், அந்த மூலையில் பொறி இருக்கிறது நான் ஓட வேண்டும்." "நீ உன் திசையை மட்டும் மாற்றியிருக்க வேண்டும்" என்று சொன்ன பூனை, அதனை தின்று முடித்தது.

A Little Fable
"Alas," said the mouse, "the whole world is growing smaller every day. At the beginning it was so big that I was afraid, I kept running and running, and I was glad when I saw walls far away to the right and left, but these long walls have narrowed so quickly that I am in the last chamber already, and there in the corner stands the trap that I must run into." "You only need to change your direction," said the cat, and ate it up

*இந்தக் கதை ப்ரான்ஸ் காப்ஃகாவின் வாழ்நாளில் வெளிவராமல் பின்னர் பிரசுரமானது.

=====
எனக்கு மொழிபெயர்ப்பில் அவ்வளவாக பயிற்சி இல்லை. முன்னர் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் அத்தனை திருப்தி இல்லை. இன்னும் நேர்த்தியாக செய்யும் வரைக்கும்-பின்னரும் கூட மூலத்தை தருவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

Apr 5, 2010

நிசப்தம்.காம்

நிசப்தம்.காம் என்ற பெயரில் இந்த வலைப்பதிவை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். பழைய கள்ளுதான். புதிய மொந்தையில். மொந்தைக்கு வர்ணம் பூசுதல் போன்ற சில தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த வாரத்திற்குள் ஒரு வடிவம் வந்துவிடும் என்று நம்புகிறேன். கொண்டு வர முடியவில்லை என்றால் பதிவு செய்த காசு போய்விடுமே. அதற்காகவாவது செய்துவிட வேண்டும்.

பதிவை மூடினால் நூற்றுக்கணக்கான பக்கங்கள் திறப்பது போன்ற தொல்லைகளின் காரணமாக உடனடியாக இந்தத் தளத்தை செயல்படுத்த முடியவில்லை. கை ஊன்றி கர்ணம் அடித்துதான் இதை பார்வைக்கு கொண்டு வர முடியும் போல் இருக்கிறது.

வலைப்பதிவை இணையதளமாக மாற்றினால் என்ன என்று பற்ற வைத்த அபிலாஷூக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வாமணிகண்டன்.காம் என்று பதிய கூச்சமாக இருந்தது. பேசலாம்.காம் என்றே இருந்திருக்கலாம் ஆனால் நான் செய்த தொழில்நுட்ப தவறு காரணமாக அந்தப் பெயரை பதிவு செய்ய முடியவில்லை. அதனால் பேசலாமிலிருந்து எதிர் திசையில்.. நிசப்தம்.

நான் வலைப்பதிவில் எழுதுவதாலோ அல்லது இணையதளமாக மாற்றுவதிலோ யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. நான் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறேன் என்ற சுயபந்தாவிற்கு இது உதவலாம் என்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும்...எதுவுமே எழுதாத தினத்திலும் ஒரு எட்டு வந்து செல்லும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!