Mar 15, 2010

இன்ன பிறவும்

கவிதை வாசிப்பு மனநிலை சார்ந்த விஷயமாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கவிதைத் தொகுப்பை வாங்கும் போதும் சரி அல்லது வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முதலில் தோராயமாக பக்கங்களை புரட்டுவதும், புரட்டியதில் கைக்கு வந்த பக்கங்களில் இருக்கும் கவிதைகளில் ஓரிரு வரிகளை வாசிப்பதும் பின்னர் அந்த வரிகளின் தாக்கத்தை பொறுத்து தொடர்ந்து வாசிப்பதா என்பது குறித்தும் முடிவெடுப்பதுண்டு.

இத்தகைய முடிவுகள் தவறானதாகவும் அமைந்துவிடுகின்றன. ஒரு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கவிதைகளும் வாசக மனதை வசியம் செய்யக் கூடியதாக இருப்பதில்லை. இந்த தேடல் முறையின் தோல்விக்கான இன்னொரு காரணம், ஒரு சந்தர்ப்பத்தில் உவப்பாக இல்லாத கவிதை வேறொரு சமயத்தில் பிரமாதமானதாக தோன்றுகிறது அல்லது முன்பு பிடித்திருந்த கவிதை பின்னர் அத்தனை நல்ல கவிதையாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த மாறுதல்கள் மனநிலையோடு கவிதை நிகழ்த்தும் ரசவாத விளையாட்டுகளின் விளைவுகள்.

செல்வராஜ் ஜெகதீசன் எழுதியிருக்கும் இன்ன பிறவும் தொகுப்பு கிடைத்த போது தொகுப்பில் ஓரிரண்டு கவிதைகளை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட்டேன். பிறகு புறம் மற்றும் அகச்சூழலால் கவிதையை வாசிக்கும் மனம் வாய்க்கவில்லை. கவிதை வாசிப்பதற்கான மனநிலை இல்லாத போது என்ன முயன்றாலும் கவிதையை வாசிக்காமல் வெறும் வார்த்தைகளை மட்டுமே வாசிப்பதாக தோன்றுகிறது. இருபது நாட்களுக்குப் பிறகாக இன்றிரவு இந்தக் கவிதைகளை வாசிக்கும் போது மனம் கலவையான தன்மையில் அலைவுறுகிறது.

வாசித்துவிட்டு பெருமொத்தமாக யோசிக்கும் போது, திரண்ட விமர்சனமாக மனக்கண்ணில் தோன்றுவது "இந்தத் தொகுப்பில் கவிதைகள் இயல்பானவையாக இருக்கின்றன". கவிதைக்கான சொற்களுக்கும், காட்சிகளுக்கும் கவிஞன் காத்திருக்காத தன்மை தென்படுகிறது. தான் எதிர் கொண்ட காட்சிகளையே செல்வராஜ் கவிதையாக்கியிருப்பதான பிம்பம் இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது உருவாகிறது.கவிதையின் வெளிப்பாடு உற்சாகமானதாகவும் வாசகனை வசீகரிக்கக் கூடியதாகவும் இருக்கும்பட்சத்தில் கவிதையை வாசகன் எளிதாக நெருங்கிவிடுகிறான். புரிதல் குறித்தான வினாக்களும், கவித்துவ சிக்கல்கள் பற்றியும் அவன் யோசிக்க வேண்டியிருப்பதில்லை. நேரடியாக கவிதையை அடைகிறான்.

நாற்காலிகளைப் பற்றிச் சொல்ல/என்ன இருக்கிறது/அவை நாற்காலிகள் என்பதைத் தவிர
என்று தொடங்கும் கவிதையையும், பூனைகள் கவிதையையும் இன்ன பிறவும் தொகுப்பில் வெளிப்பாட்டு முறைக்காக குறிப்பிட வேண்டிய கவிதைகள். கவிதைகளின் வெளிப்பாட்டு முறையில் செல்வராஜுக்கு கிடைத்திருக்கும் இலாவகம் இந்த இரண்டு கவிதைகளிலும் புலனாகிறது.

இந்த இடத்தில் வெளிப்பாட்டு முறை என்பது ஓசை அல்லது சந்தம் என்பதன் மூலமாக உருவாக்கப்படுவதில்லை. இலகுவான சொல் முறையையும், தடையற்ற ஓட்டத்தையும், மென்னதிர்வையும் தனக்குள் கொண்டு வெளிப்படும் கவிதைகளைச் சொல்கிறேன். இந்த வெளிப்பாட்டு முறை எந்தச் சிரமமுமில்லாமல் வாசகனுக்கும் கவிஞனுக்குமான பாலத்தை உருவாக்குகிறது.

எளிமையை நோக்கி நகரும் பெரும்பாலான கவிதைகள் நேரடிக் கவிதைகளாகவும் பரிமாணம் பெறுகின்றன. செல்வராஜ் பெரும்பாலும் தன் கவிதைகளில் நேரடித்தன்மையை பிரயோகப்படுத்துகிறார். நேரடித்தன்மையை பயன்படுத்தும் போது கவிஞனுக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. இல்லையெனில் ஒரு கவிதை எந்தவித கவிதைத் தன்மையும் இல்லாத வெற்றுச் சொல்லாடலாக போய்விடலாம். இன்ன பிறவும் தொகுப்பின் சில கவிதைகளில் இந்தக் 'கவிதையின் இழப்பை' உணர முடிகிறது.

உதாரணமாக 'உல்டா' என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.
என் நண்பர்கள்/இருவர் குறித்து/ மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்/ ஒருவன் உஷாரென்றும்/மற்றொருவன் சற்றே மந்தமென்றும்/ நானறிந்த வரையில்/ அவைகள் அப்படியே/ உல்டா என்பதுதான்/அதிலுள்ள விஷேசம்.

இந்தக் கவிதையில் இரு வேறு மனங்களை பதிவு செய்கிறார். ஒரு ஸ்திதியைக் கூட இரு மனங்கள் இரு வேறு கோணங்களில் பார்க்க முடியும் என்னும் போது இரு மனிதர்களை வேறு இரு மனிதர்கள் எத்தனை பரிமாணங்களில் பார்க்க முடியும் என்பதுதான் இந்தக் கவிதையில் இருந்திருக்கக் கூடிய கவிதானுபவம். ஆனால் இந்தக் கவிதை அனுபவம் எதையும் தராமல் தட்டையாக இருந்துவிடுகிறது. கவிஞனே இந்த கோணங்களை 'விஷேசம்' என்று முந்திச் சொல்ல வேண்டியதில்லை. வாசகன் முடிவு செய்ய வேண்டிய இடம் இது. இதை வாசகனுக்கான தளமாக மாற்றியிருந்தால் இந்தக் கவிதை இந்தத் தொகுப்பில் முக்கியமானதாக ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது.

பெரும்பாலான/அனைத்துக் கவிதைகளும் தினசரியில் எதிர்கொள்ளும் காட்சிகளாகவே இருக்கின்றன. மகன்களின் செயல்பாடுகளும், அலுவலக லிப்ட்களும், நடைப்பயிற்சி நிகழ்வுகளும் கவிதைகள் முழுக்க விரவிக் கிடக்கின்றன. இந்த நேரடித்தன்மைதான் செல்வராஜின் பலமாகவும் இருப்பதாகப் படுகிறது.

மகன் ஊஞ்சலாடும் போது கவிதை எழுதுவது பற்றியும், இவனைப் போல்தானே இருக்கும் இவனது கவிதைகளும் என்று அங்கதமாகச் சொல்வதும், பெண்காதல் காமமே என்று கவிதை பெருகுவது பற்றியும் தான் கவிதை எழுதுவது குறித்து தொடர்ந்து பேசுகிறார். நேரடியான கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தத் தொகுப்பில் 'தான்' எழுதுவது பற்றி பேசும் போது வாசகன் தன்னை மறந்து கவிஞனையே பார்க்கிறான். இந்த வறட்சி வாசகனுக்கு ஒருவிதமான சோர்வுணர்ச்சியை கொடுத்துவிட முடியும்.

பொதுவாக கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது கவிஞன் முயன்று பார்த்திருக்கும் தளங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும். அது இந்தத் தொகுப்பில் இல்லை. செல்வராஜ் ஜெகதீசன் என்ற கவிஞனின் நேர்கோட்டு கவிதைப் பயணமே இந்தத் தொகுப்பில் கிடைக்கும் அனுபவம். அதனை குறையா நிறையா என்று தீர்மானிக்க முடியவில்லை ஆனால் ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எளிமையான கவிதையின் சூட்சுமத்தை கையில் பிடித்திருக்கும் இவர் தனக்கான கவிதைக்கான பயணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். மிக மிகச் சிறிய தூரத்தையே இந்த இரண்டாவது தொகுப்பில் கடந்திருக்கிறார்.

இன்ன பிறவும்/செல்வராஜ் ஜெகதீசன்/அகரம் வெளியீடு/தஞ்சாவூர்

6 எதிர் சப்தங்கள்:

நேசமித்ரன் said...

நேர்மையான விமர்சனம் மணி
கண்டன்

மதன் said...

நிதானமாய் படிக்கலாம் என்று அமர்கையில், கவிதை மனதுக்குள் ஏறாமல் வெறுமனே சிதறிக் கிடக்கும் பதங்களான தோற்றமும், காத்திருக்கும் தோழியைக் காணச் செல்ல முடியாமல் ஷூ காலோடு எனை இழுத்துப் பிடித்திருக்கும் கவிதை கணங்களையும் நான் நினைவு கூர்ந்தேன் உங்கள் விமர்சனத்தில்.

பொதுவாக, அனுபவத்தை எளிய சொற்களின் மூலம் கவிதையாக்கும் முயற்சியில் கவிஞனாகப்பட்டவன் கவிதை முழுவதும் விரவிக் கிடப்பதைத் தவிர்ப்பது அக்கவிஞனின் தலையாய கடமையாகிறது.

ஏனெனில் அந்த அனுபவம் அந்தக் கவிஞனுக்கு மாத்திரம் நிகழ்ந்த ஒன்றாகவோ, அவன் மனத்திரையில் கவிதைக்கான கரு கொண்ட சூழலாகவோ தென்பட்டிருக்கலாம். ஆனால் வாசகனும் அதே புள்ளியில் சிந்திக்காமல் போய்விடின் அது கவிதையின் வீச்சினைக் குறைத்து விடுகிறது.

அதே சமயம், அனைவருக்கும் பொதுவான, சராசரியான கணங்களுக்குள் இருக்கும் கவிதைத்தனங்களை மட்டுமே காட்சிப்படுத்திவிட்டு, தான் சந்திக்க நேர்ந்த வித்தியாசமான, விசேஷமான, சந்தர்ப்பங்களினுள்ளிருக்கும் கவித்துவத்தை பதிவிக்காமல் விட்டு விடுவது, கவிஞனின் படைப்பூக்கத்திற்கு தடை விதிப்பதாகவும் ஆகி விடலாமல்லவா?

இந்த இரு விளிம்புகளையும் எட்டி விடாது, இடையே கவிதையை ஊசலாடச் செய்யும் இலாவகம், நேரடி அனுபவத்தைக் கவிதையாக்கி வெற்றி பெறும் கவிதைகளுக்கு சாத்தியப்படுகிறது என்பது என் கருத்து.

நன்றி.

Unknown said...

நன்றி மணிகண்டன், உங்களின் இந்த வெளிப்படையான விமர்சனத்திற்கு.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்.
இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு எழுத்துக்காரனுக்கு?

Vaa.Manikandan said...

//அதே சமயம், அனைவருக்கும் பொதுவான, சராசரியான கணங்களுக்குள் இருக்கும் கவிதைத்தனங்களை மட்டுமே காட்சிப்படுத்திவிட்டு, தான் சந்திக்க நேர்ந்த வித்தியாசமான, விசேஷமான, சந்தர்ப்பங்களினுள்ளிருக்கும் கவித்துவத்தை பதிவிக்காமல் விட்டு விடுவது, கவிஞனின் படைப்பூக்கத்திற்கு தடை விதிப்பதாகவும் ஆகி விடலாமல்லவா?//

மதன், நான் சொல்வது வேறு கோணத்தில். எந்த காட்சிகளையும் கவிதையாக்கலாம். ஆனால் கவிதை முடியும் கணத்தில் இருந்து கவிஞன் வெளியேறிவிடுவது உசிதம். வாசகன் கவிதையை வாசிக்கும் போது படைத்தவன் துருத்திக் கொண்டிருந்தால் அது கவிதை தரும் அனுபவத்தைச் சிதைத்துவிடும்.

நன்றி நேசமித்திரன்,செல்வராஜ்,மதன்.

பா.ராஜாராம் said...

நல்ல விமர்சனம்.

Vaa.Manikandan said...

நன்றி பா.ராஜாராம்.