Mar 31, 2010

குழிவண்டுகளின் அரண்மனை

வாசித்த புத்தகத்தை பற்றி எழுதும் போது இரண்டு விதமாக எழுதுகிறார்கள். ஒன்று விமர்சனக் கோட்பாடுகள் சார்ந்து எழுதுதல். மற்றொன்று ரஸனை சார்ந்து எழுதுதல். ரஸனை சார்ந்து எழுதுகிறேன் பேர்வழி என்பது 'இது என் பார்வை' என்று சொல்லித் தப்பி விடுவதற்கான வழியை எளிதாக்குகிறது என்றாலும், ரஸனை சார்ந்து பேசுவதில் கிடைக்கும் சுவையும், இன்பமும் வடிவம்-கட்டமைப்பு என்ற கோட்பாடுகளின் வழியான பேச்சில் எனக்கு கிடைப்பதில்லை.

நான் எழுதி முடித்திருந்த கவிதை விமர்சனம் ஒன்றை படித்த நண்பர், அந்தக் கவிதைகளை நான் வாசித்து முடித்திருந்த புள்ளியில் இருந்துதான் வாசிக்கவே துவங்க வேண்டும் என்றார். இதற்கான பதில் எதுவும் என்னிடமில்லை. இனி அடுத்த கவிதையை வாசிக்கும் போதும் எனக்கு பிடிபடும் இடத்தில் இருந்துதான் துவங்க முடியும். அந்தப் பிடிபடும் புள்ளி என்பதுதான் கவிதையில் நான் அடைந்திருக்கும் பயிற்சி. வேறொரு புள்ளிக்கு நகர்ந்து செல்வதென்பது அத்தனை எளிதில் சாத்தியமில்லை. அதற்கு இன்னும் பல நூறு கவிதைகளும், உறக்கம் தொலைத்த நள்ளிரவு வாசிப்புகளும் தேவைப்படலாம்.

கவிதை தன் ரசிகனோடு நிகழ்த்தும் உணர்ச்சி விளையாட்டை தோராயமாகவே வார்த்தைகளாக்க முடிகிறது. பெரும்பாலும் அந்த வார்த்தைகள் நிகழ்ந்த விளையாட்டை பதிவு செய்யாமல் நேர் எதிர்மாறானதாக இருந்துவிடுகிறது. இதே நினைப்புகளில்தான் த.அரவிந்தனின் 'குழிவண்டுகளின் அரண்மனை' என்ற தொகுப்பை வாசித்தேன்.

சோற்றுக்கு எந்தப் பஞ்சமும் இல்லாத ஒருவன், ஒரு சந்தர்ப்பத்தில் உக்கிரமான வெம்மை அவனது தோலை சுட்டெரிக்க உணவும் நீரூமின்றி நாவறண்டு பொட்டல் வெளியில் அலைந்து திரியும் போது அடையும் ஒரு பித்து மனநிலையையும், பின்னர் வெகு நாட்கள் கழித்து அந்த அலைந்த அனுபவத்தை நினைக்கும் போது கிடைக்கும் ஒரு விதமான திருப்தியான பூர்ணத்துவத்தையும் இந்தத் தொகுப்பினை வாசிக்கும் போதும் பின்னர் மூடி வைத்த போதும் அடைந்ததாக உணர்கிறேன்.

கவிதைகளுக்கு என எந்தச் சிக்கலும் இருப்பதில்லை, அவை வெளிப்பட்ட கணத்திலிருந்து பிறகு எப்பொழுதும் ஸ்திதியாகவே இருக்கின்றன. அதனை நெருங்கும் மனமும் விலகும் மனமும் எதிர் கொள்ளும் புற/ அகச் சிக்கலுக்கு ஏற்ப கவிதை சிக்கலானதானவோ அல்லது எளிமையானதாகவோ உருவம் பெறுகிறது. இந்த ஸ்திதி நிலையில் தன் கவிதையை நிலை நிறுத்த ஒரு வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கவிஞன் தேடுகிறான். இந்தத் தேடலை சிக்கல் இல்லாமல் நிகழ்த்தும் ஒரு படைப்பாளி தனித்துவமான படைப்பை நோக்கி இயல்பாக நகர்கிறான். இந்த தனித்துவத்தை அரவிந்தன் இந்தத் தொகுப்பில் அடைந்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

பெரும்பாலான நவீன கவிதைகள் தட்டையாக நகர்ந்து கடைசி வரிகளில் ஒரு பெரும் திருப்பத்தை தன்னுள் வைத்திருக்கின்றன என்று யாரோ கவிதையியல் பற்றி சொன்னது ஞாபகத்தில் இருக்கிறது. இந்த திருப்பம் கவிதைக்கு மிக அவசியமானதா என்பது வேறு விஷயம், ஆனால் கவிதையில் துருத்தலில்லாத ஒரு திருப்பம் இருக்குமெனில் அது வாசகனை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது. இந்த தளம் மாற்றுதலும், திருப்பமும் அரவிந்தனின் கவிதைகளில் மிக இயல்பாக இருக்கின்றன.

குழிவண்டோடு/மண்ணுக்குள்/ஊடுருவி/அதன் அரண்மனையைச்/சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்/ஒரு சிறுமி.எப்படியும்/மேலே/வரவழைக்க
வேண்டுமென/குழியில்/எச்சிலை/வெள்ளமாக/ஒழுகிக் காத்திருந்தாள்/வேறொரு சிறுமி.

முதல் பகுதியில் குழிவண்டோடு சுற்றும் ஒரு சிறுமியின் குழந்தைமை தெரிகிறது. அதே இடத்தில், அதே நேரத்தில் ஒரு குழி வண்டை மேலே வரவழைக்க அதனை மரணத்தின் நுனிக்கு கொண்டு செல்லும் ஒரு சிறுமியின் குரூரமான மனநிலை தெரிகிறது. இந்தக் கவிதை இரு வேறு தளங்களுக்கு நகர்கிறது. ஆனால் பெரும் திடுக்கிடல் எதுவுமில்லாமல். இன்னும் சற்றே நுட்பமாக வாசிக்கும் போது குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமான விசித்திர உறவுகளின் ஒரு பகுதியில் வாசகனை இந்தக் கவிதை நிறுத்துகிறது. இது, இந்தக் கவிதையில், இந்த இரவில் எனக்குக் கிடைக்கும் அனுபவம். இந்தக் கவிதை தன் வாசகனுக்கு தருவதற்காக இன்னமும் எண்ணற்ற வாசிப்பனுவங்களை தனக்குள் கொண்டிருக்கிறதாகவே எனக்குப் படுகிறது. இப்படியான கவிதைகளை இந்தத் தொகுப்பில் தொடர்ந்து கடக்கிறோம்.

13 ஸ்தனங்கள் என்ற கவிதையை தவிர்த்துவிட்டு இந்தத் தொகுப்பைப் பற்றி பேச முடியும் என்று தோன்றவில்லை. இந்த ஒரு கவிதைக்குள் பதின்மூன்று சிறுகவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
தகிக்க இயலா உணர்ச்சியில்/அல்குலைக்/காட்டி/கொடுத்துவிட்டு
/வேடிக்கை/பார்க்கின்றன்/ஸ்தனங்கள்
-என்று ஒரு கவிதை. ரஸனையாக இருக்கிறது.
இந்தக் ஸ்தன கவிதைகள் மிக இயல்பான மொழிநடையில் வெளிப்பட்டிருக்கின்றன.பன்னிரெண்டு கவிதைகள் எனக்கு மிக விருப்பமானதாக இருக்கின்றன. ஒன்றைத் தவிர.
பருத்து தளும்பும்/மேல் சதையிடம்/கற்பு பேசுகின்றன/நடிகையின் ஸ்தனக் காம்புகள்
-என்றொரு கவிதை. கற்பு என்பதை உடல் சம்பந்தப்பட்டதாக மட்டுமாக, நடிகைகளுக்கும் கற்புக்கும் சம்பந்தமில்லை என்ற சாதாரண மனநிலையில் மட்டுமே வைத்து இந்தக் கவிதையை வாசிக்க வேண்டியிருப்பதால் அரவிந்தனின் இந்த வரிகள் எனக்கு உவப்பானதாக இல்லை.

சில கவிதைகள் Snap ஆக எந்த விதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் ஒரே ஒரு காட்சியை மட்டும் தெறிக்கும். அற்புதமான நிழற்படத்தை பார்க்கும் ஒருவன் தனக்கேயான அனுபவங்களை பெறுவது போலவே இந்த Snap கவிதைகள் வாசகனுக்கான அனுபவங்களை தருபவையாக இருக்கும். இப்படியான நல்ல Snap கவிதைகளை இந்தத் தொகுப்பில் வாசிக்க முடிந்தது. பின் வரும் கவிதை நான் சொல்ல வருவதை தெளிவாக்கக் கூடும்.
தட்டுப்படும்/விரல்களின் குறிப்புகளுக்கேற்ப
/ஏற்ற இறக்கத்துடன்/அவளை/அப்படியே பாடுகிறது/எரிந்து/வறட்டி.

இந்தத் தொகுப்பின் பக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக புரட்டும் போது தட்டுப்படும் ஒரு விஷயம், கவிதையின் வடிவங்களில் கவிஞன் முயன்றிருக்கும் முயற்சிகள். இவை எனக்கு மிக முக்கியமான முயற்சியாகப் படுகிறது. பெரும்பாலும் ஒரே விதமான வடிவத்தில் இருக்கும் கவிதைகளை தொகுப்புகளில் எதிர்கொள்ளும் போதும் உண்டாகும் அயற்சியை தவிர்க்க முடிவது மட்டும் காரணமில்லை. கவிதையின் உள்ளடக்கத்திற்கான தேடலுடன் சேர்த்து, வடிவங்களுக்கான தேடலையும் தொடர்ச்சியாக கவிஞன் மேற்கொள்ளும் போது வாசகனுக்கு புதுப்புது அனுபவங்களை அவனால் தொடர்ந்து அளிக்க முடிகிறது என்பதனை உறுதியாக நம்புகிறேன்.

சில சிறு கவிதைகள் கவிதை உணர்ச்சியை தராமல் ஒற்றைக் காட்சியமைப்பாக இருக்கின்றன என்ற குறையை தவிர்த்துவிடும் போது ஒரு கவிதை ரசிகனாக என்னால் இந்தத் தொகுப்பில் உற்சாகமாக பயணிக்க முடிகிறது. "மாம்பழ எழுத்துக்கள்" என்ற கவிதையை உதாரணமாகச் சொல்வேன்.

"மாம்பழத்திலிருந்து/வடியும் பால்/என்னை பார்த்து
/ஏதோ ஒன்றை/அழுத்தமாக எழுதுகிறது
/உறுதியாகச் சொல்கிறேன்/அது/என்னைப் பார்த்துதான் எழுதுகிறது/வண்டின் ரீங்காரத்தால்/எப்படியும் அதைப் படிப்பேன்"

மாம்பழத்திலிருந்து வடியும் பாலை காட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாசகனை தொடர்ந்து வரும் வரிகள் அதே வேகத்தில் கவிஞனை நோக்கி இழுக்கிறது. வண்டு மலரோடு தனக்கு இருந்த உறவை ரீங்காரத்தால் சொல்கிறதா?மலருக்கும் பழத்திற்குமான உறவைத்தான் வடியும் பாலிலிருந்து படிக்கிறாரா? என்று கவிதையை அணுகினாலும், வண்டின் ரீங்காரத்தால் உறுதியாகப் படிப்பேன் என்ற முரட்டுவாதமே கவிதையிலிருந்து என்னை விலகிப் போகச் செய்கிறது. இப்படி வாசகனை கவிதையிலிருந்து விலகிச் செல்லுதலை கவிஞன் கவிதைக்குள் உருவாக்க வேண்டியதில்லை என்று சொல்வேன்.

"ஒரு சொல்" என்ற தலைப்பிலான கவிதை இந்தத் தொகுப்பில் துருத்திக் கொண்டிருக்கிறது. சொற்களைப் பற்றி ஏற்கனவே நிறைய கவிதைகளை எதிர் கொண்டிருக்கிறோம் அதை விடவும் இந்தக் கவிதையின் வடிவம் வேறு சில கவிஞர்களின் வடிவங்களை நினைவுபடுத்துகிறது.

இப்படி குறைகளை குறிப்பிட்டு சுட்ட முடிகிறதே தவிர்த்து பொதுவான குறைகளாக சுட்டமுடியாமல் இருப்பது தொகுப்பாக இக்கவிதைகளின் வெற்றியாகப் படுகிறது.

குழிவண்டுகளின் அரண்மனை தொகுப்பை மிக முக்கியமான/ கவனம் பெற தகுதியுடைய கவிதைத் தொகுப்பாக தயங்காமல் முன் வைக்கிறேன்.

குழிவண்டுகளின் அரண்மனை/த.அரவிந்தன்/அருந்தகை, E-220,12வது தெரு,பெரியார் நகர், சென்னை 600082

Mar 17, 2010

நடுகற்கள் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்

புகார்கள் தூறலாகவும் சமயங்களில் பெருமழையாகவும் பெய்து எப்பொழுதும் நம்மை ஈரமாகவே வைத்திருக்கின்றன என்று சொல்வதும் கூட புகார்தானே. புகார்கள் இல்லையென்றால் வாழ்கை சலிப்படைந்து விடுகிறது. யாரைப்பற்றியாவது எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதன் மூலமாக புனைவின் சுவாரஸியத்தை அடுத்தவருக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

விருட்சம் சிற்றிதழில் பிரசுரமான கவிதைகளை தொகுப்பாக்கி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தொகுப்பில் இருக்கும் பல கவிஞர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகம் இல்லை அல்லது அவர்கள் எழுதிக் கொண்டிருந்த போது நான் பிறக்காமலோ அல்லது பிறந்திருந்தால் கவிதைகளை வாசிக்காமலோ இருந்துவிட்டேன். நான் வாசிக்க ஆரம்பிக்கும் போது அவர்களை இலக்கிய உலகம் முற்றாக மறந்துவிட்டிருந்தது.

தொகுப்பின் கவிதைகளை இரண்டு மூன்றிரவுகளாக வாசித்துக் கொண்டிருக்கும் போது இந்த பெயர் அறியாத கவிஞர்கள் விரல் பிடித்து கவித்துவத்தின் பெருவெளிக்குள் அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கவிதைக்குள் செல்லும் அடுத்த கணத்தில், கவிதையை சற்றே மறந்து, அந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் பெயரை கவனிக்கும் மூன்று வினாடிகளும் பதட்டமானதாகவே இருக்கிறது. முகம் தெரியாத ஆள் ஒருவனை நம்பி நடுவழி கடந்துவிட்ட சிறு குழந்தையின் மனநிலைக்கு வந்துவிடுவதாகக் தோன்றுகிறது. எழுதியவனிடம் இருந்து படைப்பை நாம் பறித்துக் கொள்கிறோமா அல்லது அவன் தன் படைப்பை தொலைத்துவிட்டு எங்காவது தேடிக் கொண்டிருக்கிறானா? ஒரு குழந்தையை அனாதையாக்குவது போலவேதான் ஒரு கவிதையை அனாதையாக்குவதும் துக்ககரமானது. புகார் சொல்லுதல் வாழ்க்கையை சுவாரஸியமாக்குகிறது என்ற முதல்பத்தி வாதத்துக்கு துணையாக 'காணாமல் போன படைப்பாளிகளை' குறித்தானதாக எனது புகாரை முன்வைக்கிறேன்.

படைப்பின் அனுபவத்தோடு நின்றுகொள்ளாமல் படைப்பாளியை பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என எழும் எளிய கேள்வியை இந்த இடத்தில் நிராகரித்துவிடலாம் என்று தோன்றுகிறது. பிரமாதமான கவிதானுபவத்தை தரும் வரிகளை எழுதிய கவிஞனின் பெயர் எனக்கு தேவைப்படுகிறது. அவனது மற்ற எழுத்துக்கள் ஆசுவாசமானதாக இருக்கும் என அழுத்தமாக நம்புகிறேன். ஆனால் சிற்றிதழ்களின் மொத்த தொகுப்புகளை வாசிக்கும் போது மிக முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கும் பல கவிஞர்களின் பெயர்கள் கூட சமகாலத்தில் உச்சரிக்கப்படுவதில்லை என்பது கொஞ்சம் ஆதங்கமாக இருக்கிறது. இதே அனுபவம் ஞானரதம் இதழ் தொகுப்பை வாசிக்கும் போது நிகழ்ந்தது. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்?.

இந்தச் சமயத்தில் கவிஞர் சுகுமாரனோடு பேசும் போது கவிஞன், கவிதாளுமை என்ற பதங்களைப் பிரயோகப்படுத்தினார். அந்தச் சொற்களை படைப்பாளி, படைப்பாளுமை என்ற சொற்களோடு இணைத்துப் பார்க்கலாம். படைப்பாளி என்பவன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சில படைப்புகளை உருவாக்குகிறான். ஆற்று நீரோட்டத்தில் ஒரு கல்லை எறிவதைப் போல. இந்த எறிதலுக்குப் பிறகு அமைதியாகிவிடுகிறான். உருவாக்கப்பட்ட படைப்புகளை காலம் தன் போக்கில் வெறும் ஒற்றைத்தாளாக மாற்றி தன் பெட்டகத்துக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கிறது. அடுக்கிச் செல்லப்படும் இந்த ஒற்றைத்தாள்களுக்குள் தான் காணாமல் போனவர்களின் படைப்புகள் புதைந்துவிடுகின்றன. அமைதியாகிவிட்ட படைப்பாளியின் சுவடும் மெல்ல கரைந்தழிந்துவிடுகிறது.

படைப்பாளுமை என்பவன் படைப்பாளியின் அடுத்த நிலை. தான் சார்ந்த மொழிக்கான அல்லது சமூகத்துக்கான தன் பங்களிப்பை ஏதாவது ஒரு விதத்தில் தன் படைப்புகளின் மூலமாக அளித்துவிடுகிறான். படைப்பின் வடிவ மாற்றம், உள்ளடக்கம், படைப்பின் வெளிப்பாட்டு முறை என ஏதாவதொன்றில் தன் இருப்பை அழுந்தப் பதியச் செய்கிறான். இந்த பங்களிப்பின் மூலமாகவே அவனது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
படைப்பாளியிலிருந்து படைப்பாளுமை என்ற தளத்திற்கு நகர்வதற்கு மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அது வெற்றுச் சவடல்களாலும், தன்னிலிருந்து உருவாக்கும் சலனத்தாலும் நிகழ்வதில்லை. தொடர்ந்த வாசிப்பும் அசதியில்லாத படைப்பூக்கத்துடன் கூடிய இயக்கத்தில் இருக்கும் படைப்பாளிதான் தன் தடத்தை அழுத்தமாக பதிக்கிறான்.

இதை கட்டுரையை எழுதுவது ஒரு கவிதையோடு காணாமல் போனவர்கள் கவிஞர்கள் அன்று என்பதை பறைசாற்றுவதற்காக இல்லை. மறக்கப்பட்டவர்கள் நல்ல படைப்பாளிகள் இல்லை என்பதுதான் என்பது உன் கூற்றா என்றால், அதற்கான பதிலும் "இல்லை"தான். அந்த மறக்கப்பட்டவர்கள் பட்டியலில் மிக முக்கியமான படைப்பாளிகள் வரிசையில் இருக்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் செயல்பாட்டின்மையாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அவர்கள் அமைதியாகும் சமயத்தில் காலம் அடித்துச் சென்று ஒதுக்கிவிடுகிறது. எந்தப் பீடமும் காலத்தையோ வரலாற்றையோ அவைகளின் ஓட்டத்தில் இருந்து நிறுத்திவிடுவதில்லை.

இன்றைய இலக்கிய வடிவங்களுக்கு நாம் வந்து சேர மூன்றாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. திருவள்ளுவரை விட்டால் இடையில் ஓரிருவரின் பெயர்களை மட்டும் சொல்லிக் கொண்டு மிக அருகாமையில் பாரதியில் வந்து நின்று விடுகிறோம். இடைப்பட்ட காலத்தில் எழுதியவர்கள் எங்கே என்பதும் அவர்களுக்கான இடம் இலக்கியத்தில் இல்லாமல் போனது ஏன் என்பதும் பெரிய கேள்வியாகிறது. மிக எளிதாக காலம் படைப்பாளிகளைத் தாண்டி வந்திருக்கிறது. காலத்திற்கு மரத்தில் இருந்து உதிரும் சருகும் படைப்பாளியும் ஒன்றுதான். ஒரே வேகத்தில்தான் அடித்துச் சென்றிருக்கிறது.

ஒற்றைப்படைப்பின் மூலமாக ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்பாளிகளை கணக்கு எடுத்தாலும் ஒரு பட்டியல் வரலாம். ஆனால் அது சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வாசிப்பு போலவேதான் எழுத்தும் பெருமளவில் பயிற்சி சார்ந்திருக்கிறது. படைப்பாளி என்பவன் அடுத்த நிலைக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்க அவன் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. அவன் நிற்கும் போது, அவனை மற்றவர்கள் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதைப்பற்றி பேசும் போது ஒரு குதர்க்கம் நிகழ்ந்துவிடலாம். எண்ணிக்கையும் எழுதிய பக்கங்களும் தான் படைப்பாளியின் இடத்தை உறுதிப்படுத்துவதாக சொல்வதைப் போன்ற கோணம் உருவானால், அந்தக் கருத்தாக்கத்தை கடுமையாக மறுப்பதற்காக படைப்பாளுமை என்பவன் படைப்பியக்கத்தில் தன் பங்களிப்பின் மூலமாக அதன் 'திசையை சற்றேனும் மாற்றியமைக்கிறான்' என்பதை கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நான்காவது பத்தியில் கேட்ட அதே கேள்வி. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? இந்தப் புள்ளியில் கவிஞன், கவிதாளுமை என்ற விவாதம் தொடர ஆரம்பிக்கலாம். (புகாரில் ஆரம்பித்து புகாரில் முடிக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து வாசிக்கவும்) ஆனால் நாம் சித்து விளையாட்டுகளாலும், கூட்டம் சேர்ப்பதாலும், அச்சுப்பிரதியின் மூன்றாம் பக்க மூலையில் பெயர் வருவதனாலும் இலக்கிய உலகின் பிதாமகன் என்று நினைப்பைச் சூடிக் கொள்கிறோம்.

(கோவையில் நிகழ்த்திய ஜெயமோகன் அவர்களோடான உரையாடல் இந்தக் கட்டுரைக்கான தொடக்கம்)
நன்றி: அகநாழிகை

Mar 15, 2010

இன்ன பிறவும்

கவிதை வாசிப்பு மனநிலை சார்ந்த விஷயமாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கவிதைத் தொகுப்பை வாங்கும் போதும் சரி அல்லது வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முதலில் தோராயமாக பக்கங்களை புரட்டுவதும், புரட்டியதில் கைக்கு வந்த பக்கங்களில் இருக்கும் கவிதைகளில் ஓரிரு வரிகளை வாசிப்பதும் பின்னர் அந்த வரிகளின் தாக்கத்தை பொறுத்து தொடர்ந்து வாசிப்பதா என்பது குறித்தும் முடிவெடுப்பதுண்டு.

இத்தகைய முடிவுகள் தவறானதாகவும் அமைந்துவிடுகின்றன. ஒரு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கவிதைகளும் வாசக மனதை வசியம் செய்யக் கூடியதாக இருப்பதில்லை. இந்த தேடல் முறையின் தோல்விக்கான இன்னொரு காரணம், ஒரு சந்தர்ப்பத்தில் உவப்பாக இல்லாத கவிதை வேறொரு சமயத்தில் பிரமாதமானதாக தோன்றுகிறது அல்லது முன்பு பிடித்திருந்த கவிதை பின்னர் அத்தனை நல்ல கவிதையாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த மாறுதல்கள் மனநிலையோடு கவிதை நிகழ்த்தும் ரசவாத விளையாட்டுகளின் விளைவுகள்.

செல்வராஜ் ஜெகதீசன் எழுதியிருக்கும் இன்ன பிறவும் தொகுப்பு கிடைத்த போது தொகுப்பில் ஓரிரண்டு கவிதைகளை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட்டேன். பிறகு புறம் மற்றும் அகச்சூழலால் கவிதையை வாசிக்கும் மனம் வாய்க்கவில்லை. கவிதை வாசிப்பதற்கான மனநிலை இல்லாத போது என்ன முயன்றாலும் கவிதையை வாசிக்காமல் வெறும் வார்த்தைகளை மட்டுமே வாசிப்பதாக தோன்றுகிறது. இருபது நாட்களுக்குப் பிறகாக இன்றிரவு இந்தக் கவிதைகளை வாசிக்கும் போது மனம் கலவையான தன்மையில் அலைவுறுகிறது.

வாசித்துவிட்டு பெருமொத்தமாக யோசிக்கும் போது, திரண்ட விமர்சனமாக மனக்கண்ணில் தோன்றுவது "இந்தத் தொகுப்பில் கவிதைகள் இயல்பானவையாக இருக்கின்றன". கவிதைக்கான சொற்களுக்கும், காட்சிகளுக்கும் கவிஞன் காத்திருக்காத தன்மை தென்படுகிறது. தான் எதிர் கொண்ட காட்சிகளையே செல்வராஜ் கவிதையாக்கியிருப்பதான பிம்பம் இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது உருவாகிறது.கவிதையின் வெளிப்பாடு உற்சாகமானதாகவும் வாசகனை வசீகரிக்கக் கூடியதாகவும் இருக்கும்பட்சத்தில் கவிதையை வாசகன் எளிதாக நெருங்கிவிடுகிறான். புரிதல் குறித்தான வினாக்களும், கவித்துவ சிக்கல்கள் பற்றியும் அவன் யோசிக்க வேண்டியிருப்பதில்லை. நேரடியாக கவிதையை அடைகிறான்.

நாற்காலிகளைப் பற்றிச் சொல்ல/என்ன இருக்கிறது/அவை நாற்காலிகள் என்பதைத் தவிர
என்று தொடங்கும் கவிதையையும், பூனைகள் கவிதையையும் இன்ன பிறவும் தொகுப்பில் வெளிப்பாட்டு முறைக்காக குறிப்பிட வேண்டிய கவிதைகள். கவிதைகளின் வெளிப்பாட்டு முறையில் செல்வராஜுக்கு கிடைத்திருக்கும் இலாவகம் இந்த இரண்டு கவிதைகளிலும் புலனாகிறது.

இந்த இடத்தில் வெளிப்பாட்டு முறை என்பது ஓசை அல்லது சந்தம் என்பதன் மூலமாக உருவாக்கப்படுவதில்லை. இலகுவான சொல் முறையையும், தடையற்ற ஓட்டத்தையும், மென்னதிர்வையும் தனக்குள் கொண்டு வெளிப்படும் கவிதைகளைச் சொல்கிறேன். இந்த வெளிப்பாட்டு முறை எந்தச் சிரமமுமில்லாமல் வாசகனுக்கும் கவிஞனுக்குமான பாலத்தை உருவாக்குகிறது.

எளிமையை நோக்கி நகரும் பெரும்பாலான கவிதைகள் நேரடிக் கவிதைகளாகவும் பரிமாணம் பெறுகின்றன. செல்வராஜ் பெரும்பாலும் தன் கவிதைகளில் நேரடித்தன்மையை பிரயோகப்படுத்துகிறார். நேரடித்தன்மையை பயன்படுத்தும் போது கவிஞனுக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. இல்லையெனில் ஒரு கவிதை எந்தவித கவிதைத் தன்மையும் இல்லாத வெற்றுச் சொல்லாடலாக போய்விடலாம். இன்ன பிறவும் தொகுப்பின் சில கவிதைகளில் இந்தக் 'கவிதையின் இழப்பை' உணர முடிகிறது.

உதாரணமாக 'உல்டா' என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.
என் நண்பர்கள்/இருவர் குறித்து/ மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்/ ஒருவன் உஷாரென்றும்/மற்றொருவன் சற்றே மந்தமென்றும்/ நானறிந்த வரையில்/ அவைகள் அப்படியே/ உல்டா என்பதுதான்/அதிலுள்ள விஷேசம்.

இந்தக் கவிதையில் இரு வேறு மனங்களை பதிவு செய்கிறார். ஒரு ஸ்திதியைக் கூட இரு மனங்கள் இரு வேறு கோணங்களில் பார்க்க முடியும் என்னும் போது இரு மனிதர்களை வேறு இரு மனிதர்கள் எத்தனை பரிமாணங்களில் பார்க்க முடியும் என்பதுதான் இந்தக் கவிதையில் இருந்திருக்கக் கூடிய கவிதானுபவம். ஆனால் இந்தக் கவிதை அனுபவம் எதையும் தராமல் தட்டையாக இருந்துவிடுகிறது. கவிஞனே இந்த கோணங்களை 'விஷேசம்' என்று முந்திச் சொல்ல வேண்டியதில்லை. வாசகன் முடிவு செய்ய வேண்டிய இடம் இது. இதை வாசகனுக்கான தளமாக மாற்றியிருந்தால் இந்தக் கவிதை இந்தத் தொகுப்பில் முக்கியமானதாக ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது.

பெரும்பாலான/அனைத்துக் கவிதைகளும் தினசரியில் எதிர்கொள்ளும் காட்சிகளாகவே இருக்கின்றன. மகன்களின் செயல்பாடுகளும், அலுவலக லிப்ட்களும், நடைப்பயிற்சி நிகழ்வுகளும் கவிதைகள் முழுக்க விரவிக் கிடக்கின்றன. இந்த நேரடித்தன்மைதான் செல்வராஜின் பலமாகவும் இருப்பதாகப் படுகிறது.

மகன் ஊஞ்சலாடும் போது கவிதை எழுதுவது பற்றியும், இவனைப் போல்தானே இருக்கும் இவனது கவிதைகளும் என்று அங்கதமாகச் சொல்வதும், பெண்காதல் காமமே என்று கவிதை பெருகுவது பற்றியும் தான் கவிதை எழுதுவது குறித்து தொடர்ந்து பேசுகிறார். நேரடியான கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தத் தொகுப்பில் 'தான்' எழுதுவது பற்றி பேசும் போது வாசகன் தன்னை மறந்து கவிஞனையே பார்க்கிறான். இந்த வறட்சி வாசகனுக்கு ஒருவிதமான சோர்வுணர்ச்சியை கொடுத்துவிட முடியும்.

பொதுவாக கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது கவிஞன் முயன்று பார்த்திருக்கும் தளங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும். அது இந்தத் தொகுப்பில் இல்லை. செல்வராஜ் ஜெகதீசன் என்ற கவிஞனின் நேர்கோட்டு கவிதைப் பயணமே இந்தத் தொகுப்பில் கிடைக்கும் அனுபவம். அதனை குறையா நிறையா என்று தீர்மானிக்க முடியவில்லை ஆனால் ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எளிமையான கவிதையின் சூட்சுமத்தை கையில் பிடித்திருக்கும் இவர் தனக்கான கவிதைக்கான பயணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். மிக மிகச் சிறிய தூரத்தையே இந்த இரண்டாவது தொகுப்பில் கடந்திருக்கிறார்.

இன்ன பிறவும்/செல்வராஜ் ஜெகதீசன்/அகரம் வெளியீடு/தஞ்சாவூர்

Mar 3, 2010

கருணையின் கடவுள்


மரணத்திற்கும்
உடல் சிதறலுக்குமான
இடைவெளியில்
நிகழ்ந்த
விபத்தொன்றில்
சிவப்புச்சாயத்தில் விழுந்த
துணியென கிடந்தவனை
நிலம் உரச
வெளியில் இழுத்தார்கள்.

அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையை
புதிரான ஓவியமாக்கிவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக் கொண்டான்.

நினைவு வந்த கருநாளில்
அவனிடம்
தண்டுவடம் முறிந்து போனதாகச்
சொன்ன போது
இடுப்புக் கீழ் செயல்படாதென்ற
துக்கத்தின் கண்ணீர்
ஈரமாக்கிய தலையணையிலிருந்து
கருணையின் கடவுள் தோன்றினார்.

மது அருந்துவதிலும்
சிகரெட் உறிஞ்சுவதிலும்
தடையில்லை என்றவுடன்
சற்று ஆசுவாசமடைந்த
மெலிபவனின் பொழுதுகள்
காற்றில் அலையும்
டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று.

சலனமில்லாத வெறும் பகலில்
ஒரு தலைவன் மார்க்ஸியம் பேசிக் கொண்டிருக்கிறான்
பழைய கிரிக்கெட் போட்டியில் ஒருவன் பந்தை விரட்டிக் கொண்டிருந்தான்
கவிஞன் என்று சொல்லிக் கொண்டவன் தன் பிரதாபங்களை அடுக்குகிறான்
பெட்ரோல் விலை பற்றி வட்டமாக அமர்ந்த நால்வர் அரிதாரங்களுடன் பேசுகிறார்கள்
காட்டெருமைகளால் நிரம்பிய வனத்தில் ஒரு யானை தனித்து அலைகிறது

சலித்துச் சேனலை மாற்றியவன்
உந்திச் சுழி தெரிய நடந்து கொண்டிருந்த
நெடுந்தொடர் நாயகியைஅழைக்கிறான்.

யாரும் இல்லாத தனிமையில்
அவள்
டிவியில் இருந்து இறங்கி வருகிறாள்

கண்களை மூடிக் கொண்டவனுடன்
சல்லாபித்து திரும்பியவள்
இனிமேல் வரப்போவதில்லை என
சொல்லிச் செல்கிறாள்.

அதிர்ந்தவன் காரணம் கேட்க
எத்தனிக்கும் கணத்தில்
வேறொரு விளம்பரப் பெண்
ஆட
வந்துவிடுகிறாள்.